ஆதலினால் காமம் செய்வீர்

‘பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக, உம்முடைய ராஜ்யம் வருக, உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப் படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக, எங்கள் அனுதின உணவை, எங்களுக்கு இன்று அளித்தருளும், எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும், எங்களை சோகத்தில் விழ விடாதீர். தீமைகளிலிருந்து ரட்சித்தருளும். ஆமென்’ என்று பாதிரியாருடன் சேர்ந்து எல்லோரும் கோரசாகச் சொல்லி முடித்தார்கள். நாற்காலியில் உட்காரும்போது பாதிரியார் எவ்வளவோ முயன்றும் அவரால் சத்தமாய் வாயு பிரிவதை தவிர்க்க முடியவில்லை. ஞானசேகர் வீட்டில் பிரேயர் மீட்டிங்கிற்கு வந்த எல்லோரும் சிரிப்பை தள்ளிப் போட்டார்கள். யாராவது வாயு கழிக்கும் போது பக்க விளைவாக சிரிப்பும் தொடர்வது எப்படி என்பது தெரியவில்லை. மற்றவர்களைப் போல் எஸ்தரால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியாமல் சற்றே சத்தமிட்டுச் சிரித்து விட்டாள். தலையில் முக்காடிட்டு இருந்த பெண்களின் அக்னிப் பார்வையில் அவளது சிரிப்பு பொசுங்கிப் போனது. துப்பட்டாவால் தலையின் முக்காட்டை இன்னும் இழுத்துக் கொண்டாள்.

சர்ச்சிலிருந்து அவ்வப்போது காந்திவிலி பாப்ரேகர் நகரில் செக்டர் ஐந்தில் யார் வீட்டிலாவது பாதிரியார், சிஸ்டர், பிரதர் என்று யாராவது ஒருவர் ஒரு பத்து பேரைக் கூட்டிக்கொண்டு ஜெபம் செய்து கொண்டிருப்பார்கள். காந்திவிலி சார்கோப் பகுதியில் கிறிஸ்தவர்களின் சகல பிரிவினர்களையும் பார்க்க முடியும். ஒரே பைபிளை விதவிதமாகப் படித்துக் கொள்வதும், வேறுவேறு பொருளில் புரிந்துகொள்வதும் வியப்பாகவே இருக்கும். நல்லிரவு கூட்டங்கள், முழு இரவு ஜெபக் கூட்டங்கள் என ஆண்டு முழுவதும் விசேஷம் நடந்துகொண்டிருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் காலையில் மெதடிஸ்டுகள் துவங்கி பெந்தகோஸ்த் வரையிலான பிரிவினரின் கூட்டத்தைக் காண முடியும். மாலையில் கத்தோலிகர்கள். காலைக் கூட்டங்கள் தூய வெள்ளை ஆடையுடன் அலங்காரமின்றி, ஆடம்பரமின்றி பருத்திவெடித்து பஞ்சுக் கூட்டம் காற்றில் நகர்வது போல இருக்கும். மாலையிலோ பெயர்சொல்ல முடியாத வண்ணங்களை சாலையெங்கும் வார்த்தது போலிருக்கும் கத்தோலிக்கர்களின் கூட்டம். சிரிப்பும் கும்மாளமும் கொண்டாட்டமுமாக இருக்கும். அதிலும் இந்த கிழக்கிந்தியர்கள் அணியும் உடை ஃபேஷன் ஷோக்களில் ரேம்ப்பில் நடப்பவர்களையும் மிஞ்சும்படியாக இருக்கும்.

உருளைக்கிழங்கு வேஃபர், சேவ், ஒரு துண்டு கேக் மற்றும் சர்பத்துடன் பிரேயர் மீட்டிங் முடிந்தது. பாதிரியாருக்கு விசேஷமாக மட்டன் குழம்பும், சிக்கன் பொறியலும் படைக்கப் பட்டிருந்தது. பிரேயரின் போது வாயானது வேலையாக இருந்த காரணத்தால் பசியேப்பம் மாற்றுவழியில் வெளியேறியதை யாவரும் அறிவார் தானே. அதனால் படையல் உடனடியாக்கப் பட்டது. ஞானசேகர் பனிரெண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறான். அவன் அப்பா மளிகைக்கடை வைத்திருக்கிறார். அம்மா வீட்டில் தான் இருக்கிறாள். ஒரு தங்கை, ஜெனி. எட்டாம் வகுப்பில் படிக்கிறாள். நடுத்தரக் குடும்பம். சேகரின் வீட்டிற்கு எதிர்வீடு எஸ்தர் வீடு. எஸ்தர் பி. காம் முடித்துவிட்டு சி.ஏ படித்துக் கொண்டிருக்கிறாள். மேலும் ஒரு சி.ஏ விடம் ஜூனியராகப் பணியாற்றியும் வருகிறாள்.

மாலை நேரத்தில் வீட்டில் டியூஷன் எடுத்து வருகிறாள். இங்கேதான் அவளுக்கு அக்கா பட்டம் ஒட்டிக் கொண்டது. பத்தாம் வகுப்பு முதல் டிகிரி படிக்கும் மாணவர்கள் வரைக்கும் டியூஷன் எடுப்பாள். டியூஷன் ரூமில் ஒரு கரும்பலகை கூட இல்லாமல் இத்தனை பிள்ளைகளுக்கும் படிப்பு சொல்லித்தருவது சாமர்த்தியமான வேலைதான். நம் கல்வித் திட்டமும் அப்படியொன்றும் பெரிய சாமர்த்தியமானது கிடையாது என்பது வேறு விஷயம்.

எஸ்தரின் அப்பா தரகுவேலை பார்ப்பவர். பெரும்பாலும் வீட்டில் தான் இருப்பார். எப்பொழுதாவது ஒரு டீல் முடியும். எஸ்தரின் அம்மாவுக்கு தைராய்டு பிரச்சனை. அவள் அசைந்து அசைந்து வீட்டு வேலைகளைச் செய்து வைப்பாள்.

எஸ்தர் ஒரு அழகு தேவதை. எப்பொழுதும் புன்னகை மாறாத ஒரு முகம். யார் எதுசொன்னாலும் அதிராமல் சிரிப்பாள். பல சமயம் விஷயம் நகைச்சுவையற்றதாக இருக்கையிலும் அவள் சிரித்துவைப்பாள். மாலை ஆறுமணி முதல் இரவு பத்துமணி வரை வீட்டில் மாடியில் டியூஷன் சொல்லித் தருவாள். பின் அலுவலகத்திலிருந்து கொண்டுவந்திருக்கும் அக்கவுண்ட் வேலைகள் அப்புறம் உறங்கிப் போவாள்.

சேகர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் எஸ்தருக்கு டியூஷனில் உதவியாக இருப்பான். அன்று டியூஷன் முடிந்து பிள்ளைகள் எல்லாம் போய் விட்டார்கள். எஸ்தர் மாடி ரூமை பெருக்கிக் கொண்டிருந்தாள். ”எஸ்தர் நான் பெருக்கட்டா? என்று அவள் கையிலிருந்த விளக்குமாறை பிடுங்கப் போனான். அவள் அவனது கையைத் தட்டிவிட்டு. ”ஓரமா நில்லுடா” என்று அவனைத் தள்ளிவிட்டாள்.

கிரிக்கெட் பேட்டிங் செய்வது போல் கையை அசைத்துக் கொண்டிருந்தான். சிறிய அமைதி உண்டானது. கீழே ஏதோ சண்டை நடந்து கொண்டிருந்தது. கடைசி வீட்டு மராட்டிகாரர் பாட்டில் வீட்டிற்கு யாரோ கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு வந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தது, அவர்களில் சத்தத்தால் புரிந்து கொள்ள முடிந்தது.

திடீரென கரண்ட் கட்டாகி விட்டது. ‘ஓ’வென்று சத்தம் எட்டு திசைகளிலிருந்தும் வந்து மேல் திசை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. மராட்டிகாரன் வீட்டு வாசலில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சத்தமும் டப்பாக்குள் போட்டு அடைத்தது போல் கப்சிப் என்றாகி விட்டது. வெளிச்சமற்ற அப்பொழுது காட்சியற்ற பொழுதாகி விட்டது. மெதுவாய் எங்கெங்கிருந்தோ பலவிதமான சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தது.

‘எஸ்தர்’ என்று சேகரும் ஒரு குருடனைப் போல் கைகளால் துளாவியபடி கூப்பிட்டான். அவன் கைகள் ஏதோ திரண்ட தசைப் பகுதியைத் தீண்டியது. தீயைத் தொட்டவனைப் போல் கை பின்வாங்கியது. அதற்குள் அவன் கைகளை இரண்டு மென்மையான கைகள் பற்றிக்கொண்டு, ஒரு கையில் எதையோ திணித்தது. அந்த தொடுகை உடலுக்குள் மின்னல் பாய்ச்சியிருந்தது. ‘கதவுலதான் பூட்டு இருக்கு பூட்டிட்டு வா’ என்ற எஸ்தரின் குரலில் ஒருவித நடுக்கம். இரும்புக் கம்பிகளால் செய்யப்பட்ட மாடிப் படிகளில் அவள் வேகமாய் இறங்கும் ஓசை மட்டும் கேட்டது.

சேகருக்கு இதயத்துடிப்பில் மாற்றமும் உடலில் பயமும் உண்டானது. மெதுவாய் இயற்கை வெளிச்சம் பரவிக் கொண்டிருந்தது. அவனால் கதவையும் பூட்டையும் அனுமானமாய் கண்டுகொள்ள முடிந்தது. தனது கைகளில் திணிக்கப்பட்டிருந்த சாவியைக்கொண்டு பூட்டைத் திறந்து கதவைத் தாளிட்டு மீண்டும் பூட்டினான். கீழே இறங்க அவனுக்கு மனம் கொள்ளவில்லை. மாலாவில் நின்றபடி சுற்றும் பார்த்தான். வெகு தூரத்தில் இருக்கும் கட்டிடங்களில் தூரிகையால் தீற்றியது போல் வெளிச்சம் திட்டுத்திட்டாய் தெரிந்தது.

அவனுக்குள் இன்னும் நடுக்கம் ஓயவில்லை. எதாவது தப்பாக செய்து விட்டோமோ என்று குழம்பிக் கொண்டிருந்தான். அதற்குள் அந்தச் சாலில் இருந்த பெரும்பாலான வீடுகளில் மெழுவர்த்தியும் சார்ஜ் செய்யப் பட்ட பேட்டரி விளக்குகளும் வெளிச்சம் கக்கத் துவங்கியிருந்தன.

பளிச்சென வெளிச்சம் வந்து கண்களை கூசச் செய்தது. கரண்ட் போகும்போது கேட்ட அதே ஓவென்ற சத்தம் இப்பொழுதும் கேட்டது. ஒருவேளை இப்பொழுது அதே சத்தம் கிளம்பிய இடங்களுக்கு திரும்பிப் போய்க் கொண்டிருக்கிறதோ என்று பட்டது. சேகருக்கு எஸ்தரை நேருக்கு நேராய் பார்க்க முடியவில்லை. சேகர் கிளம்பினான்.

சேகருக்கு எப்பொழுதும் எஸ்தர் நினைவாகவே இருந்தது. ஏதோ ஒருவித தயக்கம் தூங்கப் போகையில் காணாமல் போய் காலையில் கணக்கில் வந்து வட்டியும் முதலுமாய் சேர்ந்து கொண்டது.

சேகர் டியூஷனுக்கு தவறாமல் வந்து கொண்டிருந்தான். பிள்ளைகளுக்கு யூனிட் டெஸ்ட் முடிந்த நிலையில் அன்று டியூஷனில் அரட்டையும் பேச்சுமாக சீக்கிரமாகவே முடிந்தது. பிள்ளைகள் போய் விட்டார்கள். மேலே கிடந்த பிளாஸ்டிக் நாற்காளியில் உட்காந்து பிள்ளைகளில் யாரோ விட்டுச்சென்ற புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான். எஸ்தர் அவன்கையைப் பிடித்துக் கொண்டு ‘வெளியில எங்கயாவது போகலாமா?’ என்றாள். சேகர் சந்தோஷத்தில் தலையை ஆட்டினான். ‘எஸ்சல் வொர்ல்டு, இல்ல, வாட்டர் கிங்டம் போகலாமா?’ என்றான். ‘ஓ, சூப்பர்’ என்றாள். ஞாயிற்றுக் கிழமை காலையில் சர்ச் முடிந்ததும் போகலாம் என முடிவானது.

ஞாயிற்றுக் கிழமையை இரண்டு பேரும் இழுத்து நகர்த்திக்கொண்டு வந்தார்கள். சேகர் காலையில் வழக்கத்திற்கு முன்னே எழுந்து தயாராகி கரோடி பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தான். கருப்பில் மெல்லிய பூப்போட்ட சுடிதார் அணிந்திருந்தாள். காது ஓட்டையை மட்டும் மூடினாற்போல் ஒரு பாசி அணி. அதற்கு மட்டும்தான் அப்பாவும் அவளது சர்ச்சும் அனுமதித்திருக்கிறது. பியர்ஸ் சோப்பின் வாசம் காற்றில் பரவ மெல்ல நடந்தாள். சூரியக் கதிர்களில் இன்னும் உஷ்ணம் இறங்கவில்லை. ஆட்டோ ரிக்ஷா பிடித்து மால்வாணி சர்ச் என்று சொல்லி குறித்த இடத்தில் இறங்கினாள். சேகர் ஏற்கனவே அங்கே காத்திருந்தான். நீல நிற ஜீன்சும் வெள்ளைச் சட்டையும் அணிந்திருந்தான். ஆண்மையுடன், அவனிடம் இளமையும் அழகும் கூடியிருந்தது.

‘எஸ்சல் வொர்ல்டு பத்து மணிக்கு அப்புறம்தான் திறக்குமாம், விசாரிச்சுட்டேன்’ என்றான். எஸ்தர் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு ‘அப்படின்னா கேட்ல போய் வெயிட் பண்ணலாமே’ என்றாள். ‘மனோரி போகலாமா?, போட்ல ஒரு ரவுண்ட் போய்ட்டு வர்றதுக்குள்ள பத்து மணியாயிடும்’ என்றான். முதலில் இங்கிருந்து கிளம்பினால் போதும் என்பது போல அவள் அவசரப்படுத்தினாள்.

684cbf2c-94eb-408e-81e4-4981557c044b

ஆட்டோ ரிக்‌ஷா பிடித்து மார்வே கடற்கரை வந்து சேர்ந்தார்கள். மார்வே கடற்கரையில் பீச் கிடையாது. அங்கிருந்து பதினைந்து நிமிட தொலைவில் இருக்கும் ஆக்‌ஷா பீச்க்குத்தான் மக்கள் கூட்டம் போகும். இங்கே மீன் பிடிப்பு பணிகள் மட்டுமே நடக்கும். ஆந்த நேரத்திலும் ஆங்காங்கே காதல் ஜோடிகள் எலும்பற்றவர்களைப் போல் ஒருவர்மேல் ஒருவர் சாய்ந்து கிடந்தார்கள். மனோரி ஒரு தீவு. மனோரிக்கு டீசல் போட்டில் ஏறி, ஓரமாக நின்றுகொண்டார்கள். நீர்ப்பயணம் எல்லாவற்றையும் மறக்கச் செய்துவிடும் போல. நிலத்தை விட்டு போட் விலக விலக சகல பயமும், தயக்கமும் விலகிக்கொண்டே போனது. ஒருவேளை அவை கரையிலேயே தேங்கியிருக்கலாம். திரும்பி வருகையில் தொற்றிக்கொள்ளக் கூடும்.

மனோரி கரையில் இறங்கியவர்களை மீன்காரர்கள், ஆளுக்கொரு மீனை கையில் வைத்துக்கொண்டு விலைசொல்லிக் கொண்டிருந்தார்கள். எதிலும் கவனம் செலுத்தாமல் இருவரும் நடந்து கொண்டிருந்தார்கள். தூரத்தில் அவர்களுக்காகவே அவதரித்து காத்திருந்தது போல் ஒரு பாறை இருந்தது. மணி ஒன்பதைத் தொட்டிருந்தது. இருவரும் வாகாய் பாறைமேல் உட்கார்ந்தார்கள். கடல் காற்று அவர்களை வருடிக் கொண்டிருந்தது.

‘சாப் ரூம் சாஹியே கியா? ஒன் ஹவர் கா ஹண்ட்ரட் ருப்யா’ என்று பக்கத்தில் வந்து நின்றான் ஒருவன். இவர்கள் இருவரும் எதுவும் சொல்லவில்லை. ‘சாப், இதர் போலீஸ் ஆத்தி ஹை, ரூம் மே பேட்டோ பாத் கரோ, டிரிங்க்ஸ், புட் ஐட்டம் பி மில் ஜாயேகா, கியா போல்தே ஹோ ?’ என்று கையில் வைத்திருந்த ரூமின் புகைப் படங்களைக் காட்டினான்.

‘நோ, தேங்க்ஸ்’ என்றான் சேகர். ஆனால் அந்த ஆள் விடுவதாயில்லை. வெட்டவெளி குறித்து பயங்களையும் ஹோட்டலின் சவுகரியங்களையும் சொல்லி ரூம் எடுக்கலாம் என்று முடிவு செய்யும் அளவுக்கு கொண்டு வந்து விட்டான். ரூம் எடுக்கும் திட்டமில்லை என்றாலும் ஆசையிருந்தது. வந்தவன் ஒரு தேவதூதுவனைப் போல் ஒளிவட்டம் மின்னக் காட்சி அளித்தான்.

‘ரூம் எடுக்கலாமா? சேகர் கேட்டான்.

‘உன் இஷ்டம்’ என்றாள் எஸ்தர். சேகருக்கும் சந்தோஷம் என்றாலும் பயம் அவனை பாடாய்ப் படுத்தியது. எஸ்தர் அப்படியொன்றும் பயந்தவள் போல் தெரியவில்லை. மால்வானி சர்ச்சில் யாராவது பார்த்து விடுவார்களோ என்று பயந்த அந்த பயம் கூட ரூம் எடுக்கும் இந்த நேரம் இல்லை.

‘ஆனந்த்புரா’ என்று பெரிய போர்டில் எழுதப் பட்டிருந்தது. ரிசப்சன் என்று எதுவும் கியாது. ஒரு மேசையில் இரண்டு பெரிய சைஸ் ரிஜிஸ்டர்கள் வைக்கப் பட்டிருந்தது. சேகருக்கு பின்னாலேயே நகர்ந்து கொண்டிருந்தாள் எஸ்தர். பதிவு எதுவும் செய்து கொள்ள வேண்டியதில்லை என்று கூட்டிச்சென்ற ஆசாமி சொன்னான். ஒரு மணி நேரத்துக்குப் போதும் என்றதும் நூறு ரூபாய் கேட்டான். மேலும் தலையைச் சொறிந்து சிரித்தவனுக்கு இருபது ரூபாயை கொடுத்தான். மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டு, அவனைப் பின் தொடரச் சொன்னான்.

பிளேவுட்டால் ஆன கதவைத் திறந்தான். உள்ளே சிறிதாய் ஒரு கட்டில் மின்விசிறி மற்றும் ஒரு தண்ணீர் ஜக்கும் இரண்டு தம்ளர்களும் வைக்கப் பட்டிருந்த சிறு மேசை. மூலையில் ஒரு கதவு இருந்தது. கண்டிப்பாய் அது கழிப்பறையாய் இருக்கலாம். அறையில் ஒருவித புழுக்கமான வாடை நிரப்பி வைக்கப் பட்டிருந்தது. வெளிப்புரமாக திறக்கும் ஒரு ஜன்னலைத் திறந்து கடலைக் காட்டினான் அந்த ஆசாமி. ஆறுதலான ஒரு விஷயம் அந்த ஜன்னலாக இருக்குமென சேகரும் எஸ்தரும் நினைத்துக் கொண்டார்கள்.

‘சாப், கோல் டிரிங்க்ஸ், காண்டம், டிஸ்யூ பேப்பர், பாத்திங் சோப் குச் ஜரூரத் படே தோ போல்னா’ என்று சிரித்தபடி கதவை இழுத்துவிட்டுப் போய்விட்டான்.

எஸ்தரும் சேகரும் சில நிமிடங்கள் வரை ஜன்னல்வழி வெளியிலேயே பார்த்துக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் இல்லாமல் திடீரென உருவாகி கரையை நோக்கி வந்து காணாமல் போகும் அலைகளையே ஆச்சர்யமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சேகர் எஸ்தரின் தோளில் கையை போட்டு நின்றான், பின் மெதுவாக அவளது இடுப்பில் கையை வைத்து தன்பக்கம் இழுத்தான். ஜன்னலை காற்று மூடியது. அறை முழுவதும் மூச்சு சத்தம் பரவிக் கொண்டிருந்தது. இருவரும் உடைந்து சிதைந்து கொண்டிருந்தார்கள். படுக்கையில் மெல்ல உட்கார்ந்து படர்ந்த அவள் மீது படர்ந்தான். என்ன செய்ய வேண்டும் எப்படி துவங்கி எப்படி போகவேண்டும் என்ற எந்த அறிவும் இருவருக்கும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அனுபவப் பட்டவர்களைப் போல் கொடுத்தும் பெற்றும் கொண்டிருந்தார்கள்.

எஸ்தரின் மூச்சுவாங்கலில் ஒரு மாற்றம் உண்டானது. அவளது மூச்சு இளைப்பாய் மாறியது. மூச்சுவாங்க சிரமப் பட்டவளைப் போல் ஆழமாக இழுத்து இழுத்து விட்டாள். கழுதை கனைப்பது போல் இருந்தது. அவளது கண்கள் மேலே சொருகிக் கொண்டது. முதலில் கவனிக்காத சேகருக்கும் அவளது உடல் வளைந்து உடைந்து துடிப்பதைக்கண்டு சந்தேகம் உண்டானது. சேகர் அவளை விட்டு விலகி எழுந்தான். எஸ்தர் இன்னமும் படுக்கையில் கிடந்து துடித்துக் கொண்டிருந்தாள். சேகருக்கு அழுகை பெருக்கெடுத்தது. என்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை.

எஸ்தர் மூச்சுவாங்க தடுமாறிக் கொண்டிருந்தாள். நீண்ட இடைவெளிகளில் ஒரு ஆழமான மூச்சை இழுத்து விட்டாள். அவளது ஆடைகள் அலங்கோலமாக படுக்கையில் மேலேயும் கீழேயுமாக எழுந்து எழுந்து அடங்கிக் கொண்டிருந்தாள். அவள் மூக்கிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. ‘எஸ்தர்…. எஸ்தர்… என்ன ஆச்சு?’ என்று அவளை மடியில் தாங்கினான். அவளது உடல் இன்னும் வேகமாய்த் துடித்து அவனது மடியிலிருந்து விலகியது. அறை முழுவதும் அவளுடைய இழுப்பு சத்தம் பரவி அச்சமாக இருந்தது. சேகர் தலையில் அடித்துக் கொண்டு வாய்விட்டு அழுதான். ‘எஸ்தர்….. ப்ளீஸ்.. என்ன ஆச்சு… ப்ளீஸ்.. என்ன ஆச்சு’ என்று குலை நடுங்க அழுதான்.

எஸ்தரின் உடலில் துடிப்பு மெதுவாய்க் குறைந்துகொண்டே வந்தது. எஸ்தர் மெல்ல சாந்தமாகிக் கொண்டிருந்தாள். அவளது உடல் சில்லிட்டுக் கொண்டிருந்தது. கண்கள் இமைகளில் சொருகிக் கிடந்தது. படுக்கை முழுவதும் எஸ்தர் பரவிக் கிடந்தாள். சேகர் மூலையில் உட்கார்ந்து வாயைப் பொத்தி அழுது கொண்டிருந்தான்.

திடீரென ஜன்னல் திறந்து கொண்டு அலைச்சத்தமும் கடல் காற்றும் உள்ளே வந்தது. புழுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டிருந்தது.