எலெக்ட்ரிக் எறும்பு – இறுதிப் பகுதி

 mast3

இக்கதையின் முந்தைய பகுதிகள்: பகுதி 1 | பகுதி 2

“கடவுளே!” என்றாள், அவளுடைய ஈரமான மூச்சு அவன் காதில் பட்டது. “நான் எத்தனை பயந்து போனேன் தெரியுமா? கடேசில, மிஸ்டர் டான்ஸ்மானைத்தான் கூப்பிட்டேன் –.”

“என்ன ஆச்சு?” பூ- அவளை இடைவெட்டினான், பொறுமையில்லாமல். “முதல்லே இருந்து சொல்லு, மெதுவாச் சொல்லு.  நான் எல்லாத்தையும் புரிஞ்சுக்கணும்.”

சாரா, ஒருவாறாக சுதாரித்துக் கொண்டாள், தன் மூக்கைத் தடவிக் கொண்டாள், பிறகு பேசத் துவங்கினாள், ஆனால் அவளுக்குப் படபடவென்றுதான் இருந்தது.  “நீங்க மூர்ச்சை போட்டு விழுந்திட்டீங்களா. அப்படியே கிடந்தீங்க, செத்துப் போனவர் மாதிரி இருந்தது.  இரண்டரை மணி வரைக்கும் பொறுத்துகிட்டு இருந்தேன்.  ஆனா நீங்க எதுவுமே செய்யாம கிடந்தீங்க. நான் மிஸ்டர் டான்ஸ்மானை ஃபோன்ல கூப்பிட்டேன், அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பும்படி ஆயிட்டுது. அவர்தான் எலெக்ட்ரிக்-எறும்பைப் பழுதுபார்க்கிறவங்களை- ஆ…. அதாவது, மனித-ரோபிக்களைப் பழுது பார்க்கும் ஆட்களைக் கூப்பிட்டு அனுப்பினார். இந்த ரெண்டு பேரும் சுமார் நாலே முக்கால் மணிக்கு வந்தாங்க. அப்போதிலேருந்து உங்களைத்தான் பழுது பார்த்தாங்க.  இப்ப மணி காலை ஆறேகாலாகிறது.  எனக்கு ஒரேயடியாக் குளிர்ந்து போயிருக்கு; எனக்கு இப்பத் தூங்கப் போகணும்.  என்னால இன்னிக்கி ஆஃபிஸுக்கு வர முடியாது.  நிஜமாத்தான் சொல்றேன், கொஞ்சம் கூட முடியாது.” மூக்கை உறிஞ்சியபடியே சிறிது அழுகையாகப் பேசினாள்.  அந்தச் சத்தம் அவனுக்கு எரிச்சலூட்டியது.

சீருடை அணிந்த இருவர்களில் ஒருவர் கேட்டார்:

“நிஜ நாடா கிட்ட விளையாடிப் பார்த்தியாக்கும்.”

“ஆமாம்.” பூ- ஒத்துக் கொண்டான். 

எதற்கு மறைக்க வேண்டும்? நாடாமீது தான் ஒட்டிய இன்னொரு நாடாத் துண்டை நிச்சயமாக அவர்கள் கண்டு பிடித்திருப்பார்கள். “நான் அத்தனை நேரம் கிடந்திருக்கக் கூடாதே,” அவன் சொன்னான், “ஒரு பத்து நிமிட இடைவெளிக்கான அளவு துண்டைத்தானே ஒட்டினேன்.”

“அது நாடாவை நகரவிடாமல் நிறுத்தி விட்டது.” டெக்னீஷியன் விளக்கினார். “நாடா முன்னால் நகராமல் நின்று விட்டது; நீ செருகின துண்டு இருக்கே, அது சிக்கிக் கொண்டிருந்தது; அதனால் நாடாவே நகராமல் நின்றுவிட்டது, இல்லை என்றால் நாடா கிழிந்தே போயிருக்கும்.  எதுக்கு அதைப் போய் நோண்டினீங்க? என்ன ஆயிருக்கும்னு உங்களுக்குத் தெரியுமில்லே?”

”எனக்கு அது அத்தனை தெளிவாகத் தெரியாது.” பூ- சொன்னான்.

“ஆனா உனக்குத் தெரிஞ்ச அளவே போதுமானதுதானே?”

பூ- குரோதமாகச் சொன்னான், “அதனாலத்தான் இப்படிச் செய்யறேன்.”

“உனக்கு சார்ஜ் உண்டு,” அந்த டெக்னீஷியன் சொன்னார், “தொன்னூத்தி அஞ்சு பெரிய நோட்டு. வேணுமின்னா தவணையில கட்டலாம்.”

“ஓகே.” என்றான்; தள்ளாடியபடி எழுந்திருந்தான், கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டான், வலிபோல முகத்தைச் சுளித்தான். அவன் தலை தெறித்தது, வயிறு ஒரேயடியாகக் காலியாய் இருந்தது போலிருந்தது.

“அடுத்த தடவை அந்த ஒட்டுத் துண்டை நன்றாகச் சீவி விடு.” மூத்த டெக்னீஷியன் சொன்னார்.”அப்படிச் செய்தால் அந்த நாடா சிக்கிக் கொள்ளாது. அதில் முன்பாதுகாப்பா ஏதும் வச்சிருப்பாங்கன்னுட்டு உனக்குத் தோணலியா என்ன? அது முதல்ல நின்னு போயிடும், மேலே மேலே போயி ஆபத்-”

“என்ன ஆகும்?” பூ- இடைமறித்துக் கேட்டான்.

“ஒரு வேளை பரவி நோக்கியில நாடா நகராம போயி நின்னு போனா என்ன ஆகிறது? நாடாவே இல்லெ- எதுவுமே இல்லைன்னு ஆனா? இடையில எந்தத் தடையுமில்லாம அந்த ஃபோடோ செல் மேலே பார்கக ஒளியை வீசினா என்ன ஆகும்?”

அந்த டெக்னீஷியன்கள் இருவரும் பார்த்துக் கொண்டனர். ஒருவர் சொன்னார், “எல்லா நரம்பு சர்க்யூட்களும் இடைவெளிய எல்லாம் தாண்டி சக்தியை வீசி, அணைஞ்சு போகும்.”

“அப்படின்னா என்ன அர்த்தம்?”

“அர்த்தம் என்னவா, அந்த எந்திரம் அத்தோட பணால்.”

teslacoil31hjkபூ- சொன்னான், “ நான் எல்லா சர்க்யூட்களையும் அலசிப் பார்த்தேன். அதில எரிஞ்சு போகிற அளவுக்கு எல்லாம் போதுமான வோல்டேஜ் இல்லை. முடிகிற புள்ளி எல்லாம் ஒண்ணோட ஒண்ணு தொட்டுகிட்டிருந்தா கூடஇத்தனை இலேசான மின்சக்திக்கு உலோகமெல்லாம் உருகாது. ஒண்ணுங்கீழ பதினாறு இன்ச்சுதான் இந்த சீஸியம் சானல் நீளம், அதில மிலியன்ல ஒரு பங்கு வாட்தான் ஓடப் போகிறது.  அந்த நாடால ஒரு பஞ்ச் துளையில இருந்து எழும் ஒரு கணத்தில, ஒரு பிலியன் கூட்டுச் சாத்தியங்கள் இருக்கிறதாகவே வைத்துக் கொள்வோம்.  அவற்றோட மொத்த அவுட்புட் சேர்ந்துகிட்டே போய் தாக்காது; அதில் இருக்கிற மின்சாரத்தோட அளவு, அந்த ஒரு சிறு செயலுக்கு என்ன பாட்டரியோட விவரம்ங்கிறதைப் பொறுத்தது, அது அதிகம் இருக்காது.  எத்தனையோ அடைப்புகள் வேற திறந்து மின்சக்தி அதில எல்லாம் ஓடிகிட்டே இருக்குமே.”

“நாங்க பொய் சொல்வோமா?” ஒரு டெக்னீஷியன் சலிப்போடு கேட்டார்.

“ஏன் இருக்கக் கூடாது?” பூ- சொன்னான்.  “இதில் எனக்கு எல்லாத்தையும் அனுபவிக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு. மொத்தப் பேரண்டத்தையும், அதன் முழுமையையும், எல்லா எதார்த்தத்தோடயும் தொடர்பு கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கு.  இதை எந்த மனித மூளையாலும் செய்ய முடியாது. காலத்தை எல்லாம் தாண்டி என் மூளையில் ஒரு பெரிய சிம்ஃபனியோட இசை பதியப் போகிறது, எல்லா ஒலிக் கோர்வைகளும், எல்லா வாத்தியங்களோட ஒலிகளுமா.  எலலா சிம்ஃபனிகளும் கூட.  இது உங்களுக்குப் புரிகிறதா?”

“அது உன்னை எரிச்சுடும்.” இரண்டு டெக்னீஷியன்களும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.

“எனக்கு அப்படித் தோணல” பூ- சொன்னான்.

சாரா கேட்டாள், “உங்களுக்கு ஒரு கப் காப்பி வேணுமா, மிஸ்டர் பூ-?”

“வேணும்.”

கால்களைக் கீழே போட்டான், தன் குளிர்ந்து போன கால்களைத் தரையில் அழுத்தினான், சிறிது குலுங்கினான்.  பிறகு எழுந்து நின்றான்.  உடலெல்லாம் வலித்தது.  இந்த சோஃபாவில் இரவெல்லாம் தன்னைப் போட்டு வைத்திருக்கிறார்கள் எனப் புரிந்து கொண்டான்.  என்னதானிருந்தாலும், இதை விட மேலாகத் தன்னை நடத்தி இருக்கலாம் என நினைத்தான்.

சமையலறை மூலையில் மேஜை. அதில் எதிரெதிரே கார்ஸன் பூ- கோப்பையில் காஃபியை அருந்திக் கொண்டிருந்தான்.  எதிரே சாரா இருந்தாள்.  டெக்னீஷியன்கள் போய் நிறைய நேரம் ஆகியிருந்தது.

சாரா ஏக்கத்தோடு கேட்டாள், “இனிமேல உங்கள் மீதே சோதனை எல்லாம் செய்யாமல் இருப்பீங்கதானே?”

பூ- கரகரத்தார், ”காலம் ஓடறதை என்னால கட்டுப்படுத்த முடியணும். அதைத் திருப்பியும் ஓட வைக்க முடியணும்.”

நான் ஒரு துண்டு நாடாவை வெட்டி, அதைத் தலைகீழாத் திருப்பி வச்சு ஒட்டிப் பார்க்கப் போகிறேன். காரண காரியப் போக்கு அப்போது திரும்பி இருக்கும், காலம் திரும்பி ஓடும்.  நான் அதுக்கப்புறம், மேல் தளத்திலிருந்து படிக்கட்டுகளில் பின்பக்கமாகத் திரும்பி இறங்கி வந்து, பூட்டின கதவைத் திறந்து தள்ளி, பின்புறமாக நடந்து இந்த சமையலறைத் தொட்டிக்கருகில் வந்து, அழுக்கான தட்டுகளை எல்லாம் அந்தத் தொட்டியில் இருந்து வெளியே எடுத்து வைப்பேன்.  மேஜையருகே இந்தத் தட்டுகள் அடுக்கி இருக்கும், அவற்றின் முன் அமர்வேன். ஒவ்வொரு தட்டிலும் உணவு என் வயிற்றிலிருந்து திரும்பி எடுக்கப்பட்டு நிரம்பும். அந்த உணவை எல்லாம் ரெஃப்ரிஜிரேடரில் திரும்பி வைப்பேன்.  அடுத்த நாள் அந்த உணவை ரெஃப்ரிஜிரேடரில் இருந்து எடுத்துப் பைகளில் வைத்து, அவற்றைக் கடைகளில் கொண்டு போய் பல அலமாரிகளில் திரும்ப வைப்பேன். கடையில் நான் பணம் கொடுப்பதற்குப் பதிலாக அவர்கள் என்னிடம் பணத்தைத் திரும்பக் கொடுப்பார்கள். இந்த உணவுப் பொருட்களெல்லாம் கடைகளில் இருந்து திரும்பிப் பார்சல் பெட்டிகளுக்குள் அடைக்கப்பட்டு, லாரிகளில் போய் முதலில் எங்கிருந்து அனுப்பப் பட்டனவோ அங்கேயே திரும்பக் கொண்டு போய் வைக்கப்படும். பின் அந்தத் தொழிற்சாலைகளில் இருந்து திரும்பி அனுப்பப்பட்டு, ஹைட்ரொபோனிக் பண்ணைகளுக்குத் திரும்பிப் போய், மரம் செடிகளில் எல்லாம் திரும்ப ஒட்டிக் கொள்ளும். செத்துப் போன மிருகங்களுக்குள் உடல் பாகங்கள் பொருத்தப்பட்டு அவை திரும்ப எழும். இதெல்லாம் என்ன நிரூபிக்கும்?  விடியோ நாடாக்களை பின் நோக்கி ஓட்டுவது போலத்தானிருக்கும்…. அதிலிருந்து எனக்கு இப்போது தெரிவதை விடக் கூடுதலாக என்ன தெரியும்? எதுவுமில்லை.

எனக்கு என்ன வேண்டும், அனைத்துக்கும் அப்பாலும், இறுதியுமான எதார்த்தம், நிஜம். ஒரு மைக்ரோ வினாடி அதைத் தரிசிக்க முடிந்தாலும் போதும். அதற்கப்புறம் என்னவானால் என்ன? ஒரு பொருட்டுமில்லையே. எல்லாம் தெரிந்து போகும். எதுவும் புரியாமலோ, பார்க்கப்படாமலோ மிச்சமாக இராது.

நான் இன்னொரு மாறுதல் செய்து பார்க்கலாம், அவன் தனக்குச் சொல்லிக் கொண்டான்.  அந்த நாடாவை வெட்டுவதற்கு முன்னால், நான் அந்த நாடாவில் குண்டூசியால் குத்திச் சிறு துளைகளைப் போடுகிறேன். அதனால் என்ன நடக்கிறது என்று பார்ப்பது சுவாரசியமாக இருக்கும், ஏனெனில் எனக்கு அந்தத் துளைகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாதே!

ஒரு மைக்ரோகருவியின் முனையால் நாடாவில் எந்த ஒழுங்குமில்லாமல், கைக்கு வந்தபடி குத்திச் சிறு சிறு துளைகளை உருவாக்கினான். அந்த பரவிநோக்கிக்கு எத்தனை அருகில் அவற்றை ஏற்படுத்த முடியுமோ அத்தனை அருகில் செய்தான்… காத்திருக்க யாரால் முடியும்?

“நடப்பதை நீ பார்க்க முடியுமா என்பது எனக்கு ஐயமே,” அவன் சாராவிடம் சொன்னான். அனேகமாக முடியாது என்றுதான் அவன் தன் யோசனைகளின் வழியே முடிவு கட்டினான்.

“ஏதாவது தோன்றக் கூடும்,” அவளிடம் சொன்னான். “உன்னை எச்சரிக்கை செய்கிறேன், நீ பயப்படக் கூடாது என்று நினைத்தேன்.”

“அட, கஷ்டகாலமே!” என்று முனகினாள் சாரா.

அவன் தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தான். ஒரு நிமிடம் ஆயிற்று. பின் ஒரு வினாடி. மூன்றாவது… பிறகு -அறையின் நடுவில் பச்சையும், கருப்புமாக வாத்துகளின் சிறு கூட்டம் ஒன்று தோன்றியது. மிகவும் கிளர்ச்சியோடு கூக்குரலிட்டபடி அந்தப் பறவைகள் அறையில் எங்கும் மேலெழும்பிப் பறக்க முயற்சித்தன. அறையில் இறகுகளும், இறக்கைகளின் படபடப்பும், தப்பித்து ஓடிவிட முயலும் அவற்றின் பெரும் அவசரமும் நிறைந்தன.

“வாத்துகளா,” வியந்தான் பூ-. “நான் துளைகள் இட்டால் வருவது காட்டு வாத்துகளின் கூட்டமா?”

இப்போது வேறெதுவோ அறையில் தோன்றியது. ஒரு பூங்காவில் இருக்கும் பெஞ்ச்.  அதிலொரு கிழவர், பழைய துணிகளோடு, உலர்ந்து உதிரத் துவங்கி இருப்பது போலத் தெரிந்த ஒரு மனிதர், நனைந்து கிழிந்த ஒரு செய்தித்தாளைப் படித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். நிமிர்ந்து பார்த்தார். பூ-வை மங்கலாகப் பார்த்தார் போலும். சரியாகப் பொருந்தாத தன் பொய்ப்பற்கள் தெரிய ஒரு சிறு புன்னகை செய்து விட்டுத் திரும்பத் தன் செய்தித்தாளுக்குத் திரும்பினார்.  படிக்க ஆரம்பித்தார்.

“அவரை நீ பார்த்தாயா?” பூ- கேட்டான். “அந்த வாத்துகளை?”.  அந்தக் கணம் வாத்துகளும் சரி, பூங்காக் கிழவரும் சரி காணாமல் போயினர். அவர்கள் வந்திருந்த சுவடே இல்லை. அந்தச் சிறு நாடாவின் கணம், துளைகள் போட்டதன் விளைவு, முடிந்து போயிருக்க வேண்டும்.

“அதெல்லாம் நிஜமில்லைதானே?”  சாரா கேட்டாள். “அப்படின்னா, எப்படி-”

“நீயே நிஜமில்லை,” பூ- சொன்னான்.  “என்னுடைய நிஜம் போல தோற்றங்களைத் தரும் நாடாவிலிருந்து வரும் தூண்டுதல்களின் ஒரு உருதான் நீயும். நாடாவில் இருக்கும் ஒரு துளையின் விளைவு, அதை நான் வேண்டுமானால் பூசி மெழுகிக் காணாமல் அடிக்கலாம். நீ வேறு யாருடைய நிஜ-நாடாவின் விளைவாகவும் இருக்கிறாயா, அல்லது நீயே தூலமான நிஜமா?”  அவனுக்குத் தெரியவில்லை; அவனால் சொல்லவும் முடியவில்லை. சாராவுக்குமே தெரியவில்லை போலும்.  ஒரு வேளை அவள் ஒரு ஆயிரம் நிஜ நாடாக்களில் இருந்தாளோ என்னவோ. ஒருவேளை உற்பத்தி செய்யப்பட்டிருந்த அனைத்து நிஜ நாடாக்களிலுமே இருந்தாளோ என்னவோ. “நான் என் நாடாவை நான் வெட்டி விட்டால்.” அவன் சொன்னான், “நீ எல்லா இடங்களிலும் இருப்பாய், எங்குமே இல்லாமலும் போய்விடுவாய். இந்தப் பேரண்டத்தில் உள்ள எல்லாப் பொருட்களையும் போலத்தான்.  அதாவது எனக்குத் தெரிந்த வரை எல்லாம் இப்படித்தானிருக்கும்.”

சாரா தடுமாறினாள், “நான் நிஜம்.”

“எனக்கு உன்னை முழுமையாகத் தெரிந்து கொள்ள விருப்பம்தான்.” பூ- சொன்னான். “அதைச் செய்ய நான் என் நாடாவை வெட்ட வேண்டும். நான் அதை இன்னொரு நேரம் செய்வேன்; அதைத் தப்ப்பாமல் ஏதோ ஒரு சமயம் நான் செய்ய வேண்டி இருக்கும்.” அப்படி என்றால் ஏன் காத்திருக்க வேண்டும்? அவன் தன்னைக் கேட்டுக் கொண்டான்.  இத்தனை நேரம் டான்ஸ்மான் என்னை யார் உற்பத்தி செய்தார்களோ அவர்களிடம் என்னைப் பற்றிச் சொல்லி இருப்பார், அவர்கள் நான் இப்படி ஏதும் செய்யாமல் தடுக்க ஏதாவது நடவடிக்கை எடுக்கத் துவங்கி இருப்பர். நான் அவர்களுடைய சொத்துகளைச் சேதம் செய்யத் துவங்கி இருக்கிறேனே- என்னையும் சேர்த்துதான்.

“நான் ஆஃபீசிற்கே போயிருக்கலாம்னு தோணுது.” சாராவின் உதடுகள் ஏமாற்றத்தில் கீழ்நோக்கி வளைந்தன, அவள் கன்னக் குழிவில் கூட இருள் இறங்கி இருந்தது.

“போ.” என்றான் பூ-.

“உங்களைத் தனியே விட்டு விட்டுப் போக எனக்கு விருப்பமில்லை.”

“எனக்கு ஒன்றும் ஆகாது.” பூ- சொன்னான்.

”நீங்க நல்லபடியா இருப்பீங்களா, மாட்டீங்க. உங்களையே முடிக்க நீங்க ப்ளக்கைப் பிடுங்கிக்கப் போறீங்க, இல்லை வேறேதோ அதே போலச் செய்யப் போறீங்க. தற்கொலை செஞ்சுக்கப் போறீங்க. உங்களுக்கு நீங்க முழு மனிதர் இல்லை, ஒரு எலெக்ட்ரிக் எறும்புன்னு தெரிஞ்சு போச்சு இல்லெ?”
அவன் கொஞ்ச நேரம் கழித்துச் சொன்னான், “அப்படி நடக்கலாம்தான்.” கடைசியில் அதுதானே உண்மை.

“என்னால உங்களைத் தடுக்க முடியாதில்லையா?” அவள் கேட்டாள்.

“முடியாது.” அவன் ஒத்துக் கொண்டான்.

“ஆனா நான் இங்கேதான் இருப்பேன்.”சாரா சொன்னாள். “என்னால் உங்களைத் தடுக்க முடியல்லேன்னா கூட நான் போகமாட்டேன்.  நான் போயிட்டேன்னு வையுங்க, நீங்க தற்கொலை செஞ்சுகிட்டீங்கன்னா, என் வாழ்நாள் பூரா நான் இருந்திருந்தா வேறென்ன நடந்திருக்கும்னு நான் யோசிக்கும்படி இருக்கும். உங்களுக்கு இது புரியுதா?”

அவன் ஆமோதித்துத் தலை அசைத்தான்.

“சரி, என்னவோ செய்யுங்க.” சாரா சொன்னாள்.

அவன் எழுந்து நின்றான். “எனக்கு வலி ஏதும் இருக்காது,” அவன் அவளிடம் சொன்னான். “உனக்குப் பார்க்க அப்படித் தோணலாம். மனித உடல் கொண்ட ரோபாட்களுக்கு மிகக் குறைவான வலி-சர்க்யூட்தான் இருக்குன்னு உனக்குத் தெரியணும். எனக்கு ரொம்பத் தீவிரமா-”

“என்கிட்ட அதெல்லாம் சொல்லாதீங்க.” அவள் இடைவெட்டினாள். “நீங்க என்ன செய்யப் போறீங்களோ, அதைச் செய்யுங்க. அல்லது எதுவும் செய்யாம விட்டாலும் சரிதான்.”

அவன் இப்போது கொஞ்சம் பயந்திருந்ததால் ஏற்பட்ட நடுக்கத்தோடு, தன் கைகளைக்  கோர்ப்புக்கான மைக்ரோகையுறைகளில் ஒருவழியாகத் திணித்துக் கொண்டான். நீட்டி ஒரு மிகச் சிறு கருவியை எடுத்தான்; கூர்மையாக, நுணுக்கமாக வெட்டும் தகடு அது. “என் மார்புத் தடுக்குக்கு உள்புறம் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு நாடாவை நான் இப்போது வெட்டப் போகிறேன்,” அவன் சொன்னான். சொல்லும்போது உருப்பெருக்கிக் காட்டும் குவிஆடிக் கருவியமைப்பு வழியே பார்த்துக் கொண்டிருந்தான். “அவ்வளவுதான், வேறொன்றுமில்லை.” அந்த வெட்டும் தகடை எடுக்கும்போது அவன் கைகள் நடுங்கின. ஒரு நொடியில் இதைச் செய்துவிடலாம் என்று உணர்ந்தான்.  எல்லாம் முடிந்து விடும். பிறகு எனக்கு இரண்டு வெட்டுப்பட்ட துண்டுகளை மறுபடி உருக்கி ஒட்ட எனக்கு நேரமிராது, அதுவும் அவனுக்குப் புரிந்திருந்தது. அரை மணி நேரம்தான், அதிகபட்சம். நான் ஒருவேளை என் மனதை மாற்றிக் கொண்டால்… (அதுபற்றி யோசிக்க வேண்டும்).

அவன் நாடாவை வெட்டினான்.

அவனையே வெறித்தபடி, ஒடுங்கிக் குறுகி அமர்ந்திருந்த சாரா ரகசியக் குரலில் சொன்னாள், ”ஒன்றும் ஆகவில்லையே.”

“எனக்கு இன்னும் முப்பது அல்லது நாற்பது நிமிடங்கள் இருக்கின்றன.”அவன் மேஜை அருகே மறுபடி அமர்ந்து கொண்டான், கைகளை அந்த உறைகளிலிருந்து எடுத்து விட்டான். அவனுடைய குரல் நடுங்கியது என்று கவனித்தான்; சந்தேகத்துக்கிடமின்றி சாராவும் அதைக் கவனித்திருப்பாள், அவனுக்குத் தன் மீதே கோபம் வந்தது, அவளை ஏற்கனவே தான் மிகவும் பயமுறுத்தி விட்டதை நினைத்து. “நான் வருந்துகிறேன்,” என்று தொடர்பற்றுச் சொன்னான்; அவளிடம் மன்னிப்பு கேட்க நினைத்தான். “நீ இப்போது போய் விடுவதுதான் நல்லது.” என்று கலவரத்தில் ஏதோ சொன்னான்; மறுபடி எழுந்து நின்றான். அதற்கு மறுவினைபோலத் தன்னிச்சையாக அவளும் எழுந்து நின்றாள்; ஊதிப் போயிருந்த அவள், மிக அவதியுற்றிருந்தாள், துடிதுடிப்புடன் நின்று கொண்டிருந்தாள். “போய் விடு,” அவன் முரட்டுத் தனமாகச் சொன்னான். “ஆஃபீஸிற்கே போ, அங்கேதானே நீ இருக்க வேண்டும். நாம் இரண்டு பேருமே அங்கேதான் இருந்திருக்க வேண்டும்.” நான் இப்போது நாடாவின் இரண்டு நுனிகளையும் உருக்கி ஒட்டி விடப் போகிறேன்.  என்னால் இந்த அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை, இது ரொம்ப அதிகம்.

கைகளை அந்த உறைகளை நோக்கி நீட்டினான், அவற்றைத் துழாவி எடுத்து அவற்றுக்குள் தன் விரல்களைத் திண்டாட்டத்துடன் நுழைத்தான்.  உருப்பெருக்கிக் காட்டும் திரையில் கூர்ந்து நோக்கியபோது, ஃபோட்டோ எலெக்ட்ரிக் ஒளிக் கற்றை மேல் நோக்கி மின்னுவதைக் கவனித்தான்.  நேரே அது பரவி நோக்கியில் பட்டது; அதே நேரம் வெட்டப்பட்ட நாடாவின் முனை பரவி நோக்கியினுள் சென்று மறைவதை அவன் கவனித்தான்… அதைப் பார்த்தான், புரிந்து கொண்டான்; நான் ரொம்ப தாமதமாக்கி விட்டேன், அவன் உணர்ந்தான்.  கடவுளே, அவன் நினைத்தான், எனக்கு உதவி செய்.  நான் கணக்கிட்டதை விட அதிக வேகத்தில் அது சுற்றி விட்டது. எனவே இப்போதுதான் அது-

அவன் ஆப்பிள்களை, தரையில் பதிக்கும் சதுரக் கற்களை, வரிக்குதிரைகளை எல்லாம் பார்த்தான். கதகதப்பாக உணர்ந்தான். பட்டுத் துணியைத் தொடுவது போல உணர்ந்தான்.  கடல் அவனை நனைத்தது, பெரும் காற்று, வடக்கிருந்து வீசியது, அவனைப் பிடித்துப் பிய்த்து இழுத்தது எங்கோ அவனை எடுத்துப் போய்விட விரும்புவது போல. சாரா அவனைச் சுற்றி எல்லாப் பக்கமும் இருந்தாள், டான்ஸ்மானும்தான்.  நியூயார்க் மாநகர் இரவில் ஒளித் தெப்பமாய் மின்னியது, கலங்கள் சுற்றி எங்கும் திரிந்தன, அதிர்ந்தன, ராத்திரி வானிலும், பகல்களிலும், வெள்ளங்களூடேயும், கடும் வறட்சியூடேயும் பரபரத்தன. வெண்ணெய் உருகி திரவமாக அவனுடைய நாவில் பரவியது, அதே நேரம் மோசமான நாற்றங்கள், சுவைகள் அவனைத் தாக்கின: கசப்பான விஷங்களும், எலுமிச்சைப் புளிப்பும், கோடைப் புற்களின் நுனிகளும் இருப்பதை உணர்ந்தான். அவன் மூழ்கினான்; விழுந்தான்; தன் காதுகளில் கிறீச்சிடலுடன் இடித்த ஒரு வெள்ளைப் படுக்கையில் ஒரு பெண்ணின் கரங்களில் அவன் படுத்திருந்தான்: நகர மையத்தில் பழமையான கட்டிடத்தில் இருந்த ஒரு வீணாகிப் போன விடுதியின் பழைய, பழுதுபட்ட லிஃப்டின் எச்சரிக்கை முனகல்கள் கேட்டன. நான் இன்னும் வாழ்கிறேன், நான் வாழ்ந்து விட்டேன், நான் இனிமேல் ஒருபோதும் வாழமாட்டேன், அவன் தனக்கே சொல்லிக் கொண்டான், அவனுடைய ஒவ்வொரு சிந்தனையோடும் ஒவ்வொரு சொல்லும் தோன்றியது, ஒவ்வொரு ஒலியும் கேட்டது; பூச்சிகள் கீச்சிட்டன, விரைந்து ஓடின, முத்திட்டம் நிறுவனத்தில் எங்கோ வைக்கப்பட்டிருந்த, உடல் இயக்கங்களைச் சமனநிலைப்படுத்தும் எந்திரங்களுடைய சிக்கலான அமைப்புகளுக்குள் தான் பாதி இறங்கி விட்டதாக அவன் உணர்ந்தான்.

சாராவிடம் ஏதோ சொல்ல விரும்பினான். வாயைத் திறந்து சொற்களை ஒலிக்க விரும்பினான் – ஒரு பெரும் குவியலான சொற்கள் அவனுடைய மனதில், அறிவில் ஜோதிப்பிரகாசமாக ஒளிர்ந்தனவே, அவனைத் தம் அறுதியான அர்த்தத்தால் பொசுக்கினவே, அவற்றிலிருந்து பொறுக்கிய ஒரு குறிப்பிட்ட தொடரான சொற்கள் அவை.

அவனுடைய வாய் எரிந்தது. அவன் ஏனென்று வியந்தான்.

சுவற்றோடு ஒட்டி, உறைந்து போயிருந்த சாரா, கண்களைத் திறந்தாள், பூ- வுடைய பாதி திறந்த வாயிலிருந்து புகை மேலேறுவதைக் கண்டாள். அப்போது அந்த ரோபி மெல்லக் கீழ் நோக்கிச் சரிந்தது, முழங்கால்களிலும், முழங்கைகளிலுமாகக் குனிந்தது. பின் ஒடுங்கிப் போய், உடைந்த குவியல்போல அப்படியே தரையில் பரவி விழுந்தது. அதை சோதித்துப் பார்க்காமலே அது ‘இறந்து விட்டது’  என்று அவளுக்குத் தெரிந்தது.

பூ- தானே இதைச் செய்து கொண்டது என்று அவள் புரிந்து கொண்டாள். அது வலியேதும் உணர்ந்திருக்காது; அதுவேதான் அப்படிச் சொன்னது. குறைந்தது அதிகம் வலி இருந்திராது; கொஞ்சம் இருந்ததோ என்னவோ. என்னவானால் என்ன, எல்லாம் முடிந்து போயிற்று.

நான் மிஸ்டர்.டான்ஸ்மானைக் கூப்பிடுவதுதான் நல்லது. அவரிடம் என்ன நடந்தது என்று சொல்ல வேண்டும், என அவள் தீர்மானித்தாள். இன்னும் அதிர்ந்துதானிருந்தாள்; விடியோஃபோனுக்கு அருகில் சென்றாள். அதை எடுத்து நினைவிலிருந்த எண்ணைக் கூப்பிட்டாள்.

நானும் அதனுடைய தூண்டுதல்-நாடாவில் ஒரு அங்கம் என்று அது நினைத்தது, அவள் தனக்கே சொல்லிக் கொண்டாள். தான் சாகும்போது நானும் செத்து விடுவேன் என்று நினைத்திருக்கிறது.  என்ன விசித்திரம் இதெல்லாம், அவள் நினைத்தாள். ஏன் அப்படி அது நினைத்தது?  அது ஒருபோதும் நிஜ வாழ்க்கையில் பொருத்தப்படவே இல்லை, தன்னுடைய எலெக்ட்ரானிக் உலகத்திலேயே வாழ்ந்திருக்கிறது.  எவ்வளவு அசாத்தியமான வாழ்வு அது?

“மிஸ்டர் டான்ஸ்மான்,” அவருடைய அலுவலகத்துடன் அவளுடைய வி-ஃபோனுக்குத் தொடர்பு கிட்டியதும், அவள் பேசினாள், “பூ- போய் விட்டது. என் கண் முன்னாலேயே தன்னை அது அழித்துக் கொண்டு விட்டது. நீங்கள் இங்கு வருவதுதான் நல்லது.”

“ஒருவழியாக அது கிட்டேயிருந்து நமக்கு விடுதலை கிட்டியதா?”

“ஆமாம்.  இப்போ எவ்வளவு நல்லாயிருக்கும்!”

டான்ஸ்மான் சொன்னார், “கொஞ்சம் ஆட்களை பட்டறையிலிருந்து அனுப்பி வைக்கிறேன்.” அவளைத் தாண்டி பின்னால் சமையலறை மேஜை கிட்டே கிடந்த பூ- வை அவர் பார்த்தார். “நீ வீட்டுக்குப் போய் ஓய்வெடுத்துக் கொள்,” அவர் அவளுக்கு உத்தரவு கொடுத்தார். “ இதனாலெல்லாம் உனக்கு ரொம்ப களைப்பாயிருக்கும்.”

“ஆமாம்,” அவள் சொன்னாள்,”நன்றி மிஸ்டர் டான்ஸ்மான்.” வி-ஃபோனை வைத்தாள், குறிப்பில்லாமல் நின்றாள்.

அப்போது அவள் ஒன்றைக் கவனித்தாள்.

என் கைகள்,  அவள் கவனித்தாள். அவற்றை உயர்த்திப் பார்த்தாள்.  இதென்ன, என் கைகள் வழியே நான் பார்க்க முடிகிறதே?

அறையின் சுவர்களும் தெளிவில்லாமல் போய்க் கொண்டிருந்தன.

நடுங்கியபடி அவள் ஜடமாகக் கிடந்த ரோபியை நோக்கிப் போனாள், அதனருகில் நின்றாள், என்ன செய்வதென்று தெரியாமல் நின்றாள். அவளுடைய காலகளூடே கீழே இருந்த தரை விரிப்பு தெரிந்தது. பின் அந்த விரிப்பும் மங்கிப் போயிற்று. தூரத்தில் அந்த விரிப்பினூடே, பொருளுலகே சிதறத் தொடங்கியதைப் பார்த்தாள்.

ஒருவேளை நான் அந்த நாடாத் துண்டுகளை ஒட்டினால், அவள் நினைத்தாள். ஆனால் அவளுக்கு அதை எப்படிச் செய்வதென்று தெரியாது. மேலும் பூ- வே ஏற்கனவே உருவில்லாமல் போகத் துவங்கி இருந்தது. காலையின் இளங்காற்று அவளைச் சுற்றி வீசியது. அவள் அதை உணரவில்லை; உணர்வதை அவள் இப்போது இழந்து விடத் துவங்கி இருந்தாள்.

காற்று ஊதி அடிக்கத் தொடங்கியது.

-o00o-

[2] வால்டொ என்பது தூரத்திலிருந்து அல்லது மறைவிலிருந்து கருவிகளை இயக்க உதவும் எந்திர அமைப்பு.  அணு உலைகள், கடும் வெப்பம் செயல்படும் இடங்கள், மோசமான ரசாயனப் பொருட்கள் புழங்கும் இடங்கள், ஆபத்தான கிருமிகள், விஷநோய்கள் ஆகியனவற்றைக் கையாளும் சோதனைச் சாலைகள், எந்த மனிதத் தொடுகையும் ஏதாவது கேட்டைக் கொணரும் என்ற அளவுக்கு ‘சுத்தம்’ தேவைப்படும் இடங்கள் ஆகியவற்றிற்கு தொலைவிலிருந்து கருவிகள், எந்திரங்கள் ஆகியனவற்றைப் பயன்படுத்த இந்த வகை எந்திர அமைப்புகளைப் பயன்படுத்துகிறார்கள்.  வால்டொ என்கிற சொல்லாக்கம் ராபர்ட் ஹைன்லின் என்ற அமெரிக்க அறிவியல் புனைகதை ஆசிரியரின் 1942 ஆம் வருடத்துச் சிறுகதையில் ஒரு பாத்திரத்தின் பெயர்.  பின்னர் 1950 இல் இந்தப் பாத்திரத்தை வைத்து ஒரு நாவலை எழுதினார். உடலில் பெரும்பகுதியை அசைக்க முடியாதபடி ஒரு நோயால் தாக்கப்பட்ட அந்தப் பாத்திரம் தன் முடத்தனத்தால் கட்டுண்டு கிடக்காமல் அறிவைப் பயன்படுத்தி உருவாக்கும் பல கருவிகள் உலகெங்கும் பிரபலமாகின்றன.  அவற்றுக்கு அந்த இளைஞனின் பெயரையே சூட்டுகிறார்கள்.  வால்டொ என்பது அவன் பெயர்.