காப்பிய இமயம்

hanuman

1974-இல் பம்பாய்த் தமிழ்ச்சங்கத்தில் ‘கம்ப இராமாயண வகுப்பு’ தொடங்கினார்கள். மொத்தம் 19 மாணாக்கர். நினைவு சரியாக இருந்தால் 13 ஆண்கள் 6 பெண்கள். அதில் பெரும்பாலோர் ஏற்கனவே வித்வான் அல்லது புலவர் பட்டம் பெற்று வடாலா, செம்பூர், மாதுங்கா, தாராவி, கோவண்டி பகுதிகளிகள் ஆசிரியப் பணியாற்றியவர்கள். மற்றும் சிலர் எந்த நோக்கும் அற்று எல்லாவகையான இலக்கிய, சமயக் கூட்டங்களுக்கு வந்து அமர்ந்து, சாப்பாட்டு நேரம் வந்ததும் எழுந்து போகின்றவர். எல்லாத் துவக்க விழக்களைப் போலவும் கம்பன் வகுப்பு கோலாகலமாகத் துவங்கியது.

ஆசிரியர் இன்று அமரராகிப் போன ரா.பத்மநாபன். காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியற் கல்லூரியில் நிர்வாக மேலாளராக இருந்து ஓய்வு பெற்று, தனது இரண்டாவது மகனுடன் வசிக்க பம்பாய் வந்தவர். தமிழிலும் வடமொழியிலும் நல்ல புலமை உடையவர். தமிழ்க்கடல் ராய.சொக்கலிங்கம் அவர்களிடம் தமிழ் கற்றவர். பிற்றை நாளில் நாராயண பட்டத்திரி, குருவாயூர் கிழக்கு வாசலின் வலது படிப்புரையில் அமர்ந்து எழுதிய ‘நாராயணீயம்’ நூலைத் தமிழில் விருத்தப் பாக்களாக யாத்தவர். அதனை நகலெடுத்த கைங்கர்யம் எளியோனைச் சார்ந்தது. ஆனால் அப்போது நான் தீவிர நாத்திகனாக இருந்தேன்.

வாரம் மூன்று நாட்கள் வகுப்பு. பம்பாய் சயான் பகுதியில், அரசு பொது மருத்துவமனைக்கு எதிரே அமைந்திருந்தது பம்பாய் தமிழ்ச்சங்கம். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மாலை ஆறு முதல் எட்டு வரை. நான் அப்போது பம்பாய் செண்ட்ரல் ரயில்வே, ஹார்பர் பிராஞ்சு இரயில் பாதையின் மேற்குப் பகுதியில் ஓடிய ரே ரோடு, அட்லஸ் மில்ஸ் காம்பவுண்டில் தொழிற்சாலை ஒன்றில் ஸ்டோர்ஸ் கிளர்க்காகப் பணிபுரிந்து வந்தேன்.

ஐந்தே காலுக்குப் பணி முடிந்து, பசிக்கும் வயிற்றுடன் ஹார்பர் பிராஞ்சு ரே ரோடு ஸ்டேஷனில் லோகல் ரயில் பிடித்து, கிங் சர்கிள் ஸ்டேஷனில் இறங்கி, சயான் நெடுஞ்சாலையில் நடக்க வேண்டும். அப்போது எனக்கு மாதம் 210 ரூபாய் சம்பளம். வீட்டுக்குக் கண்டிப்பாக இருபத்தைந்து ரூபாய் அனுப்பிப் போக மிச்சம் – ரூம் வாடகை, ரயில் சீசன் டிக்கெட், உணவு, சோப்பு, எண்ணெய், பற்பசை – முகச்சவரப் பொருட்கள், செருப்பு, பூட்ஸ், உடைகள், டைம்ஸ் ஆஃப் இந்தியா, வாராந்திரிகள்… பையில் நாலணா இருந்தால் இரண்டு வடா பாவ் வாங்கித் தின்று, தமிழ்ச் சங்கத்தில் போய்த் தண்ணீர் குடிப்பேன்.

கம்பராமாயண சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், சமயச்சொற்பொழிவுகள், கதா காலட்சேபங்கள் கேட்டு எனக்கு தமிழ் கற்கும் ஆர்வம் கிளைத்திருந்தது. திருச்சி இரா.இராதாகிருஷ்ணன், அ.ச.ஞானசம்மந்தன், கி.வா.ஜ, பா.நமச்சிவாயம், திருமுருக கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார், கி.ஆ.பெ.விஸ்வநாதன் முதலானோர் உரைகள் பம்பாயில் கேட்கக் கிடைத்தன. இவர்களில் பலர் தலைமையில் அன்று நான் பட்டிமன்றம் பேசியதுண்டு. நல்லவேளையாகத் தமிழ்கூறு நல்லுலகம் பட்டிமன்றப் பேச்சாளனை இழந்து இலக்கிய உலகம் ஒரு எழுத்தாளனைப் பெற்றது. நல்லவேளை என்பதைத் தீயவேளை என்னலும் சாலும்.

பத்தொன்பது மாணவரில் நான் இளையவன், 27 வயது. மிகவும் மூத்தவர் ஓய்வு பெற்ற கப்பல் கம்பெனி அதிகாரி 72 வயது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வகுப்புத் தேய்ந்தது – 14, 9, 5 என்று. மூவர் தங்கினோம். அதுவும் நீர்த்து ஒன்றென நான் மட்டும் நின்றேன். ரா.பத்மநாபன் குடியிருந்த கைலாஷ் பவன் ஹவுசிங் சொசைட்டி, கிங் சர்க்கிளில் இருந்து மூன்றாவது கட்டிடம். எதற்கு இரண்டு பேருமே நடக்க வேண்டும் என்று ஆசிரியர் வீடே வகுப்பிடம் ஆயிற்று.

ஐந்தே முக்காலுக்கே போய்விடுவேன். ரா.ப. ஐந்தரைக்கு தயாராக இருப்பார். சில நாட்கள் தாமதமாகப் போக நேர்ந்தால் கடிந்து கொள்வார். அவருக்கு ஐந்தே முக்கால் என்பது ஐந்தரை, ஆறு அல்ல. போனதும் கை, கால் முகம் கழுவிக்கொள்வேன். துவைத்து உலர்த்திய துவர்த்து இருக்கும். மாலையில் அவர்கள் வீட்டில் செய்த பலகாரம் எனக்கும் ஒரு பங்கு இருக்கும். நல்ல காப்பிக்கு நாக்கு அடிமையானதன் தொடக்கம் அங்குதான். ஆளுயர ராமர் பட்டாபிஷேகப் படத்தின் முன், கிழக்குப் பார்த்து அவர் உட்காருவார். அவர் கையில் கம்பனின் இராம காதை, வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை. என் கையில் மர்ரே ராஜம் ஐயர் பதிப்பு மூலம்.

அப்படித்தான் கம்பனுக்குள் நேர்வாசல் வழியாக நுழைந்தேன். இடைச்செருகல்கள் அல்லது கெளரவமான மொழியில் மிகைப்பாடல்கள் உட்பட அனைத்துப் பாடல்களும் கற்றேன். கூட்டிக் கொள்ளுங்கள் பாயிரம் – 11, ஆறு காண்டங்களின் கடவுள் வாழ்த்து உள்ளிட்ட பாடல்கள் 10,357, மிகைப்பாடல்கள் 1293. மொத்தம் 11,661 பாடல்கள். (அடிப்படை: கோவை கம்பன்கழகப் பதிப்பு).

நான்கு நீண்ட ஆண்டுகள். கம்பன் சொல்லும்போது வான்மீகம் சொல்லுவார். அப்போது நான் தீவிர நாத்திகனும், பார்ப்பன எதிர்ப்பாளனும், வடமொழி எதிரியுமாக இருந்ததனால், வான்மீகியைப் பொருட்படுத்தவில்லை. காலம்போன காலத்தில் இப்போது ஆதி கவி ஒருவரையும், ஆதி காவியத்தையும் அலட்சியப்படுத்திய கழிவிரக்கம் வதைக்கிறது. கம்பனுடன் மட்டும் நின்றுவிடமாட்டார். திருக்குறள் சொல்வார், ஆழ்வாராதிகள் சொல்வார், சைவக் குரவர்கள் சொல்வார், காரைக்கால் அம்மையும் ஆண்டாளும் சொல்வார், இரண்டு பாவையும் சொல்வார், அபிராமி அந்தாதி சொல்வார், சித்தர் பதினெண்மரும் வடலூர் வள்ளலும் சொல்வார்.

அப்படித்தான் எனக்குள் முறையாகக் கம்பன் படிப்பு புகுந்தது. போனசாகப் பிறவும். ரா.பவுக்கு சங்க இலக்கியங்களில் ஆர்வம் இருந்ததில்லை. சமய இலக்கியங்கள் அவரது தொழிற்கூடம். இது எனக்கு கர்த்தருக்குள் வருவதைப் போன்று, தமிழுக்குள் வந்த கதை. என் மொழியில் இன்று ஏதேனும் சிறப்பு இருக்குமாயின் அதற்காக நான் ரா.பவுக்குப் பெருமளவு கடன்பட்டவன், கம்பனுக்குக் கடன்பட்டவன், கம்பன் தேரெழுந்தூர் சடையப்ப வள்ளலுக்குக் கடன்பட்டதைப் போல.

ஈராண்டுகள் முன்பு, சென்னை சங்கமம் கருத்தரங்கு ஒன்றில், ‘என்னை உருவாக்கிய நூல்கள்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கு ஒன்றுக்கு உரையாற்றப் போயிருந்தேன். சக பேச்சாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், கலாப்ரியா என நினைவு. தலைவர் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.இராசேந்திரன். சிறப்புரை திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி. Strage bedfellows.

தமிழுக்கு எப்படி வந்தேன், கம்பன் எவ்விதன் ஆட்கொண்டான், என் தமிழைச் செப்பம் செய்தான் எனச் சொல்லிப் போனேன். அற்புதமான சில கம்பன் பாடல்கள் எடுத்தாள வைத்திருந்தேன். கி.வீரமணி கலந்து கொண்டதால் பாரம்பரிய கருஞ்சட்டை அணிந்து ஐம்பது பேர் வந்திருந்தனர். அதில் பத்துப்பேர் எழுந்து நின்று கூச்சல் இட்டனர். ‘கம்பராமாயணம் எதற்குப் பேசுகிறாய்?’ என்பது ஆட்சேபம். அன்றைக்கு முன்தினம், அதே அரங்கில் மாவீரன் செண்பகரமான் பிள்ளை பற்றி நுட்பமான ஆய்வுரை நிகழ்த்தி இருந்தேன். என்னுரை கேட்டிருந்து, மறுபடியும் அன்று வந்திருந்த சிலர் எனக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார்கள்.

ஒலிபெருக்கியிலேயே தலைவரைப் பார்த்து நான் சொன்னேன் – “நான் விண்ணப்பம் அனுப்பி இங்கே பேச வரவில்லை. இங்கு பேசித்தான் தீரவேண்டும் என எனக்கு ஒரு நெருக்கடியும் இல்லை. இங்கு பேசுவதால் என் புகழ் வீங்கப் போவதுமில்லை, பேசாததால் தேங்கப் போவதுமில்லை. என்னை ஆற்றுப்படுத்திய நூல் பற்றிப் பேசுகிறேன். விருப்பமில்லை எனில் முடித்துக் கொள்கிறேன், வழிச்செலவும் தரவேண்டாம்”.

வீரமணி எழுந்து நின்று தனது கருஞ்சட்டைக் கிழட்டுப் போர்வீரர்களைக் கையமர்த்தினார். தலைவர் தொடர்ந்து பேசச்சொன்னார். சொல்ல வந்த கம்பன் பாடல்களைச் சொல்லி, “இப்பேர்ப்பட்ட நூலைத்தான் எரிக்கச் சொன்னார்கள்” என்று முடித்தேன். அன்று வீரமணி 25 நிமிடங்கள் எனக்குத்தான் பதில் சொன்னார். ஆனால் தரக்குறைவாக என்னை ஒரு சொல்லும் சொல்லவில்லை. சொல்லி இருந்தால் அடுத்த கட்டத்துக்கும் நான் தயாராக இருந்தேன். மேலும் பிடரியைப் பிடித்து உலுக்குவதற்கு ஈண்டு சிங்கங்களே இல்லை என்பதையும் யாமறிவோம்.

கம்பனைக் கற்றதோடு நில்லாமல், வழி நூல்கள் பல தேடிப் படித்தேன். அ.ச.ஞானசம்மந்தன், ம.ரா.போ.குருசாமி எனத் தொடங்கி, சென்ற ஆண்டு வெளியான பழ.கருப்பையா வரை. 2009-இல் மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவில், சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் கவிஞர் மீராவுடன் பணியாற்றிய, ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். எனது புத்தகங்களை விரும்பி வாசிக்கிறவர். அவர் எனக்கு மூன்று புத்தகங்களைப் பரிந்துரைத்தார்.

சேலம் பகடால நரசிம்மலு நாயுடு எழுதிய ‘தட்சிண இந்திய யாத்திரை’, பார்த்தசாரதி நாயுடு எழுதிய ‘தட்சிண இந்திய சரித்திரம்’, என்.வரதராஜுலு நாயுடு எழுதிய ‘காப்பிய இமயம்’. ஏன் எல்லோருமே நாயுடுக்கள் என என்னைக் கேட்காதீர்கள். ஒன்று மட்டும் உறுதி, அவர்கள் எவருக்கும் தாய்மொழி தமிழல்ல, தெலுங்கு.

கோவையில் முன்பு கவிஞர் புவியரசு தமிழாசிரியராகப் பணியாற்றிய சே.ப.நரசிம்மலு நாயுடு உயர்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய புலவர் இரணியன் மூலம், முதல் புத்தகம் ஒளிநகல் செய்யப்பட்டு என்னிடம் வந்தது. சந்தியா பதிப்பகத்து திரு.நடராஜன் அதனை மறுநகல் செய்து எடுத்துப் போனார். இரண்டாவது புத்தகம் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன். இருப்பவர் அருளுங்கள். மூன்றாவது புத்தகம், இன்றைய பாடுபொருள் ‘காப்பிய இமயம்’, கோவை பாரதி அறிநிலை R.இரவீந்திரன் தன்னிடம் இருந்த படியைத் தந்தார்.

nanjil3இன்றிருந்தால், பேரறிஞர் என்.வரதராஜுலு நாயுடு எனப்படும் என்.வி.நாயுடுவுக்கு 98 வயதாகி இருக்கும். கோவை, பீளமேட்டைச் சார்ந்த விவசாயக் குடும்பம். சென்னை மாநிலைக் கல்லூரியில் பட்டப்படிப்பும் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பும். இலண்டனில் நான்காண்டுகள் மேற்படிப்பு. இந்திய தேசிய ஆயுள் காப்பீட்டுக் கழக நிர்வாக இயக்குநராக, தேசிய சேமிப்புக் கழக நிர்வாக இயக்குநராகப் பணி நிறைவு. தாய்மொழி தெலுங்கிலும், வாழிடமொழி தமிழிலும் ஆட்சிமொழி ஆங்கிலத்திலும் இந்தியிலும் வடமொழியிலும் கற்றுத் தேர்ந்தவர். ஒன்பதாம் வகுப்பு வரையே தமிழ் கற்றவர்.

வால்மீகி இராமாயணம், கம்பரின் இராம காதை, துளசிதாசரின் இராம சரித மானசம், அத்யாத்ம இராமாயணம், காளிதாசனின் ரகுவம்சம் ஆகிய நூல்களை மூலமொழியில் கற்றுத் தேர்ர்ந்து பேரறிஞர் N.V.நாயுடு என அறியப்பட்டவர் அவ்வப்போது எழுதிவைத்த கட்டுரைகளும், குறிப்புகளுமே ‘காப்பிய இமயம்’ எனும் இந்த நூல். அந்தக் கட்டுரைகளைத் தொகுத்துப் பதிப்பித்தவர்கள் பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி, அருள்நிதி இராம்.இருசுப்பிள்ளை. கெட்டி அட்டை, டெமி அளவு, 340 பக்கங்கள், விலை ரூ 160. விற்பனை – பழனியப்பா பிரதர்ஸ். ஜுன் 2000-இல் வெளியான இந்த நூலைக் காண N.V.நாயுடு உயிருடன் இல்லை.

‘இராமபிரான் கதையைப் பொருத்தவரையில், இந்த நூல் மிகச்சிறந்த – முதல் தரமான – ஒப்பிலக்கியத் திறனாய்வு என்று உறுதியாகச் சொல்ல முடியும்’ எனப் பதிப்பாசிரியர்கள் முன்னுரையில் குறிப்பிடுகிறார்கள். மேலும் வ.வே.சு ஐயரின் ‘Kamban – A Study’எனும் நூல் உலக அரங்கில் கம்பராமாயணத்தைப் பெருமைக்குரியதாக நிறுவும் முயற்சியில் முனைந்ததைப் போல, ‘காப்பிய இமயம்’ எனுமிந்த நூலும் கம்பராமாயணத்தைக் காப்பியங்களில் உன்னதனமானது என நிறுவ முயல்கிறது.

முன்பு ஒரு கட்டுரையில் இந்த நூலில் இருந்து நான் எடுத்தாண்ட செய்தி ஒன்றுண்டு. அது இந்நூலின் முதல் கட்டுரை, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’ எனும் பகுதியில் இருந்து எடுத்தது.

“இன்று நமக்குக் கிடைக்கும் தமிழ் இலக்கிய நூல்களில் மிகப்பழமையான சங்க நூல்களிலும் – எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பனவற்றில் – இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும் ‘கவி’ எனும் சொல் ‘பாட்டு’ என்னும் பொருளில் உபயோகிக்கப்படவில்லை. மாறாக கவிகை, கவிக்குடில், கவி கிடுகு, சேர்தல், மூடுதல், இழிதல், கீழ்நோக்கல் என்ற பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘பாட்டு’ எனும் பொருளில் ‘கவி’ எனும் சொல் சீவக சிந்தாமணியிலும், ஆழ்வார், நாயன்மார்கள் வாக்கிலும் பயிலுகிறது” என்பது அந்தத் தகவல்.

‘சான்றோர் கவி எனக்கிடந்த கோதாவரி’ என்பது கம்பன் வாக்கு. கவிதைக்கு இலக்கணமும் கோதாவரியின் தன்மையும் சாற்றுவது.

கவிச்சக்ரவர்த்தி எனும் சொற்றொடரைக் காண்பது ஒட்டக்கூத்தர் படைப்புகளில் மட்டுமே என்றும் கலிங்கத்துப்பரணி பாடிய ஜயங்கொண்டாரையும் தக்கயாகப்பரணி பாடிய ஒட்டக்கூத்தரையும் மட்டுமே மன்னர்கள் – தம்மைப் புகழ்ந்து பாடிய காரணத்தால் – கவிச்சக்ரவர்த்தி என அழைத்துப் பாராட்டிப் பரிசுகள் வழங்கினார் என்றும் கம்பனுக்கு அவ்வாறு எதுவும் வழங்கப்பட்டதில்லை என்றும் பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின்பே புலவர்கள் கம்பனைக் கவிச்சக்ரவர்த்தி என்று அழைத்து மகிழ்ந்தனர் என்றும் என்.வி.நாயுடு கருதுகிறார்.

மேற்கோள்: “அரசர்கள் ஒரு பால் இருக்க, புலவர்களே கம்பரைப் போற்றியதாகத் தெரியவில்லை. கம்பருடைய பாட்டுக்கள் புலவர் வாயிலும் புழங்கவில்லை.

பேராசிரியர் முதல் (இனமானமல்ல, உரையாசிரியர்) மணவாள மாமுனிகள் வரை வாழ்ந்த ஜைன, சைவ, வைணவ உரையாசிரியர் கம்பரிடமிருந்து கொண்ட எடுத்துக்காட்டுகள் குறைவு; கம்பனைவிடத் தரம் குறைந்தவை என நாம் இன்று கருதும் சீவக சிந்தமாணி, சூளாமணி, வளையாபதி, குண்டலகேசி, பரணிகளில் இருந்து எடுத்து ஆளப்பட்டவற்றைக் காட்டிலும் கம்பராமாயணப் பாடல்களை அவர்கள் கையாண்டது சொற்பமே.

கம்பர் ஏறத்தாழ 700 குறட்பாக்களைக் கையாண்டது மட்டும் அன்றிப் பலவற்றுக்கு விளக்கமும் தந்துள்ளார். ஆனால் பரிமேலழகர் எடுத்துக் காட்டிய கம்பர் பாட்டு ஒன்றே ஒன்றுதான் என்று தோன்றுகிறது. அவ்வாறே நம்மாழ்வர் பாசுரங்கள் பல கம்பனில் மிளிர்கின்றன. உரையாசிரியர்களும் அரும்பதம் எழுதியவரும் எடுத்தாண்ட கம்பர் வாக்கு நான்கு அல்லது ஐந்து இடங்களிலேயே… ஒட்டக்கூத்தரும், சயங்கொண்டாரும் பெரும்புலவர்கள். எனினும் சக்ரவர்த்திகளால் அவர்களுக்கு சூட்டப்பெற்ற பட்டம் நிலைபெறவில்லை.”

‘சமஸ்கிருதமும், தமிழும் தரும் இராமகாதை’ எனும் அற்புதமான கட்டுரை ஒன்றுண்டு இந்த நூலில். வான்மீகமும் இரகுவம்சமும் கம்பனுடன் ஒத்து நோக்கப்படுகின்றன.

ஏற்கனவே எனது பட்டிமன்ற முன்னனுபவங்கள் குறித்துக் குறிப்பிட்டுள்ளேன். நாற்பதாண்டுகளுக்கு முன்பு கை மணக்க, வாய் மணக்க உண்ட விடுதிகளுக்கு இன்று போய், அருவருப்பில் ஊறும் எச்சிலை உமிழ்ந்து திரும்புவது போல், அன்றைய மேதைகளுடன் இன்றைய மலிவுகளை ஒப்பிட்டுப் பயனில்லை. ஓரிரு விதிவிலக்குகள் எங்கும் இருக்கலாம்.

கோவை நண்பர் ஒருவர், உள்ளூர் இலக்கிய அமைப்பு ஒன்றின் பொறுப்பாளர், சிக்குன்குனியா நோய் வந்து நான்கு கால்களில் தவழும் பருவத்தில் இருந்த என்னைக் காணவந்தபோது, எனது வாசிப்புமேஜை மேல் கிடந்த ‘காப்பிய இமயம்’ கண்ணுற்று, “இதைத்தானே ஐயா ரொம்பக்காலம் தேடீட்டிருக்கார்” என்றார்.

ஐயா என்று அவர் அதிக மரியாதையுடன் உரைத்தது சிரிப்பும் மாறுகண்ணுமாய்ச் சினிமாவில் புகழ் ஈட்டிய சிரிப்பு நடிகரைப் போன்று, கனைத்துக் கனைத்துப் புகழும் பொருளும் ஈட்டிய பட்டிமன்றக்காரரை. எனக்கு சிரிப்பு வந்தது.

“எதுக்கு சிரிக்கிறீங்க தம்பி?” என்றார்.

“இல்லண்ணேன், நாய்ச்சாமிக்கு பீக்கொழுக்கட்டைதானே படைப்பாங்க!”

“நீங்க எண்ணைக்குத்தான் ஐயாவை மரியாதையாப் பேசி இருக்கீங்க?”

“உங்களுக்கே தெரியும்லாண்ணேன்… அவ்வளவு தூரம் தமிழை அவரு கேவலப்படுத்தியாச்சு”

என்றாலும் ஒரு பிரதி ‘காப்பிய இமயம்’ கிடைக்க வழிசெய்தேன். வாழ்க்கையில் இறுதிவாய்ப்பை ஒருவருக்கு எதற்கு மறுக்க வேண்டும்?

எதற்குச் சொல்ல வந்தேன் எனில், வழக்கமாக மேடைப் பொழிவாளர்கள் பலரும் தம் கைவசமிருக்கும் நூற்றுக்கும் குறைவான கம்பன் பாடல்களையே எல்லாப் பந்திகளிலும் திரும்பத் திரும்ப விளம்புகிறார்கள். அதாவது கம்பனில், மேடைகளில் புழங்கும் பாடல்கள் ஒரு சதமானத்துக்கும் கீழே. ஆனால் அவற்றை வைத்துக் கொண்டு ஒரு புருஷ ஆயுளையும் ஓட்டிவிடலாம். விளைவு திரும்பத் திரும்ப காதில் ஒலிக்கும் அதே நூற்றுக்கும் குறைவான பாடல்கள். சென்ற ஆண்டு டிசம்பர் சீசன் இசைவிழாவின்போது, எட்டுப் பாடக – பாடகிகளாவது ‘என்றைக்கு சிவ கிருபை வருமோ’ என்று இரங்கி இரங்கிப் பாட, இனிமேல் இந்த சீசனில் சிவகிருபை வேண்டாம் என ஓட விருப்பம் ஏற்பட்டதைப் போன்று… சொல்ல எளிதான, புரிந்து கொள்ள இலகுவான, நாடகப் படுத்த வசதியான, உணர்ச்சியுடன் பேசத் தோதுள்ள, திட்டவட்டமான பாடல்கள்.

ஆனால் கம்பனைப் பார்ப்பது அந்த நூறு பாடல்களைப் பார்ப்பதல்ல. அந்தகன் யானைப் பார்ப்பது போலவும் அல்ல. பேரறிஞர் என்.வி.நாயுடு, வழக்கமாக மேடைகளில் எங்கும் கேட்க இயலாத பல பாடல்வரிகளை மேற்கோள் காட்டுகிறார்.

அனுமன் மூலமாகக் கணையாழி பார்த்தும் சூடாமணி பார்த்தும் மோதிரம்பார்த்தும் மூன்றுபேர் அடையும் மெய்ப்பாடுகளைக் கம்பன் காட்டுவதை நூலாசிரியர் எடுத்தாள்வதைக் காணலாம்.

sita

1. அனுமன் வாயிலாக அடையாளத்துக்கு கணையாழி பெற்ற சீதை:

‘வாங்கினள், முலைக் குவையில் வைத்தனள், சிரத்தால்
தாங்கினள், மலர்க்கண் மிசை ஏற்றினள், தடந்தோள்
வீங்கினள், மெலிந்தனள், குளிர்ந்தனள், வெதுப்போடு
ஏங்கினள், உயிர்த்தனள், இது இன்னது எனல் ஆமே?’ (5293)

இன்றைய தீவிர வாசகனுக்கு உரையே வேண்டாம். அது கம்பன்.

2. அனுமன் வாயிலாகச் சூடாமணியை அடையாளமாகப் பெற்ற ராமன்:

‘பொடித்தன உரோமம்; போந்து பொழிந்தன கண்ணீர்; பொங்கித்
துடித்தன மார்பும் தோளும்; தோன்றின வியர்வின் துள்ளி;
மடித்தது மணிவாய்; ஆவி வருவது போல ஆகித்
துடித்தது மேனி; என்னே, யார் உளர் தன்மை தேர்வார்?’ (6054)

3. அனுமன் வாயிலாக மோதிரம் அடையாளம் பெற்ற பரதன்:

‘அழும், நகும், அனுமனை ஆழிக் கைகளால்
தொழும்; எழும்; துள்ளும்; வெங்களி துளக்கலால்
விழும் அழிந்து; ஏங்கும்; போய் வீங்கும்; வேர்க்கும்; அக்
குழுவொடு குனுக்கும்; தன் தடக்கை கொட்டுமால்’ (10,199)

நூலாசிரியருக்குக் கம்பனில், வால்மீகியில், காளிதாசனில், துளசிதாசனில் இருந்த தேர்ச்சி, நூல் நெடுகிலும் காணக்கிடைக்கிறது. ‘ஓசை பெற்று, உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென’ காசில் கொற்றது இராமன் காதை பாடவந்த கம்பன், ‘வாங்கரும் பாதம் நான்கும் வகுத்த வால்மீகி’, ‘காளிதாசனின் ரகுவம்சம், துளசியின் இராம சரித மானசம் என ஆராய்கிறது ஒரு கட்டுரை.

இராவணின் தற்புகழ்ச்சியை, இராமன் மீது காட்டிய ஏளனத்தைக் கேட்ட தூதுவன் அங்கதன் மொழியாக, துளசிதாசன் கூறுவதைக் கவனியுங்கள், மொழிபெயர்ப்பில்.

‘இராமன் வெறும் மானுடன்தானா? காமதேனுவும் பசுத்தானா?
கல்பதருவும் மரம்தானா? கங்கையும் ஆறுதானா?
அன்னதானமும் பிற தானங்களுள் ஒன்றா? அமுதமும்
ஓர் உணவுதானா? கருடனும் ஒரு பறவைதானா?
சேடன் பாம்புதானா? சிந்தாமணியும் ஒரு கல்தானா?’

உண்மையைச் சொன்னால், துளசிதாசரும் ராமாயணம் எழுதி இருக்கிறார் எனும் தகவல் தாண்டி வேறேதும் எனக்குத் தெரியாது. இந்த நூலைப் படிக்கும்போது தெரிகிறது, துளசிதாசன் எத்தனை அற்புதமான கவி என்பது. துளசியின் உவமை ஒன்றைப் பாருங்கள்:

‘சூரிய காந்தமணி சூரியனைக் கண்டதும், ஒளி காலுவதை அதனால் தடுக்க இயலாது.
காம நெகிழ்ச்சியும் அவ்வாறே!’

சீதையை மணம் புணர நினைத்த மன்னர்களைக் கம்பன் குறிப்பது ஒற்றை வரியில். ‘இத்திருவை நில வேந்தர் எல்லோரும் காதலித்தார்’. நூலாசிரியர் சொல்கிறார், இதே செய்தியை துளசிதாசர் பத்து வரிகளில் சொல்கிறார் என.

சொல்லின் செல்வன் அனுமன், உயிர் எலாம் உறையும் ஓர் உடம்பும் ஆயின தசரதன், வீடணன், கைகேயி, அகலிகை, தாரை, கற்பினுக்கு அணியான சீதை எனத் தனித்தனிக் கட்டுரைகளில் ஆராய்கிறார் என்.வி.நாயுடு.

வால்மீகியின் சீதையையும் கம்பனின் சீதையையும் ஒப்பிடுவது அற்புதமாக இருக்கிறது, ‘சாதலின் சிறந்தது ஒன்று இல்லை’ எனும் கட்டுரையில்:

“வால்மீகியின் சீதை காப்பாற்றப்பட விரும்புகிறாள். ‘பாது மாம் பாவக’ என்பது ஆதி காவியம். கம்பனின் சீதை சாக விரும்பினாள். ‘சாதலின் சிறந்தது ஒன்று இல்லை’. ‘சுடுதியால், தீச் செல்வ’ என்பது கம்பர் படைத்த சீதையின் கூற்று. வால்மீகியின் சீதை இங்கு உயிர் வாழ விரும்புகிறாள். சாக அன்று.”

‘கம்பனில் சில குறிப்புகள்’ எனும் கட்டுரை ஆழமாக, நுட்பமாக, வாசித்து உணரவேண்டிய ஒன்று. குறிப்பாக ஒரு எடுத்துக்காட்டு மட்டும்.

“வால்மீகத்தில் இராமனோடு பொருதும் இராவணனின் தேர்க்கொடி மனிதத்தலை. ‘த்வஜம் மநுஷ்ய ஸீர்ஷம்’. கம்பன் தொடர்ச்சியாகப் பல இடங்களில் அதை வீணைக்கொடி என்பார்.

‘நீண்ட வீணைக்கொடி பற்றி ஒடித்து’ – 3423
‘ஏழ் இசைக் கருவி வீற்றிருந்தது’ – 7117
‘எழுது வீணை கொடு ஏந்து பதாகை’ – 9721
‘கொடியின் மேல் உறை வீணை’ – 9737

இம்மாறுதலுக்குக் காரணம், கம்பன் காலத்தில் இலங்கையை ஆண்ட அரசர் கொடி
வீணையாக இருந்தது. (குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் 64).

கும்பகருணண் கொடி ‘வய வெஞ்சீயம்’ – 7381
இந்திரசித்தன் கொடி ‘பேய்’ – 8022
இராமனுக்காக மாதலி கொணர்ந்த இந்திரன் தேர்மேல் இருந்தது ‘உருமின் ஏற’ (மின்னல் கொடி) – 9777

எத்தனை நுட்பமான வாசிப்பு இருந்தால் இந்தத் தகவல்கள் சாத்தியம் என்று எண்ண வியப்பு ஏற்படுகிறது. வெற்று ஆசையால் அறையாமல், ஆராய்ந்து, ஒப்பிட்டு, கம்பனின் இராம காதையை ‘காப்பிய இமயம்’ என நிறுவும் நூல் இது.

ஆனால் நமது அறிஞர் பலர் இன்றும் கோபால கிருஷ்ண பாரதியின், அருணாசலக் கவிராயரின் பாடல்களைக் கம்பன் பாடல் என மேடைகளில் முழங்கித் திரிகிறார்கள். நுட்பமான இலக்கிய வாசிப்பு, அதிலும் ஒப்பீட்டு இலக்கிய வாசிப்பு என்பதன் ரசானுபவத்தை இந்த நூலை வாசிக்கும்போது நாம் துய்த்துச் செல்ல இயலும். மேதைமைகள், ஆளுமைகள் கவனிக்கப்படாமற் போய்விடுவதன் இழப்பு, இலக்கிய வாசிப்பின் இழப்பு.

பழம்பாடல் இன்று, எப்போது யார் இயற்றியது என அறியமுடியாத பாடல், கம்பரைக் கவிச்சக்ரவர்த்தி என்று புகழும். இந்தப் பாடல் ஒன்றே இலக்கியத்தில் கம்பரைக் கவிச்சக்ரவர்த்தி எனப் புகழும் பாட்டு; வேறு சான்றுகள் இல்லை என்கிறார் என்.வி.நாயுடு. பாடல் இதோ:

“அம்பிலே சிலையை நாட்டி, அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த
தம்பிரான் என்னத் தானும் தமிழிலே தாலை நாட்டிக்
கம்பநாடு உடைய வள்ளல் கவிச்சக்ரவர்த்தி பார்மேல்,
நம்பு பாமாலை யாலே நரர்க்கும் இன்று அமுதம் ஈர்த்தான்.”