குணங்குடியார் பாடற்கோவை

பள்ளிப்படிப்பு எமக்கு மூன்று பாடசாலைகளில். உள்ளூரில் ஆரம்பப்பள்ளி, ஊருக்கு மேற்கே ஒன்றரை மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி, ஊருக்குக்கிழக்கே ஒன்றரை மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி. மூன்றுமே அரசுப்பள்ளிகள், தாய்மொழி வழி. பள்ளி முடிந்து வந்தால் சாப்பிட்டுவிட்டு, வீட்டுப்பாடம் எழுத்து. பிறகு விளையாட்டு என்னும் பெயரில் உச்சுதல், கவிட்டாம் கம்பு, பேப்பந்து, குச்சுப்பிள்ளை அடி, மரக்குரங்கு, கள்ளன் – போலீஸ் இன்னபிற. எனக்கு விளையாட்டுகளில் எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை, காரணம் என்னைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். எனவே நாயும் – புலியும், தாயம், குலாம் களி எனப்படும் சீட்டுக்களி ஆட்டம் நடக்கும் இடங்களில் நான் இருப்பேன். பெரும்பாலும் ஆரம்பப்பள்ளி படிப்புரை, அம்மன் கோயில் திண்ணை, சாஸ்தா கோயில் திண்ணைகள்.

அன்று ட்யூஷன் எனப்படும் நர்சரி வகுப்பில் தொடங்கும் உபகல்வி நிறுவனங்கள் செயலில் இல்லை. எப்போதுமே நான் ட்யூஷன் வகுப்புகளுக்குப் போனதில்லை. அதுபோல என் பிள்ளைகளையும் அனுப்பியதில்லை. விளையாட்டு என்பது சீட்டுக்களி என்றாயிற்று. ஆரம்பத்தில் வெளிவிளிம்பில் இருந்து வேடிக்கை பார்ப்பேன். துருப்புகளின் மிச்சம் எண்ணிக்கை, குலாம் இறங்கியாச்சா, ஆசு நிற்கிறதா, ஜெயிப்பதற்கான புள்ளிகள் என்ன பாக்கி என சில்லறை ஆலோசனை வழங்கும் விதத்தில் தொழில்நுட்பம் திகைந்தது. விளையாடுபவர் ஒன்றுக்கோ, வெற்றிலை துப்பவோ எழுந்து போனால் அவர் கையை வாங்கி ஆடுவது, கை குறைந்தால் அதில் உட்காருவது, சாப்பிட்டுவிட்டு வரும் வரை ஆடுவது எனக் கையேர் பிடிப்பேன்.

சீட்டுக்களியின் என் குருக்கள்மார் என்னைவிட ஐம்பது வயது மூத்தவர்கள்.அவரவர் தகுதியில் ஒரு மாநில முதலமைச்சராய் இருக்கும் திறமை கொண்டவர்கள். ஆனால் பஞ்சமா பாதகர் அல்ல. அதில் ஒருவர் ஊரின் அத்தனை பிள்ளைகளும் ‘பாட்டா’ என அழைக்கும் நேசர். இன்னொருவர் பெரியார் கூட்டங்களுக்கு கருஞ்சட்டைப் போட்டுப்போகும் சைவ வேளாளர். மூன்றாமர் சித்தர் பாடல்களில் காலூன்றியவர். வாற்றுச் சாராயம், கஞ்சா, அபின், சந்தைவிளைக் கள்ளு பாவிப்பவர். மூவருமே எனக்குப் பெரியப்பா முறை என்றாலும் சீட்டு விளையாட்டில் முறை எல்லாம் பார்ப்பதில்லை.

திராவிட இயக்கம் தீவிர கதியில் இயங்கிய காலம், 1960கள். எல்லோரும் நாத்திகம் பேசும்போது ஒற்றைத் தனியாளாய் எதிர் நின்று வாதாடுபவர் இருளப்பப் பிள்ளை பெரியப்பா. சிலசமயம் திருவனந்தபுரம் வாசம். எனவே, ‘கேரளாக் கொம்பையா’ எனப்பட்டப்பெயரும் உண்டு. வெற்றிலை – பாக்கு – புகையிலைப் பழக்கமும், பீடிப்புகையும் உண்டு. அவர்தான் சித்தர் பாதை பயின்றவர்.

சீட்டுக்களி இல்லாதபோது, ஆள் சேராதபோது உற்சாகமான மனநிலையில், அவர் தொண்டை திறந்து கம்பீரமாகப் பாடுவது மஸ்தான் சாகிபு பாடல்கள். பதின்மூன்று, பதினான்கு வயதில் கேட்டுக்கேட்டு எனக்கு மனப்பாடமான சில பாடல்கள் உண்டு.

’மீசையுள் ளாண்பிள்ளைச் சிங்கங்கள் என்கூட
வெளியினில் வாருங்கள் காணும்
நாசி நிரம்பவும் மயிர்தான் இரண்டுகால்
நடுவிலும் ஒருகூடை மயிர்தான்
ரோசங் கெடுவார்கள் என்கடை மயிர்தான் – குணங்
குடிகொண்டாலும் என்னுயிர்க் குயிர்தான்’

என்று பெருங்குரல் எடுத்து, நெஞ்சு நிமிர்த்திப் பாடுவார்.

பல்லாண்டுகள் சென்றபின்பு, பம்பாய் தமிழ்ச்சங்க நூலகத்தில், சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழக வெளியீடாக, குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களை வாசிக்க நேர்ந்தபோதுதான் அடானா ராகத்தில் அமைந்தது அந்தக் கீர்த்தனை என நான் அறிந்து கொண்டேன்.

இன்னொரு கீர்த்தனை ஆகிரி ராகத்தில் அமைந்தது. கேரளாக் கொம்பையா பெரியப்பா இரங்கிப்பாடுவது.

’ஏதேது செய்திடுமோ பாவி விதி ஏதேது செய்திடுமோ
ஏதேது செய்து எனை மோசஞ் செய்யுமோ
மாதவஞ் செய்து மனுவாகச் செய்யுமோ (ஏதேது)
சற்று நல்லறிவற்று மாடாகச் செய்யுமோ
சாகாவரம் பெற்று காடேகச் செய்யுமோ
கற்றறி மூடர்கட் கீடாகச் செய்யுமோ
கற்பின் குணங்குடி வீடாகச் செய்யுமோ (ஏதேது)

துண்டுதுண்டாகச் சில சரணங்கள் நினைவில் நிற்பவை:

’செத்த பிணத்தோடு சேர்ந்திடச் செய்யுமோ
சித்தர் கணத்தோடு சார்ந்திடச் செய்யுமோ
……….
தேவடியாள் வீட்டு நாயாகச் செய்யுமோ
தேவடியாளும் என் தாயாகச் செய்யுமோ’ (ஏதேது)

நான் திகைத்து நின்ற இடம் இறுதி வரிகள்.

sufi

ஆனால் அன்று வாங்கக் கிடைக்கவில்லை மஸ்தான் சாகிபு பாடல்கள். ஒருமுறை சிவகங்கை அன்னம் பதிப்பகத்து மீரா அண்ணனிடம் சொன்னேன். பிறிதொரு முறை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தினசரிக்காக, அவர்களது துணையாசிரியருடன், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மு.மு.இஸ்மாயில் அவர்களை பம்பாய் சஹ்யாத்ரி விருந்தினர் மாளிகையில் நேர்காணச் சென்றபோதும் அதுபற்றிக் குறிப்பிட்டேன்.

ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டை ஒட்டி, சிவகங்கை அகரம் வெளியீடாக, 1980-ஆம் ஆண்டு ’குணங்குடியார் பாடற்கோவை’ வெளியானது. டெமி அளவில் 250 பக்கங்கள், அன்றைய விலை ரூ.25.00. அப்போது வாங்கிய பிரதி இப்போதும் என்கைவசம் உண்டு.

இந்தப் பதிப்பின் சிறப்பு பதிப்பும், குறிப்பும் பேராசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான். பிழைகள் மலிந்த முந்தைய பதிப்புகளை விட மேலானது. இந்தப் பதிப்புக்கு அப்துல் ரகுமான் எழுதிய 20 பக்க, ‘குணங்குடியார் பாடல்கள் – ஓர் அறிமுகம்’ எனும் கட்டுரை மிகச் சிறப்பானது. ஆய்வுத்தளத்தில் அமைந்தது. குணங்குடியாரை அறிந்து கொள்ள உதவுவது.

அப்துல் ரகுமான், மீரா ஆகியோருக்கு நன்றி சொல்லி குணங்குடியார் பற்றிய தகவல்களைக் கீழ்வருமாறு எடுத்தாள்கிறேன்.

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு வடமேற்கில் பத்துக்கல் தொலைவில் அமைந்தது குணங்குடி. நயினார் முகம்மது எனும் தந்தைக்கும், பாத்திமா எனும் தாய்க்கும் 1792-ஆம் ஆண்டில் பிறந்தார். குணங்குடி மஸ்தான் சாகிபு எனப் பிற்காலத்தில் அழைக்கப்பட்டவரின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிர். ’தந்தை வழி தமிழ்ப்புலமையும் தாய்வழி குரிசில் நபி (ஸல்) அவர்களின் குடிவழிப் பெருமையும் குலதனமாகக் கொண்டவர் குணங்குடியார்’ என்கிறார் அப்துல் ரகுமான். அவர் ஒரு இஸ்லாமிய சூஃபி ஞானி. தமிழ்ச்சித்தர். அவரது பாடல்களில் அரபுச் சொற்கள், உருதுச் சொற்கள், பாரசீகச் சொற்கள், தத்துவச் சொற்கள் செறிந்திருந்தன.

குணங்குடியார், அவருக்கென்றே வளர்ந்த தாய்மாமன் மகளை மணம் செய்ய மறுத்துப் போனார். அப்துல் ரகுமான் ’அமுதத்துக்கு ஆசை கொண்ட மனம் அற்ப மதுவை அருவருத்தது’ என்கிறார்.

தனது 17-ஆவது வயதில் ஞானபூமியான கீழக்கரையில், தைக்கா சாகிபு என்றழைக்கப்பட்ட சய்கப்துல் காதிர் லெப்பை ஆலிம் என்னும் ஞானியிடம் மாணாக்கராக இருந்து 1813-இல் முற்றும் துறந்தவராகிறார்.

திரிசிரபுரம் மெளலவி ஷாம் சாகிபிடம் தீட்சை. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலையில் 40 நாட்கள் யோக சிஷ்டை. அறந்தாங்கி அருகே கலகம் எனும் ஊரில் மோதம், தொண்டியில் தாய்மாமன் அடங்கிய வாழைத்தோப்பில் 4 மாதம் நிஷ்டை. சதுரகிரி, புறாமலை, நாகமலை, ஆனைமலை, நதிக்கரைகள் எனத் தவம். உணவு, சருகு, கிழங்கு, காய், கனி. குப்பை மேடுகளில் குடியிருப்பு. பித்த நடையும் அற்புத சித்துகளும்.

பாரசீக மொழியில் மஸ்த் எனும் சொல்லுக்கு போதை, வெறி எனும் பொருள். மக்கள் அவரை மஸ்தான் என்றழைத்தனர். ஏழு ஆண்டுகள் வடநாடு பயணம் செய்து ஞானோபதேசம் செய்திருக்கிறார். சென்னை திரும்பியவருக்கு ராயபுரத்தில் பாவா லெப்பை ‘தைக்கா’ (ஆஸ்ரமம்) அமைத்துக் கொடுத்திருக்கிறார். ஒன்றர ஆண்டுகள் அங்கே அவர் யோக நிட்டை புரிந்திருக்கிறார்கள்.

1258705229qzqko5சின்னாட்கள் வெளிப்பட்டும் சின்னாட்கள் மறைந்து அடங்கி யோகம் புரிந்தும் வாழ்ந்தபோது நச்சரவங்கள் தீங்கு செய்யாமல் திருந்தன. அவர் சீடர்களாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் இருந்தனர். மஸ்தானிடம் தீட்சை பெற்றவர்களில் ஒருவர் ஆற்காடு நவாப் என்றும் ‘அட்டமா சித்து வல்ல குணங்குடியார் புரிந்த ஒன்பதாவது சித்து இது’ என்றும் கூறுகிறார் அப்துல் ரகுமான். மேலும் அவர் கூறுவது “தாம் சார்ந்திருந்த ‘காதிரிய்யா’ நெறி மரபுப்படி, அந்நெறித்தலைவர், அவருடைய ஞானகுரு முகியித்தீன் ஆண்டவர் பேரில் ‘பாத்திஹா’ (நேர்ச்சைப் படையல்) செய்து வந்தார்.”

பன்னிரண்டு ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்த குணங்குடியாரை, இஸ்லாமியர் ஆரிபுபில்லா (இறை ஞானி), ஒலியுல்லா (இறையன்பர்) எனவும், இந்துக்கள் ‘சுவாமி’ என்றும் அழைத்திருக்கிறார்கள்.

1838-ஆம் ஆண்டு தனது 47-வது வயதில் பரிபூரணம் பெற்றவரை தங்கிய இடத்திலேயே நல்லடக்கம் (தறுகா) செய்திருக்கிறார்கள். தொண்டியைச் சேர்ந்தவர் என்பதால் மக்கள் அவரைத் தொண்டியார் என்று அழைத்தத்தால் அவர் வாழ்ந்த இடம் தொண்டியார் பேட்டை – தொண்டையார் பேட்டை ஆயிற்று என்பர்.

பேராசிரியர் அப்துல் ரகுமான் மேலும் தரும் குறிப்புகள் சுவாரசியமானவை. சுஃப் எனும் அரபுச்சொல்லுக்கு கம்பளி என்று பொருள், சூஃபித் துறவிகள் முரட்டுக் கம்பளி ஆடைகள் அணிந்தனர் என்கிறார். சித்தர் மரபு, இறைவனை வாலை, மனோன்மணி என்றனர். சூஃபிகள் இறைவனை நாயகியாகப் பாவித்தனர்.

‘சமய மெல்லாம் சக்தியுண்டு சிவமும் உண்டு
சண்டாளர் பிரித்தல்லோ தள்ளினார்கள்’

என்ற கைலாயக் கம்பளிச்சட்டை முனிவர் பாடலை மேற்கோள் காட்டும் அப்துல் ரகுமான் சிவம் – சக்தி எனும் (Matter – Energy) சொற்களை புராணச் சொற்களாக அன்றி யோக பரிபாஷைச் சொற்களாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்,

குணங்குடியார் பயன்படுத்தும் துவள மணிமார்பன், அளகேசன், காலன், சனீஸ்வரன், இந்திரன் சொற்களையும் அவ்விதமே புரிந்து கொள்ள வேண்டும்.

‘மேலூரு வீதியில் வையாளி போட்டங்கு
விளையாட அருள் புரியவும்’

என குணங்குடியார் பாடிய மேலூர் மதுரைக்கு அருகிலிருக்கும் மேலும் எனப்புரிந்து கொள்வது அபத்தமானது என்கிறார் அப்துல் ரகுமான்.

பல் மதத்தவரும் குணங்குடியார் மீது பக்தி கொண்டு ஒழுகி இருக்கிறார்கள். சித்தர் மரபின் சூஃபி ஞானியான மஸ்தான் சாகிபுவை, மகாவித்வான் திருத்தணிகை சரவணவப் பெருமாள் ஐயர் பாடிய நான்மணி மாலையில்,

‘குருவாய் அடுத்தோர்க்கு அருள் சுரக்கும்
கோதில் குணஞ்சேர் குணங்குடியா’

என்கிறார்.

வேங்கடராயப் பிள்ளைக் கவிராயர் பாடிய அறுசீர்க்கழிநெடியடி ஆசிரிய விருத்தத் தோத்திரப்பா –

‘சொந்த மிலையோ பன்னாளும்
தொழுத திலையோ அடிமையெனும்
பந்த மிலையோ பிள்ளைகளைப்
படைத்த திலையோ வருந்துமவர்
சிந்தை யறியும் செயலிலையோ’

என இரங்குகிறார்.

குணங்குடியாரின் ‘முகியித்தீன் சதகம்’, ‘அகத்தீசன் சதகம்’, ‘பராபரக் கண்ணி’, ‘எக்காலக் கண்ணி’, ‘மனோன்மணிக் கண்ணி’ பிற கீர்த்தனைகள் யாவும் புகழ் பெற்றவை.

முகியித்தீன் சதகத்தில்,

‘நீக்கமற எங்கெங்கும் நின்றுநிறை கின்றபொருள்
நேரில் என் முன்னிற்கவே
……
போக்குவரவு அற்ற பரிபூரண ஆனந்தமெப்
போதும் என் முன்னிற்கவே’

என்று இரங்குகிற குணங்குடியார், அகத்தீசன் சதகத்தில்,

‘கொள்ளிவைத்து உடலைக் கொளுத்துமுன் முச்சுடர்க்
கொள்ளிவைத் தருள் புரியவும்’

என்று வேண்டுகிறார். முச்சுடர்க் கொள்ளி என்பது யோகக்கனல். இந்த ‘அகத்தீசன் சதகத்தில்’ இருந்து துண்டு துண்டாகச் சில பாடல் வரிகளை உங்கள் கவிதை, தத்துவ அனுபவத்துக்காக கீழே எடுத்தாள்கிறேன்.

1.
கஞ்சாவின் வர்க்கமும் கஞ்சினி மயக்கமும்
கருதாதும் அருள் புரியவும்
கைச்சரசம் எல்லாம் கசந்த ரசம் ஆகவும்
கைச்சரசம் அருள் புரியவும்
நஞ்சான மூவாசை நஞ்சாகவும் தேகம்
நையாது அருள் புரியவும்
(கஞ்சினி – வேசி)

2.
ஆசைப் பெருங் கங்கை நீந்தி அக்கரை காணும்
அக்கரைக் கருள் புரியவும்.

3.
காற்றைப் பிடிக்கவும் கரகத் தடைக்கவும்
கட்டிவைத் தருள் புரியவும்
கரகந்தனைக் காற்று உருத்தி உடையாமலுங்
காப்பாற்றி அருள் புரியவும்
(கரகம் – மட்குடம்)

’றகுமான் கண்ணியில்’ சிலவரிகள்:

1.
வேட்டை பெரிதென்றே வெறிநாயைக் கைப்பிடித்துக்
காட்டிற் புகலாமோ கண்ணே றகுமானே!

2.
பீற்றல் துருத்திதனைப் பீக்குழியைச் சாக்கடையைக்
காத்தேன் வளர்த்தேன் என்கண்ணே றகுமானே!

‘கண்மணி மாலைக்கண்ணி’யில் சில வரிகள்:

1.
ஏட்டில் எழுதவொண்ணா இறையேயுள் தன்வடிவைக்
காட்டிக் கொடுத்தருள்வாய் கண்ணே பராபரமே

2.
நிற்கும் பொழுது ஆடை நெகிழ்ந்தால் உபசாரம்
கைக்கும் சொல்வதுண்டோ கண்ணே பராபரமே

இறைவனை நாயகி பாவத்தில் மனோன்மணியாகக் குணங்குடியார் பாடுவது அற்புதமான கற்பனை வளமும் கவிதை நயமும் தத்துவச் செறிவும் கொண்டது.

1.
மெய்தழுவவும் இருவர் மெய்யோடு மெய்நெருங்கக்
கைதழுவவும் கனவு கண்டேன் மனோன்மனியே

2.
கூந்தல் இலங்கக் குரும்பைத் தனம் குலுங்க
நேர்ந்து நடம் புரிந்து நிற்பாய் மனோன்மணியே

3.
துவளும் துடியிடையும் தோகை மயில் நடையும்
பவள இதழும் என்று பார்ப்பேன் மனோன்மணியே

4.
கூந்தலுக்கு நெய் தோய்த்துக் குளிர் மஞ்சள் நீராட்டி
வார்த்து சிங்காரித்து வைப்பேன் மனோன்மணியே

5.
என்னை விட்டால் மாப்பிள்ளைமார் எத்தனையோ உந்தனுக்கே
உன்னை விட்டால் பெண்ணெனக்கு உண்டோ மனோன்மணியே!

இலக்கணத்துக்காகவும் ஓசை நயத்துக்காகவும் சேர்த்து சேர்த்து எழுதி வைத்திருப்பதை வாசக அனுபவம் புரிதல் கருதிக் கூடுமானவரைப் பதம் பிரித்துத் தருகிறேன். வாசிப்புப் பயிற்சி உடையவர்களுக்கு தளை, ஓசை தட்டும். அவர்கள் எமைப் பொறுப்பாராக.

ஆரம்பத்தில் சொன்ன, ‘கண்டனம்’ எனும் கீர்த்தனை, அடாணா ராகத்தில்,

‘மீசையுள் ளாண்பிள்ளைச் சிங்கங்கள் என்கூட
வெளியினில் வாருங்கள் காணும்’

எனும் பல்லவி,

‘நாசி நிரம்பவும் மயிர்தான் இரண்டுகால்
நடுவிலும் ஒரு கூடை மயிர்தான்’

எனும் அனுபல்லவியைத் தொடர்ந்து, சரணங்கள் சில:

என்னை
1.
அடித்தாலும் எலும்பெல்லாம் ஒடித்தாலும் அவர்க் கஞ்சேன்
அடித்தால் அடித்துக்கொண்டு போகட்டும் – அந்தக்
கெடுவார்கள் என்கடை மயிர்தான் – குணங்
குடி கொண்டாலும் என்னுயிர்க் குயிர்தான்.

2.
நெடுமரம் போலோங்கி வளர்ந்ததும் அறிவற்றவர்
நெருப்புண்ணப் போனாலும் போகட்டும் – அவர்
இருகுட்டிச் சுவரைப் போல் இருந்தென்ன இறந்தென்ன
எப்படிப் போனாலும் போகட்டும்

3.
கடிநாய்க் குட்டிகளான படுசுட்டிகள் மாயைக்
கதவிடுக்கினில் பட்டே சாகட்டும் – புலிக்
கடுவாய்க்கும் கொடிதான படுபோக்கிரிகள் சும்மா
கடுநரகில் விழுந்தே வேகட்டும்.

உண்மையில், நான் செவிமடுத்த பாங்கில், மேற்கண்ட பாங்கில், மேற்கண்ட பாடல் வரிகளைப் பாடிக்காட்ட எனக்கு ஆசை, எனக்குப் பாடத் தெரியாவிட்டாலும் கூட. பாடல்களை வாசிக்கும் பாணியொன்றிருந்தது முன்பு நம்மிடம். சிவன்கோயில் ஓதுவார்களின் தேவாரப் பாணி போல, பெருமாள் கோயில் பட்டாச்சாரியார்கள் பாடும் பாணி போல, வித்வான் ல.சண்முகசுந்தரம் கம்பன் பாடல்களைச் சொல்லும் ரசிகமணி பாணி போல, எல்லாம் இன்று மண்ணாகிப் போய்க்கொண்டிருக்கிறது. கவிதையை, பாடலை நாம் உரைநடை போல் வாசிக்கிறோம். ஐஸ்க்ரீமைக் கையால் பிசைந்து தின்பதைப் போல. சமகால வாசகர், தமிழ்ச் செய்யுளை, பாடலை, கவிதையை வாசிக்கும் முறைமையைக் கண்டடைய முயல்வது மொழியின் சிறப்பை, செழிப்பை மேலும் உணர அனுபவிக்க உதவும்.

குணங்குடியார் பாடற்கோவை வாசிக்கப் புகுமுன் அப்துல் ரகுமானின் அறிமுகக்கட்டுரையை வாசித்துவிடுவது அவசியம். ஏனெனில் இது கவிதை நூலல்ல. குணங்குடியாரின் ஞானத்தை, நெறியைப் பேசுவது.

கடைசியாக, குணங்குடியார் சொற்களில் நான் சொல்ல விழைவது:

‘போவோம் குணங்குடிக்கு எல்லோரும் – புறப்படுங்கள்
போவோம் குணங்குடிக்கு எல்லோரும்’.