‘விளிம்பில் உலகம்’ கட்டுரைக்கு ஒரு மறுவினை

classical20indian20instument20ensemble

சொல்வனம் இதழ் 37-இல் திரு.மித்திலன் எழுதிய ‘விளிம்பில் உலகம்’ என்ற கட்டுரையைப் படித்தேன்.  அவர் நுட்பமாகத் தன் கட்டுரையை வரைந்திருக்கிறார், சொல்வதைச் சுருக்கி எழுதியிருக்கிறார் என்பதால் வேகமான வாசிப்பில் சில அம்சங்கள் கவனிக்கப்படாமல் போகலாம் என்று நினைத்து இதை எழுதுகிறேன். இது விமர்சனமில்லை, கூடுதலான விவாதத்துக்குத் தூண்டுதலாக இருக்கும் என எழுதுகிறேன்.

ஒரு பாடல் இசைக்கப்படுவதில் இசைக் கலைஞனின் வாசிப்பு இருக்கிறதென்றால், அதை செவி மடுப்பவனின் வாசிப்பும் அதன் விவரிப்பில் இருக்கிறது. நாம் எல்லாரும் அதை வெவ்வேறு தளங்களில் ரசித்தாலும், பொதுவாக இன்னதுதான் இசைக்கப்பட்டது என்று நம்மிடையே ஒரு கருத்தொருமிப்பு உள்ளது. அந்த இசையை இயற்றியவன், தன் ரசிகர்களின் நுண்ணறிவுக்கு ஏற்ப அவர்களின் வாசிப்பு தன் வாசிப்பை ஒத்துப் போகிறது என்று ஏற்றுக் கொள்ளக் கூடும். ஆனால் எவ்வளவுதான் பேசினாலும், கலைஞனின் வாசிப்பை ரசிகனின் வாசிப்பு தொடுவதில்லை என்று சொல்லலாம். ஒரு இசையின் வாசிப்புக்கு சரியான எதிர்வினை இசை வடிவில்தான் இருக்க முடியும்.” என்று மித்திலன் எழுதுகிறார்.

இசைக் கலைஞர்களிடையே கூட, அறிந்த இசையை வாசிப்பதில் கூட, சில வகைக் கற்பனை சஞ்சாரங்களை இதர கலைஞர்கள், பக்கவாத்தியக்காரர்கள் அறிந்து வியப்பார்களே தவிர தாமும் அதே சஞ்சாரங்களை முயல்வது கடினம் என்று தெரிவிப்பார்கள்.

இருப்பினும் கூட்டிசை என்று ஒன்று எப்படியோ சாத்தியமாகிறது. ஒத்திசை என்பதும் சாத்தியமாகிறது. அதெப்படி என்று கேள்வி எழலாம். இவை சிலர் தமக்குள் ஒரு ஒப்பந்தம் போலச் செய்து கொண்டு, தனி நபர் கற்பனையை, படைப்பு சக்தியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, அவரவர் சிறகைக் கொஞ்சம் குறுக்கிக் கொள்வதாலேயே நடக்கிறது, பலருமாகச் சேர்ந்து கூட்டாகப் பறப்பதாக அமைகிறது. கூட்டிசையில் பல நேரம் தனி இசையின் நுட்பங்கள் கிட்டா விட்டாலும், ஆழங்கள், உயரங்கள் கிட்டாவிட்டாலும், பிரும்மாண்டம், பகட்டு, அலங்காரம், நளினம், ஜனரஞ்சகம் என்பன சுலபமாகக் கிட்டும். பலர் கூட்டிசையை விரும்புவதும், தனி நபர் இசையை விரும்பாததும் இந்த முலாம்களை, பெரும் கலவையை விரும்புவதாலேயே.

கூட்டிசையில், குறிப்பாகப் பலர் சேர்ந்திசைக்கும்போது  ஒரு கலைஞர் அல்லது ஒரு மரபின் மீது தனக்குள்ள காழ்ப்பை இன்னொருவரால் அவ்வளவு எளிதில் வெளிப்படுத்தி விட முடிவதில்லை. முன் சொன்னது போல வாசிப்பில் தரம் மட்டுமே எப்போதும் விரும்பப்படுவதில்லை. சொல்லப் போனால் தர உயர்வு என்பதைச் சில நேரம்தான் பலரும் ரசிக்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் ஆடம்பரம், சொகுசு, கலகலப்பு, விறுவிறுப்பு என்று நவரசங்களில் பலவற்றின் கூட்டு விரும்பப்பட்டு, அவை பலர் சேர்ந்த கலையிலேயே கிடைக்கிறது என்றும் கருதப்படுகிறது. அந்தத் திக்கிலேயே பொது வாசிப்பும், எதிர்பார்ப்பும் புரள்கிறது. இதனாலேயே ஆழமற்ற இயக்கங்கள் பரந்துபட்டும், தீவிர சிந்தனை குறைந்த நபர்களிடம் மட்டுமே உலவுவது நடக்கிறது. வகைப்படுத்தல் என்பதே ஒரு வகைத் திறமை சார்ந்தது. வகைகளிடையே இணக்கமும், மாற்றும், முரணும், இழுபறியும் என்று பலவகை இயக்க சாத்தியங்களை அறிந்து அவற்றை லாகவமாகக் கையாள அசாதாரணத் திறமைகளும், ஈடுபாடும், உழைப்பும் தேவைப்படலாம்.

தனி நபர் இசையை அல்லது வெகு சிறு குழுவினரின் மிக்க கவனிப்புள்ள இசையை விரும்ப, நம் பார்வையில், கொஞ்சம் அறிவு முதிர்ச்சியும், ரசனைப் பயிற்சியும் தேவை.

நம் தனிநபர், சிறு குழு இசையை மேட்டுக் குடி இசை என்றும், மேலைக் கூட்டிசைதான் மக்களிசை என்றெல்லாம் கூட விமர்சனங்களை நான் தமிழ்நாட்டில் கேட்டிருக்கிறேன்.  இன்னுமே கூட கர்நாடக இசையை அப்படி வருணிக்கும் நபர்கள் தமிழகத்தில் நிரம்பவே உண்டு.  சினிமா இசை போன்றனவற்றில் பாரம்பரிய இசைப் பாதிப்பு இல்லாத இசைதான் உண்மையான மக்களிசை என்றெல்லாம் கூடக் கருத்துகள் தனிப்பேச்சில் வந்து விழுகின்றன.

இப்படியே சில மகானுபாவன்கள் தமிழ்ச் சூழலின் அதி வக்கிரமான இன அரசியல், ‘முற்போக்கு’ அரசியல் ஆகிய அபத்தங்களின் பிடிப்பில் தம் கற்பனை வளர்வதால், இத்தகைய விமர்சனங்களைத் தாராளமாகப் பொது அரங்கில் விசிறுகிறார்கள். புத்தியுள்ளவர்களுக்கு இந்த வகை பிரச்சாரங்களைத் தாண்டிச் செல்ல சில வினாடிகளே பிடிக்கும். எந்த சமூகத்தில்தான் கோணல் புத்திகள் இல்லை? தமிழகத்தில் கடந்த ஐம்பதாண்டுகளின் வினோத அரசியலில் இந்தக் கோணல்கள் கூடுதலாகப் பரவியுள்ளன. இதற்கு விடிவு மேன்மேலும் பாரம்பரியத்தைப் பற்றியே கூட, நம அறிவுத் துலக்கத்தைக் கூட்டுவதில்தான் உள்ளது. பாரம்பரியம் என்ற போர்வையில் தரச் சீர்தூக்கலை அனுமதிக்காமல் எல்லாவற்றையும் ஒரு சேரக் கட்டுவதால் பலனிராது.  அறிவுத் துலக்கம் என்ற பெயரில் பாரம்பரியம் அனைத்தையும் கசடு என்று தூர எறிவதும் புத்தியுள்ள செயலாகாது.  சக்கரத்தைத் திரும்பத் திரும்ப ஒவ்வொரு ஆண்டும் கண்டு பிடித்துக் கொண்டிருப்பதற்குப் பெயர் அறிவு வளர்ச்சி அல்ல; நினைவு மறதி வியாதி (amnesia) என்றுதான் அதைச் சொல்ல முடியும்.  பல பண்பாடுகளின் உயரிய இசைப் பாரம்பரியங்களை அடுத்தடுத்து நம் மேடைகளில் ஏற்றி மக்களுக்கு அளித்தால் அங்கு நம் பாரம்பரியத்தின் சோபை தானாக மிளிரும், புலப்படும். இந்தியாவிலேயே பல பகுதிகளின் செவ்விசை தவிர உயர்ந்த தரமுள்ள மக்களிசை ஆகியவற்றை நாம் தமிழகத்தின் பல நகரங்களிலும், கோவில்களிலும் அரங்கேற்றுவது நல்ல பயனளிக்கும்.

இதுவரை மித்திலனின் கட்டுரையில் உள்ள இசை குறித்த சில கருத்துகளுக்கு என் மறுவினை அமைந்தது. இனி வருவன இயற்கை குறித்த அவருடைய கவனிப்புக்கு மறுவினைகள்.

இயற்கையின் வாசிப்பில் பொருளில்லை என்ற மித்திலனின் வாக்கியம் குறைபடப் புரிந்து கொள்ளப்படலாம். இயற்கையில் matter என்பது இல்லை எனப் புரிந்து கொள்ளப்பட்டால் அது ஒரு தவறான வாசிப்பாகவே முடியும். இயற்கையில் பௌதிக விஷயம் இல்லை என்று மித்திலன் சொல்லவில்லை என நினைக்கிறேன். இயற்கையில் இலக்கு குறித்த பயணத்துக்காக அனைத்தையும் இயக்கும் ஒரு முனைப்பு இல்லை என்று சொல்ல விழைவதாக எனக்குத் தெரிகிறது. இதில் மொத்த இயற்கை – அண்ட பேரண்டத்தில் பரவிய இயற்கை, பூமியளவில் இயற்கை, இந்திய அளவில் என்று பார்வையைச் சுருக்கிக் கொண்டு வந்து பாக்டீரியா வைரஸ் என்று உயிரிகளிடம் நெருங்கினால் இலக்கு என ஒன்று இருப்பதாகத் தெரியும்.

அத்வைதம் அனைத்தையும் ஒரே விதமானது என்று சொல்வதற்கும்,World is all matter என்று மேலைப் பொருள்மயவாதம் சொல்வதற்கும் நிறைய இணக்கமும், பிணக்கமும் உண்டு. ப்ரம்மம் என்பதற்கு குணங்கள் கிடையாது என்பதால் அது பொருள் எனக் குறைக்கப்பட முடியாதது. ஆனால் பொருளையும் அது உள்ளடக்கியது. அனைத்தையும் பொருள் எனச் சொல்லும் மேலைப் பொருள்மயவாதம் மிகவுமே குறைப்பட்ட ஒரு பார்வை. குணம் என்ற புலன்களின் ஸ்பரிசத்தால் கிட்டும் மனித உணர்வுகளை வெறும் ரசாயன, மின்சார மறுவினைகள் என்று அறியும் ஒரு முரட்டுப் பார்வை இது. பாகங்களின் கூட்டுக்கும், பாகங்களின் தனித்தனி நிலைகளுக்குமிடையே உள்ள மாறுதல் என்பது குணமாறுதல். குணம் என்பதைப் பொருளாக்க முடியாது. இசைக் கலைஞனின் வாசிப்புக்கும் மிகப் பயிற்சி உள்ள ரசிகனின் வாசிப்புக்குமிடையே கூட வேற்றுமைகள் இருப்பதற்கு இந்த குணாம்ச பேதங்களே காரணம். இதைக் குறித்து இன்னொரு கட்டுரையே எழுத வேண்டி வரும்.

ஆனால் இங்கு பேரண்ட அளவிலான இயற்கைக்கும், வைரஸ் அளவிலான இயற்கைக்கும் இடையே உள்ள அளவு வேறுபாடு என்பதுமே மனிதப் பரிச்சயத்தின் விளைவுதான்.  நாம் இங்கே மனிதப் பரிச்சயம் என்ற அடித்தளத்தில் நின்றுதான் பேசுகிறோம். அந்தத் தளத்திலிருந்தே தொடர்ந்தால், நோக்கம் உள்ள இயக்கம் என்பது, பொருள் என்ற அர்த்தத்தில் மித்திலன் சொல்வது என்பது சரியானால், ஜீவராசிகளின் இயக்கங்களில் ஏதோ பொருள் – நோக்கம் – இருப்பதாகவும், அவற்றின் ‘வாசிப்பு’ வேறுவிதமாகவும், ஜடராசிகள் அத்தகைய நோக்கம் இல்லாத பெருமியற்கையின் இழுப்பில் பிரயாணம் செய்வதாகவும் ஒரு வேறுபாடு எனக்குத் தோன்றுகிறது. இது குறித்தும் இங்கு மேற்படி விவாதம் நடப்பது உதவும்.