சந்திரஹாசன்

மலஹாஸனின் அண்ணன் தவிர எனக்கு இன்னொரு சந்திரஹாஸனைத் தெரியும். அவன் என் நண்பன். அவனது தாத்தாவின் பெயரும் சந்திரஹாஸன்தான். திருநெல்வேலிக்கு பக்கத்திலுள்ள சாத்தான்குளத்தில் அந்தக் காலத்திலேயே சந்திரஹாஸன் என்னும் பெயரில் அந்தத் தாத்தா நடமாடியிருக்கிறார். பத்து வயதில் சந்திரஹாஸனைப் பார்த்திருந்த எவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது பார்த்தாலும் உடனே அடையாளம் கண்டு கொள்வர். அதற்குப் பிறகு அவன் வளரவேயில்லை என்பதுதான் காரணம். ஆனால் அகலமாகி விட்டான். அகலமும் உடலளவில் மட்டும்தான். தேங்காய் எண்ணெய் தேய்த்து ஒழுங்காக வகிடு எடுத்து படிய வாரிய தலைமுடி. அழகான ஒரு குழந்தையைப் பார்க்க நேர்ந்தாலும் மிரண்டு உருட்டி முழித்துப் பார்க்கிற முட்டைக் கண்கள். எப்போதுமே அபாயகரமாக மடித்துக் கட்டப்பட்டிருக்கும் வேட்டி. தான் இருக்கும் நான்கடி உயரத்துக்கு அதீதமாக ஓட்டிச் செல்லும் லோடுமேன் சைக்கிள். இவை சந்திரஹாசனின் அடையாளங்கள்.

நியாயமாகப் பார்த்தால் சந்திரஹாஸன் எனக்கு சீனியர். பிறகு எங்களுடன் படித்தான். அப்போதெல்லாம் எங்களுக்கு நண்பனாகவில்லை. அதன் பின் அவன் எங்களுக்கு அறிமுகமானது என் தம்பியின் கிளாஸ்மேட்டாகத்தான். ஆனால் என் தம்பியை விட எனக்கும், குஞ்சுவுக்கும் நெருங்கிய நண்பனாகிப் போனான். மருமகனே என்று பிரியமாக அழைக்கும் அளவுக்கு என் பெற்றோருக்கு வேண்டியவனானான். இன்றைக்கும் எங்கள் வீட்டில் எந்த ஒரு விஷயமும், விசேஷமும் சந்திரஹாஸனில்லாமல் நடைபெறாது. திருநெல்வேலியில் நடமாடிக் கொண்டிருக்கும் யாரைப் பார்த்தாலும் என் கிளாஸ்மேட் என்பான். எங்கள் குடும்ப நண்பர் ராமையாபிள்ளை கிண்டலாக என் தகப்பனாரிடம் சொல்வார். ‘ஐயா, நல்லா யோசிச்சுப் பாருங்க. உங்க மருமகன் மந்திரமூர்த்திஸ்கூல்ல உங்க கூடவே படிச்சாலும் படிச்சிருப்பாக’.

smileசின்ன வயதில் எனக்கும், குஞ்சுவுக்கும் கிட்டத்தட்ட ஒரு ஹீரோ போலவே சந்திரஹாஸன் இருந்தான். எங்களுக்கு முன்பாகவே சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டது, தனியாக சினிமாவுக்குப் போவது, அதுவும் சாரம் (கைலி) கட்டிக்கொண்டு போன்ற வீரச் செயல்கள் புரிந்து எங்களை மிரள வைத்தான். அதில் குஞ்சுவை மிகவும் கவர்ந்தது, ஆற்றுக்குச் சென்று சந்திரஹாஸன் மீன் பிடித்ததுதான். குஞ்சுவும் ஒரு காலி ஹார்லிக்ஸ் பாட்டிலைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குத் தெரியாமல் சந்திரஹாஸனுடன் கிளம்பிவிட்டான். வீட்டுக்குள் நைஸாக தான் பிடித்த மீன்களை கொண்டு வந்து வைத்தும் விட்டான். அதற்கு அடுத்து அவன் செய்த ஒரு புத்திசாலித்தனமான காரியம்தான் அவனை காட்டிக் கொடுத்தது. மீனுக்கு என்ன உணவு கொடுப்பது என்பது தெரியாத குஞ்சுவுக்கு சந்திரஹாஸன் கொடுத்த மேலான யோசனையின் பேரில் இருட்டுக் கடை அல்வாத் துண்டை ஹார்லிக்ஸ் பாட்டிலில் போட, மீன்கள் அன்று மதியமே பாட்டிலின் மேல்பகுதியில் மிதந்தன. தற்செயலாக அதை பார்த்துவிட்ட குஞ்சுவின் தகப்பனார் அவனை வறுத்தெடுத்து விட்டார்.

‘பெரிய சொக்கலால் பேரன். அவன் ஆனைக்கு அல்வா போட்ட மாதிரி மீனுக்குப் போடுதான். லூசுப்பய’.

அது பழைய அல்வாவா இருக்கும் என்று சந்திரஹாஸன் குஞ்சுவை சமாதானப் படுத்தினான். அதற்குப் பிறகு குஞ்சுவிடம் மீன் வளர்க்கும் ஆசையே வரக் கூடாது என்று அவன் அப்பா அவனிடம் சொன்ன காரணம், ‘ நாமெல்லாம் பிராமின்ஸ்’. இன்றைக்கு குஞ்சு சாப்பிடாத மீன் வகைகளே உலகில் இல்லை எனலாம்.

சந்திரஹாஸனிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. தன்னை விட அதிகம் படித்த யாரையுமே, அவர்கள் வயதில் சிறியவராக இருந்தாலும், ‘ஸார்’ என்றே அழைப்பான். அந்த வகையில் எஸ்.எஸ்.எல்.ஸி பாஸ் பண்ணியிருந்தவர்களும் அவனுக்கு ஸார்தான்.எப்படியோ தட்டுத் தடுமாறி எஸ்.எஸ்.எல்.ஸி வரை வந்துவிட்ட சந்திரஹாஸன், நாற்பத்தைந்து மதிப்பெண்கள் எடுத்தும் எஸ்.எஸ்.எல்.ஸியில் தேர்ச்சி பெற முடியாமல் போனது குறித்து பெரிதும் வருந்தினான். ஒரு பாடத்தில் முப்பத்தைந்து மதிப்பெண்கள் எடுத்தால் பாஸ்தான். ஆனால் மொத்த மதிப்பெண்களும் நாற்பத்தைந்து என்றால் கவர்னரே கையெழுத்திட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை மெதுவாக எடுத்துச் சொல்லி அவனுக்கு புரிய வைத்தோம். பிறகு தன் பெரியப்பாவின் லாலாக் கடையில் பொட்டலம் போடுபவனாக போய் வேலைக்குச் சேர்ந்த சந்திரஹாஸன், மெல்ல மெல்ல ஸ்வீட், காரம் என பலகாரங்கள் செய்வதை கற்றுக் கொண்டு இன்று திருநெல்வேலியின் புகழ் பெற்ற சரக்கு மாஸ்டராக இருக்கிறான்.

சந்திரஹாஸனுக்கு உடன் பிறந்த ஒரு அண்ணனும், ஒரு தங்கையும் உண்டு. நாவல்டி ரெடிமேட்ஸில் வேலை பார்க்கும் சந்திரஹாஸனின் அண்ணனும், அவனும் பேசிக் கொள்வதைப் பார்ப்பதற்கு மாமனும், மச்சானும் விளையாடிக் கொள்வது போல இருக்கும். அவ்வளவு கேலி கிண்டல். சந்திரஹாஸன் ஒரு நாள் அவனது அண்ணனிடம் சொன்னான்.

‘ஒரு வேட்டி எடுக்கணும்பா’.

‘ஒனக்கெதுக்குப்பா வேட்டி. கோ-ஆப்டக்ஸில நல்ல முரட்டு கைத்தறித் துண்டு எடுத்து நாலா கிளிச்சேன்னா ஒண்ணுக்கு நாலு வேட்டியாச்சு’.

நான்கடி உயரமே இருக்கும் தன் தம்பியைவிட தான் உயரமாக இருக்கும் அகந்தையில் சமயம் பார்த்து மட்டம் தட்டுவான் சந்திரஹாஸனின் அண்ணன். அவனது உயரம் நான்கரை அடி.

எல்லா ஆண்களையும் போல சந்திரஹாஸனும் காதலித்தான். அவன் காதலித்தது, அவனது வீடு இருக்கும் காம்பவுண்டில் மற்றொரு வீட்டில் குடியிருந்த மங்கையர்க்கரசியை. ஒரு தீபாவளிக்கு மங்கையர்க்கரசியின் மனதில் இடம் பிடிக்கும் பொருட்டு, கையில் ஓலைப் பட்டாசை வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாகக் கொளுத்திக் கொளுத்திப் போட்டுக் கொண்டிருந்திருக்கிறான் சந்திரஹாஸன். தன் தாயுடன் தீபாவளிப் பலகாரங்கள் சுடுவதில் பிஸியாக இருந்த மங்கையர்க்கரசி இவனது வீரச் செயலை கவனிக்காததால், ஒரு வெடியைக் கொளுத்தி அஸ்திரம் போல அவளது வீட்டுத் திண்ணையை நோக்கி இவன் எறிய, தற்செயலாக வெளியே வந்த அவள் தகப்பனாரின் சட்டையில் விழுந்து வெடித்திருக்கிறது. சந்திரஹாஸனை மடக்கிப் பிடித்து பிடரியிலேயே அடித்திருக்கிறார் அந்த மனிதர். அத்தனை வெடிச் சத்தத்துக்கும் அசராத மங்கையர்க்கரசி இந்த அடிச் சத்தத்துக்கு ஓடோடி வந்து எட்டிப் பார்த்ததில் சந்திரஹாஸன் மனமுடைந்து போனான்.

smile2மங்கையர்க்கரசியை குஞ்சுவின் பிஸினஸ் பார்ட்னர் ரமேஷும் காதலித்தார். பொறியாளரான அவர் மங்கையர்க்கரசியைக் காதலிப்பது பொருத்தமே என்று சந்திரஹாஸன் ஒதுங்கிக் கொண்டான். ஆனாலும் அவ்வப்போது ‘ரமேஷ் ஸாருக்கு எப்போ கல்யாணம்’ என்று அக்கறையாக விசாரித்து வந்தான். தான் காதலிக்கும் பெண்ணை தனக்கு முன்னால் காதலித்தவன் என்பதால் சகக்காதலனுக்குரிய மரியாதையை ரமேஷும் சந்திரஹாஸனுக்கு வழங்கி வந்தார். ஆனால் மங்கையர்க்கரசி உண்மையாக இன்னொரு பையனைக் காதலித்து வந்த விவரத்தை நானும், குஞ்சுவும் துப்பறிந்துத் தெரிந்து வைத்துக் கொண்டோம். ஆனால் ரமேஷிடமும், சந்திரஹாஸனிடமும் இந்த உண்மையை சொல்லக் கூடாது என்று குஞ்சு என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டான். ஒரு தேரோட்டத்தின் போது எல்லோரும் தேர் பார்க்கக் கிளம்ப ரமேஷும், சந்திரஹாஸனும் ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்ளாமல் தனித் தனியாக மங்கையர்க்கரசியைப் பார்க்கக் கிளம்பினார்கள். ரமேஷ் ஸார் பக்கம் நாம் வரக் கூடாது என்று முடிவு செய்தவனாய் சந்திரஹாஸன் தனியாகக் கூட்டத்துக்குள் போய் தேர்வடம் பிடிப்பதும், ஓரக் கண்ணால் மங்கையர்க்கரசியைப் பார்ப்பதுமாக இருந்தான். குஞ்சுவும், நானும் ரமேஷுடன். கூச்ச சுபாவமுள்ள ரமேஷ், மங்கையர்க்கரசியை நிமிர்ந்துப் பார்க்க வெட்கப்பட்டார். இதுதான் சாக்கென்று குஞ்சு ரமேஷிடம், மங்கையர்க்கரசி ரமேஷையே வைத்த கண் மாற்றாமல் பார்த்துக் கொண்டே இருப்பதாக அநியாயத்துக்கு பொய் சொன்னான். திரும்பிப் பார்த்தால் அவள் வேறு பக்கம் திரும்பி விடுவாள் என்றும் கேட்டுக் கொண்டான். அன்று தேர் நிலையத்துக்கு வந்தவுடன் ரமேஷ் எங்களை ஆர்யாஸ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று டிபன் வாங்கிக் கொடுத்தார். சந்திரஹாஸனை ஸ்பெஷலாகக் கவனித்தார். மனதுக்குள் அழுது கொண்டு வெளியே சிரித்தபடி கூடுதலாக நான்கு தோசை தின்றான் சந்திரஹாஸன்.

திருநெல்வேலியை விட்டு வேறெங்குமே போயிருக்காத சந்திரஹாஸன், எங்கள் சின்ன அண்ணனின் கல்யாணத்துக்கு எங்களுடன் மதுரைக்கு வந்தான். திருமணம் முடிந்த பின் மதியப் பொழுதில் எல்லோரும் காலேஜ் ஹவுஸ் ஹோட்டலில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது, வெளியே எங்கேயோ போய்விட்டு அரைமணி நேரத்தில் பரவசமாகத் திரும்பி வந்தான். காலேஜ் ஹவுஸ் அமைந்திருக்கும் டவுண்ஹால் ரோட்டில் கிழக்கும் மேற்கும் இரண்டு முறை நடந்து விட்டு, ‘மதுரை பெரிய ஊருதான்பா. நல்லா சுத்திப் பாத்துட்டேன்’ என்றான். நண்பன் ராமசுப்ரமணியனின் கல்யாணத்துக்கு சந்திரஹாஸனை கோவில்பட்டிக்கு அழைத்துச் சென்றான் குஞ்சு. கோவில்பட்டிக்கும் நல்ல ஊர் என்றும், பெரிய ஊர் என்றும் ஐந்து நிமிடத்தில் சான்றிதழ் வழங்கிவிட்டான். அடையாறு புற்று நோய்ச் சிகிச்சை மையத்தில் அம்மா சிகிச்சை பெற்றுக் கொண்டு என்னுடன் சென்னையில் இருக்கும் சமயத்தில் சந்திரஹாஸனை ஊரிலிருந்து வரவழைத்தார்கள். நான்கு நாட்கள் தங்க வைத்து அவனை காரில் ஏற்றி சென்னையை சுற்றி காண்பித்து ஊருக்கு அனுப்பினார்கள். நிறைவாகப் போனான். சில மாதங்களில் அம்மா காலமான போது இதைச் சொல்லிதான் சந்திரஹாஸன் அழுதான்.

சில நாட்களுக்கு முன் சந்திரஹாஸன் குஞ்சுவிடம் சொன்னானாம். சென்னைக்கு போய் சுற்றிப் பார்க்க வேண்டும். அத்தையுடன் பார்த்த இடங்களெல்லாம் மறந்து போய்விட்டது. என்னை கூட்டிக் கொண்டு போ என்று கேட்டுக் கொண்டானாம். குஞ்சு இதை என்னிடம் ஃபோனில் சொன்னான்.

‘எப்படியும் அவனை கூட்டிக்கிட்டு வாரேம்ல. அதுவும் ஃபிளைட்ல’ என்றான்.

குஞ்சு சொன்னால் செய்வான்.

(புகைப்படங்கள்: ஒச்சப்பன்)