பனி படர்ந்த மலைச் சாலைகளின் ஊடே இரவு இறங்கத் தொடங்கியது. கிராமத்தையும், வெர்மேர் கோட்டையின் கற்கோபுரத்தையும், சாலையை ஒட்டிய கல்மேட்டையும் இருள் விழுங்கியது. இருட்டு, கோட்டை அறைகளின் மூலைகளில் நின்றது; பெரிய மேஜையின் அடியிலும், ஒவ்வொரு உத்தரத்தின் மீதும் உட்கார்ந்திருந்தது; கணப்படியில் குளிர் காய்ந்தவர்களின் தோள்களின் பின்னால் காத்துக்கொண்டிருந்தது.
பன்னிரண்டு அடி கணப்புப் பிறையின் ஒரு பக்கத்தில், துருத்திக் கொண்டிருந்த மூலை இருக்கையில், மிகவும் வசதியான இடத்தில் விருந்தாளி அமர்ந்திருந்தான். கோட்டைத் தலைவனும், மோன்டாயனாவின் குறுநில மன்னனுமான ஃப்ரேய்கா கணப்படிக் கற்கள் மீது மற்ற எல்லோருடனும் உட்கார்ந்திருந்தான். அவன் இருக்கை மற்றவர்களைவிட கணப்புக்கு அருகில் இருந்தது. சம்மணமிட்ட நிலையில், தன் நீண்ட கைகளை முழங்கால்கள் மீது வைத்தபடி, எரியும் நெருப்பையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். நினைவு தெரிந்த இருபத்தி மூன்று வருடங்களில், அவன் எதிர்கொண்டதிலேயே மிக மோசமான கணத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கத் தொடங்கினான்.
மூன்று இலையுதிர் காலங்களுக்கு முன்பு, மாலஃப்ரெனா என்ற மலை ஏரிக்கு வேட்டையாடச் சென்றபோது நடந்தது அது. தன் தந்தையின் தொண்டையில் பாய்ந்த காட்டுவாசிகளின் மெல்லிய அம்பு, எப்படிச் செங்குத்தாக நீட்டிக் கொண்டிருந்தது என்று நினைத்தான்; இருண்ட மலைகள் வட்டமாய்ச் சூழ்ந்திருக்க, நாணல் கோரைகளின் நடுவில் கிடந்த தந்தையின் உடலுக்கு அருகில் மண்டியிட்டபோது முழங்கால்களை ஈரமாக்கிய சேறு அவன் நினைவில் இருந்தது. தந்தையின் தலைமுடி ஏரித் தண்ணீரில் மெல்ல அலைந்தது. அப்போது அவனை எதுவோ தீண்டுவது போல உணர்ந்தான். அது மரணத்தின் ஸ்பரிசம், நச்சரவம் தீண்டினாற் போலிருந்தது. அவன் இப்போதும் அந்த ஸ்பரிசத்தை உணர்ந்தான். மேல்தளத்து அறையிலிருந்த பெண்களின் குரலைக் கேட்க முயன்றான்.
வந்திருந்த விருந்தாளி, ஒரு நாடோடிப் பாதிரி. அவன் தன் பயணங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான். கீழே தெற்குச் சமவெளிப் பகுதியிலிருக்கும் ஸொலாரிய் என்ற இடத்திலிருந்து வந்திருந்தான். அங்கெல்லாம் வணிகர்கள்கூட கல்வீட்டில் வசிப்பதாகச் சொன்னான். பிரபுக்கள் அரண்மனைகளில் வசிப்பதாகவும், வெள்ளித் தட்டுகளில் வறுத்த மாட்டுக் கறி சாப்பிடுவதாகவும் தெரிவித்தான். ஃப்ரேய்காவின் விசுவாசிகளும், பணியாளர்களும் அவன் சொல்வதை எல்லாம் வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருந்தனர். பொழுது போக வேண்டும் என்பதற்காக அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ஃப்ரேய்கா, முகத்தைச் சுளித்தான்.
அங்கிருந்த தொழுவம் பற்றியும், குளிர் பற்றியும், காலைச் சிற்றுண்டிக்குப் பரிமாறப்படும் ஆட்டுக் கறியே மதிய உணவுக்கும், இரவு விருந்துக்கும் தரப்படுவது பற்றியும், வெர்மேரின் பிரார்த்தனைக் கூடம் பாழடைந்து கிடப்பது பற்றியும், அங்கு பிரார்த்தனை நடக்கும் விதம் பற்றியும் விருந்தாளி ஏற்கெனவே குறை சொல்லியாயிற்று. அவன் “ஏரியவாதம்!” என்று கோபத்துடன் முணுமுணுத்தபடியே, மூச்சை இழுத்துப் பிடித்துத் தன்மீது சிலுவைக் குறி போட்டுக்கொண்டான். வெர்மேரில் இருக்கும் ஒவ்வொரு ஆன்மாவும் சபிக்கப்பட்டது என்றும், அவர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பது தடம் மாறிய கிருஸ்தவம் என்றும் முதியவரான அருட்தந்தை இஜியஸ்சிடம் குறை சொன்னான். “ஏரியவாதம், ஏரியவாதம்,” என்று அரற்றினான்.
கூனிக் குறுகி அமர்ந்திருந்த இஜியஸ், ஏரியவாதம் என்றால் ஏதோ பேய் பிடித்தாட்டுவது என்று நினைத்தார். தம்முடைய திருச்சபையைச் சேர்ந்த எவரையும் பேய் பிடித்து ஆட்டியதில்லை என்று அவனைச் சமாதானப்படுத்த முயன்றார். மன்னனுக்குச் சொந்தமான ஆட்டுக் கடா ஒன்றைத் தவிர. அதற்கு ஒரு கண் மஞ்சள் நிறம், மற்றொரு கண் நீல நிறம். அதற்குப் பேய் பிடித்தபோது அது ஒரு கர்ப்பிணிப் பெண்ணை முட்டிவிட்டதால் அவளுடைய கரு கலைந்துவிட்டது; ஆட்டுக் கடாவின் மேல் புனித நீரைத் தெளித்தவுடன் அது சாதுவாக மாறியது; அதன் பின்னர், அது ஒரு நல்ல பொலி கடாவாகத் திகழ்ந்ததாகச் சொன்னார். அந்தப் பெண் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாகி இருந்ததாகவும், அச்சம்பவத்திற்குப் பின், அவள் பாரா பகுதியைச் சேர்ந்த நல்லதொரு குடியானவனைத் திருமணம் செய்துகொண்டு, வருடத்துக்கு ஒன்று என்ற கணக்கில் ஐந்து இளம் கிறிஸ்தவர்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறாள் என்றும் சொன்னார்.
“அனாசாரம், ஒழுக்கக் கேடு, அறியாமை!” என்றபடியே காதுகளைப் பொத்திக் கொண்டார் அன்னியப் பாதிரி. இந்த முறை, அனாசாரிகள் சமைத்துப் பரிமாறிய ஆட்டுக் கறியைச் சாப்பிடுவதற்கு முன் அவர் இருபது நிமிடங்கள் பிரார்த்தனை செய்தார். பாதிரிக்கு வேண்டியது என்னவாக இருக்கும் என்று யோசித்தான் ஃப்ரேய்கா. குளிர் காலத்தில் பெரும் வசதியை எதிர்பார்க்கிறாரா? அல்லது, தன்னுடைய ஏரியவாதக் கோட்பாட்டின்படி அவர்களையெல்லாம் தேவனை மறுக்கும் அஞ்ஞானிகள் என்று நினைக்கிறாரா? மாலாஃப்ரெனாவிலும், அதைவிடத் தொலைவில் இருக்கும் மலைகளிலும் வசிக்கும் சிறிய, கருத்த உருவமுடைய மோசமான அஞ்ஞானிகள் எவரையும் அவர் பார்த்ததில்லையே. சிலை வழிபாட்டுக்காரர்களின் எந்த ஓர் அம்பும் அவரைக் குறி வைத்து ஒருபோதும் வீசப்பட்டிருக்காது. அப்படி ஏதாவது நடந்தால்தான் அஞ்ஞானிகளுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதைப் பாதிரி கற்றுக் கொள்வார் போலும் என்பதாக ஃப்ரேய்காவின் சிந்தனை ஓடியது.
விருந்தாளி ஜம்பமடித்து ஓய்ந்துவிட்டது போலத் தெரிந்தபோது, தன் அருகில் தாடையைக் கையால் தாங்கியபடி உட்கார்ந்திருந்த ஒரு பையனிடம் ஃப்ரேய்கா, “கில்பர்ட், ஒரு பாட்டுப் பாடேன்” என்றான். அந்தப் பையனும் புன்முறுவலுடன் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு உரத்த, இனிய குரலில் பாடத் தொடங்கினான்.
அரசன் அலெக்ஸாந்தர் அச்சமின்றி வந்தான்
தங்கத்தால் போர்த்தியவன் அலெக்சாந்தர்
காலுறையும் தலைக் கவசமும் சுவர்ணம்
கவசமெல்லாம் தட்டிக் கொட்டித் தங்கம்
பசும் பொன்னுறையில் வந்தான் அரசன்
கிருஸ்துவே என்று கூவினான்,
தன்மேல் சிலுவை சார்த்திக்கொண்டான்,
மலைகளில் மாலை வேளையில்.
முன் விரைந்தன
அரசன் அலெக்ஸாந்தரின் படைகள்
குதிரை மீது வந்தனர், பெரும் படையாய்ப்
பரவினர் பெர்சியாவின் பெருவெளியில்.
வெட்டிச் சாய்த்து, வெல்லவே
அரசன் பின்னே வந்தனர்
மலைகளிலே மாலை வேளையிலே.
மாமன்னன் அலெக்ஸாண்டர் பற்றிய நீண்ட பிரஸ்தாபம் அது; முழுப் பாடலின் நடு வரிகளில் தொடங்கிய கில்பர்ட், கடைசி வரி வரை பாடாமலேயே, மாமன்னன் அலெக்சாந்தரின் சாவு பற்றி வருவதற்கு மிக முன்னாலேயே “மலைகளிலே மாலை வேளைகளிலே” என்பதுடன் முடித்து விட்டான். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை; ஆரம்பம் முதல் இறுதி வரை அவர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான், அதனால் யாரும் பொருட்படுத்தவில்லை.
’விக்கிரக ஆராதக அரசனைப் பற்றி ஏன் பாடச் சொன்னீர்கள்?’ விருந்தாளி கேட்டான்.
ஃப்ரேய்கா தன் தலையை உயர்த்தினான். “கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தில் அலெக்ஸாண்டர் ஈடு இணையில்லாப் பேரரசரன்.”
“அவன் ஒரு கிரேக்கன். சிலைகளை வழிபட்ட பாவி.”
“சந்தேகமில்லை, உங்களுக்கு அந்தப் பாட்டு வேறு மாதிரி இருக்கிறது,” என்று அமைதியாகப் பதில் சொன்னான் ஃப்ரேய்கா. ”நாங்கள் பாடும்போது, “கிறிஸ்துவே என்று கூவினான், தன் மேல் சிலுவை சார்த்திக் கொண்டான்,” என்று வந்ததே?”
அங்கிருந்த சிலர் சிரித்துப் பல்லைக் காட்டினர்.
“உங்கள் வேலையாள் இதைவிட நல்ல பாட்டாகப் பாடலாமே,” என்றான் ஃப்ரேய்கா. அவனுடைய கோரிக்கை உண்மையிலேயே பண்பட்டதாக இருந்தது. தூண்டுதல் இல்லாமலேயே, பாதிரியின் வேலையாள் விவிலியக் கதை ஒன்றை மூக்கால் பாடுவது போன்ற குரலில் பாடத் தொடங்கினான். யாருக்கும் அவருடைய மகிமை தெரியாததால், இருபது வருட காலம் தன் தந்தை வீட்டில் மிச்சம் மீதியை மட்டுமே உண்டு வாழ்ந்த ஒரு புனிதரைப் பற்றிய பாடல் அது. ஃப்ரேய்காவும் அவையினரும் அதை மிகுந்த வியப்புடன் கேட்டனர். புதிய பாடல்களைக் கேட்கும் வாய்ப்பு அவர்களுக்கு அரிதாகவே கிடைத்து வந்தது.
அந்த அறைக்கு வெளியிலிருந்து ஒரு வினோதமான ஊளைச் சப்தம் வந்ததால் பாடகன் நிறுத்தி விட்டான், பாட்டு தடைபட்டது. துள்ளியெழுந்த ஃப்ரேய்கா, அறையில் சூழ்ந்திருந்த இருட்டில் கூர்ந்து நோக்கினான். அங்கிருந்த அனைவரும் அசையாமல் அப்படியே அவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். மெல்லிய ஊளை மறுபடியும் மேல் அறையிலிருந்து எழுந்தது. இளைஞனான மன்னன் உட்கார்ந்தான். “பாட்டை முடி,” என்றான். பாதிரியின் உதவியாளன் மீதமிருந்த வரிகளை அவசரமாக உளறிக் கொட்டினான். அவன் முடித்ததும், அங்கு ஆழ்ந்த மெளனம் கவ்வியது.
“காற்று வீசப்போகிறது,” என்றான் ஒருவன் சன்னமான குரலில்.
“இது ஒரு கேடுகெட்ட குளிர் காலம்.”
“தொடையளவு பனி, மாலஃப்ரெனா கணவாய் வழியாக நேற்றிலிருந்தே வருகிறது.”
“இது அவர்களுடைய வேலைதான்.”
“யார்? மலை வாசிகளுடையதா?”
“போன இலையுதிர் காலத்தில், வெட்டிக் குடலெல்லாம் உருவிப் போடப்பட்ட செம்மறி ஆடு ஒன்றைப் பார்த்தோமே, நினைவிருக்கிறதா? அது கெடுதிக்கான அறிகுறி என்று காஸ் சொன்னானே. அவன் சொன்னதற்கு, அவர்கள் ஓட்னேவுக்குக் காவு கொடுக்கிறார்கள் என்பதுதான் அர்த்தம்.”
“அதற்கு வேறு என்ன அர்த்தமிருக்க முடியும்?”
“நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள்?” அன்னியப் பாதிரி கேட்டான்.
“பாதிரியாரே, அந்த மலை வாசிகளை, அந்தப் பாவிகளைப் பற்றித்தான்.”
“ஓட்னே என்றால் என்ன?”
மௌனம்.
“ஓட்னேவுக்காகக் கொல்வது என்றால் என்ன அர்த்தம்?”
“அதைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது, ஐயா.”
“ஏன்?”
“பாடும்போது சொன்னீர்களே, இந்த இரவில் நல்ல விஷயங்களைப் பற்றிப் பேசுவதுதான் நல்லது.” மேலே இருந்த அறையை ஒரு பார்வை பார்த்தபடியே கருமான் காஸ் கண்ணியமாகப் பதில் சொன்னார்; ஆனால், கண்களைச் சுற்றிப் புண்களிருந்த ஓர் இளைஞன் முணுமுணுத்தான், “கல்மேட்டுக்குக் காது உண்டு. அதனால் கேட்க முடியும்.”
”கல்மேடா? சாலைக்குப் பக்கத்தில் ஒரு சிறிய குன்று இருக்கிறதே, அதையா சொல்கிறீர்கள்?”
நிசப்தம்.
ஃப்ரேய்கா பாதிரியைத் திரும்பிப் பார்த்தான். “அவர்கள் ஓட்னேவுக்குப் பலி கொடுக்கிறார்கள்,” என்று தணிந்த குரலில் சொன்னான். “மலைகளில், கல்மேடுகளுக்குப் பக்கத்திலிருக்கும் பாறைகளில். கல்மேடுகளுக்குள் என்ன இருக்கிறது என்பது எவருக்குமே தெரியாது.”
“அந்தப் பாவிகள் பரிதாபத்துக்கு உரியவர்கள், தட்டுக்கெட்ட மனிதர்கள்,” முதியவரான தந்தை இஜியஸ் வருத்தத்துடன் முணுமுணுத்தார்.
“நம் தேவாலயத்தின் பலி பீடத்திற்கே கல்மேட்டில் இருந்துதான் கல் கொண்டு வந்தோம்” என்றான் கில்பர்ட்.
“என்ன?”
“வாயை மூடு” என்றார் கருமான். “ஐயா, அவன் என்ன சொல்கிறான் என்றால், கல்மேட்டுக்கு அருகிலிருந்த கற்களிலிருந்து, மேலாக இருந்த ஒரு பெரிய பளிங்குக் கல்லைத்தான் எடுத்துக் கொண்டோம். தந்தை இஜியஸ் அதை ஆசீர்வதித்து விட்டதால் அதில் தீங்கு ஒன்றும் இல்லை.”
“நல்ல தரமான பலிபீடக் கல்” என்று தலையசைத்துப் புன்முறுவலுடன் ஆமோதித்தார் தந்தை இஜியஸ். அப்படி அவர் சொல்லி முடித்த மறுகணமே, மேல்ப் பக்கத்திலிருந்து ஊளைச் சத்தம் எழுந்தது. உடனேயே, அவர் தலையைத் தாழ்த்தி ஜபிக்கத் தொடங்கினார்.
“நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று ஃப்ரேய்கா பாதிரியிடம் சொன்னான். பாதிரியும் தன் தலையைக் குனிந்தபடியே முணுமுணுக்கத் தொடங்கினாலும், ஓரக் கண்ணால் அவ்வப்போது ஃப்ரேய்காவை பார்க்கத் தவறவில்லை.
கணப்பை ஒட்டிய இடம் தவிர மற்ற பகுதிகளில் கதகதப்பு குறைவாகவே இருந்தது. விடிந்த போது, அவர்களில் அநேகம் பேர் இன்னமும் அங்கேதான் இருந்தனர்; நாணல் தண்டுகளிடையே படுத்துக் கிடக்கும் வயதான சதுப்பு நில மூஞ்சூறைப் போலத் தந்தை இஜியஸ் சுருண்டு படுத்திருந்தார். பாதிரியோ, கணப்பருகே தன் மூலையில் வயிற்றின் குறுக்காகக் கைகளைக் கோர்த்துச் சாய்ந்து கிடந்தான். போரில் வெட்டி வீழ்த்தப்பட்டவனைப் போல, கை கால்களை அகல விரித்தபடி ஃப்ரேய்கா படுத்திருந்தான். அவனைச் சுற்றிப் படுத்திருந்தவர்கள் குறட்டை விட்டுக் கொண்டிருந்தனர். தூக்கத்தின் போது அதிர்ச்சி காரணமாக அவர்களுக்கு அவ்வப்போது தூக்கிவாரிப் போட்டது, உடலில் அரைகுறை அசைவுகள் ஏற்பட்டன.
முதலில் விழித்தது ஃப்ரேய்காதான். தூங்கிக் கொண்டிருந்தவர்களைத் தாண்டி, மாடிக்குச் செல்லும் கற்படிகளில் ஏறத் தொடங்கினான். மாடியின் வெளி அறையில் செம்மறி ஆட்டுத் தோல் குவியலின் மீது யுவதிகளும், நாய்களும் தூங்கிக் கொண்டிருந்தனர். மருத்துவச்சி ரன்னி எதிரே வந்தாள். “இன்னும் ஆகவில்லை, மன்னரே” என்றாள்.
“ஏற்கெனவே இரண்டு இரவுகள் ஆகி விட்டனவே -”
“ஆமா, அவள் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை,” செவிலி சற்று வெறுப்புடன் சொன்னாள். “அவளுக்கு ஓய்வுதான் தேவை, இல்லையா?”
ஃப்ரேய்கா வளைந்த படிக்கட்டுகளில் தொம்தொம் என்று இறங்கத் தொடங்கினான். அவளுடைய எரிச்சல் அவனுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது. எல்லாப் பெண்களும் நேற்று முழுவதும் இறுகிய முகத்துடன், வேறு வேலையில் ஈடுபட்டிருந்தனர். அவனை எவரும் கண்டு கொள்ளவில்லை. அவன் ஒரு பொருட்டே இல்லை என்பதால், வெளியே குளிரில் இருக்க வேண்டியதாயிற்று. அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.
ஓக் மர மேஜையில் அமர்ந்து, தலையைக் கைகளால் பிடித்தபடியே, தன் மனைவி கால்லாவைப் பற்றி யோசிக்கத் தொடங்கினான். அவளுக்குப் பதினேழு வயது; திருமணமாகி பத்து மாதங்கள் ஆகின்றன. அவளுடைய உருண்ட வெண்மையான வயிறு அவன் நினைவுக்கு வந்தது. அவள் முகத்தை நினைத்துப் பார்க்க முயன்றான், அந்தப் பயங்கரமான ஸ்பரிச உணர்வுதான் ஏற்பட்டது. வேறு எதுவும் மனதில் தோன்றவில்லை.
மேஜையை முஷ்டியால் ஓங்கிக் குத்தியபடியே, “சாப்பிட ஏதாவது கொண்டு வா!” என்று கத்தினான். அதிகாலைத் தூக்கத்தில் உறைந்திருந்த வெர்மேர் கோட்டை துள்ளி எழுந்தது. பையன்கள் குறுக்கும் நெடுக்கும் ஓடினர், நாய்கள் குரைத்தன, சமையலறையில் நெருப்புத் துருத்தி இரைந்தது, ஆள்கள் நெட்டி முறித்தபடியே எழுந்து நெருப்பின் அருகில் துப்பினர். ஃப்ரேய்கா தலையைக் கைகளில் புதைத்தபடி உட்கார்ந்திருந்தான்.
பெண்கள், ஓரிருவராக இறங்கி வந்து, பெரிய கணப்புக்கு அருகில் சற்று ஓய்வெடுத்ததோடு, கொஞ்சம் உணவைச் சாப்பிட்டுச் சென்றனர். அவர்கள் முகத்தை இறுக்கமாக வைத்திருந்தனர். அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்களே தவிர ஆண்களுடன் எதுவும் பேசவில்லை.
பனி பெய்வது நின்றிருந்தாலும், மலையிலிருந்து அடித்த காற்று சுவர்களிலும், தொழுவத்தின் மீதும் பனித் திவலைகளை அப்பியது. குளிர் காற்று மேலே பட்டதுமே தொண்டையைக் கத்தியால் குத்திக் கிழிப்பது போலிருந்தது.
“அந்த மலை வாசிகளை, செம்மறி ஆடுகளைப் பலியிடுபவர்களை தேவனின் செய்தி இன்னமும் ஏன் எட்டவில்லை?” என்று அந்தப் பானை வயிற்றுப் பாதிரி, தந்தை இஜியஸ்ஸிடமும், காயங்கள் சூழ்ந்த கண்களைக் கொண்டவனான ஸ்டெஃபானிடமும் கேட்டான்.
அவர்கள் பதில் சொல்லத் தயங்கினார்கள். பலியிடுபவர்கள் என்பதன் அர்த்தம் அவர்களுக்குச் சரியாக விளங்கவில்லை.
“அவர்கள் செம்மறி ஆட்டை மட்டுமே கொல்வதில்லை,” என்று ஒரு அரைகுறைப் பதிலைச் சொன்னார் தந்தை இஜியஸ்.
ஸ்டீஃபான் முறுவலித்தான். தலையை அசைத்தபடியே “இல்லை, இல்லே,” என்றான்.
“என்ன ஐயா சொல்கிறீர்கள்?” பாதிரி சுருக்கென்ற குரலில் கேட்டான்.
அடங்கி ஒடுங்கித் தந்தை இஜியஸ் பதில் சொன்னார், “அவர்கள் – அவர்கள் வெள்ளாடுகளையும் கொல்கிறார்கள்.”
“எந்த ஆடாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. எனக்கு என்ன ஐயா? அந்த இறை மறுப்பாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? கிறிஸ்துவின் தேசத்தில் வசிக்க அவர்கள் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள்?”
“அவர்கள் காலம் காலமாக இங்குதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்,” பெரியவர் குழப்பத்துடன் பதில் சொன்னார்.
“அப்படியானால், அவர்களைப் புனிதத் திருச்சபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நீங்கள் முயற்சி செய்யவே இல்லையா?”
“நானா?”
சிறிய உருவம் கொண்ட முதியவரான உள்ளூர்ப் பாதிரியார் மலைகளின் மேல் ஏறிச் செல்ல வேண்டும் என்பது வேடிக்கையான யோசனையாக இருந்ததால், அங்கு நீண்ட சிரிப்பலை எழுந்தது. தந்தை இஜியஸ் அனாவசிய கர்வம் இல்லாதவர்தான். ஆனாலும், சிரிப்பலையால் சற்றே மனம் புண்பட்டாரோ என்னவோ, கடைசியில், விறைப்பாகப் பேச ஆரம்பித்தார், “ஐயா, அவர்களுக்கு அவர்களுடைய கடவுளர்கள் உண்டு.”
“அவர்களுடைய சிலைகள், அந்தப் பேய்கள், அவர்களுடைய ஏதோ பேர் சொன்னீரே – ஓட்னே!”
ஃப்ரேய்கா கடுப்பானான். “பாதிரியே, பேசாமல் இரும், அந்தப் பெயரை நீர் உச்சரித்துத்தான் தீரவேண்டுமா? வேறு பிரார்த்தனைகள் ஏதும் உமக்குத் தெரியாதா?”
அதன் பிறகு, பாதிரி அடாவடியாகப் பேசுவதை நிறுத்திவிட்டான். மன்னரே அவனிடம் கடுமையாகப் பேசிவிட்டதால் உபசரிப்பிற்கான கட்டாயம் நீங்கிவிட்டது; பாதிரியைப் பார்க்க நேரும் முகங்களில் இறுக்கம் தெரியத் தொடங்கியது. அன்று இரவும் அவனுக்குக் கணப்புக்கு அருகிலேயே மூலை இடம் கொடுக்கப்பட்டாலும், முன்பு போல கால்களை நீட்டிக் கனலுக்கு அருகில் வைக்காமல், ஒடுங்கி உட்கார்ந்து கொண்டான்.
அன்று இரவு பாட்டுக் கச்சேரி எதுவும் நடக்கவில்லை. ஃப்ரேய்காவின் மௌனம் காரணமாக மற்றவர்களும் மெல்லிய குரலிலேயே பேசிக் கொண்டார்கள். இருட்டு அவர்களைச் சுற்றிப் படர்ந்திருந்தது. சுவர்களுக்கு வெளியே அடித்த காற்றின் ஊளையையும், மேல் தளத்தில் அந்தப் பெண்ணின் கூக்குரலையும் தவிர வேறு எந்தச் சப்தமும் எழவில்லை.
நாள் முழுவதும் அவள் அசையாமல் கிடந்தாலும், இப்போது அடிக்கடி மந்தமான ஒலியெழுப்பியபடி, கரகரப்பான குரலில் கத்தத் தொடங்கியிருந்தாள். இத்தனைக்கும் பிறகு, அவள் கத்துவது என்பது சாத்தியமே இல்லை என்றே ஃப்ரேய்கா நினைத்தான். அவளோ சிறு பெண், பூஞ்சை உடம்பு. அவளால் அவ்வளவு வலியைத் தாங்கிக்கொள்ள முடியாது.
“மேலே இருப்பவர்கள் என்ன செய்து தொலைக்கிறார்கள்?” என்று நொந்தபடியே கத்தினான். அவனுடைய ஆள்கள் ஃப்ரேய்காவை உற்றுப் பார்த்தார்களே தவிர வேறு ஒன்றும் சொல்லவில்லை. “தந்தை இஜியஸ் அவர்களே! இந்த வீட்டில் ஏதோ தீய சக்தி குடியிருக்கிறது.”
“என்னால் பிரார்த்தனை செய்யத்தான் முடியும், மகனே,” என்றார் பெரியவர். அவர் பயந்து போயிருந்தார்.
“அப்படியானால், பிரார்த்தனை செய்யுங்கள்! பலிபீடத்துக்குப் போங்கள்!” தந்தை இஜியஸ்சை விரட்டாத குறையாக அவன் இருண்ட குளிருக்குள் அனுப்ப, அவர் கோட்டையின் முன் முற்றத்தைக் குறுக்குவாட்டில் கடந்தார். உலர்ந்த பனி கண்ணுக்குத் தெரியாமல் காற்றில் சுழன்றது. பலிபீட அறைக்குப் போனார். சற்று நேரத்தில் தனியாகத் திரும்பி வந்தார். பலிபீட அறைக்குப் பின்னால் இருக்கும் தன்னுடைய சிறிய அறையிலேயே, நெருப்புக்கு அருகில் இரவு முழுவதும் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்கிறேனென்று உறுதியளித்தார்.
கணப்புக்குப் பக்கத்தில் படுத்திருந்தவர்களுள் அன்னியப் பாதிரி மட்டுமே விழித்திருந்தான். ஃப்ரேய்கா அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தாலும், எதுவும் பேசவில்லை.
மன்னனின் நீல நிறக் கண்கள் தன்னையே வெறித்துப் பார்ப்பதைக் கண்ட பாதிரி மிரண்டு போனான்.
“நீர் ஏன் தூங்கவில்லை?”
“எனக்குத் தூக்கம் வரவில்லை, மன்னரே.”
“நீர் தூங்குவதுதான் நல்லது.”
பாதிரி பதட்டத்துடன் கண்களைச் சிமிட்டிக் கொண்டான். பின்னர், கண்களை மூடித் தூங்குவது போலக் காட்டிக்கொள்ள முயன்றான். அரைக் கண்ணைத் திறந்து, ஃப்ரேய்காவை அவ்வப்போது பார்த்துக் கொண்டான். உதடுகளை அசைக்காமலே தனது அபிமானத்துக்குரிய புனிதரிடம் பிரார்த்திக்கவும் முயன்றான்.
ஃப்ரேய்காவுக்கு, அவன் ஒரு பருத்த கருஞ்சிலந்தியைப் போலத் தெரிந்தான். பாதிரியின் உடம்பிலிருந்து பரவிய இருள் கற்றைகள், அந்த அறையில் வலையைப் போலப் பின்னிப் படர்ந்தன.
காற்றின் வேகம் குறைந்து அமைதி திரும்பியது. ஃப்ரேய்காவின் காதுகளில் அவன் மனைவி பலஹீனமாக முனகும் சப்தம் கேட்டது.
நெருப்பு அணைந்தது. மூலையில் இருந்த மனிதச் சிலந்தியைச் சுற்றி விரிந்த இருளின் வலைப் பின்னல் வளர்ந்து சிக்கலாகிக் கொண்டே போனது. அவன் இமைகளுக்குக் கீழே ஓர் ஒளிப்புள்ளி பிரகாசித்தது. அவனுடைய முகத்தில் கீழ்ப் பாகம் சற்றே அசைந்து கொண்டிருந்தது. அவன் தன் சூனிய ஏவலை மேலும் மேலும் ஆழமாகச் செலுத்தினான். காற்று நின்று விட்டது. அங்கு எந்த ஓசையும் எழவில்லை.
ஃப்ரேய்கா எழுந்தான். பாதிரி பார்த்தபோது, கும்மிருட்டைத் துளைத்துக் கொண்டு அந்த ஆஜானுபாகுவான பொன்னிற உருவம், எதிரே பார்வையை மறைத்துக்கொண்டு நின்றது. “என்னுடன் வா,” என்று ஃப்ரேய்கா சொன்னபோது ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக அவனால் அசைய முடியவில்லை. ஃப்ரேய்கா அவனுடைய கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான். “மன்னா, மன்னா, உமக்கு என்ன வேண்டும்?” என்று பதறியபடியே, அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள முயன்றான் பாதிரி.
“என்னோடு வா,” என்றபடி அவனை அந்தக் கும்மிருட்டில், கதவை நோக்கிக் கல் தரையில் நடத்திச் சென்றான்.
செம்மறி ஆட்டுத் தோலால் தைக்கப்பட்ட ரோமம் அடர்ந்த அங்கி ஒன்றை ஃப்ரேய்கா அணிந்திருந்தான்; பாதிரியோ சாதாரண கம்பளி ஆடையையே அணிந்திருந்தான். அவனுக்கு மூச்சு முட்டியது, முற்றத்தின் வழியே ஃப்ரேய்காவுக்குப் பக்கத்தில் ஓடியபடியே, “மன்னா, இந்தக் குளிரில் மனிதன் விறைத்துச் செத்து விடுவான், ஓநாய்கள் இருந்தாலும் இருக்கலாம்,” என்று கெஞ்சினான்.
ஃப்ரேய்கா கோட்டை வெளிக் கதவுகளின், கையளவு தடிமன் கொண்ட தாழ்ப்பாள்களை விடுவித்தான். ஒரு சிறு கதவை இழுத்துத் திறந்தான். உறையிலிருந்த வாளைக் காட்டி, “நட” என்றான்.
அந்த இடத்திலேயே பாதிரி நின்று விட்டான். “முடியாது,” என்றான்.
ஃப்ரேய்கா உறையிலிருந்து ஒரு குட்டையான, தடித்த வாளை உருவினான். வாள் முனை, கம்பளி மேலங்கிக்குக் கீழே புட்டத்தைப் பதம் பார்த்ததும், பாதிரி நடக்கத் தொடங்கினான். கோட்டைக் கதவுகளைத் தாண்டி, கிராமத் தெருவின் வழியே நடந்து, மலை மேல் ஏறும் பாதையில் ஃப்ரேய்கா அவனைச் செலுத்தினான். அவர்கள் மெதுவாகவே நடந்தனர். கொட்டியிருந்த பனி மேடாகக் குவிந்திருந்தது. எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும், அதன் இறுகிய மேல் பரப்பை உடைத்ததால், கால்கள் புதைந்தன. உறைந்து விட்டதைப் போலக் காற்று சலனமற்று இருந்தது. ஃப்ரேய்கா தலையை நிமிர்த்தி வானத்தைப் பார்த்தான். மெல்லிய மேகங்களுக்கு நடுவில், மூன்று நட்சத்திரங்களால் ஆன வாள் பட்டியுடன் கூடிய நட்சத்திரக் கூட்டம் தென்பட்டது. அந்த உருவத்தைச் சிலர் போர்வீரன் என்று அழைப்பர். மற்றவர்கள் அதை அமைதியான ஒருவன், அதாவது மௌனமான ஓட்னே என்று சொல்வர்.
பாதிரி, ஓர் ஊதல் சப்தத்தோடு மூச்சை உள்ளிழுத்தபடியே, ஜபித்துக் கொண்டிருந்தான், அவசர கதியில் ஒரே மாதிரியாக முணுமுணுத்தான். ஒரு முறை, கால் தடுக்கிப் பனியில் குப்புற விழுந்தான். ஃப்ரேய்கா அவரைத் தூக்கி நிறுத்தினான். அப்போது அந்த இளைஞனின் முகத்தை நட்சத்திர ஒளியில் அவன் நேருக்கு நேர் பார்த்தாலும், ஒன்றும் சொல்லவில்லை. தட்டுத் தடுமாறியபடியே நடந்தாலும், மெல்லிய குரலில் நிதானமாகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான்.
கற்கோபுரமும், வெர்மேர் கிராமமும் அவர்களுக்குப் பின்னால் இருளில் மூழ்கிக் கிடந்தன; வெறும் மலைகளும், நட்சத்திர ஒளியில் வெளிறிக் கிடந்த பனிவெளிகளுமே அவர்களைச் சூழ்ந்திருந்தன. சாலைக்குப் பக்கத்தில் ஆள் உயரமே கொண்ட, கல்லறை வடிவிலான சிறு குன்று தென்பட்டது. அதற்கு அருகிலேயே, செதுக்கப்படாத கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு ஸ்தம்பம் அல்லது பலிபீடம் நின்றது. காற்று அதன் மேலிருந்த பனியைச் சுத்தமாகத் துடைத்திருந்தது. ஃப்ரேய்கா சாலையிலிருந்து பாதிரியை விலக்கி, தோள்களைப் பிடித்துக் கல்மேட்டுக்கு அருகிலிருந்த அந்தப் பலிபீடத்தை நோக்கித் தள்ளினான். பாதிரி மூச்சிறைத்தபடியே, “மன்னரே, மன்னரே -” என்று மன்றாடினான்.
ஃப்ரேய்கா அவன் தலையைப் பிடித்துப் பின்னால் இழுத்தான். விண்மீன்களின் ஒளியில் பாதிரியின் கண்கள் வெண்மையாகத் தெரிந்தன. அவன் அலறுவதற்காக வாயைத் திறந்தான். அதற்குள் ஃப்ரேய்கா தன் கூரிய கத்தியால் அவன் தொண்டையை அறுத்து விட்டான், அவனுடைய அலறல் சப்தம், நீர்க்குமிழிகளின் சப்தம் போல ஒரு பெருமூச்சாகத்தான் வெளிப்பட்டது.
ஃப்ரேய்கா, பாதிரியின் சடலத்தைக் குனிய வைத்துப் பலிபீடத்தின் மீது கிடத்தினான். பிணத்தின் அங்கியை அறுத்து எறிந்தான். பின்னர், வயிற்றைக் குத்திக் கிழித்தான். சதை கலந்த குருதி பீறிட்டுப் பாய்ந்து, பலிபீடத்தின் உலர்ந்த கற்களை நனைத்தது. செந்நீர் வழிந்தோடி உலர்ந்த பனியில் ஆவி பறக்கப் புகையாய்ப் படர்ந்தது. சிதைக்கப்பட்ட பாதிரியின் உடல் வெற்று மேலங்கியைப் போல கற்களில் விழுந்தது. கைகள் தொளதொளத்து அசைந்தன.
உயிரோடு இருந்த மனிதன், கல்மேட்டுக்கு அருகில் காற்று கொண்டுவந்து சேர்த்திருந்த மெல்லிய பனிப் படலத்தில் அப்படியே வீழுந்தான். வாள் கையிலேயே இருந்தது. நிலம் அதிர்ந்தது நடுங்கியது. கேவும் குரல்கள் இருளில் அவனைக் கடந்து சென்றன.
அவன் தலையை நிமிர்த்திச் சுற்றும் முற்றும் பார்த்தபோது, எல்லாமே மாறியிருந்தன. நட்சத்திரங்கள் இல்லாத வானம், வெளிர் ரோஜா நிறத்தில் காட்சியளித்தது. குன்றுகளும், தொலைதூர மலைகளும் நிழல்களற்றுத் தெளிந்த உருவங்களாயிருந்தன. பலிபீடத்தின் மீது தொங்கிக் கொண்டிருந்த சிதைந்த உடலும், கல்மேட்டின் கீழே படிந்திருந்த பனியும், ஃப்ரேய்காவின் கைகளும், அவன் பிடித்திருந்த வாளும் கருமையாகக் காட்சியளித்தன. அவன் தன் கைகளைப் பனியில் கழுவ முயன்றான். அதன் சில்லிப்பு அவனை விழிப்புறச் செய்தது. அவன் எழுந்தான். தலை சுற்றியது. மரத்துப்போன கால்களுடன் வெர்மேரை நோக்கி நடக்கத் தொடங்கினான். சுற்றிலும் பரவத் தொடங்கியிருந்த வெளிச்சத்துடன், லேசான, ஈரமான மேலைக் காற்று, புலரும் காலைப் பொழுதோடு சேர்ந்து எழுந்ததை உணர்ந்தான். பனி உருகத் தொடங்கியிருந்தது.
பெரிய கணப்பின் அருகில் ரன்னி நின்று கொண்டிருந்தாள். கில்பர்ட் நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தான். அவள் முகம் ஊதிப் போய், சாம்பல் நிறத்தில் காணப்பட்டது. கடுகடுக்கும் குரலில் அவள் பேசினாள்: “ஒரு வழியாக வந்து சேர்ந்தீரே, மன்னரே!”
அவன் பெருமூச்சு வாங்கியபடியே நின்றான். முகத்தில் பொலிவில்லை. ஒன்றும் பேசவும் இல்லை.
“என்னோடு வாருங்கள்,” என்றாள் செவிலி. சுழலும் படிக்கட்டுகளில் அவளைப் பின்தொடர்ந்தான். தரையில் பரப்பப்பட்டிருந்த வைக்கோல் பெருக்கித் தள்ளப்பட்டு கணப்புக்குள் குவிக்கப்பட்டிருந்தது. அகன்ற பெட்டியைப் போன்ற படுக்கையில், அது திருமணப் படுக்கை, மீண்டும் கல்லா படுத்திருந்தாள். இடுங்கிய அவளுடைய கண்கள் மூடியிருந்தன. மெல்லிய குறட்டை ஒலி கேட்டது. அவளைப் பார்த்தபடியே “உஷ்!” என்று எச்சரிக்கை செய்தாள் செவிலி. “சத்தம் போடாமல் இருங்கள்! இங்கே பாருங்கள்.”
அவள், இறுகச் சுற்றப்பட்ட பொதி ஒன்றைக் கையில் நேர் வாட்டத்தில் பிடித்திருந்தாள்.
சற்று நேரம் கழிந்தது, அவன் இன்னமும் ஒன்றும் சொல்லவில்லை. அவள் கிசுகிசுத்தாள், “பையன். நன்றாக இருக்கிறான், பெரிய உருவம்.”
ஃப்ரேய்கா பொதியை நோக்கி ஒரு கையை நீட்டினான். அவனுடைய நகங்கள் பழுப்பு நிறத்தில் கன்றிப் போயிருந்தன.
செவிலி பொதியைத் தன்பக்கம் இழுத்துக்கொண்டாள். தீர்க்கமான, குற்றம் சாட்டும் குரலில் “விறைத்துப் போயிருக்கிறீர்கள்,” என்றாள். “இங்கே பாருங்கள்,” என்றபடியே பொதியின் ஒரு மடிப்பை அவிழ்த்துக் கருஞ்சிவப்பு நிற மனித முகத்தைக் காட்டினாள். அடுத்த கணத்திலேயே, பொதியை மறுபடியும் சுற்றிக் கட்டத் தொடங்கினாள்.
ஃப்ரேய்கா கட்டிலின் கால் பகுதிக்குச் சென்று, அங்கு தரையில் மண்டியிட்டு அமர்ந்தான். தலை தரையைத் தொடும்வரை குனிந்து, முணுமுணுத்தான், “தேவனாகிய கிறிஸ்துவே, நீவிர் போற்றப்படுவீராக, உமக்கு நன்றி தெரிவிக்கப்படுவதாக…”
வட மேற்குப் பகுதிக்குச் சென்ற தன் தூதுவன் என்னவானான் என்பதை ஸொலாரியின் ஆயரால் அறிந்து கொள்ள முடியாமலேயே போய்விட்டது. அவன் பேராசை கொண்டவன் என்பதால், தேவ மறுப்பாளர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் மலைப் பிரதேசங்களில் வெகு தூரம் பயணம் செய்து, அங்கேயே உயிர்த் தியாகம் செய்திருக்கக்கூடும்.
மன்னன் ஃப்ரேய்காவின் புகழ், அவனுடைய பிரதேச வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்திருந்தது. அவனுடைய ஆயுள் காலத்திலேயே, மாலஃப்ரெனா ஏரிக்கு மேலே இருந்த மலைப் பகுதியில் பெனெடிக்டியத் துறவியர் மடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. ஃப்ரேய்காவின் பிரஜைகளும், மந்தைகளும், வாளும், அங்கு வரும் துறவியருக்கு ஆரம்ப ஆண்டுகளின் கடுங்குளிர் காலங்களில் உணவளித்தும், பாதுகாத்தும் வந்தன. நெடுங்காலம் தாக்குப் பிடிக்கும் தோல் பட்டயங்களில், கருப்பு மசி கொண்டு, தப்பும் தவறுமான லத்தீன் மொழியில் எழுதப்பட்ட மடாலய நிகழ்வுப் பதிவேடுகளில் ஃப்ரேய்காவும், அவனுடைய மகனும் கடவுளின் தேவாலயத்தை உறுதியுடன் பாதுகாத்தவர்கள் என்று நன்றியுடன் நினைவு கூரப்படுகின்றனர்.
(ஓவியங்கள்: ஆர்.செ.)
1960களின் ஆரம்பத்தில் எழுதத் தொடங்கியவர் அர்ஸுலா லெ க்வின். (Ursula K. Le Guin.) ஆங்கில அறிவியல்/விசித்திரப் புனைகதை எழுத்தாளர்கள் வரிசையில் மிகப் பிரபலமானவர். அமெரிக்காவின் ஒரெகான் மாநிலத்தில் வசித்து வருகிறார். இது, 1976ஆம் ஆண்டில் எழுதப்பட்ட The Barrow என்ற விசித்திரப் புனைகதையின் தமிழாக்கம். (தமிழாக்கம்: சாம் ஜி. நேதன்)