புற்றுநோய் சிகிச்சை: கனவு நனவானது

அதிகாலையில் தோன்றும் கனவு நனவாகும். என் பாட்டி இதை என்னிடம் சொல்லியிருக்கிறார். 2009-ஆம் ஆண்டு, Paediartic haematology மற்றும் oncology(childhood cancer) தொடர்பான ஒரு பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு, அடிலெய்டிலிருந்து சென்னை திரும்புகையில் நான் ஒரு கனவு கண்டேன். கழுத்து வீங்கிய ஒரு குழந்தையுடன் ஒரு தாய் நிற்கிறார். தொற்றுநோய்க்கான தொடர் சிகிச்சை பெற்ற அந்த சிறுவன், நான் பணியாற்றும் மருத்துவமனையில் என்னிடம் வந்து சேர்ந்தான். அங்கு அவன் lymphoma-வால்(cancer in lymph gland) பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அந்த சிறுவனுக்கு கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படவேண்டும். அவனது உடல் நிலையை PET எனப்படும் ஒரு உயரிய முறையை கையாண்டு அறிந்து கொண்டேன். இந்த PET முறை 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை செலவாகக் கூடியது.

அந்த தாய் வேலூரில் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்துபவர். அவரது மாதச் சம்பளம் ரூபாய் 800. அவர் கணவன் அவரை விட்டு ஓடிவிட்டான். அவர் வசிக்கும் சேரியில், குடிப்பதற்கு சுகதாரமான தண்ணீர் கிடைப்பதில்லை. முறையான கழிவுநீக்க ஏற்பாடுகளுமில்லை.

நான் அவரிடம் சொல்கிறேன், “நீங்கள் எது குறித்தும் கவலைப் பட வேண்டாம். இந்த மொத்த சிகிச்சையையும் இலவசமாகப் பெற முடியும். உங்களின் இந்த சிகிச்சைக்காக தன்னுடைய பணத்தை அன்பளிப்பாக வழங்கும் தமிழகத்தை சேர்ந்த அந்த நல்லிதயத்திற்கு நன்றி சொல்லுங்கள்.”

அவர் கண்களில் கண்ணீர் நிறைகிறது. விமானயின் குரலை கேட்டு விழித்துக் கொள்கிறேன். என் இருக்கை கட்டை விடுவித்துக் கொள்கிறேன்.

-o00o-

ஆனால நிதர்சனத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்திய குழந்தைகளின் நிலை என்ன?

(நம் நாட்டின்)ஒட்டு மொத்த புற்று நோயாளிகளில், மூன்று முதல் நான்கு சதவீதம் பேர் குழந்தைகள். மற்ற நோயாளிகளுடன் ஒப்பிடுகையில், பெரும்பாலான குழந்தைப் பருவ புற்று நோய்க்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை.

கடந்த சில வருடங்களில், முன்னேறிய நாடுகளில், குழந்தைப் பருவ புற்றுநோயாளிக்கான மருத்துவ வசதிகள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. உலகளவில் 70 முதல் 90 சதவீத குழந்தைப் பருவ புற்றுநோய்கள் குணப்படுத்தக் கூடியவையே. இந்தியாவில், ஒவ்வொரு வருடமும் 40,000 முதல் 50,000 நபர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 50 முதல் 60 சதவீத புற்றுநோய் பாதித்த குழந்தைகள் இறக்கின்றனர்.

பின்தங்கிய மருத்துவ வசதிகள்

புற்றுநோயை குணப்படுத்தும் மருத்துவ வசதிகள் இந்தியாவில் மிகவும் பின்தங்கியதாகவும், சிலருக்கு மட்டுமே கிட்டக் கூடியதாக இருக்கிறது. இதற்கான காரணங்கள் : பொருளாதார சிக்கல்கள், முறையான மருத்துவ வசதியின்மை, போதிய குழந்தைப் பருவ புற்றுநோய் மருத்துவர்கள் இல்லாதது மற்றும் அக்கறையற்ற சூழல். நோய் குறித்த காலம் கடந்த கண்டறிதல், நோயாளியை நோய் முற்றிய நிலையில் கொண்டு சேர்க்கும்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் இன்றும், பயிற்சி பெற்ற குழந்தைப் பருவ குருதியியல் (haematology) மற்றும் புற்றுநோய்வியல் (oncology) மருத்துவர்களின் சிகிச்சைக்கு ஆளவதில்லை. இந்தியா மொத்தமும் குழந்தைப்பருவ புற்றுநோய்வியலில் பயிற்சிபெற்ற மருத்துவர்கள் நம்மிடம் நூறுக்கும் குறைவாகவே உள்ளனர். நம்முடைய மருத்துவ கல்லூரிகளிலும், மருத்துவமனைகளிலும் குழந்தைப் பருவ குருதியியல் மற்றும் புற்றுநோய்வியலுக்கான துறைகளே இன்னும் உருவாக்கப்படவில்லை.

புற்றுநோயை முன்கணிக்கத் (prognosis) தேவையான flow cytometry மற்றும் cytogenetics போன்ற மருத்துவ வசதிகள் பல மருத்துவமனைகளில் இருப்பதில்லை. மருத்துவ பணியாளர்களும்(nurse) குழந்தைப் பருவ புற்றுநோய்வியல் குறித்த முறையான பயிற்சிபெற்றிருக்கவில்லை. தொற்றுநோய்களும், ஊட்டச்சத்து குறைபாடும் குழந்தைப்பருவ புற்றுநோய்க்கான வாய்ப்புகளை இன்னும் அதிகரிக்கின்றன.

ஒரு குழந்தை புற்றுநோய் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வரும் போது குடும்பத்தில் பெரும் சிக்கல் தோன்றுகிறது. பல நோயாளிகளுக்கு அது மரண சாசனமாகவே ஆகிவிடுகிறது. நோயால் பாதிக்கப்பட்டதை அறிய வரும் போது அவர்களின் முதல் எதிர்வினை: பீதி, பயம், அவநம்பிக்கை மற்றும் அக்கறையின்மை. சுமார் 10 சதவீத பெற்றோர்கள் பெரும் மன அழுத்ததிற்கு ஆளாகின்றனர்.

மேற்கத்திய நாடுகளில் நிலவும் மருத்துவ வசதிகள் அபாரமானவை. அவர்களிடம் மருத்துவ சிகிச்சை தொடங்கும் முன்பே மேற்கொள்ளப்படும் ஆய்வுக்கான முறையான செயல்பாடுகளிலிருந்தே துவங்குகின்றனர். மருத்துவ சிகிச்சை கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சையை உள்ளடக்கியதாக இருக்கிறது. சிகிச்சையை தொடர்ந்து, இத்தகைய பெரும் துன்பத்திலிருந்து மீண்டு வர, நோயாளியின் குடும்பத்துடனான கலந்துரையாடலும் சிறப்பாக நடைபெறுகிறது. சிகிச்சைக்கான செலவை மருத்துவமனை, அரசாங்கம் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு உதவக்கூடிய தனியார் அமைப்புகளும் பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்தியாவில் கதையே வேறு. Lymphoma போன்ற வியாதியால்(Hodgkin’s அல்லது Burkitt’s வகை) பாதிக்கப்பட்ட குழந்தைகள் எப்போதும் காசநோயாக்கான அறிகுறிகளையே வெளிப்படுத்துவர். ஆகையால் இவ்வகை வியாதிகளை ஆரம்பநிலையிலேயே கண்டறிய முடியாது. மேலும், இந்த வகை வியாதிகள் leukaemia போன்ற வியாதிகளிலிருந்து மாறுபட்டவை. இத்தகைய வியாதிகளால் பாதிக்கப்படும் சிறு குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கான சிகிச்சையை மேற்கொள்ள காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை ஒரு செயல்திட்டத்தை மேற்கொள்கிறது. நல்லிதயம் படைத்த மனிதர்கள் மூலம், இச்சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்த செயல்திட்டம், சிகிச்சைக்கு முன்பான மருத்துவ ஆய்வுகள், கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, பிறிது குருதியேற்றம்(blood transfusions), மற்றும் நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை உள்ளடக்கியது. சிகிச்சையின் போது குழந்தை நோய்தொற்றுக்கு ஆளானால், அதற்கு தகுந்த சிகிச்சையும், தகுந்த குழந்தைப் பருவ குருதியியல் மற்றும் புற்றுநோய்வியல் மருத்துவரின் மேற்பார்வையில் சிகிச்சைக்கு பிந்தைய செயல்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் ரூபாய் 2 முதல் 3 லட்சம் வரை செலவாகக் கூடிய இந்த மொத்த சிகிச்சையும் இந்த செயல்திட்டத்தின் மூலம் இலவசமாக அளிக்கப்படுகிறது.

நம் நாட்டில், புற்றுநோய் பாதித்த குழந்தைகளை கவனிக்க நாம் மிகவும் சிரமப்படுகிறோம். அவர்களுக்கான மருந்துகளை கண்டறிவது கூட பெரும் கஷ்டம். ஆதலால், flow cytometry, cytogenetics, MIBG மற்றும் PET போன்ற அதிநவீன முறைகளை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. மேலும், புற்றுநோய் பாதித்த குழந்தைகள் எதிர்கொள்ளும் உளவியல் சார்ந்த சிக்கல்களை தீர்க்க சிகிச்சை காலத்தில் தகுந்த குறுந்தகடுகளை பார்க்க ஊக்குவிக்கப்படுகின்றனர். இது போன்ற நிலையை நம்மால் கற்பனை கூட செய்ய முடியாது.

கனவு நனவானது

ஆனால் இப்போது, நான் கண்ட கனவுகளில் ஒன்று நனவாகியுள்ளது.

ஹரிசந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பொருளாதாரத்தில் நலிந்த குடும்பத்தை சேர்ந்தவர். Burkitt’s Lymhoma எனும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டாட். இவரது நோய் அறியப்பட்ட போதே, இவரது எலும்பு மஜ்ஜை வரை அந்த நோய் பரவியிருந்தது. அவரது சிகிச்சைக்கு ரூ.3 முதல் 4 லட்சம் வரை தேவை(ஆறு மாதங்களுக்கு). பொருளாதார வசதிபடைத்தவர்களை தவிர்த்து, PET போன்ற சிகிச்சை வசதிகள் பல்வேறு மருத்துவமனைகளின் சிகிச்சைப் பட்டியலில் இருப்பதில்லை.

ஆனால் காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையில், என்னுடைய மேற்பார்வையில், Lymphoma செயல்திட்டத்தின் படி ஹரிச்சந்திரனுக்கு முழு சிகிச்சையும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அவன் நல்லபடி தேறி வருகிறான்.

ஆனால் இந்த ஒரு செயல்திட்டம் மட்டும் போதாது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் உதவுவது ஒரு மனிதனின் அல்லது ஒரு மருத்துவமனையின் பொறுப்பு மட்டுமல்ல. அது சமூகத்தின் மனிதத்தை நேசிக்கும் நல்லோர்கள், ஒத்த கருத்துடைய மருத்துவர்கள் மற்றும் எல்லாம் வல்ல இறைவன், இவர்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியப்படும்.

நாம் அனைவரும் கை கோர்த்து இந்த குழந்தைகளுக்கு உதவுவோம்…

நாமனைவரும் இணைந்து நம்மால் ஆனதை செய்வோம்.

[கட்டுரையாளர் ஸ்ரீராமசந்திரா மருத்துவ மையத்தின்(போரூர், சென்னை) குழந்தைப் பருவ குருதியியல் மற்றும் புற்றுநோயியல் துறையின் தலைவராகவும், துணை-பேராசிரியராகவும் பணிபுரிகிறார். மேலும், காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனையின்(சென்னை) குழந்தைப் பருவ குருதியியல் மற்றும் புற்றுநோயியல் மருத்துவராக பணிபுரிகிறார். இவரது அஞ்சல் முகவரி : jxscott@hotmail.com. ‘தி ஹிந்து’வில் வெளியான கட்டுரையைப் படித்துவிட்டு இவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். உற்சாகமாகப் பேசி, காட்டுரையின் தமிழ் வடிவையும் சொல்வனத்தில் வெளிவரும்படி தந்துதவினார். அவருக்கு எங்கள் நன்றிகள்.” ]