ஹாலிவுட் உருவாக்கிய மனநோய்

ருவருக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆளுமைகள் அல்லது ஒருவர் மற்றொருவராக மாறி செயல்களை செய்வது – மிகவும் சுவாரசியமான சைகோ-த்ரில்லர்களை ஹாலிவுட்டுக்கு வழங்கியிருக்கிறது. மேற்கத்திய பொதுஜன ரசனையில் (பரப்பிய தளத்தில்?) Dr. Jekyll and Mr. Hyde (1931) திரைப்படம், இத்தகைய சித்தரிப்புகளுக்கு முதல் வித்தை வழங்கியது. ராபர்ட் ஸ்டீவன்ஸனால் இக்கதை எழுதப்பட்ட ஆண்டு 1886. இன்று (சுய) அடையாள ஆளுமை-அகன்ற மனப்பிறழ்ச்சி (Dissociative Identity Disorder DID) என உளவியலாளர்களால் அழைக்கப்படும் மனப்பிறழ்வின் தன்மைகளைக் கொண்ட முதல் நவீன இலக்கியச் சித்தரிப்பு என இதை சொல்லலாம். ஆனால் இங்கு இந்த ஆளுமைப் பாகுபாடு ஒரு மருந்தினால் உருவாக்கப்படுகிறது.

DID – என இப்போது அழைக்கப்படும் இந்த மனப்பிறழ்ச்சி தொடக்கத்தில் ‘பல ஆளுமைகள் மனப்பிறழ்ச்சி’ (Multiple Personality Disorder, MPD) என அழைக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு நரம்பியலாளர் பியாரே ஜேனட் அடையாளப்படுத்திய இந்த மனப்பிறழ்வு 1905 இல் சிறிது பிரபலமடைந்தது.

ஆனால் 1957 இல் ”பெண்ணின் மூன்று முகங்கள்” (Three Faces of the Eve) எனும் திரைப்படம் வந்தது. இதில் நடித்த இளம்நடிகை இத்திரை சித்தரிப்புக்காக ஆஸ்கர் பரிசு வாங்கினார். அமெரிக்காவின் பிரபல பெண் நடிகையாக திகழ்ந்தார்.

கார்பெட் திக்பென் [Corbett H. Thigpen], ஹெர்வே க்ளுக்லே [Hervey Milton Cleckley] என்ற இரண்டு மனச்சிகிச்சையாளர்கள், MPD மனப்பிறழ்வு கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளைக் குறித்து ஒரு நூல் எழுதியிருந்தார்கள். அந்த நூலின் அடிப்படையிலேயே இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. சுவாரசியமான விஷயம் இனிதான் தொடங்குகிறது. அமெரிக்க அரசு அப்போதுதான் மனநலம் குறித்த தேசிய அளவிலான சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்கான ஒரு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருந்தது. இதில் ஈடுபட்டிருந்த உளவியலாளர்களும், உளசிகிச்சையாளர்களும், தொடர்ந்து MPD-யால் அவதியுறும் பெண்கள் சிகிச்சை தேடி வர ஆரம்பித்ததைக் கண்டு அதிர்ந்து போனார்கள். 19 ஆம் நூற்றாண்டில் அது அடையாளப்பட்ட காலம் முதல் 1950கள் வரை மொத்தம் 79 பேரே இந்த பிறழ்ச்சித்தன்மை கொண்டவர்களாக பதிவாகியிருந்த ஒரு ஆபூர்வ மனநிலை, இப்போது ஏறக்குறைய ஒரு தேசிய மனநிலையாகவே காட்சியளித்தது

இந்தத் திரைப்பட்த்தில் மற்றொரு அம்சமும் இருந்த்து. அதில் வெளிப்பட்ட மூன்று ஆளுமைகளில் ஒருவர் பெயர் ஈவ் வையிட் (Eve White) மற்றொரு ஆளுமை ஈவ் ப்ளாக் மூன்றாவது ஆளுமை ஜேனட். இதில் ஈவ் வையிட்  தெற்கு அமெரிக்க கிராமச்சூழலின் சம்பிரதாய மனைவி. ஆனால் ப்ளாக்கோ மாறிவரும் அமெரிக்க நகர்ப்புறத்தின் கொப்பளிக்கும் உற்சாகத்தின் உருவம். திரைப்படத்தில் ஈவ் வையிட் ஈவ் ப்ளாக்காக மாறும் தருணங்களின் பின்னணியிலோ ஜாஸ் இசை. விவசாய சூழலிலிருந்து 1950களில் நவீனத்துவத்துக்கு தள்ளப்பட்ட அமெரிக்கப் பெண்மையின் மாற்ற அதிர்ச்சிகளின் ஆழ்மன வெளிப்பாடாகவும் இது அமைந்தது.

இதுவரை இந்த மனநிலையை கண்டுபிடிக்கவும் அதனை ஒரு பிரச்சினையாக அறிந்து தீர்வளிக்கவும் வழிமுறைகள் இல்லை என்பதனாலேயே இது அறியப்படாமல் இருந்திருக்க வேண்டும். இப்போது இது குறித்த அறிவு பரவுவதால் இது பெரிய அளவில் வெளிவர ஆரம்பித்துள்ளது என்றே  உளவியலாளர்கள் தொடக்கத்தில் நினைத்தார்கள். இந்த மனப்பிறழ்ச்சியைக் கண்டறியும் உளவியல் சாதனங்களை உருவாக்கவும் சிகிச்சைக்கான வழிமுறைகளை அறியவும் அந்த பிரபல நூலை எழுதிய உளசிகிச்சையாளர்கள் ஆலோசனைகளுக்கு அழைக்கப்பட்டனர். இந்த உளச்சிகிச்சையாளர்களில் ஒருவரான க்ளுக்லே சாதாரணமானவர் அல்ல. ஆழமான மனநிலை பிறழ்ச்சி கொண்டவர்கள் வெளிப்படையாக அப்படி தெரியவேண்டுமென்பதில்லை. சாதாரணமான ஏற்கப்பட்ட மனநிலை தோற்றத்தின் முகமூடியை அவர்கள் அணிந்து கொண்டிருக்கலாம் என்கிற உண்மையை வெளிக்கொணர்ந்தவர் அவர். ஆனால் இந்த MPD பிரச்சனை குறித்து ஆலோசனை வழங்க ஒரு கருத்தரங்கு வந்திருந்த க்ளக்லேயிடம் அவரிடம் சிகிச்சை பெறும் ஒரிஜினல் ’ஈவ்’ எப்படி இருக்கிறார் என கேட்டபோது அவர் சர்வ சாதாரணமாக “இப்போது 26 ஆளுமைகளுடன் இருக்கிறாள்” என பதிலளித்தது அதிர்ச்சி அளித்தது. மேலும் உளவியலாளர்கள் மற்றொன்றை கவனித்தனர். அத்திரைப்பட நடிகையின் பிரபல்யம் பல இளம் பெண்களை அந்நடிகையின் திரைப்பாத்திரத்துடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள தூண்டியிருந்தது.

1970 இல் இதே மனப்பிறழ்ச்சியின் அடிப்படையில் வெளிவந்த மற்றொரு படம் “On a Clear Day You Can See Forever”. ஏற்கனவே இசைநாடகமாக பிரபலமடைந்திருந்த காதல் முக்கோண பலகோணங்கள் நிரமபிய ‘அமெரிக்க காவியம்’! சிகரெட் பழகத்தை கைவிட ஹிப்னாட்டிச சிகிச்சைக்கு ஆளாகும் பெண்ணின் உள்ளிருந்து தோன்றும் ஒரு ஆளுமை சென்ற நூற்றாண்டை சார்ந்தது – ஏறக்குறைய முற்பிறவி. இந்த ஆளுமையுடன் சிகிச்சையாளர் காதலில் விழுகிறார். நனவுலக ஆளுமை –அதாவது சிகிச்சை பெறும் பெண்ணோ – சிகிச்சையாளருடன் காதலில் விழுகிறாள். இவளை சிகிச்சைக்கு அனுப்பியதோ இவளை மணக்கப் போகும் நபர். எத்தனை கோணமென குழம்பும் காதல் முக்கோணப் பிரச்சனையில் ஒரு நாள் ஹிப்னாட்டிச ஒலிப்பதிவுகளை நனவுலக ஆளுமை கேட்க நேரிட, அதில் சிகிச்சையாளர் விரும்புவது தனது முற்பிறவி ஆளுமையையே எனத் தெரிந்து கொள்கிறாள். அந்தப் பெண் பின்னர் சில காலத்துக்கு பின்னர் திரும்புகிறாள் – இப்போது இன்னும் அதிக ஆளுமைகள். அதில் ஒரு ஆளுமை வருங்காலத்தில் அந்த சிகிச்சையாளரை மணக்கப் போகும் பெண்! சுபம்! மறுபிறவி நினைவுகளை ஹிப்னாட்டிசம் மூலம் கிளறும் மேற்கத்திய முறையையும் MPD சிகிச்சைக்கு ஹிப்னாட்டிசத்தை பயன்படுத்துவதையும் பொது பிரக்ஞையில் இணைத்த்து இத்திரைப்படம். இரண்டுமே அவற்றின் ஆதாரத்தன்மை குறித்து கேள்விக்குள்ளாகும் விஷயங்கள்.

1976-இல் “சிபில்” என்றொரு புத்தகம் வெளியானது. அது பல ஆளுமைகள் கொண்ட பெண்ணின் மனசிகிச்சையைக் குறித்தும். அவளுக்கு எப்படி இந்த பல ஆளுமைகள் ஏற்பட்டன என்கிற ஆராய்ச்சியைக் குறித்தும் பேசியது. இப்புத்தகமும் பிரபலமடைந்தது. தொலைக்காட்சித் தொடராக அமெரிக்க வீடுகளுக்குள் இது நுழைந்தது. “ஈவ்” பட்த்தில் மூன்று ஆளுமைகள் என்றால் சிபில் தொடரிலோ 16 ஆளுமைகள். அதனைத் தொடர்ந்து அமெரிக்க மனசிகிச்சையாளர்களிடம் வர ஆரம்பித்த MPD நோயாளிகளின் ஆளுமைகளும் அதிகரிக்க ஆரம்பித்தன. ஒரு புள்ளியியல் ஆராய்ச்சியின் படி சிபில் தொலைக்காட்சித் தொடரை தொடர்ந்து தேசிய அளவில் பதிவு செய்யப்பட்ட இந்த கேஸ்களின் சராசரி ஆளுமைகள் எண்ணிக்கையும் 16! மற்றொரு சம்பவ ஒற்றுமை என்னவென்றால் 1957-இல் MPD நோயாளியாக நடித்த அதே நடிகை சிபிலில் மனசிகிச்சையாளராக நடித்திருந்தார். சிபில் தொடரில் MPD உருவாவதற்கான காரணமாக அப்பெண் சிறுவயதில் பெரியவர்களால் மிக மோசமாக வன்முறைக்கும் கொடுங்கட்டுப்பாட்டுக்கும் (child abuse) ஆளாக்கப்பட்டது காரணமாக சொல்லப்பட்டிருந்தது. அது வரை MPD உருவாகக் காரணமாக மிகக்குறைவாகவே அறியப்பட்ட இந்த சிறுவயது கொடும் சூழல் திடீரென பெரிய அளவில் MPD நோய் உருவாக்கும் காரணியாக மாறியது.

MPD பல பிரச்சினைகளை உருவாக்க ஆரம்பித்தது. உதாரணமாக ஒரு நோயாளிக்கு ஒரு மனவியலாளர் வாரத்துக்கு ஒரு முறை சிகிச்சை அளிக்க வேண்டுமென்பது ஏற்பாடு. இந்த சிகிச்சைக்கான தொகையைக் கட்டுவது ஒரு காப்பீட்டுக் கம்பெனி. மனவியலாளரோ வாரத்தில் ஐந்து முறை அந்த நோயாளியைப் பார்த்திருக்கிறார். ஒவ்வொரு பில்லையும் ஒவ்வொரு ஆளுமை பெயரில் எழுதியிருக்கிறார். கேட்டால் ஒவ்வொரு ஆளுமையையும் தான் ஒவ்வொரு தனி ஆளாக கவனிக்க வேண்டியது அவசியம் என்று சொன்னார் அவர்!

இந்நிலையில் மற்றொரு சர்ச்சை எழுந்தது. MPD என்பது உண்மையாலுமே ஒரு மனநிலை பிறழ்ச்சி நோய்தானா அல்லது வெறும் ஹாலிவுட் ‘பில்டப்’தானா? அல்லது அதைவிட மோசமாக தங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் மனசிகிச்சையாளர்களே இந்த நினைவுகளை உள்செலுத்துகிறார்களா? சிபில் விஷயத்தில் அப்படித்தான் நடந்த்து என மனசிகிச்சை அளித்தவர்களில் ஒருவர் கூறுகிறார்.  ‘சிபிலின்’ முதன்மை மனசிகிச்சையாளரான கார்னெலியா வில்பர்தான் மனசிகிச்சையின் போது  சிபிலின் மனதில் பல ஆளுமைகளை முழுமையாக உருவாக்கியதாக துணை சிகிச்சையாளரான ஹெர்பர்ட் ஸ்பிகெல் கூறுகிறார்.

முழுமையாக ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் மாறுபட்ட, முழுக்க முழுக்க வெவ்வேறான ஆளுமைகள் என்பதெல்லாம் அதீதமானவை என இப்போது எல்லா மனவியலாளர்களும் ஒத்துக் கொள்கிறார்கள். MPD என்பதே பொதுவாக சுய-ஆளுமை/நினைவுகளிலிருந்து நீங்கிடும் மனப்பிறழ்ச்சிகளில் (Dissociative disorders) ஒருவகை எனக் கருதலாம். முழுமையான வெவ்வேறு ஆளுமைகள் உருவாவதற்கு ஆதாரங்கள் இல்லாத நிலையில், மனவியல் ஆராய்ச்சித்தாள்களிலும் மருத்துவ பரிபாஷையிலும், இந்நோய் MPD என்பதிலிருந்து DID என மாறிற்று.

ஆனால் வெவ்வேறு ஆளுமை கூறுகள் (alters) என்பவை இன்னும் மனசிகிச்சையாளர்களால் முக்கியமானதாக கருதப்படுகின்றது. இவை வெளிப்படும் போது மன-உடல் இயக்கங்களில் ஏற்படும் மாறுதல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஹிப்னாட்டிச கட்டளைகள் அல்லது மென்மையான தூண்டுதல்கள் மூலம் சாதாரண நபரிலும் இதே மாறுபட்ட ஆளுமைக் கூறுகளை உருவாக்க முடியும் என்பது விஷயத்தை இன்னும் சிக்கலானதாக ஆக்குகிறது. ஒரு குறிப்பிட்ட ஆளுமை கூறுக்கு மட்டும் முக்கியமான இதய நோய் அறிகுறிகள் இருப்பதும் அந்த நோய் அறிகுறிகள் பிற ஆளுமை கூறுகளிலும் முக்கிய நனவு ஆளுமையிலும் இல்லாமல் போவதும் குறைந்தது ஒரு கேஸில் நன்றாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. (அதாவது அன்னியனுக்கு மட்டும் மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ரெமோவுக்கும் அம்பிக்கும் ஆரோக்கியமான இதயம் என்பது போல: நம் ஊர் அன்னியன் படத்தின் அறிவியல் சாத்தியன்களுக்கு இறுதியில் வரலாம்.)

பொதுவாக இன்றைக்கு இந்த மனநிலைப்பிறழ்ச்சி குறித்து இரு வேறுவிதமான அறிதல்கள் நிலவுகின்றன. ஒன்று: இளம்வயது கொடும் அனுபவங்களை எதிர்கொள்ள மனம் உருவாக்கிய ஒரு அதீத பாதுகாப்பு முறை MPD. இப்பார்வையில் இம்மனப்பிறழ்ச்சியை பார்க்கும் ஒரு மனவியலாளர் MPD ஐ இப்படி விளக்குகிறார்: ஒரு சிறுபெண் தனக்கு நடக்கும் தன்னால் எதிர்க்க இயலாத அதீத வன்கொடுமையை வேறொருவருக்கு நடப்பதாக கற்பனை செய்து கொள்வதுதான் –MPD.

இதற்கு நேர் மாறாக இந்த பிரச்சினையை சமூக அறிதல் (socio-cognitive) விளைவாகக் காண்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஊடகச் சித்திரங்களும் சிகிச்சையாளர்களின் தூண்டுதல்களுமே இந்த மனப்பிறழ்ச்சியை கட்டியெழுப்புவதாகக் கருதுகின்றனர். இதில் இவர்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் மறுக்கமுடியாதவை. உதாரணமாக மிகவும் விவரணமான தெளிவான பொய்-நினைவுகளை (false memories) ஹிப்னாட்டிச முறையில் அல்லது மிக ஆழமான மென்மையான தூண்டுதல்களின் மூலம் உள்ளத்தில் பதியவைக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.  மேலும் மனப்பிறழ்வு குறித்த திரைப்படம் அல்லது ஊடக பிரசித்தி பெற்ற புத்தகம் வெளிவரும்போது அதனையொத்து அதிகரிக்கும் நோய் அறிகுறிகள்அதிகரிக்கின்றன எனவும் புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. ஹாலிவுட்டின் ஆதிக்கத்தில் இருக்கும் அமெரிக்காவிலேயே மனப்பிரழ்வு நோய் அதிகளவில் காணப்படுகிறது. இங்கிலாந்திலும், இந்தியாவிலும், ஸ்பெயினிலும் மிகக் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. 1996-இல் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயின் படி இந்த நோய் ஜப்பானில் அறவே இல்லை. இவையெல்லாம் தவிர, இந்த ஆளுமைகளின் எண்ணிக்கை MPD-க்கு சிகிச்சை அளிக்கப்படும்போது அதிகரிப்பதையும் அவர்கள் சுட்டுகிறார்கள். இதில் மற்றொரு சுவாரசியமான விஷயத்தையும் சொல்லவேண்டும் இந்தியாவில் மிக அரிதாக அறியப்பட்ட இந்த மனப்பிறழ்ச்சியின்போது வேற்று ஆளுமைக்கூறுகள் உருவாவதற்கு முன்னர் நோயாளி கட்டாயமாகத் தூங்குகிறார். அமெரிக்காவில் அறியப்படாத ஒரு அம்சம் இது.

இனி ஷங்கர்/சுஜாதாவின் அன்னியனுக்கு வரலாம். தொடர்கொலை செய்வதற்கான காரணமாக DID / MPD அறியப்படுவது அமெரிக்க குற்றவியல் வரலாற்றில் சில பத்தாண்டுகளாகவே காணக்கிடைப்பது.

சில தொடர் கொலையாளர்கள் DID / MPD-யைப் பயன்படுத்தி தண்டனையிலிருந்து தப்பிக்க முயன்றிருக்கிறார்கள். 33 இளைஞர்களைத் தொடர்-கொலை செய்த ஜான் கேசியும் DID / MPD-ஐப் பயன்படுத்தி தான் அந்தக் கொலைகளைச் செய்யவில்லை,  “ஜாக் ஹேன்லி” என்கிற மற்றொரு ஆளுமை எனச் சொல்லி தப்பிக்க முயற்சித்தான். ஆனால் தொடக்கத்திலேயே சாயம் வெளுத்துவிட்டது. ஐந்து கொலைகளை செய்த டானி ரோலிங், தான் கொலை செய்த போது “ஜெமினி” என்கிற ஆளுமையின் பிடியில் இருந்ததாகக் கூறினான். அது முழுக்க முழுக்க ஹாலிவுட் பட பாதிப்பில் அவன் விட்ட கதை என்பது உடனடியாகவே தெளிவாயிற்று. ஆனால் எவருமே DID / MPD ஐ பயன்படுத்தி விடுதலைக்கு மிக அருகாமையில் வந்ததில்லை 1977 இன் “ஹில்ஸைட் கொலைகாரன்” கென்னத் பியான்சே போல.

1977-இல் லாஸ்ஏஞ்சலஸ் பகுதியில் பெண்களைத் தொடர் கொலைகளை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். கென்னத் பியான்ஸேயும், அவனது உறவினன் ஏஞ்சலோ ப்யூனோ என்ற இருவர்தான் அவர்காள். விசாரணைக்கைதியாக இருந்த பியான்சே தான் MPD பிறழ்ச்சி உடையவன் என்று கூறினான். பியான்சேயின் வழக்கறிஞர் ஒரு உளசிகிச்சையாளரை நியமித்தார். சிகிச்சையாளர் ஜான் வாட்கின்ஸ் அவனை ஹிப்னாட்டிஸ உறக்கத்தில் ஆட்படுத்தியபோது கொலை செய்தது “ஸ்டீவ் வாக்கர்” என்கிற ஆளுமை என்று வெளிக்கொணர்ந்தார். தொடர்ந்து சில உளசிகிச்சையாளர்களும் இதை உறுதி செய்தனர். காவல்துறை சார்பில் நியமிக்கப்பட்ட உளசிகிச்சையாளர் டாக்டர்.மார்ட்டின் ஓர்னே (Dr.Martin Orne) அன்றைய ஹிப்னாட்டிச உறக்கம் குறித்த மிகச்சிறந்த அறிவியலாளர். ஒருவர் உண்மையிலேயே ஹிப்னாட்டிச உறக்கத்தில் ஆட்படுத்தப்பட்டிருக்கிறாரா இல்லையா என்பதைத் தெளிவாகக் கண்டுபிடிக்க முடிந்தவர். பியான்சே செய்வது போலித்தனமானது என்பதை நிரூபிக்க அவர் அவனை ஹிப்னாட்டிச தூக்கத்தில் ஆழ்த்தினார். அவன் ஆட்படவில்லை என்பதை அறிந்து கொண்டார். ஹிப்னாட்டிச தூக்கத்தில் இருப்பது போல நடித்த அவனிடம் “பொதுவாக MPD என்றால் இரண்டு ஆளுமைகளுடன் நிற்காதே? இன்னொரு ஆளுமையும் இருக்க வேண்டுமே?” என்றார். சொல்லிவைத்தாற்போல அதற்கடுத்த ஹிப்னாட்டிஸ செஷன்களில் மற்றொரு ஆளுமை வெளிவந்தது. இதனைப் பார்த்த பிற மனசிகிச்சையாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்தார்கள். பியான்ஸே கொலை செய்ததாகக் கூறிய ஆளுமையான ஸ்டீவ் வாக்கர் என்கிற பெயரை கைதாவதற்கு முன்பாகப் பயன்படுத்தி அவன் சான்றிதழ் வாங்கியிருந்த துறை – உளவியல்!

”பெண்ணின் மூன்று முகங்கள்” பட/நாவலின் நிஜவாழ்க்கை நாயகி க்ரைஸ் ஸைஸ்மோர் (Chris Sizemore). 1980களில் அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் (FBI) குற்றவியல் உளவியலாளர் ராபர்ட் ஹெஸ்லரால் க்ரைஸ் புலனாய்வு அதிகாரிகளிடம் உரையாற்ற அழைக்கப்பட்டார். ராபர்ட் ஹெஸ்லர் தொடர்கொலைகாரர்கள் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். (Serial killers என்கிற வார்த்தைகளை உருவாக்கியவர் இவரே. அவரது முக்கியமான பணி குற்றம் நடந்த இட்த்தில் குற்றத்தின் தன்மைகளின் தரவுகளின் அடிப்படையில் அதை செய்தவரின் உளவியல் தோற்றத்தை – ஓரளவு உடல் தோற்றத்தையும் – சித்தரிப்பது. இது மிகச்சிறந்த வித்த்தில் பல தொடர்கொலையாளர்களைக் கைது செய்ய உதவியுள்ளது.) க்ரைஸ் ஸைஸ்மோர் ஒரு விஷயத்தை புலனாய்வு அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினார்: “ஒருவரது பல ஆளுமைத் தோற்றங்களில் ஒன்றினால் கொல்ல முடியும் என்றால் பிற ஆளுமைத் தோற்றங்களாலும் அது முடியும். ஒன்று கொன்றது மற்றொன்றுக்கு தெரியாமல் இருக்கும் என்பது இயலாத ஒரு விஷயம்.”

சுருக்கமாக அன்னியனுக்கு DID/MPD அடிப்படையில் விடுதலை கிடைத்திருக்காது.