இணையத்தில் அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன், கணிதம்

amuttu

தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானோருக்கு இப்போது வலைத்தளம் இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் வலைப்பக்கத்துக்கென்று பிரத்தியேகமாக எழுதுகிறார்கள். அச்சுப்பத்திரிகைகளில் வெளிவந்த படைப்புகளையும் இணைய வாசகர்கள் பயன்பெறும் வகையில் தங்கள் வலைப்பதிவுகளில் வெளியிடுகிறார்கள். இவர்களில் சமீபத்திய குறிப்பிடத்தக்க புதிய தளங்கள் அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன் இருவருடையதுமாகும். அ.முத்துலிங்கம் தனக்கேயுரிய மெல்லிய அங்கதம் தொனிக்கும் சிறந்த பல கட்டுரைகளை நாட்குறிப்புகள் போல் தன் தளத்தில் வெளியிடுகிறார். அது ஒரு சிறந்த வாசிப்பனுபவமாக இருக்கிறது. நாஞ்சில்நாடன் இன்னும் இணையம் பக்கம் தீவிரமாக வரவில்லை என்றாலும் அவருடைய வாசகர் ஒருவர், நாஞ்சில்நாடனுக்கென்று வலைப்பதிவு ஆரம்பித்து நாஞ்சில்நாடனின் பல பேட்டிகளையும், அச்சுப்பத்திரிகைகளில் வெளிவந்த படைப்புகளையும் இப்பதிவில் வெளியிட்டு வருகிறார். இவ்விரு வலைப்பதிவுகளும் தமிழ் இலக்கிய வாசகர்கள் தவறவிடாமல் படிக்க வேண்டியவை.

கணிதத்தில் தீவிர ஆர்வம் கொண்டவர்களையும், பயன்பாட்டுக் கணிதத்தில் ஆர்வம் கொண்டவர்களையும் ஒருங்கே கவரக்கூடிய ஓர் அரிய இணையதளம் ‘+plus‘ என்ற இணையதளம். இத்தளத்தில் கணிதத்தின் பல நடைமுறை உபயோகங்களையும், அவற்றுக்குப் பின்னிருக்கும் அரிய கணித விளையாட்டுகளையும் குறித்த பல சுவாரசியமான கட்டுரைகள் இருக்கின்றன.  உதாரணமாக உங்கள் உடலில் ஒரு மருந்து சரியாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமென்றால் எப்போது, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்? இதைக் கணிதம் வழியாக இக்கட்டுரை பார்க்கிறது. இந்த வருடம் கணிதத்துக்காக வழங்கப்பட்ட நோபல் பரிசு குறித்த கட்டுரை, சமீபத்தில் இறந்த ‘பால்’ என்ற ஆக்டோபஸ் குறித்த கட்டுரை போன்றவை சுவாரசியமானவை.

plus