களமும், ஐந்து கவிதைகளும்

1. அகவயக் கவிதைகள்- விரிசல் கண்ட நிலவு, குளிர் தாக்கும் இரவு

யன்னலூடே விரிசல் கண்ட வட்ட நிலவு.
எனக்கும் நிலவுக்குமிடையில் உள்ள விரிசல் நீக்க விடுவதேயில்லை
தாள்களொட்டிய கண்ணாடி யன்னலில் காத்துக் கிடக்கும்
குளிர்
விடியும் வரை காத்திருந்தேன்;
வெளிச்சத்தில் பார்க்க முடியவில்லை
அது கோரம் தப்புவதற்கு மீண்டும்
இருட்டும் வரை காத்திருக்கிறேன்
தனியிருட்சிறை; எனக்குத் துணை
விரிசலூடே விழும் சூரியனின் ஒளிவட்ட நிழல்.
அது நகர்ந்து சுவரேறி மறையும் வரை பகல்;
இரவுகள் நீண்டவை நிழலின் துணையற்று
குளிர் ஊடுருவுமனைத்துப் பாதைகளையும் அடைத்தாகிவிட்டது.
சப்பாத்துக்களினோசை நெருங்கி வருகிறது.
முள்ளந்தண்டிலிருந்து மீண்டும் சில்லிடத் தொடங்குகிறது
மின்மினிபோல் விளக்கொளிரும் இரவுகளில், இருள் விலகா
ஓரங்களூடே ஒண்டுக் குடிசை எல்லையற்ற காடாய் விரிகிறது
பகல் எழ வெளிசுருங்கி நசிகிறது இருப்பு
மனம் வெறுமையிலூறி வெளி எங்கும் கசிந்து கிடக்கிறது.
உலகம் தட்டைப் பிம்பமாகி
ஊடே
அப்பாலுள்ளவைகளிலும்
அது
வெண்
உப்புப்
போல
படர்ந்து
கசகச
வென்றி
ருக்கிறது

2. அவலம்சேர் இயற்கை – வண்ணங்கள் வாரித் தெளித்தக் கொடுங்கனவு

மழை நின்று விட்ட இரவு. .
தவளைகளின் தாளத்துக்கு விளக்குகளைச் சுற்றி ஈசல்களின் நடனம்.
விருந்துக்காகக் காத்திருக்கின்றன பல்லிகளும் பறவைகளும்
கடைசி மண்ணைப் போட்டு மூடி கூட்டம் எல்லாம் கலைந்து வெறிச்சோடிய பின்னர்,
சிதறிக் கிடந்த செண்டுகளிலிருந்த மலர்களைத் தேடி
சில தேனீக்கள் வந்து போயின.
கிளிக்குஞ்சு பிடிக்க மொட்டைத் தென்னையில் ஏறினேன்.
வாசலில் நிழலாடக் கண்ட குஞ்சுகள்
தாய்க்கிளி என்றெண்ணி வாய் திறந்து கீச்சுகீச்சென்கின்றன பசியோடு

என் கனவொன்றில்
வண்ணத்துப் பூச்சிகள் தம்மிறகால் வானவில்லொன்றை நெய்கின்றன
ஒரு கணம் படபடத்த வானவில் பிரிந்து சிதறுகிறது
வானம் துடிக்கிறது வண்ணமயமாகி
அந்திமழை;
வண்ணக்குடைகள் விரிகின்றன
மோதும் மழையைச் சபித்தபடி ஒருநாட்பூக்களுதிர்கின்றன
மலர்கள் மிதிபட விரையும் மனிதர்
வண்ணம் பிரித்து உறிஞ்சி
எழுகிறது இருள்

3. நீங்கா நினைவுகள் – காலம் கவர்ந்த களம்

அப்பா தோளில் தூக்கிவைத்து தேர் காட்டுவார்.
இடையில் ஆயிரம் தலைகள் அரோகரா என்று கத்தும்.
ஊருமில்லை தேருமில்லை… தோளுமில்லை
குளத்தருகே வீடு. குளத்தைக்கூட காணவில்லை.
சிதிலங்கள் நிறைந்து நிரவித் தரையாகியிருந்தது.
வீடும் மனிதர்களும் மனத்தில் எழுந்தனர்.
கண்கள் இரண்டும் குளமாகின
உன் பழைய கடிதங்களை எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
உன் முகவரியை உறையில் விட்டு விட்டு
ஊரைத் தெருவை உன்னைக் கிழித்தெறிந்து விட்டது
காலம்
தோற்றவன் கண்கள் நிலத்தை உழுதன.
வென்றவன் கண்கள் ஆகாயம் அளந்தன.
கரவொலி எழுப்பி ஆடிய கூட்டம் அடங்கிக் கலைந்தது
வெற்றி தோல்விச் சுவடுகள் அற்று கிடந்தது,
களம்

4. போர் நினைவுகள்- கதவு திறந்தேன் நீ நிற்கிறாய்.

பூமித்தாய் பச்சையுடுத்தியிருந்தாள்
சிவப்புப் புள்ளிகளோடு.முளைவிட்ட நெல் வயல்களில் சிதறிக்கிடந்தன சடலங்கள்
முண்டியடித்து படகேறி இடமற்று அழ அழக் கரையில் தள்ளிப் பலரை கை விட்டு தப்பி
ஏற்றி வந்த பாரமெலாம் இறக்கின
நடுக்கடலில் நாட்புறமும் வெடித்து சீறி வந்த
சன்னங்கள்
என் கண்கள் கட்டப்படவில்லை.
முன்னே பிணங்கள்.
பின்னே அவர்கள்
கூடவே உலகம்
நிர்வாணமாய்..
அதன் கைகளும் கண்களுந்தான் கட்டப்பட்டிருந்தன
கதவுதிறந்தேன் நீ நிற்கிறாய்
உதடுகள் கிழிந்து வழிகிற ரத்தம் துடைக்க முடியாதபடி
முறிக்கப்பட்ட கைகள்
நிற்கமுடியாது சரிகிறாய்
விலகி வழி விடுகிறேன்
நீ விழ
மதியக் கொடுஞ்சூட்டில் தகரப் பந்தல்
உள்ளே கொதிக்கிறது
எல்லோரும் வெளியே நிற்கிறார்கள்
சவத்தையும் அழுது கொண்டிருக்கும்
சம்சாரத்தையும் தவிர

5. முரண்நகை – மனிதர்களுக்கான கடவுள்

அவலத்தைச் சுவையாய்ச் சொல்வதில் அவர் கெட்டிக்காரர்.
த்சொ த்சொ சொல்லி சிலவேளை கண்கலங்கி அழுது கேட்டு விட்டு பிருஷ்ட மண் தட்டிச் செல்லும் கூட்டம்
கவிஞனே நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச மாட்டாயா என்று கேட்டுக் கொண்டேயிருந்தன
ஐயா பசிக்குது என்று பிச்சை கேட்ட சிறு பெண்ணின் குழந்தைக் கண்கள்
இருள் மூலையில் சுவரோடொட்டி கால்களை மடித்து
நெஞ்சில் அணைத்து தலை கலைந்து முழங்காலில் முகம் புதைத்தபடி கண்ணீர் சுரத்தல் –
ஆற்ற ஆருமற்றவர்களின்
யோகாசனம்
என் காலடிகளை யாரும் பின் தொடராதீர்கள்.
அவை ஒரு மிதிவெடியுடன் முடிந்து விடுகின்றன
பலிக்கடா:
கத்தி இறங்க முன்பு பலி பீடத்திலிருந்து பார்க்க, என் இரத்தம் ஏந்த அண்டாவுடன் நின்றவனின் கால்களினூடே மனிதர்களுக்கான
கடவுள் தெரிந்தார்