லீ ஜியாபெள – அமைதியின்மை தந்த அமைதிப்பரிசு

chinese-dissident-liu-xia-015இந்த வருடம் நோபல் அமைதிப்பரிசு லீ ஜியாபெள என்ற சீனருக்குக் கிடைத்திருக்கிறது. யார் இந்த லீ ஜியாபெள? பரிசு பெறும்விதமாக இவர் என்ன செய்தார்? உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றைப் பெற்ற இவரை சீன அரசாங்கம் சிறையில் அடைத்திருக்கிறது; இவருக்கு நோபல் பரிசு கொடுத்ததையும் கடுமையாக எதிர்க்கிறது. ஏன்? இதிலிருந்து நாம் சீன அரசைக் குறித்து என்ன தெரிந்து கொள்ள முடிகிறது? நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன? இக்கேள்விகளுக்கான சில பதில்களை இக்கட்டுரையில் பார்ப்போம்.

இந்த வருடம் நோபல் அமைதிப்பரிசு காஷ்மீரை இந்தியாவின் இரும்புப்பிடியில் இருந்து விடுவிக்க போராடும் சையத் அலி ஷா கீலானிக்கு, காஷ்மீரத்தில் வன்முறையற்ற கல்லெறி சத்யாகிரஹத்தை தலைமை தாங்கி நடத்தியதற்காக அளிக்கப்பட்டு இருந்தால் என்ன நடந்திருக்கும்? இந்திய அரசு வேதனையும் வருத்தமும் தெரிவித்து ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டு இருக்கும். முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க நார்வே நாட்டு தூதரகத்தின் முன் 79 பேரைக்கூட்டி நார்வே நாட்டினருக்கு புரியும் வண்ணம் தேவநாகரியில் ஒரு துணிப்பதாகையில் கோஷங்களை எழுதி ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கும். அருந்ததிராய் அவர்களோ புல்லரித்து இவ்விருது காஷ்மீரை விட்டு இந்தியா வெளியேறும் நேரம் வந்துவிட்டதற்கான அறிகுறி என்று ஒரு பேட்டி கொடுத்து இருப்பார். ஏனைய அறிவுஜீவிகள் அதைக் கைகொட்டி வரவேற்று இருப்பார்கள். ‘சிண்டு’ என்ற சொல்லோடு சேர்ந்தொலிக்கும் சொல்லில் வெளிவரும் ஒரு பெரும் நாளிதழில் யானை சின்னம் நடுபக்கத்தில் இருந்து முதல் பக்கத்தலையங்கத்தின் மேல் ஊர்ந்து அமர்ந்து கொலுவீற்றிருக்கும். கீலானி அவர்களின் ‘மிக மிக குறைவாக’ உண்ணும் பழக்கம், அவர் நண்பர்களை உபசரிக்கும் நயம், அமெரிக்காவில் வசிக்கும் அவர் பேரக்குழந்தைகள் புகைப்படம் போன்ற இன்னபிற இன்றிமையாத தகவல்கள் தமிழ்கூறும் நல்லுலகிற்கு விகடன், குங்குமம் போன்றவற்றால் பறைசாற்றப்பட்டு இருக்கும். தமிழக முதல்வர் சிறுபான்மையினருக்கு விருது வழங்கியதற்காக நோபல் கமிட்டியைப் பாராட்டி சட்டசபையில் ஒரு தீர்மானமே நிறைவேற்றி இருப்பார். அமெரிக்க வாழ் தேசப்பற்றாளர்கள் குய்யோ முறையோ என்று வலைப்பதிவுகளில் கையொடிய பின்னூட்டம் இட்டு தங்கள் கடமையை செவ்வனே ஆற்றுவார்கள். ஒரு வாரத்தில் மேற்படி விஷயம் சுமுகமாக ஒதுக்கிவைக்கப்படும்.

என்ன செய்வது, இப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக இவ்வருட விருது எவருமே கேள்விப்படாத லீ ஜியாபெள என்பவருக்கு சீனாவில் அடிப்படை மனித உரிமைகள், ஜனநாயகம் இவற்றுக்காக தொடர்ந்து போராடி வருவதற்காக அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இவர்  Charter-08 என்று சீனா ஒரு அரசியல் சட்டவிதிகளுக்கு உட்பட்ட ஜனநாயக குடியரசாக மாறுவதற்கான ஒரு செயல்திட்ட வரைவை எழுதி 10000 சீன அறிவுஜீவிகளின் கையொப்பம் பெற்ற ‘குற்றத்’திற்காக சிறை வாசம் அனுபவித்து வருகிறார். இவ்வறிவிப்பு சீனாவில் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டது. பரிசு அறிவிப்பு செய்த BBC, CNN போன்றவை உடனடியாக முடக்கப்பட்டன. சீனப்பெரும்தீச்சுவர் எனப்படும் இனணயத்தின் இரும்புத்திரை ‘நோபல் அமைதி பரிசு’ , ‘லீ ஜியாபெள’ போன்ற சொற்களை தேடினால் வெற்றுவலைப்பக்கங்களை நோக்கி இட்டுச்சென்றன. லீயின் மனைவி வீட்டுக்காவலில் வைக்கப்ட்டார். இவ்வருடம் இப்பரிசு ஏதோ பேர் இல்லாத ஒரு அரசுவிரோதிக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக அரசு செய்தி நிறுவனங்கள் கோடிகாட்டின. லீ பரிசு பெற்றதைக் கொண்டாட ஒரு உணவகத்தில் ஒன்றுகூடிய லீயின் ஒரு டஜன் நண்பர்கள் 1.3 பில்லியன் மக்களின் பொது அமைதி கருதி கைது செய்யப்பட்டார்கள். கடுமையான சென்சார் முறைகள் அமல் செய்யப்பட்டன. இந்தப்பரிசு அளிக்கப்பட்டதை எதிர்த்து அரசு அதிகாரிகள் வெளியிட்ட கண்டன அறிக்கைகூட தணிக்கை செய்யப்பட்டது. இவற்றின் தாக்கம் சென்னை மவுண்ட்ரோட் வரைக்கும் நீடித்து வருவதை வைத்து சீன அரசு சக்தியின் நீட்சியையும் மாட்சியையும் அறியலாம். எதோ சொல்லக்கூடாத குற்றத்தை செய்த லீ ஜியாபெளவை வெளிப்படையாகக் கூட கண்டிக்க முடியாத ஒரு அபத்த எல்லைக்கு சீன அரசு தள்ளப்பட்டு இருக்கிறது. ஒரு கட்சி ஆட்சி முறை சீர்செய்யப்படாவிட்டால் சீனாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என பொத்தாம் பொதுவாக 2 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லி வைத்த சீன பிரதமர் வென் ஜியாபெளவின் பேச்சு கூட இப்போது இணையத்தில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. யார் கண்டது? ஒரே ஊர்க்காரர்களாக இருந்து வைக்கப்போகிறார்கள் என்ற ஐயமாக இருக்கலாம்.

police-closely-monitoring-021

லீ ஜியாபெள 1955-ஆம் ஆண்டு பிறந்தார். ‘நல்ல’ காலமாக அவரது பள்ளிப்பருவம் மாவோ நடத்திய கலாசாரப்புரட்சியின் உச்சத்தில் கழிந்தது. ஏனெனில் 15-20 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திருந்தால் மற்ற முனைவர்களோடு மாவோ அவரை ‘மறு-கற்பித்தல்’ என்ற பெயரில் கோழி வளர்க்க அனுப்பியிருப்பார். 5-10 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திருந்தால் அவர் கல்லூரிக்கே சென்று இருக்க முடியாது. அவரது நல்லூழ் மாவோவின் கலாசாரப்புரட்சி லட்சக்கணக்கான மக்களை காவு கொண்டு சன்னதம் அடங்கியபின் கல்லூரிகள் திறக்கப்பட்டபின் கல்லூரிப்பருவம் எய்தினார். பெய்ஜிங் பல்கலைகழகத்தில் இலக்கியத்தில் இளங்கலை பட்டமும், முதுகலைப்பட்டமும் பின்னர் முனைவர் பட்டமும் பெற்றார். இக்காலகட்டம் டெங் ஜியாவோ பெங் தலைமையில் சீனா வெகுவிரைவாக பொருளாதார, சமூகத்தளைகள் அகற்றப்பட்டு இருந்த காலகட்டம். மேற்கத்திய நாடுகளின் தொழில்நுட்ப அறிவும் அவர்களின் சந்தையும் சீனாவுக்கு மிக முக்கிய தேவைகளாக இருந்தன. இச்சூழலில் லீ ஒரு பொது அறிவு ஜீவியாக பரிணமிக்கத் தொடங்கினார். அவரது எழுத்துக்கள் கல்வித்துறையில் பிரபலமாகத்தொடங்கின. மேற்குடன் சீனா பேராசிரியர் பரிமாற்றங்கள் நிகழ்த்தத் தொடங்கியது. அப்பொழுது தனது எழுத்தால் முக்கியத்துவம் பெற்ற லீ, கொலம்பியா, ஹவாய் பல்கலைகழகங்களில் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்டார்.

நியுயார்க் நகரின் தண்ணீரோ குளிரோ என்னவோ, ஆசாமி சுத்தமான ஜனநாயகவாதியாக மாறிப்போனார். எழுத்திலும் பேச்சிலும் சீனாவில் பல கட்சி ஜனநாயகம், மனித உரிமைகள் பேணல், வழிபாட்டு சுதந்திரம் – இவற்றை ஆதரித்து வந்தார். இனிமேல் இவர் சீனாவுக்கு திரும்ப போகாமல் அமெரிக்காவிலேயே செட்டில் ஆட நடத்தும் வழக்கமான ஒரு ‘visiting professor’ உத்தியாகவே இது பலருக்கு தோன்றியிருக்கலாம்.  1989-இல் டியானென்மென் சதுக்கத்தில் பெருந்திரளாகக் கூடி மாணவர்கள் ஜனநாயகம் கோரி போராடியபோது இவர் ஒரு பலமான அறிக்கை விட்டு தனது பார்க் அவெனியூ வீட்டில் ஜகா வாங்கி இருக்கலாம். பிழைக்கத்தெரியாத மனிதர், தன் வாழ்வின் மூல்யங்களை ஆயிரக்கணக்கானோர் போராடும்பொழுது, தான் அதில் நேரடியாக பங்கு கொள்ள வேண்டும் என முடிவெடுத்து சீனா திரும்பினார். உடனடியாகக் கைது செய்யப்பட்டு ஒரு கடும் சிறையில் 7 ஆண்டுகள் அடைக்கப்பட்டார். பின்பு அவரது மூளை ஒழுங்காக வேலை செய்யவதற்காக ‘மறு-கற்பித்தல்’ முறையில் கசடறக்கற்று தன் பிழைகளை ‘கண்டுணர்ந்த’ பின் அரசியல் விவகாரங்களில் தலையிடவோ அரசுக்கு எதிராக எழுதவோ பேசவோ கூடாது என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டார். எதற்கும் இருக்கட்டும் என்று அவர் வீட்டிற்கு அருகில் இரு காவல்நிலையம் கட்டப்பட்டது. அவரது தொலைபேசி மற்றும் இணைய தொடர்புகள் கண்காணிக்கப்பட்டு வந்தன. ஆசாமி கொஞ்சம் கூட அசரவில்லை. வெளிநாட்டு பதிப்பகங்களில் தனது பழைய எழுத்துகளை தொடர்ந்தார்.

liu-xiaobo-right-reading-0012008-ஆம் ஆண்டு தான் வயதுக்கு வந்ததை கொண்டாடும் விதமாக சீனா ஒலிம்பிக் போட்டியை பிரமாண்டமாக நடத்தியது [காமன்வெல்த் போட்டிக் குளறுபடிகளை கண்டு நொந்து போன] நமக்கு நினைவிருக்கலாம். அது சர்வதேச மனித உரிமை பிரகடனம் அறிமுகப்படுத்தப்பட்ட 60-ஆம் ஆண்டும் ஆகும். 60 ஆண்டுகள் கழிந்தும் சீனாவில் இது ஏட்டுச்சுரைக்காயாக இருப்பதைக் கண்டு வருந்தி ‘Charter-08′ எனும் பெயரால் சீனாவில் ஜனநாயக முறைப்படி தேர்தெடுக்கப்பட்ட அரசு அமையுவும், அவ்வரசு ஒரு அரசியல் சட்ட விதிக்குட்பட்டு இயங்கவும், சுதந்திரமான நீதித்துறை அமையவும், இவற்றால் மக்களின் கருத்துரிமை, வழிபாட்டுரிமை, சொத்துரிமை இவை பாதுகாக்கப்படவும் ஒரு அறைகூவலாக ஒரு செயல்திட்ட வரைவு லீ முதலான சீன அறிஞர்களால் வெளியிடப்பட்டது. இதை ஏதோ ஒரு தேசச்துரோகக்குற்றமாக கருதி, லீ இதன் முக்கிய கலகக்காரரகாக அடையாளம் காணப்பட்டு  சிறப்பு புலனாய்வு குழுவால் கைது செய்யப்பட்டார். ரகசியநீதி விசாரணை செய்யபபட்டு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இவ்வாறு போராடி வருவதற்காக இவ்வாண்டின் நோபல் அமைதிப்பரிசு அளிக்கப்பட்டு இருக்கிறது.

நோபல் பரிசு பொதுவாக நான்கு காரணங்களுக்காக அளிக்கப்படுவது; ஒன்று மகத்தான மானுடவியல் பணிக்காக, 1970ல் இந்தியாவில் பசுமைப்புரட்சிக்கு அடிகோலிய நார்மன் போர்லாகுக்கு, 2006ல் வங்கதேசத்தின் முகமது யூனுஸ்; இரண்டாவது யுத்த நிறுத்தம் மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்காக 1978ல் மெனாகெம் பெகென் மற்றும் அன்வர் சதாத் இருவருக்கும் இஸ்ரேல் – எகிப்து அமைதி ஒப்பந்தம் செய்ததற்காக, 1998 – வடக்கு அயர்லாந்தில் அமைதி ஒப்பந்தம் செய்ததற்காக ஜான் ஹ்யூம் மற்றும் டேவிட் ட்ரெம்பிளுக்கு, 1973ல் ஹென்றி கிஸிங்கருக்கும் லீ டாக் தோவுக்கும், பாவம் லீ , முழுப்பெருமையும் கிஸிங்கருக்கே உரித்தானது என தான் விருது வாங்க மறுத்துவிட்டார். மூன்றாவது காரணம் பல காலமாக சாத்வீகமுறையில் பெரும் அரசு அடக்குமுறையை சந்தித்து வரும் காந்தியவாதிகளுக்கு லெக் வலேசா, மண்டேலா, ஆங் சான் ஸ்யூ கி, தலாய் லாமா போன்றோருக்கு. நான்காவது நோபல் கமிட்டி அனுப்ப விரும்பும் அரசியல் சமிக்ஞைகளுக்கு வாகனமாக பயன்படுவோருக்கு; எடுத்துக்காட்டாக, 2002 ஜார்ஜ் புஷ்ஷின் இராக் போர் பயமுறுத்தலை நுட்பமாக நிராகரிக்க அதை பலமாக எதிர்த்து வந்த ஜிம்மி கார்ட்டருக்கு, பின்பு இதே காரணத்தால் இரான் மீது போர் தொடுக்காமலிருக்க முகமது எல் பாரடேயிற்கு. அப்போ போன வருடம் வழங்கப்பட்ட விருதுக்கு என்ன காரணம் என்று தயவு செய்து கேட்டுவிடாதீர்கள். அது வரலாறு பதில் சொல்ல வேண்டிய கேள்வி.

இவ்வருட விருது பெரும்பாலும் மூன்றாவது காரணத்திற்காக என்பதை நோபல் கமிட்டியின் அறிக்கையே தெளிவாக்குகிறது. அறிக்கையின் பாதி சீனா மனித உரிமைகளை பாதுகாப்பதிலும் அரசியல் சுதந்திரங்கள் வழங்குவதிலும் பின்தங்கி இருப்பதை வலுவாக சுட்டிக்காட்டி இருக்கிறது. இதை சீனா தனது உள்நாட்டு அரசியல் நடவடிக்கைகளை விமர்சிப்பதாகவும் மேற்கத்திய பாணி ஜனநாயகத்தை வெளியே இருந்து திணிப்பதாகவும் ஆவேசமாக சாடி வருகிறது. சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அதிகாரத்தை வலுவாகப் பற்றிக்கொள்வதை தனது முதல் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. 1989க்கு பின் கட்சி மேலிடம் ஒரு உச்சகட்ட அச்சநிலையிலேயே இயங்கிவருகிறது. நாமும் ஒரு சோவியத் யூனியன் ஆகிவிடக்கூடாது என்பதே அதன் தாரக மந்திரம். உற்று நோக்கினால், சோவியத் யூனியன் சிதறுண்டதால் அதில் வசித்த மக்களுக்கு கெடுவிளைவு ஒன்றும் ஆகிவிடவில்லை. ரஷ்யா, உக்ரைன், கசக்ஸ்தான் போன்ற நாட்டின் மக்களை வேறு யாரும் புதிதாக அடிமையாக்கி விடவில்லை. அங்கு பொருளாதார வளர்ச்சி மேம்பட்டே இருக்கிறது. ரஷ்யாவின் அணுகுண்டு ஏவுகணைகள் அதன் வசமே இருக்கின்றன. ஆனால் ஆட்சி போய் விடுமோ என்ற தனது பயத்தை  லாவகமாக சீன அரசு தனது மக்களின் மீது கடாசி இருக்கிறது. இதன் கூறுகள் நான்கு வகைப்படும்:

1. ஹான் பெரும்பான்மை ஆதிக்கவியல்: 90% ஹான் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிடியிலேயே பத்திரமாக உள்ளதாக ஒரு தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. சீனாவின் தேசிய சிறுபான்மை இனங்கள் சீன கம்யுனிஸ்ட் கட்சியால் திபெத், வெய்குர், சிங்கியாங் போன்ற வெளிப்பிரேதசங்களில் ஒடுக்கப்பட்டு ஹான் சீனர்கள் அங்கு குடியமர்த்தப்படுகின்றனர். அதனால் அங்கு நடக்கும் மோதல்களில் ஹான்களை காப்பாற்றும் பொறுப்பு கட்சிக்கும் ராணுவத்திற்கும் வந்து சேர்கிறது. சீனாவின் பெரு நகரங்களில் வசிக்கும் சிறுபான்மை குடியிருப்புகளின் நிலையும் இவ்வாறே. சீன ராணுவமும் கட்சியும் இல்லாவிட்டால் நமது கதி என்னாவது என்ற பீதி பாதி, நமது மேலாதிக்கம் தொடரவேண்டும் என்ற நப்பாசை பாதி என 90% பெரும்பான்மை இனத்தவர் நினைக்கும் நிலை ஒரு கூறு.

2. தாழ்வு மனப்பான்மையை தக்கவைத்தல்: மேற்கத்திய நாடுகள், ஜப்பான் இவற்றை ஒப்புநோக்க கடந்த இரு நூற்றாண்டுகளாக நிகழ்ந்த தேசிய அவமானங்கள் மீண்டும் மீண்டும் சீன மக்களின் நினைவில் நிறுத்தப்படுவருகின்றன. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கியும் சீன மக்கள் பெருமைபடத்தக்க விதத்தில் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்தாலும் வரலாற்றுபாடங்கள் அவமானங்களை தொடர்ந்து மக்களின் பிரக்ஞையில் வைத்திருக்க அரசு ஊடங்கங்கள் செயல்படுகின்றன. இதன் உளவியல் என்னவென்றால், கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே குடும்பத்தலைவனாக, வலுவான தந்தையாக எல்லாரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அவமானங்கள் மீண்டும் நிகழும் என்ற மறைமுக அச்சுறுத்தல்தான்.

3. பொருளாதாரப் பின்னடைவு: மிகக்குறைவான காலத்தில், மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்கள் வறுமைப்பிடியில் இருந்து முன்னேறி உள்ள சீனாவில்,  மிக மிக அதிகமான மக்கள் வறுமைப்பிடியில் இருந்து ஓருரிரு அடி அருகிலேயே இன்னும் வாழ்கின்றனர். தனிப்பட்ட முறையில் அடைந்த பொருளாதார வளர்ச்சி எப்போதும் பறிபோகும் நிலையிலேயே உள்ளது. சமூக பாதுகாப்புத்திட்டங்கள், ஊழியர் உரிமைகள் போன்றன அற்ற, நிலைப்பற்ற நிலை அரசு அதிகாரத்தை நம்பி இருக்கப் பழக்கியுள்ளது. ஜனநாயகம், தேர்தல் போன்ற கருத்துகள் இச்சூழலில் தேவையற்ற ஒரு சமச்சீரின்மையாகவே பெரும்பாலானவர்களால் நினைக்க (வைக்கப்)படுகிறது.

4. சீன வல்லரசுக்கனவுகள்: ஒரு சராசரி சீனனின் மனதில் தோன்றும் வல்லரசுக்கனவுகளுக்கு சீனாவின் ராணுவ வலிமையும் பொருளாதார வலிமையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவுக்கு அளித்த கொடையாக கருதப்படுகிறது. மாவோ அடைந்த ராணுவ வெற்றிகள் முதல் இப்போது வரை, சீனாவில் வல்லரசுக்கனவை வழிநடத்த சீன கம்யூனிஸ்ட் கட்சியே நம்பத்தகுந்த வாகனமாக ஒரு பாவனை உருவாக்ககப்பட்டு வருகிறது. இப்பாவனை கலைவது கட்சிக்கு மிக மிக ஆபத்தான விஷயமாகும்.

இரண்டு மற்றும் நான்காம் கூற்றின் எடுத்துக்காட்டாக சமீபத்தில் ஜப்பான் – சீனா இரு நாடுகளும் உரிமை கொண்டாடும் டியவொவு – சென்கோகு தீவில் மீன்பிடி படகுகளை மோதி சாய்த்த ஒரு சீன மீனவர் ஜப்பான் அரசால் கைது செய்யப்பட்டார். அவர் சட்டரீதியாக விசாரிக்கப்படுவார் என ஜப்பான் அறிவித்தது. அவரை உடனடியாக விடுதலை செய்யும் வரை சீனா 95%  சந்தைவசப்படுத்தியுள்ள மின்னணு சாதனங்கள், குறிப்பாக செல்போன், நுணுக்கமான ராணுவ எந்திரங்கள் இவற்றில் பயன்படும் அரிதான கனிமப்பொருட்களை (rare earths)  ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதை சீனா தடை செய்தது. இரண்டே நாட்களில் ஜப்பான் ஜகா வாங்கியது. கைது செய்தது தவறு என்று ஜப்பான் மன்னிப்பு கோரவேண்டும் (?!) என்று சீனா வற்புறுத்தி வருகிறது. இதற்கு ஜப்பான் பணியாததால் ஏற்றுமதி நிறுத்தம் தொடர்கிறது.

இவ்வகையில் கட்சியின் ஏகாதிபத்திய உரிமையைக் கேள்விக்குள்ளாக்கும் வண்ணம் வழங்கப்படுகிற நோபல் அமைதிப்பரிசு, சீன அரசால் புறக்கணிப்புக்கும் கண்டனத்துக்கும் உள்ளாவது இயல்பானதே. சமூகங்கள் சில மாயைகளை முன்னிறுத்தியே ஆக வேண்டும். 1776ல் எல்லா மனிதரும் படைப்பில் சமம் என்று முழங்கியது அமெரிக்க விடுதலைப்பிரகடனம். ஆனால் 1960கள் வரை அது வெறும் மாயையாகவே ஒலித்துக்கொண்டு இருந்தது. கருப்பர்களின் சம குடியுரிமைப் போராட்டம் வெற்றி பெற்றது அம்மாயைக் குறித்துத் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததாலேயே. அதே விதத்தில் சில உண்மைகளும் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். சர்வதேச அரங்கில் தாங்கள் 1.3 பில்லியன் மக்களின் பிரதிநிதிகள் (!) என்று மார்தட்ட எப்போதும் தயங்காத சீன அரசுக்கு, உலகில் 4-இல் ஒரு பங்கு மக்கள் அடிப்படை மனித உரிமையும் தங்கள் பிரதிநிதிகளை தாங்களே தேர்தெடுக்கும் உரிமையும் இல்லாது  வாழும் பிராணிகள் என்ற உண்மை, அடிக்கடி ஒலிக்க வேண்டிய ஒரு எச்சரிக்கை மணி.