ஆயிரம் தெய்வங்கள் – 4

விவசாயம் சீரழிந்து வருகிறது. இச்சீரழிவில் சில புதிய பரிமாணங்கள் உண்டு. விவசாயத்திற்கு நியமணமான மைய அமைச்சரின் கவனம் ஐ.பிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் உள்ளது. மாநில அமைச்சர்கள் மான்செண்டோவுக்கு விலை போய்விட்டனர். இப்போது சாட்சாத் வருணபகவனே விவசாய அமைச்சராகச் செயலாற்றுகிறார். திடீரென்று அவருக்கு கோபம் வந்து பல இடங்களில் கொட்டித் தீர்த்துவிட்டார். எதுவோ வருணபகவானின் கருணையால் மானாவாரியில் நெல்லும் கோதுமையும் விளைந்து கொள்முதல் செய்த கோதுமையையும் நெல்லையும் வைக்க இடமில்லாமல் குவித்து வைத்து அது பாழாகும் முன்பு ஏழைகளுக்கு இலவசமாக வழங்கலாமே என்று உச்சநீதிமன்றம் அரசுக்கு ஒரு சவுக்கடி கொடுக்கும் அளவில் விளைவித்த கோதுமையும் நெல்லும் நாறியதால் விவசாயமும் நாறிப்போனது. நெற்களஞ்சியம் என்று தஞ்சை மாவட்டத்திற்கு ஒரு பெயர் உண்டு. அரசுக் கொள்முதலுக்கு வழங்கவே ரசாயன உரமே முழுப்பயன். எனக்குத் தெரிந்த பல ‘விவசாயிகள்’ கொள்முதலுக்கு என்று ரசாயன உரத்தை முழுக்கவும் பயன்படுத்தி விளைந்த அனைத்து நெல்லையும் அரசுக்கு விற்றுவிட்டுச் சாப்பாட்டுக்கு அங்காடியில் ”டீலக்ஸ் ஸான்னி”, ”கர்நாடகப் பொன்னி” என்று வாங்குவார்கள். கொள்முதலுக்கு வழங்கப்படும் உணவு ஏற்கனவேயே விஷமானதுதான். இதில் ஈரம்பட்டால் என்னவாகும். மாட்டுக்கும் கூட அடர்தீவனமாக (10%) வழங்கமுடியாது. மாடுகளுக்கு 90 சதம் நார்ப்பொருள் வழங்கவேண்டும், உளம், பசும்புல் ஆகியவற்றுக்கு மேல் அரிசி மவைப் பிண்ணாக்கில் கரைத்து வைக்கலாம். கறவை மாடுகளுக்கு பால் கூடுதலாகச் சுரக்க இது ஒரு டெக்னிக். 100% மாவுப் பொருள் கொடுத்தால் மாடு இறந்துவிடும். மனிதனுக்கு 90% மாவுப்பொருள், 10% நார்ப்பொருள். புல்லையும் வைக்கோலையும் மனிதனால் தின்னமுடியாது. விவசாயத்துடன் தொடர்புள்ள தெய்வத்திற்கு வருவோம். தமிழ்நாட்டில் குறிப்பாக நகர் வாழும் அம்பாத்துறை-சின்னளப்பட்டியில் சித்திரை, ஆடி மாதங்களில் பெண்கள் தலையில் முளைப்பயறு ஊர்வலமாகத் தூக்கிச் செல்லும் ஒரு காட்சி சிறப்பாயிருக்கும். ஒரு காலத்தில் விவசாயிகள் படைத்தது. இன்று எல்லோரும் முளைப்பயறு சுமக்கிறார்கள். ஆனால் விவசாயம் இல்லை. எகிப்திலும் ஒரு காலத்தில் இப்படிப்பட்ட காட்சி இருந்தது. எனினும் அதில் ஒரு வித்தியாசம் உண்டு.

எகிப்தில் ஹோஸஸ் – சேத் யுத்தம் ஏறத்தாழ நம்மூர் தேவர் – அசுரர் யுத்தம் போல் நிகழ்ந்தது. செத் – புயலின் சின்னம். ஹோரசோ நாகமாகச் செயல்படக் கூடியவர். தன் கண்ணை ஓசிரிசுக்கு வழங்கிவிட்டு கண்ணை இழந்த குழிக்குள் நாகத்தைப் பொருத்தியவன். உண்மையில் ஓசிரிஸ் பிற்கால வழக்கில் விவசாய தெய்வமானார். நைல் நதியில் முழுகிய ஓசிரிஸ் மண்ணுக்குள் சென்று விதையானார். பின்னர் பயிராகி வேளாண்மையைத் தொடர்கிறார். நம்ம ஊர் தெருக்காமி அம்மன் திருவிழாக்களில் பெண்கள் தலையில் பானை, அப்பானையில் முளைக்கட்டிய பயறு முக்கால் அடி உயரம் வளர்ந்து நாற்றுக் கூட்டமாகக் காற்றில் ஆடியும் – பெண்களின் ஒய்யார நடையினாலும் ஆடியவாறு கட்டோடு குழல் ஆடும். பண்டைய எகிப்தில் ஓசிரிஸ் நினைவாக கோயக் (Khoiak) விழா நிகழும் போது நைல்நதி வற்றியிருக்குமாம். வற்றிய நதிகளில் துணிவிரித்து அதன் மீது மண்ணைக்கொட்டி வற்றிய நதிகளில் துணிவிரித்து அதன் மீது மண்ணைக் கொட்டி ஓசிரிசின் உருவம் வரையப்பட்டு அந்த உருவத்தில் விதைகள் ஊன்றப்படும். விதைகள் முளைத்துப் பயிராகி ஓசிரிஸ் பசுமை வடிவில் உயர்ந்து நின்று காற்றில் ஆட பக்திப் பரவத்தில் விவசாயிகளும் ஆடுவர். ஓசிரிஸ் வடிவில் பரோ மன்னர் நினைவு கூறப்படலாம். சொர்க்கத்தில் வாழக்கூடிய எகிப்திய மன்னர் சகல நலங்களையும் பெற மண்ணுலகில் முளைப்பயறு விழா நடைபெறுகிறதாம்!

எகிப்தியக் கலை வடிவங்களில் மிகவும் முக்கிய அம்சம் கண்கள். ஹோரசின் கண்கள் பறிபோனதும், பின்னர் அவை திரும்பியதும் தெய்வீக நிகழ்ச்சிகள்.இதில் இரண்டு கதை வடிவங்கள் உண்டு. ஒன்று சூரியனின் கண். மற்றொன்று ஹோரசின் கண். திரும்பிவந்த கண் நாகமானது. முதலில் சூரியனின் கண். அது ரியின் கண். இது காலை நட்சத்திரமாயிருந்து பிறகு ஓசிரிசின் கண்ணானது. இது வளர்பிறை தேய்பிறையை எடுத்துக்காட்டும் வண்ணநிலவும் கூட. இது ஹோரசுக்குச் சொந்தமாயிருந்து பின்னர் களவு போனது. ரியின் கண், ரியின் பெண்ணான மாத் தொடர்பான வழிபாடும் கூட. எமதர்மருக்கு நிகரான ஓசிரிஸ் என்றாலும் நீதி தேவதையாக மாத் வழிபாடு இருந்தது. பிரபஞ்சத்தை ஒழுங்குபடுத்துவதே அவள் பணி. இறந்த மனிதர்களுக்கும், ஆன்மாக்களுக்கும் அவள் நீதி வழங்குவாள்.

இரவுக்கு ஒரு தெய்வம் நாம் ஷியாம், சியாமளா என்றெல்லாம் பெயர் வைக்கிறோம். சமஸ்கிருதம் – ஹிந்தியில் ”ஷியாம்” என்றால் புதுமையாக உள்ளது. ”கருப்பணசாமி” என்றால்….? சியாமளா… ”எனது இன்பப்பரியே சியாமளா”-என்று M.K.T.பாகவதர் பாட்டு கூட உள்ளது. கருத்தம்மாவே காதலியே… என்று சியாமளாவை நினைத்துப் பார்க்கலாம். பெயருக்கும் நிறத்திற்கும் சம்பந்தமே இல்லை. எனது தோழி சியாமளா நல்ல சிவப்பு. எனது தோழன் வெள்ளைச்சாமி கருப்பாயிருக்கிறான். எனது தோட்டக்காரன் கருப்பையா வெள்ளையாயிருக்கிறான். இதற்கெல்லாம் எகிப்திய தெய்வம் அபோஃபீஸ் விடை தரும்.

அபோஃபீஸ் இருளை எடுத்துக்காட்டும் கரிய நாகம். ரி என்றால் ஒளி – சூரியன். ரிக்கு எதிர், அபோஃபீஸ், இருளின் தெய்வம். ரி என்பது எகிப்தில் சூரியனின் அம்சம். சூரியனைச் சந்திரன் மறைப்பதால் இருள் ஏற்படுகிறது. இந்தச் சந்திரனின் அம்சம் அபாஃபீஸ். இது தொடர்பான கதைப்படி ரியின் படகு தொடுவானம் நோக்கிச் செல்லும் போது, அந்த தெய்வீகப் படகைச் செயலிழக்க வைக்க அபோஃபீஸ் நைல் நதியை வற்றவைக்க முயன்றது. ஆனால் இந்த முயற்சி பலிக்கவில்லை. தனது துணை தெய்வப் படைகளுடன் சேர்ந்து அபோஃபீஸ் என்ற நரகா சூரனை அல்லது நாகராசனைக் கொல்லாமல் விரட்டியதால் உலகில் ஒளி பிறந்தது. ஏன் அஃபோபீஸ் கொல்லப்படவில்லை? ஏனென்றால் மனித உயிர்கள் உறங்கவும் ஓய்வு எடுக்கவும் இருள் தேவைப்பட்டது. 24 மணி நேரத்தில் 12 மணி நேரம் சூரியனது ஆட்சியும், மீதி 12 மணி நேரத்தில் வளர்பிறை – தேய்பிறையாக சந்திரனின் ஆட்சியும் வேண்டுமே! சியாமளன் இருந்தால்தான் அருணன் மீண்டும் தோன்றி புலர்காலை ஏற்படும். இந்தியக் கண்ணோட்டத்தில் இதுவும் கிருஷ்ணலீலைதானே!

எகிப்தி நாகேஸ்வரம்

நம்ம ஊர் ஜோசியர்களின் கற்பனைகளினால் புனையப்பட்ட ”காலசர்ப்ப தோஷம்” நீங்க, திருநாகேஸ்வரம் செல்லும்படி அறிவுரை கூறுவார்கள். திருப்பாம்புரம் செல்லவும் கூறுவதுண்டு. கற்பனையால் தோன்றும் தோஷம் கற்பனையால் நீக்கப்பட்டாலும் – தோஷம் உள்ளதாக நம்பும் மக்களுக்கு அது உண்மையே. எகிப்தில் இதன் மூலவடிவம் உள்ளது.

சூரியனைச் சுற்றியுள்ள எகிப்தியக் கதைகளில் எவ்வாறு தாய்தெய்வமாகிய ஐசிஸ் ஒளிபெற்றால் என்ற விவரம் சூரியனின் சுழற்சியை அறிவுப் பூர்வமாகச் சிந்திக்கும் உருவகமாகத் தோன்றுகிறது. ஐசிஸ் மூவுலகிலும் சக்தி நிரம்பிய தாய்தெய்வம். மாய-மந்திரங்களில் வல்லவள் என்றாலும் ரி, அதாவது சூரியனின் ரகசியத்தை அறியாமலிருந்தாள். ரி ரகசியம் தெரிந்துவிட்டால் அவள் சக்தி மேலும் உயரும். ஒரு புதிய சக்தி பிறக்கவும் வழி ஏற்படும்.

மாய மந்திரத்தில் தேர்ந்தவளான ஐசிஸ் ஒரு தந்திரம் செய்தாள். முதுமைப் பருவத்தில் இருந்த ரியின் எச்சில் துளியை அவர் அறியாவண்ணம் ஒரு துணியில் விழச் செய்து அத்துணியில் மண்ணைக்கலந்து ஒரு பாம்பை உருவாக்கினாள். அந்தப் பாம்பை ரி செல்லும் வழியில் தொடரச் செய்தாள். சரியான சமயத்தில் அந்தப் பாம்பு ரியைக் கடித்தது. அதனால் ரி மூர்ச்சையானார். ரி மூர்ச்சையான செய்தி கேட்டு தெய்வச்சபை கூடியது. ரியின் மூர்ச்சை தெளிந்தும் வட பம்பு கடித்த இடத்தில் மரண வலி நீடித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரியின் வலி நிவாரணம் ஐசிஸ் வசம் இருந்ததால் தெய்வங்கள் ஐசிசை அழைத்து வந்தன. ஐசிஸ் இந்த சமயத்தைப் பயன்படுத்தி ரிக்கு சிகிச்சை அளிக்கும் முன்பு, ரியின் ரகசியப் பொருள் தனக்குத் தெரிந்திருக்க வேண்டுமென்று ஒரு நிபந்தனையை வைக்கவே, வேறு வழியில்லாமல் வலியில் துடித்த ரி தன் ரகசியப் பெயரை ஐசிசிடம் கூறினார். கம்ப்யூட்டர் வராத காலத்திலேயே Password இருந்திருக்கிறது! இந்தப் பாஸ்வேர்ட் – ரியின் ரகசியப் பெயர் அறிந்ததும் ஐசிஸ் ரியின் வலியைப் போக்கினாலும் கிரகணம் தொடர்கிறது. இது சூரியக் கிரகணத்திற்கு எகிப்தியக் கவிஞர்கள் இப்படியெல்லாம் புராணம் பாடியுள்ளனர்.

காமதேனு வடிவில் ரத்தக்காட்டேரி

எகிப்திய வரலாறில் பிற்காலப் புராண வழக்கில் உருவான காமதேனு அங்கு ஹத்தோர் அஹ்மத் எனப்பட்டது. வசிஷ்ட மகிரிஷிக்கும் விசுவாமிரருக்கும் நிகழ்ந் போதைப் பற்றி ரகுவம்சம் விவரிக்கிறது. உண்மையில் விசுவாமித்திரர் ஒரு க்ஷத்திரியர். கெளசிக மன்னாக இருந்தெபோது ஒரு போரை முடித்துவிட்டுப் படைகளுடன் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு வருகிறார். வசிஷ்டர் மன்னனை உபசரிக்கிறார். வசிஷ்டரிடம் காமதேனுவின் பெண் நந்தினி என்ற பசு இருந்தது. அந்த தெய்வீகப் பசு வசிஷ்டரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு எதை வேண்டினாலும் தரும். முதலில் விசுவாமித்திரர், படைவீரர்களுக்குச் சாப்பாடு கேட்டார். நந்தினி வழங்கியது. இந்த நந்தினியைக் கவர கெளசிகன் விரும்பு, நந்தினியைக் கேட்டான். வசிஷ்டர் மறுக்கவே, கோபாவேசத்தில் வசிஷ்டரைக் கொல்ல முயன்றான். நந்தினியின் வயிற்றிலிருந்து வீரர்கள் தோன்றி கெளசிகப் படைகளை முறியடித்தனர். ”தவத்திற்கு இவ்வளவு வலிமையா?” என்று உணர்ந்த கெளசிகன் ராஜ்ஜியத்தைத் துறந்து கடுந்தவம் புரிந்து தெய்வங்களிடமிருந்து வரமும் பெற்று வசிஷ்டர் வாயால் ”பிரம்ம ரிஷி” என்று பட்டமும் பெற்று விசுவாமித்திரன் ஆனான். விசுவாமித்திரன் என்றால் ”முக்கடவுளுக்கும் பாத்திரமானவன்”.

எகிப்தில் கலியுகம் வந்தது. மனிதர்கள் பொய் பேசினர். திருடு, வழிப்பறி, அராஜகம் எல்லை மீறியது. இதனால் வெறுப்புள்ள ரி, ”சம்பவாமி யுகே யுகே” என்று ‘துஷ்ட நிக்ரஹ பரிபாலனம்’ செய்ய தீயவர்களை வதம் செய்ய ஹத்தோர் சஹ்மதுக்குக் கட்டளை பிறப்பித்தார். அது ஒரு ரத்தக் காட்டேறியாக மாறி மனிதர்களைச் சாய்த்துக் கொன்று ரத்தம் குடித்தது. அழிவு எல்லை மீறுவதைக் கண்டு ஹத்தோர் சஹ்மதை அமைதிப்படுத்த எண்ணினார். இரவோடு இரவாக ரத்தம் போல் காட்சி தரும் மதுவால் உலகை நிரப்பினார். ரத்தம் என்று கருதி மதுவுண்ட ஹத்தோர் சஹ்மத் தள்ளாடி விழுந்தால் உலகம் காப்பாற்றப்பட்டது.

எகிப்திய ரகுவம்சம்

வரலாறு அடிப்படையில் இந்திய ரகுவம்சம் – அதாவது சூரியவம்சம் அயோத்தியல் தொடங்கியிருக்கலாம். ராம ஜன்பூமி நிஜமாயிருக்கலாம். ராம ஜன்மம் கிருதயுகம் என்று நிஜமல்ல. சொல்லப்போனாரல், அயோத்தியாப் பட்டணம் தோன்றும் முன்பே ஹஸ்தினாபுரம் தோன்றிவிட்டது. ராமாயணத்தைவிட மகாபாரம் காலத்தால் முந்தியது. இந்தியாவுக்கு பாரதநாடு என்ற பெயர் உண்டு. பரதக்கண்டே, பாரத வர்ஷே என்றெல்லாம் பழமை பேசப்பட்டாலும் கூட, காளிதாசரின் கற்பனை வளம் அசத்தலானது. சூரியவம்சத்தில் முதல் மன்னர் விவிஸ்வன் மனு; பின்னர் திலீபன், ரகு, அஜன், தசரதன் அதன் பின்னர் ராமன். ரகுவம்சத்தில் ஆறாவது தலைமுறையாக ராமன். ராமனுக்குப்பின் குசன், அத்தி, நிஷதன், நளன், என்றெல்லாம் காளிதாசால் கூறப்படும் பல மன்னர்கள் குப்த வம்ச மன்னர்களாயிருக்கலாம் என்ற கருத்து உண்டு. எனினும் இந்திய மன்னர்கள் தங்களின் பாரம்பர்யம் சூரியனிடமிருந்தோ, சந்திரனிடமிருந்தோ தோன்றியதாகப் பெருமை பேசுவார்கள். இந்தக் கருத்தெல்லாம் எகிப்திலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகியிருக்கலாம்! எகிப்திய மன்னன் பரோவின் ஜனனம் ரி என்ற சூரியபகவான், ரியின் புரோகிதர் மனைவியைப் புணர்ந்து ஏற்பட்டதாக ஒரு மரபு உண்டு. மற்றொரு புராணத்தின் படி எகிப்திய மகாராணியை ரி பகவான் புணர்ந்து சூரியவம்சம் ஏற்பட்டது! இப்படிப்பட்ட சூரிய வம்சம் எகிப்திய மன்னர் காலத்தில் ஒரு வழியாக ஹோரஸ்-செத் போர் முடிவுக்கு வந்தது.

ஹோரசின் கண்களை செத்திடமிருந்து திருப்பி வழங்க ரிஹாரக்டி உத்தரவிட்டாலும் கூட பயம் இல்லை. ஓசிரிசை சொர்க்கத்திற்கு அனுப்பினாலும் ஹோரசுக்கு வாரிசுரிமையை ரி வழங்கவில்லை. இறந்த ஆன்மாக்களை தெய்வங்களாக மாற்றும் ஆற்றல் செத்துக்கு உண்டு. செத் நினைத்தால் சூரியன் செல்லும் படகின் இயக்கத்தை நிறுத்தி உலகை இருளில் மூழ்கடித்துவிடுவான். மறுபக்கம் ஐசிஸ் ரியின் ரகசியப் பெயரை அறிந்து செத்துக்கு இணையான சக்தியுள்ளவளாயிருந்தாள். நீத் என்ற தெய்வம் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தது! ரீ பகவான் நீத்தை நியமித்து யாருக்கு வாரிசுரிமை வழங்குவது? என்று முடிவெடுக்கப் பணித்தது. நீத் எகிப்தின் வாரிசுரிமையை ஹோரஸ் பெறுவதே முறை என்று தீர்ப்பு வழங்கி செத்தை சமாதானம் செய்ய அனத், அஸ்தார்த்தே என்ற பெயருள்ள ரம்பை, ஊர்வசி போன்ற அழகிகளைப் பரிசு வழங்கியது. நீத்தின் தீர்ப்பை ரி பகவான் ஏற்கவில்லை. ஹோரஸ் பக்குவமில்லாத பாலகன் என்று கூறிவிட்டது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு செத் ஹோரஸ்மீது வீண்பழிகளைச் சுமத்தவே ரி பகவான் மூர்ச்சையானார். அப்போது ஐசிஸ், ரியின் படகோட்டி கெப்ரி முன்பும் அட்டும் முன்பும் ஹோரசுக்காக வாதாடியது. ஐசிசைப் பார்த்தவுடன் எரிச்சலடைந்த செத், தெய்வ சபையை ஐசிஸ் நுழைய முடியாத ஒரு இடத்தில் மீண்டும் கூட்ட வேண்டும் என்று கூறவே ரி-பகவான் ஏற்றார். ஐசிசாஸ் வரமுடியாத ஒரு தீவில் சபை கூடியது. ஓடக்கார தெய்வம் அண்டியிடம் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஐசிஸ் யாரும் அறியாதபடி ஒரு மூதாட்டியாக வேடம் பூண்டு, செத்தின் உறவினர் என்ற போர்வையில் ஏமாற்றி உள்ளே நுழைந்து தெய்வ சபையில் ஒரு இளமங்கையாக மாறி சேத்தைக் காதலிப்பதாக நடித்தது. மதிமயங்கிய சேத் ஐசிசைத் தழுவ வரும் சமயத்தில், ”நெஞ்சைத் தொட்டுச் சொல்லு, நிஜவாரிசு யார்?” என்று ஐசிஸ் கொஞ்சலாகக் கெஞ்சியது. ”அதில் என்ன சந்தேகம் ஹோரஸ்தான்… நான் விடுவேனா” என்று சேத் கூறியதுடன் ஐசிஸ் தன் சுயரூபத்தைக் காட்டி ”போட்டியாளரே ஒப்புக்கொள்ளும் போது இனி என்ன தயக்கம்” என்று கேட்க- சேத் பல சோதனைகளை ஹோரஸ் மீது ஏவிவிட, ஓசிரிஸ் இறுதியாக… நரகத்தில் உள்ள பூதகணங்களையெல்லாம் பூமிக்கு ஏவிவிடுவதாக எச்சரிக்க… ஒரு வழியாக ஹோரஸ் வாரிசுரிமை பெற்றார்.

எகிப்திய புராணங்களில் உள்ள சிறு தெய்வங்களில் பெஸ், இந்திய அகஸ்தியர். இது குள்ளமான தெய்வம். பேறுகால தெய்வம். பெஸ்ஸை வழிபட்டால் சுகப்பிரசவம். நாம்தான் திருக்காவூர் சென்று முல்லைவன நாதருடன் அமர்ந்துள்ள கர்ப்பரட்சகி அம்மனை தரிசிக்கிறோமே! இந்த பெஸ் கருடாழ்வாரைப் போல் நாகதோஷத்தை நீக்கும். வேளாண்மையையும் வளப்படுத்தும். நாம் கர்மம் தொலைக்கக் காசிக்குச் சென்று கங்கையில் ”சிவ சிவா” என்று நாலு முழுக்குப் போடலாம். புண்ணியம் தேட ஹரித்வாரம், ரிஷிகேசம் சென்று கங்கையில் நீராடுவது போல் நைல் நதியில் புனித நீராடி பெஸ்ஸை வணங்கினால் சுகப்பிரசவம் தாய்-சேய் இருவரும் நலம் பெறுவர். விவசாயத்தில் நல்ல அறுவடை/மகசூல் கிட்டும். பெஸ்ஸைப் போல் பேறுகால தெய்வமாக எகிப்தில் தோபெறி என்ற பெண் தெய்வமும் புனித நீராடலில் வணங்கப்பட்டது. இது நீர்யானை வடிவில் உள்ளது. ஹத்தோரின் சேவகியாகவும் இது உள்ளது. அண்டத்தின் வித்தாக மாத் வணங்கப்பட்டது. மந்திரம், மாயம், நம்பிக்கை, உணர்வு, எல்லாம் அறிவின் அம்சமாகக் கருதப்பட்டு ஹூ, சையா வணங்கப்பட்டன. இங்கு நீலி என்ற பேய் தெய்வம் எகிப்தில் நில் என்று வழங்கப்பட்டது. இந்த நில்லை வைத்துத்தான் நைல் என்ற பெயர் வந்ததோ! பால், ரிஷஃப், இஸ்தார்த்தே ஆகியவை ஆசியாவிலிருந்து வந்து ஆட்கொள்ளப்பட்டவை. ரிஷஃப் – நம்மூர் ரிஷபம் என்றாலும் எகிப்தில் மான் தலையாகவும் மன்னரின் கிரீடத்திலும் இச்சின்னம் உண்டு.

ஆயிரந் தெய்வங்கள் உண்டெனினும், பரம்பொருள் ஒன்றுதான். ”ஈஸ்வர அல்லா தேரே நாம்” என்று கூறுவது போல் 18வது தலைமுறையில் (கி.மு. 1580-1580) அமனோஃபீஸ் என்ற பரோ மன்னன் வுரே தெய்வ வழிபாட்டை வலியுறுத்தி எல்லா தெய்வங்களையும் அட்டன் என்ற பெயரில் புத்த வழிபாட்டை வலியுறுத்தினான். அட்டன் கோள வடிவமானது. அதாவது சூரியனின் கோளம் (Solar Dise). மன்னன் தன்னை அக்கேநேட்டன் என்று அறிவித்துக் கொண்டான். அதாவது ”அட்டனை வழிபடுபவன்”. ஒரு சிற்பத்தில் அட்டனின் கிரணங்கள் பூமியில் இறங்குவதாகவும் அக்கேநேட்டன் காணிக்கை வழங்குவதாகவும் உள்ளது.

இந்திய புராணங்களில் தெய்வம் மனிதனாக அவதாரம் எடுத்துத் துன்பங்கள் அனுபவித்தன. மனிதனுக்குரிய பலவீனங்கள், சபலம், இச்சை எல்லாம் தெய்வங்களுக்கும் உண்டு என்று கற்பனை செய்து பார்த்தபோது மனித மனம் எதுவும் அமைதியைப் பெற்றிருக்கலாம். எகிப்திய தெய்வங்களை இத்துடன் நிறைவுசெய்து அடுத்து கவனிக்க முன் நிற்பது மெசப்பட்டோமிய தெய்வங்களாகும்.