இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 2

03

அப்ராம்ட்ஸெவா காலனி
Abramtsevo COLONY – 1870s

அப்ராம்ட்ஸெவா காலனி என்பது மாஸ்கோ நகரின் வடப்புறத்தில் அமைந்திருக்கும் ஒரு பண்ணை. 19 ஆம் நூற்றாண்டில் ருஷ்ய கலைசார்ந்த மரபை முன் நிறுத்தி மேற்கு  யூரோப்பியப் பாதிப்பை ஒதுக்கிய இயக்கத்தின் மையமாக அது இயங்கியது.

தொடக்கத்தில் எழுத்தாளர் ‘செர்கி அக்ஸகோவ்’ (Sergei Aksakov) அதன் சொந்தக்காரராக இருந்தார். அப்போது பல எழுத்தாளர்களும் ஓவியர்களும் அங்கு விருந்தினர்களாக வருகை தந்தனர். அவர்களிடையில் ருஷ்யக் கலையியலை மேலை நாட்டு பாதிப்புகளினின்றும் மீட்டெடுத்து பாதுகாப்பது, வளர்ப்பது என்பது பற்றி கருத்துப் பரிமாறல் நிகழ்ந்தது. 1870இல் ‘செர்கி அக்ஸகோவ்’ மரணமடைந்தார். பதினொரு ஆண்டுகளுக்குப் பின் அந்தப் பண்ணையை ‘சாவ்வா மமோன்டோவ்’ (Savva Mamontov) என்பவர் வாங்கினார். அவர் கலைகளைப் பேணிய செல்வம் மிகுந்த தொழிலதிபர். அவரது அரவணைப்பில் ருஷ்ய கிராமியக் கலைகள் புத்துயிர் பெற்றன. 1870 /1880 களில் அவர் ஓவியர்களுக்கென்று பண்ணையில் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் அங்கு தங்கி ஓவியங்கள் படைக்கவும், ருஷ்யக் கலைக்கு புத்துயிர் கொடுக்கவும் வசதிகள் செய்து கொடுத்தார். கலையும் கைவினையும் அங்கு ஒருங்கிணைந்து வளரத்தொடங்கின. அது, இங்கிலாந்தில் நிகழ்ந்த கலை கைவினை சார்ந்த எழுச்சி (Arts and Crafts Movement)உடன் ஒப்புநோக்குதற்குறியது. அங்கு பல தொழிற்கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டு, கைவினைக்கலைகள், பீங்கான் பண்டங்கள் உருவாக்கல், பட்டு நெசவு போன்றவற்றில் ருஷ்யாவின் தொன்மையான கருப்பொருள்களும், கற்பனையும் இடம் பெற்றன.

ஓவியர்கள் ‘வாஸிலி பாலினோவ்’ (Vasily Polenov), ‘விக்டர் வாஸ்னெட்சோவ்’ (Viktor Vasnetsov) இருவரும் இணைந்து ஒரு கூட்டுறவு மனோபாவத்துடன் எளிமையும் கலைநேர்த்தியும் கூடிய கிருஸ்துவ ஆலயம் ஒன்றை அங்கு கட்ட வரைபடம் தயாரித்தனர். அதில், சுவர் ஓவியங்களும், உத்தரத்திலிருந்து தொங்கிய பொம்மைகளும், குழுப்பாடகர்கள் அமரும் மேடை அமைப்பும் காண்போரைப் பெரிதும் கவர்ந்தன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அங்கு நாடகங்களும், ருஷ்ய நாட்டுப்புறக் கற்பனைகளை அடிப்படையாகக் கொண்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன. அவற்றுக்கான அரங்கத் திரைத் தொங்கல்களில் சிறந்த ஓவியர்களின் படைப்புகள் அமைந்தன.

இன்று, அந்தப் பண்ணை நிலம் அரசின் பராமரிப்பில் ஒரு, சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. அன்று அவ்வோவியர்கள் படைத்த படைப்புகள் அங்கு கலைக் கூடத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

[DDET அப்ராம்ட்ஸெவா காலனி ஓவியங்களைக் காண இங்கே அழுத்தவும்]

[/DDET]

04

சிம்பொலிசம்
Symbolism

19ஆம் நூற்றாண்டுகளின் முடிவுகளிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக் கத்திலும் சிம்பொலிசம் (Symbolism) ருஷ்யாவில் அறிவு சார்ந்ததாகவும் ஓவிய இயக்கமாகவும் வளர்ந்தது. ஐரோப்பிய நாடுகளின் சிம்பொலிசம் இயக்கத்தின் ருஷ்ய பங்களிப்பாக அது அமைந்தது. குறிப்பாக இலக்கியத்தில் கவிதை அதன் தாக்கத்தில் பெரும் மாற்றங்கொள்ளத் தொடங்கியது. இசை, நாடகம், நடனம் போன்ற கலை வடிவங்களும் அதன் தாக்கத்திற்குளாகி நவீன முகம் கொண்டன. ஓவிய உலகில் ‘மிஹைய்ல் ருபெல்’ (Mikhail Vrubel), ‘மிஹைய்ல் நெஸ்டெரோவ்’ (Mikhail Nesterov), ‘நிகொலய் ரேரிஹ்’ (Nicholas Roerich) போன்ற ஓவியர்கள் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளாவர்.

[DDET சிம்பொலிசம் ஓவியங்களைக் காண இங்கே அழுத்தவும்]

[/DDET]

05

மீர் இஸ்குஸ்ட்வா
Mir Iskusstva 1898

(The World of Art)

1898ஆம் ஆண்டில் ‘அலெக்சாண்டர் நிகலாயெவிச் பின்வா’ (Alexandre Nikolayevich Benois), ‘டிமிட்ரி ஃபிலாசபர்’ (Dmitry Filosofor), ‘எவ்கீனி லான்ஸெரே’ (Yevgeny Yevgenievich Lanceray) போன்ற கலை மாணாக்கர் கூட்டு முயற்சியில் தோன்றியது மீர் இஸ்குஸ்ட்வா (Mir Iskusstva) குழுவின் இயக்கம். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (St.Petersburg) நகரில் ஷ்டீய்க்லிட்ஸ் கலைக் காட்சிக் கூடத்தில் (Stieglitz Museum of Applied Arts) ருஷ்ய, பின்லாந்து ஓவியர்கள் இணைந்து அப்போது நடத்திய ஓவியக் காட்சியே இக் குழு தோன்றுவதற்குக் காரணமாயிற்று. குழுவின் உறுப்பினர்களாக வெளி நாட்டுக் கலைஞரும் சேர்ந்தனர்.

அடுத்த ஆண்டில் குழு தனக்கென ஒரு கலை இதழையும் தொடங்கியது. ‘செர்கி டியாகிலெவ்’ (Sergei Diaghilev) அதன் ஆசிரியராக இயங்கினார். காண்போரைச் சலிப்படையச் செய்யும் பழைய பாணிப் படைப்புகள், தரம் குறைந்த படைப்புகள் போன்றவற்றை கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை ஏந்திவந்தது அந்தக் கலையிதழ். அத்துடன், நவீனக் கலை (Art Nouveau) வழியைப் பின்பற்றி தனிக் கலைஞனின் திறமையை வெளிக் கொணர்வதும், கலையுடன் கைவினைக் கலையையும் ஒன்றிணைப்பதையும் முன்னிறுத்திப் பல கட்டுரைகளும் வந்தன.

மீர் இஸ்குஸ்ட்வா குழுவைத் தொடங்கிய ஓவியர் பின்வா மற்றும் சக உறுப்பினர்கள் அழகியலுக்கு எதிராகத் தோன்றிய நவீன தொழிற்சங்க செயற் பாடுகளால் மிகவும் சலிப்புற்றனர். ருஷ்ய அழகியலை மீண்டும் பொலிவுறச் செய்யவேண்டும் என்னும் சிந்தனையில் குழு இயங்கியது. குழுவினர் 18ஆம் நூற்றாண்டின் கிராமியக் கலையான ‘ரோகொகொ’ (Rococo) வின் புகழைப் பரப்பவேண்டும் என்று முனைந்தனர். அவர்களது படைப்புகளில் முகமூடிகள், கயிற்றில் ஊசலாடும் பொம்மைகள், கனவுகள், அவற்றில் தோன்றும் தேவதைகள், அவை தொடர்பான கதைகள் (Fairy Tales), மகிழ்விக்கும் தோற்றம் கொண்ட விலங்குகள், பறவைகள், தாவரங்கள் கூடிய அலங்கார உருவங்கள் போன்றவை, அதிக அளவில் கருப் பொருளாகத் தேர்வு செய்யப்பட்டன. காண்போரின் மன உளைச்சல்களைக் கிளரிவிடும் உணர்வுகள் சார்ந்த, படைப்புகளைக் காட்டிலும் அவ்வகைப் படைப்புகள் கலை ரசிகர்களால் விரும்பி ஏற்கப்பட்டன. ஓவியர்கள் தங்கள் ஓவியங்களில் எண்ணெய் வண்ணங்களுக்கு பதிலாக நீர் வண்ணங்களையும் குவாஷ் (Gouache) வகை வண்ணத்தையும் பயன் படுத்தினர். கலை என்பது அனைவருக்குமானது என்னும் முயற்சியில் அவர்கள் புத்தகங்களையும் இல்லங்களின் உட்புறங்களையும் ஓவியங்களால் நிரப்பினர். பாக்ஸ்ட் (Bakst), பின்வா (Benois) இருவரும் அரங்க அமைப்பு, திரைத் தொங்கல்கள், நாடக மாந்தரின் உடை வடிவமைப்பு போன்றவற்றில் புதுமையைப் புகுத்தி அவற்றில் பொலிவைத் கொணர்ந்தனர்.

செவ்வியல் காலம் (Classical Period) என்று அழைக்கப்பட்ட 1898/1904 களுக்கு இடையில் அந்தக் குழு ஆறு ஓவியக் காட்சிகளை பார்வைக்கு வைத்தது. அதில் ஆறாவது காட்சி குழு உறுப்பினரில் சிலர் விலகி புதிய குழு அமைக்கும் எண்ணத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சியாகவே இருந்தது. குழுவின் மாஸ்கோ ஓவியர்கள் 1901இல் ‘36 ஓவியர்களின் படைப்புகள்’ என்னும் ஓவியக் காட்சியை வைதனர். 1903இல் ருஷ்ய கலைஞர்களின் சங்கம் (‘The Union of Russian Artist’s Group’) என்னும் அமைப்பும் தமது குழு உறுப்பினர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்தியது. மீர் இஸ்குஸ்ட்வா குழு 1904 / 1910 களுக்கு இடையே தனது தனித்துவம் இல்லாமல்தான் இயங்கியது. அதன் இடத்தை ருஷ்ய கலைஞர்களின் சங்கம் (URAG அமைப்பு) பிடித்துக்கொண்டது. 1910 வரை அரசின் ஒப்புதலுடனும், பின்னர் 1924 வரை அந்தத்தகுதி இல்லாமலும் இயங்கியது. இரண்டு குழுக்களும் பழமை வழியை ஒதுக்குவதிலும், காட்சிகளுக்கு ஓவியங்களை நடுவர்கள் தேர்வு செய்யும் செயற் பாடில்லாத இயக்கத்தை ஆதரிப்பதிலும் ஒத்த கருத்தையே கொண்டிருந்தன. 1910இல் மாஸ்கோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட URAG இன் தரம் குறித்தும், குழுவின் செயற்பாடுகள் குறித்தும் ஓவியர் பின்வா ’ரெச்’ ‘Rech’ என்னும் கலை இதழில் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினார். மாஸ்கோ ஓவியர்கள் குழுவில் தொடர்ந்தாலும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர ஓவியர்கள் URAG அமைப்பிலிருந்து விலகிக் கொண்டனர்.

மீர் இஸ்குஸ்ட்வா குழு மீண்டும் உற்சாகத்துடன் இயங்கத் தொடங்கியது. இப்போது அதன் தலைவராக ஓவியர் நிகொலாய் ரேரிஹ் பொறுப்பேற்றார். ஆனால், அது முன்பு போல் ஒரு இயக்கமாக இல்லாமல் ஓவியக் காட்சிகளை ஏற்பாடு செய்யும் அமைப்பாக மாறிவிட்டது என்று பலர் கருதினார்கள். 1917 இல் ‘ஜேக் ஆஃப் டையமெண்ட்ஸ்’ (Jack of diamonds) என்னும் குழுவின் உறுப்பினர் பலர் இங்கு வந்து தங்களை இணைத்துக் கொண்டனர். குழுவின் கடைசி ஓவியக் காட்சி 1927 இல் பாரிஸ் நகரில் வைக்கப் பட்டது. பல உறுப்பினர் குழுவிலிருந்து விலகி வேறு புதிய குழுக்களுக்கு சென்றனர்.

[DDET மீர் இஸ்குஸ்ட்வா ஓவியங்களைக் காண இங்கே அழுத்தவும்]

[/DDET]

(வளரும்)