இக்கதையின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.
அவன் மேலும் நினைத்தான்: ஏனென்றால், அதைக் கட்டுப்படுத்தினால், நான் எதார்த்தத்தையே கட்டுப்படுத்துவேன். என்னைப் பொறுத்தவரையாவது அப்படி நடக்கும். என் தன்மய எதார்த்தமாவது….ஆனால் அதைத் தவிர வேறென்ன இருக்கிறது வெளியில்? புற எதார்த்தம் என்பது ஒரு செயற்கை உருவாக்கம்தானே, பலப்பல தன்மய எதார்த்தங்களில் இருந்து கூட்டமைப்பாக உருவாகிற ஒரு கற்பிதம்தானே?
என் பேரண்டமே என் விரல்களுக்கு இடையில் உள்ளது, அவன் புரிந்து கொண்டான். இந்த சனியன் பிடித்த நாடா எப்படி வேலை செய்கிறது என்று மட்டும் புரிந்து விட்டால். நான் முதலில் என்ன தேடினேன் என்றால், என் செயல்திட்டத்தை இயக்குகிற சர்க்யூட்களைக் கண்டுபிடித்தால், என் வாழ்க்கையை உண்மையாக ஒரு நிலைப்புள்ளதாக ஆக்கலாம் என்று யோசித்தேன். ஆனால் இதைப் பார்த்தால்-
இதைக் கொண்டு அவன் தன்னை மட்டும் கட்டுப்படுத்தும் திறனை அடையவில்லை; எல்லாவற்றையுமே கட்டுப்படுத்தும் திறன் அவனுக்குக் கிட்ட வாய்ப்பு இருந்தது.
இது முன்னால் வாழ்ந்து மடிந்த எல்லா மனிதர்களிடமிருந்தும் தன்னை விலக்கி வைக்கிறது, அவன் சோகத்துடன் புரிந்து கொண்டான்.
வி-ஃபோனிடம் போய், அலுவலகத்தைக் கூப்பிட்டான். டான்ஸ்மான் திரையில் தோன்றியதும், சுறுசுறுப்பாகப் பேசினான்,”என் அபார்ட்மெண்டுக்கு ஒரு முழு செட் மைக்ரோகருவிகளையும், ஒரு பெரிய உருப்பெருக்கும் திரையையும் அனுப்ப ஏற்பாடு செய்யுங்க. கொஞ்சம் மைக்ரோ சர்க்யூட்களில் வேலை செய்ய வேண்டி இருக்கிறது.” அதைப் பற்றி மேலும் பேசிக் கொண்டிருக்க அவனுக்கு விருப்பம் இல்லையாதலால் உடனே தொடர்பைக் கத்திரித்தான்.
அரை மணி கழித்து கதவு தட்டப்பட்டது. திறந்தால் அவனுடைய தொழிற்சாலையிலிருந்து ஒரு மேல்நிலைத் தொழிலாளர் வந்திருந்தார். மைக்ரோகருவிகளில் ஒரு சுமையைத் தாங்கி இருந்தார். “என்ன கருவி வேண்டும் என்று நீங்கள் சொல்லவில்லையே,” அந்த ஃபோர்மன் சொன்னார், அறைக்குள் நுழைந்தபடி,” அதனால் திரு.டான்ஸ்மான் எல்லாவற்றையும் கொண்டு போகச் சொன்னார்.”
”அந்த உருப்பெருக்கும் திரையமைப்பு?”
“மேல்தளத்தில், வேலைக் கலத்தில் உள்ளது.”
ஒருவேளை, நான் சாகத்தான் விரும்புகிறேனோ, பூ- யோசித்தான். இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். அந்தத் தொழிலாளர் கனமான உருப்பெருக்கும் திரையையும், அதன் கட்டுப்பாட்டு எந்திரங்களையும் மேலேயிருந்து தூக்கிக் கொண்டு வந்து அறைக்குள் வைக்கும்வரை, நின்று புகைத்தான். இது தற்கொலைதான், அதைத்தான் இங்கே நான் செய்துகொண்டிருக்கிறேன். அவன் கொஞ்சம் நடுங்கினான்.
“ஏதாவது கோளாறா, மிஸ்டர்.பூ-?”ஆலை ஃபோர்மன் எழுந்து நின்றபடி கேட்டார். அந்த உருப்பெருக்கித் திரை மேலும் இதர பாகங்களின் சுமையை இறக்கியதில் அவருக்கு அப்பாடாவென்றிருந்தது போலும். “அந்த விபத்துக்கப்புறம் இன்னும் உங்களுக்கு சரியாகவில்லை போலிருக்கிறது.”
“ஆமாம்.” என்று குரலடங்கிச் சொன்னான் பூ-. ஃபோர்மன் போகும்வரை சங்கடப்பட்டுக் கொண்டு விறைத்து நின்றான்.
உருப்பெருக்கி-ஆடி எந்திர அமைப்பை வைத்துப் பார்த்தால் அந்தப் பிளாஸ்டிக் நாடா வேறு ஒரு உருவை அடைந்தது. ஒரு அகலமான பாதையில் நெடுக ஏதேதோ துளைகள் வெவ்வேறு வழிகளில் சென்று கொண்டிருந்தன. நான் நினைத்த மாதிரிததான் இருக்கிறது- பூ- நினைத்தான். இரும்பு ஆக்ஸைடில் எலெக்ட்ரிக் சக்திப் புள்ளிகளாகப் பதிக்கப்படாமல், துளைகளாகத்தான் பதிக்கப்பட்டிருக்கின்றன.
குவிஆடியின் கீழ் அந்த நாடா கசிந்து ஊர்ந்து முன்னே நகர்வது தெளிவாகத் தெரிந்தது. மிக மெதுவாக, ஆனால் அது நகரவே செய்தது. ஒரு மாறாத கதியில், பரவி நோக்கியைப் பார்க்க நகர்ந்து கொண்டிருந்தது.
இது அந்தக் கால எந்திரப் பியானோ போல வேலை செய்கிறது என நான் நினைக்கிறேன். இந்தத் துளைகள் கதவுகளை இயக்குகின்றன; ஓட்டை இருந்தால் ’இல்லை’ என்றும், ஓட்டை இலலாத நாடாப் பரப்பு ஆமாம் என்றும் இருக்கும் போலிருக்கிறது. இதை நான் எப்படி சோதிப்பது?
ஏதோ சில ஓட்டைகளை அடைத்தால் போதாதா, அவன் யோசித்தான்.
விடுக்கும் ஸ்பூலில் எத்தனை நாடா பாக்கி என்று அளந்தான். அந்த நாடா நகரும் வேகத்தை-மிகத் துன்பப்பட்டு- கணக்கிட்டான், இறுதியில் ஒரு எண்ணை அடைந்தான். பரவி நோக்கிக்குள் நுழையவிருக்கும் நாடாப் பகுதியில் தெரியும் சிறுபகுதியில் ஏதும் மாறுதல் செய்தானானால், அந்த மாறுதலுக்கு ஏதும் பலன் தெரிய ஐந்திலிருந்து ஏழு மணி நேரம் வரை ஆகும். இப்போது என்ன மாறுதல் செய்தாலும், சில மணி நேரம் கழித்து என்ன நரம்புமண்டலத் தூண்டுதல்கள் அவனுக்கு நேருமோ, அதெல்லாவற்றையும்தான் அவன் பெயிண்டால் மாற்றுவான்.
ஒரு சிறு மைக்ரோதூரிகையால் கொஞ்சம் பெரிய அளவு நாடா மீது ஒளியைத் தடுக்கும் வார்னிஷைப் பூசினான்…அது அந்த மைக்ரோகருவிகளிருந்த பெட்டியில் இருந்த வார்னிஷ். ஒரு அரைமணி நேரத்துக்கு என் நரம்பு மண்டலத்துக்கு வரும் தூண்டுதல்களை நான் தடுத்திருக்கிறேன், இந்த வார்னிஷைப் பூசியதால் என்று கணக்கிட்டான். குறைந்தது ஒரு ஆயிரம் ஓட்டைகளை நான் மறைத்துப் பூசி இருக்கிறேன்.
ஆறு மணி நேரம் கழித்து அவனுடைய சூழலில் என்னென்னவெல்லாம் இந்த மாறுதல்களால் பாதிக்கப்படுகின்றன என்று பார்க்க சுவாரசியமாகவாவது இருக்கும் என நினைத்தான்.
ஐந்தரை மணி நேரம் கழித்து, அவன் மான்ஹாட்டன் பகுதியில், க்ராக்டெர்ஸ் என்கிற ஒரு பிரமாதமான பாரில், டான்ஸ்மானுடன் ’பானம்’அருந்திக் கொண்டிருந்தான்.
”பார்க்க மோசமாயிருக்கீங்களெ,” டான்ஸ்மான் சொன்னார்.
“நானே மோசம்தான்,” பூ- சொன்னான். அவன் குடித்து முடித்தது ஒரு புளிக்கும் ஸ்காட்ச் ரவுண்ட். இன்னொரு ரவுண்ட் ஆர்டர் கொடுத்திருந்தான்.
“அந்த விபத்தினாலெயா?”
“ஒரு வகைல பார்த்தா, ஆமாம்.”
டான்ஸ்மான் கேட்டார்,”உங்களெப் பத்தி ஏதாவது தெரிஞ்சுகிட்டீங்களா, அதுனாலயா?”
அந்த பாரில் இருந்த மங்கலான ஒளியில் தலையைத் தூக்கி பூ- அவரைப் பார்த்தான்,”அப்ப உங்களுக்குத் தெரியுமாக்கும்.”
”எனக்குத் தெரியும்.” டான்ஸ்மான் சொன்னார், “நான் உங்களெ வெறுமனே பூ-ன்னு கூப்பிடலாம்னு தெரியும். ஆனால் மிஸ்டர் பூ-ன்னு கூப்பிடறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு. அப்பிடித்தான் இனியும் கூப்பிடப் போறேன்.”
“எத்தனை நாளா உங்களுக்குத் தெரியும்?” பூ- சொன்னார்.
“இந்த நிறுவனத்தை நீங்க எடுத்துகிட்டதிலேர்ந்தே தெரியும். ’மூன்று-திட்டம்’நிறுவனத்தோட உண்மையான சொந்தக்காரங்க ப்ராக்ஸ்-சிஸ்டத்தில இருக்காங்களே, அவங்க மூன்று-திட்டத்தை ஒரு எலெக்ட்ரிக்-எறும்பு நடத்தணும்னு விரும்பினாங்க, அது அவங்க கண்ட்ரோல்ல இருக்கும்னு நினைச்சாங்க. ஒரு அதிபுத்திசாலியான, நல்ல உத்வேகம் உள்ள ஒரு-”
“நிஜமான சொந்தக்காரங்களா?” இதுதான் முதல்தடவையாக அவன் இதைக் கேட்டிருக்கிறான். “நமக்கு 2000 பங்குதாரர்கள் இருக்காங்க இல்லியா, பல பக்கமும் சிதறி இருக்காங்க இல்லே?”
“மார்விஸ் பெய், அவங்களோட கணவர் எர்னன், ப்ராக்ஸ்-4 ல இருக்காங்க, 51 சதவீதம் வாக்கு அளிக்கிற அளவு பங்குகளை வச்சிருக்காங்க. முதல்லே இருந்தே இதுதான், இப்படித்தானிருந்திருக்கிறது.”
“எனக்கு ஏன் இது தெரியல்லே?”
“உங்க கிட்டே இதைச் சொல்ல வேணாம்னு எனக்குச் சொல்லி இருந்தாங்க. நீங்கதான் கம்பெனி திட்டங்களை எல்லாம் வகுக்கிறீங்கன்னுட்டு நீங்க நெனெக்கணும்னு இருந்தது. நான் உதவியாளன். ஆனா நிசத்துல நான்தான் பெய் தம்பதியர் எனக்குச் சொன்னதை உங்களுக்கு எடுத்துக் கொடுத்துகிட்டிருந்தேன்.”
“நான் வெறும் பொம்மை,” என்றான் பூ-.
“ஒரு விதத்தில அப்படித்தான். ஆமாம்.” டான்ஸ்மான் தலையாட்டினார். “ஆனா என்னைப் பொறுத்த வரை நீங்க எப்பவும் மிஸ்டர். பூ-தான்.”
தூரத்தில் அங்கிருந்த சுவரில் ஒரு பகுதி காணாமல் போயிற்று. அதோடு அதற்கருகில் இருந்த மேஜைகளில் இருந்த பலரும் காணாமல் போயினர். அப்புறம்-
அந்த பாரிலிருந்த பெரிய கண்ணாடிச் சுவருக்குப் பின்னால், நியூயார்க் நகரத்தின் தொடுவானருகே கட்டிடங்கள் திடீரென்று காணாமல் போயின.
அவன் முகத்தைப் பார்த்த டான்ஸ்மான் கேட்டார்,”என்ன ஆயிற்று?”
பூ- கரகரத்தார்,”சுத்திப் பாருங்க. ஏதாவது மாறுதல் தெரிகிறதா?”
அறையைச் சுற்றிப் பார்த்தார் டான்ஸ்மான், பின் சொன்னார்,”இல்லியே. என்ன மாதிரி?”
”தொடுவானில் கட்டிடங்களெல்லாம் இருக்கா, பாக்கிறீங்களா?”
“நிச்சயமா. கொஞ்சம் புகைமூட்டமா இருக்கா, விளக்கெல்லாம் மின்னி, அணைஞ்சு எரியற மாதிரி இருக்கு.”
“இப்ப எனக்குப் புரியுது.” பூ- சொன்னான். அவன் நினைத்தது சரிதான்; அந்த நாடாவில் மறைக்கப்பட்ட ஒவ்வொரு ஓட்டையாலும் அவனுடைய எதார்த்தத்தில் ஏதோ பொருட்கள் காணாமல் போயின. நின்றான். சொன்னான்,”டான்ஸ்மான், நான் உங்களை அப்புறமா பார்க்கிறேன். இப்ப நான் உடனே என் அபார்ட்மெண்டுக்குத் திரும்பிப் போகணும். எனக்கு அங்கெ கொஞ்சம் வேலை இருக்கு. குட்நைட்.” அந்த பாரிலிருந்து வெளியே விரைந்தான், தெருவைக் கடந்தான், ஒரு டாக்ஸி கலம் ஏதும் கிட்டுமா என்று தேடினான்.
டாக்ஸிகளே காணோம்.
அட அதுங்களும் காணாமப் போயிடுத்தா? அவன் வியந்தான். இன்னும் என்னத்தோட் மேலெ எல்லாம் நான் பெயிண்டடிச்சு காணாம அடிச்சேனோ? விபச்சாரிகளை எல்லாமா? பூக்களையா? சிறைச்சாலைகளையா?
கார்கள் நிறுத்துகிற வெளியில் டான்ஸ்மானுடைய கலம் நின்றது. அதை நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன், அவன் தீர்மானித்தான். டான்ஸ்மானுடைய உலகத்தில் இன்னும் டாக்ஸிகள் இருக்கின்றன, அவர் அதில் போய்க் கொள்ளட்டும். எப்படியுமே இது கம்பெனியுடைய கலம்தான். என் கிட்ட அதன் சாவிக்கு ஒரு பிரதி வேறு இருக்கிறது. வெகு சீக்கிரமே அவன் ஆகாயத்தில் இருந்தான், தன் அபார்ட்மெண்டை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தான். நியுயார்க் நகரம் இன்னும் திரும்பி வரவில்லை. இடப்பக்கமும், வலப்பக்கமும் கலங்கள், கட்டிடங்கள், தெருக்கள், முச்சக்கர வண்டிகள், அறிவிப்புப் பலகைகள்… ஆனால் நடுவில் ஏதுமில்லை. நான் எப்படி அதற்குள் பறப்பது? தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். நானும் காணாமல் போய்விடுவேனே?
ஒருவேளை அப்படி ஆகாதோ? அவன் அந்த வெறும் இடத்தை நோக்கிப் பறந்தான்.
ஒன்றன் பின் ஒன்றாக சிகரெட்டுகளைப் புகைத்த வண்ணம் பதினைந்து நிமிடம் வட்டமிட்டான், பறந்தான். திடீரென்று எந்த ஒலியுமில்லாமல், நியு யார்க் திரும்பித் தோன்றியது. தன் பயணத்தை அவனால் பூர்த்தி செய்ய முடிந்தது. சிகரெட்டை நசுக்கி அணைத்தான் (பெருமதிப்புள்ள ஒரு பொருளை வீணானது) தன் அபார்ட்மெண்ட்டை நோக்கி விருட்டென்று பறந்தான்.
ஒரு ஒளி ஊடுருவாத துண்டை நான் செருகினால், தன் அபார்ட்மெண்ட் கதவைத் திறந்தபடி யோசித்தான், நான் அப்போ-
அவனுடைய யோசனை அறுபட்டது. அவனுடைய அறையில் நாற்காலியில் யாரோ இருந்தார்கள், காப்டன் கெர்க்கை டிவியில் பார்த்தபடி. “சாராவா,” கொஞ்சம் துணுக்குற்றுக் கேட்டான்.
அவள் எழுந்தாள், நிறைய சதை, ஆனால் குறைவில்லா நளினம். ”நீங்க ஹாஸ்பிடல்லெ இல்லை, அதனாலெ நான் இங்கெ வந்தேன். நாம மார்ச் மாசம் ஒரு தடவை வாக்குவாதம் செஞ்சப்ப நீங்க ஒரு சாவியைத் திருப்பிக் கொடுத்தீங்களே, அது இன்னும் என் கிட்டே தான் இருந்தது. அட,… ரொம்ப மனசு நொந்து போயிட்டீங்க போலத் தெரியுதே?” அவள் அருகில் வந்தாள், முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். “உங்க காயம் அவ்ளவு வலிக்குதா?”
“அதெல்லாமில்லை.” கோட், டை, சட்டை அப்புறம் மார்புப் பக்க தடுக்கு எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கழற்றினான். முழங்காலில் மண்டியிட்டு அமர்ந்தான். தன் கைகளை மைக்ரோ கருவிகளுக்கான கையுறைகளில் நுழைக்க ஆரம்பித்தான். சிறிது நிறுத்தி, நிமிர்ந்து அவளைப் பார்த்துச் சொன்னான்,”நான் ஒரு எலெக்ட்ரிக் எறும்புன்னு தெரிஞ்சுகிட்டேன். ஒரு கோணத்தில பார்த்தால் அதுலெருந்து கூடப் புதுப் பாதைகளெல்லாம் திறக்கின்றன. அதைத்தான் இப்ப சோதிச்சுப் பார்க்கப் போகிறேன்.” விரல்களை மடக்கி நீட்டிச் சோதித்தான். இடது வால்டோவின்(2) கோடியில், ஒரு மைக்ரோ-திருகாணித் திருப்பி நகரத் துவங்கியது. உருப்பெருக்கி குவிஆடிஅமைப்பில் அதன் உரு பெரிதாகிப் பார்க்குமளவு தெரிந்தது.
”நீ பார்க்கலாம்,” என்றான். “உனக்குப் பார்க்க வேண்டுமென்றிருந்தால்.”
அவள் அழத் தொடங்கியிருந்தாள்.
”என்ன ஆச்சு இப்ப?” என்று கடுமைத் தொனியில் கேட்டான், தன் வேலையில் இருந்து கண்ணை எடுக்காமல்.
“நான் – இது ரொம்ப வருத்தமான விஷயம். நீங்க ’மூன்று=திட்டம்’கம்பெனியில எங்களுக்கெல்லாம் ரொமப நல்ல எஜமானரா இருந்திருக்கீங்க. நாங்களெல்லாம் உஙக மேலே ரொம்ப மரியாதை வச்சிருந்தோம். இப்ப எல்லாமே மாறிப் போயிட்டுது.”
அந்த ப்ளாஸ்டிக் நாடாவில் மேலேயும் கீழ்நுனியிலும் எந்தத் துளைகளும் இல்லாத ஒரு சிறு விளிம்பு இருந்தது; அவன் ஒரு மிகக் குறுகிய துண்டை நீளவாக்கில் வெட்டினான், பிறகு சிறு கணம் தீவிரக் கவனம் செலுத்தி, பரவி நோக்கியின் படிக்கும் இடத்திலிருந்து நான்கு மணி நேரம் தள்ளி இருந்த இடத்தில் நாடாவையே வெட்டினான். தான் முதலில் வெட்டிய சிறு துண்டை இப்போது திருப்பிக் கொண்டு நாடாவுக்கு செங்குத்தாக இருக்கும்படி பிடித்தான். இந்தத் துண்டை நாடாவில் தன் மைக்ரோ-சுட்டுக் கோலால் சுட்டுப் ஒட்டிப் பொருத்தினான். பின் நாடாக் கண்டை இடது, வலது பக்கங்களில் திரும்பிப் பொருத்தினான். இதன் பலனாக, அவன் தன்னுடைய விரியும் எதார்த்த ஓட்டத்தில் ஏதும் நிகழாத ஒரு இருபது நிமிடங்கள், வெற்றிடமான இருபது நிமிடங்களை நுழைத்திருந்தான். அவனுடைய கணக்குப்படி- இதன் தாக்கம் நள்ளிரவுக்கு சில நிமிடங்களுக்குப் பிறகுதான் தெரியும்.
”உங்களை நீங்களே ரிப்பேர் செஞ்சுக்கிறீங்களா?”தயங்கிக் கேட்டாள் சாரா.
“என்னை நானே விடுதலை செஞ்சுக்கிறேன்.” பூல் சொன்னான். ஏற்கனவே செய்ததற்கு மேல் வேறு பல மாறுதல்களை அவன் யோசித்து வைத்திருந்தான். முதலில் இதுவரை தான் புரிந்து கொண்டது சரியா என்று சோதித்துப் பார்க்க வேண்டி இருந்தது; துளை இல்லாத நாடா என்றால், தூண்டுதல் ஏதும் இல்லாமலிருக்கும், அப்போது, நாடாவே இல்லை என்றால்….
”உங்க முகத்தைப் பார்த்தா.” சாரா நிறுத்தினாள். தன் பொருட்களைச் சேகரிக்க ஆரம்பித்தாள், பர்ஸ், கோட், ஒலி-ஒளிப் பத்திரிகைகளைச் சுருட்டினாள். “நான் போறேன்; நான் இங்கெ வந்தது உங்களுக்கு எப்பிடி இருக்குங்கிறது எனக்குப் புரியுது.”
“இரு,” என்றான். “காப்டன் கெர்க்கை நாம ரெண்டு பேரும் சேர்ந்து பார்க்கலாம்.” தன் சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டான். “உனக்கு நினைவிருக்கா? ரொம்ப வருஷங்களுக்கு முன்னால- எவ்வளவு அது- இருபதோ இருபத்திரெண்டோ என்னவோ டிவி சானல்கள் இருந்துதே? தனியார் சானலை எல்லாம் அரசாங்கம் மூடறதுக்கு முன்னாடி?”
அவள் தலையாட்டினாள்.
“அது எப்படி இருந்திருக்கும்.” அவன் கேட்டான். “இந்த டிவி செட்டில அத்தனை சானலையும் ஒரே நேரத்தில் அனுப்பி இந்தத் திரையில எல்லாமா சேர்ந்து ஒளிபரப்பினா, நமக்கு ஏதாவது அதில புரியுமா? அந்தக் கலவையில என்னவாவது தெரியுமா?”
“தெரியும்னு தோணல்லெ.”
“அப்படிப் பார்க்க நாம கத்துக்க முடியுமோ என்னவோ. நமக்கு என்ன பிடிக்குதோ, எது பிடிக்கலியோ அதெல்லாம் மட்டும் தனியாப் பொறுக்கி எடுத்துப் பார்க்க முடியுமோ என்னவோ. யோசிச்சுப் பாரேன், நம்ப மூளையால இருபது பிம்பங்களை ஒரே நேரம் பார்த்து, அதெல்லாத்தையும் சமாளிக்க முடிஞ்சா என்னவெல்லாம் நமக்கு சாத்தியமாகும்; ஒரே நேரத்தில எத்தனை அறிவை நம்மால நம் மூளையிலெ சேர்த்து வைக்க முடியும். நான் என்ன யோசிக்கிறேன்னா, மூளை, மனித மூளையால- .” அவன் நிறுத்தினான். “மனித மூளையால அதைச் செய்ய முடியாது,” என்றான், தன்னைப் பற்றி யோசித்தோ என்னவோ, “ஆனால், கருத்தளவுலெ பகுதி மனித மூளையா இருக்கிற ஒண்ணால அதைச் செய்ய முடியலாம்’” என்றான்.
“உங்களுக்கு அதுதான் இருக்கா?” என்றாள் சாரா.
“ஆமாம்,” என்றான் பூ-.
அந்த காப்டன் கெர்க் படத்தை இறுதி வரை பார்த்தார்கள், பிறகு படுக்கைக்குப் போனார்கள், ஆனால் பூ- தன் தலையணையை உயர்த்தி வைத்துச் சாய்ந்து கொண்டு, புகைத்தான், ஏதோ யோசித்தபடி இருந்தான். அவனுக்கருகில் படுத்திருந்த சாரா நிம்மதி இல்லாமல் புரண்டாள், ஏன் இவர் இன்னும் விளக்கை அணைக்காமல் இருக்கிறார் என்று யோசித்தபடி.
11.50. சீக்கிரமே, அது நடக்கும்.
“சாரா,” என்று கூப்பிட்டான். “எனக்கு உன் உதவி தேவை. இன்னும் சில நிமிடங்களில் இங்கே ஏதோ விசித்திரமா நடக்கப் போகிறது. அது ரொம்ப நேரம் தாங்காது. ஆனால் நீ என்னைக் கவனிச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கணும். நான் ஒருவேளை-,” ஒரு சைகை செய்தான். “ஏதாவது மாறுகிறேனான்னு பார்க்கணும். நான் தூங்கிப் போனாலோ, அல்லது உளற ஆரம்பிச்சாலோ, அல்லது-” நான் காணாமல் போய்விட்டாலோ என்று சொல்ல விரும்பினான். ஆனால் சொல்லவில்லை. “நான் உனக்கு ஏதும் கெட்டதைச் செய்ய மாட்டேன், ஆனால் நீ ஏதாவது தற்காப்புக்கு ஒரு ஆயுதம் வச்சிக்கிறது நல்லது. அடிச்சுத் திருட வர்றவங்களுக்கு எதிராப் பயன்படுத்த ஏதாவது துப்பாக்கி மாதிரி வச்சுகிட்டிருக்கியா நீ?”
“என் பர்ஸிலெ இருக்கு.” அவள் நன்றாக விழித்துக் கொண்டாள்; படுக்கையில் அமர்ந்தபடி, அவனை மிகுந்த கலக்கத்துடன் பார்த்தாள். அவளுடைய பெருத்த தோள்கள் பழுப்பாக, புள்ளிகள் விரவி அறை ஒளியில் தெரிந்தன.
அவன் துப்பாக்கியை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
அறை அப்படியே அசைவற்று, விறைப்பாக உறைந்தது. நிறங்கள் அழியத் துவங்கின. பொருட்கள் குறைந்து கொண்டே போயின, கடைசியில் புகை போல, அவை நிழலுக்குள் மறைந்தன. இருள் மெலிய திரையாக எல்லாவற்றின் மீதும் படர்ந்தது, இறுதியில் அறைப் பொருட்கள் மெலிந்து கொண்டே போயின.
கடைசித் தூண்டுதல்கள் மடிகின்றன, எனப் பூ- உணர்ந்தான். கண்களைக் குறுக்கிப் பார்த்தான், ஏதாவது தெரிகிறதா என்று. சாரா பென்டன் இருப்பது தெரிந்தது, படுக்கையில் இருந்தாள்; இரு பரிமாண உருவாக தட்டையாக, கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து, கரைந்து போகவிருக்கும் உருவாக, உட்கார்த்தி வைக்கப்பட்டிருக்கும் பொம்மையாகத் தெரிந்தாள். உருவிழந்த பொருட்கள் நிலைப்பில்லாத சிறு மேகங்கள் போல அங்குமிங்கும் திடீர் திடீரெனத் தேங்கிக் கரைந்து கொண்டிருந்தன; ஏதோ மூலக் கூறுகளே சேர்ந்து, பிய்ந்து போய், மறுபடி சேர்ந்து அலைந்தன. கடைசியாக வெப்பம், சக்தி,பிறகு ஒளி எல்லாம் கரைந்தன; அறை மூடிக் கொண்டு, தன்னுள்ளேயே விழுந்தது, புறவெளியிலிருந்து முழுவதுமாக மூடப்பட்டது போலிருந்தது. அந்தக் கட்டத்தில் முழு முற்றான கருமை அனைத்தின் இடத்திலும் நிரம்பியது. ஆழமேதும் தெரியாத ஒரு வெளி, இரவு போல இல்லை, ஆனால் விறைத்து, கொஞ்சமும் இடம் கொடுக்காத இருட்டு. அவனுக்கு எந்த ஒலியும் கேட்கவில்லை.
ஏதையாவது தொடமுடிகிறதா என்று முயல நினைத்தான். நீட்டித் தொட்டுப் பார்க்க அவனிடம் ஏதும் இருக்கவில்லை. தன் உடல் பற்றிய உணர்வு கூட ஏதுமே இல்லை, எல்லாம் கரைந்து போனமாதிரியே, பேரணடமே காணாமல் போன மாதிரியே அதுவும் இல்லாமல் போயிருந்தது. அவனுக்குக் கைகள் இல்லை, இருந்திருந்தாலும், அவற்றால் உணர அங்கு ஏதும் இருக்கவுமில்லை.
இந்த நாடா எப்படி வேலை செய்கிறது என்று நான் ஊகித்தது சரிதான், என்று சொல்லிக் கொண்டான். அதைச் சொல்லத் தேவையான வாய் அவனிடம் இல்லை, ஏன் அந்தச் செய்தியே கூட உருத் தெரியாததாகத்தான் உணரப்பட்டிருக்க முடியும்.
இந்த இடைவெளி என்ன பத்து நிமிடங்களாகியிருக்குமா? தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். நேரக் கணக்கிலும் நான் போட்டது சரிதானா? அவன் காத்திருந்தான்… ஆனால் கால ஓட்டம் பற்றிய தன் உணர்வு மற்றவை போலவே அழிந்து போயிருந்தது என்று அவனுக்கு உள்ளூகம் இருந்தது. நான் பொறுக்கத்தான் வேண்டும், என்று உணர்ந்தான். ரொம்ப நேரம் ஆகாமலிருக்க வேண்டும், அவ்வளவுதான்.
தான் காக்கும் நேரத்தைக் கழிப்பதற்காக, அவன் ஒரு என்சைக்ளோபீடியாவைத் தயார் செய்ய உத்தேசித்தான்; ‘அ’ என்று துவங்கும் அனைத்தையும் ஒரு பட்டியலாக்க முடிவு செய்தான். பார்ப்போமா. அவன் யோசித்தான். அம்புலி, அண்டா, அக்கா, அணில், அத்துவானம், அட்லாண்டிக், அருகம்புல், அட்வர்டைஸ்மெண்ட்- யோசித்துக் கொண்டே போனான், சொற்கள் தொகுப்பாயின, தொகுப்புகள் சேர்ந்துகொண்டே போயின, எல்லாம் பீதி அலைக்கும் அவனுடைய மனதில் நெளிந்து நழுவி ஓடின.
திடீரென்று ஒளி ஒரு கணத்தில் மின்னித் தோன்றியது.
அவன் தன் அறையின் முன்பகுதியில் ஒரு சோஃபாவில் படுத்திருந்தான். மிதமான சூரிய ஒளி அவன் ஜன்னல் வழியே அறையில் வழிந்தது. இரண்டு மனிதர்கள் அவன் மேல் குனிந்து கொண்டிருந்தார்கள். கைகளில் நிறைய கருவிகள். பராமரிப்பு செய்யும் ஆட்கள், அவன் புரிந்து கொண்டான். என்னைப் பழுது பார்த்திருக்கிறார்கள்.
“இவனுக்கு நினைவு வந்து விட்டது,” ஒரு டெக்னீஷியன் சொன்னார். அவர் எழுந்து, தள்ளி நின்றார்; சாரா பென்டன், கவலையில் அலமலந்து போயிருந்தவள், முன்னே வந்தாள்.
(தொடரும்)