இந்த உலகம் நம்மிடம் வந்து நான் இப்படி இருக்கிறேன், என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதில்லை. நமக்குக் கிடைக்கும் பல்வேறு தகவல்களை நாம் வகை பிரித்து இது இது இன்ன இன்ன மாதிரி இருக்கிறது என்று அறிகிறோம். ஒரு வகையில் இதை வாசிப்பு என்று சொல்லலாம். ஒரு பாடல் இசைக்கப்படுவதில் இசைக் கலைஞனின் வாசிப்பு இருக்கிறதென்றால், அதை செவி மடுப்பவனின் வாசிப்பும் அதன் விவரிப்பில் இருக்கிறது. நாம் எல்லாரும் அதை வெவ்வேறு தளங்களில் ரசித்தாலும், பொதுவாக இன்னதுதான் இசைக்கப்பட்டது என்று நம்மிடையே ஒரு கருத்தொருமிப்பு உள்ளது. அந்த இசையை இயற்றியவன், தன் ரசிகர்களின் நுண்ணறிவுக்கு ஏற்ப அவர்களின் வாசிப்பு தன் வாசிப்பை ஒத்துப் போகிறது என்று ஏற்றுக் கொள்ளக் கூடும். ஆனால் எவ்வளவுதான் பேசினாலும், கலைஞனின் வாசிப்பை ரசிகனின் வாசிப்பு தொடுவதில்லை என்று சொல்லலாம்- ஒரு இசையின் வாசிப்புக்கு சரியான எதிர்வினை இசை வடிவில்தான் இருக்க முடியும்.
பரந்து விரிந்து கிடக்கிற இந்த உலகம் இயங்கிக் கொண்டே இருக்கின்ற ஒன்று. அதை நாம் நம் அறிதலால், நம் வாசிப்பால் வகைப்படுத்தி நிலை நிறுத்தி வைக்க முயற்சி செய்கிறோம். இசை குறித்து ஏற்படுகிற ஒத்த கருத்துதான் அதன் வடிவைக் குறித்த தீர்மானத்துக்கு வழி செய்கிறதென்று சொன்னால், இந்த உலகம் குறித்த வாசிப்பை உறுதி செய்வது எது? நாம் இந்த உலகிடம் கேட்கிற கேள்விகளுக்கு நாம் எதிர்பார்க்கிற விடை அதனிடமிருந்து திரும்பத் திரும்பக் கிடைக்கும்போதுதான் அது நிகழ்கிறது. ஆனால் அந்த விடை கூட நம் அனுமானங்கள் முற்றிலும் நம்பத்தகுந்ததெனத் தீர்மானிக்கப் போதுமானதாக இருக்குமென்று சொல்வதற்கில்லை. சூழல் மாறும்போது இயற்கையிடமிருந்து வருகிற விடையும் மாறக்கூடும். அந்த நிலையில் நாம் நம் அனுமானங்களை மாற்றிக் கொள்கிறோம்- உலகின் இயல்பை மறு வாசிப்பு செய்ய வேண்டியதாகிறது. மாறிய சூழலைக் கணக்கில் கொண்டு செய்வதால், இதைப் புதிய வாசிப்பு என்று கூட சொல்லலாம், ஆனால் நாம் சூழல் மாறி விட்டதைக் காரணமாகக் கொண்டு, உலகின் இயல்பு மாறி விட்டதாக நினைப்பதில்லை. புதிய தகவல் கிடைத்திருக்கிறது, அதன் வெளிச்சத்தில் மறு வாசிப்பு செய்கிறோம் என்றுதான் கருதுகிறோம்.
ஏதோ மனிதர்களாகப் பிறந்து விட்ட நாம்தான் வாசிக்கிறோம் என்றில்லை. அணுத்துகள்கள் ஒன்றையொன்று வாசிக்கின்றன, அவற்றின் சுழற்சி தொடங்கி பெளதிகத்தில் ஒவ்வொன்றும் வாசிக்கப்படுகின்றது. கணத்துக்கு கணம் இந்த வாசிப்பு நிகழ்ந்து உலகின் முச்செயல்களாக மொழிபெயர்க்கப் படுகிறது. நம் உடலில் உள்ள புரதங்கள் வாசிக்கப்படுகின்றன- அந்த வாசிப்பே உடலின் இயக்கமாய் பரிணமிக்கிறது. இவையெல்லாம் இந்தக் கணிப்பொறி மின் சமிக்ஞைகளைப் வாசித்து எழுத்துருக்களாக மொழிபெயர்ப்பதுபோல் இயல்பாய் நிகழ்கின்றன. ஆனால் என்ன ஒன்று, உலகின் வாசிப்பு நம்மால் வடிவமைக்கப்படாத ஒன்று, எந்திரங்களின் வாசிப்பு நம்மால் வடிவமைக்கப்பட்ட ஒன்று.
இந்த இரண்டு வாசிப்புகளும் பொருளற்றவை. உலகின் வாசிப்பு அனைத்துப் பொருளையும் தன்னுள் பொதித்து வைத்திருக்கிறது, தன் வாசிப்பின் வழி, தன்னைத் தன் வாசிப்பின் மொழியில் வெளிப்படுத்துகிறது. வாசிப்புக்கும் வெளிப்பாடுக்கும் இடையில் அவற்றுக்கு அன்னியமாய் எதுவும் இல்லை. யந்திரத்தின் வாசிப்பில் பொருள் குறித்த உணர்வு கிடையாது- அதைப் பொருளிலி என்று சொல்லலாம். மனித மனம் மட்டுமே தன் வாசிப்பில் வாசிக்கப்படுவதற்கு அப்பால் ஒரு பொருளைத் தேடுகிறது. பெரும்பாலும், இன்ன காரணம் அதன் விளைவாக இன்ன காரியம் என்ற அடிப்படையிலேயே இந்த வாசிப்பு நிகழ்கிறது. நாம் இத்தகைய வாசிப்பைத் தெரிவு செய்வதற்கு முக்கியமான காரணம், இது பயனுள்ளதாக இருக்கிறது என்பதுதான். வினை-விளைவு என்ற வாசிப்பு நாம் அனுமானித்த விளைவுகளைக் கொடுக்கும் என்று நம்பத்தகுந்ததாக இருக்கின்றது. இவ்வகை வாசிப்பில் ஒரு சட்டகத்தில் தொகுக்கப்பட முடியாத வாசிப்புகளை நாம் பொருட்படுத்துவதில்லை, அதற்கான அவசியம் அச்சுறுத்தலாக அமைந்தாலொழிய.
இந்த வாசிப்புகளை ஒரு உரையாடலாக நினைத்துப் பார்ப்போமானால், இன்று அரங்கேற்றப்படுகிற சுற்றுச் சூழல் சீர்கேட்டை இப்படி சொல்லலாம்- இயற்கையின் வாசிப்பை எந்திரங்களின் உதவியோடு மனிதனின் வாசிப்பு மாற்றியமைக்கத் துவங்கி விட்டது என்று கருத இடமிருக்கிறது. ஒரு கச்சேரியில் விமரிசகன் ஒருவன் ஒலிபெருக்கியைக் கையில் வைத்துக் கொண்டு வாசிப்பின் இடையே உரத்த குரலில் பேசி, சங்கீதத்தின் போக்கைத் தன் விருப்பத்துக்கேற்ப மாற்றியமைப்பது போன்றது இது. இதில் ஒத்திசைவு நிகழ்வதற்கான சாத்தியம் மிகக் குறைவே.
இதற்கு என்ன காரணம் என்று யோசித்தோமானால், மனிதன் வினை-விளைவு என்ற அடிப்படையைப் பிரதானமாக வைத்துக் கொண்டு தன் வாசிப்பை நிகழ்த்துவதுதான் என்று சொல்லலாம்- அதற்காக அவன் தனக்குக் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் ஒரு கூறாகத் தொகுக்க வேண்டியிருக்கிறது: இதில் தகவல் பிழைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. தவிர, வாசிப்பே வெளிப்பாடாக இருக்கிற சூழலில் பொருள் குறித்த தேடல் அந்நியமான ஒன்றாகவே இருக்கிறது.
நாம் இயற்கை என்று சொல்கிற சூழியலில், வாசிப்புக்கும் வெளிப்பாடுக்கும் வேறுபாடில்லை. இதில் மனிதன், தன் பொருள் நோக்கிய பார்வையின் வாசிப்பை இடையூடாகத் தருகிறான். அதற்கு, எந்திரங்களைப் பயன்படுத்திக் கொள்கிறான். இந்த எந்திரங்கள் அவனது நோக்கத்தை பிரதி எடுப்பனவாகவே செயல்படுவதால், தகவல் பிழைகள் நிரவிய மனிதனின் வாசிப்பு பன்மடங்காய்ப் பெருகி இயற்கையின் வாசிப்புக்கு சூழியலில் நிகழக்கூடிய ஒத்திசைவைச் சீரழிப்பதாக உள்ளன என்று சொல்லலாம்.
-o00o-
சொல்வனத்தில் ராமன் ராஜா அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்படும் ’காலனி கொலாப்ஸ் டிஸ்ஆர்டர்’ (CCD) குறித்து ஒரு அருமையான கட்டுரை எழுதியிருந்தார். கண்ணுக்கெட்டிய வரை ஒரே பயிரை வளர்க்கும் மோனோ கல்ச்சர் முறை, மிகையான உர உபயோகம், தேனீக்களை நாடெங்கும் இடம் மாற்றி மாற்றிக் கொண்டு போய் அலைக்கழித்தல், அவற்றுக்குப் புகட்டப்படும் மருந்துகள் எல்லாம் சேர்ந்து மகரந்தச் சேர்க்கைக்கு மிக முக்கியமான காரணியாக இருக்கும் தேனீக்களை கூட்டம் கூட்டமாகக் கொலை செய்கின்றன என்று பொருள்பட எழுதி இருக்கிறார்.
நினைத்துப் பாருங்கள்- ஒற்றைப் பரிமாண சிந்தனையில், எப்பாடு பட்டாயினும், குறைந்த செலவில் மிகுந்த உற்பத்தி என்ற நோக்கில், அதற்கேற்ற வகையிலான வினை-விளைவு பார்வையை மனிதன் மேற்கொண்டதுதானே இதற்கு முக்கியமான காரணமென்று சொல்ல முடியும்? அரசியல், பொருளாதார, சமூக சித்தாந்தங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், இந்த வினை-விளைவு கோணத்தில் மட்டும் சிந்திப்பது என்பது அழிவையே தருவதாக உள்ளது. அதை வெவ்வேறு இடங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
ராமன் ராஜா எழுதுகிறார், “மிகப் பெரிய ஏரியாவில் ஒரே ஒரு வகைப் பயிர்தான் என்றால் தேனீக்களுக்கு ஒரே வகை மகரந்தம்தான் கிடைக்கிறது. தங்களுக்குத் தேவையான ப்ரோட்டினை அவை மகரந்தத்திலிருந்துதான் பெறுகின்றன. பல வகைப்பட்ட தாவரங்களின் மகரந்தத்தைச் சாப்பிட்ட தேனீக்கள் ஆரோக்கியமாக வளர்கின்றன என்பதையும், ஒரே வகை உணவை வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டு வளர்ந்த தேனீக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்துவிடுகிறது என்பதற்கும் பல ஆராய்ச்சி முடிவுகள் சாட்சி இருக்கின்றன,” என்று.
நாம் இன்ன வினைக்கு இதுதான் காரணம் என்று கற்பிப்பது எப்போதும், எந்நிலையிலும் சரியாக இருக்கும் என்பது உறுதியில்லை. அத்தகைய வாசிப்பு தவறாக இருக்கும் போது, எவ்வளவுக்கெவ்வளவு நம் வாசிப்பு உறுதியாக இருக்கிறதோ, எவ்வளவுக்கெவ்வளவு அதன் நம்பகத்தன்மையில் நாம் முதலீடு செய்திருக்கிறோமா, அவ்வளவுக்கவ்வளவு பேரழிவை சந்திக்க வேண்டி வரும். அரசியல் இயக்கம் குறித்த புரிதலிலும் இதுதான் நடந்தது – ஜெர்மனியில். பொருளாதார கோட்பாடுகளை நிலை நிறுத்தியபோதும் இதுதான் நடந்தது – ரஷ்யாவில். சமூகவியலில் இத்தகைய போக்கைக் கண்மூடித்தனமாக நிகழ்த்தியபோதும் இதுதான் நடந்தது – சீனாவில். இன்று தொழிற்சாலை உற்பத்தியை, அது சார்ந்த அறிவுநுட்ப வளர்ச்சியை மட்டும் அறிவியல் என்று கருதி அந்த இயக்கத்தைப் பேரளவில் வாழ்க்கை முழுதும் நடைமுறைப்படுத்தும் பார்வை சூழியல் அழிவின் விளிம்பில் பூமியைக் கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது – மேலை நாடுகளின் தயவால். மேற்கையே உலகுக்கு வழிகாட்டி என்று நினைத்து விமர்சனமோ எதிர்ப்போ இன்றிப் பின்செல்லும் மற்றைய நாட்டு கைப்பாவைகளும் குற்றத்தை ஏற்க வேண்டியவரே.
தேனீக்களின் அழிவு இதன் ஒரு சிறு கூறுதான்.
ஏதோ இது நமக்குத் தொடர்பில்லாத ஒன்று என்று நினைப்பதற்கில்லை – இந்தியன் எக்ஸ்பிரஸில் சரஜித் மஜூம்தார் இரண்டாம் பசுமைப் புரட்சி என்ற பெயரில் இந்தியாவும் மேலை நாடுகளின் விவசாய முறைகளைக் கடைபிடிக்க முனையும் போக்கைக் குறித்து எழுதியிருப்பது கவனிக்கத்தக்கது. நமது விவசாய முறைகளின் வேர்கள் கெல்லிப் போடப்படும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. கட்டுக்கடங்காமல் வளரும் மக்கள் தொகைக்குத் தேவையான உணவை நவீனமயமாக்கம் இல்லாமல் உற்பத்தி செய்வது இயலாத காரியம் என்று சொல்கிறார்கள். உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டி, நமது பயிர் வளம் அழிக்கப்பட்டு அறிவியல் சாதனங்களின் துணையோடு வடிவமைக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்தான் விவசாயத்தின் எதிர்காலமாக இருக்குமா என்றுத் தெரியவில்லை.
அப்படி இருக்குமெனில், அது மனிதனல்லாத மற்ற உயிர்களுக்கு எத்தகைய இழப்பை உண்டாக்கும் என்று சொல்வதற்கில்லை. அத்தகைய உயிரிழப்பு மனிதனுக்கே எத்தகைய அச்சுறுத்தலாக இருக்கும் என்பதையும் தீர்மானிப்பதற்கில்லை. மேலே சுட்டிக் காட்டிய தேனீக்களின் பேரழிவு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில்தான் இதுவரை நிகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இதுவரை எந்த குறிப்பிட்ட உயிரியையும் நோய்க்காரணமாக சொல்லவியலாத நிலையில் அவர்களின் விவசாய முறைகளும் இந்த அழிவுக்குப் பெரும் காரணமாக இருக்கலாம் என்பதும் ஏற்கத்தக்கதே. இந்தப் பேரழிவுக்கான காரணங்களில் நவீன காலத்தின் அச்சுறுத்தல்கள் அனைத்தையும் பட்டியலிட்டிருக்கிறார்கள்- தடுப்பூசி ஒன்று மட்டும்தான் இதில் தப்பிப் பிழைத்திருப்பது போல் தெரிகிறது.
இந்தியாவில் இத்தகைய விவசாய முறை எத்தகைய பின்விளைவை உண்டாக்கும் என்று சொல்வதற்கில்லை. இந்த மாதிரி விஷயங்களில் சூடான செய்திகள் மேலை நாடுகளிலிருந்துதான் கிடைக்கின்றன. நமது செய்தி ஊடகங்கள் பெரும்பாலும் ஏற்கனவே உள்ள மனச்சாய்வுகளை இன்னும் இறுக்கமாகக் கட்டமைப்பனவாகவே உள்ளன, அப்படி இல்லாதவை மேலை மொழிகளில் உள்ள செய்திகளைப் பிரதி எடுப்பனவாக இருக்கின்றன. கடைசித் தேனீ இறந்த பின்தான் இதற்கான காரணிகளை நாம் பேசத் துவங்குவோம் என்று தோன்றுகிறது. அதற்குக்கூட மேலை நாட்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளில் நம்மவர்கள் ஆதாரம் தேடக் கூடும்.
பட்டினிச்சாவுகள் மற்றும் புயல், மழை போன்ற பேரழிவுகள், தீவிரவாதப் போக்குகள், ஊழல் அரசியல் விவகாரங்கள் – இவற்றுக்கு நம் ஊடகங்களில் கிடைக்கிற முக்கியத்துவம் வேறு விஷயங்களுக்குக் கிடைப்பதில்லை. அண்மையில் நாராயணன் கிருஷ்ணன் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மதுரையில் உள்ள இருக்க இடம் இல்லாத ஏழை எளியவர்களுக்கு உணவளிப்பது முதலான சேவைகளை இந்த இளைஞர் எட்டு ஆண்டுகளாக செய்து வருகிறார். ஆனால் இவரைப் பற்றி இந்த எட்டு ஆண்டுகளில் ஒன்பது கட்டுரைகள்தான் தமிழில் வந்திருக்கின்றன. ஆங்கிலத்தில் பதினோன்று. சிஎன்என் தொலைக்காட்சி இவரை இந்த ஆண்டுக்கான டாப் டென் நாயகர்களில் ஒருவராக அங்கீகரித்ததைத் தொடர்ந்து எல்லாரும் விழித்துக் கொண்டு விட்டது போல் தெரிகிறது. இதை எல்லாம் பார்க்கும்போது நாம் மேலை நாட்டினரின் செய்தி வர்த்தககத்தில் நாம் இடைத்தரகர்களாக இருக்கிறோம் என்ற எண்ணம் எழுகிறது.
நமது வாசிப்பு நம் சூழலை நம் பார்வையில் நிகழ்த்துவதாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. நாமும் மேலை நாட்டினரின் தொழில்நுட்பப் பார்வையை அறிவியல் சார்ந்தது என்ற பிரமிப்பில் கேள்வி கேட்காது ஏற்றுக் கொண்டு விட்டோம். இந்தப் பார்வை நம் சூழலிலிருந்து நம்மைப் பிரித்து, சூழலை நம் தேவைகளுக்குத் தக்க வகையில் ஆண்டனுபவிக்க உதவும் குறைப் பார்வைதான் என்ற பிரக்ஞை நம்மிடம் இல்லை. அதுதான் போதாதென்றால் அதனால் ஏற்படும் கேடுகளைக் கூட அவர்களின் மொழியிலேயே எதிரொலிக்கிறோம். வினை-விளைவு நோக்கிய ஆய்வு, பகுப்புகளை மறுதலித்து தொகுப்புகளை மட்டும் கணக்கில் கொள்ளும் போக்கு, இவை போன்ற ஒற்றைப் பரிமாண வாசிப்புகளில் உள்ள ஆபத்தைக் குறித்த விழிப்புணர்வு நமக்கு இருக்க வேண்டும்.
எத்தனையோ விஷயங்களை சுட்டலாம். ஏன் என்று எதுவும் கேட்காமல் நாம் மேலை நாட்டின் தொழில் நுட்பப் பார்வையை கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வதும், அதில் உள்ள ஆபத்துகளை அவர்கள் கண்டறிந்த பின்னரே நாம் விழித்துக் கொள்வதும் அனைத்து துறைகளிலும் நடைபெறும் ஒன்றே. மருத்துவம், விவசாயம் குறித்த நம் பாரம்பரிய அறிவு இன்று தினமும் மறக்கப்பட்டு வருகிற ஒன்றாகி வருகிறது. அவை ஆவணப்படுத்தப்படுகின்றன என்றாலும் அதன் பின்னணியில் நமக்கு நம் பாரம்பரியம் குறித்த புரிதலோ பெருமையோ இல்லை என்பது கண்கூடு. அப்படி ஒன்று இருந்திருப்பின் நாம் அவற்றைப் புறம்போக விட மாட்டோம்.
ஒரு குறிப்பிட்ட சூழியல் அதில் இருப்பவர்களை உள்ளடக்கிய ஒன்று. தங்கள் சூழியலை ஒட்டி அதை மட்டும் அறிந்து வாழ்பவர்களின் புரிதலில் ஏராளமான குறைகள் இருக்கலாம். அறிவியல்-தொழில்நுட்ப அறிவின் அடிப்படையில் நிகழ்த்துகிற புரிதல் பெரும்பாலும் சரியானதாகவே இருக்கலாம். இருப்பினும், தாங்களே இருந்து அனுபவிப்பவர்கள் என்ற வகையில் பாரம்பரிய அறிவு என்பது, தொழில் நுட்ப அறிவை விட சூழியலில் குறைவான சிதைவுகளையே உண்டாக்கக் கூடும்: மலைகளின் வளங்களை பெருமளவுக்கு ஈட்டி அவற்றை வாழ்வதற்கில்லாத பொட்டல் வெளிகளாய் மாற்றுவதென்பது அந்த சூழியலுக்கு அந்நியனாய், அதனோடு ஒட்டுறவில்லாத வாசிப்பைப் பழகிய ஒருவனால்தான் இயலும். நாம் அனைவரும் அத்தகையவர்களாக மாறி வருகிறோம்.
மனிதன் தன் சூழியலை ஒட்டி வாழப் பிறந்தவன்- அதை நீங்கி அவனால் நலமாக வாழ முடியாது என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். எப்படி வன விலங்குகள் ஒன்றை ஒன்று சார்ந்தது இருக்கின்றனவோ, அப்படியே உடலளவில் கூட மனிதனுக்கு கிருமிகளும், புழுக்களும்கூட அவனது ஆரோக்கியத்துக்கு அவசியமாக இருக்கிறது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். பரிணாம வளர்ச்சியில் மனிதன் இவற்றின் துணையோடுதான் வளர்ந்திருக்கிறான், இன்று ஆரோக்கியம் என்ற புரிதலில் தூய சுகாதாரச் சூழலை அவன் தன்னைச் சுற்றிக் கட்டமைக்கத் துவங்கிய காரணத்தால்தான் மேலை நாடுகளில் வளரும் நாடுகளை விட அதிக அளவில் ஆஸ்த்மா, அலர்ஜி, ரூமோட்டாய்ட் ஆர்த்ரிடிஸ் போன்ற auto immune நோய்கள் பெருமளவில் அதிகரித்து காணப்படுகின்றனவா என்ற கேள்வி குறித்து மருத்துவ ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வகை நோய்களை குணப்படுத்திக் கொள்ள வேண்டி அமெரிக்காவில் இருந்து காமரூன் போன்ற சுகாதார வசதி இல்லாத நாடுகளின் மலக்குழிகளில் வெறுங்காலோடு நடந்து புழுக்களைத் தம் உடலில் தருவித்துக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள் என்ற விபரீதமான செய்தி கூட கிடைக்கிறது. இந்த விஷயத்தின் உண்மை எவ்வளவு என்று தெரியவில்லை- இந்தக் கோட்பாடுகூட அறிவியல் பார்வையில் நிரூபணமாகி நிலை நிறுத்தப்படுமா என்று தெரியவில்லை. ஆனால் தன் உடலின் சூழியலில் கிருமிகள் முதற்கொண்டு புழுக்கள் வரை பல உயிரிகளின் தயவால்தான் மனிதன் வாழ்கிறான் என்ற செய்தி சூழியல் குறித்த பார்வையின் அவசியத்தை நினைவுறுத்துவதாகவே உள்ளது.
சூழியலில் இருந்து கூறுபட்ட, அதை எதிர்க்கும் நோக்கமே கொண்ட, லாபத்துக்கு மனித நலத்தைக் காவு கொடுக்கத் தயங்காத தொழில்நுட்பம் அனைத்து விடைகளையும் தந்து விடாது. அறிவியல் என்ற பெயரில் வினை-விளைவு வகைப்படுத்தல் பயன் தருவதாய் இருக்கலாம், ஆனால் அத்தகைய வாசிப்பு சூழியலைக் கருத்தில் கொள்ளாத வரை முழுமையான அறிவாக இருப்பது நிச்சயமில்லை. அதிலும், எந்தக் கேள்விக்கும் இடம் தராமல் மாற்றுப் பார்வைகளை மிரட்டி ஒடுக்கும் ஒற்றைப் பார்வை ‘அறிவியல்’ என்ற பிரமையோடு கை கோத்துக் கொண்டு செயல்படும்போது அது அனைத்தையும் அழித்து, தனக்கும் அழிவு தேடித் தரும் கொலைக் கருவியாகவே மாறி விடுகிறது.
http://seedmagazine.com/content/print/yellow_black_and_blues/
http://www.living-farms.org/site/media-/news-articles/newsclipping/1794
http://www.akshayatrust.org/press.php
http://heroes.cnn.com/vote.aspx
http://www.spectator.co.uk/essays/all/6296648/gut-reaction.thtml
2 Replies to “விளிம்பில் உலகம்”
Comments are closed.