ஒரு நண்பரின் அகால மரணம் எனக்கு இசையின் கலாசாரப் பின்புலத்தைக் காட்டித் தருவதாக இருந்தது. அந்த நண்பர் ஜமைக்கா எனப்படும் ஒரு மேற்கிந்தியத் தீவில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த பாரம்பரியம் உள்ளவர். வழக்கறிஞர், சக ஆய்வு மாணவர். அவருடைய சவ அடக்கத்துக்கு நண்பர்கள் நாங்களெல்லாம் போயிருந்தோம். கூட வந்தவர்களில் பெருவாரியினர் இளம் பிராயத்தினர், வெள்ளையர், பலரும் சிறு நகரங்களில் தம் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தவர்கள். சிலர் என் போல நடுவயதினர். அவர்களருகே அமர்ந்திருந்தேன். அடக்கத்துக்குப் பிறகு நடந்த ஒரு பிரார்த்தனைக் கூட்டம் அது என நினைவு. முன்னாலும் நடந்திருக்கலாம், இன்று நினைவிலிருந்து உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சி துவக்கத்திலேயே ‘களை’ கட்டி இருந்தது. அதாவது கலகலப்பான ஒரு பாட்டுடன் துவங்கியது, வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் சக ஆப்பிரிக்க அமெரிக்க மாணவர்கள். அவர்கள் எல்லாரும் எழுந்து கை தட்டி ஆடி அசைந்து ஆர்ப்பரித்துப் பாடினர்.
என் கூட அமர்ந்திருந்த வெள்ளையர்கள் இந்த வகை வழிபாட்டை அப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறார்கள் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. தாம் அந்த இடத்தில் என்ன செய்தால் அது சரியான நடத்தையாக இருக்கும் என்று திக்பிரமித்து இருந்த அவர்களுக்குச் சற்றும் தெரிந்திருக்கவில்லை. பின் சற்று சங்கடத்துடன் எழுந்து நின்று தாமும் கை தட்டியபடி அந்த பிரார்த்தனைப் பாடல்களை முணுமுணுக்கத் துவங்கினர். எனக்கு அந்தக் கைதட்டல் சாத்தியமாக இருந்தது, உடலசைவு சிறிது, ஆனால் பாடல்கள் தெரியாததால் சங்கடமாகத்தான் இருந்தது. இறந்தவரோடு எனக்கு நல்ல நட்பு இருந்தது. அவர் இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு கூட வெகு நேரம் மாணவர்களின் பொது அறையில் அமர்ந்து நிறைய விவாதித்தோம். வேலை நேரங்களில் என் மேஜைக்கு இரண்டு மேஜை தள்ளி எந்நேரமும் அமர்ந்திருப்பார். முதல் மாதம் இருவரும் ஒரு இறுதித் தேர்வில் தேறி இருந்தோம். அவர் அதைப் பற்றிப் பேசி இருந்தார். நாள்பட்ட நட்பும், தேர்வுக்குப் பிறகு அவருடைய நெடுங்காலச் செயல் திட்டங்களும் பற்றி அவர் பேசி இருந்ததும் சேர்ந்து, அவருடைய திடீர் இறப்பு என்னைப் பாதித்திருந்தது. விபத்தால் இறந்ததால் அந்த விவரங்களின் குரூரமும் இன்னமும் மனதில் இருந்து போகவில்லை. இவர்களோ ஆரவாரமாகப் ஆடிப்பாடித் தேற்றுகின்றனர். இது இந்த வெள்ளையரின் நடு அமெரிக்கப் ப்ராடஸ்டண்ட் பண்பாட்டிற்கு மட்டும்தான் அதிர்வாக இருந்தது என்று இல்லை, சாவு என்பதை ஓரளவு இறுகலாக, மௌனமாகக் கடந்து பழகிய பண்பாடு என்னுடையதும்தான். ஆக ஒரு விசித்திரமான முறையில் நானும் அந்த அமெரிக்க வெள்ளை ப்ராடஸ்டண்டு பின்னணி கொண்ட சிலரும் ஒரே மாதிரி அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருந்தோம். அவர்களுக்காவது அந்தக் கிருஸ்தவப் பாடல்கள் நன்கு அறிமுகமாயிருந்தன. எனக்கு ‘அமேஸிங் க்ரேஸ்’ என்கிற பாடலைத் தவிர வேறொன்றும் தெரியாது. பாடமுடிந்த அவர்களுக்குத் தாளமும் ஆட்டமும் விலக்கி வைத்தன. தாளம் மட்டும் புரிந்த எனக்கு மற்றதெல்லாம் அன்னியமாக இருந்தது. உலகளவில் எல்லா மனிதருக்கும் பொது மொழி தாளகதி என அன்று எனக்கு நன்கு தெரிந்தது, .
அந்தச் சம்பவம் பற்றி ஏதும் இளக்காரம் இல்லாது, அதே நேரம் அது தமக்கு ஏற்புடையதல்ல என்ற வகையில் வெள்ளையின மாணவர்கள் தமக்குள்ளும், என்னிடமும் பிற்பாடு பேசினார்கள். ஆனால் அது வேறு மக்களுடைய வழி, அதில் குறை சொல்லத் தமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதையும் உணர்ந்திருந்தார்கள். சாவு என்பதை ஒரு அளவு துக்க வெளிப்பாடாக அணுக வேண்டும், ஒரு குதூகல வெளிப்பாடு இறந்தவரையே ஏதோ விதத்தில் இழிவு செய்கிறது என்பதாக அவர்கள் அணுகல் தெரிந்தது.
பல பகுதிகளில் இருந்து வந்த கருப்பின மக்களிடம், பலவேறு அரசியல் சாய்வுகள் இருந்தது அவர்களுடனான பல வருடப் பழக்கத்தில் எனக்கு நன்கு தெரியும். இடது தீவிரம், வலது மரபுவாதிகள், தற்பால் சேர்க்கையாளர், அந்த வகைப் பால் விருப்பங்களை வெறுத்து ஒதுக்குபவர், திரித்த ஜடாமுடி அணிந்தவர், ராணுவ வீரர் போலக் கச்சிதமாக முடிவெட்டி, பெட்டி போட்டு மடிக்கப்பட்ட ஆடைகள் அணிந்தவர், தெளிவான, படித்தவர்களின் இங்கிலீஷ் பேசுபவர், பேட்டை இங்கிலீஷ் பேசுபவர், இந்தியர்களிடம் நட்புடன் பேசுபவர், இந்தியர்கள் வந்தேறிகள் என்றோ, இனவெறியர் என்றோ, கிருஸ்தவரல்லாத பாகன்கள் என்றோ பார்ப்பவர்- இப்படிப் பல வகையினர் அமெரிக்கக் கருப்பரிடமும் உண்டு. எனினும் அவர்கள் எல்லாரும் அனேகமாக ஒரே விதமாக இந்தச் சாவுப் பிரார்த்தனைக் கூட்டத்தை அணுகினார்கள், அதில் பங்கெடுத்தார்கள்.
இத்தனைக்கும் ஜெஃப்ரி, இறந்த நண்பர், அவர்களில் பலரோடு நட்பு இருந்தாலும் கருத்து ஒருமித்து நடக்காதவர். அவர் தான் பெருவாரி அமெரிக்கக் கருப்பர் போல அல்லாத மக்கள் குழுவில் இருந்து வந்தவர் என்ற கருத்து இருந்தது. சுயத்தை ஒருபோதும் இழந்த அனுபவம் இல்லாத ஜமைக்கா நாட்டுக் கருப்பினத்தவர் என்று ஒரு சிறு பெருமிதம் கொண்டிருந்தார். அவர் பேசிய இங்கிலீஷும் ஓரளவு பிரிட்டிஷ் உச்சரிப்புடன் இருந்தது என்றாலும் அவர் தன்னைக் காலனியப் பிரஜையாக அறிந்ததில்லை, சுதந்திர ஜமைக்காவில்தான் பிறந்திருந்தார், வளர்ந்திருந்தார். இறந்தபோது அவர் அமெரிக்கக் குடிமகன். மேற்படி சம்பவம் நான் படித்த பல்கலை இருந்த நகரருகே ஒரு சிற்றூரில் ஒரு சர்ச்சில் நடந்தது. ஜெஃப்ரி மத நம்பிக்கை அற்றவர் என்றாலும் சர்ச்சில் பிரார்த்தனை என்பது இன்னொரு வினோதம். இறந்தவரின் கருத்துகளை யார் அத்தனை தூரம் மதிக்கப் போகிறார்கள்? ஜெஃப்ரியின் நெருங்கிய நண்பர், ஒரு வெள்ளைப் பெண்மணி, என் அருகில் அமர்ந்திருந்தார், அவருக்குமே இந்தப் பிரார்த்தனை வினோதமாகத்தான் இருந்தது. ஜெஃப் எப்படி இதையெல்லாம் எதிர்த்தவர், மத நம்பிக்கை இல்லாதவர் என்று அவர் என்னிடம் முன்னாலும், அந்தக் கூட்டம் முடிந்த பின்னும் தெரிவித்தார். தவிர இந்தப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்தவர் எங்களுக்கெல்லாம் பொது நண்பரும், சக மாணவருமான மார்க் என்ற கருப்பின இளைஞர், இவர் ஒரு கிருஸ்தவப் பாதிரிக்கான முழுப் பயிற்சியும் முடித்தவர், ஆய்வுப் படிப்புக்காக எங்களோடு சேர்ந்திருந்தார். மார்க் பழக மிக இனியவர், எதையும் மிக நாசூக்காக, கச்சிதமாகச் செய்வார் என்பதால் இவரால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரார்த்தனைக் கூட்டத்துக்கு அனேகமாக எல்லா மாணவர்களும் வந்திருந்தனர்.
இந்த சம்பவத்தைப் பற்றி என் இன்னொரு நெருங்கிய நண்பர், ராபர்ட் என்கிற அமெரிக்கக் கருப்பர், ஆப்பிரிக்காவில் கானா என்ற நாட்டு மூதாதையரைக் கொண்டவர், உயரத்தாலும் அகலத்தாலும் பேருரு, என்னோடு பேசியிருந்தார். அவரும் நானும் சேர்ந்தே இந்த அடக்க நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம். குடும்பப் பின்னணியால் இந்த வகைப் பாடல்கள் நிறைந்த சர்ச் வழிபாட்டில் பழக்கம் இல்லாதவர். ஆனாலும் இசையில் பல வகை இசை அவருககுப் பிடிக்கும் என்பதாலும், வழக்கத்துக்கு மாறான எதையும் ஓரளவு மகிழ்ச்சியோடு ஏற்கும் வகை மனோபாவம் கொண்டவர் என்பதாலும், பாட்டில், தாளத்தில், உடலசைவுகளில் எல்லாம் கலந்து கொண்டிருந்தார். அமெரிக்கத் திரள் இசையில் நிரம்பப் புலமை உள்ளவர் என்பதால் அவரோடு பேசியதில் அமெரிக்கக் கருப்பர்களின் இசைப் பாரம்பரியங்கள் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டேன். ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களின் பொது அறைகளில் இருந்து பேசியதால், அங்கு இருந்த இதர, அமெரிக்காவின் தென் மாநிலங்களில் இருந்து வந்த பல கருப்பின மாணவர்களும் பின்னர் பேச்சில் கலந்து கொண்டனர். அவர்களில் சிலருக்கு ஃப்ரெஞ்சுப் பெயர்களும், ஸ்பானியப் பெயர்களும் இருந்தன. கேட்டபோது லூயிஸியானா என்றறியப்படும் மாநிலத்துக் கருப்பர்களிடையே எப்படி ஃப்ரெஞ்சுப் பண்பாடு நிறைய உண்டு என்பது தெரிந்தது. இசையிலும் அந்தப் பாதிப்புகள். அவர்களில் ஓரிருவரைத் தவிர எல்லாருக்கும் ஆப்பிரிக்க- அமெரிக்கர் அல்லது கருப்பு மக்களின் இசையில் ஆழ்ந்த புலமை இருந்தது என்று தெரிந்தது. பலருக்கு வாத்தியங்கள் வாசிக்கத் தெரிந்திருந்தது, பள்ளிகளில், சர்ச்சுகளில் அவர்கள் இசைக் குழுக்களில் வாசித்திருந்தனர்.
இறுதியில் தெரிந்த சில விஷயங்கள். அமெரிக்கக் கருப்பர்களில் ஆப்பிரிக்காவின் பாரம்பரிய இசை இன்னுமே நிறைய உண்டு. அடிமைகளாக இங்கு இழுத்து வரப்பட்டபோது, வெவ்வேறு ஆப்பிரிக்கப் பகுதிகளில் இருந்து சிறைப்பிடித்துக் கொணரப்பட்டதால் பார்வைக்கு எல்லாரும் ஆப்பிரிக்கர் எனத் தோன்றினாலும் அவர்களிடையே ஏராளமான வேறுபாடுகள் இருந்தன. அம் மக்கள் துவக்க கட்டங்களில் தம்மிடையே பேசக் கூட பொதுமொழி இல்லாத நிலையில் கையசைவு, உடலசைவாலேயே பேசி இருந்தனர். தவிர்க்க இயலாதபடி தம்மைச் சிறைப்பிடித்தவர்களின் மொழிகளைக் கற்றுப் பேச நேர்ந்ததா, அதே மொழியிலேயே தம்மிடையேயும் பொதுத் தொடர்புக்கெனப் பேசுவது அவர்களுக்கு நேர்கிறது. அடிமைக்கப்பல்களில் துக்கம், பசி தாகம் சவுக்கடி, சிறிதும் காரணமே அற்ற குரூரத் தண்டனைகள் ஆகியவற்றுக்கு நடுவே, துன்பங்களும் பிணியும், நோவும் வருத்துகையிலும் கிட்டிய இடைவெளிகளில், தம் போன்றவர் என்ற அபிமானத்தில் ஏற்பட்ட நெருக்கத்தில், மொழிகளற்ற உடல் மொழியில், முகபாவங்களில் அவர்கள் இணைகிறார்கள். அப்போது அடிமைப்படுத்திய வெள்ளை ‘எஜமானர்கள்’ கவனம் பிறழ்ந்த நேரங்களில், அவர்கள் உறங்கிய நேரங்களில் சங்கிலிகளில் கட்டப்பட்டிருந்த நிலைகளில் தம்மிடையே அவரவர் மொழிப் பாடல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். உரக்கப் பாடினால் தண்டனை கிட்டும், என்று ஒலி ஒடுங்கிய முனகலிசையும், தாளங்களும், சொல்லொடுங்கிய இசையும் அவர்களிடம் நிறைய பரிமாறிக் கொள்ளப் பட்டிருக்கிறது. சொற்கள் பேசிப் பழக ஒரே பகுதி மக்கள் இல்லாத காரணத்தால் பொருளிழந்து, தலைமுறைக்குத் தலைமுறை மாற்றிக் கொடுக்கப் படாமல் பாஷை ஞானம் அழிந்த பின்னும் எஞ்சுவன தாளங்களும், பாட்டுகளுடைய இசைப் பாணியும் மட்டுமே. இப்படி ஒரு வினோத பண்பாட்டுத் தொடர்ச்சி அமெரிக்கக் கருப்பர் இசையில் நீடிக்கிறது. அதே நேரம் பண்பாட்டு அழிப்பும் அதன் பின்னணியிலேயே புலம்பலாக ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.
பிற்பாடு பெரும் விவசாயப் பண்ணைகளில் கொட்டடிகளில் அடைக்கப்பட்டிருந்த அரை மிருக வாழ்விலும் இதே போன்ற இசை வளர்கிறது. அவர்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் கிருஸ்தவரான பின்னும் அடிமைகளாக இருந்த போதும், வெள்ளைக் கிருஸ்தவத்தால் ஆப்பிரிக்கப் பழங்குடி இசை கருப்பரின் கிருஸ்தவத்தூடே வெளிப்படுவதை ஒடுக்க முடியவில்லை. அது உள்ளிருந்து பீறிட்டெழுந்து பல வடிவுகளில் வெளியில் வியாபிக்கவே செய்தது. சர்ச்சுகளில் பின் வரிசைகளில் இருந்தபடி வெள்ளை இசையைக் கேட்டோ, தாமும் ஒலித்தோ பங்கெடுத்த போதும், அமெரிக்கக் கருப்பர்கள் தமக்கென கருப்பர் சர்ச்சுகளை நிறுவத் துவங்கிய பின், கருப்பரின் ஆப்பிரிக்க இசைக்குத் திறப்பு கிட்டுகிறது. அந்த இசைத் திறப்புடைய பல வடிவுகளே இன்று அமெரிக்கக் கருப்பின இசையாகவும், ஏன் வெள்ளையரின் திரளிசையாகவுமே பரிணமிக்கின்றன.
இன்றைய அமெரிக்க வெகு ஜன இசையில் கருப்பர்களின் இசை முக்கியமான பங்கு வகிக்கிறது. அமெரிக்க மக்களிசை என அழைக்கப்படுவதில் பெரும்பங்கு கருப்பின மக்கள் இசை அல்ல. அது அனேகமாக வெள்ளை விவசாய மக்களின் இசை, அல்லது மலைவாழ் வெள்ளையரின் இசை இத்தியாதி. அதில் பல யூரோப்பிய மக்கள் குழுக்களின் நாட்டுப்புற இசைப் பாரம்பரியம் கலந்திருந்திருக்கிறது. அமெரிக்கக் குடியேறிகளில் பெருவாரியினர் உழைக்கும் மக்கள், அல்லது விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் என்பதை நம் நாட்டில் நிறைய பேர் அறிந்திருக்க மாட்டார்கள் அல்லது மறந்திருப்பர். இன்றைய நவீனயுக, தொழில் மயமான சமூகங்களில் இருந்து வரும் அமெரிக்கர்களில் கூடப் பெரும்பகுதியினர் இரண்டாம் தலைமுறை நகரவாசிகளே, அவர்களின் பாட்டன் பூட்டன், பாட்டிகளெல்லாம் இன்னமுமே கிராமப்புறங்களில் வாழ்ந்து வரக் கூடும். கார்களும், ட்ராக்டர்களும், தொலைக்காட்சிப் பெட்டிகளும், ரெஃப்ரிஜிரேடர்களும், மைக்ரோவேவ் அடுப்புகளும் கூட மக்களைத் தொழில்மயமான சமூகப் பழக்கங்களுக்கு ஆட்படுத்தி விடாது, அல்லது நகரவாசிகளாக்கி விடாது. இந்த வகை சாதனங்களின் நடுவேயும் மக்கள் சிறு நகர அல்லது கிராமப் புறப் பண்பாடுகள் கொண்டவர்களாகப் பெரும்பாலும் இருக்க வாய்ப்பு உண்டு. என்ன, தொலைக்காட்சிகளின், சினிமாவின் பாதிப்பால் ஓரளவு நகரியப் பண்பாட்டின் பாதிப்பு அல்லது தாக்கம் ஓரளவு இருக்கக் கூடும்.
இந்த வெள்ளையர்களின் ‘நாட்டுப்புற’ இசை அந்தந்த நாடுகளில் இன்னமும் ஓரளவு நெடுங்காலமாய்ப் பழகிய முறைகளில், வாத்தியங்களின் உதவியுடன் இசைக்கப்படுவதாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க வாழ்வில் நிறையக் கலப்பு நடந்ததில் பல யூரோப்பியப் பாரம்பரியங்கள் கலந்த ஒரு இசை உருவாகிறது. இந்தக் கலப்பின் பல இழைகளை யூரோப்பிய நாட்டுப்புற இசை அல்லது செவ்வியல் இசையில் பயிற்சியும், அந்த வரலாற்றைக் கற்ற அறிவும் உள்ளவர்களால் நன்றாகவே இனம் பிரித்துக் காட்ட முடியும். இந்த நாட்டுப் புற இசையில் ஒரு சிறு அம்சமே அமெரிக்கக் கருப்பின மக்களின் இசையில் உலவுகிறது. அவர்களின் இசையில் பெரும்பகுதி ஆப்பிரிக்கப் பழங்குடி இசைகளில் இருந்து புறப்பட்ட பாரம்பரியத்தையே கொண்டுள்ளது. இன்னின்ன பகுதிகளில் இன்னின்ன குடிகளின் இசை தம்முடையது என்று அவர்களில் பல இசைக் கலைஞர்களுக்கே கூடத் தெரிந்திராது. அப்படித் தெரிந்து கொள்ளும் ஆசை உள்ள பல அமெரிக்கக் கருப்பின இசைக்கலைஞர்கள் ஆப்பிரிக்கப் பயணங்களில் ஆங்காங்கே தம்க்குக் கிட்டும் பாரம்பரிய தரிசனங்களைப் பற்றி அவ்வப்போது எழுதவும் பேசவும் செய்கிறார்.
இந்த இசை ஏதோ தன்னிச்சையாக வெறும் உணார்வுகளால் மட்டும் தூண்டப்பட்டு எழுந்த இசை அல்ல. ஒழுங்கான இசை எதுவுமே பயிற்சி, ஒரு பாரம்பரியம் இல்லாது எழுவதில்லை. அமெரிக்கக் கருப்பர்கள் இசையும் அப்படித் தன்னிச்சையாக, சுயம்புவாக எழுந்த இசை அல்ல. அதில் நிறைய ‘மக்கள்’ வாழ்வில் இருந்து அனுபவங்களிலிருந்து, உழைப்பு, ‘அடிமை’ வாழ்வு, இனவெறி, பலவித நசுக்கல் முறைகளால் பட்ட துன்பங்கள் ஆகியவற்றின் பாதிப்பால் எழுந்த உணர்வுகளிலிருந்து உருவானது என்பதில் ஐயம் இல்லை. இவை அனேகமாகப் பாடல்கள், அல்லது சுதந்திர அலைவுகள் மூலமாக இசையில் வெளிப்படுகின்றன என்பது உண்மை. ஆனால் அந்தப் பாடல்கள எந்த வடிவில் வெளிப்பட்டன, அல்லது அலைவுகள் எப்படி எழுந்து பரந்து, விரிந்தன என்பதைக் கவனித்தால், அவற்றுக்கு எல்லாம் மூலாதாரங்கள் உண்டு என்பது தெரியும். அமெரிக்க ஜாஸ் இசையாகட்டும், தாளகதியோடிழையும் துக்க இசை (Rhythm and Blues) ஆகட்டும், பலவிதமான நாட்டுப் புற இசை ஆகட்டும், ஒரு கட்டுத்தளத்தின் மேலேயே அவை எழுகின்றன. ஏனெனில் வாத்தியங்கள் அப்படி ஒரு கட்டுமானத்தை எண்ணி உருவாக்கப் படுகின்றன. தவிர மனிதக் காது ஒழுங்குடன் இசைக்கப்படுவதையே விரும்பி ஏற்கிறது. பச்சிளம் குழந்தைகள் கூட கர்ண கடூர இசையை விட மிக்க ஒழுங்காக அமைக்கப்பட்ட் இசையையே விரும்பி ஏற்கின்றன என்பதை சாதாரணச் சோதனைகள் கூடக் காட்டும்.
அமெரிக்கக் கருப்பர்கள் துவக்கத்திலிருந்தே அவர்களுக்கு இசை மறுக்கப்பட்டிருந்தும் வாயொலிகள் வழியேயும், கைதட்டல் வழியேயும், மௌனம் அதிகமான, ஒலி குறைந்த முனகல்கள் மூலமும் இசை உணர்வை ஆற்றுப்படுத்தி இருந்தார்கள் என்பது அந்த சமூகத்து மக்களின் இசைப் பாரம்பரியங்கள் பற்றி எழுதப்பட்ட பல புத்தகங்கள், கட்டுரைகள் வழியே கிட்டுகிற தகவல். இந்தியாவிலும் தமிழகத்திலும் நமக்கு அதிகம் தெரியாது இருக்கக் கூடிய ஒரு தகவல்- அமெரிக்கக் கருப்பரின் ஆங்கிலமே ஒரு வகையில் கலந்து எழுந்த மொழி தான், அந்தப் பண்பாடும், இசையும், ஏன் பலவித மத ஒழுக்கங்களுமே அவ்வகைத்தானவைதான். கிருஸ்தவர் என்றறியப்படும் அமெரிக்கக் கருப்பர்கள் கூட மத்தியமான அமெரிக்கக் கிருஸ்தவத்தில் இருந்து நிறைய விதங்களில் வேறுபட்ட கிருஸ்தவத்தை வெகுகாலம் பயின்றனர். ஆரவாரமான இசை, நடனம் போன்ற உடலசைவுகள கலந்த ஒரு வகையான குதூகலமும், துக்கமும், கருணை உணர்வும் கலந்த துவக்கம், இறுதியோடு ஆப்பிரிக்க மக்களின் சர்ச்சுகளில் வழிபாடு நடந்தன, நடக்கின்றன.
மைய ப்ராடஸ்டண்ட் சர்ச்சுகளோ யூரோப்பிய (வெள்ளையரின்) மிகக் கட்டுபபட்ட, அலங்காரம்,ஆடம்பரம், உணர்ச்சி வெளிப்பாடு ஆகியனவற்றைத் திரஸ்கரித்த, உணர்வுகள் இறுக்கப்பட்ட ஒரு வகை வழிபாட்டையே பெரிதும் முன்வைத்தன, வைக்கின்றன. இந்தப் ப்ராடஸ்டண்ட் பண்பாட்டை, நட்புணர்வுடன், சுய எள்ளலுடன் நகைச்சுவையுடன் விமர்சன பூர்வமாக விவரிக்கும் ஒரு வாராந்தர வானொலி நிகழ்ச்சியை நான் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாகக் கேட்டு வருகிறேன். ‘The Prairie Home Companion’ என்ற பெயரில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்னமும் காரிஸன் கீலர் என்ற நகைச்சுவை எழுத்தாளரால், பாடகரால் நடத்தப்படுகிறது. (இடையில் சில வருடங்கள் வேறு பெயரில் இதே நிகழ்ச்சி சில மாறுதல்களுடன் நடந்தது.)
வெகுஜன இசை என்று இன்று அறியப்படும் பாப் இசையில் அமெரிக்க நாட்டுப்புற இசை, அமெரிக்கக் கருப்பர்களின் பல இசை முறைகள், தவிர மேற்கின் செவ்வியல் இசை, பல்லினப் பாரம்பரியங்கள், பல நாட்டு இசைப் பாரம்பரியங்கள, தவிர பல வகை காஸ்பெல் இசை அல்லது கிருஸ்தவப் பிரார்த்தனை இசை என்று கடலில் பல ஆறுகள் கலப்பது போல ஏதேதோ கலந்து உருவாகிறது. ஏராளமான நல்ல தண்ணீர் ஆறுகளிடம் இருந்து பாய்ந்து கலந்தது என்றாலும் கடல் இறுதியில் உப்பாக இருப்பது போல இந்த வெகுஜன இசை தனக்கென ஒரு குணமும் கொண்டு வெளியாகிறது. கடந்த அறுபது எழுபது ஆண்டுகளில் இந்த வெகுஜன இசை, பெருமளவும் அமெரிக்க இசை, ஓரளவு யூரோப்பிய இசையாகவே இருந்தது; இன்று உலகளாவிய பன்னாட்டு ஊடகங்கள் வழியே பரவி விரிந்து பல நாடுகளிலும் அந்தந்த மண்ணின் குணங்களோடும், ஆனால் அதன் வேரான அமெரிக்க வெகுஜன இசையின் சாய்வுகளோடும் கலப்பிசையாக வெளிப்படுகிறது. நான் தாய்வானிய வெகுஜன இசை, சீன வெ.ஜ. இசை, மங்கோலிய வெ.ஜ இசை என்று பல விசித்திரப் பிறவிகளையும் கேட்டிருக்கிறேன். விசித்திரம் என்று குறிக்கக் காரணம் அவற்றில் உள்ள மேலைத் திரளிசையின் பாதிப்பை நான் கவனிப்பதால்தான். வெளி மங்கோலியாவின் ஸ்டெப்பி புல்வெளிகளில் மாடு மேய்க்கும் மங்கோலியர் கூடாரங்களில் எலெக்ட்ரிக் கிடார், ஸ்டீல் ட்ரம்கள், துணையுடன் அமெரிக்க சோக இசையை அல்லது மக்களிசையைப் பிரதி செய்து மங்கோலிய மொழியில் பாடுவதை வினோதப் பிறவி என்று பார்க்காமல் இருக்க எனக்கு இயலவில்லை. அதனால் அதை நான் ரசிக்கவில்லை என்று அர்த்தமில்லை. நம் ஊரில் ரஹ்மானும், ஹாரிஸ் ஜெயராஜும் என்ன சுத்தமான இந்திய இசையையா கொடுக்கிறார்கள்? இந்தியாவிலும் இது உண்டு என்பது நமக்குத் தெரியும்.இன்றில்லை, 30, 40களிலேயே திரை இசைப் பாடல்களில் மேற்கின் பாதிப்பு நிறையக் காணக் கிட்டும்.
ராக், பாப் என்று பெயர்கள் கொண்டிருந்தாலும் உலகளவில் அது பல முகங்கள், குணங்களோடு ஒரு கடலில் கலந்த தன்மையைக் கொண்ட இசைதான். இது அனேகமாக இளைஞரிசை என்றாலும் சமீபகாலங்களில் நடுவயதினரும் அமைப்பிலிருந்து விலகிய, அல்லது நிறுவனங்களை, சமூகங்களை, குழுக்களை, ஒழுங்கை, வாழ்வின் இறுகலை எல்லாம் விமர்சிக்க ஒரு வாகனமாக இந்த வகை இசையைப் பயன்படுத்துகிறார். அதனால்தான் இஸ்லாமிய நாடுகளில் கூட, ஏன் துருக்கியில், இரானில், சீனாவில் கூட, இந்த வகை இசை உலவுகிறது எனக் கேள்விப்படுகிறேன். எதிர்ப்பைக் காட்ட இளைஞர்கள் பயன்படுத்துமிசை இது என்பதால் கம்யூனிஸ்டுகளால் ரஷ்யாவிலும், சீனாவிலும் கொடுமையாக ஒடுக்கப்பட்ட போதும் இந்த வகை எதிர்ப்பு இசை எழுந்த வண்ணம்தான் இருந்தது, இன்னமும் சீனாவிலும் இது நிறையவே காணப்படுகிறது என்று கட்டுரைகளைப் பார்த்திருக்கிறேன். இது அத்தகைய ஒடுக்குமுறை, சர்வாதிகாரச் சமூகங்களில் ‘தரையடி இசை’ அல்லது ‘பாதாள இசை’ (Underground music) என அறியப்படுகிறது. நியாயமான பெயர்தானே?
இத்தனையும் சொன்ன பிறகும், அந்தந்த சூழல்களில் இந்த இசை வெளிப்படும்போது தன் பின்னணியில் இருக்கும் ஒரு இசைப் பாரம்பரியத்தின் பாதிப்பை இந்த இசை கொண்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக மக்களிசை என்பதையும் வெகுஜன இசை என்பதையும் ஒரு சேரப் போட்டுக் குழப்பிக் கொள்வதும் தேவை அற்றது. ஏனெனில் மக்களிசையில் உள்ளூர் குணங்களே அதிகமாக இருக்கும். நகரக் குழுக்களிடையே இருந்தும் இத்தகைய இசை பிறக்கக் கூடும் என்பது உண்மையானாலும், உலகப் பாதிப்பு அல்லது பல நாட்டுப் பண்பாடுகளின் பாதிப்பு அதிகமற்று, உள்ளூரிலும் சிறு வட்டங்களான சமுதாயங்களின் பாதிப்பு மீதூக்கி இருக்கும். வெகுஜன இசை என்பதில் எந்த நாட்டிலிருந்தும் ஒரு கூறு வந்திறங்கி இருக்க வாய்ப்பு அதிகம். அது குறுங்குழு இசை அல்ல. ஆனால் அதே நேரம் தற்குறி இசையோ, பாரம்பரியங்களை எல்லாம் ஒழித்துக் கட்டிய இசையோ அல்ல. அப்படி ஒரு இசை நவீனத்துவத்தின் பாதிப்பால், முன் கூட்டித் தேர்ந்த கருத்தியலால் உந்தப்பட்டு இசையை வடித்த சில மேற்கத்திய இசைப் படைப்பாளர்களிடமே வெளிப்படுகிறது. Atonal music, Serialism, avant garde European music என்று பல விதமாக அறியப்படும் இந்த இசை பெருமளவு யூரோப்பிய நவீனத்துவத்தின் கருத்தியல் பாதிப்பில் எழுந்தது. விசித்திரம் என்னவென்றால் முதலில் எந்தப் பாரம்பரியமும் இல்லாதது போல பாவிக்கப்பட்ட இந்த வகை இசைக்கும் இன்று ஒரு பாரம்பரியம் துவங்கி விட்டிருக்கிறது. இந்த வகை இசை மேற்கைத் தவிர வேறெந்த நிலப்பகுதியிலும் வெளிப்பட்டதாகவோ, பரவியதாகவோ எனக்குத் தெரியவில்லை.
(முற்றும்)