சிறிது சினிமா

சுமார் இரண்டு மாதங்கள் சிங்கப்பூரில் மகள் வீட்டில். தங்கை வீடும் இங்குதான். பாதி நாட்கள் கழிந்து விட்டன.

சில திரைப்படங்களை வீடியோ / தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது. களேபரமான காம்பினேஷன்.

12-angry-men-old-dvdcover12 ஆங்ரி மென்’– (12 Angry Men) ஹென்றி ஃபோண்டா தயாரித்து நடித்தது. நான்கு ஆஸ்கர் நாமினேஷன்கள். 1957 வருடப் படம். சேரியில் வாழும் ஒரு ஏழைப் பையன் தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கு. படம் ஆரம்பிக்கையிலேயே நீதிமன்ற விசாரணைகள் மற்றும் குறுக்கு விசாரணைகள் முடிந்து ஜூரர்களின் சிபாரிசுதான் பாக்கி. 12 ஜூரர்கள். விதவிதமான பின் புலம், வயது, வாழ்வு மற்றும் சமூகம் பற்றிய நோக்கம். அனுசரணை, ஆதிக்கம், சமரசம், கூச்சம் என பல்வேறு மனநிலைகள். பூரண ஈடுபாட்டிலிருந்து, கடனெழவே என்கிற பங்கெற்பு வரை தெரியும் விதவிதமான அணுகு முறைகள்.

ஒரே ஒரு சிக்கல். பனிரெண்டு பேரும் ஒருமனதான முடிவை / சிபாரிசை தெரிவிக்க வேண்டும். அந்தப்பையன் குற்றவாளியா இல்லையா என்கிற கேள்விக்கு ‘ஆம்’அல்லது ‘இல்லை’ என்கிற பதில் தான் சிபாரிசு. ஒருவர் மாறுபட்டிருந்தாலும் அது ஜூரர்களின் சிபாரிசாகாது. சாட்சிகளும், பின்புலமும், பின்கதையும் ஏற்கனவே பையன் நள்ளிரவில் தந்தையைக் குத்திக் கொன்றுவிட்டு படிகளில் இறங்கி ஓடியதை நிரூபித்தாயிற்று. ‘ஓபன் அண்ட் ஷட்’ கேஸ். ஐந்து நிமிடங்களில் முடிவைச் சொல்லி விடலாம்.

ஜுரர்களில் தலைமை தாங்கி நடத்திச் செல்பவர் முடிவை ஓட்டுக்கு விடுகிறார். பதினோரு பேர் ‘ஆம்’ என்கையில் ஒரு கை உயராமல் ‘சந்தேகமாக இருக்கிறது’என்கிறது. பிறகு அடுத்த சில மணிகளில் அந்த ‘ஓபன் அண்ட் ஷட்’ கேஸ் என்னவாகிறது என்பதுதான் படம்.

தயாரிப்பாளர் ஹென்றி ஃபோண்டா மட்டுமில்லாமல் வேறு பலரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். மூன்று நிமிடங்களைத் தவிர முழுப் படமுமே ஒரே அறைக்குள் படமாக்கப் பட்டிருந்தது. அதுவும் நாம் இப்போதைய படங்களில் காணும் சௌகர்யமான அறை இல்லை. ஓடாத ஃபேன், வெளியே கொட்டும் மழையால் இறுக்கமான (கோவையில் இதை உப்புசம் என்பார்கள்) சூழல், வியர்வை. எரிச்சல். ஒரு பெண் கூட நடிக்கவில்லை. கொலை, அதைத் தொடர்ந்து, மற்றும் அதற்கு முன் நடந்தவை எல்லாமே வசனத்தில்தான் வருகின்றன.

பெரிய உணர்ச்சி கொந்தளிப்புகள் இல்லை. ‘உபதேசங்களுக்கு’ வாய்ப்பிருந்தும் இடம் பெறவில்லை. இது வரை எடுக்கப்பட்ட படங்களிலேயே மிகச் சிறந்தவைகளில் ஒன்று’ என்று பெயர் வாங்கியுள்ள படம்.

ஓரிருவரின் நடிப்பு பிறருடையதைப் போல் அமைந்திருந்தால், துளி எட்டிப் பார்க்கும் மேடை நாடகத் தன்மையும், கதை ஓட சிறிதளவு உபயோகப்படுத்தி இருக்கும் உத்தியும் தவிர்க்கப் பட்டிருந்தால் நாமினேஷன்களை தாண்டி ஆஸ்கர் வென்றிருக்கக் கூடும். ஆஸ்கர் இல்லவிட்டால்தான் என்ன?

அடுத்து ‘டிஸ்ட்ரிக்ட் 13’ என்கிற ஃப்ரென்ச் படம். ‘parkour’ சண்டைகளுக்காக புகழ்பெற்ற படம். அரசு இயந்திரம் செயலற்றுப்போய் நுழைய முடியாத ஒரு தாதா மாவட்டத்தில் இரண்டு இளைஞர்கள் – ஒருவர் அங்கேயே பிறந்து அதை தூய்மைப் படுத்தவேண்டும் என்கிற முனைப்பில் இருப்பவர்; இன்னொருவர் போலிஸ் இலாகாவில் உள்ள இலட்சியவாதி. முதலிலிருந்து முடிவு வரை ஒரே ஓட்டம்தான், வசனங்களிளும். சாதாரணமாக இப்படி எடுக்கப் படும் படங்களில் ‘உயிர்’ இருக்காது. மறைக்கப்பட்ட சங்கிலிகள், கயிறுகள், ‘கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ்’ போன்ற உபகரணங்களால் அசாதாரணமான சண்டைகள் காட்டப்படும் இக்கால கட்டத்தில் இவை எதுவுமில்லாமல் இயற்கையான சண்டைக் கட்சிகள். மனித உடலின் அதி வேகம், சக்தி, வளையும் தன்மை போன்றவற்றைக் காண நிம்மதியாக இருந்தது. இரண்டு கதாநயகர்களும், பிறரும் சரியாக நடித்திருந்தார்கள். பெரிய தாதாவை இருவரும்போட்டு துகைக்காமல் யாரோ வேறு சிலரால் அவர் கொல்லப் படுவது இன்னொரு நிம்மதி. கூர்மையான வசனங்கள். திருப்பங்கள். அமெரிக்கப் படங்களின் உயிரின்மையும், போலி நெகிழ்வுணர்ச்சிக் காட்சிகளும் இல்லாத மகிழ வைக்கும் படம்.

மூன்றாவதாக ‘இன் கோஸ்ட் ஹவுஸ் இண்’ (In Ghost House Inn) என்கிற மலையாளப் படம். காமெடி த்ரில்லர். நிறைய திருப்பங்களும், சுற்றல்களும். முகெஷ், ஜகதீஷ், சித்திக், அசோகன்,நெடுமுடி வேணு மற்றும் பலர்.  பதினெட்டு வருடங்களுக்கு முன் முதல் நால்வரும் நடித்த இன் ஹரிஹர் நகர் வந்தது. (இது தமிழில் எம்.ஜி.ஆர் நகரில் என்று ஆனந்த் பாபு, விவேக், சின்னி ஜெயந்த், சார்லி நடித்து வந்ததாக நினைவு. ) மீண்டும் சமீபத்தில் அதேகூட்டணியில் ‘2, ஹரிஹர் நகர்’ வந்து உடனே ‘கோஸ்ட் ஹவுஸ்’. படு சுவாரஸ்யமாக நேரம்போவதே தெரியாதபடிக்கு இருந்தது.

‘மர்டர் பை டெத்’ நான் பார்த்ததிலேயே சிறந்த அற்புதமான காமெடி த்ரில்லர். காமெடியும், கொலையும் சேர்ந்து வந்து கலக்கிய தமிழ்ப்படம் 1966-இல் வெளிவந்த ‘சாது மிரண்டால்’. இதில் சில நகைச்சுவை காட்சிகளை மட்டும் மீண்டும் பார்த்தேன். நடிப்பின் சிகரங்களை இப்படத்தில் பார்க்கலாம். நகைச்சுவைக்குப் புகழ் பெற்ற டி.ஆர்.ராமச்சந்திரனின் அற்புதமான சீரியஸ் நடிப்பு. நாகேஷ் கேட்கவே வேண்டாம். மிகக் கச்சிதமான, தரமான ஓ.ஏ.கே. தேவரின் நடிப்பு. மனோரமா. இதில் ஏ.கருணாநிதி வரும் காட்சியைப்பார்த்துவிட்டு யாராலாவது சிரிக்காமல் இருக்க முடியுமென்றால் அவர் வேற்று பிரபஞ்சவாசியாகத்தான் இருக்கக் கூடும். கொஞ்ச நேரத்தில் அந்த சமயங்களில் சீரியஸ் பாத்திரங்களிலேயே நடித்து வந்த டி.எஸ்.பாலையாவின் அதி அற்புத நகைச்சுவை நடிப்பு. அவர் பாடும் கர்நாடக இசைப் பாடல்களை அவர் நடிப்போடு கேட்கையில் எப்பேற்பட்ட மேதை என்கிற எண்ணம் மேலெழுகிறது. மொத்தமாக மாமேதைகள் பலர் சேர்ந்து நடித்திருந்தபடம். நகைச்சுவை த்ரில்லர்.

பிறகு ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. மேற்சொன்ன த்ரில்லர் படங்களையெல்லாம் விட என்னை திடுக்கிட வைத்த படம். முதல் த்ரில். ஆர்யாவை எனக்குப் பிடிக்கும், அவர் என் நண்பர் சுகா இயக்கும் திரைப்படத்தின் தயரிப்பாளர் என்பதால். மற்ற படி நடிப்பு கிடிப்பு என்றெல்லாம் அவர் என்னை தொந்தரவு செய்ததேயில்லை. ‘பாஸ்’படத்தில் நடித்திருந்தார். நயனதாராவும், சந்தானமும் கூட ஆச்சர்யகரமாக நன்றாக நடித்திருந்தார்கள். பெஸ்ட் பர்ஃபார்மென்ஸ் சரவணனாக நடித்த பஞ்சு அருணாசலத்தின் மகன், ‘பாஸ்’ஸின் தாயாரக நடித்தவர், சித்ரா லட்சுமணன். படம் தொந்தரவு செய்யாமல் போயிற்று. தமிழகத்தில் பெரிய வெற்றியாம்.

கொஞ்சம் கொஞ்சம் ‘மதராசப்பட்டினம்’ பார்த்தேன். பீரியட் ஃபிலிம் என்பதால், அந்த ஐரோப்பிய பெண்ணால், மற்றும் ஆர்யா மீதுள்ள அபிமானத்தால் படம் பார்க்கத் தோன்றியது.

கதைக்குக் கையுண்டா காலுண்டா என்பார்கள். ஒரே புருடா. அதுவும் சுதந்திர நாளன்று ரயில்வே ஸ்டேஷனில் வரும் வெற்றி கோஷங்களும், பொதுமக்கள் உரையாடல்களும் அபத்தக் களஞ்சியம். நல்ல வேளை தலைவர்களாக யாரையும் காட்டவில்லை.

வரலாற்றை இப்படியெல்லாமா திரிப்பார்கள்? 1947 ஆகஸ்ட் பதினைந்து சமய்த்தில் காமராஜர் அகில இந்தியத் தலைவர் இல்லை. சரி தமிழ் நாட்டில் வாழ்க கோஷமிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ‘ஆச்சாரியார் வாழ்க’ என்கிறர்கள். பொது மக்கள் ‘ராஜாஜி’ என்றே சொல்வார்கள். திராவிட இயக்கத்தினர் முதலில் ‘ஆச்சாரியார்’ என்றும் பின்பு ‘மூதறிஞர்’ என்றும் சொல்வது வழக்கம். இப்போது எல்லோரும் மூதறிஞர் என்றே சொல்கிறர்கள். பெரியாரின் தி.க. சுதந்திர தினத்தை துக்க தினமாகக் கொண்டாடியவர்கள். ப்ரிட்டிஷ் காரர்களை தொடர்ந்து ஆட்சி செய்யுமாறு கோரியவர்கள். அவர்கள் ராஜாஜியை வாழ்த்த வாய்ப்பில்லை.

வரலாற்றுப்படி ராஜாஜி சுதந்திரத்துக்கு முதல் நாளே கல்கத்தா சென்றுவிட்டார், கவர்னராக. ஆகஸ்ட் 15 அன்று கல்கத்தாவில் இருந்தார். ராஜாஜி உத்தரவுப் படி ‘கவர்ன்மென்ட் ஹவுஸ்’ பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது. 2,00,000 சாமானியர்கள் உள்ளே வந்து சுதந்திரத்தைக் கொண்டாடினார்கள். மறு நாள் வங்காளத்தில் முகாம் இட்டிருந்த மகாத்மா காந்தியை சந்திக்கிறார். காந்திஜியின் கரங்களை ராஜாஜி தன் கரங்களில் எடுத்துக் கொள்கிறார். இருவரும் ஒன்றும் பேசாமல் வெகு நேரம் இருக்கிறார்கள். ஆனால் மதறாசப் பட்டினத்தில் ‘ஆசாரியார் வாழ்க’ (என் காதில் விழுந்தது சரி என்றால்) என்று அவரை வரவேற்க ரயில்வே ஸ்டேஷனில் கோஷமிடுவது போல் வருகிறது.

இதற்கெல்லாம் சிகரம் ‘சத்தியமூர்த்தி வாழ்க’ தான். ஆசாரியாரும் சத்தியமூர்த்தியும் வண்டியில் வருவதாக வேறு பேசிக் கொள்கிறார்கள். 28-3-1943ல் இறந்து போன சத்திய மூர்த்தியின் ஆவிதான் அங்கு வந்திருக்கக் கூடும். அந்த அளவில் ம.ப.(மதராசப் பட்டணம்)வும் ஒரு ம.ப. (மர்மப் படம்) ஆகிவிட்டது.