AT-560 வகை ரோபோ பணிபுரியும் ஆயுவுக்கூடம். SETI (Search for Extra Terrestrial Intelligence) ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது அந்த ஆய்வுக்கூடம். செயற்கை கோள்களில் இருந்து வரும் ரேடியோ தொடர்களை ஆராய்ந்து, அதில் மனித இனத்துக்கு தெரியாத வகைப்பாடு (pattern) இருக்கிறதா, அந்த வகைப்பாடு வேற்றுக்கிரகவாசிகளிடமிருந்து வந்திருக்க சாத்தியம் உண்டா என்று ஆராயும் வேலை. கி.பி.3100 ஆகிவிட்டது. இன்னும் உருப்படியான ஒரு தடயம் கூட கிடைக்கவில்லை. இத்தனைக்கும் இப்போது இருக்கும் தொழில்நுட்பம் போன நூற்றாண்டின் அறிவியல் புனைகதை எழுத்தாளர்களின் கற்பனையை கிட்டத்தட்ட நிறைவேற்றியிருந்தது. AT-560 வகை ஹைப்ரிட் ரோபோக்கள் சிந்திக்கும் திறன் பெற்றவை. ரோபோக்களின் உள்ளே இருக்கும் மென்பொருளின் கணிசமான பங்கு அந்த ரோபோக்களாலேயே எழுதப்படுபவை. மென்பொருளை on-the-fly-இல் கழற்றி மாட்டாமல், மாற்றக்கூடிய சாத்தியமும் உண்டு. மேற்சொன்ன ஆய்வுக்கூடத்திலிருந்து ஒரு ரோபோட் வெளிவந்து வாகன நிறுத்துமிடத்திலிருந்து ஷட்டில் ஒன்றை எடுத்துக்கொன்டு அபார்ட்மெண்ட் நோக்கி பறந்தது. கீழே தரையில் ஒரு விபத்து. இளைஞன். 15 வயது இருக்கும். ரோபோவால் மேலே இருந்து லேசாகப் பார்க்க முடிந்தது. ஷட்டிலை தானியங்கி நிலையில் போட்டுவிட்டு டெலெஸ்கோப் வழியாகப் பார்த்தது.
ரத்தம். சிதறிய சதைத்துணுக்குகள். தலையில் அடிபட்டு மூளை சிதறி இருந்தது. அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தவுடன் நேரடியாக digital library சென்று இம்மானுவேல் காந்தின் ’Critique of pure reason’-ஐ விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்தது. தற்செயலாக காலை நகர்த்தும்போது கீழே பார்த்தால் நாலைந்து எறும்புகள் இறந்து போயிருந்தன. கொஞ்சநேரம் எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருந்தது.
“என் காலில் மிதிபட்டு இறந்திருக்கின்றன. ஒரு இறப்புக்கு நான் சாட்சி. மற்றொன்றுக்கு நானே காரணம். ஒரு இளைஞன். ரோட்டில் போய்க்கொண்டு இருக்கிறான். எதிரே வந்த ‘goods-only autodriven’ வண்டி மோதி சாகிறான். ஒரு கணத்தில் இருக்கிறான். அதற்கு அடுத்த கணத்தில் இல்லை. அவன் உயிரோடு இருப்பதற்கும் இல்லாததற்குமான இடைவெளி அந்த ஆட்டோவில் உள்ள மென்பொருள் கோளாறு. இல்லை எவனோ ஒருவனின் கவனக்குறைவு. இந்த எறும்பு, இது உயிரோடு இருப்பதற்கும் இறப்பதற்குமான இடைவெளி நான் தரையில் கால் வைப்பதும், வைக்காததும். அல்லது நான் தரையில் கால் வைத்தாலும், காலைத் தேய்ப்பதும் தேய்க்காமல் இருப்பதும். என்ன விதமான உலகம் இது? வாழ்க்கை அவ்வளவுதானா? எந்த நேரத்திலும் போகக்கூடியதா? ஏன் படைக்கப்பட்டோம்? In God we Trust என்று பழைய பண நோட்டுகளில் எழுதி இருப்பதாகக் கேள்வி. உண்மையில் அப்படி ஒருவன் இருக்கிறானா? நாம்தான் படைக்கிறோம். ஹைப்ரிட்கள் அதற்கான மென்பொருளை அவைகளே எழுதுகின்றன. மனிதனோ நாய், பன்றி, கழுதை போன்ற பிற பாலூட்டிகளைப்போல் இனப்ப்பெருக்கம் செய்கின்றான். வேறு என்ன செய்கிறோம்? பிரபஞ்சத்தை அறிய முயற்சி. மண்ணாங்கட்டி. ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தாலே சரி என்றுதான் தோன்றுகிறது. என்ன வித்தியாசம்? ஒன்றும் இல்லை. நான் SETI ஆய்வுக்கூடத்தில் வேலை பார்க்கிறேன். அந்த ஆய்வுக்கூடத்தில் ஒரு கழிவறை இருக்கிறது. அதை சுத்தம் செய்யும் ரோபோவிற்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? எதற்கு இருக்கிறோம்? இந்த உலகமே ஒரு அபத்தமா? absurd piece of crap? oh God, தலைவலி… I need a painkiller.”
கி.பி 2045: February
அதிகாலையிலேயே யூனிவர்ஸிட்டிக்கு வந்திருந்தான். இன்றிலிருந்து ஆறு மாதம் sabbatical. விருப்பப்படி எந்த ப்ராஜெக்ட் வேண்டுமென்றாலும் செய்ய ஹெட் அனுமதி அளித்திருந்தார். அந்த நரம்பியல் நிபுணருடன் AI சம்பந்தமாக சேர்ந்து செய்யவேண்டும் என்பது இவனின் யோசனையாக இருந்தது. “மனிதன் எப்படி சிந்தனை செய்கிறான்? மூளை அதற்கு எவ்வாறு உதவுகிறது? சிலிக்கான் நியூரான்களை உருவாக்க முடியுமா? என்ற ரீதியில் பார்க்க வேண்டும்”. ஹெட்டிடம் விருப்பத்தைக் கூறினான். அவர் டாக்டரிடம் பேசிப் பார்ப்பதாகவும், அவரின் சம்மதம், இருப்பு பற்றி கேட்பதாகவும் சொன்னார். இரண்டு நாட்களில் டாக்டரின் சம்மதம் கிடைத்தது. “அவரும் இந்த ஆய்வில் உற்சாகமாகத்தான் இருக்கிறார். நீ என்று சொன்ன உடன் இரட்டை உற்சாகம். ஏற்கனவே ரிசல்ட் கொடுத்தவன் என்பதால். பரிசின் ஆசை அவர் பேச்சில் ஒழுகியது.ஆனால் நீ ரிசல்ட் பற்றி கவலை கொள்ள வேண்டாம். இஷ்டம் போல் செய்” – ஹெட் கூறியது.
கி.பி 2046: December
“கூடியிருக்கும் பேராசிரியர்களே, விஞ்ஞானிகளே, இன்று நாம் சாட்சியாய்ப் பார்த்துக்கொண்டிருப்பது இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய நிகழ்வாக அறியப்பட வாய்ப்பு அதிகம். சமீப காலத்தில் இது ஒரு unprecedented achievement. இதற்கு கொஞ்சம் பக்கத்தில் வருவது டோலி ஆட்டுக்க்குட்டி உருவாக்கம். ஆனால் தற்போதைய சாதனையின் வீச்சு டோலியின் உருவாக்கத்தை விட பன்மடங்கு அதிகம். சாத்தியத்தின் எல்லைகள் நமக்கே இன்னும் முழுமையாகத் தெரியாத நிலை. சிலிக்கான் நியூரான்கள் – மனித மூளையில் உள்ள நியூரான்கள் செய்யும் வேலையைச் செய்யும், ஆனால் அதை விடப் பன்மடங்கு வேகத்தில் வேலை செய்யும் – நியூரான்கள் உருவாக்கப்பட்டு விட்டன. what will it lead to?
எனக்கு சரியாகத் தெரியவில்லை. இது ஒரு exciting science fiction போல் இருக்கலாம். ஆனால் நம் எல்லோருக்கும் வெளிப்படையகத் தெரியும் சாத்தியம், மனித மூளையின் பிரதி. மனித மூளை அசுர வேகத்தில் இயந்திரத்தின் தலையில். வருங்காலத்தில் மனிதனுக்கும் இயந்திரத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் போகலாம். ஆனால் இப்போது நிகழ்ந்நிருப்பது மிக அடிப்படையான, அதாவது ஒரு புதிய அறிவியலில் நடந்துள்ள மிக அடிப்படையான ஒரு உருவாக்கம். ஒரு கண்டுபிடிப்பு. இந்த அறிவியலை உபயோகப்படுத்தத் தக்க தளத்திற்கு கொண்டு செல்வதற்கு, இன்னும் அதிக வேலை, மெனக்கெடல் பாக்கி இருக்கறது. நண்பர்களே இந்த நிகழ்வுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் நமது ஆராய்சி மாணவர். அவருக்கு பெரிதும் உதவியவர் நமது நியூராலஜிஸ்ட். அவர்களுக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்” ஹெட் உரையை முடித்துக்கொண்டு இரவு விருந்து ஏற்பாடாகி இருந்த அறையை நோக்கிச் சென்றார். அனைவரும் ஆராய்ச்சி மாணவனையும் டாக்டரையும் கைகுலுக்கி பாராட்டிவிட்டு விருந்து அறையை நோக்கிச் சென்றனர். விருந்து முடிந்து காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான். “பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம். டாக்டர் தான் உயிரை விட்டுவிடுவார் போலிருக்கிறது.”
சாலையில் ஒரு விபத்து. எறக்குறைய 15 வயது உள்ள ஒரு இளைஞன். ரத்தம். சதைத்துணுக்குகள். மூளை சிதறியிருந்தது. வீட்டிற்குச் சென்றவுடன் படிக்கும் அறைக்குச் சென்று Schrödinger எழுதிய ‘what is life’-ஐ விட்ட இடத்தில் இருந்து படிக்க ஆரம்பித்தான். தற்செயலாக காலை நகர்த்தும் போது கீழே பார்த்தால் நாலைந்து எறும்புகள் இறந்து போயிருந்தன. கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் உட்கார்ந்திருந்தான். ஒரு சிகெரெட் பற்றவைத்தான்.