முன்னோடிகளும், பின்வந்தவர்களும், ஈயடிச்சான்களும்

anjaana-anjaani-copiedஜார்ஜ் லூயி போர்ஹே ‘காஃப்காவின் முன்னோடிகள்’ என்று எழுதியுள்ள கட்டுரையில் “உண்மை என்னவென்றால் ஒவ்வொரு எழுத்தாளனும் அவன் முன்னோடிகளை சிருஷ்டித்துக் கொள்கிறான்.” என்கிறார். சுந்தர ராமசாமியும், ஜி.நாகராஜனும் புதுமைப் பித்தனையும், நாஞ்சில் நாடன் தி.ஜானகிராமனையும் உருவாக்கிக் கொண்டதை புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் அந்த முன்னோடிகளின் பின்வந்தவர்கள் மட்டுமோ, ஒரே ஒரு முன்னோடியை மட்டுமே கொண்டவர்கள் என்பதோ, முன்னோடிகளைத் தாண்டிச் செல்லதவர்கள் என்பதோ இல்லை. இவர்களது படைப்புத் திறனையோ, தரத்தையோ சுருக்குவதும் இல்லை. இது உள்ளே சென்றது உள்ளின் இருப்புக்கு எற்றவாறு உருமாறி வெளியே வருவது. மேலும் இதுவும் ஒரு அசல்தான். அடிப்படையான உண்மை மட்டுமே ஒன்று. வேறு வேறு வெளிப்பாடுகள்.

கலையுலகில், இலக்கியத்தில், சினிமாவில் இது காலங்காலமாக இருந்து வருவதுதான். ஆதிகவியிலிருந்து கம்பர், துளசிதாசர் என்று எத்தனை பேர் எழுதியுள்ள ‘ஒரிஜினல்’ இராமாயணங்கள். தாஸ்தாயவ்ஸ்கி கோகோலைப் பற்றிச் சொல்லும்போது, “ரஷ்ய எழுத்தாளர்களான நாம் அனைவரும் கோகோலின் ‘ஒவர்கோட்’டுக்குள்ளிருந்து வந்தவர்கள்” என்கிறார். ஜெயகாந்தன் இதைப் ‘பாரதி யுகம், நாமனைவரும் அவனிடமிருந்து வந்தவர்கள்’ என்கிறார்.

துப்பறியும்கதைகளின் தந்தை எட்கார் அல்லன் போ வின் கதைகளில் வரும் சார்லஸ் ஆகஸ்ட் ட்யூபின் (Charles Auguste Dupin) பற்றி சொல்லும் போர்ஹே இவரே இலக்கிய உலகின் முதல் துப்பறிவாளர் என்கிறார். இவர் வரும் கதைகளை ட்யூபினின் நண்பரே சொல்வதாக போ எழுதியிருக்கிறார். கானன் டாயலின் (Conan Doyle) ஷெர்லக் ஹோம்ஸின் மூளை சாகசங்களைச் சொல்வது அவர் நண்பர் டாக்டர். வாட்சன்தான். அகதா க்றிஸ்டியின் ஹெர்க்யூல் பைரோ (Hercule Poirot) வின் சாகசங்களைச் சொல்வது அவரது நண்பர் கர்னல் ஹேஸ்டிங்ஸ். நமது சத்யஜித் ராயின் ப்ரதோஷ் சி. மிட்டரின் (ஃபெலுதா) சாகசங்களைச் சொல்வது அவரது கஸின் தாபேஷ்தான்.

இவையெல்லாம் முன்னோடிகளை உருவாக்கிக்கொள்வது. இன்னுமொன்று இருக்கிறது. அது ‘கான்ஷியஸ்’ஸாக ஒன்றைப்போலவே, தன் பங்களிப்பு எதுவும் இல்லாமல், செய்வது. இதை ‘இன்ஸ்பைரேஷன்’ ‘ஹெவிலி இன்ஸ்பையர்ட்’ ‘ஈயடிச்சான் காப்பி’ என்று பலவாறு அவற்றின் நகல்தன்மைக்கு ஏற்ப சொல்கிறோம்.

சில வருடங்களுக்கு முன் ‘மிஷ்கின்’ (தாஸ்தாயவ்ஸ்கியின் இடியட்) என்கிற பெயரில் மயங்கி அவர் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ பார்த்தேன்; மகிழ்ந்தேன். தொடர்ந்து ‘அஞ்சாதே. பெரும் ஏமாற்றம். இப்போது ‘நந்தலாலா’ வந்திருக்கிறது. பார்க்க வேண்டும் என்றதும் ‘kikujiro’ பற்றி தெரியவந்தது. இப்போது ‘சித்திரம் பேசுதடி’ பற்றியே கவலை வந்து விட்டது. ‘Kikujiro’ வுக்கு நன்றி சொல்லியிருந்தால் பரவாயில்லை. என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. படம் பார்க்கும் ஆர்வம் போய்விட்டது.

‘மன்மதன் அம்பு’ கதையைக் கேள்விப்பட்டதும் சடாரென்று ‘டோபோல்’ நடித்த ‘ஃபாலோ மீ’ நினைவுக்கு வருகிறது. படத்தைப் பார்த்தால்தான் தெரியும்.

தாதா மிராஸி, அனந்து, பாலசந்தர் காலங்களை விட இப்போது உலக சினிமா சுலபமாக அனைவருக்கும் கிடைக்கிறது. திரையுலகில் உள்ள பலரும் இவற்றில் ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள். அதனால் இத்தகைய நகலாக்கங்கள் உடனடியாக வெளிச்சத்துக்கு வந்து விடுகின்றன. பெரிய ஜனரஞ்சக வியாபரப் படங்களிலிருந்து, கலைப் படங்கள் சாயம் பூசி வெளிவருபவை வரை இது நடக்கிறது.

“இது மாதிரி ‘காப்பி’ அடிப்பதில் என்ன தவறு? ஒரு நல்ல படத்தை ஒழுங்காக தமிழில் தருவதால் பிற மொழி தெரியாதவர்கள் அதைப் பார்த்து அனுபவிக்கலாம் அல்லவா?’ என்று ஒரு கருத்து இருக்கிறது. மேலும் பொதுஜனங்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவது இல்லை. “என்னம்மா எடுத்திருக்கான்யா?” என்று வியந்து புகழ்ந்து தள்ளிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

பாரதியின் எழுத்துகளின் அத்தனை உரிமையும், அவை துணை நிற்கும் ஆத்ம சுத்திகரிப்பும், அவையீட்டும் உணர்வு அபிமானங்களும் அவருக்கன்றி அவர் எழுதிய பத்ரிகைக காகிதங்களையே சாரும்; கம்பனின் கவி மேதைமை மீதான காதல் அவர் கை ஓலைச் சுவடிகளுக்கே என்பது போல் இது இருக்கிறது. இத்தகைய சூத்திரத்தை ஆமோதித்து, பிறரது உழைப்பை, அறிவை, தொழிலை வெட்கமின்றி அபகரித்துப் பணம் பண்ணுபவர்கள் ‘திருட்டு விசிடி (டிவிடி) பற்றி குய்யோ முறையோ என்று அலறுவதுதான் விந்தை. அத்தகு திருட்டு விசிடிக்களைச் செய்பவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன பெரிய வித்யாசம்?

கண்டுபிடிக்கப்படாவிடில், குற்றாஞ்சாட்டப்படாவிடில், அகப்பட்டுக்கொள்ளாவிடில், ஆள் தெரிந்திருக்காவிடில், என்பன போன்ற பல ‘விடில்’களுக்கு அப்பால் சுகமாக கொலுவீற்றிருக்கும் இந்த ‘கலைஞர்கள்’ அல்லது சினிமா வியாபாரிகள் இது போன்ற தூய ‘மாரல்’ சம்பந்தமான மனக் கிலேசங்களால் துன்புறுவதும் இல்லை. ‘ஐயோ’ என்று போவதும் இல்லை. சொல்லப் போனால் அவர்கள் செல்வமும், செல்வாக்கும் 1.76 லட்சம் மடங்கு அதிகரித்துத்தானிருக்கிறது. இதில் வியாபாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தேவலாம். ஆனால் கலைஞர்கள் என்று போற்றப்படுபவர்கள்தான்…

‘The secret to creativity is knowing how to hide your sources’ என்று ஐன்ஸ்டீன் சொன்னது போல் இன்னும் நம் கண்ணில் அகப்படாத ‘மேதைகள்’ எத்தனை பேரோ.

காப்பிப் பூனைகளைவிட, சுயமாக படம் எடுப்பவர்கள்தான் மேல் என்கிற சிந்தனையும் சினிமாவை, கலைகளை சீரியஸாக எடுத்துக் கொள்பவர்கள் மத்தியில் இருக்கிறது. சுயமாக எடுப்பவர்கள் வணிகத் தோல்விகளால் அழிக்கப் பட்டாலும் கம்பீரமானவர்கள், சுய மரியாதை உள்ளவர்கள். சுய மரியாதை என்பது ‘பொய் சொல்லாமல், ஊழல் செய்யாமல், பிறரெவரையும் அவமரியாதை செய்யாமல் இருப்பதுதானே?

tie-me-up-tie-me-down

கீழேயுள்ள தமிழ்ப் படங்களையும் வேற்று மொழிப் படங்களையும் ‘மேட்ச்’ செய்யுங்கள் பார்க்கலாம். – விடை கடைசியில்.

1) புதிய பறவை 1) சேஸ் எ க்ரூக்கட் ஷாடோ

2) தாமரை நெஞ்சம் 2) ஸ்லெண்டர் த்ரெட்ஸ்

3) நாணல் 3) டெஸ்பரேட் ஹவர்ஸ்

4) அழியாத கோலங்கள் 4) சம்மர் ஆஃப் ஃபார்ட்டி டூ

5) ரெட்டை வால் குருவி 5) மிக்கி அண்ட் மாட்

6) கஜினி 6) மொமென்டோ

7) மூன்றாம் பிறை 7) ரோமன் ஹாலிடே

8) எனக்குள் ஒருவன் 8) ரீ-இன்காரனேஷன் ஆஃப் பீடர் ப்ரௌட்.

9) மகளிர் மட்டும் 9) நைன் டு ஃபைவ்

10) ட்வெல்வ் பி 10) ஸ்லைடிங் டோர்ஸ்

11) சாந்தி நிலையம் 11) சவுண்ட் ஆஃப் ம்யூசிக்

12) ஔவை சண்முகி 12) மிஸர்ஸ் டௌட்ஃபையர், டூட்ஸி

13) ஜுலீ கணபதி 13) மிஸரி

14) பச்சைக் கிளி

முத்துச் சரம் 14) டிரெயில்ட்

15) நாயகன் 15) காட் ஃபாதர்

16) ராஜி என் கண்மணி 16) சிடி லைட்ஸ்

17) ரங்கோன் ராதா 17) கேஸ் லைட்

18) நாடோடி மன்னன் 18) ப்ரிஸனர் ஆஃப் ஜெண்டா

19)நல்ல தம்பி 19) மிஸ்டர் டீட்ஸ் கோஸ் டு டௌன்.

20) சொர்க்க வாசல் 20) க்வீன் க்றிஸ்டினா.

21) மே மாதம் 21) ரோமன் ஹாலிடே

22) சுமதி என் சுந்தரி 22) ரோமன் ஹாலிடே

23) தெனாலி 23) வாட் அபௌட் பாப்

24) அன்பே வா 24) கம் செப்டம்பர்

25) இரு மலர்கள் 25) அன் அஃபேர் டு ரிமெம்பர்

26) சந்திரோதயம் 26) சிங்கிள் கேர்ள்

27) முதல் தேதி 27) இட்ஸ் அ வொண்டர்ஃபுல் லைஃப்.

விடை :- ‘மேட்ச்’ செய்ய என்னை இருக்கிறது?  இடது புறமுள்ள தமிழ்ப்படங்கள் வலதுபுறப் படங்களை தகுந்த அனுமதியுடனோ,  அல்லது அனுமதி இன்றியோ, தழுவி, அல்லது இறுகத் தழுவி எடுக்கப்பட்டவை என்று சொல்லப்படுகின்றன.