காமப் புகை நடுவே…

பழைய ஏற்பாடு
காற்றும் ஒளியும்
ஆகாய வெளியும்
ஆச்சர்யமானவை.
காதல் வேகம்
மரணத்தின் குழந்தை.
மனித குலம்
தீர்ந்து போய்விடுமோ
என்ற பயமே – தீராத
காமமாய்ப் பரிணமிக்கும்
-o00o-girl
பெண்
வளைந்த திரி சுடர் புருவம்
சிவந்த விரி சோழியுள்
விளைந்த நல் கரு முத்து விழி
கரையாத அமுதக் கன்னம்
ஆணுக்கு இதில் ஒன்றே ஒன்று போதும்.
இயற்கையின் நம்பிக்கை இன்மையால்
இன்ன பிற பலப் பல.
குரங்கு கைப் பூமாலை.
-o00o-
புணர்ச்சி
தீ தழுவிய
காகிதம்
கட்டிப் புரளும்.
காமப் புகை நடுவே
கரிக் கரு.

girl2

மோட்சம் (அ) தப்பித்தல்
காம நதியின்
கரையில் அமர்ந்து
காலையும் கையையும்
அளைந்தது போக – இப்போ
முழுவதும் அதிலேயே
மூழ்கி ஆயிற்று.
கவலையை மறக்க
காமத்தை மறக்க
கடவுள் இன்மையை சரி செய்ய.
போதையில்
புதைந்துள்ள ரகஸ்யங்கள்
வெளி வரலாம்.
ஈரலும் இருதயமும்
என்னவாகுமோ – எனவே
காமம் பாதுகாப்பானது.
மரண ஜ்வாலைக்கு
ஆஹுதியாய்
மீண்டும் மீண்டும்.
தளர்ச்சி, பறக்கும் உடல்.
உடல் உயிருக்கு விடும் சவால்.
வலியை விவரிக்க முடியாது.
சுகமும் அப்படியே.
வாசனையை வரைய முடியாதது போல.
உருகி உருகி
செயல் ஒரு சடங்காகி
வெறியில் காமம் குளிர்ந்து போய்
வெறும் வெறி மட்டும்தான் மிச்சம்.
கோடி கோடியாய் உயிர்களை
உதிக்க வைத்த இந்த மகாநதியின்
வீச்சையும் பரப்பையும்
வெற்றி கொள்ள விரையும் வெறி.
கரையோர சாக்கடைகளில்
கோவில் மணி ஒலிக்கும்.
அபிமானக் கொடி பறக்கும்.
மரணத்தை முயங்க
மனம் பதைத்து சுருங்க
தளர்ந்த கண்ணும்
அலட்சியத்தால் கோணிய உதடுகளும்
உந்நதம் பற்றிப் பேசும்
பொய் நாக்குகளை மறுதலித்த
உடலேயான உள்ளமும்
புழுவைக் கதிரவனாக்கி
அண்ட வெளியை
கமண்டலத்தில் அடைத்து
இந்திரியமாய்த் தெறிக்க
வைக்கும் நீச்சலும்…
இந்த
முடிவற்ற செயலின்
ஊடே
மூச்சுக் காட்டும்
மோட்சம்.