மகரந்தம்

அஜாக்கிரதையால் அழிந்த ஹங்கேரிய கிராமங்கள்: விவசாய HUNGARYநாடுகளைத் தடாலடியாக தொழிற்சாலை மைய நாடுகளாக்க முயல்வதில் கம்யூனிசம் ஆகட்டும், முதலியம் இரண்டுமே படு தீவிரமாக இருக்கின்றன. அதே சமயம் – சாதாரண மக்களை, குறிப்பாக விவசாயிகள், வனவாசிகளை வெறும் குப்பை என்று எண்ணிப் புறம்தள்ளுவதில் இரண்டு கருத்தியல்களும் ஒன்றுதான். கிழக்கைரோப்பில் பரவிய ஸ்டாலினிய மார்க்சியம் அங்கிருந்து ஒழிந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆயின. ஆனால் இன்னமும் அங்குள்ள மக்கள் ஸ்டாலினிய ஆட்சியில் நடந்த ‘தொழில்’ மயமாதலின் பயங்கர விளைவுகளால் பெருந்துன்பங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலினியம் ஒழிந்தபின் அடுத்து வந்த முதலியத்தாலும் சூழல் நாசமாவது ஒன்றும் குறையக் காணோம்.  ஹங்கேரியில் இப்படி ஒரு அலுமினியம் தொழிற்சாலையின் கழிவுக் குட்டை உடைந்து எத்தனை கிராமங்கள் அழிந்திருக்கின்றன என்று பார்க்க இந்தச் செய்தியைப் படியுங்கள். மேலும் பல நகரங்களின் குடிநீர் அளிப்பும் இதனால் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

http://www.spiegel.de/international/europe/0,1518,721563,00.html

ஓராயிரம் குரல்களிலே உன் குரலை நானறிவேன்: மூன்று வருடங்களுக்கு முன் வெளிவந்த ‘The Lives of others’ என்ற திரைப்படத்தை உங்களுக்கு நினைவிருக்கலாம். கிழக்கு ஜெர்மனியில் அரசாங்கத்தால் பொதுமக்கள் வேவு பார்க்கப்பட்டதை whisperஅடிப்படையாகக் கொண்ட திரைப்படம் அது. சர்வாதிகரத்தின் வீழ்ச்சி இப்படிப்பட்ட அந்தரங்க ஊடுருவல்களை நிறுத்தி விட்டாலும், உலகெங்கிலும் அரசாங்கங்கள் பொதுமக்களை ஓரளவுக்கு வேவு பார்த்தபடியேதான் இருக்கின்றன. மேற்கில் ஓரளவு தனிமனித சுதந்திரம் குறித்த பிரக்ஞை இருக்கிறதென்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக அரசு மக்களை எந்தச் சட்டத்துக்கும் கட்டுப்படாமல் தன்போக்கில் வேவு பார்க்கத் துவங்கி விடும் என்று தெரிகிறது. புதுப்புது தொழில்நுட்பங்கள் இதற்கெல்லாம் மேன்மேலும் சாதகமாகி வேவு பார்ப்பதை எளிதாக்கி வருகின்றன. இதோ ஒரு ஒலிப்பதிவு செய்யும் கருவி, ஒரு பெரும் மைதானத்தின் கூட்டத்தில் குறிப்பிட்ட சிலரின் பேச்சுக்களை மட்டும் பதிவு செய்யக் கூடிய திறனுள்ளது உருவாகி இருக்கிறது.

http://www.wired.com/gadgetlab/2010/10/super-microphone-picks-out-single-voice-in-a-crowded-stadium/

பிரக்ஞைப் பிரபஞ்சம்: சுய பிரக்ஞை என்பது மனிதர்கள் சிம்பன்ஸி போன்ற ‘உயர்’ பேரின குரங்குகளுக்கு மட்டுமே flach-tim-monkey-faceஉரியதல்ல என்கிறார்கள் சில அறிவியலாளர்கள். ஒரு விலங்குக்கு சுயபிரக்ஞை இருக்கிறதா என்று கண்டுபிடிக்கச் செய்யப்படும் பரிசோதனை அதன் சருமத்தில் ஒரு இடத்தில்
வண்ணமடித்து அதன் முன் கண்ணாடியை வைப்பது. அந்த விலங்கு கண்ணாடியை பார்த்து தன் சருமத்தில் அந்த குறிப்பிட்ட வண்ணமடித்த பகுதியைத் தொட்டால் அதற்கு சுயபிரக்ஞை உண்டாம். Gallup சோதனை என சொல்லப்படும் இந்த தேர்வில் இரண்டு வயது மனிதக் குழந்தை, மேலும் நம் சக பரிணாம பங்காளி உறவுகளான சிம்பன்ஸீ, ஓராங்குட்டான் எல்லாம் பாஸாகியிருக்கிறார்கள். இப்போது இந்த குடும்பத்தில் ரீஸஸ் குரங்கும் சேரும் போல தோன்றுகிறது. முழு விவரணத்தையும் இங்கே படியுங்கள்:
http://www.the-scientist.com/news/display/57730/

சீன பிரம்மாண்டத்தின் பின்னே அற்பச் சுரண்டல் : சீனாவின் பிரம்மாண்டமான உற்பத்தி அமைப்பு எத்தனையோ அற்பங்களைக் கொண்டது. எந்தப் பிரும்மாண்டத் தொழில் அமைப்பும் இப்படித்தான் இருக்கும். இதனால்தான் காந்தி, ஷூமாக்கர் போன்ற சில சிந்தனையாளர்கள் சிறு தொழில்களை, அல்லது உள்ளூர் உற்பத்திகளை மையமாகக் கொண்ட நாகரீகமே உயர்ந்தது என்றார்கள். அது காலத்தின் ஓட்டத்தில் இன்றைய சமூகங்களின் அகோரப் பசி கொண்ட வளர்ச்சிக்கு, பெரும் மக்கள் தொகை வளர்ச்சிக்குப் பொருந்தாது என்பது தெளிவு. சிறு ஜனத்தொகை, சிறு உற்பத்தி, உள்ளூரில் மையம் கொண்ட பொருளாதாரம், சூழலில் இணைந்த, அதை நாசம் செய்யாத வாழ்முறை ஆகியன இந்த அடங்கி வாழும் அறத்தின் வழிமுறைகள். அடங்கி வாழ்தல் தவறு என்று நவீனத்துவத்தின் இரு பெரும் கருத்தியல்களும் உலகை ஒரு புறம் அபார வேகத்தில் செல்ல ஊக்குவித்தபடி, இன்னொரு புறம் சூழலை அசுர வேகத்தில் அழித்தும் வருகின்றன. காலம் நின்று கொல்லும் என்று விட வேண்டியதுதான் போலிருக்கிறது. இங்கு சீனாவின் பிரம்மாண்டத்தில் மறைந்திருக்கும் இன்னொரு அற்பச் சுரண்டல் பற்றிய தகவல். இது யூரோப்பியரும் சீனரும் ஒத்துழைத்துச் சூழலை நாசம் செய்யும் அற்பத்தனம் பற்றியது.

http://politiken.dk/newsinenglish/ECE1065634/denmark-allows-chinese-co2-scam

மாறுதல் – ஒரு புதிய முயற்சி :
வறுமை, வியாதிகள், கல்லாமை என்று உலகைப் பீடிக்கும் பெரும் அவதிகள் பலவும் உண்டு. அவற்றில் பலவும் எளிய உத்திகள், பொறி எந்திரங்கள், நமக்கு கிட்டும் வளங்கள் ஆகியனவற்றினாலேயே முற்றிலும் ஒழிக்கப்படக் கூடியவை அல்லது பேரளவில் தணிக்கப்படக் கூடியவை. பல நேரம் மனித உடல் ஓரளவு தேறி வர வாய்ப்பு கிட்டினால் நோயெதிர்ப்பு சக்தியை, அறியாமை ஒழிப்பை எல்லாம் தானே சாதிக்கக் கூடிய வலுவைப் பெற்று விடும். இப்படி சிறு மாறுதல்களால் உலகை மாற்றி விட முடியும் என்று நம்பி ஆக்கபூர்வமாகச் செயல்படுவோர்க்கு அந்தந்த நாடுகளின் அரசுகளோ, சமூகங்களோ ஆதரவு கொடுத்தால் உலகில் பல நாடுகள் சமூகங்கள் மேலெழும். ஆனால் அந்த நாடுகள் கீழ்நிலையில் இருக்க ஒரு காரணமே அந்த அரசுகளோ, சமூகங்களோ பல நேரம் இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு ஆதரவு காட்டாததாலோ அல்லது அவற்றைப் பொதுப் பயன்பாட்டுக்கு வர விடாமல் அடிப்பதாலோ. சமீபத்தில் உலகளவில் பன்னாட்டு உதவிகளை வழிநடத்தும் அமைப்புகள் வெறுமே பண உதவியை விநியோகிக்காமல் இப்படிப்பட்ட முயற்சிகளை இனம் கண்டு அவற்றுக்கு நிதி உதவி அளிக்க முயல்கின்றன. இலக்கைக் குறிவைத்த உதவி என்று இவற்றை நாம் காணலாம். இப்படி சமீபத்தில் கவனிப்பைப் பெற்ற 12 உத்திகள், முயற்சிகள் பற்றிய விவரணை இங்கே.
http://www.huffingtonpost.com/2010/09/26/tech-awards-2010_n_738486.html#s143448