மொழிபெயர்ப்பு என்னும் கலை – இறுதிப்பகுதி

இக்கட்டுரையின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.

ஆனால் பழிவாங்குதல் என்பது இனிமையானது- அது முன்திட்டமில்லாத பழிவாங்குதல் ஆனாலும் கூட. ரஷ்ய மொழியில் எழுதப் பட்டதிலேயே மிகச் சிறந்த சிறுகதை கோகலின் (Gogol) ‘ஓவர்கோட்’ ஆகும். (அல்லது ‘மாண்டில்’, அல்லது ‘க்ளோக்’, அல்லது ‘ஷி-நெல்’, இன்னும் சரியாகச் சொல்வதென்றால் ‘காரிக்’). அதன் சாரமான அம்சம், மற்றபடி ஏதும் முக்கியமற்ற ஒரு நிகழ்வு , விவரிப்பிற்குத் துக்ககரமான அடி ஓட்டமாக இருக்கும், தர்க்க முரண் உள்ள ஒரு பகுதி, அதன் சிறப்பான எழுத்து நடையால் கதையோடு இயல்பாக இணைந்திருப்பதே: ஒரு புதிரான வினையெச்சம் வினோதமான முறையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது, இந்த மீள் தோற்றங்கள் ஒரு வகை அமானுஷ்ய மந்திர ஜெபிப்பாக மாறுகின்றன; குறையற்ற எளிய வருணனைகள் போலத் தெரிவதெல்லாம், சிறிதே முனை திரும்பியதும் பெரும் களேபரத்தைக் காட்டுகின்றன, சாதுவான வாக்கியங்களாய்க் கிடப்பனவற்றில் இங்கொன்றிலும் அங்கொன்றிலுமாய், ஒரு சொல்லை, அல்லது ஒரு உவமானத்தைச் செருகி விடுகிறார் கோகல், அது அந்த பத்தியையே, பீதியூட்டும் வகையில் பற்றிக் கொள்ளும் வெடிமருந்து போல வெடிக்க வைக்கிறது. இவை தவிர கதையில் காணும், தடம் தேடும் தடுமாற்றங்கள், நம் கனவுகளின் முறை தவறிய சைகைகளை ஆசிரியரின் கவனத்துடன் வெளிப்படுத்தும் விதமே. இவற்றில் ஒன்று கூட நேரடியாகவும், சுறுசுறுப்பாகவும், மிக்க ஒழுக்க ஒழுங்குடனும் செய்யப்பட்டுள்ள ஆங்கிலப் பதிப்பில் வெளிப்படவில்லை. (பாருங்கள்- கிளாட் ஃபீல்ட் மொழிபெயர்ப்பில் ‘தி மாண்டில்’ கதையை – அதன் பிறகு ஒருபோதும் அதைப் பார்க்காதீர்கள்).

பின்வரும் எடுத்துக்காட்டு, கண் முன்னே நடக்கும் ஒரு கொலையைத் தடுக்கக் கையாலாகாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு உணர்வை எனக்கு அளிக்கிறது:

கோகல்: … அவன் [சாதாரண ஊழியர்] வசித்திருந்த மூன்றாவது அல்லது நான்காவது மாடி குடியிருப்பில்…சில டம்பமான அற்பச் சாமான்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன- அந்த விளக்கை எடுத்துக் கொள்ளலாமே – இந்த அற்பங்கள் எல்லாம் பல தியாகங்களுக்குப் பிறகு வாங்கப்பட்டிருந்தன…
ஃபீல்ட்: … வாங்கப்பட்ட சில பகட்டான மரச் சாமான்களும், மற்றவையும் வைக்கப் பட்டிருந்தன…

அந்நிய மொழியிலுள்ள பெரும் இலக்கியப் படைப்புகளோ, அத்தனை புகழ் பெறாத ஆனால் குறிப்பிடத்தக்கனவாகக் கருதப்படும் படைப்புகளோ தவறான முறையில் கையாளப்படும்போது, குற்றமற்ற ஒரு மூன்றாவது நபரும் அந்த கேலிக்கூத்தில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. மிகச் சமீபத்தில், பிரபலமான ஒரு ரஷ்ய இசை அமைப்பாளர், நாற்பது ஆண்டுகளுக்கு முன் தான் இசை அமைத்த ஒரு ரஷ்யக் கவிதையை மொழிபெயர்க்கும் படி என்னிடம் கேட்டுக்கொண்டார். அவர் குறிப்பாகச் சொன்னது, ஆங்கில மொழி பெயர்ப்பு ரஷ்யச் சொற்களின் ஓசைகளுக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக, அந்த ரஷ்ய கவிதையோ, எட்கர் ஆலன் போ எழுதிய “மணிகள்” என்ற ஆங்கில கவிதைக்கு கே. பல்மான்ட் தந்த ரஷ்ய மொழியாக்கம் ஆகும். பல்மாண்ட் தன் சொந்தப் படைப்பிலேயே நயமான இசைஒலி கொண்ட ஒரு வரி கூட எழுத இயலாத அளவு நலிந்த எழுத்தாளர் என்று நான் கூறினால், அவருடைய ஏராளமான மொழிபெயர்ப்புகள் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை உடனடியாகப் புரிந்துகொள்ள முடியும். போதுமான அளவிற்கு தன் கைவசம் இருக்கும் அரதப் பழசான எதுகை மோனைகளையும், போகிற போக்கில் கிட்டும் உளுத்துப்போன உருவகங்களையும் வைத்துக் கொண்டு, போ பெருமுயற்சியோடு உருவாக்கிய ஒரு கவிதையை, எந்த கற்றுக்குட்டி ரஷ்ய கவிஞரும் கண நேரத்தில் தயாரிக்கும் ஒரு படைப்பாக பல்மான்ட் மாற்றிவிட்டார். இந்தக் கவிதையை திரும்ப ஆங்கிலத்திற்கு மாற்றுகையில், ரஷ்யச் சொற்களின் ஓசைக்கு ஒத்துப் போகும் ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பது தான் என் முழு முனைப்புமாக இருந்தது.

எதிர்காலத்தில் என்னுடைய, ரஷ்ய மொழியின் ஆங்கில மொழி பெயர்ப்பை வாசிக்கும் ஒருவர், முட்டாள்தனமாக மீண்டும் அதை ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கக் கூடும். இப்படியே அந்த கவிதையில் போவின் சுவடு மறைந்து போய் அது முழுக்க பல்மாண்டுடையதாகி விட, ஒரு வேளை “மணிகள்” ஆன கவிதை “மெளனமாக” மாறக் கூடும்!

இதைவிடக் குரூரமான விஷயம் பூட்லேயரின் வனப்பு மிக்க கனவு போன்ற “Invitation au Voyage” -ற்கு நிகழ்ந்தது. (“Mon enfant, ma soeur, Songe a la douceur…”)

1. அதன் ரஷ்ய மொழிபெயர்ப்பு, பல்மாண்டை விடக் குறைவான புலமை பெற்ற மேரெஷ்கோவிஸ்கியின் பேனாவிலிருந்து பிறந்தது. அது இப்படி தொடங்கும்:

என்னினிய புதுப் பெண்டாட்டியே,
போவோமா ஓர் சவாரியே;

உடனடியாக ஒரு துள்ளலான மெட்டுப் போடப்பட்டு, ரஷ்யாவில் உள்ள அனைத்து ஆர்கன் வாத்தியக்காரர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ரஷ்ய நாட்டுப் பாடல்களை மொழிபெயர்க்கும் எதிர்கால பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர்கள் இதை மீண்டும் பிரெஞ்சில் இப்படி மொழிபெயர்ப்பார்கள் என்று கற்பனை செய்கிறேன்:

Viens, mon p’tit,
A Nijni
[’வருகிறதே, என் சிற்றூரே’- என கூகிளின் ஆங்கில மொழிபெயர்ப்பு பொருள்
தருகிறது- தமிழ் மொழிபெயர்ப்பாளர் குறிப்பு.]

இப்படியே தொடரும் ஒரு முடிவில்லாப் பிழைகளின் சங்கிலி.

முழு எத்தர்கள், சற்றே மந்த புத்திக்காரர்கள், மலட்டுப் புலவர்கள் ஆகியோரைத் தவிர்த்தால், தோராயமாக, மூன்று விதமான மொழி பெயர்ப்பாளர்கள் உள்ளனர். நான் முன்னர் கூறிய மூன்று வகைத் தீங்குகள்- அறியாமை, விட்டு விடுதல், மற்றும் ஒற்றித் திருத்தல்- அவற்றுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இல்லை என்றாலும், இந்த மூன்று வகையினரும் மேற்படி மூவகைப் பிழைகளையும் செய்யக் கூடும். இந்த மூவகையினர்: கவனிப்பில்லாமல் கிடக்கும் ஒரு மேதையின் படைப்பைத் தான் ரசித்த அளவிற்கு இந்த உலகமும் ரசிக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு படிப்பாளி; நல்ல நோக்கத்தோடு உழைக்கும் கூலிஎழுத்தாளன்; மற்றும் அந்நிய மொழியில் உள்ள சக எழுத்தாளரோடு கூடிப்பேசி இளைப்பாறும் தொழில்முறை எழுத்தாளர். [இவர்களில்] படிப்பாளி விதிகளுக்குட்பட்டுக் கறாராகப் பணியாற்றுவார் என்று நம்புகிறேன்: அடிக்குறிப்புகள் எல்லாம்- புத்தகத்தின் கடைசிக்குத் தள்ளப்படாமல், மூலப் பிரதி உள்ள அதே பக்கத்தில்- எவ்வளவு விவரங்களோடும், ஏராளமாகவும் கொடுக்க முடியுமோ அத்தனையோடும் இருக்கும். யாரோ ஒருவருடைய தொகுக்கப்பட்ட மொத்தப் படைப்புகளின் கடைசிக்கு முந்தைய புத்தகத்தை, கடைசி நேரத்தில் அவசரமாக மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்மணியின் வேலை அத்தனை கறாராகவும், விதிகளை ஒட்டிச் செய்யப்பட்டதாகவும் இராது என்று அஞ்சுகிறேன். ஆனால் கவனிக்கப் படவேண்டிய குறிப்பு என்னவென்றால், இந்த அறிஞர், கூலிக்காரரை விடக் குறைவான பிழைகளைச் செய்வார் என்று சொல்லவில்லை; இதிலெல்லாம் பொதுவிதி என்னவென்றால் அவர்கள் இருவரிடமுமே, மேதமை என்பது மருந்துக்கும் இராது. தீவிரப் படிப்பும் சரி, கவனமிக்க உழைப்பும் சரி, கற்பனைக்கும், நடைப் பாணிக்கும் மாற்றாக முடியாது.

அடுத்து வருபவர், [மேலே சொன்ன] கடைசி இரு சொத்துக்களைக் கொண்ட நம்பகமான கவிஞர். தன் சொந்த கவிதைப் பணிகளுக்கு இடையே அவ்வப்போது, கொஞ்சமாய் லெர்மாண்டாஃபையும், வெர்லெய்னையும் மொழி பெயர்ப்பதில் ஓய்வு காண்பவர். ஒன்று, அவருக்கு மூல மொழி தெரியாமலிருப்பதால், பதட்டமேதுமில்லாமல் அவ்வளவு புத்தி கூர்மை இல்லாத, ஆனால் [தன்னை விடச்] சற்று அதிகமான மொழிப்படிப்பு உள்ள ஒருவரால் தனக்கென உருவாக்கப்பட்ட “நேர்நிலையான” மொழி பெயர்ப்பை நம்பிக் கொண்டிருப்பார். அல்லது, [இவருக்கே] மொழி தெரிந்திருந்தால், ஒரு படிப்பாளியின் கூர்மையும், ஒரு தொழில் முறை மொழி பெயர்ப்பாளனின் அனுபவமும் இருக்காது. ஆனால் இவருடைய ஒரு முக்கியமான குறை என்னவாக இருக்குமென்றால், அவரின் சொந்தத் திறமை கூடுதலாக ஆக, அவருடைய அறிவும், சொந்த நடையும் கொணரும் பிரகாசமான அலைகளில் வேற்று மொழியின் பேரிலக்கியம் மூழ்கிப் போய்விடும். மூல ஆசிரியரைப் போலத் தான் தோற்றமளிப்பதற்குப் பதிலாக, மூலவருக்குத் தன் வேடத்தை அணிவித்து விடுவார்.

சிறந்த ஒரு அந்நிய இலக்கியப் படைப்பிற்கு மிகப் பொருத்தமான விதத்தில் ஒரு மொழி பெயர்ப்பைத் தர, ஒரு மொழி பெயர்ப்பாளரிடம் இருக்க வேண்டிய தகுதிகளை இப்போது நாம் கணித்து விட முடியும். முதலாவதாக, அவன் தேர்ந்தெடுக்கும் ஆசிரியரின் திறமைக்குச் சமமான திறனை அவர் கொண்டிருக்க வேண்டும்; அல்லது அதே போன்ற திறமையாவது அவரிடம் இருக்க வேண்டும். இதில், இதில் மட்டுமே, பூட்லேயரும் போவும், அல்லது, ஸுகொவ்ஸ்கியும் ஷில்லரும் பொருத்தமான கூட்டாளிகளாக அமைந்தனர். இரண்டாவதாக, அவர் சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளையும், இரண்டு மொழிகளையும் முழுமையாக தெரிந்து வைத்திருப்பதோடு, தன் எழுத்தாளரின் பாணிக்கும், செயல்முறைகளுக்கும் தொடர்புடைய எல்லா விவரங்களையும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். மேலும், சொற்களின் சமுதாயப் பின்னணியையும், அவற்றின் பாணிகளையும், வரலாற்றையும், காலத் தொடர்புகளையும் அறிந்திருக்க வேண்டும். இது மூன்றாவது கருத்துக்கு இட்டுச் செல்கிறது: மேதமையும், அறிவும் பெற்றிருந்தாலும், அவர், மூல ஆசிரியரைப் போல நடிக்கும் திறனையும் கொண்டிருக்க வேண்டும். அவரே போல காட்சி அளிக்கும் விதத்தில், அவருடைய நடையின் தந்திரங்களையும், பேச்சையும், செயல்முறைகளையும், மற்றும் எண்ணங்களையும் உள்வாங்கிக் கொண்டு ஆள்மாறாட்டமே செய்ய வேண்டும்.

முந்தைய முயற்சிகளால் கேவலமாக விரூபமாக்கப் பட்ட, அல்லது இதுவரை மொழிபெயர்க்கவே படாத பல ரஷ்ய கவிஞர்களை நான் பல்வேறு தருணங்களில் மொழிபெர்யர்க்க முயன்றிருக்கிறேன். என் ஆங்கில ஆளுமை, என் ரஷ்ய ஆளுமையை விட கண்டிப்பாக மெலிவானதே! – ஒரு காணி நிலத்தில் கட்டப்பட்ட கிராமத்துப் பண்ணை வீட்டுக்கும், ஒரு பரம்பரைக் குறு நில மன்னரின் பெருமாளிகைக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் அது. சுயத் தேவைகளை அறிந்து உருவான வசதிக்கும், வழக்கமாகிப் போன பெரும் சுக போகங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு. ஆகையால் என் முயற்சிகளால் கிட்டிய விளைவுகளில் நான் திருப்தி அடையவில்லை. எனினும், பிற எழுத்தாளர்கள் பின்பற்றிப் பயனுறும் படியான பல விதிமுறைகளை என் ஆய்வுகள் வெளிப்படுத்தின.

உதாரணமாக, புஷ்கினின் ஆச்சரியமூட்டும் பல கவிதைகளில், ஒன்றின் பின்வரும் துவக்க வரியை நான் எதிர்கொள்ள நேர்ந்தது:

Yah pom-new chewed-no-yay mg-no-vain-yay

இதிலுள்ள அசைகளை எல்லாம் எனக்குக் கிடைத்த மிக நெருக்கமான ஆங்கில ஒலிப்புகளாக மாற்றி இருக்கிறேன். ஆனால் அந்த மாறுவேட நடிப்பு அவற்றை ஓரளவு அசிங்கமாக்கியது. அதை விடுங்கள். “chew”-எனும் சொல்லும், “vain”-உம், அழகான, முக்கியமான பொருட்கள் என்ற பொருள் தரும் வேறு ரஷ்ய வார்த்தைகளோடு ஒலிவடிவால் தொடர்பு கொண்டவை. வாக்கியத்தின் நட்ட நடுவே உள்ள, கொழுத்து, செம்மையாகப் பழுத்திருந்த, “chewed-no-yay”- என்ற சொல்லும், அதன் இரு புறமும் சமன் செய்யும் “m”களும், “n”களும், தரும் இனிமையான ஓசை ரஷ்ய செவிக்கு மிகுந்த ஆறுதலையும், கிளர்ச்சியையும் கொடுக்கும்- இது எந்த ஒரு கலைஞனும் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு முரண்பட்ட கூட்டு!

இப்போது, நீங்கள் அகராதியை எடுத்து இந்த நான்கு வார்த்தைகளுக்கும் அர்த்தம் தேடினால், பின்வரும் முட்டாள்தனமான, தட்டையான, பழக்கப்பட்ட வாசகம் உங்களுக்குக் கிடைக்கும்: “ஒரு அற்புதக் கணத்தை தருணத்தை நான் நினைக்கிறேன்”. நீங்கள் ஒரு பறவையை சுட்ட பின், அது அழகான இறகுடைய ‘சொர்க்கப் பறவை’ இல்லை, மாறாகத் தரையில் துடித்தபடி, தான் சொன்னதையே மீண்டும் மீண்டும் முட்டாள்தனமாகக் கிரீச்சிடும் ஒரு தப்பித்துப் போன தத்தை (கிளி) என்று தெரிந்தால் என்ன செய்ய? எப்பேர்ப்பட்ட கற்பனை வளத்தாலும், “ஒரு அற்புதக் கணத்தை நான் நினைக்கிறேன்” என்பது ஒரு உன்னதமான கவிதையின் உன்னதமான தொடக்கம் என்று ஒரு ஆங்கில வாசகனை நம்பச் செய்ய முடியாது. “நான் நினைவில் வைத்திருக்கிறேன்” என்பதை விட “Yah pom-new”-என்பது இறந்த காலத்தை நோக்கிய ஆழமான, லாகவமான பாய்ச்சலாகும். ஆனால் நான் நினைக்கிறேன்’ என்பது ஒரு அனுபவமற்ற முக்குளிப்பவன் போல வயிற்றின் மீது விழுந்துவிடுகிறது. “Chewed-no-yay”-என்பது ஒரு ரம்மியமான ரஷ்ய “பூதத்தை” (chudo) தன்னுள் கொண்டுள்ளது; இரகசியமான “கேள்” எனும் விளிப்பையும்(chu!), சூரியக் கிரணத்தோடு முற்றுப் பெரும் உருபுப் பெயரையும் (luchu), மேலும் ரஷ்ய வார்த்தைகள் இடையே காணப்படும் அழகான பல உறவுகளையும் கொண்டுள்ளது. அது ஒலி வடிவாலும், சிந்தனையாலும் ஒரு குறிப்பிட்ட வார்த்தை சங்கிலியோடு இணைந்துள்ளது. ஆனால் இந்த ரஷ்ய வார்த்தைச் சங்கிலி, “நான் நினைக்கிறேன்” என்ற சொற்றொடரில் காணப்படும் ஆங்கில வார்த்தை சங்கிலியோடு தொடர்பற்று இருக்கிறது. மாறாக, “நான் நினைக்கிறேன்” என்பது “pom-new” என்ற ரஷ்ய வார்த்தை சங்கிலியோடு ஒத்துப் போகமால் இருந்த போதிலும், நிஜமான ஆங்கில கவிஞர்கள் அதை கையாளும் சந்தர்ப்பங்களில், தனக்கான ஆங்கில வார்த்தை சங்கிலியோடு அது இணைந்தே இருக்கிறது. ஹவுஸ்மேனின் “நினைவிலெழும் அந்த நீலக் குன்றுகள் யாவை?” என்ற வாக்கியத்தின் ஆதாரமான சொல், ரஷ்ய மொழியில், முண்டும் முடிச்சுமான, தாறுமாறாக உருவான சொல்லாகி, “vspom-neev-she-yes- yah”- என மாறி விடுகிறது. ஆங்கிலத்தில் ’blue’ எனும் சொல்லைப் போல அத்தனை நறுவிசாக, அந்த வாக்கியத்தால் “உற்சாகமின்மையுடன்” உறவாட முடியாது. காரணம், ரஷ்ய மொழியில் உற்சாகமின்மை என்பதன் புரிதலும், “நினைவு கொள்ளுதலும்” வெவ்வேறு வார்த்தை சங்கிலியில் இணைந்துள்ளன.

பல்வேறு மொழிகளில் உள்ள சொற்களுக்கிடையே இருக்கும் உறவும், வார்த்தை சங்கிலிகளுக்கு இடையே உள்ள தொடர்பின்மையும், இன்னும் ஒரு விதியை முன்வைக்கின்றன. இந்த வாக்கியத்தில் உள்ள மூன்று முக்கியமான வார்த்தைகள், ஒன்றை ஒன்று இழுத்துக் கொண்டு, தமக்குத் தனித் தனியாகவோ, வேறு ஏதோவித இணைப்பிலோ கிடைக்காத ஒரு புதிய சங்கதியைத் தருகின்றன. சொற்களின் சேர்க்கையில் மட்டுமின்றி, வரிகளின் தாள லயத்திற்கும், பிற வார்த்தைகளின் அமைப்பிற்கும் ஏற்ற அவற்றின் குறிப்பிட்ட இடப்பொருத்தலே, இத்தகைய இரகசிய மதிப்புகளின் பரிமாற்றத்தைச் சாதிக்கிறது. ஒரு மொழிபெயர்ப்பாளன் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறுதியாக, எதுகை மோனைகளின் சிக்கல்கள் இருக்கின்றன. “Mg-no-vain-yay” எனும் சொல்கட்டு, இரண்டாயிரத்திற்கும் மேலான எதுகை மோனைகளை ஒரு மெல்லிய வற்புறுத்தலில் கக்கி விடும். ஆனால் “தருணத்திற்கு” என்பதற்கு ஈடாக ஒன்றைக் கூட என்னால் யோசிக்க முடியவில்லை. வாக்கியத்தின் இறுதியில் “Mg-no-vain-yay” இடம் பெற்றிருப்பதையும் அலட்சியம் செய்யலாகாது. ஏனெனில், தான் ஒரு இயைபைத் தேடி அலைய வேண்டிருக்காது என்று ஏறத்தாழ தெரிந்தேதான் புஷ்கின் அச்சொல்லை அங்கே வைத்திருக்கிறார். ஆனால் ஆங்கில வரியில் உள்ள “தருணத்தின்” இடம் அத்தகைய சௌகரியத்தைத் தருவதாயில்லை. மாறாக, அச்சொல்லை யோசிக்காமல் அங்கு வைத்தவன் பெரும் அவசரக் குடுக்கையாகவே இருப்பான்.

இவ்வாறு முழுதும் புஷ்கினாயிருந்த, அவ்வளவு நிறைந்த தனித்துவமும், இசைபும் கொண்ட ஒரு துவக்க வரியை நான் எதிர்கொண்டேன். இங்கே முன் வைக்கப்பட்ட பல கோணங்களில் இருந்தும் அதிஜாக்கிரதையாக பரிசீலனை செய்த பின், அதைச் சமாளித்தேன். இரவின் மிக மோசமான சாமம் அதை சமாளிப்பதிலேயே கழிந்தது. கடைசியில் அதை மொழி பெயர்த்து விட்டேன்; ஆனால் இப்பொழுதுள்ள எனது மொழி பெயர்ப்பு வடிவை இங்கு தந்தால், வாசகர்களுக்கு, ஒரு சில பிழையற்ற விதிகளைப் பின்பற்றினால், ஒரு கனகச்சிதமான மொழி பெயர்ப்பை உருவாக்கிவிடலாம் என்ற கருத்தின் மீது ஐயம்தான் எழும்.

(முற்றும்)

1. முழு ஃப்ரெஞ்சுக் கவிதையை இங்கு காணலாம் – http://www.recmusic.org/lieder/get_text.html?TextId=2255