நெடுஞ்சாலை

bus_driver_view

தார்த்த வாதம் தோற்றுவிட்டது என்றார்கள். பேராசிரியர்களாலும், திறனாய்வாளர்களாலும் இலக்கியம் அடுத்ததற்கும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவிட்டதாகவும் அதி நவீனப்பட்டு விட்டதாயும் நண்டு கொழுத்தால் குண்டில் கிடக்காது எனவும் வாழி பாடினார்கள். நம்பிய படைப்பாளிகளும் கடைக்கால் தோண்டாமலேயே மூன்றாம் தளக்கட்டுமானத்தில் இறங்கினார்கள்.

யதார்த்தவாதம் எழுதுகிறவர்கள் ஏதோ அம்பும் வில்லும் கொண்டு போருக்குப் புறப்பட்ட ஆதிகாலத்து படைப்பு மாந்தர் போன்றும், நவீனத்துவம் – பின்னவீனத்துவம் – மாய யதார்த்தம் என்பன Heat seeking Ballistic missiles என்றும் ஒரு பிரமையைத் தோற்றுவிக்க முயன்றனர். ‘மோஸ்தர்’ எனும் சொல்லையும், ‘ஆகச்சிறந்த’ எனும் சொல்லையும் சமகாலப் படைப்புலகுக்கு மறு அறிமுகம் செய்துவைத்தவர், முப்பதைந்து ஆண்டுகளுக்கு முன்னர், சுந்தர ராமசாமி. இன்று அவ்விரு சொற்களையும் மாறி மாறிப் பிரயோகிப்பதனால் இலக்கியத் தகுதியை எய்திவிட முடியும் என ஆளாளுக்குக் கையாண்டு கொண்டிருப்பதைப் போன்று எங்கு பார்த்தாலும் அசரீரி போல் குரல்கள் ஒலித்தன, ‘யதார்த்த வாதம் செத்து விட்டது’.

எந்த வாதம் என்றால் என்ன, சூலை என்றால் என்ன, இலக்கியம் வென்றால் போதாதா?

படைப்பாளி எதையும் எழுதப் புகுமுன் போருக்குப் போகிறவன் போல்தான். தனது களம், காலம், கரு சார்ந்து தனது உத்தியை அமைத்துக்கொள்கிறான். மொழியைத் தேர்ந்து கொள்கிறான். தற்செயலாக அமைவதும் திட்டமிட்டுக் கொள்வதும் உண்டு. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்றொரு கூற்றுண்டு வண்டமிழில். இயல்பாக ஒரு மெக்கானிக் சொல்வதில்லையா ’24/26 ஸ்பேனர் எடு’ என அது போல.

ஒவ்வொரு படைப்புக்கும் போர்த் தீவிரத்துடன் செயல்படும் படைப்பாளி கண்மணி குணசேகரன். அவருக்குப் புல்லும் ஆயுதம். எழுதப் போகும் வாழ்க்கை பற்றிய தெளிவான திட்டமுண்டு. உத்தியை யோசித்து அலைக்கழிகிறவரும் இல்லை.

14thmani_185248eகண்மணியின் முதல் நாவல் ‘அஞ்சலை’. தமிழ்ப்பெண்ணின் அவலங்கள் பேசும் குறிப்பான இரண்டு நாவல்களில் ஒன்று. இன்னொன்று கவிஞர் யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’. இவ்விருவருமே இலக்கிய இசங்களின் பின்னால் பாய்ந்து பறந்து புழுதி பரப்பியவர் இல்லை. ‘கோரை’கண்மணியின் இரண்டாவது நாவல். மூன்றாவது நாவல், இந்த ஆண்டில் வெளியான ‘நெடுஞ்சாலை’. அவரது வழக்கமான களத்தில்
நின்றும் கால்மாற்றி சமுண்டி இருக்கிறார். களம் பெயர்ந்தாலும் கண்மணியின் அங்கதம் அவரைக் கை விடுவதில்லை. இயல்பான அங்கதத்துடன் கூறப்பட்டிருக்கும் நாவல் இது. அங்கதம் என்பது இரு கரங்களின் ஆட்காட்டி விரல்களால் வாயின் ஓரங்களை இழுத்து வலிச்சம் காட்டுவதல்ல. அது தானாய்ப் பூப்பது. கண்மணி எழுத்தின் தன்மை அது.

எனது கணிப்பில் அபூர்வமான சிறுகதை எழுத்தாளர்கள் ஜே.பி.சாணக்கியா, காலபைரவன், பா.திருச்செந்தாழை, எஸ்.செந்தில்குமார், கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால் எனும் சிலர். அவருள் கண்மணியும், சு.வேணுகோபாலும் ஒப்பிட்டு நோக்கத் தகுந்தவர்கள். வெவ்வேறு களங்கள், மொழிகள், பண்பாடுகள், கதை சொலல் உத்திகள், ஆவேசங்கள். எனினும் புனைவியல் ஒன்று. தமிழ்ச் சூழலில் கருதிக் கூட்டியல்லால் வேறு காரணங்களுக்காகப் புறக்கணிக்க இயலாத எழுத்து இருவருடையதும். கண்மணியின் மொழி மீது என்றும் எனக்குத் தணியாத மோகமுண்டு. தமிழுக்கு ‘நடு நாட்டுச் சொல்லகராதி’ தந்தவர். பல்கலைக்கழகங்கள் செய்யத் தகும் பணி. அவர்களுக்கு அதைவிட இன்றியமையாத வேலைகள் இருக்கின்றன. கண்மணியின் அந்த உழைப்புக்குக் கைம்மாறாக என்னால் ஒரு கட்டுரைதான் எழுத முடிந்தது. என்னைக் கேட்டால் இது போன்ற பணிகளுக்கு ஒரு கலைமாமணி, பத்மஸ்ரீ தரலாம். ஆனால் அங்கே புதிய ரஜினி படத்துக்கு டிக்கெட் வாங்குவதுபோல் பெரிய அடிதடியாக இருக்கிறது. சினிமாக்காரனுக்குக் கொடுத்ததுபோக படைப்பாளிக்கு என்ன மிஞ்சும்? அவன் என்றும் கடைங்காணி.

நம்மில் எல்லோரும் பெரும்பாலும் சில முறையாவது நகரப் பேருந்துகளில் பயணம் செய்திருப்போம். எனக்கு முதல் டவுன் பஸ் ஏறிய ஞாபகம் பத்து வயதுப் பிராயத்தில். அம்மா மண்டைக்காட்டுக் கொடைக்கு, ஒரு மாசி மாத திங்கள்கிழமை பிற்பகலில் கூட்டிப் போனபோது. கரிக்கேஸ் வண்டி என்பார்கள். டிரைவர் இருக்கையில் இருந்து முன் மண்டை   4 அடி நீட்டிக் கொண்டிருக்கும். —-|___
போன்ற ஓரங்குல கம்பியை முன்னால் பொருத்தி வேகமாகச் சுழற்றினால் மோட்டார் ஸ்டார்ட் ஆகும். வண்டி புறப்பட்டுப் போனபின் என்ஜின் இருந்த இடத்தில் தீக்கங்குகள் மினுங்கும்.

அதுமுதல் அரை நூற்றாண்டாக அலுக்காமல், சலிக்காமல் டவுன்பஸ் பயணம் செய்பவன் நான். அலுப்பின்றி, சலிப்பின்றி. டவுன்பஸ் பயணம் என்றால் தமிழ்நாட்டுக்கு உள்ளேதானே எனத் தீர்ப்பெழுதி அதைத் திருத்தி எழுத நில்லாதீர். கேரளம், ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி, கோவா, உத்தரபிரதேசம், பீஹார், அரியானா, குஜராத் எனப் பலவாய். தினுசு தினுசான பேருந்துகள், வண்ணங்கள், இருக்கைகள், கதவுகள், கைப்பிடிக் கம்பிகள், பயணச் சீட்டுகள், ஓட்டுநர், நடத்துநர், சாலைகள், சக பயணிகள். பல்வேறு பட்ட நாட்களில், நேரங்களில், பருவகாலங்களில், தூரங்களில் பயணம் செய்து பார்த்தல்லாமல் அந்த அனுபவங்கள் எவருக்கும் எளிதாக அர்த்தமாகாது.

ஆனால், கண்மணி குணசேகரனின் ‘நெடுஞ்சாலை’ வாசித்தால் ஒரு பூரணமான உறுதி, இன்றேல் பைசா வாபஸ்.

‘தமிழினி’ வெளியீடு, 384 பக்கங்கள், கெட்டி அட்டை, உறுதியான கட்டு, உயர்ந்த கனமற்ற தாள். விருத்தாச்சலம் – பாலக்கொல்லை சாலையின் மரங்களையும் பேருந்துகளையும் காட்டும் கண்ணுக் குளிர்ச்சியான அட்டை ஒரு சிறப்பு. விலை ரூ.230/-.

இந்நூலை, கண்மணி, ‘ராப்பகலாய் கண் சோராது தன்னுயிராய் பயணியர் உயிர் பேணும் பேருந்து ஓட்டுநர்களுக்கு’ என்று காணிக்கை செய்கிறார். ‘அரசு போக்குவரத்துக் கழகம் ஒன்றில் தற்காலிகப் பணியாற்றும் மூன்று இளைஞர்களின் பாடுகளை மண் மொழியில் சித்தரிக்கும் நாவல். இயல்புவாத எழுத்தில் தமிழின் சிறந்த படைப்பாளியான கண்மணி குணசேகரன் தன் தடத்தில் இருந்து விலகி அங்கதம், குறியீடுகளோடு புனைந்த வலுவான கதை நெடுஞ்சாலை’ என்கிறது நூலின் பின்னட்டை.

அரசு போக்குவரத்துப் பணிமனை, பேருந்துகள், நடத்துநர், ஓட்டுநர், மெக்கானிக்குகள் இவர்களை மையம் கொண்டதோரு 400 பக்க நாவலை எடுத்த கை கீழே வைக்காமல் வாசிக்க முடிவது என்பது அந்த எழுத்தின் சரிகை, ஜாலர், குஞ்சலங்கள், வேலைப்பாடுகள், வெளிநாட்டு வாசனைகளினால் அல்ல. வாழ்க்கையை நேரடியாகக்த் தரிசிப்பவன், உழல்பவன் எழுதவரும்போது அவன் தத்துவத் தேட்டங்களில் கால விரயம் செய்யவேண்டியதில்லை போலும்.

போக்குவரத்துப் பணிமணி ஒன்றின் செயல்பாடுகளை நடத்துநர், ஓட்டுநர், மெக்கானிக்குகள், பிற பணியாளர்கள், அதிகாரிகள் நடவடிக்கைகளை மிகத் துல்லியமாகப் பதிவு செய்கிறது ‘நெடுஞ்சாலை’. நூலாசிரியர் விருத்தாச்சலம் அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் மெக்கானிக்காகப் பணிபுரிகிறவர் என்பதையும், வீல் கழற்றும்போது வேகத்துடன் கால் முட்டின் மேல் வந்து விழுந்து, ஆண்டுகள் பலவாக அந்த பாதிப்பில் இருந்து முற்றிலுமாக மீளாதவர் என்பதையும் வாசகர்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

ஆனால் இந்த நாவலை வாசிப்பதன் மூலம், தாம் பயணம் செய்யும் அரசுப் பேருந்தின் ஒவ்வொரு உதிரிப் பாகத்திலும் எவரின் வியர்வையோ, பசியோ, காமமோ, பிள்ளை இலாப் பெருந்துயரோ, ஊழலில் ஊறிய அதிகார இளிப்போ, ஆளும் வர்க்கத்தின் வெகுஜனத் துரோகமோ, காதல் தோல்வியோ, கைக்குழந்தையின் அழுகையோ, விவசாயின் அலுப்போ தோய்ந்திருப்பதை வாசகன் உணரலாம்.

பணிமனை அனுபவமும் கலைமனதும் மொழி ஆளுமையும் இல்லாத ஒருவரால் இதுபோன்ற நாவலை எழுதிவிட இயலாது. தத்துவங்களும், தரிசனங்களும் காலத்தால் இனி அமையும். கண்மணியின் சொற்களை இரவல் வாங்கினால், ‘கொட்டிக் கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது’. ‘நீலச்சட்டையில் வியர்வை உப்புப் பூத்தி வெளிரோடிக் கிடந்தது’ என்று உத்தேசமாக எழுதிவிடவும் இயலாது.

இந்த நாவல் பேசுவது போக்குவரத்துப் பணி மனையின் டீசல் கசடு தோய்ந்த வாழ்க்கை. பிராஞ்ச் மேனேஜர், அசிஸ்ட்டெண்ட் இன்ஜினியர் முதலான அதிகாரி தொட்டு அத்துக்கூலி சி.எல் வரை அதன் கதா பாத்திரங்கள். அதற்குள் ஆசாபாசங்கள் நிறைந்த மனித வாழ்க்கை இடைவிடாதும் இன்னல் மண்டியும் சலிக்கிறது. எத்தனையோ தீவிரமான குறுங்கதைகள், கிளைக்கதைகள்! யாரைக்  குற்றப்படுத்த என யோசித்து முடிக்கு முன் அடுத்த குற்றம் நிகழ்ந்து விடுகிறது. அந்த நிகழ்விலும்  இதே கதைதான். தமிழரசன் – கலைச்செல்வி, ஏழை முத்து – பார்வதி போன்ற ஊடுபாவுகள். கண்மணி சொல்கிறார், ‘மொறத்த திண்ணாச்சி, இன்னம் முச்சியிலே என்னா கெடக்கு?’ என்று.

காஷுவல் லேபர்களாக கண்டக்டர், டிரைவர், மெக்கானிக் என பின்னப்பட்ட கதை. பின்னப்பட்ட எனும்போது ‘கோர்க்கப்பட்ட’ என்றும் ‘பங்கப்பட்ட’ என்றும் நீங்கள் பொருள்கொள்ளலாம். ‘செத்தாத்தான் தெரியும் செட்டியார் வாழ்வு’. அவர்களும் அவர்களது குடும்பங்களையும் எங்கும் நீங்கள் சாதாரணமாகக் கண்டுவிட முடியும். நாவல் என்பது கதை சொல்வதல்ல என்று எனக்கும் உங்களுக்கும் தெரியும். இந்த நாவலை வாசித்தபின் பணிமனை ஒன்றினுள் ஒரு சி.எல் வாழ்க்கை புது அர்த்தத்தில் புரியும் நமக்கு. அரை நூற்றாண்டு காலப் பேருந்துப் பயணம் என்று சொன்னேன். ‘நெடுஞ்சாலை’ வாசித்தபின் ஓட்டுநர், நடத்துநர் பற்றிய எனது மதிப்பீடு முற்றிலும் மாறிப் போயிற்று. ‘எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?’.

நான் வழக்கமாகப் பயணம் செய்யும் நகரப்பேருந்து ஒன்று நட்ட நடு மத்தியானத்தில் டீசல் பிடிக்கப் பணிமனைக்குள் நுழையும். கண்மணி காட்டிய யதார்த்தம் தவிர்க்க முடியாமல் உறுத்தும். கண்மணியின் கூற்றுப்படி, ‘ஏதோ பீயத் தின்னம் வாயைக் கழுவினோம்ணு’ இருக்கமுடியவில்லை.

ஏழமுத்துவின் முதல் சிங்கிள் ஓட்டும் அனுபவம் Hadley Chase நாவல் வாசிப்பது போலிருக்கிறது. அத்தனை நெருக்கடியும் எதிர்பார்ப்பும் நிறைந்ததாக.

கண்மணி எழுத்தில் எந்தத் துன்பத்திலும் இக்கட்டிலும் ‘குமுக்’கென்று கொப்பளித்து வரும் நகைச்சுவை உண்டு. மிக இறுக்கமான பணிமனை வாழ்க்கைச் சூழலிலும் அது அவரைக் கைவிட்டுவிடவில்லை. ஏழமுத்துவின் பெரியப்பா முறைக்காரரான பெரியசாமி சி.எல் வேலை வாங்கிக்கொடுத்த சந்தோஷத்தை டாஸ்மாக் கடையில் கொண்டாடும் காட்சி ஒன்று போதும்.

கவிதை நூலை அறிமுகப்படுத்துவது போல், ஒரு நாவலில் இருந்து மேற்கோள்கள் காட்டுவது எளிதன்று. வாசித்துதான் அனுபவிக்கணும்.

திறமையான கொத்தனாராக உருவெடுக்கும் அய்யனார் – சந்திரா உறவு அற்புதமானதோரு மனவெளியில் கலந்து மிதக்கிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட இடைவெளியும், மறு உறவும் இந்த நாவலின் மறக்க முடியாத அத்தியாயங்களில் ஒன்று. நுட்பமான கணவன் – மனைவி உறவு ஏழமுத்து – பார்வதி உறவு. நகரப் பேருந்துகளில் காலை, மாலை பள்ளி, கல்லூரி நேரங்களில் பயணம் செய்வோர் பலமுறை காதல் காவியங்களில் முன்னோட்டங்கள் காண இயலும். குறிப்பாக கண்டக்டர் – பள்ளி மாணவி. தமிழரசன் – கலைச்செல்வி காதல் வியப்பாக இல்லை, ஆனால் வலி மிகுந்ததாக இருக்கிறது.

salire_sul_busநாவலின் இறுதிப் பக்கங்களில், ஏழமுத்து டிரைவராகவும் தமிழரசன் கண்டக்டராகவும் ஓட நேர்ந்த, கண்டம் ஆகப்போகிற பருவ காலத்தில் கலகலத்த பேருந்தை எடுத்துக் கொண்டு விருத்தாச்சலம் – கோணாங்குப்பம் திருவிழா ஸ்பெஷல் ஓடுவது. அந்த டப்பா காயலான் கடைவண்டியை, சென்னைக்கு விழாக்காலப் பேருந்தாகத் திருப்பி விடுகிற கூத்து. வாசிக்க வாசிக்கத் திகிலாகிறது நமக்கு. திகிலில் ஊடாடும் நகையும். அந்தத் திகில் நேரத்து அங்கதம் கண்மணி எழுத்தின் சிறப்பம்சம். சென்னைக்கு ஸ்பெஷல் போன வண்டி என்ன ஆச்சு என்பதை வாசிக்க வாசிக்க ‘ஏர்-போர்ட்’ நாவல் படித்த பள்ளிப்பருவத்து நாட்கள் நினைவு வந்தன.

தான் பணிபுரியும் பணிமனை வாழ்க்கைக்கு மிகுந்த நியாய உணர்வுடன் செயல்பட்டு இருக்கிறார் கண்மணி. டீசல் மிச்சம் பிடிப்பதிலேயே குறியாய் இருக்கிற கிளை மேலாளர், ஓட்டை உதிரிகளை ஒட்டுமானம் செய்யத் தூண்டும் துணைப் பொறியாளர், டீசல் பிடிப்பவர், மெக்கானிக்குகள், அப்ரண்டிஸ்கள், ஷண்டிங் டிரைவர், பணிமனை வாயிலோன், ஓட்டுநர், நடத்துநர், டே ஓடுபவர்கள், இரவுப்பணி, தூக்கக் கலக்கம், சோம்பல், பணி முடிக்கும் கெடுபிடிகள் என மனித முகங்கள். ஒரு முற்போக்கு முகாம் எழுத்தாளனைப் போல, பொறுப்பைக் கைமாற்றிவிட, நிர்வாகத்தின் மீது காரசாரமான குற்றப்பத்திரிகை வாசிக்க அவர் முயலவில்லை. ஊழல் பேசப்படுவதில்லை, உணர்த்தப்படுகிறது.

யாரோடும் பகையின்றி, காப்பின்றி, சூழலின் அவலம் உணர்த்தப் பெறுகிறது. சீர்கெட்டுப்போன, இனி சீர்திருத்தவே முடியாதோ எனும் அச்சம் துளிர்க்கும் உணர்வும் எழுப்பிக் காட்டப்படுகிறது. அரசுத்துறை ஒன்றின் இயந்திரத்தின் திருகாணி ஒன்றை மட்டும் கழற்றி வாசகனுக்குக் காட்டிவிட்டு திரும்பப் பொருத்திவிட்டு நகர்ந்து விடுகிறார், யானறியேன் பராபரமே என.

இன்றைய சூழலில் படைப்பாளி என்ன செய்வான் பாவம்? போராடும் எழுத்து யுத்தகால எழுத்து எனக் கெட்ட கனவு மயக்கத்தில் எத்தனை நாள் ஆழ்ந்திருப்போம்? பேனாவால் புரட்சி சமைக்க எல்லோருக்கும் ஆசை இருக்கிறது, ஆனால் பேன் குத்துவதுதான் சாத்தியமாகும் இன்று.

காய்தல் உவத்தல் இன்றி வாசித்துப் பாருங்கள். கண்மணியின் கைவண்ணம் புலப்படும்.

கண்மணி குணசேகரனின் ‘காலடியில் குவியும் நிழல்வேளை’ கவிதைத் தொகுப்பிலிருந்து, ‘நெடுஞ்சாலை’ முகப்பில் ஒரு நீண்டகவிதை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. நீங்களும் வாசித்துப் பார்க்கலாம்.

உயிர்ப்பூ

கனத்த சக்கரங்களின் கீழே
அரைபட்டுக் கிடக்கும்
கருத்த நெடுஞ்சாலை.
ஓரத்தில் ஒரு செடி.

அடுப்பறையில் கை நழுவிய
பாத்திர ஒலியில்
கண்விழிக்கும்
ஏணையின் மழலையாய்…
ஒரு கனரக வாகனப் பேரதிர்வில்
அதன் முளைப்பு
நிகழ்ந்திருக்க வேண்டும்

புகைக்கழிவை
சுவாசித்து சுவாசித்து
கடுமை பூசியிருக்கிறது
அதன் தண்டுகளும் இலைகளும்

சிண்டைப் பிடித்து ஆட்டுவதான
காற்றின் சிம்பல்களில்
அலைக்கழித்து
வெட்டுக்கிளிகளும்
வெறுத்தொதுக்கிய
அதன் கனத்த தழைகளுக்கு
ஆடுமாடுகளால்
ஒருபோதும்
ஆபத்து எதுவுமில்லை.

காற்றும் இரைச்சலுமாய்
எப்போதும்
கண்விழித்தே காலந்தள்ளும்
அதன் கடுமை வாழ்வின்
உச்சியிலும்
ஒரு சிரிப்பு..
மேலே படிந்த
வாகனப் புழுதியை
சற்றே கழுவிக்கொள்ளலாம்
என நினைத்த
இளம் பனிக்காலையில்
ஒரு மகிழ்வாகன முகப்பொளியில்
மொட்டவிழ்ந்த
அதன் ஒற்றைப் பூவில்…

தேன் குடித்துக் கொண்டிருக்கிறது
நிறத்தை இழக்காத
ஒரு வணத்துப்பூச்சி.

இப்புத்தகத்தை ஆன்லைனில் இங்கே வாங்கலாம்.