மகரந்தம்

3D கழிதலும் 6D புகுதலும்
3D சினிமாவா? அதெல்லாம் பழசுப்பா என்கிறார் ரமேஷ் ரஸ்கார். நல்ல காட்சி என்றால் குறைந்தது 6D யாவது இருக்கணும்பா, என்ன நீங்களெல்லாம் இத்தனை பழசை வச்சுகிட்டுத் திண்டாடறீங்க என்கிறார். மாஸச்சூஸெட்ஸ் மாநிலத்தில் உள்ள எம்.ஐ.டி, பல்கலையில, ஆய்வாளராக இருக்கும் ரமேஷ் இப்படி உதார் விடுகிறார் என்றுதானே நினைப்பீர்கள். இல்லை, உண்மையிலேயே இதை அவரால் செய்ய முடியுமாம். எம்.ஐ.டி செய்தி தெரிவிக்கிறது. படித்து விட்டு, அட எந்திரன் சினிமாவை ஆறு பரிமாணத்திலெல்ல பார்த்திருக்கணும், விட்டுட்டோமில்ல, என்று நினைத்தாலும் நினைப்பீர்களோ?
http://web.mit.edu/newsoffice/2008/camera-0807.html

ட்ராஃபிக் லைட்…
… என்று சொன்னாலே இந்திய மோட்டார் சைக்கிள்காரர்கள், ஆட்டோ ட்ரைவர்களுக்கெல்லாம் எட்டிக் காயாக இருக்கும். இது நமக்கெல்லாம் தெரியும். சிவப்பு விளக்கைப் பார்த்தவுடன் ஆட்டோக்களெல்லாம் இண்டு இடுக்கிலெல்லாம் நுழைந்து முன்னால் போய் அடைத்து நிற்பார்கள். ஸ்கூட்டார், மோட்டர்பைக், சைக்கிள் காரர்களெல்லாம் ஆட்டோக்களுக்கும் முன்னால் போய் நிற்பார்கள்.  விளக்கு பச்சையானவுடன் ஒரே குழப்பமாக ஒரு ஈசல் கூட்டம் முண்டி அடித்து முன்னே ஓடும். இதுவே பெரிய களேபரம் என்பதால் வரிசையில் நிற்கும் பஸ், லாரி, காரெல்லாம் மறுபடி மறுபடி பெரிய ட்ராஃபிக் ஜாமில் சிக்கிக் கொண்டு நகர வாசிகளின் உயிரை வாங்குவதைத் தினம் தினம் நாம் பார்க்கிறோம் இல்லையா? அதற்கெல்லாம் இந்த போக்குவரத்து விளக்குகளை மாற்றி அமைத்தாலே கொஞ்சம் துன்பம் குறையும் என்கிறார் இந்த நிறுவனத்தார். விளக்குடைய அமைப்பை எப்படி மாற்றலாம் என்கிறார் பாருங்கள்.
http://www.yankodesign.com/2010/11/18/sands-of-traffic-times/

சிரி சிரி
இதைப் படித்தால் உங்களுக்குக் கொஞ்சமாவது சிரிப்பு வரும். எதிரில் யாராவது காமிராவுடன் இருந்தால் நல்லது. அல்லது ஒருவரை நிறுத்தி வைத்து விட்டு இதைப் படியுங்கள். நம் ஊரில் படமெடுக்கும்போது சிரி சிரி என்று சொல்லித் தொல்லை கொடுப்பார்கள் இல்லையா? ஈன்னு சிரிடா என்று குழந்தைகளைச் சொல்வார்கள். பெரியவர்களை என்ன சொல்வது என்று தயங்கிக் கொஞ்சம் சிரிங்க சார், அம்மா என்பார்கள். மேற்கில் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு விதமாகச் சிரிக்கச் சொல்கிறார்களாம். இதைப் பற்றி செக் ரேடியோ நிலையத்தின் பத்திரிகை சிறிது யோசித்து எழுதுகிறது. பிரிட்டிஷ் மக்கள் ‘சீஸ்’ என்று சொல்வார்கள். செக் மக்களும் அதே சீஸைத்தான் சொல்கிறார்கள், ஆனால் செக் மொழியில் சீஸ் என்பதற்குச் சொல் என்ன தெரியுமா? ’ ஸீர்’ (sýr) ஸ்பானியர்கள் ‘பொடேடோஸ்’ என்பார்களாம். (அதற்கு ஸ்பானிய மொழியில் என்ன சொல் என்று உங்களுக்குத் தெரிந்தால் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள்.) ஜெர்மன் மக்கள் ‘ஸ்பகெட்டி’ என்பார்களாம். இப்படி ஒவ்வொரு மக்களின் சொற்களும் உதட்டை விரித்துப் பல்லைக் காட்ட வைக்கின்றன என்பது உடனே புரியும். ஆனால் எத்தனை விதமாக சிரிக்க வைக்க முயல்கிறார்கள் என்பதுதான் விந்தை, இல்லையா? அந்தச் சிறு குறிப்பை இங்கே பார்க்க:
http://www.radio.cz/en/section/magazine/magazine-2010-11-20

ஃப்ளெமிங்கோ
ஒரு அபூர்வமான படமெடுக்க உலக ஒளிப்படக்காரர்கள் எங்கெங்கோ ஒரு காலில் நின்று தவம் செய்கிறார்கள். இது படமெடுப்பதில் சிறிது சீரியஸாக இருக்கும் எவருக்கும் தெரிந்த தகவல், உண்மை. இந்தியாவில் சமீபத்தில் ஒரு பத்துப் பதினைந்து வருடங்களாகத்தான் படங்கள் ஓரளவு நல்ல விதமாக அச்சிட்டு பத்திரிகைகள், புத்தகங்கள் வெளி வருகின்றன. அதற்கு முன் விளம்பரப் படங்களில்தான் கவனம் செலுத்தி அச்சடிப்பார்கள், மற்றதெல்லாம் அம்போவென்று ஏதோ மசமசவென்று மசி தீற்றி வெளிவரும். இன்றும் நேஷனல் ஜ்யொக்ராஃபிக் போன்ற உலகப் பத்திரிகைகளில் பிரமிக்க வைக்கும் படங்கள் அச்சாகி வருகின்றன. இயற்கை இன்னமும் மனிதரை மூச்சு நிற்கும் விதமான அழகால், விந்தையால் சிலையாக நிறக வைக்கும் திறனுள்ளதாக இருக்கிறது என்று இந்தப் பத்திரிகையின் படக்காரர்கள் நமக்கு மாதா மாதம் தெரிவிக்கிறார்கள். செய்தித்தாள்களில் கூட இப்போதெல்லாம் ஒளிப்படங்களுக்கென்று ஒரு தனிப்பகுதி ஒதுக்கப்படுகிறது, அதுவும் வலைப் பத்திரிகைகளுக்கு ஒரு சௌகரியம், படங்களை கருக்காக வலையில் காட்டி வாசகரை ஈர்க்க முடிகிறது. ஃப்ளெமிங்கோ பறவைகள் கூட்டமாக நாடு விட்டு நாடு பெயர்ந்து போய் விட்டு குளிர் காலத்தை வேறெங்கோ வசதியான நாடுகளில் கழித்து விட்டுப் பின் தம் சொந்த நாடுகளுக்குத் திரும்புகின்றனவாம். அப்படி இடம் பெயர்ந்த ஃப்ளெமிங்கோ பறவைகள் அகஸ்மாத்தாக ஒரு பாணியில் கூட்டமாக இருக்கின்றன. அது என்ன வகைப் படமாக இங்கு பதிவாகி இருக்கிறது என்று பாருங்கள், கொஞ்சமாவது வியப்பு எழும்.
http://www.guardian.co.uk/environment/2010/nov/23/flamingos-in-formation