மகரந்தம்

Stoning of Soraya – ஒரு விவரணப்படம்:

mozhan-marn-in-the-stoni-006

சொரய்யா என்றொரு இரானியப்பெண், அயத்துல்லா கொமேனியின் ஆட்சியின்போது, திருமணத்தை மீறிய தகாத உறவு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது ஏதோ வெஞ்சினத்தால் செய்யப்பட்ட கொலை அல்ல. அப்பெண் வசித்த கிராமத்து நிர்வாகமே தீர்ப்பாக எழுதிச் செய்த கொலை. அப்பெண்ணின் வயதான தந்தையே தன் மகளைக் கொல்வதற்கான முதல் கல்லை எடுத்து எறியும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். இப்போது அப்பெண்ணின் துயரமான கதை ஒரு விவரணப்படமாக வெளிவந்திருக்கிறது. கொலை செய்யப்பட்ட சொரய்யாவின் உறவுக்காரப்பெண் ஒருவரே, தன் உயிருக்கு ஏற்பட்ட பல அச்சுறுத்தல்களையும் மீறி சொரய்யாவின் கதையை வெளியே சொல்லி, இப்படம் எடுக்கப்படுவதற்கும் உறுதுணையாக இருந்திருக்கிறார். இப்படம் குறித்த ஒரு செய்தியை இங்கே படிக்கலாம். http://www.guardian.co.uk/film/2010/oct/17/stoning-of-soraya-m-review

மீண்டெழும் ஐரோப்பிய ஃபாசிஸம்: வலது சாரியின் எழுச்சி யூரோப்பில் தொடர்கிறது.  அனேகமாக யூரோப்பியரல்லாதவருக்கு எதிரான இயக்கங்கள் இவை. ஃப்ரான்ஸில் பல நூறாண்டுகளாக யூரோப்பில் வாழ்ந்து வரும் இந்திய மூலக் குடிகளான ரோமாக்களை அரசே நாடுகடத்தியது நினைவிருக்கலாம்.  ஜெர்மனியில் மொட்டைத்தலை நாஜிகள் இன்று பல வடிவில் எழுகிறார்கள் – யூதர்களையும், துருக்கியர், அரபியர் மேலும் இதர அன்னிய நாட்டவரையும் வெளியேற்றக் கோரி இவர்கள் இயக்கம் கிளம்பி இருக்கிறதாம்.  இதோ ஒரு செய்தி, ஜெர்மன் பத்திரிகையான, டெர் ஷ்பீகலில் இருந்து. (ஷ்பீகல்= கண்ணாடி)
http://www.spiegel.de/international/germany/0,1518,722868,00.html

makarantham1

முன்னாள் செங்கோட்டையான ஹங்கெரியிலும் இதே அன்னிய எதிர்ப்பு இயக்கம் கிளம்பி இருக்கிறது. இந்த அரசியல் கொண்ட ஒரு சிறுபான்மைக் கட்சி ஆட்சியில் உள்ள கட்சியோடு கூட்டணி வைத்ததால்தான் அந்தக் கட்சி ஆட்சியை பிடித்தது.  இந்த எதிர்ப்பு இயக்கங்கள் யூரோப்பில் பிற நாட்டவருக்கெதிராக வெறுப்பு எழுந்து வருவதைச் சுட்டுகின்றன.  விசித்திரம் என்னவென்றால் இந்த யூரோப்பியர் இந்தியாவில் சிறுபான்மையினர் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்று அடிக்கடி ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவைக் கண்டனம் செய்யும் தீர்மானங்களில் இந்தியாவுக்கெதிராக வாக்களிக்கிறார்கள் என்பதுதான்.

இளம் சீனர்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள்? அமெரிக்கப் பத்திரிகைகளே வினோதமானவை.  ஒரு பத்து பேரிடம் கேள்வி கேட்டுப் பதில்களைப் பெற்று விட்டு 1200 மிலியன் மக்கள் உள்ள சீனாவின் பெரும் குவியலான இளைஞர்கள் பற்றிய ஒரு பொது முடிவை அவை அடைந்து விடும்.  இங்கே அமெரிக்கப் பத்திரிகை நியூஸ்வீக் சீனர்களில் மெத்தப் படித்த சில இளைஞர்களைப் பேட்டி கண்டு அடைந்த முடிவு. அவர்கள் மேல்படிப்புக்கு அமெரிக்கா வந்து விட்டு, பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்து பணம் குவித்துக் கொண்டு,  வயதான அம்மா அப்பாக்களைப் பராமரித்துக்கொண்டு ஓய்வு பெறத் திட்டமிடுகிறார்கள்.  சிலர் யூரோப்பிற்குப் போவார்கள், பெருவாரி சீனாவிலேயே இருப்பார்கள் என்று முடிக்கிறது.  செய்தியை இங்கே பார்க்கலாம்.

http://www.newsweek.com/2010/10/10/china-s-time-is-now.html

வேலியே மின்சாரம் உற்பத்தி செய்தால்? நம் நாட்டில் மணலரிப்பைத் தடுக்கவும், தோட்டங்களில் பல வகைச் செடிகளைக் காக்கவும் காற்றுத் தடுப்பாக சவுக்குமரங்களைப் பயிரிடுவார்கள்.  இவ்வாறு காற்றுத்தடுப்புக்காகக் கட்டப்படும் வேலியை வேறு விதங்களில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று யோசித்ததில் ஒரு புதிய தொழில்நுட்பம் கிடைத்திருக்கிறது. மரங்களைப் போன்ற வடிவு கொண்ட செயற்கைக் குச்சிகள் சவுக்கந்தோப்புகள் போல நெருக்கமாக நடப்பட்டு, அவை காற்றில் அலையும்போது அந்த அலைவில் இருந்து மின்சக்தி உற்பத்தி செய்யத் திட்டமிடுகிறார்கள்.

windstalk

மேற்கில் அதிகளவில் காணப்படும் காற்றாலை மின் உற்பத்தி கேந்திரங்களின் குறைபாடுகள் இந்த செயற்கை வேலி முறையில் தவிர்க்கப்படும் என்று சொல்கிறார்கள். காற்றாலை விசிறிகள்  பறவைகளுக்குச் சேதம் விளைவிப்பதோடு, பல ஊர்களில் அந்த விசிறிகளின் ரொய்ங் என்ற சப்தம் அமைதியைக் குலைக்கிறது என்று மக்கள் குறை சொல்கிறார்களாம். அந்தக் குறைகளை இந்தப் புதுமுறைச் செயற்கைக் காடு போன்ற உற்பத்தி முறை நீக்கும் என்கிறது இந்தச் செய்தி.  படங்களும் செய்தியும் இங்கே பார்க்கலாம்.

http://www.gizmag.com/windstalk-concept/16647/

ஆட்கள் பற்றாக்குறையில் சிக்கித்தவிக்கும் நேடோ ராணுவம்: வெற்றுக் கிளைகள் என்ற பெயரில் ஒரு புத்தகம் சில வருடங்கள் முன் வெளிவந்தது.  (Bare Branches: The Security Implications of Asia’s Surplus Male Population, Valerie Hudson and Andrea den Boer, 2004).

அது கொடுத்த முடிவுகளின் படி ஆசியாவில் வாலிபர்களின் எண்ணிக்கை பெருத்து வருகிறது, அதிலும் ஆண்களின் எண்ணிக்கை கூடி வருகிறது.  இவர்களுக்கு வாழ்வில் பிடிப்பு கொடுக்கக் கூடிய பல அம்சங்கள் குறைந்து வருகின்றன, வேலை வாய்ப்புகள், பெண் துணைகள், குடும்பங்களின் ணைப்பு இத்தியாதி வசதிகள் குறைவதால் இவர்களால் அரசியலமைப்புக்கு ஆபத்து கூடும்.  போர்கள் எழுவதற்கு வாய்ப்பு அதிகம் என்றெல்லாம் துரும்பிலிருந்து காடாக ஆக்கித் தம் முடிவுகளை வெளியிட்டார்கள் இந்த மக்கள் தொகைக் கணக்காய்வாளர்கள்.  புத்தகம் வெளிவந்து ஆறு ஆண்டுகளாயின. அப்புத்தகத்தின் ஆய்வுகளுக்கு ஆதாரமான கணக்குகளோ குறைந்தது பத்தாண்டுகளுக்கும் மேலானவை.  ஆக இந்த முடிவுகள் அத்தனை ஒன்றும் சரியானவை அல்ல என்று இன்று நாம் திரும்பிப் பார்த்துச் சொல்லலாம்.  ஆசிய நாடுகளில் வன்முறை கூடி இருக்கிறது, ஆனால் பெரும் போர் ஏதும் எழவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மாறாக யூரோப்பியரின் மக்கள் தொகைக் கணக்குகளை ஆய்பவர்கள் யூரோப்பில் இளைஞர் தொகை குறைந்து வருகிறது, குழந்தைகள் பெறுவதை யூரோப்பியர் மிகவும் குறைத்துக் கொண்டு விட்டனர், இதனால் பல நாடுகளில் அந்த நாட்டு மக்களுக்கு வயதான காலத்தில் சேவைகள் செய்வதற்கே பெரும் பட்டாளங்களாக பிற கண்டங்களில் இருந்தும் நாடுகளிலிருந்தும் தொழிலாளர்களை இறக்க்குமதி செய்ய வேண்டி இருக்கும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரு முக்கிய விளைவை அவர்கள் கவனிக்கவில்லை போலிருக்கிறது.  இளைஞர்கள் தொழில்துறைக்கு மட்டும் வேண்டியதில்லை, பட்டாளங்களுக்கும் வேண்டும்.  யூரோப்பில் இளைஞர் தொகை குறையக் குறைய அங்குள்ள ராணுவங்களுக்கு ஆட்களும் குறைவாகவே கிட்டுகிறார்கள் என நாம் ஊகிக்கலாம்.  ஒரு விளைவு- நேட்டோ என்கிற யூரோப்பிய நாட்டுக் கூட்டணி, இப்போது உலகெங்கும் தன் ராணுவ வீரர்களை அனுப்பி வைப்பதைக் கைவிட விரும்புகிறது.  நாங்கள் ஒன்றும் உலகுக்குப் போலிஸ்காரர்கள் அல்ல என்று நேட்டொ சொல்லத் துவங்கி இருக்கிறது.  ஒரு வழியாக யூரோப்பியரின் ராணுவச் சிந்தனை ஒடுங்குகிறது என்று நாம் கருத வாய்ப்புள்ளது.  அதை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

http://atlanticreview.org/archives/401-NATOs-Difficulties-to-Get-More-Troops-for-Afghanistan.html