ரோந்து

pawprintredபோயனுக்கு வயது பத்தாகும்போது, அவன் அப்பாவுக்கு ராணுவத்தில் ரோந்துநாய் ஒன்றையும் அளித்தார்கள். கெய்சர் அதன் பெயர். அந்தக் கோடையில் அப்பா யுத்தகளத்தில் இருந்து திரும்பியபோது, அதைத் தன்னுடன் அழைத்து வந்தார்.

போயன், நாய் எதனுடனும் பழகியது கிடையாது. ராணுவ முகாம்களுக்கு அப்பா போய்விட்டால், நகரத்தின் வடகோடி பிராந்தியத்தில் வேலைக்கார ஆயாவுடன் இருந்துகொண்டான். எலுமிச்சை மரங்களின் நிழலாடிய தெருவில் மூணுதலைமுறை பாத்தியதை கண்ட அவர்களின் வீடு இருந்தது. ஆயாக்காரி திருமதி சென்கா உடல்தளர்ந்து போனவள். பிசிர் பிசிரான கயிறைப் போல் இருந்தது அவளது உலர்ந்த மஞ்சள் கேசம். பெரும்பாலும் அவள் பேசுவதே கிடையாது. ஞாயிறுகள் விதிவிலக்கு. தன் சாதிசனப் பெண்களுக்காக அப்போது விருந்து தயாரிப்பாள். வீட்டுக்கு நாய் வருகிறதில் போயன் கிளர்ச்சியடைந்திருந்தான் என அவள்மனசில் பட்சி சொல்லியது. அவள் அவனை நூலகம் அழைத்துப்போனாள். நாய்களின் கலப்பின வகைகள் பற்றி அவனை அறிந்துகொள்ள வைத்தாள். ஒரு கசாப்புக்காரனைக் கூட அறிமுகம்செய்து வைத்தாள். நாய்க்கு ஏதும் எலும்பு போடவிரும்பினால், அதை அவனே தேர்வுசெய்யலாம்…

ரோந்துநாய் முன்பக்கம் கம்பிபோட்ட மரப்பெட்டியில் வந்துசேர்ந்தது… ரயில்பெட்டியில் இருந்து அப்பாவுடன் அது இறங்கியது இன்னமும் அவன் நினைவில் இருக்கிறது. அந்தப் பெட்டியின் உள்ளே இருளாய்க் கிடந்தது. அவன் நினைத்ததை விட பெரிய நாய். தோள்வரை மூணடி சுமார். அகலமான மண்டை. பரந்த கால்கள். சப்பளிஞசாற் போன்ற, பெயின்ட் அடிச்ச மாதிரியான கரிய முகம். கீழ்த்தாடையில் தொளதொளத்துத் தொங்கும் சதை வளையங்கள்.  அது பெட்டியை விட்டு வெளியே வந்த கணம் அவன் உணர்ந்தான், நாய் என அவன் கற்பனை செய்து வைத்திருந்த பிராணிக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை…

புதிதாய் எல்லாவற்றையும் பார்க்கிற பரவசம். நாக்கும் உமிழ்நீருமாய் சிறு குரைப்புடனான ஈஷல். சாப்பாட்டின் போது அவன் தட்டத்தில் குனிந்து சுவாரஸ்யமாய் சாப்பிடத் தேடும் கண்கள். பள்ளிக்கூடம் விட்டதும் அதனோடு ஜாலியாய் பூங்கா பக்கம் உலா வரலாம்… என்றெல்லாம் அவன் கற்பனை செய்து வைத்திருந்தான். இது ராட்சஸ பிரம்மாண்டம். சட்டென்று அப்பா பின்னால் பம்மிக்கொண்டான். ஆனால் அவர் அவனை சட்டையைப்பற்றி முன்பக்கமாய் இழுத்து நாயிடம் காட்டி அதை முகரவைத்தார்.

பரிச்சயப்பட்ட அளவில் அவன் ஞாபகப்படுத்திக் கொண்டான். அதன் பெரிய முகம் அவனருகில் வருகிறது. காற்றை அது உறிஞ்சி உள்ளிழுத்து, ஈர நாசியினால் வெளியேற்றுகிறது. பிற்பாடு பல வருடங்கள் அதை அவனால் மறக்கவே முடியவில்லை. ஒரு முகர்தலில் அவன் உள்ளக்கிடக்கையை உரித்தாப்போன்ற உணர்வு. அப்போது மேலே துணி கிணி எதுவும் வைத்து மூடிக்கொண்டிருக்கவில்லை என்றாலும், வருட வருடத்துக்கும், ஒளித்துவைத்தாப் போல தன்னிடம் எதை அது தேடியது, அவனுக்கு விளங்கவில்லை.

அதன் புழங்குவளாகம் வெளிமுற்றம்தான். என்றாலும் பக்கத்துவீடுகளிலும் அது கோலோச்சியது. அவர்களின் பாத்தியதை என்பது செங்கல் எடுப்புச்சுவர் தொட்டு, பின்னால் மலையடிவாரம் வரை. சிற்றோடை ஒன்று ஒடுங்கி ஊர்ந்து கடந்து மரக்கூட்டத்துள் காணாமல்போனது. அந்தப்பகுதியே கெய்சரின் ராஜாங்கம் என ஆகிப்போனது. எப்பவுமே மேலும் கீழுமாய் அது ஓடியாடி பரிபாலனம் செய்தபடி இருந்தது. பக்கச்சுவர் அருகே அநேகமாக தினசரி பக்கத்து வீட்டு விதவைப்பெண் வந்து போவாள். கெய்சர் குரைத்தால்,  அந்தத் தெருவே அதிர்ந்தது. கெய்சர் குரைத்துக்கொண்டே இருந்தது. ஓய்வதாய் இல்லை அது. அதனால் என்னாயிற்று, காலையில் செய்தித்தாள் போடுகிற பையன் வீட்டை நெருங்காமல் தெருவில் இருந்தபடியே கடாசிவிட்டுப் போனான். குழந்தைகள் சுத்துவழியில் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தார்கள். வந்து ஒரே மாதம், பக்கத்துவீடுகளில் சுற்றித் திரிந்த ரெண்டு பூனைகளைக் குதறிப்போட்டு விட்டது. அந்தப் பிரதேச பிரியமான பூனைகள். பெண்கள் அவை வந்தால் தட்டத்தில் குடிக்க பால்ஊற்றி வைப்பார்கள். வீட்டில் முன்விதானத்தில் ஆயா அவற்றைப் பார்த்தாள். கழுத்து சிதைந்து, எலும்புகள் விரைத்து முறுக்கியபடி. அதை இழுத்து வெளியே எறியப் போகுமுன் கெய்சர் அவள்காரியத்தை உணர்ந்துகொண்டு, தன் வேட்டைகளை அவள் வெளியே எறிவதை வழிமறுத்தது.

mastiff-02_jpg_w560h313

ஜுலை வந்தது. கெய்சர் வேலிதாண்டிப்போய், அந்த விதவைப்பெண்ணின் சாம்பியன் பக், என்கிற வீட்டுநாயுடன் கூடிக் குலவி கலவி செய்தது. ரெண்டு வாரத்தில், ரெண்டு பிளாக்குகள் தள்ளியிருந்த விடுதியின் பழமையான வேட்டை நாய் இதனிடம் வசமாய் கடிவாங்கியது. ஜனங்கள் முறையிட்டார்கள், ஆனால் யாருக்கும் முகத்துக்கு நேரே பேச தைரியம் இல்லை. குறை சொல்லவே தயங்கினார்கள். தேவாலயங்களில் கூடும்போது, தெருவழியில் பார்க்கும்போது தங்களுக்குள் பரிமாறிக் கொண்டார்கள். தாங்கள் பார்த்ததைப் பேசிக்கொள்கிற அளவில் செய்தியாக அடக்கி வாசித்தார்கள். போயனின் அப்பாவை அவர்களுக்குத் தெரியும். நல்லாத் தெரியும். அட அந்த மனுசன்கிட்ட வம்பு வளர்க்க வேணாம், என அவர்கள் நினைத்தார்கள்.

போயனின் அப்பாவிடமும் கெய்சர் சுதாரிப்பு காட்டினாலும், அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்த பீரங்கியின் பணிவு இருந்தது அதில். பார்த்தால் ரெண்டுபேருமே, அப்பா, அந்த கெய்சர் – பாரா பணி மும்முரத்தில், உயரமான கட்டுமஸ்தான அப்பா. கூட அந்த நாய் அவர் அருகே, உலைக்களத்தில் காட்டிய துருப்பிடித்த இரும்பு போடும் சத்தமாய் உருமல். அவனது சில விபரீதமான கனவுகளில் அவர்கள் இருவருமாய் சுரங்கங்கள் தேடியலைகிறார்கள். அதெல்லாம் பழைய காலத்தில் போன்ற நினைவுகள்… செய்தித்தாள் அறிக்கைகள் வெளிவராத காலம். முள்வேலியிட்ட தடுப்புகள் காட்டும் புகைப்படங்கள் வராத காலம். பசிப்பட்டினியான சனங்கள் அங்கே வரிசையிட்டு நிற்காத காலம்.

அவர்கள் இருவரையும் ஒருசேரப் பார்க்கிறான். மேஜையில் பாதி சாப்பிட்டுவிட்டு மிச்ச உணவுடன் அப்பா கெய்சருக்கு அந்தத் தட்டைத் தரையில் வைப்பார். அவர்கள் மாடியேறுகையில் தாடையின் கீழ்த்தொங்கும் அதன் ஆடுசதையை ஒருபிடி பிடித்துவிடுவார். பிறகு மாடியேறுவார்கள். அதைப் பார்க்கையில் அவர்கள் இருவரிடையேயும் எதோ ஒரு பரிமாற்றம் நிகழ்வதாக நினைத்தான்.

அது வந்த சில மாதங்களில் அதன்வழியில் குறுக்கிடாமல் தன்வழியைப் பார்த்துக்கொள்ள அவன் முயன்றான். பொதுவாக சாப்பாட்டு வேளைகளில் அவர்கள் எதிர்எதிரே வர அமைந்துவிடுகிறது. தவிர காலைவேளைகள் முன்விதானத்தில் இருந்து வாசல்கதவைத் திறக்க அவன் போகிற சந்தர்ப்பங்கள். அதேபோல தினப்படி மதியங்கள் அவன் வீடு திரும்புகையில், அதன் உறுத்தலான பார்வை வியூகத்தை அவனால் தவிர்க்க முடியாமல் போகிறது. மாலை முற்றுமுன்னர் அவர்கள் தனியே இருக்கிறபோது, கெய்சர் அவனுடன் கூடவே உள்ளே வந்தது. கூடத்தில் அவனை மேலும் முன்னேறவிடாமல் மறித்து நிற்கும். சுவரோடு அவனை அமுக்கி பெரிய ஈர முகத்தை அழுத்தித் திரும்பத் திரும்ப முகர்ந்தது. பின் ஒருஅடி பின்னே நகர்ந்து குரைக்க ஆரம்பித்தது… யாராவது பெரியவர்கள் ஓடிவந்து அதை அடக்கினார்கள். முரட்டுத்தனமான வெறுப்பான குரைப்பு. தரையே அதிரும் குரைப்பு. அந்த அதிர்வில் போயனுக்கு நெஞ்சே கலகலத்து எதோ உதிரப்போவதாகப் பட்டது. எதுவோ இவன் பண்ணிவிட்டு வந்திருக்கிறான். அதை இந்த ரோந்துக்கார ஜந்து சரியாக, துல்லியமாக அறிந்துகொண்டு விட்டது. ஒரு முகர்தலில் அவனை உரித்துப் போட்டு விட்டது அது.

அவனுக்கு வயது பதினொன்று ஆயிற்று. இந்த காவல்நாயைச் சமாளிக்கிற புத்தியில் அவன் தேறினான். வாஸ்தவத்தில் அதை அவன் கண்டுபிடித்ததே தற்செயல்தான். அவனாக அப்படியொரு உத்தியை கண்டுகொண்டிருக்கவே முடியாது. ஆகஸ்டு மாத பிற்பகுதியில் பள்ளிவிட்டு அவன் வீடு திரும்பியபோது இடியும் மின்னலுமான காற்று. வில்லோ மரங்களை, வில்லோ என வளைத்து கிளைகளைத் திருகி வீசி வேலியே உருக்குலைந்து போயிற்று. வீட்டில் ஆளரவம் இல்லை. உள்ளே இருந்தது கெய்சர். அவனுக்காக அது காத்திருந்தாப் போலிருந்தது. முற்றாக நனைந்திருந்தான். உடல் குளிரில் வெடவெடத்தது. அவன் கதவைத்தாண்டி உள்ளே கால்பதிக்க அது அடிக்குரலில் ஆலாபனை எடுத்தது. அவன் அப்படியே நின்றான். நாய் மெல்ல குரலை உருப்பெருக்கியது. தோளில் புத்தகப்பையுடன் அவன் பயத்திலும் குளிரிலும் நடுங்கினான். என்ன நடந்தது அவனுக்கே தெரியாது. அவன் உணர்ச்சியே மரத்து அப்படியே சகலமும் நின்றாற் போலிருந்தது. மாடிப்படிக்குக் கீழே ஆயாவின் அறைக்கு ஓடினான். திருமதி சென்கா ஒப்பனை செய்துகொள்ளும் மேஜைடிராயரில் கைத்துப்பாக்கி வைத்திருப்பாள். அவன்அப்பா இல்லாதபோது யாரும் அத்துமீறி உள்ளே நுழைந்துவிட்டால் தேவைப்படும் என்று வைத்திருந்தாள். போய் துப்பாக்கியை எடுத்தபடி கண்ணாடியில் பார்த்தான். தரைவிரிப்புக்குக் கீழே. மரத்தளம்…. கதவைத் தள்ளிக்கொண்டு கெய்சர் மர சரசரப்புகளுடன் உள்ளே நுழைந்தது.

அவன் கைக்கே அது சின்ன சாதனமாய்த் தெரிந்தது. அதை கையில் பற்றியபடி திரும்பினான். அவனைப்பார்க்க வந்துகொண்டிருந்த நாய் அப்படியே திகைத்து நின்றுவிட்டது. அதன் வாயடைத்துவிட்டது. அதற்கு துப்பாக்கி என்றால் என்ன, அது என்ன செய்யும் என்று தெரிகிறது. போயன் நீட்டிய கையில் நடுக்கத்துடன் கட்டளை பிறப்பித்தான். ”உட்கார்!” அது அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. சுவரின் தந்தவண்ண கடிகாரம் அமைதியாய் இசைத்தது. போயன் திரும்பவும் ”உட்கார்!” என்றான் அழுத்தமாய். ராணுவ நாய் அது. உடனே முழுப் பணிவைக் கைக்கொள்ளப் பழகியிருந்தது அது. தலையை தரைவிரிப்பைப் பார்க்க கீழேபோட்டது. அந்த விநாடியில் அவன் அதைக் கொன்றுபோட்டிருக்கலாம். செய்திருக்கலாம், அதைக் கொல்லத்தான் அவனும் நினைத்திருந்தான். துப்பாக்கியின் குதிரையை அவன் வருடியபோது சோகமாய் அது ஒரு க்ளிக் சத்தங் கொடுத்தது, சிகெரெட் லைட்டரில் எண்ணெய் இல்லாவிட்டால் அப்படி அலுத்துக்கொள்ளும். அதன் உள்ளே ரவைகள் இல்லை என உணர்ந்தான். ஆனால் கெய்சரின் மாற்றம் ஆச்சர்யமாய் இருந்தது. அந்த க்ளிக் சத்தம் அதன் உடம்பெங்கும் ஒரு பயஅலையைத் தோற்றுவித்தது. தலையை உள்ளிழுத்துக் கொண்டது. இதோ, ஏதோ நிகழப்போகிறது, என்கிற பயத்துடன் எதிர்கொள்ளக் காத்திருந்தது. சிறிது கழித்து தான் உயிரோடிப்பதை அது உணர்ந்து சிறிதாய் ஊளையிட்டது.

அதை அவன் சமாளிக்கக் கற்றுக்கொண்டது இப்படித்தான். அவன் அப்பாவுக்கு விதவிதமான துப்பாக்கிகளை சேர்த்து வைக்கப் பிடிக்கும். கோல்ட் பிராண்ட் பிஸ்டல்களும் வின்செஸ்டர்களும் அதிகம் வைத்திருந்தார். வரவேற்பறையில் ஒரு காபினெட்டில் அவற்றை வைத்திருப்பார். ஓரமாய் சைனாபீங்கான் பூசாடி அடியில் அந்த அலமாரியின் சாவி இருக்கிறது. அந்தநாள் முதல் எப்போது தனியாய் அவன் இருந்தாலும், எப்போது கெய்சர் அவனை வெளிவளாகத்தில் வழிமறித்தாலும், கதவைத் தள்ளிக்கொண்டு எப்போது அது அத்துமீறி உள்ளே நுழைந்தாலும், அவன் உடனே வரவேற்பறைக்குப்போய், இருந்த கைத்துப்பாக்கிகளில் ஒன்றை கையில் எடுத்தான். அதால் எப்படிச் சுடவேண்டும் என்று தெரிந்துவைத்திருந்தான். பிறகு கெய்சருக்கு ஆணை பிறப்பித்தான். ”உட்கார்!” நிசப்தமான வீட்டில், இருவருக்கும் இடையே பரந்து விரியும் கட்டளைச் சொல். நாய் உச்சிமுதல் பாதல் வரை நடுங்கி… அமர்ந்தது.

அவன் ஒவ்வொரு ரவையாக வெளியே எடுத்து உள்ளங்கையில் வைப்பான். பிறகு நாயின் நெற்றிப்பொட்டுக்குக் குறிவைப்பான். காலி துப்பாக்கியின் குதிரையை க்ளிக்… ரெண்டடி தூரம். அதன் கண்ணுக்கு இடையேயான குறி. சின்னச் சத்தம், பாதி வழியிலேயே அது தேய்ந்து அடங்கிவிட்டது. வழக்கமில்லாத வழக்கமாய் நாய் மூத்திரம் பெய்துவிட்டது. மற்ற சமயங்களில் அதன் இதயத்தில் அவன் முட்டிவிட்டாப் போல அது நடுங்கும். அப்படியே விரைத்து நிற்கும். மகா ஆச்சர்யம் அது. நூறு பவுண்டு கனமான பிராணி, அதன் சதுரத்தாடை கூர்த்த கவனத்தில் இறுகும். ஆ அது தடுமாறுகிறது. என்னசெய்ய என்று குழம்புகிறது. அப்படியே பயந்தே செத்து விடுமோ என்றிருந்தது அவனுக்கு. அவன் திரும்ப குண்டுகளை உள்ளே போடுவதை, திரும்ப பெட்டிக்குள் வைப்பதை அது வெறித்துப் பார்க்கும். அப்பா வீட்டில் இல்லாத சமயம் அந்தத் துப்பாக்கியைக் கையில் எடுத்தால், ஞாபகமாக திரும்ப குண்டுகளை இட்டே உள்ளே வைப்பான்.

பிற்காலத்தில் தான் எப்படி ஆவோம், என்று ஆச்சர்யத்துடன் யோசிப்பான் அவன். மற்றவர்கள் அவனையிட்டு அப்படி யோசித்துப்பார்க்கிற மாதிரி அவனிடம் அந்த முன்அடையாளங்கள் எதுவும் இருக்கிறதா? அதைப்பற்றி யோசிக்காதவர்களும் கூட, அவனைப்பற்றி என்னதான் நினைக்கிறார்கள்.,, பொதுவாக யோசிக்காவிட்டாலும் திடுதிப்பென்று எதாவது சந்தர்ப்பத்தில் அவனைப்பற்றிப் பேச நேர்ந்தால் என்ன பேசுவார்கள்… பதினோரு வயசுப் பிள்ளை அவன். கூச்ச சுபாவி. ஆனால் என்னவோ அவனுக்கு இசையில் நாட்டம். பள்ளிக்கூடத்திலேயே பியானோ வாசிக்க ஆர்வம் காட்டிய ஒரே பையன் அவன்தான்.

ஒருமதியம் பள்ளிவிட்டு அவன் திரும்புகிறான், பக்கத்துத் தெருப் பையன்கள் சிலபேர் அவனை வழிமறித்துச் சுற்றிவளைத்தார்கள். நாலைந்து பேர் இருக்கலாம். அவன்கூடவே அவர்களும் அந்தப் பகுதியில் வளர்கிறவர்கள்தான். அவனை அப்படியே சகதியில் வாரித்தள்ளினார்கள். அவன்முகத்தை செடிகளில் மலர்க்கொத்துகளில் முட்டினார்கள். சில பையன்கள் அவன்தலையில் மண்ணை வாரியிரைத்தார்கள். அவர்கள் கைகளுக்கும் புல்த்தாள்களுக்கும் சகதிக்கும் இடையே அழுக்கு சிந்திச் சிதறியது. ஒரு பையன் அவனது பைக்கட்டைப் பிரிப்பதை அவன் பார்த்தான். அவன் எடுத்துப்போன எல்லா பொருட்களும் – பாதி தின்ற உணவை, பக்கம் பக்கமான இசைக்குறிப்புகளை… தரையில் எறிந்தான். அவன் சராயை ஜிப் இறக்கி, அந்தக் காகிதங்களில் ஒண்ணுக்கடிக்க வைத்தார்கள். இந்தமாதிரி ராகிங் பண்ணப்படும்போது, வேற பையனாய் இருந்தால், அது அவனது பேருக்காக இருக்கும், அவன் அப்பாவின் ராணுவ ஸ்தானமாக இருக்கும். அல்லது பண விவகாரமான பொறாமையாய் இருக்கலாம். அவனது புதிய ஷூக்கள், வீட்டு வெளிமுற்றத்தில் அவர்கள் பார்த்த புதிய கார்… அதையெல்லாம் நினைத்தபடி அவர்கள் ஆத்திரப்படுகிறார்கள். ஆனால் போயனைப் பொறுத்தளவில் இது எதுவும் காரணம் இல்லை. என்னதான் காரணம் அவனுக்கே தெரியவில்லை.

சட்டை கிழிசலுடன், மூக்கு ரத்தம் கொப்பளிக்க வீடு திரும்பினான். அவனது மூத்திரம் நனைத்த காகிதங்களை அப்படியே பூங்காவில் மண்ணில் போட்டுவிட்டு வந்திருந்தான். சென்கா ஆயா சமையல் அறையில் ராத்திரி உணவைத் தயாரிப்பதில் இருந்தாள். அவன் முகத்தையும் முட்டியையும் அவள் அலம்பி சுத்தம் செய்தாள். அவன் என்னென்னவோ வசைபொழிந்தபடி அவளைக் கட்டிக்கொண்டான். அவள் தோளில் சாய்ந்தபடி பிசிர் பிசிரான அவள் மஞ்சள்கேச நுனியை விரலால் பற்றிக் கொண்டிருந்தான். அவளைத் தாண்டி பின்னால் மரவேலைப்பாடுகளின் பளபளப்பில் பின்மதிய வெளிச்ச ரேகைகள் வழுக்கிச் சரிந்தன. வாயிலில் இருந்து அப்பா எட்டிப்பார்த்தார். ஏமாற்றத்தை விட அதிகமாய்த் துவண்டிருந்தார். கோபத்தை விட அதிகமாய் படபடத்திருந்தார். கூடத்தின் மாடிப்படியருகே நின்றபடி அவனையே பார்த்தார் அவர்.

மகா உருவ அந்த கெய்சர் தனது பாதுக்காப்புகாக உதவிக்கு அந்தப் பூங்காவில் கூடஇருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், என அவன் நினைத்திருந்தான். அவனிடம் அது முரண்டினாலும், அந்த சந்தர்ப்பத்தில் அவனைப் பாதுக்காக்க முன்வரும் என்றே நம்பினான். தான் தனியே இப்படி எதிர்க்க உதவியில்லாமல், அந்த நாலைந்து பேரிடம் சிக்கிக்கொண்டதில் ஆத்திரப்பட்டான். இராச் சாப்பாடு முடிந்தது. மொத்த வீடுமே நிசப்தத்தில் மூழ்கியது. வாசிப்பறையில் கணப்புக்கு முன் கண்ணயர்ந்திருந்தார் அப்பா. மெல்ல கதவைத் திறந்தான். கெய்சர் உள்ளே நுழைந்தது. கதகதப்பான இரவு. வெளியே அலைந்து திரிந்துவிட்டு எலுமிச்சை வாசனையுடன் உள்ளே வந்தது. அதை வரவேற்பறைக்கு அழைத்துப் போனான் அவன்.

”உட்கார்!” என்றான்.

கெய்சரைப் பார்க்க முதுகு காட்டியபடி பெட்டியைத் திறந்து பிஸ்டலை எடுத்து வைத்தான். ரவைகளை வெளியே பிரித்தெடுத்தான். என்றாலும் பெட்டியின் மேல்கண்ணாடியில் நாயின் காதுமடல்களைப் பார்க்க முடிந்தது. மேஜையில் அந்த ரவைகளை இட்ட சத்தத்தில் அதன் காதுகள் விம்மின. திரும்பி அதன் விசையை பின்னிழுத்தான். திரும்ப அடுத்தடுத்து வேகமாய் மூணுமுறை அதைச் சுட்டான். க்ளிக்! க்ளிக்! க்ளிக்! நாய் உடம்பை ஒடுக்கி தரைவிரிப்பில் அப்படியே அமர்ந்தது. அவன் கையைக் கீழே போட்டான். நாய் கிலி கொண்டு சிறுநீர் கழித்தது. கம்பளம் முழுதும் பரவி அதன் ஓரக் குஞ்சங்கள் வரை… மெல்ல அறையின் மர அலங்காரப் பொருட்களை, பாரசிக மரச் சிற்பங்கள் வரை… தொட்டுப் போனது சிறுநீர் நதி. அவன் பார்வையை உயர்த்தியபோது, வாசலில்… அப்பா.

”இப்படித்தான் நடக்குதா?” என்று கேட்டார் அவர். வீட்டில் கெட்ட நாற்றத்தை அவர் கண்டு கொண்டிருக்க வேண்டும்.

நீலக் கண்கள். ஒருமாதிரி உறுத்தும் பார்வை அது, ஆனால் ஆளைத்தாண்டி, முதுகைக் கடந்தும் பார்க்கும் பார்வை. காக்கி சராய். கையில் முதலைத்தோல் கடிகாரம். அந்த கடிகாரம் போயனின் கெர்னல் தாத்தாவிடமிருந்து கை கையாய் மாறி வந்த குடும்பச் சொத்து. அவரது ஷூ முனைகள் கண்ணாடிபோல் பளபளவெனப் பொலிந்தன.

வரவேற்பறைக்கு அப்பா வந்தார். அவன்முன் நின்றார். ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டார்.
”உட்கார்!” என்றார்.

அவன் உட்கார்ந்தான். கூடத்தில் அந்த ரோந்துப்பிராணி விரைப்புடன் நின்றது. அதன் சப்பை முகம் கருமையாய், சுதாரிப்பாய். அதற்குப் பின்னால், போயன் பார்த்தான். தாத்தாவின் சுவர் கடிகாரம், இடது வலது என்று ஆடும் அதன் பெண்டுலம். யானைச் சிலைகள். தொட்டிச் செடிகள். பளபளப்பான மாடிச் சுருள்படிகள் மேலே பாதியில் இருளில் மறைந்தன. மணி ராத்திரி ஒண்ணு.

அவனுக்குப் பின்னால் தலைக்குமேலே அப்பாவின் நிதானமான சுவாசம், காபினெட் பக்கமிருந்து கேட்டது. அவர் துப்பாக்கியைக் கையில் எடுப்பதைக் கேட்டான். மென்மையான அதன் உலோகபாகம் காபினெட்டின் மேல்பரப்பில் உரசியது. அப்பா பெரிய கையால் அதை எடுக்கிறார். திரும்ப அவர் குண்டுகளை, ஒண்ணொண்ணாக… உள்ளே இடுகிறார். அவனுக்கு தலை கனத்து, கழுத்து விடைத்தது. ஒவ்வொரு குழிக்குள்ளும் குண்டுகள் போய் அமர்கிற மென்மையான அதன் சத்தத்தில் அவன் உடம்பு சூடாகிறது. பிரஞ்சு பாணி ஜன்னல் திறந்து கிடந்தது. உள்நுழையும் காற்றில் திரைச்சீலைகள் அசைகின்றன. தெருவில் இருந்து மரப்புகை நாற்றத்தை அப்பா உணர்கிறார். கடைசி குண்டும் அடைக்கிற ஒலியைக் கேட்டான். மடங்கிய துப்பாக்கி நேரானது. அதன் விசை தயாரானது. கூடத்தில் விளக்கு மங்கலாய் எரிந்து கொண்டிருந்தது. அங்கிருந்த ஓவியங்கள் நெளிநெளியாய்த் தெரிந்தன. கெய்சர் வாலை வாலை ஆட்டிக் கொண்டிருந்தது.

அவன் காதை உரசினாப்போல கிளம்பியது வெடிச்சத்தம். இதயத்தில் விழுந்த கும்மாங்குத்து. விலாவில் யாரோ சுத்தியலால் மடார். காதடைக்கிற அந்த ஓசை அவனைத் தாண்டிச்சென்றது. ரோந்துநாய் அப்படியே மடிந்து, விழுந்தது. கிடந்தபோது உறங்குவதுபோலவே இருந்தது. தரைவிரிப்பில் குப்புறவிழுந்த முகம். இரத்தம் மெல்ல வெளியேறி படர்ந்து அடர்ந்து முன்பாதங்களை நனைத்தது.

பிற்காலத்தில், போயன் நினைத்துக் கொள்கிறான்… அப்பாவை ‘அவர்கள்’ சுடும்போது அவரைப் பார்க்க எப்படி இருந்திருக்கும், இதுபோலவா? எதோ முடைநாற்றம் குமட்டுகிற குளத்தருகே, பேரில்லாத யுத்தத்தில், அவர்கள் அவரை மண்டியிட வைத்தார்களா… சகதியில்… அந்த முகம் ஒருவிநாடி திகைத்து, பிறகு உடம்போடு சரிகிறதா… ஆயா சென்கா மடித்த தேசியக்கொடியை எடுத்தாள். அவனுக்கு வரவேற்பறையில் ரோந்துநாய் கிடந்தது ஞாபகம் வந்தது. அப்பா விளக்குகளை மந்தமாக்கிவிட்டு கூடத்தைவிட்டு வெளியேறினார். மாடிப்படிகளை அடைந்து, மேலேறிப் போனார்.

படைப்பைக் குறித்து மொழிபெயர்ப்பாளர் எஸ்.ஷங்கரநாராயணன் குறிப்பு:

tea_obreht1985ல் யூகோஸ்லாவியாவில் பிறந்த பெண் எழுத்தாளரான தீ ஓப்ரத் (Tea Obreht), தற்போது நியூயார்க்வாசி. அவரது முதல் நாவல் ‘புலியின் மனைவி’யின் சுருக்கம் தி நியூயார்க்கரில் வெளியானது. அதே இதழின் நாற்பது வயதுக்குட்பட்ட இருபது எழுத்தாளர்களின் தேர்வில் இடம் பிடித்தவர். இந்தக் கதையின் ஆங்கில மூலம் ‘The Sentry’ ஆகஸ்டு 14, 2010 கார்டியன் இதழில் வெளியானது.

கதையில் உத்திரீதியான உக்கிரத்தைக் கைக்கொள்வது இவருக்குப் பிடிக்கிறது. வீரம் என்பது பயம் சார்ந்தது தான், என்பது நல்ல செய்திதான். யதார்த்தம் விலக்கிய சுவாரஸ்யமான கதை. பையனுடன் நாய் சுமுகம் பாராட்டவில்லை, என்பதை அப்பா எப்படி அலட்சியப்படுத்தினார், என்பதே எனக்கு வாசிக்க இடைஞ்சலாய் இருந்தது.

கிட்டத்தட்ட இதே ஆரம்பப்புள்ளியில் ‘இனம்’ என நான் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். ஒரு பணக்கார வீட்டு கிழட்டுக் காவலாளி, அதேவீட்டில் முதலாளியின் கரிசனத்துடன் ராஜபோகம் அனுபவிக்கும் அல்சேஷன் நாய். மனித உயிர் எத்தனை மலிவாகி விட்டது, என்பதான சரடு.

One Reply to “ரோந்து”

Comments are closed.