நகரும் வீடுகள்

house

அந்த வீடும் அப்பாவுக்குச் சரிப்பட்டு வரவில்லை என்றுதான் தோன்றியது. அவசரப்பட்டு மாற்றி விட்டோமோ என்று மனசு சங்கடப்பட்டது.

வீட்டிற்கே படியளக்கக் கூடியவர் அப்பாதான். அவரது வசதிக்கு இல்லாமல் எது இருந்தென்ன போயென்ன? வீட்டில் தனக்கென்று ஒரு இடம் அமையாமல் தவித்தார் அப்பா. எதுவும் வேண்டாம் என்பதுபோல் வாசலில் போய் அமர்ந்து கொண்டார். ஒரு குழந்தையின் கோபம் போலிருந்தது அது. யாருடனும் எனக்குப் பேசப் பிரியமில்லை என்பதாக!

அந்த இடம் கூட அவருக்குப் பொருந்தவில்லைதான். வலது, இடது புறமிருந்த வீடுகளிலிருந்து பெண்மணிகள் வாசலில் நின்று பேசிக் கொண்டார்கள். பொதுவாகப் பெண்களின் பேச்சு கொல்லைப் புறமிருக்கும் இரு வீடுகளுக்கிடையிலான காம்ப்வுன்ட் சுவரின் நடுவேதான். இங்கே கொல்லைப்புறம் என்பதே ஏதோ ஒரு இடுக்கு என்பது போல்தான் இருக்கிறது. யாரையும் யாரும் சந்திக்க முடியாத உயரமான சுவர்கள் வீடுகளைப் பிரித்து விடுகின்றன.

நடுவே அவர்களுக்குக் குறுக்கே, தான் புகுந்து விட்டது போல் உணர்ந்தார் அப்பா. அவர் போய் உட்கார்ந்ததுமே அவர்களின் பேச்சு தடைப்பட்டது. சட்டென்று புரிந்து கொண்டார்.

“நீங்க பாட்டுக்குப் பேசுங்கோ…நா சித்த காத்தாட உட்காரலாம்னு வந்தேன்…”- சொல்லிப் பார்த்தார். அப்பா ஒரு கூச்ச சுபாவி. இந்த வயதிலும் அவரிடமிருந்து இன்னும் அந்தக் குணம் விலகவில்லை. இதைக்கூட அப்பா எப்படித்தான் சொன்னாரோ, ஆச்சரியம்தான்!

“அப்புறம் பார்க்கிறேங்க்கா…வேலையிருக்கு…” என்று ஒருத்தி உள்ளே போய் விட்டாள். அதைப் பார்த்து இன்னொருத்தியும் தன்னை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

அப்பாவுக்குத் தர்ம சங்கடமாகி விட்டது. நம்மால் ஒருவருக்கு இடைஞ்சலா? அதுதான் அவரது நினைப்பாக இருக்க வேண்டும்.

‘என்னடாது…’ என்றவாறே உள்ளே காலடி எடுத்து வைத்தவா; படக் கென்று கதவில் இடித்துக் கொண்டாh;.

“பார்த்து எழுந்திருக்கக் கூடாதா? ஏற்கனவே கால் கொஞ்சம் கோணல்…கவனமா வாங்கோ..வீடு பழகற வரைக்கும்…நிலை இடிக்கப் போறது…”

“நிலை அதுவா வந்து இடிக்கிறது? நாமதான் அதை இடிக்கிறோம்…”- அப்பா தானே சிரித்துக் கொண்டார்.

உறாலில் பெரிய இரும்புக் கட்டில் போட்டிருந்தது. ரெண்டு போ; படுக்கலாம். அது முக்கால்வாசி இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது. நிமிர்த்திப் போட்டாலோ எதிரே ஜன்னல் கதவைத் திறப்பதும் மூடுவதும் சிரமம். இரண்டு பக்கக் கால்கள் வேறு தேவையில்லாமல் நீட்டிக் கொண்டு இடைஞ்சல் செய்தது.

அது பாட்டி கடைசி வரை படுத்திருந்த கட்டில். முந்தைய வீட்டிலும் அது உறாலில்தான் கிடந்தது. ராத்திரி அப்பா அருகே தரையில் படுத்துக் கொள்வார். பாட்டி ஏதாவது தூக்கத்தில் முனகினால் கூட, அம்மா…அம்மா…என்னாச்சு…ஏதாச்சும் கனவு கண்டியா? என்றோ, குடிக்கிறதுக்குத் தண்ணீர் தரட்டுமா என்றோ அப்பா கேட்டுக் கொண்டே இருப்பார். பாட்டி பாத்ரூம் போக எழுந்திருக்கும்போது ‘கிருஷ்ணா…டே கிருஷ்ணா’ என்று அப்பாவை எழுப்பி விட்டுத்தான் போவாள். பக்கச் சுவர்களைப் பிடித்துக் கொண்டு மெது மெதுவாய்ப் போய் விடுவாள் என்றாலும், எங்கே கீழே விழுந்து விடுவாளோ என்று அப்பாவும் எழுந்து கொண்டு ஒரு கைப் பிடியாய் நின்று கூடவே பாத்ரூம் வரை சென்று விட்டு வருவார்.

‘நீ படுத்துக்கோடா…படுத்துண்டமேனிக்கே பார்த்துண்டிருந்தாப் போதும்…நா போய்ட்டு வந்துடுவேன்…” என்று பாட்டி சொன்னாலும் அப்பா கேட்க மாட்டார். உனக்கு இருட்டுக்குள்ள லைட் சுவிட்ச் போடத் தெரியாது…எதிலயாவது கைய வச்சிருவ…நா வர்றேன்…” என்று அப்பா போய் லைட்டைப் போட்டு விட்டு வெளியே காத்துக் கொண்டிருப்பார். பாட்டி வெளியே வந்ததும் மீண்டும் கொண்டு வந்து படுக்க வைத்து விட்டு, திரும்பப் போய் இரண்டு வாளி ஜலத்தை எடுத்து அடித்து ஊற்றி விட்டு, லைட்டை அணைத்து விட்டு வந்து படுத்துக் கொள்வார் அப்பா.

எங்களின் சிறு வயதிலிருந்து பார்த்த பொறுமையும், அடக்கமும், மரியாதையும் இன்னும் இம்மியும் குறையவில்லை அப்பாவிடம். பகலில் கட்டிலிருக்குக் கீழே அமர்ந்துகொண்டு பாட்டியிடம் சமாச்சாரம் பேசிக் கொண்டிருப்பார் அப்பா. எதுவானாலும் தன் அம்மாவிடம் சொல்லியாக வேண்டும் அவருக்கு. பாட்டியிடம் சொல்லும்போது அம்மா கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். தன்னிடம் பகிர்ந்து கொள்ளவில்லையே என்கிற ஆதங்கமெல்லாம் அம்மாவுக்கு இல்லை. தன் மாமியார் மீது அத்தனை மதிப்பும் மரியாதையும் உண்டு அம்மாவுக்கு.

குடும்பத்தை எத்தனையோ கஷ்ட நாட்களிலிருந்து தூக்கி நிறுத்தியவள் பாட்டி. வருமானம் போதாமல் வீடு பட்டினியாய் நின்றபோது, அங்கங்கே தெரிந்தவர்களிடம் போய் நல்ல வார்த்தை பேசி கடன் வாங்கி வந்திருக்கிறாள். அதை உரிய காலத்தில் கொடுக்க முடியாத போது, தவறாமல் நேரில் போய் சமாதானம் சொல்லி கால அவகாசம் வாங்கி வருவாள். கொடுக்கவே முடியாமல் போன போது அந்தந்த வீட்டுக்கான விசேட காலங்களில் தானே ஒரு வேலைக்காரியைப் போல் கலந்து கொண்டு வேண்டிய வேலைகளைக் கடுமையாகச் செய்து, அந்தக் கடன்களை கழித்திருக்கிறாள்.

“ருக்கு, நீ ஒண்ணுத்துக்கும் கவலைப்பட்டுக்காதே…நா இருக்கேன்…இந்த ஒடம்புல உசிர் இருக்கிறவரைக்கும் இந்தக் குடும்பத்த சாய விடாமப் பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு…குழந்தேளெல்லாம் நன்னா படிக்கணும்…நல்ல வேலைக்குப் போகணும்…அதுக்கு நா பொறுப்பு…எல்லாத்தையும் பார்த்துட்டுதான் மண்டையப் போடுவேன்…”

தூணாய் நின்றாள் பாட்டி. குமாஸ்தா அப்பாவின் ஒற்றை வருமானம். (நானும் குமாஸ்தாதான். கொஞ்சம் கூடச் சம்பளம் வாங்கும் குமாஸ்தா). எட்டுப் பேருக்கு எப்படிப் போதும். பல சமயங்களில் கொண்டு செலுத்தியவள் பாட்டிதான்.

“என் பேரனாக்கும்…நன்னா படிப்பான். க்ளாசுல அவன்தான் ஃபர்ஸ்ட்…கவர்ன்மென்ட் பரிட்சை வருது…எழுதணும்…ஃபீஸ் கட்டறதுக்கு நீங்கதான் ஒதவணும்…கோடிப் புண்ணியமுண்டு உங்களுக்கு…என் ஒடம்பை செருப்பாத் தச்சு சேவகம் பண்றேன்;…அவன் பரிட்சை எழுதறதுக்கு வழி பண்ணிக் கொடுங்கோ…”

பாட்டி கேட்டு இல்லை என்று எவருமே சொன்னதில்லை. அது என்ன நம்பிக்கையோ அல்லது என்ன ராசியோ? இதோ வர்றேன்…என்று அவள் கிளம்பிப் போனால் விஷயம் ஜெயம்தான்

தன் தாயார் காலமானதிலிருந்து அந்தப் பழைய வீட்டில் இருக்க முடியாமல் தவித்தார் அப்பா. அவளின் நினைவு அவரை வெகுவாக வாட்டியது. பல நாட்கள் அம்மா அம்மா என்று தூக்கத்தில் குழறிக் கொண்டிருந்தார். அம்மாவால் கூட அவரைச் சமாதானப் படுத்த முடியவில்லைதான். அந்தக் கட்டிலிலேயே அப்பா படுத்துக் கொண்டார். தலை குப்புறப் படுத்துக் கொண்டு கட்டிலை முகர்ந்து பார்ப்பதுபோல் கிடப்பார். தன் தாயாரின் வாசனையை அப்பா அதில் தேடுகிறாரோ என்று தோன்றும் எங்களுக்கு.

இதுவரை அந்தப் பகுதியில் நாலு வீடுகள் என்று மாற்றியாயிற்று. என்ன காரணத்தினாலோ அப்படி நடந்து விடுகிறது. இத்தனைக்கும் எங்கேயும் வாடகை பாக்கி என்றோ, ஆட்புழக்கம் அதிகம் என்றோ எந்தப் புகாரும் வந்ததில்லை.

அப்பா ஓய்வு பெற்ற அதே சமயம் எனக்கு வேலை கிடைத்ததும், அதுவும் அது உள்ளுரிலேயே அமைந்து போனதும் அம்மாவின் பிரார்த்தனா பலன் என்றுதான் சொல்ல வேண்டும். என்னோட பிரார்த்தனை என்னைக்கும் வீண் போகாது பாரேன்…என்று அம்மா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள். அது பலித்தது என்றுதான் பாட்டி சொன்னாள். வேலை கிடைத்த கையோடு நான்தான் இந்த ஏரியாவுக்கு வீட்டை மாற்றிக் கொண்டு வந்தேன். அதுவே பாட்டியைப் படுக்கையில் கிடத்தி விட்டதோ என்று கூட ஒரு எண்ணம் உண்டு எனக்கு.

“அப்டியெல்லாம் ஒண்ணும் நினைச்சுக்காதே…இந்த மனசு இருக்கே அது எப்பவும் இப்டித்தான். ஒண்ணை விட்டு ஒண்ணுக்குத் தாவிண்டே இருக்கும்…வேலை கிடைக்கிற வரைக்கும் வேலை வேலைன்னுண்டு…அப்புறம் அது தீh;ந்தவுடனே வீடு வீடுன்னு அதை மாத்தியாச்சு….அந்த வீட்டுக்காரா; நாங்க வந்து குடியிருக்கப் போறோம்னு சொன்னதுனாலதானே மாத்த வேண்டி வந்தது? இல்லன்னா நாமபாட்டுக்கு அங்கதானே இருப்போம்…அங்கேயே தேடு தேடுன்னு தேடியும் வகையா அமையலேன்னுட்டுதானே இப்பக்கம் வந்தது? எதையாவது ஒண்ணை நினைச்சுக் கவலைப் பட்டுண்டே இருக்கணும்…அது இந்த மனசோட தன்மை….”

உண்மையில் இங்கிருந்து எனக்கு ஆபீஸ் பக்கம் என்பதுதான்; சரியான காரணம். அதை நான் வெளிப்படையாகச் சொல்லித்தான் குடும்பத்தை இங்கே கொண்டு வந்தேன். ஆனால் இப்படி அடிக்கடி வீடு மாற்ற வேண்டி வரும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிலும் மாற்றக் கூடிய வீடுகள் எதுவும் சரியாக அமையாமல் ஒருத்தருக்கும் மனசு சரியில்லை என்பதாகவே காலமும் நேரமும் ஓடிக் கொண்டிருந்தது ஒரு பெரிய துயரம்.

அதிலும் ராமச்சந்திரா நகரிலிருந்து கிளம்பி இங்கே முதன் முதலில் ஒரு அபார்ட்மென்டுக்கு வீட்டை மாற்றியதுபோல் அபத்தம் எதுவுமில்லை. பணியாளர்களுக்கு க்வார்டர்ஸ் கிடைக்கிறது என்று அப்ளை பண்ணி அலை அலையென்று அலைந்து ஒரு வீட்டைப் பிடிக்கப் போக அது இரண்டு அறைகள், ஒரு ஹால், ஒரு கிச்சன், ஒரு பால்கனி என்று இருந்தும் புறாக் கூண்டுக்குள் சிக்கியது போல் வாசல் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே எல்லாரும் அடைந்து கிடந்தது பெரிய பரிதாபம்.

முதல் மாடிதானே பாட்டி ஏறி விடுவாள் என்று நினைக்கப் போக, பாட்டி கீழே மரத்தடியில் அந்தக் காலனிக்குப் பொதுவாய் இருந்த அனுமார் கோவிலில்தான் நாள் பூராவும் கிடந்தாள். சோலையாய்க் கிடக்கும் அந்த இடம். காற்று லவ லவ என்று வீசிக் கொண்டிருக்கும். படுத்து ஒரு தூக்கம் போடுவோம் என்று யாருக்கும் தோன்றுவது இயற்கை. ஏதோ அநாதைப் பாட்டி போலிருக்கு என்று பாட்டி தூங்கிக் கொண்டிருக்கும்போது புடவைத் தலைப்பில் சில்லரைகளைப் போட்டுவிட்டுப் போனவரும் கூட உண்டு. பாட்டி அதை எடுத்து கோயில் உண்டியலில் சேர்த்ததாகச் சொல்வாள். எங்கள் எல்லாரோடும் பாட்டியை அந்தக் காலனி ஆட்கள், கோயிலுக்கு வந்து போவோர் பலரும் பார்த்த பின்னர் தான், காசு போட்டவர்கள் தங்களை மறைத்துக் கொண்டார்கள்.

“பாட்டி, உங்களால படி ஏற முடியலயா? நா தூக்கி வேணா வீட்டுல கொண்டு விட்டிடட்டுமா?” எதிர் வீட்டில் மொக்கையன் என்று ஒருவா; இருந்தார். பாட்டி பதில் சொல்லும் முன் பாட்டியை செந்தூக்காகத் தூக்கி வீட்டுக் கட்டிலில் கொண்டு வந்து போட்டு விட்டார்.

“நன்னா இருப்பேள் நீங்க…உங்களுக்குத்தான் எம்புட்டு நல்ல மனசு? இப்டித் தூக்கிண்டு வாறேளே…தெனம் செய்ய முடியுமா உங்களால?” என்றாளே பார்க்கலாம். அதை ஒரு சவாலாகவே ஏற்று செய்ய ஆரம்பித்து விட்டார் மொக்கையன்.

“மனுஷா எல்லாருக்கும் ஆத்மா ஒண்ணுதான்…ஆத்மாவப் பார்க்கிறவா மனசுல எந்த வித்தியாசமும் தோணறதில்லை…நீங்க நன்னா இருக்கணும்…” என்றாள் பாட்டி.

“பாட்டி எங்க? கோயிலுக்குப் போயிடுச்சா? நாந்தான் கொண்டு விடுவன்ல…ஏன் தனியாப் போச்சு? என்றவாறே காலையில் எட்டு மணிக்கெல்லாம் கதவைத் தட்டி விடுவார் மொக்கையன்.

“பரவால்லே…நானே போய்க்கிறேன்….” எதிர் வீட்டுக்குச் சத்தம் கேட்காமல் படிகளின் சைடு கம்பியைப் பிடித்துக் கொண்டு மெல்ல இறங்கிப் போக ஆரம்பித்தாள் பாட்டி. அதுபோல் ஏறும் போது மெல்ல மெல்ல நாலு நாலு படியாய்க் கடந்து, கொஞ்சம் உட்கார்ந்து கொண்டு, பின் ஏறி, இப்படியாக வீடு வந்து சேருவாள்.

எத்தனை நாளைக்கு இந்தக் கொடுமை? என் வசதிக்காக எத்தனை பேரைச் சிரமப் படுத்துவது? மனசாட்சி அறுத்தது எனக்கு. ஒரு நாள் லீவு போட்டு விட்டு யாருக்கும் சொல்லாமல் தேடினேன். அங்கிருந்து மாற்றியதுதான் நாயுடு காம்பவுன்ட். அம்மாவை மட்டும் கீழே கோயிலுக்குக் கூட்டிக் கொண்டு போவதுபோல் அங்கு அழைத்து வந்து காட்டினேன். அம்மாவுக்கு வீடும் பிடித்தது. வீட்டின் சொந்தக்காரியான நாயுடம்மாவையும் பிடித்துப் போனது. மாதம் முடியட்டும் என்று எதுவும் பார்க்காமல் மறுநாளே வீட்டை மாற்றி அங்கு கொண்டு வந்து எல்லாரையும் உட்கார்த்திய பின்னால்தான் மனது சரியானது எனக்கு. க்வார்ட்டர்சுக்குத் தேவையில்லாமல் இருபத்தியிரண்டு நாள் வாடகை கொடுத்தேன். அப்பா கூட சத்தம் போட்டார். செலவு செய்யலாம். விரயம் செய்யலாமா என்றார். அது இன்றும் கூட உறுத்திக் கொண்டிருக்கிறது.

தண்ணீர் செலவு அதிகமாகிறது என்றும், கூட்டம் ஜாஸ்தி என்றும், சலுப்பக்குடி மாதிரி இருக்கு என்று நாயுடு சற்றுத் தடித்துப் பேசவும், அடிக்கடி கோடி காட்டப் போகத்தான் அங்கிருந்து மாற வேண்டி வந்தது. மேலுக்கும் கீழுக்கும் ஆறு ஆறு குடித்தனங்கள் என்று இருந்த அந்தக் காம்பவுண்டில் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு அல்லது மூன்று என்று இருக்கப் போக இங்கே எட்டு என்றால்? நாயுடம்மாவின் விருப்பத்தில்தான் அங்கே குடிபோக முடிந்திருக்கிறது என்பது பின்னால்தான் எங்களுக்கே தெரிய வந்தது. அம்மாவுடனான இஷ்டமான நட்பில்தான் மூன்றாண்டுகள் அங்கே திகைய முடிந்தது என்றும் சொல்லியாக வேண்டும்.

அதற்குப்பின்தான் தேவரய்யா வீடு. “என்னா மாமி இன்னைக்கு என்ன டிபன் பண்ணிருக்கேள்? உங்காத்துல மாவடு ஊறுகாய் நன்னாயிருக்குமே! எனக்குத் தாறேளா?” என்று கேட்டுக் கொண்டே அடுப்படி வரை வந்து விடுவார் அவர். “இந்தாங்கோ நன்னாக் கொண்டு போங்கோ…” என்று ஒரு பாட்டிலில் போட்டுக் கொடுத்தனுப்பினாள் அம்மா. மொத்தம் மூன்று வீடுகள் அங்கே உண்டு. ஒரே காம்பவுன்டில் நடுவே, தான் இருந்து கொண்டு இரு பக்க வீடுகளையும் வாடகைக்கு விட்டுப் பரிபாலித்துக் கொண்டிருந்தார்.

“அந்தக் காலத்துல மட்டப்பாறை வெங்கட்ராமய்யர்னு ஒருத்தர் உண்டு. அவரத் தெரியுமோ உங்களுக்கு. ஏதோ ஒருவகையில சொந்தம் வரும் எங்களுக்கு. அவா; இப்டித்தான் உங்களமாதிரி பெரிய மீசை வச்சிண்டிருப்பார். சிங்கம்தான் அவரோட சின்னம். தேர்தல்ல நின்னார்னா எங்க ஓட்டு பூராவும் அவுருக்குத்தான். அந்த மீசைக்குள்ள இருக்கிற மனசு இருக்கே, தங்கமாக்கும்…” என்பாள் பாட்டி.

தேவரய்யா வீட்டில் கொஞ்ச காலமே இருக்க முடிந்தது. அவர் பெண்ணுக்கு அத்தனை சீக்கிரம் திருமணம் நிச்சயமாகும் என்று அவரே எதிர்பார்க்கவில்லை. உங்களைக் குடி வச்ச யோகம்தான் என்பார் வாய்க்கு வாய். ‘முதல்ல போய் மாமி, மாமா, பாட்டியை வணங்கி ஆசீர்வாதம் வாங்கிக்குங்க…’ என்றார் தம்பதிகளிடம். ஆனால் அதே வாயால் மாற்ற வேண்டியும் சொல்ல வேண்டி வந்தது அவருக்கு. பெண்ணு மாப்பிளை அந்த அய்யா; வீடுதான் வேணும் என்றுவிட்டார்களாம்.

அவசர அவசரமாக மாற்றி இதோ இங்கே கொண்டு வந்து உட்கார்த்தியாயிற்று. நிதானமாகத் தேடவாவது முடிந்ததா? முற்றிலும் பர்ச்சயமில்லாத ஏரியா. சம்பந்தா சம்பந்தமில்லாமல் வந்து மாட்டிக் கொண்டது போல் இருந்தது. காலியாக் கிடந்தது இது ஒண்ணுதான் என்று வந்து உட்கார்ந்த கதையாகிவிட்டது.

தங்கைமார்கள் கோயிலுக்குப் போய்விட்டு வரும்போது பஸ் ஸ்டாப் எங்கோ இருக்கிறது என்றார்கள். அங்கிருந்து எந்த வீதிக்குள் வந்து, தெருவுக்குள் நுழைய வேண்டும் என்று இன்னும் சரியாகத் தெரியவில்லை. வழியில் நாய் குலைக்கிறது என்று பயந்தார்கள். அம்மா போய் ஸ்டாப்பில் நின்று கொண்டு ஒவ்வொரு பஸ்ஸாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். வயசுக்கு வந்த பொண்கள வச்சிண்டு என்ன பாடு? என்று ஒருநாள் மெல்ல அவள் முனகியது என் காதுக்குக் கேட்டு விட்டது. அந்த நிமிடத்திலிருந்து என் மனது சங்கடப் பட ஆரம்பித்தது.

இதோ கண்ணுக்கு முன்னால் அப்பாவின் கஷ்டம்! சூரிய நமஸ்காரம் பண்ண சூரியனைத் தேடினார் அப்பா. ‘இந்த வீட்ல எங்க நின்னா சூரியன் தெரியுமாக்கும்…?’ கொல்லைக்கும் வாசலுக்கும் வந்து வந்து போனார். மாடிக்குப் போயிடலாமா? என்று வெளியில் வந்து பார்த்தார். செங்குத்தான படிகள். அத்தோடு மாடி வீட்டுக் குடியிருப்பு வாசலையும் கடந்து போக வேண்டும். இரண்டாவது மாடி. அப்பாவுக்கு அது தோதாகத் தோன்றவில்லை. கொல்லைப் பக்கத்தில் அடுப்படியை ஒட்டிய ஜன்னல் வழி லேசாகத் தெரியும் சூரியனைக் கண்டு பிடித்தார். அங்கிருந்தே சூரிய நமஸ்காரம் முடிந்தது. இப்படியெல்லாம் நியமங்களை வெறுமே கழிப்பது போல் செய்பவா; அல்ல அப்பா. தியானத்தில் உட்கார்ந்தாரானால் மந்திர உச்சாடனத்தில் ஜாஜ்வல்யமான ஒளியும், அலைகளும், பூரண அமைதியும் சுற்றிலும் விரவி நிற்கும். அந்த அளவுக்கான தனது அன்றாட நியமங்களின் மீது மதிப்பும் மரியாதையும் பக்தியும் கொண்டவர் அப்பா.

“கொஞ்சம் வெளியிலே போயிட்டு வர்றேன்…”-சொல்லியவாறே அப்பா கிளம்பினார்.

வாசலில் போய் நின்றவர் இடதா வலதா என்று தயங்குவதுபோல் இருந்தது.

“வலதுபுறம் மெயின் ரோடுப்பா…ஹைவேஸ் ஆரம்பிச்சுரும் கொஞ்ச தூரத்துல…”

“ஓ! அப்டியா? அப்போ இதானோ நம்ம பழைய வீட்டு வழி?” – என்று இடது புறம் காண்பித்தார்.

‘ம்ம்’ என்றான் இவன்.

அப்பா இறங்கி நடந்தார். தலை குனிந்துதான் நடப்பார் எப்போதும். அன்று என்னவோ பார்வை இரு புறமும் மாறி மாறிச் செல்வதுபோல் தலை அசைந்து கொண்டிருந்தது.

அப்போதைக்குத் தனக்கு மட்டுமே தெரியும் அந்த வழி. தங்கைகள் கோயிலுக்குப் போய்த் திரும்புகையில் பக்கத்துத் தெருவில் தெரியாமல் நுழைந்து விட தூரத்தில் பார்த்த இவன்தான் கையசைத்து நிற்கச் சொல்லிக் கூட்டி வந்தான். வீதிகள் நீள நீளமாகவும், அங்கங்கே போஸ்ட் கம்பங்கள் இருந்தும், விளக்குகள் எரியாமல் கிடந்ததும் இவனையே அச்சுறுத்தத்தான் செய்தன.

பால் டெப்போ தள்ளித்தான் இருந்தது. எப்போதும் அப்பாதான் வாங்கி வருவார். இனி அவரைப் போகச் சொல்வது சரியல்ல என்று முடிவு செய்து கொண்டான். அதுபோல் சந்தையும் பஸ்ஸில் போய் வாங்கி வரும் தூரத்தில் இருந்தது. வழக்கமாகச் சாமான்கள் வாங்கும் ராஜா ஸ்டோர் எத்தனாவது கட்டிங்கிற்குள் போய் அடைய வேண்டும் என்று இவனுக்குள்ளேயே ஒரு சந்தேகம் இருந்தது.

இதையெல்லாம் எதையுமே பார்க்காமல் எப்படி மாற்றினோம் என்று நினைத்த போது, ‘தேவரய்யா’ பண்ணிய அவசரம்தான் என்பது விளங்கியது. அடுத்தடுத்த விசேடங்கள், பொண்ணு மாப்பிள்ளை போக்குவரத்து. உறவினர்கள் வருகை, என்று சதா விருந்தும் உபசாரங்களுமாய்க் கழிய, அந்தப் பரபரப்பு தன்னையும் தொற்றிக் கொண்டு இப்படி நிதானமில்லாமல் அடித்து விட்டதை எண்ணியபோது, தனது அவசரத்தால் எத்தனை பேருக்குக் கஷ்டம் என்று இவன் மனம் மருகியது.

இன்னும் ரெண்டாயிரம் சேர்த்துக் கொடுத்திருந்தால், விருப்பமான இடத்தில், தேவையான அனைத்து வசதிகளோடும் வீடு பிடித்திருக்க முடியும்தான். கையில் டப்பு வேண்டுமே? இந்த வாடகையே அதிகம்தான் என்பதன் அடையாளமாக அப்பாவின் அபிப்பிராயங்கள் சமயங்களில் வெளிப்படும் போது இவன் மனதை அது வெகுவாக உறுத்தத்தான் செய்கிறது. அதிலும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்குப் போதுமான வசதியில்லாமல் இருந்து என்ன பயன்?

தனது கஷ்டங்கள், அசௌகரியங்கள் என்று எதையுமே வெளிக் காட்டிக் கொள்ளாமல் அமைதி காக்கும் அப்பாவை நினைக்க நினைக்க வேதனை அதிகரிக்க ஆரம்பித்தது. சொல்ல முடியாமல் தவிக்கிறாரோ? தவிர்க்கிறாரோ? வயதான காலத்தில் இந்தக் கஷ்டத்தை அவருக்குக் கொடுக்கலாமா?

“தப்பு பண்ணிட்டேம்மா…தப்பு பண்ணிட்டேன்…” அப்பாவுக்குத் தெரியாமல் அம்மாவிடம் புலம்ப ஆரம்பித்தான்.

அன்று அலுவலகம் போய் வந்த போது அப்பா சொன்னார்.

“ரோட்டு முக்குல ஒரு காபிப் பொடிக் கடை இருக்கு தெரியுமோ…மதுராக் காபின்னு போட்டிருக்கும்…அவரப் பழகிண்டிருக்கேன்…அங்க போய் இப்பல்லாம் உட்கார்ந்துடறது…நன்னா பொழுது போறதாக்கும்…”

உண்மைதானா என்று சந்தேகமாகத்தான் இருந்தது இவனுக்கு. கூச்ச சுபாவியான அப்பாவுக்கு அதற்குள்ளேயுமா ஒரு இடம் ஒட்டும்? அத்தனை சீக்கிரத்தில் ஒருத்தருடன் ஒன்றி விடுவாh; என்று தோன்றவில்லை. வீடு மட்டும்தானே நெருக்கம் அவருக்கு. அம்மா கூடக் கூறினாள்.

“இப்டியே போனா அந்தக் கடைசில தியேட்டா; ஒண்ணு இருக்குடா…அங்க ரோட்டோரமா ஒரு மாரியம்மன் கோயில் இருக்காக்கும்…போயிட்டு வந்தேன் இன்னிக்கு…நல்ல சக்தியான துடியான அம்மன். மனசாரக் கும்பிட்டுட்டு வந்தேன்…இப்பத்தான் திருப்தியாச்சு…” அம்மாவும் ஏதோ இவனைத் திருப்திப்படுத்தவே சொன்னது போல்தான் தோன்றியது.

கடைசியாக இன்று இவன் கடைக்குட்டித் தங்கை கூறினாள்.

“நாம பழையபடி நம்ம ராமச்சந்திரா நகருக்கே போயிடலாம்ண்ணா..”

“என்னம்மா சொல்றே…அதுக்குள்ளயுமா?”- இவன் அதிர்ந்து போய்க் கேட்டான்.

“ஆமாண்ணா…அதான் எல்லாருக்கும் பிடிச்ச எடம்…தயவுசெஞ்சு புரிஞ்சிக்கோ …!” சொல்லிவிட்டு அவள் கண்களில் நீர் தளும்புவதைப் பார்த்த இவன் அப்படியே இடிந்து போய் நின்றான். அந்தப் புரிஞ்சிக்கோ என்ற வார்த்தை மட்டும் இவனுக்குள் ஏனோ அதீதமான சங்கடத்தை ஏற்படுத்தி இவனை நிலை குலைய வைத்தது!