எலெக்ட்ரிக் எறும்பு

மாலை நாலே கால் மணி (பூவுலக வரையளவு நேரம்). கார்ஸன் பூ- மருத்துவமனையில் தன் படுக்கையில் கண் விழித்தார். தன் படுக்கை இருந்தது மருத்துவமனையில் மூன்று படுக்கை இருக்கும் ஒரு அறை என்று அவருக்குத் தெரியும். அதைத் தவிர அவருக்கு வேறு இரண்டு சேதிகள் கிட்டியிருந்தன. தனக்கு இப்போது வலது கை இல்லை, வலியும் ஏதும் இல்லை.

வலிக்காமல் இருக்க நல்ல ஸ்ட்ராங்கா மருந்து கொடுத்திருக்காங்க, என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டபடி தூரத்துச் சுவற்றை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஜன்னல் வழியே நியூயார்க் நகரின் மையம் தெரிந்தது. கார்களும், வாடகை வண்டிகளும் குறுக்கும் நெடுக்குமாக விரைந்தன, சுழன்று திரிந்தன, மாலை வெயிலில் பளபளத்தன. மூப்புத் தட்டிக் கொண்டிருந்த ஒளியின் பிரகாசம் அவருக்கு மகிழ்வாக இருந்தது. அது இன்னும் சாகவில்லை, நானும்தான், என்று நினைத்தார்.

ஒரு வி-ஃபோன் படுக்கை அருகே சிறு மேஜையில்; தயங்கினார், பின் எடுத்து மருத்துவமனைக்கு வெளியே எண்களைக் கூப்பிடத் தேவையான ஒரு எண்ணைக் கூப்பிட்டார். ஒரு கணம் கழித்து, லூயிஸ் டான்ஸ்மானின் முகம் தெரிந்தது. ’மூன்று-திட்டம்’ நிறுவனத்தின் வேலைகளுக்கு இப்போது முழுப் பொறுப்பு அவர்தான். கார்ஸன் பூ- வேறு எங்கோ இருப்பதால்.

கார்ஸனைப் பார்த்ததும், ‘நல்ல வேளை, நீங்க இன்னும் உயிரோட இருக்கீங்களே,’என்றார் டான்ஸ்மான்; அவருடைய பெரிய சதைவைத்த முகம், சந்திரனின் மேற்பரப்பு போல குண்டும் குழியுமாய், அதில் சிறிது கவலை குறைவது தெரிந்தது. “நான் எவ்வளவு நேரமாய்க் கூப்பிட்டுகிட்-.”

“எனக்கு இப்ப வலது கை இல்லை, அவ்வளவுதான்,’ என்றார் பூ.

“பிழைச்சுட்டீங்க இல்லெ. ஆனா, வேற கையை வச்சிடுவாங்க, இல்லியா.”

”எத்தனை நேரமா இங்கெ இருக்கேன்?” பூ கேட்டார். நர்ஸ்களெல்லாம் எங்கே, டாக்டர் ஒருத்தரையும் ஏன் காணோம் என்று யோசித்தார். இத்தனை நேரம் சுற்றி நின்று சூள் கொட்டிக் கொண்டு, பரிவாய் முகத்தை வைத்துக் கொண்டு இருக்க வேண்டாம்?

“நாலு நாளாச்சுங்க,” என்றார் டான்ஸ்மான். “இங்கெ வேலெல எல்லாம் ஸ்மூத்தாப் போயிட்டிருக்கு. இங்கெயே, பூமிலேர்ந்தே மூணு வேற வேற போலிஸ் செட்டப்புங்க கிட்டெயிருந்து பெரிய ஆர்ட்ரெல்லாம் வந்திருக்கு. ஒஹையோலேர்ந்து ரெண்டு, வயோமிங்கிலேர்ந்து ஒண்ணு. நல்ல சாலிட் ஆர்டர் ஒண்ணொண்ணும். மூணுல் ஒரு பங்கு அட்வான்ஸ், பாக்கி எல்லாம் வழக்கம்போல. வேணுமுன்னா மூணு வருஷம் லீஸ்ல எடுத்துக்கலாங்கிறாப்ல.”

”வந்து இங்கெருந்து என்னை விடுதலை பண்ணு அழைச்சிகிட்டுப் போவீங்களா, பார்ப்பம்.” என்றார் பூ.

“பாருங்க, புதுசா கை வச்சப்புறம்தான் உங்களெ ரிலீஸ் பண்ணுவாங்க, இல்லி-”

“அட, நா அப்றம் அதைச் செஞ்சிப்பேய்யா.” மறுபடியும் பழக்கமான வாழ்க்கைக்கு, சூழலுக்குத் திரும்பிப் போக வேண்டுமென்று அத்தனை தாங்கமுடியாத அவசரமாய் இருந்தது பூ- வுக்கு; அவருடைய வியாபாரக் கலம்- ஓட்டிக் கொண்டிருந்த தன் எதிரே திரைகளில்- தெரிகிற நினைவு வந்தது; சிறிது கண்ணை மூடியவுடனே, தன்னுடைய சேதமான கலத்தில் தானிருப்பது போலவே உணர்ந்தார்; அந்தக் கலம் கீழே கீழே என்று ஒரே பாய்ச்சலாக விழுந்து அங்கங்கே பல வேறு கலங்களை எல்லாம் இடித்து எல்லாம் ஒரே நாசமாகி…எவ்வளவு பெரிய நஷ்டம். அப்படி ஒவ்வொரு தரமும் இடிபடும்போதெல்லாம் உடம்பில் ஏற்பட்ட அதிர்ச்சிகளை எல்லாம் மறுபடி உணர்ந்தது போல இருக்க, முகத்தைச் சுளித்தார் பூ, ஏதோ தப்பிச்சிட்டென், பிழச்சது பெரிய அதிர்ஷ்டம்தான், என்று தனக்குச் சொல்லிக் கொண்டார்.

“சாரா பென்டன் இருக்காங்களா உங்களோட?” என்றார் டான்ஸ்மான்.

“இல்லியெ.” ஆமாம், தன் உதவியாளர்- ஏதுமில்லென்னாலும், வேலை விஷயங்களுக்காகவாவது- பக்கத்தில சுத்திச் சுத்தி வந்துகிட்டிருக்கணுமே; ஒரே பரபரப்பா, கொஞ்சம் கூட சோர்வே இல்லாம, ஏதோ என்னோட அம்மா மாதிரி கவனிச்சுகிட்டிருப்பாளே, எங்க காணும்? இந்த குண்டான பெண்களே எல்லாரையும் அம்மா மாதிரி கவனிச்சுகிடறாங்க இல்லியா என நினைத்தார் பூ. ஆனா அவங்க பக்கத்துல இருக்கறதும் ஒரு ஆபத்து, மேலெ விழுந்தாங்கன்னா நாம தொலைஞ்சோம், நசுங்கிப் போயிடுவோம். “ஒருவேளை அதான் நடந்துச்சா எனக்கு,” அவர் உரக்கச் சொன்னார்.“சாராதான் என்னோட கலத்து மேலெயே விழுந்தாங்களா?”

”இல்லெ, இல்லெ; உங்களோட கலத்து ஸ்டியரிங்கை ரெக்கைகளோட இணைக்கிற ஒரு கம்பி சிதறி உடைஞ்சிடுச்சு, அப்ப பீக் அவர் ட்ராஃபிக் வேறியா, நீங்க-”

”எனக்கு நெனவிருக்கு.” தன் அறைக் கதவு திறக்கவும் அவர் படுக்கையில் திரும்பிப் பார்த்தார். வெள்ளை ஆடையில் ஒரு டாக்டர், நீல உடுப்பில் இரண்டு நர்ஸ்கள், அவருடைய படுக்கையைப் பார்க்க வந்தனர். “சரிய்யா, அப்றம் உங்க கிட்ட பேசறேன்.” என்றார் பூ- ஃபோனை வைத்தார். ஏதோ எதிர்பார்ப்புடன் பெரிய மூச்சாக இழுத்து விட்டுக் கொண்டார்.

“இவ்வளவு சீக்கிரம் வி-ஃபோன்லெல்லாம் பேச ஆரம்பிக்கக் கூடாது.” என்றார் டாக்டர். அங்கே ஒரு அட்டவணையை எடுத்துப் பார்த்தார். “திரு.கார்டன் பூ-, ஆயிரம் மைல் வட்டத்தில், குறிப்பிட்ட அமைப்பு உள்ள மூளை அலைகளைத் தேடி, அது உள்ள மனிதர்களைக் கூட்டத்திலும் அடையாளம் காணும் எலெக்ட்ரானிக் கருவிகளைத் தயாரிக்கும் மூன்று-திட்டம் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் முதலாளி. நீங்க ஒரு வெற்றி கண்ட மனிதர், ஆனாப் பாருங்க, நீங்க ஒரு மனிதர் இல்லை. நீங்க ஒரு எலெக்ட்ரிக் எறும்பு.’

‘அடக் கடவுளே,’ அதிர்ந்து போனார் பூ-.

“இப்ப நாங்க இதைக் கண்டு பிடிச்சுட்டோமில்லையா, அதனாலெ பாருங்க, உங்களுக்கு இங்கெ சிகிச்சை செய்ய முடியாது. காயம்பட்ட உங்களோட வலது கையை நாங்க பார்த்த உடனேயே அதைத் தெரிஞ்சுகிட்டோம். அதில் எலெக்ட்ரானிக் பாகங்களெல்லாம் இருந்ததா, உடனே உங்க உடம்பெ ஒரு தடவை எக்ஸ்-ரேல பார்த்தோம், நாங்க ஊகிச்சது சரிதான் என்று அது காட்டி விட்டது.”

“எலெக்ட்ரிக் எறும்பா,” என்றார் பூ-, “அப்படின்னா என்னது?” கேட்கும்போதே அவருக்குப் புரிந்தாற்போல இருந்தது; அந்தச் சொல்லுக்குப் பொருளை அவரால் உணர முடிந்தது.

“மனித உடல் கொண்ட எந்திரம்.” ஒரு நர்ஸ் சொன்னாள்.

“அப்படியா,” என்றார் பூ- . சில்லென்று வியர்வை ஊறித் தோலில் பரவியது, அவரது உடலெங்கும்.

“அப்படின்னா இது உங்களுக்குத் தெரியாது போலருக்கே,” டாக்டர் சொன்னார்.

“தெரியாது.” பூ- சொன்னார்.

டாக்டர் சொன்னார்,”வாரா வாரம் ஒரு எலெக்ட்ரிக் எறும்பு எங்களிடம் வருகிறதுதான். கலம் ஏதாவது விபத்தில் சிக்கினதால்- உங்களைப் போல, இல்லென்னா, தானாகவே எதற்காகவாவது சிகிச்சைக்காகன்னு வந்து சேர்பவர்கள் உண்டு. உங்களைப் போலவே, தான் என்ன என்று முன்னால் சொல்லிக் கொடுக்கப் படாமல், மனிதர்களோடு சேர்ந்து வாழ்ந்து வேலை செய்தவர்கள், தன்னை… மனிதர் என்றே நம்பியவர்கள். உங்கள் கையை-” அவர் சற்றுத் தயங்கினார்.

“கையெப் பத்தி இப்ப என்ன, விடுங்க அதை.” என்றார் பூ- கடுமையாக.

“நிதானமா இருங்க.” டாக்டர் பூ-வின் உடலுக்குக் குறுக்கே, பூ- வின் முகத்திற்கு மிக அருகில் குனிந்து உற்று நோக்கினார். “நாங்க ஒரு மருத்துவக் கலத்தில உங்களை ஒரு ரிப்பேர் ஒர்க்‌ஷாப்புக்கு அனுப்புவோம். அங்கே சரியான கட்டணத்துக்கு, உங்களோட கையை ரிப்பேர் செய்வாங்க, இல்லெ, வேறு ஒரு கையைத் தயாரிச்சுப் பொருத்திக் கொடுப்பாங்க. செலவுக்கான பில்லை உங்களுக்கோ, நீங்கதான் எஜமானர் என்றால் உங்க கிட்டியே கொடுப்பாங்க, இல்லை உங்களுடைய எஜமானர்கள் யாராவது இருந்தா அவங்களுக்குப் பில்லை அனுப்பி வைப்பாங்க. எதா இருந்தா என்ன, மூன்று- திட்டம் கம்பெனில உங்களோட வேலையைச் செய்ய தாமதம் அதிகமா ஆகாம நீங்க போய்ச் சேர்ந்துக்கிட முடியும், முன்னைப் போல வேலை செய்யலாம்.” என்றார்.

“ஒரு மாறுதல்தான்,’ பூ- சொன்னார், ‘இப்ப எனக்குத் தெரியும், அப்படித்தானே.”

டான்ஸ்மானுக்கோ, சாராவுக்கோ, ஆஃபீசில் வேறு யாருக்கெல்லாமோ தெரிந்திருக்குமோவென்று அவர் வியந்தார். அவர்கள்தான் – யாரோ ஒருவர்தான் – என்னை வாங்கி இருக்காங்களோ? இல்லெ, என்னை டிஸைன் செய்ததோ அவங்கதானோ? நான் ஒரு பொம்மையாத்தான் இருந்திருக்கேன், இத்தனை நாளும்- என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். நானொன்னும் கம்பெனியை நடத்தவில்லை, அப்படி ஒரு பிரமை எனக்குள்ளே ஊன்றப்பட்டிருக்கிறது. நான் ஒரு மனிதன், நான் உயிரோடு இருக்கிறேன் என்று ஒரு பிரமை எனக்குள் ஊன்றப்பட்டிருப்பதைப் போல.

“நீங்க ரிப்பேர் செய்கிற இடத்துக்குப் போகிறத்துக்கு முன்னாலெ,” டாக்டர் சொன்னார், “ கொஞ்சம் எங்களோட சார்ஜெஸ் எல்லாத்தையும் கட்டிட்டுப் போறீங்களா? வெளியில முன்னறையில இருக்கறவங்க கிட்டெ கட்டிடுங்க.”

எரிச்சலோடு பூ- கேட்டார்,” எறும்புகளுக்கு இங்கே ஒரு சிகிச்சையும் நீங்க செய்ய மாட்டீங்கன்னா, எப்படி சார்ஜெல்லாம் வந்தது?”

“எங்களோட சேவைக்காக.” நர்ஸ் சொன்னாள்,”அப்றம் எங்களுக்கு உண்மை தெரியற வரைக்கும் நாங்க செய்த வேலைக்காக.”

“நல்லா பில் போட்டுக்குங்க. எனக்கே அனுப்புங்க.” கையாலாகாதவனின் பொருமலோடு, கோபமாய்ச் சொன்னார் பூ-, “என் கம்பெனிக்கு அனுப்புங்க.”

பெரிய முயற்சி செய்து, எழுந்து உட்கார்ந்தார்; தலையெல்லாம் சுற்றியது, படுக்கையிலிருந்து தயக்கத்தோடு தரையில் காலை எட்டி வைத்து, நிற்க முயன்றார். “இங்கிருந்து போனா எனக்கும் சந்தோஷம்தான்.” அவர் சொன்னார். “ உங்களோட மனிதத் தனம் நிரம்பிய சேவைக்கு ரொம்ப நன்றி.”

“உங்களுக்கும் எங்கள் நன்றி, திரு. பூ-,” என்றார் டாக்டர். “ ஓ, நான் வெறுமனே, பூ- என்று சொல்லி இருக்கணும், இல்லெ?”

ரிபேர் கூடத்தில் அவன் காணாமல் போன தன் கையை மறுபடி பொருத்திக் கொண்டான்.

அந்தக் கை, அது அதிசயமாகத்தான் இருந்தது; அதை அந்த டெக்னீஷியன்கள் பொருத்துமுன் ரொம்ப நேரம் அவன் பரிசோதித்தான். மேல்பரப்பில் பார்த்தால் சாதாரண உடலுறுப்பு போலவே இருந்தது. இயற்கையான தோல், அதன் கீழே இயற்கையான சதை, நிஜமான ரத்தம் தமனி, நாடி, சல்லிக் குழாய்களில் எல்லாம் ஓடியது. ஆனால் அதற்குக் கீழே, எலெக்ட்ரிக் சர்க்யூட்கள், சிறு கம்பிகள், நுண்ணிய அளவில் பொருத்தப்பட்டு… மின்னின…கைக்குள் கூர்ந்து பார்த்தான் – மின் அலை எழுச்சியைத் தடுக்கும் சிறு அடைப்புகள், சிறு எந்திரங்கள், பல கட்ட வால்வுகள், எல்லாம் மிகச் சிறு சைஸில், மைக்ரோ அளவில், மிக நுணுக்கமாய். அந்தக் கையின் விலையோ நாற்பது பெரிய நோட்டு. ஒரு வாரச் சம்பளம், அவனுடைய கம்பெனியிலிருந்து வாங்கின சம்பளத்தை அளவாகக் கொண்டால்.

”இதுக்கு உத்தரவாதம் உண்டா?” அந்த டெக்னீஷியன்களை அவன் கேட்டான், அவர்கள் அந்தக் கையின் ‘எலும்பு’ப் பகுதியை அவனுடைய உடம்போடு ஒட்ட வைத்துக் கொண்டிருந்தார்கள்.

”தொன்னூறு நாட்கள், உதிரிப் பாகங்களையும், வேலையையும் சேர்த்து.” ஒரு டெக்னீஷியன் சொன்னார். “கண்டமாதிரி மோசமா உபயோகிக்காமல் இருக்கணும், வேணுமின்னே உடைக்கிற மாதிரி ஏதும் செய்யக் கூடாது.”

“சொல்றதுலயே அப்படி எல்லாம் செய்யணும்னு தூண்டற மாதிரி இருக்கே?” என்றான் பூ- .
அந்த டெக்னிஷியன், ஒரு ஆண்- அவர்கள் எல்லாருமே ஆண்கள்- அவனைக் கூர்ந்து பார்த்தபடி, கேட்டார், ‘நீ நடிச்சுகிட்டிருந்தியா?”

”விவரம் தெரியாமத்தான்.” என்றான் பூ-.

“இனிமே தெரிஞ்சிகிட்டேதான் நடிப்பியாக்கும்?”

பூ- சொன்னான்,”அப்பிடித்தான்.”

“நீ இத்தனை நாள் இதை ஏன் தெரிஞ்சிக்கிடல்லென்னு தெரியுமா? உனக்குள்ளே அப்பப்ப விர்ருன்னு, க்ளிக்குன்னு சத்தமெல்லாம் இப்ப-அப்பல்லாம் உனக்குக் கேட்காமலா இருந்திருக்கும்? அதெ எல்லாம் கவனிக்காம இருக்கும்படி உனக்குத் திட்டம் போட்டுக் கொடுத்திருக்காஙக- ப்ரொக்ராம் செஞ்சிருக்காங்க. இனிமே உனக்கு வேற எது கஷ்டமாயிருக்கும் தெரியுமா? எதுக்காக உன்னை டிஸைன் செஞ்சு இப்படிக் கட்டினாங்க, யாருக்காக நீ இப்படி இயங்கிட்டிருக்கேங்கிறதெல்லாம் கண்டுபிடிக்கறது கஷ்டமாயிருக்கும்.”

“ஒரு அடிமை,” பூ- சொன்னான், “இயந்திர அடிமை.”

“உனக்கும் ஜாலியாத்தானே இருந்துது?”

“ஆ, நான் நல்லாத்தான் வாழ்ந்திருக்கேன். இல்லைங்கல்ல.” பூ- சொன்னான். “ நான் கஷடப்பட்டு உழைச்சும் இருக்கேன்.”

அந்த ரிப்பேர் கூடத்துக்கு நாற்பது பெரிய நோட்டு கட்டணமாகக் கொடுத்தான், தன் புது விரல்களை மடக்கி நீட்டிப் பார்த்தான்; சோதிக்கவெனப் பல பொருள்களைப் பொறுக்கி எடுத்தான், சின்ன காசை எல்லாம் எடுத்துப் பார்த்தான்; பிறகு கிளம்பினான். பத்து நிமிடத்தில் ஒரு பொது கலம் கிடைத்தது, அதில் வீடு சேரும்போது, ஒரு பெரிய நாள் கடந்தது என்று இருந்தது.

ஒரு அடுக்ககத்தில் ஒரே அறைதான் வீடு. ஊதா லேபிள் ஜாக் டானியல் விஸ்கியில்- 60 வருடத்து ஊறல்- ஒரு விரல் உயரம் கோப்பையில் ஊற்றிக் கொண்டு, உட்கார்ந்தான், இருந்த ஒரே ஜன்னல் வழியே தெருவில் எதிரே இருந்த கட்டிடத்தைப் பார்த்தபடி சிறிது சிறிதாக அதை உறிஞ்சினான். ஆஃபீஸுக்குப் போகலாமா? தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். ஆமென்றால் ஏன்? இல்லை என்றால் ஏன்? இரண்டில் ஒன்றைத் தேர்வு செய். கடவுளே, அவன் நினைத்தான், எப்படி இந்த விஷயம் ஒரு ஆளை நாசம் செய்து விட்டது, நானே ஒரு விபரீதம், ஒரு உயிரில்லாத வஸ்து, உயிருள்ள ஒன்றைப் போல நடித்துக் கொண்டு இருக்கிறேன், என்று உணர்ந்தான். ஆனால்- நான் உயிரோடு இருப்பதாகத்தான் உணர்கிறேன் – இருந்தும்… தான் மாறிவிட்டதாக உணர்ந்தான். என்னைப் பற்றி நான் நினைப்பதே மாறி இருக்கிறது. பிறரைப் பற்றி நான் நினைப்பதெல்லாமும் மாறி விட்டது, டான்ஸ்மான், சாரா.. மூன்று-திட்ட கம்பெனியில் உள்ள எல்லாரையும் பற்றி…

தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும், அவன் சொல்லிக் கொண்டான். ஆனால் அப்படிச் செய்ய விடாமல் தடுக்க எனக்குள் ஏதோ திட்டம் இருக்கும், அந்தப் ப்ரோக்ராம் எங்கே? நான் தற்கொலை செய்து கொண்டால் என் எஜமானருக்கு அது பெரிய நஷ்டமாக இருக்கும். அவர் நிச்சயம் அந்த நஷ்டத்தை விரும்ப மாட்டார்.

ஒரு திட்டம் இருக்கிறது, அது எங்கோ எனக்குள் இருக்கும், அவன் உணர்ந்தான், எனக்குள் ஒரு அமைப்புக் கூறு (matrix) பொருத்தப்பட்டு இருக்கிறது, ஒரு சட்டப்பலகை, என்னைச் சில வகைச் சிந்தனைகளை அடைய விடாமல் தடுக்கிறது, சில செயல்களைச் செய்ய விடாமல் நிறுத்துகிறது. என்னை வேறேதோ செயல்களைச் செய்யக் கட்டாயப்படுத்துகிறது. நான் சுதந்திரமானவன் இல்லை, சுதந்திரமா, எப்பவுமே அது எனக்கு இருக்கவில்லை, ஆனால் எனக்கு இப்போது அது தெரிந்து விட்டது; அதுதான் மாறி இருக்கிறது.

ஜன்னலை ஒளி புகாததாக மாற்றினான், தலைக்கு மேல் விளக்கை ஒளிரச் செய்தான், கவனமாக உடுப்புகளை நீக்கினான், ஒன்றொன்றாக. அந்த டெக்னீஷியன்கள் தன் கையைப் பொருத்திய விதத்தைக் கவனமாகப் பார்த்திருந்தான்: தன் உடல் எப்படி இணைத்துப் பொருத்தப்பட்டிருக்கிறது என்பது இப்போது அவனுக்கு அனேகமாகத் தெளிவாகப் புரிந்து விட்டிருந்தது. இரண்டு பெரிய தடுக்குகள், ஒவ்வொரு தொடையிலும் ஒன்று; டெக்னீஷியன்கள் அவற்றை அகற்றித்தான் அவனுடைய உடலின் உள் சர்க்யூட்களின் சிக்கலான அமைப்பைச் சோதித்தார்கள். எனக்குள் ஒரு அமைப்புக்கூறு இருந்தால் அது அங்கேதான் இருக்க வாய்ப்புண்டு, அவன் முடிவு செய்திருந்தான்.

சர்க்யூட்களோ பெரிய குழப்படியாக இருந்தன. புரியாமல் திகைத்தான். எனக்கு உதவி தேவை, தனக்குச் சொல்லிக் கொண்டான். சரி, பார்ப்போம், பிபிபி வகைக் கணினி அலுவலகத்திற்கு வாங்கினோமே, அதன் வி-போன் எண் என்ன?

வி-ஃபோனை எடுத்து, ஐடஹோ மாநிலத்தில் பாய்ஸீ நகரத்தில் இருந்த கணினி மையத்தைக் கூப்பிட்டான்.

“இந்தக் கணினியைப் பயன்படுத்த ஒரு நிமிடத்திற்கு ஐந்து பெரிய நோட்டுகள் கட்டணமாகும்.” என்றது ஒரு எந்திரக் குரல். “ தயவு செய்து உங்கள் மாஸ்டர்க்ரெடிட்-சார்ஜ் பலகையை திரையின் முன் காட்டுங்கள்.”

அவன் செய்தான்.

“ஒரு எச்சரிக்கை ஒலி கேட்கும். உயர்கணினியோடு உங்கள் வி-ஃபோனுக்குத் தொடர்பு கொடுக்கப் படும்,” குரல் தொடர்ந்தது. “துரிதமாக உங்கள் கேள்விகளைக் கேளுங்கள், விடைகள் மைக்ரோநொடியில் கிடைக்கும், நேரமாவது உங்கள் கேள்விக்குதான் -” அவன் அந்தக் குரலின் ஒலியைக் குறைத்தான். சில வினாடிகளில் கணினியின் சப்தம் திரையில் ஒலிக்கத் துவங்கிய உடன் ஒலியைக் கூட்டினான். இப்போது கணினி திரையில் ஒரு பிரும்மாண்டக் காது போல உருக்காட்டியது, அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தது- அதே நேரம் இன்னும் ஐம்பதாயிரம் பேரின் கேள்விகளையும் கேட்டுக் கொண்டிருக்கும்.

”என்னை பார்த்து ஒரு ஸ்கேன் எடு.” கணினிக்கு ஆணை பிறப்பித்தான்.” அப்புறம் என்னுடைய யோசனைகள், நடத்தைகள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் செயல்திட்டம் (ப்ரொக்ராம்) உள்ள எந்திர பாகம் எங்கே இருக்கிறதென்று சொல்லு.” அவன் காத்திருந்தான். ஃபோனின் திரையில் ஒரு பிரும்மாண்டமான கண், பல லென்ஸ்கள் கொண்டது, அவனை உற்று நோக்கியது; தன் ஒற்றை அறையில் அதன் முன் தன்னை நிர்வாணமாகக் காட்டிக் கொண்டான்.

கணினி பேசியது,”உன் மார்பில் ஒரு தடுக்கு உள்ளது, அதை எடு. உன் மார்பெலும்பில் கொஞ்சம் அழுத்து, அப்புறம் வெளிப்பக்கம் மெதுவாக நகர்த்து.”

அவன் செய்தான். அவனுடைய மார்பில் ஒரு பகுதி அப்படியே திறந்து கொண்டது: தலை சுற்றலாக இருக்க, அவன் அப்படியே தரையில் அமர்ந்தான்.

“கட்டுப்பாட்டுக்கான பகுதிகள் எனக்குத் தெரிகின்றன,” கணினி சொன்னது, “ ஆனால், எது-” அதன் கண் வி-ஃபோனின் திரையெங்கும் சுற்றியலைந்தது. “உன் இதய எந்திரத்தின் மேல் பகுதியில் ஒரு நாடா போல சுற்றி வைத்திருக்கிறது, என்னால் பார்க்க முடிகிறது, உனக்குத் தெரிகிறதா அது?” பூ- தன் கழுத்தை முடிந்த மட்டும் நீட்டி உள்ளே கூர்ந்து நோக்கினான்.
“இப்பொழுது நான் தொடர்பைக் வெட்டப் போகிறேன்.” கணினி சொன்னது. ”எனக்குக் கிட்டிய தகவலை எல்லாம் ஆராய்ந்து விட்டு, நானே உன்னைக் கூப்பிடுவேன், அப்பொழுது சரியான விடை கொடுப்பேன். உனக்கு வந்தனம்.” என்றபடி திரை இருண்டது.

இந்த நாடாவை நான் உருவி எடுத்து விடுவேன், பூ- சொல்லிக் கொண்டான். இத்தனை சின்னது.. நூல்கண்டு போல இரண்டு ஸ்பூல்கள் இருக்கின்றன, ஒன்று நாடாவை விடுவிக்கிறது, இன்னொன்று வாங்குகிறது அதை. இரண்டுக்கும் இடையில் ஒரு பரவி நோக்கி (ஸ்கானர்). எதுவும் ஓடுகிற மாதிரி இல்லை; அந்த ஸ்பூல் தண்டுகள் அசையாமல் நின்றன. ஏதோ நடக்கும்போது, மேல் கட்டுப்பாடாக அவை இடை வெட்டும், அப்போதுதான் நகரும் என்று பூ- யோசித்தான். என் மூளையில் இயல்பாக ஓடும் செயல்முறைகளுக்கு இடையிட்டுக் கட்டுப்படுத்தவே இவை. என் வாழ்நாள் பூரா இவை வேலை செய்திருக்கின்றன.

அவன் கை நீட்டி அந்த விடுக்கும் ஸ்பூலைத் தொட்டான். ஒரு இழுப்பில் அதைக் கிழித்து விட வேண்டியதுதான் நான் செய்ய வேண்டியது, அவன் நினைத்தான், அப்புறம்-
வி-ஃபோன் திரை மறுபடி ஒளிர்ந்தது. “மாஸ்டர்க்ரெடிட்-சார்ஜ்பலகை எண் 3பிஎன் எக்ஸ்-882-எச்க்யுஆர்446-ட்டி.” கணினியின் குரல் கேட்டது. “இது பிபிபி-307/டிஆர் மறுபடி தொடர்பு கொள்கிறேன், உன் கேள்விக்குப் பதில் சொல்ல, 16 வினாடிகள் கழித்து, நவம்பர்4, 1992. உன் இதயத்துக்கு மேல் உள்ள ஓட்டைகள் போட்ட நாடா, அது ஒரு செயல்திட்ட மேடை இல்லை. அது உனக்கு எதார்த்தத்தை அளிக்க இருக்கும் ஒரு அமைப்பு. உன்னுடைய மைய நரம்பு மண்டலத்துக்குக் கிட்டும் எல்லா உணர்ச்சித் தூண்டுதல்களும் இந்த அமைப்பிலிருந்துதான் வருகின்றன. அதை ஏதும் செய்வது ஆபத்தானது மட்டுமல்ல, உன்னையே அழித்து விடும்,” அது சொன்னது.”உன்னுள் ஏதும் செயல்திட்ட அமைப்பே இல்லை போலத் தெரிகிறது. கேள்விக்குப் பதில் சொல்லி விட்டேன். நல்ல நாளாகட்டும்.” மின்னி அணைந்து விட்டது.

பூ- நிர்வாணமாக வி-ஃபோன் திரை முன் நின்று கொண்டிருந்தான். அந்த நாடாவின் தண்டைத் தொட்டான், மிக ஜாக்கிரதையான, அளவிடும் தொடுகை. அப்படியா சேதி, அவன் யோசித்தான். இதை நான் அறிகிறேனா? இந்த அமைப்பு-

அவனுக்குப் புரிந்தது, நாடாவை வெட்டினால் என் உலகமே காணாமல் போய்விடும். மற்றவர்களுக்கெல்லாம் எதார்த்தம் தொடரும், எனக்கு மட்டும் காணாமல் போய்விடும். என்னுடைய எதார்த்தம், என் மொத்தப் பேரண்டமும் இந்த இக்கினியூண்டு பொருளில் இருந்து வருகிறது. நத்தை போல அது நகர்ந்து பிரிகிறபோது அந்த பரவி நோக்கி அதைப் படித்து என் மைய நரம்பு மண்டலத்துக்கு எல்லாவற்றையும் அனுப்புகிறது.

பலவருடங்களாக இது சுருள் விரிந்து கொண்டிருக்கிறது, அவன் தீர்மானித்தான்.

ஆடைகளை எடுத்து அணிந்தான். தன் பெரிய நாற்காலியில் அமர்ந்துகொண்டான் – ’மூன்று-திட்டம்’ நிறுவனத்திலிருந்து அவனுடைய அறைக்குக் கொணர்ந்த சொகுசு நாற்காலி அது- புகையிலை உள்ள ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். தன் பெயரின் முதலெழுத்துப் பொறித்த லைட்டரைக் கீழே வைத்தபோது அவன் கைகள் நடுங்கின; சாய்ந்து அமர்ந்தான், முன்னே புகையை ஊதினான், ஒரு சாம்பல் நிற அடர் மேகத்தையே உருவாக்கினான்.

கொஞ்சம் நிதானமாக வேண்டும், தனக்கே சொல்லிக் கொண்டான். நான் என்ன செய்ய முயல்கிறேன்? என்னுள் உள்ள செயல்திட்டத்திலிருந்து நழுவிவிடப் பார்க்கிறேனா? ஆனால் அந்தக் கணினி எந்தச் செயல்திட்டமும் இல்லை என்கிறதே? எதார்த்தத்தை உருவாக்குகிற அந்த நாடாவை அழிக்க நினைக்கிறேனா? ஆனால், எதற்கு?

(தொடரும்)

pkdick ‘The Electric Ant’ by Philip K. Dick; கதை முதலில் வெளியானது, 1969 ஆம் வருடம்.  அதிபுனைவு  மற்றும் அறிவியல் நவீனத்துக்கான சஞ்சிகை எனப்படும் ‘The Magazine of Fantasy & Science Fiction’ October, 1969 இதழில் வெளியானது.

ஃபிலிப் கின்ட்ரெட் டிக் என்பது கதாசிரியரின் முழுப்பெயர்.  விக்கிபீடியாவில் இவருடைய வாழ்க்கை வரலாறு உள்ளது.  அதில் இரண்டு பத்திகள் மிக சுவாரசியமானவை.  ஒன்று விசித்திரமானது; ஃபிலிப் டிக் எழுதிய கதை மாதிரியே அவர் வாழ்வும் இருந்தது என்பது போலத் தோன்றும்.  அந்த வரிகளை மாத்திரம் இங்கு மேற்கோளாய்ப் பாருங்கள்:

“Dick was recreated by his fans in the form of a remote-controlled android designed in his likeness.[26] The android of Philip K. Dick was included on a discussion panel in a San Diego Comic Con presentation about the film adaptation of the novel, A Scanner Darkly. In February 2006, an America West Airlines employee misplaced the android’s head, and it has not yet been found.”

One Reply to “எலெக்ட்ரிக் எறும்பு”

Comments are closed.