காமன்வெல்த்: கோலாகலமாய் முடிவுறும் குழப்பம்

காமன்வெல்த் போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு மாதம் இருக்கும். நான் இருக்கும் முனிர்காவில் இருந்து குதுப் மினார் மெட்ரோ ஸ்டேஷன் செல்ல இரண்டு வாரங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் ‘அதிவேக’ ப்ளூ லைன் என்று அழைக்கப்படும் தனியார் பேருந்தில் அதிர்ஷ்டவசமாக கிடைத்த சீட்டில் அமர்ந்திருந்தேன். அநியாயமான கூட்டம். நெரிசலை சமாளித்து முன்னேறி என் இருக்கைக்கு அருகில் வந்து நின்ற ஒரு வயதான பெண்மணியைப் பார்த்ததும் அவரை அமரச்சொல்லி நான் நின்றுகொண்டேன். நன்கு படித்த நல்ல உத்தியோகத்தில் இருக்கும் பெண் அவர் என்று பார்த்தாலே தெரிந்தது. நன்றி கூறும் விதமாக ஆரம்பித்த அவர் பேச்சு, தினம் ஊர்ந்தபடி செல்லும் போக்குவரத்தில் வந்து நின்றபோது இயல்பாக காமன்வெல்த்துக்கு தாவியது. இங்கு என்ன கட்டமைப்பு வளர்ச்சி அடைந்துவிட்டது என்று இந்த போட்டிகள் தொடங்க நம் அரசு தயாராகி வருகிறது என்ற என் கேள்விக்கு அந்த அம்மாவிடம் இருந்து கடும் கோபம் கிளம்பியது. “இது இந்தியாவின் கௌரவத்தின் அடையாளம்; இதில் குறை காண என்ன இருக்கிறது?” என்று சீறினார் என்னிடம். இப்போது போல் ‘அடக்கி வாசிக்காமல்’ கல்மாடி மற்றும் காமன்வெல்த் குழுவினரையும் இந்திய அரசையும் மீடியா உலகம் புரட்டி போட்டுக்கொண்டிருந்த நேரம் அது. “எதிர்பார்த்தைவிட அதிக அளவிலான செலவு செய்து இந்த போட்டிகளுக்கான ஆயத்தம் செய்யப்பட்டு வருகிறதே, இதில் கையாடப்பட்ட கணக்கில்லா தொகையை முதலில் டெல்லியின் கட்டமைப்புக்காக உபயோகப்படுத்தி இருக்கலாமே? பாருங்கள் ஐந்து நிமிடத்தில் கடக்கவேண்டிய தூரத்தை இருபது நிமிடமாகியும் கடக்க முடியவில்லை. இதுதான் இந்தியாவின் கௌரவமா? சரி… எத்தனை இந்திய விளையாட்டு வீரர்கள், உலக அரங்கில் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்று திரும்புகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?” என்ற என் கேள்விக்கு எந்த பதிலும் தராமல் முகத்தைத் திருப்பிக்கொண்டார் அந்த பெண்மணி. நம் மக்களின் போலி கௌரவ மனநிலையை தெளிவாக பிரதிபலித்த நிகழ்ச்சி அது.

இப்போது கெளரவம் மற்றும் ‘போக்குவரத்து நெரிசல்’ காரணமாக ப்ளூ லைன் பஸ்களின் புழக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தினமும் ஊடங்களில் வந்துகொண்டிருந்த ‘கெட்ட செய்திகளின்’ சத்தம் குறைந்து, இத்தனை பதக்கங்களுடன் இந்தியா இரண்டாவது (மூன்றாவது!) இடத்தில் இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. எந்த காலத்திலும் எனக்கு ஃபோன் செய்யாத என் நண்பன் ஒருவன் ஊரிலிருந்து “என்னடா? போட்டிகள் எல்லாம் எப்படி போகுது?நீ போய் பார்த்தாயா?” என்று கேட்கிறான். இந்த மனநிலையைத் தெளிவாக எதிர்பார்த்துதான் நம் கல்மாடி போன்ற பெருந்தகைகள் மிக தைரியமாக ஊழல் செய்கிறார்கள். நம் மக்களுக்கு மறதி அதிகம் என்ற விஷயமே இவர்களுக்கு பெரும்பலம். இன்றோடு (14.10.2010) விளையாட்டு விழா இனிதே முடிவடைகிறது. “இடையில் ஏற்பட்ட ‘வலிகளை’ மறந்து விடுங்கள். அவை சிறு பிழைகள். நம் தேசம் பெற்றிருக்கும் பெருமையைப் பாருங்கள்” என்று குரலெழுப்பத் தயாராகி வருகிறார்கள் நம் அரசியல்வாதிகள். இடையில் நிகழ்ந்த ‘வலிகள்’ என இவர்கள் குறிப்பிடுவன என்னென்ன என்று பார்ப்போம்.

போட்டிகளுக்கான ஆயத்தப்பணியில் தாமதம், ஊழல் என்பதெல்லாம் எல்லோரும் அறிந்த வழக்கமான செய்தி. அவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும் வண்ணம் தினம் வெளிவரத்துவங்கிய செய்திகள் உண்மையில் கலங்கடித்தன. மிக முக்கியமான இரு பிரச்சினைகள். சுகாதாரம், பாதுகாப்பு. பின்னதைக் கூட மிகுந்த  பிரயத்தனம் செய்து நடைமுறைப்படுத்தி விடலாம். ஆனால் சுகாதாரம் என்பதைப் பற்றி எந்த காலத்திலும் அலட்டிக்கொள்ளாத இந்திய மனோபாவம், இன்றுவரை கெட்ட செய்திகளை தோற்றுவித்துகொண்டே இருக்கிறது.

games1-600x400

வீரர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட அறைகள், கட்டில்கள், திரைச்சீலைகள், கழிவறைகளின் புகைப்படங்கள் வெளியாகி நம்மை அருவருக்க வைத்தன. லேப்டாப் பை தோளில் தொங்க ஸ்டைலாக நடக்கும் நவநாகரிக மனிதர்களுக்குக் கூட கண்ட இடங்களில் ‘புளிச்சென்று’ துப்பி கறையாக்கும் புகையிலைப் பழக்கம் இங்கு மிக அதிகம். கட்டுமானப்பணியில் வேலைபார்த்த தொழிலாளர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். வெளிநாட்டு வீரர்களுக்காகத் தயாராகி வந்த கட்டிடங்களின் வாஷ் பேசின்களில், தரைகளில் அவர்கள் ‘பொழிந்த’ புகையிலை எச்சில் ரத்தக்கறை போல் விரவி நம் மானத்தை ராக்கெட்டில் ஏற்றியது. டெல்லி ஒரு அழுக்கான நகரம் என்று முன்பு ஒரு முறை இங்கு ‘வருகை புரிந்த’ பிரிட்டிஷ் மகாராணி புகழ்ந்துரைத்தது மறந்திருக்காது. இங்குள்ளவர்கள் தெருவிலேயே கக்கா போகும் அளவுக்கு சுகாதாரம் இல்லாதவர்கள் என்று பிரிட்டிஷ் ஹைகமிஷன் மேலும் ஒரு பட்டத்தை அளித்தது. வீறுகொண்ட அப்போதைய நம் பிரதமர் ஐ.கே. குஜ்ரால் தகுந்த நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஆணையிட்டார். இந்த ‘சம்பவம்’ நடந்தது போன நூற்றாண்டில். இன்றும் அதே குற்றசாட்டு. ஆதாரம் உள்ள குற்றசாட்டு.

போட்டிகள் துவங்கி நடந்துகொண்டிருக்கும்போது டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு செய்தி. போட்டிகளை காணவரும் ரசிகர்கள் (இந்தியர்கள்தான்!) தாங்கள் சாப்பிட்ட உணவு வகைகளின் எச்சங்களை அங்கங்கே போட்டு சென்று விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு. அதற்கு பார்வையாளர்களில் ஒருவர் “இவற்றை சுத்தம் செய்யவென்று பணியாளர்கள் இருப்பார்களே? அவர்கள் தங்கள் கடமையை செய்யட்டும்” என்றொரு பொறுப்பான பதில் தந்தார். நம்மவர்களுக்கு குப்பைத் தொட்டியைத் தேடி அதில் கழிவுகளைக் கொட்டவேண்டும் என்ற அக்கறை கிடையவே கிடையாது. இவை சாதாரணமான விஷயங்கள் போல் தெரிந்தாலும், பெரிய அளவிலான அவப்பெயர் ஏற்படுத்தும் முக்கிய காரணிகள். அதே போல் ஆப்பிரிக்க நாட்டினர் தங்கவிருந்த அறையில் கிடைத்த ராமநாராயணனின் நாயகன் தந்த பரபரப்பு எதிர்பாராத திகில். மிகப்பெரும் அதிர்ச்சியாக ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கட்டப்பட்டிருந்த நடைபாதை பாலம் உடைந்து விழ அதிர்ச்சியும் பயமும் அதிகரித்தன. உடனடியாக இந்திய ராணுவம் அதைத் திரும்பவும் நிர்மாணித்து இழந்த மூச்சை திரும்ப கொண்டுவந்தது.

snake

பாதுகாப்பே இல்லை என்ற பல மொழிக் குரல்கள் உலக அரங்கில் இந்தியாவுக்கு ‘இருள் பிரதேச’ அந்தஸ்தைக் கொடுத்தன. தேவைக்கு மேற்பட்ட நபர்கள் அரங்குகளில், விளையாட்டு கிராமங்களில் சுற்றித் திரிந்துகொண்டிருந்ததைப் பார்த்து முகம் சுளித்தனர் வெளிநாட்டினர். இந்தியாவின் மக்கள் தொகை இந்த களேபரங்களுக்கு ஒரு காரணம் என்று மைக் ஹூப்பர் சொன்னதாக வந்த தகவல்கள் இங்கு ஒரு கௌரவப் பிரச்சினையைக் கிளப்பின. டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் இதற்கு க்கடுமையாக எதிர்வினை செய்ய, மைக் பென்னேலோ, “இந்த தகவல்கள் திரிக்கப்பட்டவை; ஹூப்பர் அப்படி ஏதும் சொல்லவில்லை” என மறுத்தார். பாதுகாப்புக் காரணங்களுக்காக டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தர பிரதேசம் வரை கடுமையான சோதனை நடத்தப்பட்டது. முறையான அடையாள அட்டை இல்லாதவர்கள் போலீசாரால் காவல்நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பதற்றம் அடைந்த பீகார், ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் இருந்து இங்கு பிழைக்க வந்த பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி விட்டனர். மேலும், போக்குவரத்துக்கு பெரும் இடையூறு எனக் கருதி டெல்லியின் தனியார் பேருந்துகளான ப்ளூ லைன் பேருந்துகள் இயங்குவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

இந்தப் பேருந்துகள் அவற்றின் பின்னணி பற்றி தனிக்கட்டுரையே எழுதலாம். சில ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் தனியார் பேருந்துகள் ‘செய்த’ விபத்துகளில் நிறைய பேர் உயிரிழந்தார்கள். தினமும் இத்தனை பேர் இறந்தார்கள் என்று செய்தி வந்துகொண்டே இருக்கும். இப்போது விபத்துகள் குறைந்துவிட்டாலும் பேருந்தின் தரம் படு மோசம். தகர டப்பா போல் இருக்கின்றன இப்பேருந்துகள். போய் சேர வண்டிய நேரத்துக்கு இங்கு எந்த தனியார் பேருந்தும் சென்றடைவதில்லை. அரசுப்பேருந்து நிறுத்தத்தை விட பல அடி தூரம் சென்று பயணிகளை இறக்கிவிட்டு நாம் ஓடிப்போய் ஏறுவதற்குள் பறந்துவிடும். பின்னால் பயணிகளை தனக்குள் அடைத்தபடி தனியார் பேருந்து வந்துகொண்டிருக்கும். அரசுப்பேருந்துகளின் கட்டண உயர்வுக்கு (கிட்டத்தட்ட இரண்டு மடங்கு) ஷீலா தீட்சித் சொன்ன காரணம் ‘அவை நஷ்டத்தில் இயங்குகின்றன’. ஏன் நஷ்டம் வருகிறது என்று ஆராய்வதில்லை. இப்போது ப்ளூ லைன் பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், ஒரு சில ரூட்களில் அவை இயங்குவதைப் பார்க்க முடிகிறது. கிட்டத்தட்ட ஆயிரத்தி ஐநூறு பேருந்துகள் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பேருந்தில் குறைந்தது மூன்று பேர் (ஓட்டுனர் , நடத்துனர் போக இன்னும் ஒன்றிரண்டு உதவியாளர்கள் இருப்பார்கள்) வேலை செய்கிறார்கள். போட்டிகள் நடக்கும் கடைசிநாள் வரை இவ்வளவு பேரும் வேலை இல்லாமல் இருப்பார்கள். இடையில் இவர்களுள் சிலர் காமன்வெல்த் போக்குவரத்துக்கு உதவி செய்ய அழைக்கப்பட்டார்கள். தற்போது ஆட்டோவாலாக்களும், வைட் லைன் எனப்படும் இன்னொரு வகை தனியார் பேருந்துகளின் உரிமையாளர்களும் கல்லா கட்டுகிறார்கள். தினசரி அலுவலகம் செல்பவர்கள் பாடு பெரும் திண்டாட்டமாக இருக்கிறது. இன்றும் அரசுப்பேருந்தை பிடிக்க நிறுத்தத்திலிருந்து ஐம்பது தப்படி எனக்கு ஓட வேண்டி வந்தது.

suresh-kalmadi-commonwealth-games__1_இன்னொரு பிரச்சினை. போட்டிகளைக் காண நுழைவுச்சீட்டு விற்பனையில் நிகழ்ந்த குழப்பம். நிறைய பார்வையாளர்கள் டிக்கெட் கிடைக்கவில்லை என்று புகார் சொன்னார்கள். ஒரு சந்திப்பில் கல்மாடி அதையும் மறுக்க அந்த சமயத்தில் அங்கு இருந்த மைக் பெந்நெல் குழப்பம் இருப்பது உண்மைதான், அது களையப்பட வேண்டும் என்று கல்மாடியின் குட்டை உடைத்தார். தவிர போட்டிகளைக் காணச் சென்றவர்களை சரியான முறையில் வழிநடத்தவில்லை என்ற புகார் எழுந்தது. அரங்கத்தில் வழிகாட்டுவதற்காக வந்த தன்னார்வத் தொண்டர்கள் முதல் போலீசார் வரை சரியான தகவல்களைத் தெரிவிக்கவில்லை என்றனர், பார்வையாளர்கள். நிறைய தன்னார்வ தொண்டர்கள் கூட தாங்கள் மோசமாக நடத்தப்பட்டதாக புகார் சொன்னார்கள். பார்வையாளர்களின் பாடு இதுவென்றால், துவக்க விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட கலைஞர்களின் கதை மிக சோகமானது. இந்தியாவின் வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து வந்து கலந்துகொண்ட நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாயும் , பணம் , அங்கீகாரம் ஆகியவற்றில் ஒரு குறையும் இல்லாத பெரிய கலைஞர்களான ஏ.ஆர். ரஹ்மான் போன்றவர்களுக்கு கோடிக்கணக்கில் பணமும் கொடுத்து இந்தியா தன் ‘ஏற்ற தாழ்வின்மையை’ பறைசாற்றிக்கொண்டது. நிறைய கலைஞர்கள் திரும்பிச் செல்லக்கூட காசில்லாமல் பரிதவித்தனர் என்ற செய்தி மனதை சங்கடப்படுத்தியது.

“எல்லாமே கெட்ட செய்திகள்தானா? நல்ல விஷயங்களே இல்லையா?” என்ற கேள்வி எழலாம். நிச்சயம் நல்ல செய்திகள் உண்டு. 2002-இல் மான்செஸ்டரில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் வென்ற 69 பதக்கங்களை தாண்டி இந்தக் கட்டுரை எழுதப்படும் நேரம் வரை இந்தியா 96 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதில் முப்பத்தாறு தங்கம் என்றால் கசக்குமா? உண்மையிலேயே மகிழ்ச்சி தரும் விஷயம்தான் என்றாலும் அதிலும் சில சோகங்கள் இருந்தன. பளுதூக்கும் போட்டியில் தங்கம் வாங்கிய ரேணு பாலா வீடு திரும்ப எந்தவித போக்குவரத்து ஏற்பாடும் செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரக் காத்திருப்புக்குப்பின் ஒரு ஆட்டோ பிடித்து வீடு போய் சேர்ந்தார். இந்தக் கஷ்டங்களுக்கு இடையிலும் தங்கள் திறமையை நிரூபித்து வரும் இந்திய வீரர்களின் மன உறுதியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

cwg9-12oct-abzal-21

நாளை (15-10-2010) டெல்லி முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. செய்தித்தாள்களில் அரசின் சாதனை விளக்கம் போல் அறிவிப்புகள். “இதுவரை இல்லாத அளவிலான சிறப்பான விளையாட்டு விழா. இந்தியாவின் இணையற்ற சாதனை” என்று பெருமை அடித்துக்கொள்ள ஆரம்பித்து இருக்கிறது இந்திய காமன்வெல்த் கூட்டமைப்பு. இது எதிர்பார்த்ததுதான். ஆனால் நம் கதையின் முக்கிய நாயகனான கல்மாடி சொல்லி இருக்கும் விஷயம் தான் என்னை வியப்பில் ஆழ்த்தியது. “காமன்வெல்த் போட்டிகளை வெற்றிகரமாய் சாதித்து விட்டோம்.. இனி அடுத்த இலக்கு ஒலிம்பிக்தான்” என்று சொல்லியிருக்கிறார். இந்த அளவிலா தைரியத்துக்கு என்ன பின்னணி என்று புரியவில்லை. காரை கரப்பான்பூச்சி போல் கவுத்ததொடு ‘என்னத்த’ கன்னையா வடிவேலுவிடம் ‘போலாமா’ என்று கேட்பாரே… அதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. இதுவரை நடந்த முறைகேடுகள் ஊழல்கள் மீதான நடவடிக்கை எடுக்க அரசு முயற்சிக்கும் என்று நம்ப யாரும் தயாராய் இல்லை, கல்மாடி உட்பட.

கடைசியாக…
தொடக்க விழாவை விட அதிக உற்சாகத்துடன் நிறைவுவிழா கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஒரு கலங்கடிக்கும் செய்தி கண்ணில்பட்டது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக இடப்பிரச்சினை, பாதுகாப்புக் காரணம் என்று கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் டெல்லியை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அரங்கங்கள், வாகன நிறுத்தங்கள் நிர்மாணம், நகரை அழகுபடுத்துதல் என்ற பெயரில் இந்தக் கொடுமை நடந்திருப்பதாக குற்றம் சாட்டுகிறது (HLRN) Housing and Land Rights Network  என்ற அமைப்பு. ‘உலகம் இந்தியாவை பெருமிதத்துடன் பார்க்கிறது. வெளிநாட்டில் இருந்து கலந்துகொண்டவர்கள் மறக்க முடியாத நினைவுகளுடன் தங்கள் நாடு திரும்புகிறார்கள்’ என்று புல்லரிக்கிறார் கல்மாடி. பீகாரோ ஒரிசாவோ அல்லது டெல்லியின் தூரத்தின் எதோ ஒரு மூலையில் இருந்தோ கனத்த இதயத்துடன் பலர் நின்றிருக்கிறார்கள் என்று நினைக்கும்போது தானாகக் கலங்குகிறது கண்.