மொழிபெயர்ப்பு என்னும் கலை

nabakovமொழிபெயர்த்தல் என்கிற பரிதாபத்துக்குரிய வர்த்தகத்தைப் பற்றி சில வார்த்தைகள் பேசலாம் என்று எண்ணுகிறேன். மேலும் பல விதமான மொழிபெயர்ப்பாளர்களையும், ஆசிரியர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்றும் எண்ணுகிறேன். முதலில், நான் எந்த மொழியையும் கற்பிக்கும் ஆசான் இல்லை என்பதை உங்களுக்குக் கூறிவிடுகிறேன் – சொல்லப்போனால், நான் இலக்கியம் கற்பித்த கோல்ட்வின் ஸ்மித் அவைக்கும், ரஷ்ய மொழி கற்பிக்கப்பட்ட எங்கோ மூலையிலிருக்கும் மோரில் அவைக்கும் நடுவே ஒரு விதப் பச்சை வண்ணம் தீட்டிய இரும்புத் திரையோ, இல்லை ஒரு பச்சை வெல்வெட் திரையோ இருந்தது. ஆனாலும், என் இலக்கிய வகுப்புகளில் ரஷ்ய மற்றும் ஃபரெஞ்சு மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்யும் பிரச்சினையை நான் அடிக்கடி சந்திப்பதால், ஒரு மொழி நிபுணர் எதிர்கொள்ளும் துன்பங்கள் என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரிந்தே இருக்கிறது.

பல்லை உடைக்கும் சில வாசகங்களைக் கற்பிக்கும் சமயங்களில் மாணவர்களுக்கு நேரும் சங்கடங்களைப் பற்றி நான் பேசவில்லை. என்னால் உருவாக்க முடிந்த ஒரு சிறந்த நாக்குச் சுளுக்கியின் உதாரணம்: Vï´karabkavshiesya vï´hoholi okoléli u koléblyushchegosya kolokololitéyshchika – சர்ச் மணிகள் தயங்கி ஒலிக்கத் துவங்கியதும், அவற்றுள்ளிருந்து பதறி விரைந்து வெளியேற முயன்ற மார்டின் குருவிகள், குரூரமான முறையில் இறந்தன.

மொழிபெயர்த்தல் சர்ச்சை நிறைந்த விஷயம். ஒரு அணியில், அறிஞரும், கலைஞரும், வாசகரும் உள்ளனர். மற்றொன்றில், குறைந்த சம்பளத்தில், தன்னால் இயன்ற அளவு சிறப்பாக மொழிபெயர்க்கும் எழுத்தரோ, அந்நிய மொழி தெரியாமலும், தானும் சொந்தமாக எழுத முடியாமலும், (அதனால்) எச்சரிக்கையாக இருக்கும் ஏமாற்றுப் பேர்வழியும், மற்றும் மொழி நுடபங்கள் பற்றியெல்லாம் துளி அக்கறையும் இல்லாத, எப்போதுமே தழுவி எழுதப்பட்டதிலேயே நாட்டம் உள்ள வெளியீட்டாளரும் உள்ளனர்.

மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமல் நம்மால் சமாளிக்க முடியுமா? படித்த ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தது தன் மொழி அல்லாத ஐந்து அந்நிய மொழிகளாவது  தெரிந்திருக்குமா? –  தன்னுடைய தாய் மொழி எவ்வளவு நன்றாகத் தெரியுமோ அவ்வளவு தெரியுமா? – இந்த விஷயம் மிக முக்கியம். அதன் கவிதையின் காரணத்தினாலே, ஆங்கிலத்துக்குப் பட்டியலில் முதலிடம். ஃபிரெஞ்சும், ரஷ்ய மொழியும் இரண்டாவது இடத்திற்கு போட்டியிடுகின்றன. இத்தாலியன், ஸ்பானிஷ், மற்றும் ஜெர்மன் அடுத்து வருகின்றன. ஆக, ஷேக்ஸ்பியரையும், ஃப்ளூபேரையும் ட்யூட்சேவையும், டாந்தேவையும், ஸெர்வண்டெஸையும், காப்காவையும், ரசிக்க ஒரு மனிதனுக்கு ஆறு மொழிகளில் ஆழமான நுண்ணறிவு வேண்டியிருக்கிறது. இவற்றைத் தவிர பிற மொழிகள் இருக்கின்றன. அந்ததந்த மொழிகளில் சிறந்த கவிஞர்கள் இருக்கின்றனர்… லத்தீன் வேறு உள்ளதா, கிரேக்கமும் உள்ளதே? பிறகு, மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமல் என்னதான் செய்வதாம்?

நான் அறிந்த ஒரு மூத்த பெருந்தகையாளர். இப்போது உயிருடன் இல்லை, வேறொரு தேசத்தில் மாபெரும் பல்கலைக்கழகத்தின் ஸ்லாவிக் மொழித் துறைத் தலைவராய் இருந்தவர். அவரால் பிழை இல்லாமல் ஒரு ரஷ்ய வாக்கியம் கூடப் பேசவோ, எழுதவோ முடியாது. அவர் பெயரில் வெளியான ரஷ்ய மொழிபெயர்ப்புகள் எல்லாம், யாரோ பெயர் தெரியாத ரஷ்யப் பிரஜைகள் செய்தவையே! இவரிடம்தான் ஒரு திறமையற்ற ஆசிரியரும், தகுதியற்ற மொழிபெயர்ப்பாளரும் ஒரே இடத்தில் காணப்படுகிறார்.  இவர் பல ஆண்டுகளாக, தன் மடமை என்னும் பொக்கிஷத்தை மறைத்துக் கொண்டு மொழிப் பிழைகளை வைத்துப் பிழைக்கிறார், மற்றவர்களோ இந்தப் பாவத்தைச் சுமக்கிறார் .

சொற்களின் ஆவி கூடு விட்டு கூடு பாய்வது நிகழும் விந்தையான உலகத்தில் மூன்று நிலைத் தீங்குகளைப் பகுத்து அறியலாம். முதலாவது, அத்தனை மோசமல்லாத தீங்கு, அறியாமையினாலோ, இல்லை, தப்பான வழிகாட்டுதலால் கிட்டிய அறிவாலோ, ஏற்படும் தவறுகள், இவை உடனே புலப்படக் கூடியவை. இவை மனித இயலாமையால் மட்டுமே ஏற்படுகின்றன. ஆதலால் மன்னிக்கப்படலாம். நரகத்தை நோக்கி அடுத்த அடி எடுத்து வைக்கும் மொழிபெயர்ப்பாளன், சில சொற்களையோ, பத்திகளையோ, தான் புரிந்து கொள்ள முயற்சி எடுக்காததாலோ, அவை உருவமில்லாத யாரோ வாசகர்களுக்குப் புரியாது அல்லது அவர்களுக்கு ஆபாசமாகத் தெரியும் என்று தனக்குத் தோன்றுவதாலோ, வேண்டுமென்றே மொழிபெயர்க்காமல் தவிர்த்து விடுகிறான்; இவன் அகராதி தனக்குத் தரும் உயிரற்ற பார்வையை எந்தவித ஐயமுமின்றி ஏற்றுக்கொள்கிறான்; பண்டிதப் பழமையால் தேர்ந்த விசாரிப்பை ஒடுக்குகிறான்; எழுத்தாளனை விடவும் தனக்கு அதிகம் தெரியும் என்று எண்ணுவதாலேயே, அவன் எழுத்தாளனை விட குறைவாக அறிந்து கொள்ள ஆயத்தமாகிறான். மூன்றாவது, ஆக மோசமான தீங்கு, ஒரு கலைஞனின் தலை சிறந்த படைப்பு, சம்பந்தப்பட்ட சமூகத்தின் கருத்துகளுக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும் இணங்கும் வகையில், மலினமான முறையில் அழகூட்டப்படுவதிலோ, சன்னமாகத் தட்டிக்கொட்டி  இறுகலாக்கப்படுகிறதிலோ அடையப்படுகிறது. மத்திம காலத்தில், [1] பிறர் படைப்புகளிலிருந்து திருடித் தம்முடையதாகக் காட்டுவது குற்றமாகக் கருதப்பட்டு, குற்றவாளி பொதுவில் நிறுத்தி அவமானப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட்டாரே, அத்தகைய குற்றம் இது.

முதல் வகையில் கொடுக்கப்பட்டுள்ள உளறல்களை இருவகை உட்பிரிவுகளாக வகுக்கலாம். அந்நிய மொழியின் மீது போதுமான பரிச்சயம் இல்லாத நிலை, ஒரு சாதாரண வாக்கியத்தைக் கூட ஏதோ ஒரு விசேஷமான வாசகமாக மாற்றி விடக்கூடும். உண்மையில் மூல ஆசிரியர் அப்படி ஒரு தனிச் சிறப்பைக் கருதிக் கூட இருக்கமாட்டார். “Bien etre general” என்பது ஏனோ ஆண்மை நிறைந்த வாதமாகி “ஒரு தளபதியாக இருப்பது சிறப்பு” என்று மாறி விடுகிறது.[2] [இந்த அபத்தத்துக்குப் பிறகு]  “ஹாம்லெட்”டின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர், இந்த ராணுவத் தளபதியிடம், கெவியார் என்கிற உப்பிடப்பட்ட மீன் முட்டைகளை யாரோ கொடுப்பதாகவும் மொழி பெயர்த்திருக்கிறார்.  [கீழே 2 ஆம் எண்ணிட்ட பின்குறிப்பைப் பார்க்கவும்.]

இதே போல, செகாவின் ஒரு ஜெர்மன் பதிப்பில், ஒரு ஆசிரியர் தன் வகுப்புக்குள் நுழைந்ததும் “தன் செய்தித்தாளில்” மூழ்கிப்போய் விடுபவராக மாற்றப்படுகிறார். ஒரு அதிரடி விமர்சகர், இதை வைத்துக் கொண்டு, சோவியத் ரஷ்யாவுக்கு முன்பிருந்த நாட்டுப் பொதுக் கல்வி என்ன அவல நிலையில் இருந்ததென்று விமர்சிக்கத் துவங்குகிறார். ஆனால் செகாவோ ஒரு ஆசிரியர் தன் பாடங்களையும், மதிப்பெண்களையும், மாணவரின் வருகைப்பதிவுகளையும் சரி பார்க்கப் பயன்படுத்தும் வகுப்புக் “குறிப்பேட்டையே” அங்கு குறிப்பிடுகிறார். எதிர்ப்புறத்தில் [பார்த்தால்], ஒரு ஆங்கிலப் புதினத்தில் தோன்றிய களங்கமில்லாச் சொற்களான “முதல் இரவும்”, “பொது வீடும்” ஒரு ரஷ்ய மொழிபெயர்ப்பில் “திருமண இரவாகவும்”, “விபசார விடுதியாகவும்” மாறிவிட்டன. இந்த எளிய எடுத்துக்காட்டுகளே போதும். இவை முட்டாள்தனமானவை, நாராசமானவை, ஆனால் கெட்ட நோக்கம் ஏதுமில்லாதவை.  பல நேரமும், குளறுபடியான வாக்கியம் இன்னும் மூலத்தின் பின்னணிக்கு ஓரளவு ஒத்துப்போகிறது.

முதல் பிரிவின் மறு வகைப் பிழைகள் நாசூக்கான தவறுகளைக் கொண்டவை. அவை மொழியின் வண்ணங்கள் புலப்படாமை திடீரெனத் தாக்குவதால் மொழிபெயர்ப்பாளனுக்கு வரும் குருட்டுத்தனத்தால் உருவானவை. கையில் இருக்கும் தெளிவான ஒன்றை விட்டு, தூரத்து பச்சையின் மீது இச்சை கொண்டதாலோ (ஒரு எஸ்கிமோ எதை உன்ன விரும்புவான் – ஐஸ் க்ரீமா, இல்லை மிருகக் கொழுப்பா? ஐஸ் க்ரீம்), இல்லை பல்முறை வாசித்ததால் சில போலி அர்த்தங்கள் புத்தியில் பதிந்து போய்விடவும், தன் மொழிபெயர்ப்பை விழிப்புணர்வு இல்லாமல் அவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைப்பதாலோ, மிக நேரான சொல்லையோ, அல்லது ஒரு எளிய உருவகத்தையோ கூட, அவன் எதிர்பாராத விதமாகவோ, அல்லது சில நேரங்களில் அதிபுத்திசாலித்தனமாகவோ திரித்து விடுகிறான். எனக்குத் தெரிந்த ஒரு நேர்மையான கவிஞர், மொழிபெயர்ப்புக்கக் கடினமான ஒரு வாக்கியத்துடன் மல்லுக்கட்டி, ‘வெளிறிய எண்ணங்களின் வடிவால் சோகப்பட்டு இருந்த’ என்ற மூல வாக்கியத்தை, மெல்லிய நிலவொளி வீசும் காட்சியாக உருவகித்து இருந்தார்.  பிறை நிலவின் வளைந்த உருவையும், மூல மொழியில் இருந்த மனச் சோர்வுக்கான சொல்லையும் அவர் குழப்பிக் கொண்டிருந்தார் (Sickle=Sicklied o’er). ரஷிய மொழியில், “பிறை”க்கும், “வெங்காய”த்துக்கும் உள்ள சொல் ஒற்றுமை, ஜெர்மன் மக்களின் நகைச்சுவை உணர்வோடு கலந்து விட,  ஒரு ஜெர்மன் பேராசிரியர்,  (புஷ்கினின் மாயாஜாலக் கதையிலிருந்த)”வளைந்த கடற்கரை”யை,  “வெங்காயக் கடலாக” மாற்றினார்.

இரண்டாவதான, இன்னும் தீவிரமான பாவமாகக் கருதப்படும் செயல், சிக்கலான பத்திகளை முழுவதும் விட்டு விடுவது ஆகும்.  ஒரு மொழிபெயர்ப்பாளனையே அவை குழப்புவதால் இந்தத் தவறு நடந்தது என்றால் மன்னிக்கலாம். ஆனால், தான் திறமைசாலி என்று மார் தட்டிக் கொள்ளும் ஒருவர், அதன் அர்த்தத்தை நன்கு புரிந்து கொண்டிருந்த போதும், அந்தப் பத்தி ஒரு முட்டாளைச் செயலறச் செய்யும் என்றோ, இல்லை ஒரு இளவரசனையும் சீரழிக்கும் என்றோ எண்ணித் தவிர்ப்பாரானால் அது இகழத் தக்கது.  தலை சிறந்த எழுத்தாளனோடு பெருமகிழ்வுடன் உறவாடிக் கொண்டிருப்பதை விட, அவர் எங்கோ மூலையில் அமர்ந்திருக்கும் வாசகனுக்கு ஒரு அபாயகரமான அல்லது அசுத்தியான விஷயத்தை அறிவதால் நேரக்கூடியதைப் பற்றிக் கவலைப் படுகிறார். அரசி விக்டோரியா காலத்து ஒழுக்கப் பார்வைக்கு மிக்க மனங்கவரும் உதாரணமாக எனக்குத் தென்பட்டது , “ஆன்னா கரேன்யினா”வின் ஒரு பழைய ஆங்கில மொழிபெயர்ப்பு. வ்ரோன்ஸ்கி ஆன்னாவிடம் சங்கதி என்னவென்று வினவியிருக்கிறார். ஆன்னாவோ, நான் beremenna” (சாய்ந்த சொல் அந்த நாவலின் மொழிபெயர்ப்பாளருடைய சொல்) என்று பதிலளிக்கிறாள், படிக்கும் பிற தேசத்து வாசகர்களுக்கு, அது ஏதோ ஒரு வினோதமான, மோசமான கிழக்கு நாட்டு வியாதி போலும் என்று யோசிக்கச் செய்யும். அத்தனைக்கும் காரணம், மொழி பெயர்ப்பாளர், “நான் கர்ப்பமாக இருக்கிறேன்” என்று சொன்னால், அது சில தூய்மையான ஆத்மாக்களுக்கு அதிர்ச்சியூட்டும் என்று எண்ணி, மூல ரஷ்யச் சொல்லை அப்படியே கொடுப்பது சிறந்த வழி என்று நினைத்ததே ஆகும்.

ஆனால் மூன்றாம் ரக குற்றங்களுடன் ஒப்பிடுகையில், மறைத்தலோ, மங்கலாக்குதலோ சில்லறைத் தவறுகளே ஆகும்: இங்கு வருகிறார், ஆடம்பர ஆடைகளணிந்து, அணிகலன் பூட்டிய தன் கைகளை வீசிக் கொண்டு வரும்,  அந்த பளபளப்பான மொழி பெயர்ப்பாளர், ஷேஹெராஸாடின் அந்தப்புரத்தை தன் ரசனைக்குத் தக்கவாறு மாற்றி, தன் தொழில் நேர்த்தியைக் கொண்டு தனக்குப் பலியானவர்களுக்கு மெருகேற்றுகிறாரிவர். இக் காரணத்தாலேயே ஷேக்ஸ்பியரின் ரஷ்ய மொழிபெயர்ப்புகளில், ஒஃபீலியாவிற்கு, அவளுக்குக் கிட்டிய களைச் செடிகளுக்கு மாறாக, வனப்புள்ள மலர்களைத் தருவதே விதியாகி இருந்தது.

“காக்கைப் பூக்களும், பூனைக்காஞ்சொறிச் செடிகளும், சாமந்திப் பூக்களும்,  நீள ஊதாப் பூக்களும்
தொடுக்கப் பட்ட வினோதமான மலர் மாலைகளோடு அவள் வந்தாள்”

என்ற ஆங்கில வரிகளின் வினோதமான ரஷ்ய மொழிபெயர்ப்பைத் திருப்பி ஆங்கிலத்துக்கு மொழி மாற்றம் செய்தால் இப்படி வரும்:

“செங்கருநீலப் பூக்களும், செம்பருத்திகளும், ரோஜாக்களும், அல்லி மலர்களும்
அலங்கரிக்கும் அழகு மாலைகளோடு அவள் வந்தாள்”

கண்கவரும் இந்த மலர்க் கண்காட்சியே அத்தனையையும் சொல்லிவிடுகிறது;அப்படியே மகாராணியின் மற்ற பேச்சுக்களை எல்லாம் சொதப்பிவிடுகிறது; அவளுக்கு இயல்பே அல்லாத ஒரு மேட்டிமைத் தனத்தை- இதுவோ வருந்தத்தக்க விதத்தில் அவளிடம் சற்றும் இல்லை- அவளுக்குத் தாராளமாக அளிக்கிறது, அதனாலேயே அங்கே உரிமையோடு வளைய வந்த இடையர்களை ஒரு பொருட்டில்லாதாக்குகிறது. இத்தகைய பூங்கொத்தை, ஹெல்கே ஆற்றுக்கரையிலோ, ஏவான் சிறுநதியின் கரையிலோ யாரால் கண்டு சேர்க்க முடியும் என்று மட்டும் கேட்கக் கூடாது.

ஆனால் முறைமை தவறாத ஒரு ரஷ்ய வாசகன் இப்படியெல்லாம் கேள்விகள் கேட்பதில்லை. முதல் காரணம், அவனுக்கு மூல இலக்கியம் தெரியாது. இரண்டாவதாக, அவனுக்குத் தாவரங்கள் மீது எந்த அக்கறையும் இல்லை. மூன்றாவதாக, ஷேக்ஸ்பியரில், அவன் ஆர்வமும், அக்கறையும் காட்டியதெல்லாம் ஒன்றே ஒன்றில்தான் – ஜெர்மன் விமர்சகர்களும், உள்ளூர் ரஷ்யப் போராட்டக்காரர்களும் அதில் கண்டுபிடித்த ‘தீர்வில்லா நிரந்தரக் கேள்விகள்’ என்ன என்பதை அறிவதுதான் அது! ஆகையால்,கோனெரலின் செல்ல நாய்க்குட்டிகளைச் சொல்லும்

“பார்! ட்ரேய், ப்லான்ஷ், மற்றும் ஸ்வீட்ஹார்ட், என்னைப் பார்த்துக் குரைக்கின்றன”

என்ற வரி, குரூரமான முறையில்

“வேட்டை நாய்களின் கூட்டம் ஒன்று என்னைத் துரத்திக் குரைக்கின்றது”

என உருமாறின பொழுதிலும், எவரும் அந்த நாய்க்குட்டிகளுக்கு என்னவாயிற்று என்று கவலைப்படவில்லை. எல்லா உள்ளூர் வண்ணங்களும், கையில் தெளிவாகக் கிட்டுவனவும், வேறெதுவும் பதிலுக்கு நிரப்ப முடியாதவையுமான விவரங்களும், அந்த வேட்டை நாய்களால் விழுங்கப் பட்டன.

(தொடரும்)

______________________________________________

பின் குறிப்புகள் தயாரிப்பு- மைத்ரேயன்

[1] ’ஷூக்களில் பக்கிள்கள் இருந்த காலத்தில்’  என்று நபகோவ் இந்தக் காலத்தைக் குறிக்கிறார்.  மொழிபெயர்ப்பாளர்களுக்கு எப்படி மூல எழுத்து உபாதை தரும் என்பதற்கு இந்த சொல்பிரயோகமே ஒரு உதாரணம்.  ஷூக்கள் போடுவது அத்தனை பழக்கத்தில் இன்னமும் வராத இந்தியாவிலும், தமிழகத்திலும் ஷூக்களில் பக்கிள்கள் எந்தக் காலத்தில் பயன்பட்டன, எப்போது அவை புழக்கத்தில் இருந்து மிகக் குறைந்தன என்பதெல்லாம் வாழ்வனுபவமாகத் தெரிய வாய்ப்பில்லை.  1790இல்தான், இன்று பரவலாக ஷூக்களில் காணப்படும் துளைகளும், அவற்றினூடே நுழைத்துப் பல இழைகளால பிணைத்து ‘லேஸ்’ நாடாக்களால் கட்டிக் கொள்வதும் கண்டு பிடிக்கப்பட்டன.  அதற்குப் பிறகே பக்கிள்களால் ஷூக்களைக் கட்டிக் காலில் பிணைப்பது கை விடப்பட்டது.  இப்போதும் அரை ஷூ வான, சாண்டல் எனப்படும் காலணி உலகெங்கும் பக்கிள்களால் பிணைக்கப்படுவது பரவலாகக் காணப்படுகிறது.  நபகோவ் ’ஷூ பக்கிள் காலம்’ என்ற சுருக்கப் பிரயோகத்தில் வரலாற்றில் தொழிற்சாலை உறபத்தி முறைகள் தனிநபர் அணியும் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படத் துவங்கிய காலத்தை நவீன காலத்தின் துவக்கம் என்பதாகப் பார்க்கிறார் என்பது தெளிவு.  எனவே இங்கு அது ‘மத்திம காலம்’  (medieval period) என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.  இது நபகோவின் மொழி லாகவமற்ற, சுருக்கத் தாவலற்ற பயன்பாடு.  ஆனால் இங்கு கருத்து புலப்பட வேறு எளிய முறை இருப்பதாகத் தெரியவில்லை.  இங்கு நபகோவ், நவீனயுகத்துக்கு முந்தைய காலத்தில் பல யூரோப்பிய நாடுகளில் பிறருடைய படைப்புகள், உழைப்பாலோ, சிந்தனையாலோ கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள், கவிதை, கதைகள், போன்றனவற்றை யாரும் தம்முடைய படைப்பாகக் காட்டிக் கொண்டு பயனடைந்தால் அது கடுமையாகத் தண்டிக்கப்பட்டதை ஒரு நல்ல முறைபோலக் கருதுவதாகத் தெரிவிக்கிறார்.  அந்த முறையை ‘Stocks’ என்று சொல்வார்கள்.  இரு மரக்கட்டைகளின் நடுவே தலை, கால் கைகளை நுழைக்க வேண்டிய திறப்புகளை வெட்டிஇருப்பார்கள்.  தண்டிக்கப் படுபவரின் தலை, கால்களை அத்துளைகளில் பொருத்தி விட்டு, அந்த இரு கட்டைகளின் ஓரங்களைக் கட்டி விட்டுப் பொதுவில் நிறுத்தி/ அமர்த்தி விடுவார்கள்.  போகிற வருகிற ஜனங்கள் விவரம் ஏதும் தெரியாவிட்டால் கூட ‘பொது எதிரி’ என்று கருதி இஷடம் போல அந்த மனிதர் மீது குப்பைகளை வீசுவது, மலத்தை வீசுவது, துப்புவது, அடிப்பது என்று பலவகையில் அவமானப்படுத்தி விட்டுப் போவார்.  இது யூரோப்பில் சகஜம்.  இந்தியாவில் இதற்குச் சமானமாக மொட்டை அடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்திக் கழுதை மீதேற்றி ஊர்வலம் விட்டு ஊரை விட்டுத் துரத்தி விடுவார்கள் அல்லது சில நாட்கள் ஊரை விட்டு விலக்கி வைப்பார்கள்.

இன்றைய வலை உலகக் காலத்தில் எது ஒருவருடைய ‘அசலான’ கருத்து என்பதே ஐயத்துக்குள்ளாகிய குழப்பமான காலகட்டத்தில் இப்படி தண்டனை வழங்க விரும்பும் கருத்து  சிறிது பத்தாம் பசலிக் கருத்து என்று நம் வாசகர்களுக்குத் தோன்ற வாய்ப்புண்டு.

[2] ‘Bien-être general’ (பியான் எட் ஜெனெஹல் என்பது ஃப்ரெஞ்சு உச்சரிப்புக்கு அருகில் வரும்) என்பதற்குச் சரியான ஆங்கிலச் சொல் ‘General wellbeing’ .  சமூகப் பொது நலம், அல்லது ஒருவரின் பொதுவான உடல் நலம் என்று எந்தப் பின்னணியில் பயன்படுத்தப்படுகிறதோ அதை ஒட்டிப் பொருள் மாறும்.  எந்த வகையிலும் இதற்கும் ராணுவப் பதவிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.  இருப்பினும் ஒரு மொழிபெயர்ப்பாளர் இப்படி மொழி பெயர்த்தாரென்றால் அது மொழியறியாமையோடு, அர்த்தத்தைத் தேடிக் காணும் பொறுப்பும் இல்லாமையைச் சுட்டுகிறது.  இங்கும் நபகோவ் தான் நகைப்பது எதை ஒட்டி என்று நமக்கு விளக்காமல் விடக் காரணம், அவர் பன்மொழிப் புலவர், வாசகரான நாமும் அந்த அளவுக்கு இருப்போம் என்று எதிர்பார்க்கிறாரா என்று யோசிக்கலாம்.  அல்லது மேலை வாசகர்களுக்கு இந்த ஃப்ரெஞ்சுச் சொல் மிகச் சாதாரணமாகத் தெரியுமோ என்னவோ.  இது நமக்குத் தெளிவான பின்னர் நபகோவின் அடுத்த வரி அவர் ஏன் இந்த மொழிபெயர்ப்பை ஒரு மோசமான செயலாகக் கருதுகிறார் என்பது புரியும்.  இந்தத் தவறை முதலில் செய்த ஒரு மொழிபெயர்ப்பாளர்,  இல்லாத ராணுவ தளபதியைத் தாம் உருவாக்கிய பிறகு அடுத்தது காவியார் என்கிற மீன் முட்டை- இது மிக அருமையான பதார்த்தமாக யூரோப்பில் கருதப் படுவது, அதையும் யாரோ உணவு மேஜையில் கைமாற்றிக் கொடுப்பதாக மொழிபெயர்க்கிறார்.  இவர் ஏதோ சாமானிய மொழி பெயர்ப்பாளரும் இல்லை.   ’ஹாம்லெட்’ என்கிற ஷேக்ஸ்பியரின் நாடகத்தை ஃப்ரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்க்கும் வேலையைச் செய்ய முனைபவர்.  இவருக்கு எந்த அளவு ஃப்ரெஞ்சு தெரியும், என்ன அளவுக்கு ஆங்கிலத்தின் உச்ச சாதனை எனக் கருதப்படும் ஒரு நாடகத்தை ஃப்ரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்திருப்பார் என்பதெல்லாம் நாம் ஊகிக்கத்தான் முடியும்.  அடுத்தடுத்த தவறுகளின் அடுக்கில் கதைப் போக்கு எப்படி எல்லாம் மாறுகிறது என்பது நமக்குப் புலனாக வேண்டும்.