இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்

‘ஓவிய நிகழ்வுகள்’ என்னும் தலைப்பில் 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மனைவி ‘க்ருஷாங்கினி’ யுடன் இணைந்து நான் எழுதிய ’கடந்த நூற்றாண்டில் ஓவிய உலகம் கண்ட பல்வேறு புதுமைகளைப் பற்றின சிறு குறிப்புகள்,’ போன்ற கட்டுரைகள் கணையாழி மாத இதழில் தொடர்ந்து வெளிவந்தன. என்றாலும் அவற்றுடன் ஓவியங்கள் இடம் பெற இயலவில்லை. இப்போது நான் கடந்த சில நூற்றாண்டுகளில் மேலை நாடுகளில்  உருவான கலை சார்ந்த-குறிப்பாக ஓவியம்சார்ந்த- பல்வேறு உத்திகள், பாணிகள், புதுமைகள் என்பதைத் தேர்ந்தெடுத்து அவை நிகழ்ந்த நாட்டைப் புலனாக வைத்து வகைப்படுத்தி இக்கட்டுரைகளை இயன்ற மட்டிலும் எளியவடிவில் கொடுக்கிறேன். இவ்வித வகைப்பாடு ஒரு வசதிக்குத்தான், ஏனெனில் பாணி, உத்திகள் ஆகியன பல நேரமும் நாட்டு எல்லைகளை மதித்து அடங்கி இருப்பதில்லை.  கலைஞரும் நாடு விட்டு நாடு மாறி வாழும் நிலைகள் ஏற்படுகின்றன.

ஓவியம் சார்ந்த இக்கட்டுரைகளை அவற்றுக்குரிய ஓவியங்களுடன் படிப்பதுதான் அவற்றைப்பற்றின முழுமையான புரிதலுடன் அமையும். நூலாக வெளியிடும் போது வண்ண ஓவியங்களை இணைப்பது, அதற்கு ஆகும் செலவால், தமிழில் எளிதில் இயலாது. இப்போது சொல்வனத்தில் தொடர் கட்டுரைகளாக, வண்ண ஓவியங்களுடன் வெளிவருவதில் எங்களுக்கு ப்பெரு மகிழ்ச்சி.

மேலை நாட்டில் நிகழ்ந்த நுண்கலை வளர்ச்சி மாற்றங்கள் கலை வரலாற்று ஆய்வாளர்களால் பொதுவாக ஏழாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை ஏறத்தாழ என்னும் வகைப்பாட்டிற்குத்தான் பொருந்தும். வரலாற்று வகைப்படுத்தல் என்பதே அத்தகைய நெகிழ்வு கொண்ட வகைப்படுத்தல்தானே?

அவையாவன:

01_Medievel Art—c.200–c.1430- (யூரோப்பிய வரலாற்றில்) மத்திய காலக் கலை
02_Renaissance Art—c.1300–c.1600(கலை-கலாச்சார மறுமலர்ச்சிக் காலம்)
03_Renaissance To Romanticism—c.1520–c.1830-மறுமலர்ச்சியிலிருந்து எழுச்சிக் காலத்துக்கான நகர்வு
04_Romanticism c.1790–c.1880- புத்தெழுச்சிக் காலக் கலை
05_Romanticism To Modern Art—c.1803—-1854- புத்தெழுச்சிக் காலத்திலிருந்து நவீனக் கலைக்கு நகர்வு
06_Modren Art 19th Century to 1970-நவீனக் கலை
07_Contemporary Art 1960 to Present- தற்காலக் கலை

இனி ருஷ்யாவிலிருந்து துவங்குவோம்.

ருஷ்யாவில் ஓவிய/கலை நிகழ்வுகள்

ருஷ்யாவில் ஓவிய/கலை நிகழ்வுகளென்பது 16/17ஆம்நூற்றாண்டுகளிலிருந்து வெளிச்சத்திற்கு வருகின்றன. அவை பற்றி இப்போது பார்ப்போம்.

01) ஸ்ரோகனோவ் பாணி (Stroganov School) (16th/17th Century)
02) பேராட்வீஷ்னிகி (Peredvizhniki) – 1870
03) அப்ராம்ட்சிவோ காலனி (Abramtsevo Colony) – 1870s
04) சிம்பொலிசம் (Symbolism) 1890
05) மிர் இஸ்குஸ்ட்வா (Mir Iskusstva) 1898
06) ரேயான்னிஸம் (Rayonism {Cubo-Futurism}) 1913
07) சுப்ரீமாட்டிஸம் (Suprematism)- 1913
08) கன்ஸ்ட்ரக்டிவிஸ்ட் ஆர்ட் (Constructivist Art) 1914
09) சோஷியலிஸ்ட் ரியலிஸம் (Socialist Realism) – 1917
10) யுனோவி (Unovis) (1919/1926)
11) சோவியத் நான்-கன்ஃபோர்மிஸ்ட் ஆர்ட் (Soviet Non-conformist Art)- 1953 / 1986
12) சோவியத் ஆர்ட் (Soviet Art) ஒரு பார்வை (1917to1991)

01
ஸ்ரோகனோவ் பாணி
(Stroganov School)
(16th/17th Century)

மிகப் பெரும்  செல்வந்தர்களான ஸ்ரோகனோவ் (Stroganov) குடும்பத்தினரின் தொழில் வர்த்தகம். 16 /17ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அக்குடும்பத்தினர் கலைப் பொருட்களை மிகுந்த ஆர்வமும் அக்கறையும் காட்டி விலைகொடுத்து வாங்கிச் சேமித்தனர். அப்போதைய ‘புனித உரு ஓவியங்கள்’ (Icon-Painting) என்று சொல்லப்பட்ட ஓவியங்களை அவர்கள் பெருமளவில் தமது இல்லத்தில் வாங்கிச் சேர்த்ததால் அந்த வழி ஓவியப்பாணிக்கு ஸ்ரோகனோவ் பாணி (Stroganov School) என்னும் பெயர் வந்தது.

அவ்வோவியங்கள் அக்கறை மிகுந்த, நேர்த்தி கூடிய தூரிகைக் கையாளலும், கண்களை உறுத்தாத இதமான வண்ணங்களும் கொண்டவை. அவற்றின் அடிப்படை  வண்ணக் கட்டமைப்பு மண்ணின் நிறம் (Earthy colours) சார்ந்ததாக இருந்தது. அவை அளவில் மிகவும் சிறியதாகவும், தங்க-வெள்ளிப் பூச்சுகளுடனும், திடமாகப் பூசப்பட்ட வண்ணங்கள் கொண்டதாகவும், மிக நுணுக்கமான விவரணைகளை உள்ளடக்கியதாகவும் அமைந்திருந்தன. அவற்றில் உருவங்கள் அமைந்த விதம் நளினம் கூடியதாக இருந்தது. உருவங்களின் உடைகளில் செல்வச் செழிப்பு வெளிப்பட்டது. சிக்கல்கள் கொண்ட அமானுஷ்ய நிலக் காட்சிகள் அவற்றின் பின்புலனாக இருந்தன.

ஆனால் அந்த ஓவியங்களைத் தீட்டிய பல ஓவியர்கள் இந்தப் பாணியில் வந்தவர் அல்ல. அவர்கள் மன்னன் ட்ஸாரின்(Tzar)  அரசவையில் தேவை கருதிப் ‘புனித உரு’ ஓவியங்களைப் படைத்தார்கள். தமது ஓவியங்களின் பின்புறம் (ஸ்ரோகனோவ்) Stroganov என்னும் சொல்லை எழுதி வைத்தனர். பின்னாளில் அது இப் பெயர் கொண்ட ஓவியப் பாணியாக வரலாற்றில் இடம் பெற்றது.

[DDET ஸ்ரோகனோவின் ஓவியங்களை காண இங்கே அழுத்தவும்]


[/DDET]

02
பேராட்வீஷ்னிகி
Peredvizhniki -1870-1923(?)

ருஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் (St.Petersburg) நகரில் அரசுக் கலை மையமான ‘செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அகாடெமி ஓஃப் ஆர்ட்ஸ்’ (St.Petersburg Academy of Arts) பின்பற்றிய கல்விமுறை மிகவும் சலிப்பூட்டுவதாகவும் காலாவதியாகி விட்டதாகவும் கருத்து எழத் தொடங்கிய காலத்தில் ஒரு ஓவிய நண்பர் வட்டம் அதை விமர்சித்துப் புதிய கலை வழிகளைத் தேடி, 1870இல் பேராட்வீஷ்னிகி (Peredvizhniki) என்னும் ஒரு அமைப்பைத் தோற்றுவித்தது. ‘அலைந்து திரிபவர்கள்’ அல்லது ‘நாடோடிகள்’ (The Wanderers) என்று பொருள்படும் அது. இவான் க்ராம்ஸ்கோய் (Ivan Kramskoy),ம்யாசொயெடொவ்(G.G. Myasoyedov), நிகொலாய் கியா (Nikolay Ge),  வாஸ்ஸிலி பெரோவ் (Vasily Grigorevich Perov) ஆகியோரின் கூட்டு முயற்சியால் ருஷ்யாவில் கலைஞர்களின் கூட்டுறவு சங்கம் (Artist’s Co-operative Society) அப்போதுதான் உருக்கொண்டது. அதன் தலைமைப் பொறுப்பில் ஓவியர் இவான் க்ராம்ஸ்கோய் சங்கத்தை வழி நடத்திச் சென்றார்.[1]

சங்கத்தின் வளர்ச்சிக் காலமான 1870 / 1890 களில் ஓவியர்கள் சுதந்திரமான யதார்த்ததை நோக்கி நகர்ந்தனர். முன்னர் வண்ணம் தீட்டும் முறையில் பின்பற்றப்பட்டு வந்த ஆழ்ந்த நிறத் தன்மையை (Dark palette) கைவிட்டு விட்டு ஒளியாய்த் தெரியும் வண்ணங்களைத் (Lighter palette) தேர்ந்தெடுத்தனர். ஓவியர்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தமது ஓவியங்களின் கருப் பொருளாக்கினர். அவற்றில் ஏழ்மையோடு, கிராமிய எழிலும் இருந்தது. மாந்தர் துயரத்தால் வாடுவது மட்டுமின்றி அவற்றை எதிர்கொள்ளும் மன வலிமையும் சித்திரிக்கப்பட்டது. அரசின் வரம்பற்ற அதிகாரம் கொண்ட ஆட்சிக்கு எதிரான, அடிமைத் தளையினின்றும் விடுதலைபெற நிகழ்த்திய புரட்சி போன்றவை ஓவியங்களில் பதிவு செய்யப்பட்டன. அத்துடன், நகர்ப்புறம் சார்ந்த ஏழை மக்களின் வாழ்க்கை அவலங்களையும் அவர்கள் ஓவியமாக்கினார்கள்.

நாட்டின் ஏறக்குறைய அனைத்து கலை இயக்கங்களும் சங்கத்துடன் இணைக்கப்பட்டன. உக்ரயீனா (Ukraine-Україна), லாட்வீயா (Latvia-Latvija), அர்மேனியா (Armenia) பகுதி ஓவியர்களும் இயக்கத்தில் இணைந்தனர். சங்கத்தின் வளர்ச்சியும், விரிவாக்கமும் ஆட்சிக்குத் தலைவலி கொடுத்ததால், அதை ஒடுக்கவும் அடக்கவும் ஆட்சி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே, அரசு சங்கத்தை அரவணைத்துக்கொண்டு கலை அமைப்பை வலுப்படுத்த முன் வந்தது. கலைப்பள்ளியின் பயில்விக்கும் பாடத் திட்டமிடுதலிலும் அது இடம்பெற்றது. பிந்தைய ஆண்டுகளில் இச்சங்கம் ருசியத் தொழிலாளர் புரட்சி இயக்கத்துக்கு ஊக்கமும் வலிமையும் கொடுத்தது. 1871 /1923 களுக்கு இடையில் சங்கம் நாற்பத்து எட்டுப் பயணக் காட்சிகளை (Mobile Shows) நிகழ்த்தியது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘இயல்பு வாழ்க்கையை முன் நிறுத்தும் இயக்கம்’ என்னும் அடையாளத்தை அது மெல்ல இழக்கத் தொடங்கியது. 1898 லேயே மீயர் இஸ்குஸ்ட்வா (Mir iskusstva) இயக்கம் இதைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, நவீன சிந்தனைகளுடன் வளரத் தொடங்கி விட்டது. பேராட்வீஷ்னிகியின் 48 வதும் கடைசியுமான ஓவியக் காட்சி 1923 இல் வைக்கப்பட்டது. பல ஓவியர்கள் சங்கத்திலிருந்து விலகி ‘புரட்சி ருஷ்யாவின் ஓவியர் குழு’ (Association of Artists in Revolutionary Russia)வில் தம்மை இணைத்துக் கொண்டனர். இந்தப் பிரிவினர் மக்களுக்கான அரசின் சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் ஓவியங்களைப் படைப்பதில் உண்மையான ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

[DDET பெரெட்விஷ்னிகியின் ஓவியங்களை காண இங்கே அழுத்தவும்]

pere_makovskiy_vladimir_peasant_children_1890
peredvizhniki-maksimov_division
pere-ge-truth
pere-perov_easter

[/DDET]

(தொடரும்)

_____________________________________________

[1] ரஷ்யக் கலைஞர் கூட்டுறவுச் சங்கம் என்ற Russian artists’ co-operative society இயக்கம் பற்றிய சில தகவல்களை இந்தத் தளத்தில் காணலாம். http://www.dartmouth.edu/~russ15/russia_PI/Russian_art.html