விஷ்ணுக்ராந்தி

கருகருவென்று, கொஞ்சம் பாசி பிடித்த பெரிய கோட்டைச்சுவர். கோட்டைச் சுவரும் தரையும் சேரும் முன்பே கோட்டையை ஒட்டியவாறு மற்றொரு சிறிய சுவர். வீரர்கள் நின்று போர் செய்ய ஏதுவாக இருந்தது போலும். பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம். வீரர்கள் நின்ற இடத்தில் இன்று புற்கள் நின்று கொண்டிருந்தன.

வளர்ந்த புற்கள் இடையில் அவன் பழகிய கண்கள் தேட கை மெதுவாக “விஷ்ணுக்ராந்தி” (*) பச்சிலையை பறித்து பைக்குள் தானாகவே அனுப்பி கொண்டிருந்தது. “விஷ்ணுக்ராந்தி !”. அம்மா கஷாயம் பண்ணி தருவார்கள். எதற்கு என்று தெரியாது. குடித்த பிறகு வெல்லம் அல்லது கருப்பட்டி ஏதாவது தின்ன கிடைக்கும். சிறிய நீலபூக்கள் உள்ள அந்த பச்சிலை மிக நல்லது என்று பலவந்தமாக கொடுப்பார்கள். கருப்பட்டிக்காக குடிக்க வேண்டும்.

காது கேட்காத காரணமோ என்னவோ சுறுசுறுப்பாய் வேலை ஆனது. சத்தமாக சிரித்தால், பேசினால் காது கேட்டது.

அவனைப் போலவே பத்தனும், கணேஷும் இன்னும் சில சிறுவர்களும் பச்சிலையை பறித்துக் கொண்டு இவனை கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.

பத்தன் அக்கூட்டதில் ஒரு தனி. ஒரு முறை கணேஷும் அவனும் சண்டை போட்டார்கள். எதற்கு என்று தெரியாது. தெருவின் நடுவே செவெண்டீச் விளையாடும்போது.ஏழு கல்லை ஒன்றின் மேல் ஒன்றாய் வைத்து விட்டு பந்தால் எறிய வேண்டும். எறிந்து விட்டு ஓடிய பிறகு அதை அடுக்க வேண்டும்.மும்முரமான விளையாட்டில் தீடிரென்று கணேஷுக்கும், பத்தனுக்கும் சண்டை. சட்டை கிழிந்து, மூஞ்சி வீங்கி…. பெரியவர்கள் வந்து இருவரையும் பிரிக்க வேண்டியதாயிற்று. அப்படி நடந்ததே கிடையாது.

சிரிப்பும் சத்தமும் அதிகமாயின. அவன் மறுபடி ஒரு முறை திரும்பி பார்த்தான். அவனைக் குறித்து பேசி எதோ கிண்டல் என்பது புரிந்தது.

இன்னும் எதோ சொல்லி சிரித்தார்கள். அவன் விறைப்பாக எழுந்து கொண்டான், என்ன என்பது போல.

“டேய், செவிடனுக்கு கோபம் வருதுடா …” இது பத்தன்

“இல்லைடா புலி பம்முதுடா, நம்ம மேல பாயப்போவுதுடா….” இது கணேஷ்

அவனுக்கு அப்படியே உடம்பு நடுங்கியது. கீழே இருந்த ஒரு கல்லை தூக்கி…

திடீரென்று யாரோ சத்தம் போட்டார்கள். “டேய் மீசை மாமா வரார்” என்று ஓடினார்கள்.

மாமாவை பார்த்ததும் மூத்திரம் வந்தது. லேசாகி டௌசரில் ஒரு சொட்டு விழுந்தது. ஒரே ஓட்டம். அம்மாவை பார்த்ததும் கண்கள் முட்டிக்கொண்டு, பேச முடியாது ஒரு அழுகை. அம்மா ஊகித்து விட்டார். “அழாதே குட்டி. நீ போய் பச்சிலை பறி நான் அந்தப்பயக்களோட அம்மாவிடம் கம்ப்ளெயின் பண்றேன்” என்றார்.

கழிந்த வருடம் முதல்தான் இந்த தொல்லை. சரியாக இருந்த காதுதான். கிணற்றில் விழுந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கேட்பது இல்லை. எதிர்த்த வீட்டு பாட்டிதான் அம்மாவிடம் கூறினாள். என்ன ஒம்பையன் என்ன கூப்டாலும் திரும்பாம போறான் என்று புகார் செய்தாள். அம்மா மெதுவாக கண்டு பிடித்தாள். பிறகு தான் தெரிந்தது, யாராவது நேரே நின்று பேசாவிட்டால் காது கேட்பதில்லை என்று.

அம்மா கோட்டார் ஆசுபத்திரிக்கு கூட்டி சென்றார். அங்கு எதோ மருந்து விடப்போக இன்னும் சத்தம் குறைந்து போனது.

கிணற்றுள் விழுந்தது நினைவிற்கு வந்தது. வீட்டின் கொல்லைப்புறம் கிணறு. ஆவணி மாத நீர் நிறைந்து மிக அருகில் இருந்தது. அம்மா குடிக்க நீர் கொண்டு வரச்சொன்னதும் பானையில் இருந்து நீர் எடுக்காது, கிணற்றில் சென்று நீர் எடுக்கச் சென்று, கால் எம்பி, கயிற்றுடன் உள்ளே சென்று விட்டான். கிணற்றின் ஆழம் வரை சென்று வர வேண்டி இருந்தது. ரெண்டாம் க்ளாசில் நீந்த படித்திருந்ததால் மேலே வருவது கஷ்டமாக தோன்ற் வில்லை. ஆனால் அக்காவும், அம்மாவும் தான் வெளியில் கொண்டு வந்தார்கள். விழுந்த வேகம் காதை பதம் பார்த்து விட்டது. இன்னும் பெரிய டாக்டர் கோட்டார் ஆசுபத்திரியில் வருவார் என்றும் அவரைப்பார்த்தால் காது சரியாகும் என்றும் அம்மா அப்பாவிடம் கூறிக் கொண்டிருந்தார்கள்.

பெரிய கருகருவென்ற அக்கோட்டையை வெளியில் இருந்து ஏற முடியாதபடி வடிவமைத்து இருந்தார்கள். டச்சுக்காரனை மார்த்தாண்ட மகாராஜா பிடித்து இங்கே சேனாபதி ஆக்கி விட்டாராம். சரி சமமான கற்கள். மீசை மாமாதான் கோட்டையின் அதாரிட்டி. அரசு விருந்தினர் மாளிகை என்று எழுதிய ஒரு சறுக்கில் வட்டமாக உட்கார்த்தி வைத்து அப்பப்ப கதை கூறுவார்.

“மகராசாவுக்கு நெல் அளந்த ஊர் தெரியுமா…. அப்பொல்லாம் நீங்க எங்க உண்டு. சரி போட்டும். இந்த கோட்டைக்குள்ள செத்து கெடகாமில்ல ஒரு ஆளு. அதாண்டே அந்த டிலெனாய் அவன் பெரிய ஆளுமாறி நம்ம ராசா, அதாண்டே மார்த்தண்ட வர்மா, அவருட்ட கொளச்சல்ல கடல் வழியா வந்து வாடா சண்டைக்குன்னு விளிக்க, நம்ம ராசா வெடி வெச்சு அவனுகள பிடிச்சு போட்டாரு. அப்புறம் அவன் ராசா கால்ல விளுந்து மாப்பு தாரும்ன்னு கேட்டு ராசா அவன இங்ஙண இன்சார்ஜ் ஆக்கிபோட்டார்” என்று ஆரம்பித்து ஒரே விஷயங்களை புதிதாக கூறுவார்.

“திப்பு தெரியுமா, அதாண்டே அந்த மைசூர் ராசா.. அவனுக ஆளுகளெ இந்த தாயோளி இங்லீஷ்காரனுக இதுக்குள்ளதான் செயில்ல போட்டானுக. நம்ம ராசா ஆயுதக்கிடங்கா வெச்சுட்டுரிந்தார், நூறு ஏக்கர் ஏரியா தெரியுமா டே. ஆனை கட்டின கோட்டை, அறுபதி அடி ஒசரம் மக்களா” என்று கண்ணை மூடிக்கொண்டு வேறு உலகத்திற்கு போய் விடுவார்.

நாங்கள் எல்லோரும் அடுத்த அமுத துளிகளுக்காக வாயில் ஈ போவது தெரியாது அவர் வாயை பார்த்து கொண்டிருப்போம்.

இன்று ஏதோ சாடிலைட் என்கிறார்கள், மேலே இருந்து படம் எடுக்கும் என்கிறர்கள், அதை வைத்து மொத்த வரைபடம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அவன் பார்த்தது கிடையாது. ஏதோ இண்டெர்னெட் ஓட்டவேண்டுமாம். ஆனால் பழய காலத்தில் எப்படி மகாராஜா இங்கு தான் கோட்டை வேண்டும் என்று தீர்மானித்தார். இங்கு தான் குளம் வேண்டும் என்றார்.இங்கு ஊர் அமைத்தார். எப்படி முடியும். அவனுக்கு மிக ஆச்சரியமான விஷயங்கள்.மகாராஜா சாடிலைட் வைத்து படம் பிடித்து போட்டார் என்று சரித்திர பாடம் படித்த நினைவு இல்லையே என்று நினைத்து கொண்டான்.

ஒரு முறை அருகே இருக்கும் பத்மனபாபுரம் அரண்மனை சென்றிருந்தான். முன்னூறு வருடம் பழயதாம். எதோ தாய்க்கூடம் என்று கூறினார்கள். ஒரு தூணில் வளையம் ஒன்று இருந்தது. ஆனால் தூணில் ஒட்டவில்லை. கூட்டிச்சென்ற கைடு ”விர்ரென்று” அந்த வளயத்தை சுற்றி விட்டான். தூணை கட் பண்ணவில்லையாம். ஆனால் வளையம் மட்டும் அதுள் கோர்த்து விட்டார்களாம். அதெப்படி முடியும். இன்றளவும் புரியாத புதிர்.

கோட்டைக்குள் செல்ல மிகவும் பயமாக இருக்கும். நண்பர்கள் இருந்தால் மட்டுமே செல்வான். ஹோ வென்று புளிய மரங்கள். இன்னும் ஏதெதோ மரங்கள். “புளியங்காற்று உடம்புக்கு ஆகாது, புளிய மரத்தில் வாதை இருக்கும்”
என்பார் மீசை மாமா. நண்பர்கள் யாருக்காவது அதிக காய்ச்சல் வந்து விட்டால் கோட்டைக்குள் தனியாக சென்று வந்து விட்டான் என்றுதான் அர்த்தம். தனியாக செல்ல வேண்டும் என்றால் முடியவே முடியாது.

அதன் உள்ளே இருக்கிறது டச்காரரின் சமாதி. அவர், மனைவி, குதிரை, யானை எல்லாவற்றையும் புதைத்து இருந்தார்கள். அந்த சமாதி பக்கம் ஒரு தடவை போய்விட்டான், அப்பப்பா அதுவும் மத்தியானம் பனிரெண்டு மணிக்கு. அவனுக்கு பயத்தில் வியர்த்து விட்டது. மூத்திரம் வரும் போல் இருந்தது. சற்று நீங்கி பக்கவாட்டில் டவுசரை தூக்கி விட்டான். வீரர்கள் நின்று அம்போ, துப்பாக்கியோ விட்ட இடமாக இருக்கலாம். ஒரு கையால் பச்சிலை பையை சரி செய்தவாறே, டவுசரை பிடித்து கொண்டான். நிம்மதியாக இருந்தது.

கிராமத்து முதல் வீட்டில் ஒரு ஐயங்கார் மாமா உண்டு. அங்கு தான் தேங்காயை ஒரு கூர் கம்பியினால் தொலிப்பார்கள். அதன் முனைப்ப்குதி தட்டையாக பரந்து, கூராக இருக்கும். சதக் சதக் என்று சத்ததோடு தேங்காய் வேறு, சவுரி வேறாக வரும். ஒரு நிமிஷத்தில் ஒரு தேங்காய் தொலித்து விடுவார்கள். கழுவேறி மரம் அப்படித்தான் இருக்கும் என்று கூறினான் பத்தன். அவன் சிலிர்த்து கொண்டான். கோட்டை உள் செல்வது சில வருடம் முன்னால் கொஞ்சம் கஷ்டம். முழுவதும் மரச்சீனி கிழங்கு பயிர் இருக்கும். ஆள் நடமாட்டம் கிடையாது.மாதம் ஒரு முறை யாராவது கோட்டைக்குள் செத்து போவார்கள் என்று மீசை மாமா சொன்னார். இப்போது கோட்டை நிர்வாகத்தை அரசு எடுத்து கொண்டு விட்டது.

இந்த காது கேட்காது போன பிறகு நண்பர்கள் அவனை கோட்டைக்குள் அழைப்பதில்லை. பெரிய டாக்டர் வருவதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகலாம். அது வரை இந்த கேலி கிண்டல் எல்லாம். வேறு வழியில்லை. அதிலும் பத்தன்தான் எப்போதும் ஆரம்பிப்பான். அவன் வெறுமனே சிரித்தாலும் சந்தேகம் வந்துவிடும்.

பொன் வண்டு ஒன்று பறந்தது. அவன் அதை வேகமாக பிடித்தான். அதன் வண்ணத்தில் சொக்கி கை வேலை பார்க்காது… நெடு நாள் முன் அம்மா சொன்ன ஒரு கதைதான் நினைவு வந்தது. ஒரு முனிவர் சிறுவனாக இருக்கும் போது வண்டை பிடித்து அதை ஊசியால் குத்துவாராம். அவர் முனிவராகிய பின்னர் ஒரு நாள் செய்யாத குற்றதிற்ககாக ராஜா சிறை பிடித்து அவரை கழுவேற்ற கூறினானம். அவர் கழுவேறியவாறே விஷ்ணுவை நோக்கி கதறும் பொழுது இறைவன் விஷ்ணு நீ வண்டினை குத்தினாய் என்றாராம். அதற்கு முனிவர் அது அறியாப்பருவம் என்றாராம். இறைவன் ஆயினும் நீ தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றாராம். அவன் வண்டை விட்டுவிட்டான்.

பெரிய டாக்டர் வந்தார், அம்மா கூட்டிப் போனர்கள். ஊரில் என்ன நடந்தது என்பதே தெரியாது. திரும்பி வந்ததும் காது சரியாகி விட்டது.

மறுபடியும் “விஷ்ணுக்ராந்தி”. பத்தன் பறிக்கவில்லை. அவன் கையில் ஒரு கட்டு. மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தான்.

“டேய் கை நொண்டிடா…” இது அவன். பத்தன் விறைப்பாக திரும்பி பார்த்தான்.

“டேய் புலி பம்முதுடா நம்ம மேல பாயப்போவுதுடா….” இது கணேஷ்.

************************

(*) The plant pacifies vitiated pitta, asthma, falling and graying of hair, general debility and memory loss