தனிமை- மேடை நாடகம் – அறிவிப்பு

கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் அமைந்துள்ள க்ரியா நாடக் குழுவும், பாரதி தமிழ்ச் சங்கமும் இணைந்து வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி “தனிமை” மேடை நாடகத்தினை அளிக்க இருக்கிறார்கள்.

தீபா ராமானுஜம், ராமனுஜம் தம்பதியினர், மற்றும் அவர்களின் நண்பர் நவீன் நாதனால்  2001ம் ஆண்டு கலிஃபோர்னியாவின் சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் துவக்கப்பட்ட க்ரியா நாடகக் குழு, இன்று விரிகுடாப் பகுதி மட்டுமல்லாமல், வட அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் பிரபலமான ஒன்று.  9 முழு நீள நாடகங்களை அமெரிக்காவிலும், இந்தியாவிலும் அரங்கேற்றி தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்திய பாரம்பரிய நாடகக் கலையின் செழுமையை அடித்தளமாகக் கொண்டு தரமான, அனைவரும் ரசிக்கக் கூடிய நாடகங்களை வழங்கி வருகிறார்கள்.

பாரதி தமிழ்ச் சங்கம் சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வரும் ஒரு தமிழ் கலாசார அமைப்பாகும். பாரதி தமிழ்ச் சங்கம் சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதிவாழ் தமிழ்க்குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கலைத்திறனை ஊக்கப்படுத்தி அவர்கள் திறமைகளை வளர்க்கும் பொருட்டு கடந்த நான்கு வருடங்களாக கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.

இந்த வருடம் பாரதி தமிழ்ச்சங்கத்தின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு க்ரியா நாடக நிறுவனத்துடன் இணைந்து க்ரியாவின் தனிமை மேடை நாடகத்தை அரங்கேற்ற ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

எழுத்தாளர் ஆனந்த் ராகவ் எழுதி, தீபா ராமானுஜத்தின் இயக்கத்தில் உருவான ‘தனிமை’ நாடகம், அதன் முதல் அரங்கேற்றம் முதல் இன்று வரை கலிஃபோர்னியா, ஹ்யூஸ்டன் டெக்சாஸ், சென்னை ஆகிய இடங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக பெரும் வரவேற்பை பெற்ற ஒரு நாடகமாகும். கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி முதல் 25 வரை சென்னை நகரின் பல்வேறு புகழ் பெற்ற சபாக்களில் தினமும் அரங்கு நிறைந்த காட்சிகளாக நடை பெற்று சென்னை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெரும் பாராட்டினையும் பெற்றது.

சென்னையில் இருந்து பிரபல நாடகக் குழுவினர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து நாடகங்கள் போட்டு இங்குள்ள தமிழர்கள் ரசித்த நிலை மாறி இன்று அமெரிக்காவில் இருந்து ஒரு நாடகக் குழு  சென்னை சென்று தமிழ் நாட்டு ரசிகர்களுக்கு  தொழில்நுட்பமும், இயற்கையான நடிப்பும் கூடிய அருமையான ஒரு நாடக அனுபவத்தை அளித்து பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் தீபா ராமானுஜம் குழுவினர்.

க்ரியா குழு மட்டுமே 2005லிருந்து  தொடர்ந்து வருடா வருடம் அமெரிக்காவிலிருந்து இந்தியா சென்று நாடகங்களை மேடையேற்றுகிறது என்று அதன் நிர்வாக இயக்குனர் தீபா ராமானுஜம் கூறினார்.

thanimai1தனிமை  நாடகத்தின் கதையமைப்பும், நடிகர்களின் இயல்பான சிறப்பான நடிப்பும், கூர்மையான கலகலப்பான வசனங்களும், தீபா ராமானுஜத்தின் இயக்கமும், ஆனந்த் ராகவ்வின் எழுத்தும் விகடன், கல்கி, தி ஹிந்து போன்ற அனைத்து தமிழகப் பத்திரிகைகளாலும் பெரிதும் பாரட்டப்பட்டுள்ளது. பத்திரிகைகள் மட்டுமின்றி, சென்னைவாழ் தமிழர்கள், தமிழ்நாட்டு நாடக, சினிமா கலைஞர்கள், இயக்குனர்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்து  அனைவரது சிறப்பான பாராட்டினையும் பெற்று சாதனை படைத்துள்ளது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இமெயில், ஃபேஸ்புக் போன்ற அனைத்து ஊடகங்கள் மூலமாகவும் சமீப காலத்தில் வேறு எந்தவொரு நாடகமும் பெறாத புகழையும், கவனிப்பையும், பெற்ற நாடகம் தனிமை என்று கூறினால் அது மிகையாகாது.

“எங்கள் நாடகங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் எங்களது நடிகர்கள். அவர்கள் தங்களது பொருட் செலவில் இந்தியா வந்து, ஆர்வத்துடன் நடிக்கிறார்கள். அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார் தீபா.

தமிழ்நாட்டில் வாழும் வயதான பெற்றோர்களின் வாழ்க்கையையும் அமெரிக்காவில் புலம் பெயர்ந்து பிரிந்து வாழ நேரும் அவர்கள் பிள்ளைகளின் நிலைகளையும், தவிப்பினையும், குடும்பம், உறவு, பிரிவு ஆகிய நுட்பமான வாழ்க்கைக் கூறுகளையும் மிக அழகாகவும், நகைச்சுவை மிளிரவும் சித்தரிக்கின்ற ஒரு நாடகம் ‘தனிமை’. இந்த நாடகத்தினை இந்தியாவில் மேடையேற்றியபோது, அதன் இயல்பான கதையமைப்பிலும், நடிப்பிலும் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் பலரும் இதை வெகுவாக ரசித்தனர். சென்னை மக்கள் போலவே விரிகுடாப்பகுதி மக்களும் இந்த நாடகத்தினை ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று க்ரியா குழுவினர் மிகுந்த ஆர்வத்துடன் கூறினர்.

சென்னை நகரில் வெற்றிபெற்ற தனிமை நாடகம் சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதி ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் ஃப்ரீமாண்ட் நகரில் வரும் நவம்பர் 6ம் தேதி அரங்கேறவுள்ளது. இந்த நாடகத்தை கண்டு ரசிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதி தமிழர்களுக்கு கிட்டியுள்ளது. ஏமாற்றத்தைத் தவிர்க்க முன்பதிவு செய்தல் நலம். முன்பதிவு செய்து கொள்ளவும் மேலதிக விபரங்களுக்கும் கீழ்க்கண்ட முகவரிகளில் தொடர்பு கொள்ளவும். மதியம் 2 மணிக்கு ஒரு காட்சியும், மாலை 6 மணிக்கு ஒரு காட்சியும் ஃப்ரீமாண்ட் ஓலோன் கல்லூரி கலையரங்கில் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக. இந்தியாவில் இருந்து பெற்றோர்கள் வருகை தந்திருந்தால்  அவர்களையும் கட்டாயம் அழைத்து வரவும.

க்ரியா இணைய தளம் : http://www.kreacreations.com/
பாரதி தமிழ்ச் சங்கம்:  http://www.batamilsangam.org

க்ரியா: 510 371 KREA
வாசுதேவன் : 510 868 0510
திருமுடி : 510 684 9019

மின்னஞ்சல்: krea.thanimai@gmail.com

அனுமதிக் கட்டணம்: ($12)

நாடகம் நடக்கும் இடம்: ஜாக்சன் தியேட்டர்ஸ்
ஓலோன் காலேஜ்
43600 மிஷன் ப்வ்ல்வோர்ட்
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா