உலைகலனாகுமா தமிழகம்? – இறுதிப் பகுதி

குடிபெயர்ந்து வாழும் தொழிலாளிகள் குறித்த புரிதல், அவர்களும் நம் சமுதாயத்தின் அங்கத்தினரே என்ற தெளிவு பரவலாக உணரப்பட வேண்டும். அதை உணர்த்துவதற்கான சிறு துவக்கமே இனி நாம் பேசப்போவது.

ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்து பெருமளவிலான மக்கள் இலங்கை தொடங்கி தெற்காசிய தேசங்கள், அரபிய நாடுகள், ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் என்று பிழைக்க வழி தேடிப் போனார்கள். இதில் தமிழர்களும் அடக்கம். காலனிய ஆட்சியில் துவங்கிய இந்த குடிபெயர்ப்பு நம் நாடு விடுதலையடைந்த பின்னும் தொடர்ந்தது.

கேரளம் குடிபெயர்ந்த மக்களின் உழைப்பால் பொருளாதார வலுப்பெற்ற மாநிலங்களில் ஒன்று. வளைகுடா நாடுகளில் கேரள மக்கள் உழைத்து ஈட்டிய செல்வம், கேரளத்தில் ஆடம்பரமான மாளிகைகளைக் கட்ட உதவியது, பணப் புழக்கத்தை அதிகரித்தது. ஆனால் கேரளத்தில் செல்வாக்கு செலுத்திக் கொண்டிருக்கும் அரசியல் கோட்பாடுகளின் காரணமாக இந்த உழைப்பு தொழில் முதலீடாக மாறவில்லை. இதில் ஒரு சங்கடமான முரண் என்னவென்றால், தம் மாநிலத்தில் எந்த முதலீட்டையும் செயல்பட விடாமல் அடித்த அரசியலில் பங்கெடுத்தவர்களே, வெளிநாடுகளில் எந்த உரிமைகளுமற்ற அடிமை வாழ்வுக்குத் தம்மைத் தயாராக வைத்திருந்ததுதான். உள்நாட்டில் சாதாரணப் பொருளாதார நடவடிக்கைகளில் கூட ‘சம உரிமை’ என்ற பெயரில் செயலின்மையையும், உழைப்பை எதிர்ப்பதையும் வழக்குமுறையாகக் கொண்ட அரசியலியக்கங்கள் வெளிநாடடில் அடிமைகளாகத் தம் மக்கள் போய் முடங்குவதை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத அற்பத்தனத்துடன் இயங்கியதுதான். இந்த அரசியல் இன்னமும் அங்கு விற்பனை ஆகிறது என்பது அதை விடப் பேரவலம்.

மேற்கு வங்கத்திலும் இதுதான் நடந்தது. அரசியல் கொள்கைகள் காரணமாக தொழிற்துறை முடங்கிக் கிடந்த நிலையில் ஓரளவு படித்த வங்காளிகள் கூட வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் வேலை வாய்ப்பை நாடியும் வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்ளவும் சென்றனர். இதர வங்கத் தொழிலாளர்கள் ஆளும் அரசின் செல்லப் பிள்ளைகளாய் உற்பத்தியைப் பெருக்காமலேயே உண்டி பெருக்கி ஒரு வகையில் வீணான வாழவு வாழ்ந்தனர். அடிமட்ட வேலைகளையோ, பீகாரிலிருந்தும் ஏனைய அண்டை மாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள் செய்து கொடுத்தனர். செல்வமும் உழைப்பும் எதிர்காலத்தைக் கைகொள்ளக்கூடிய மூலதனமாக மாற்றப்படாமல் விரயம் செய்யப்பட்டால் எப்படிப்பட்ட இழப்புகள் ஏற்படும் என்பதற்கு இந்த மாநிலங்களை உதாரணமாகக் கூறலாம். ஒரு காலத்தில் இந்தியாவின் தொழில துறைகளில் கணிசமான பகுதியைக் கொண்டிருந்த கல்கத்தா மாநகரில் இன்று துருப்பிடித்த கதவுகளால் மூடப்பட்டுக் கிடக்கும் பல நூறு தொழிற்சாலைகள் நிறுவனங்களையே காண முடிகிறது. இரண்டு தலைமுறை இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலையை ஏற்படுத்தி அவர்களையும் துருப்பிடித்த மனிதர்களாக ஆக்கிய பெருமை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிகளையே சாரும். நாற்பது ஆண்டுகள் ஆட்சியில் இருந்து குன்றாக இருந்த வங்கத்தைக் குறும்பையாக ஆக்கியிருக்கிறது மார்க்சிஸ்டு ஆட்சி. குந்தித் தின்றால் குன்றும் கரையும்தானே? உழைப்பையே எதிர்க்கும் ஒரு கருத்தியலால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?

சென்ற நூற்றாண்டின் கணிசமான பகுதி வரை, தமிழகத்திலிருந்தும் கூட இவ்வகையில் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தில்லி போன்ற மாநிலங்களுக்குப் படித்தவர்களும் தொழிலாளர்களும் குடிபெயர்ந்தார்கள். அங்கு தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டனர், அந்த மாநிலங்களின் வளர்ச்சியில் பெரிய அளவில் நம்மவர்களின் பங்களிப்பு இருந்தது, இருக்கிறது.

பம்பாய் மாகாணம் (presidency என அழைக்கப்பட்டது). அந்த அமைப்பு மஹாராஷ்ட்ராவாகவும், குஜராத்தாகவும், மேலும் சில சில்லுகளாகவும் உடையுமுன், தமிழர்கள் பம்பாய், சூரத், ஆமதாபாத் போன்ற நகரங்களுக்குத் தொழிற்சாலைகளில் வேலை செய்யவெனக் குடி பெயர்ந்தார்கள். தவிர பம்பாய் மற்றும் குஜராத்தின் துறைமுகங்களைச் சுற்றி வேறு வகைப் பாட்டாளிகள் கூட்டம் குவிந்தன, இது உலகெங்கும் நடக்கும் விஷயம்தான். துறைமுகத் தொழில்களிலும் கட்டுமானத் துறைகளிலும் அன்றாடக் கூலி வேலையில் இவ்வாறு குடிபெயர்ந்தவர்கள் தம் உழைப்பைத் தந்தனர். இவர்களோடு துறைமுகங்களில் இயல்பான கடத்தல் தொழில், குற்றங்கள் செய்யும் ‘தொழில்’ ஆகியனவற்றுக்கும் நாடெங்கிலும் இருந்து வறியவர் கூட்டம் குடிபெயர்ந்தது. பம்பாயின் பரந்த சேரிகளில் தமிழ்த் தொழிலாளர்களும், இதர உதிரிகளும் சேர்ந்ததற்கு இந்தத் ‘தொழில்’ மயமாதல் ஒரு காரணம். ஹாஜி மஸ்தான்கள் இந்தக் கூட்டங்களிலிருந்துதான் எழுகிறார்கள். [வரதராஜன் என்ற தமிழகத்தைச் சேர்ந்த ‘தாதா’ பம்பாயில் சில காலம் வளர்ந்து ஆதிக்கம் செலுத்தினார் என்று கேள்விப்பட்டிருப்பீர்களே?]

ஒப்பீட்டில், பெங்களூர் மற்றும் கர்நாடகத்தில் தமிழர் குடியேறிய விவகாரம் சற்று மாறுபாடானது. அங்கு தொழிற்சாலைகள் என்று அதிகம் இல்லை, ஆனால் விஸ்வேஸ்வரய்யா என்ற ஒரு ஊக்கமிக்க அரசுச் செயலாளரின் கட்டுமானத் திட்டங்களில் நிறைய உதிரித் தொழிலாளர்கள் பங்கெடுக்க நேர்ந்தது. அப்போது கணிசமான அளவில் தமிழர் கூலிகளாகவும், கட்டிடத் தொழில் வல்லுநர்களாகவும் போயிருப்பார் என்று ஊகிக்கலாம். வேறு எதற்காகவெல்லாம் அங்கு தமிழர் சேர்ந்தார்கள்? கேட்கவேண்டும். கோலார் பகுதியில் சுரங்க வேலைக்குத் தமிழர் போனார்கள். தவிர HAL, BEL போன்ற நிறுவனங்கள் துவங்கப்பட்டதும் தொழிலாளர் அங்கு சென்றதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பட்டு, சந்தனம் போன்ற மூலப் பொருட்களை வைத்துத் துவங்கப்பட்ட தொழிற்சாலைகளும் இடம் கொடுத்தனவா என்று கவனிக்க வேண்டும். பொதுவாகக் கட்டுரைகளில் காணக் கிட்டுவது, தமிழ்த் தொழிலாளிகள் பெருமளவும் உதிரிப் பாட்டாளிகளாகவும், கட்டிடத் தொழிலில் தினக் கூலிகளாகவும்தான் இடம் பெயர்ந்திருக்கிறார்கள் என்ற தகவலே.

ஆந்திராவில் சுரங்கங்கள், விவசாயம், பின் பல மத்திய அரசுத் தொழிற்சாலைகள் ஆகியன காந்தமாகச் செயல்பட்டன. தவிர தமிழ் தொழிலாளர் சமூகங்களில் நிறைய தெலுங்கு, கன்னட மூல உறவுகள் இருந்திருக்க வேண்டும். தில்லி, கல்கத்தா போன்ற இடங்களுக்குப் போனவர்கள் பெருநகரங்களுக்கு என்று குடி பெயர்ந்தவர்கள் எனக் கருத இடமுண்டு. இவை எல்லாம் 1930 இலிருந்து துவங்கி 70-80 வரை நடந்த இடம் பெயர்தல். இன்று இது எதிர் திசையில் நடக்கிறது.

இந்தியாவில் இவ்வாறு ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குக் குடி பெயர்ந்தவர்கள் அங்கு இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்ற கசப்பான உண்மையைச் சொல்லியே ஆக வேண்டும். மொழியை முன்வைத்து இவர்களுடைய நியாயமான உரிமைகள் மறுக்கப்பட்டன, இன்னமும் இது நடக்கிறது. கர்நாடகா, மற்றும் மகராஷ்டிராவில் தமிழர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன- இப்போதும் இதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. தமிழர்கள் என்றில்லை, நாடெங்கும் வேற்று மொழி பேசுபவர்கள் அந்நியர்கள் என்ற அடையாளத்திலிருந்து தப்ப வழி இல்லாமல் அனைத்து உரிமைகளும் சட்டத்தில் இருந்தும், நடப்பில் இரண்டாந்தரக் குடிகள் என்ற நிலையை ஏற்று வாழ வேண்டியக் கட்டாயத்தில் உள்ளனர். இவை எல்லாமே மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்ட ஒரு தவறான முடிவாலே விளைந்தவை என்பது பின்னோக்கினால் தெளிவு. உலக அரங்கில் இன்று எங்கும் அடையாள அரசியல் என்பது ஏதோ மேலையர் கண்டுபிடிப்பு என்பது போல முழங்கப்படுகிறது. இந்தியர் இந்த அடையாள அரசியலை பன்னெடுங்காலமாகவே நடத்தி வந்திருக்கிறார். காலனியப் பாதிப்பில் இந்த அடையாள அரசியல் இந்தியரை என்னென்னவோ விதங்களில் எல்லாம் உடைத்துச் சில்லுகளாக, எளிதில் பொருந்தா துண்டுகளை இணைத்த படமாக ஆக்கி வைத்திருக்கிறது.

இந்த இடம் பெயர்ந்தோர் பிரச்சினை இந்தியாவுக்கு மட்டும் தலைவலியாக இருக்கிறதென்று கருத வேண்டாம். இந்தியா, இந்தியர் என்ற அடையாளங்களை வைத்து நோக்கினால் இதுவரை பேசியதெல்லாம் உள்நாட்டுக் குடி பெயர்ப்பின் பிரச்சினைகள் என்றே இனம் காணப்படும். மாநிலக் களன்கள், மொழி அடையாளங்களை வைத்து நோக்கினால் இவை வெளி நோக்கிய குடிபெயர்ப்பு (outmigration) என்று பார்க்கப்படும். உலகளவிலும் இந்தக் குடிபெயரும் மக்களின் பிரச்சினைகள் இன்று வரலாற்றில் இதுவரை காணாத அளவு பெரிதாகி இருக்கிறது. ஒரு காரணம் இன்று உலகம் ஒரு இணைக்கப்பட்ட பெரும் சந்தையாக மாறி வருகிறது, பொருட்கள் எளிதில் நாடு விட்டு நாடு போகின்றன, மக்கள் பொருட்களை விடவும் எளிதில் இடம் பெயர வாகன வசதிகள் உள்ளன. அதிகாரிக் கூட்டங்கள் மட்டும் பல நாடுகளிலும் மக்கள் எளிதில் இடம் மாறிப் பொருந்தாமல் காத்துக் கொண்டிருக்கின்றனர். இடம் பெயர்பவர்கள் வைக்கோல் போரைக் காக்கும் நாய் என்று இந்த அதிகாரிக் கூட்டங்களைப் பார்த்தாலும், உண்மையில் இந்த அதிகாரிகள் பெருமளவும் உள்ளூர் வாசிகளின் அன்னிய எதிர்ப்பு மனோபாவத்தைத்தான் பிரதிபலிக்கிறார். மனிதர் உலகெங்கும் சிறுகுழுக்களில் வசிப்பதையே திறம்படச் செய்கிறார். எப்போதும் அலைப்பில் இருக்கும் பெரும் சமுதாயங்கள் நிறைய மனிதர்களை அரற்றுகின்றன, அவர்களைத் தாம் பொருளற்ற கொசுப் போன்ற சிறு பிறவிகலெனக் கருதி விரட்டுகின்றன. எனவே அம்மக்கள், பெரும் கூட்டங்கள் சேர்வதற்கில்லாத சிறு நகரங்கள் அல்லது சிறு சமுதாயங்களையே தம் இருப்பிடங்களாக ஆக்க வேண்டியிருக்கிறது. அவற்றையே ஆதர்சமாகக் கொண்டு அதை அரசியலாக்குகின்றனர் என்று கருத வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் அலைப்புற்று வாழும் உழைப்பாளர் கூட்டங்களுக்கோ பெருநகரங்களே புகலிடம் தருகின்றன. இருந்தும் இந்த அலைப்பில் வாழும் மனிதரைக் கேட்டால், அவர்களுமே முன்சொன்ன அன்னியரை அதிகம் விரும்பாத சிறு குழு, சிறு நகர வாழ்வையே விரும்புவர் என்பது ஒரு நகைமுரணே.

இந்த பீதி முற்றிலும் அழிக்கப்படக் கூடியதல்ல. ஆனால் பெரும் அழிப்பு வெறியாக மாறாமல் தடுக்கப்படக் கூடியது. பன்னாட்டு உறவுகளும், வர்த்தகமும், ஊடகங்களும், உற்பத்தி/ விற்பனை நிறுவனங்களும் வளர வளர ஓரளவு கலப்பாக உருவாக்கப்பட்ட மனிதர்களின் கூட்டம் பெருகும், இதனால் சிறுகுழு நாட்டம் உள்ளொடுங்கும், பிளவு அரசியலின் ஈர்ப்பும் வலுவும் குறையும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

இங்கு சில நாடுகளில் குடிபெயர்வோரின் பிரச்சினைகள் எப்படி இருக்கின்றன என்று கவனிக்கலாம்.

குடிபெயர்ந்தோர் வளர்ச்சிக்குத் தரும் பங்கீட்டைப் பற்றிப் பேசும்போது நாம் சீனாவின் பிரமிக்கத்தக்க வளர்ச்சியைத் தொடாமல் இருக்க முடியாது. இன்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தேசங்களுக்கு சவால் விடக்கூடிய அளவுக்கு அசுரத்தனமான பிரம்மாண்ட உருத்தோற்றம் அடைந்திருக்கிற நாடாக சீனம் இருக்கிறது என்றால் மிகையில்லை. ஆனால் இந்த வளர்ச்சியின் முதுகெலும்பு, சீனாவின் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு கட்டாயமாகக் குடி பெயர்க்கப்பட்ட தொழிலாளர்கள்தான். இன்று சீன நகரங்களில் இவர்களின் எண்ணிக்கை பதின்மூன்று கோடி- இவர்களுக்கு எந்த சமூகப் பாதுகாப்பும் கிடையாது- வேலைக்கான உத்திரவாதம் இல்லை, வேலை போனால் வருமான இழப்பு ஈடு செய்யப்படுவதில்லை, குறைந்த சம்பளத்துக்கும் ஓய்வூதியத்துக்கும் உழைக்கிற இவர்களுக்கு இன்று மருத்துவக் காப்பீடுகளும் குறைந்த அளவே உள்ளன. இவர்களுடைய குழந்தைகள் தம் பெற்றோரைப் பிரிந்து வளர்கின்றனர். சீனாவின் கிராமவாசிகள், சீனப் புத்தாண்டை ஒட்டி மட்டுமே நகரங்களை விட்டுத் தங்கள் ஊருக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரே சமயத்தில் பதின்மூன்று கோடி சீனர்கள் பெரும்பாலும் ரயிலில் ஊர் திரும்பும் இந்த நிகழ்ச்சியை உலகின் மாபெரும் குடிப்பெயர்வு என்றே சொல்லலாம். அண்மையில் வெளி வந்து பல விருதுகளை வென்ற ‘Last Train Home’, இந்தப் பெரும் இடம் பெயர்ச்சி பற்றிய ஒரு குறிப்பிடத்தக்க ஆவணப் படமாக இருக்கிறது. தொழிலாளர்களே முன்னிலையில் இருந்து நடத்தும் அரசு என்று இந்திய இடதுசாரியினர் சீனாவை இந்தியருக்கு முன்மாதிரியாக வைத்து பல பத்தாண்டுகள் அரசியல் இயக்கங்கள் நடத்தியதை இங்கு நினைவு படுத்த வேண்டி இருக்கிறது. அங்கும் தொழிலாளரின் உழைப்பை உறிஞ்சிய அமைப்பு அவர்களை வஞ்சிப்பதையே இயல்பாகச் செய்கிறது. இன்று உலகரங்கில் தான் ஒரு வல்லரசு என்பது போல இயங்கத் துவங்கி இருக்கும் சீனா மட்டுமல்ல, அமெரிக்காவும், ரஷ்யாவும், ஃப்ரானஸும், ஜெர்மனியும், இங்கிலாந்தும் தம் நாட்டின் வளங்களை மேலெழுப்பிய உள்நாட்டு குடிபெயர் உழைப்பாளரையும் சரி, பன்னாட்டுக் குடியேறிகளையும் சரி சம உரிமைகளை மறுத்தே நடத்தி வந்திருக்கின்றன. இதில் முதலியம், சோசலிசம் என்றெல்லாம் வேறுபாடு அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை.

சீனாவின் வளர்ச்சிக்கு தூண்களாய் இருந்த இந்தத் தொழிலாளர்களுக்கு மொழி தொடர்பான பிரச்சினைகள் இல்லாததாவது ஒரு வசதி. ஆனால் அந்த ஆறுதலும் நம்மவர்களுக்கு இல்லை. போதாக்குறையாக, மொழி அரசியல் வேறு அடையாளங்களை வைத்துப் பிளவை வலியுறுத்தித் தம்மைக் கொழுக்க வைத்துக் கொள்ளும் அரசியலாளரால் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது.

இன்று நிலைமை மாறுகிறது என்ற மெல்லிய நம்பிக்கையைத் தமிழகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் உணர்த்துகின்றன. உலகெங்கும் பரவியுள்ள தமிழரின் கூட்டம் ஓரளவு தன் பார்வையையும் பரந்துபட்டதாக மாற்றிக் கொள்ள ஆயத்தமாகி வருகிறது. இருபது-முப்பது லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கேரளத்துக்கு அடுத்தபடி இவர்கள்தான் அதிக அளவில் தாயகத்துக்குப் பணம், 41,400 கோடி ரூபாய், அனுப்புகிறார்கள். கனடாவில், ஆஸ்திரேலியாவில், அமெரிக்காவில், பிரிட்டனில் – இந்த தேசத்தின் வளர்ச்சியில் எங்களுக்கும் பங்கிருக்கிறது, இந்த தேசம் எங்களுக்கும் உரியது என்றுப் போராடுகிற தமிழர்கள், தங்கள் தாயகத்தில் குடியேறுபவர்களின் உரிமைக்கு மறுப்பு தெரிவிக்க நியாயமில்லை. உலகமயமாக்கமும், தாராளமயமாக்கமும் திறந்து வைத்தப் பாதையில் நாம் மட்டும் முன்னேறவில்லை. நம் முன்னேற்றத்தில் இவர்களும் பங்கேற்க விரும்பி வந்திருக்கிறார்கள். மொழி வெறியர்களாக இதுவரை சித்தரிக்கப்பட்ட திராவிட இயக்கத் தலைவர்களும், பொருளாதார முன்னேற்றத்தாலேயே வாழ்வாதாரங்கள் வென்றெடுக்கப்படும் என்ற உண்மையை உணர்ந்தவர்களாய் காலத்தின் தேவைக்கேற்ப தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எந்த மொழியும் தனியாக வளர்ந்து பெரிதாவதில்லை, பல மொழிக் கூட்டுறவில் கிட்டும் வளம் தனிமையில் இல்லை என்பதைத் தமிழரும், தமிழுலகும் ஏற்கும் நாள் வரும் என்று தோன்றுகிறது.

மீண்டும் ஒரு முறை முன் சொன்ன ஜனத்தொகைப் புள்ளி விபரத்தை நினைவு கூர வேண்டியிருக்கிறது: வயதானவர்கள் கூடுதலாக உள்ள மக்கள் திரளுக்கு உழைப்பாளரின் தேவை அதிகமாகவே இருக்கும். இருக்கும் இளைஞர்களில் பெரும்பான்மை தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியால் உந்தப்பட்டு நல்ல கல்வியைப் பெற்றிருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால், அப்படிக் கல்வி அறிவு முன்னேறிய நிலையில், எதிர்காலத்தில் உடலுழைப்பை நல்கி வாழும் தொழிலாளிகள் எங்கிருந்து வரப போகிறார்கள்?

மக்கள் தொகைப் பெருக்கம் என்ற ஒரு அம்சத்திலாவது தமிழகத்தின் நிலை ஐரோப்பா, அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் நிலையை ஒத்திருக்கிறது என்பது இந்த விபரங்களைப் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது. அது மட்டுமில்லை, அவர்களைப் போலவே, வயது முதிர்ந்த ஜனத்திரளைக் கொண்ட மாநிலம் என்ற அளவில் தமிழகத்தின் தொழிற் முன்னேற்றம் அண்டை மாநிலங்களில் இருந்து இங்கு குடிபெயர்ந்து வருபவர்களின் உழைப்பைச் சார்ந்து இருக்கப் போகிறது. திருப்பூர் ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளில் இலங்கையைச் சேர்ந்த சிங்கள நிர்வாகிகளும் சிவகாசியில் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்தவர்களும் இதன் ஆரம்ப அறிகுறிகள். திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் இருக்கிற செங்கற்சூளைகளில் வேலை செய்பவர்கள் ஏறத்தாழ முக்கால்வாசிபேர் வெளியிலிருந்து வந்தவர்களே- நூற்றுக்கு ஐம்பது பேர் ஆந்திராவில் இருந்தும், இருபது பேர் ஒரிஸ்ஸாவில் இருந்து, ஐந்தில் இருந்து பத்து பேர் சத்தீஸ்கார் மற்றும் ஜார்கண்டைச் சேர்ந்தவர்கள். இதில் நாம் இன்னும் வடகிழக்கு மாநிலங்கள், இமாசலப் பிரதேசம், காஷ்மீர் போன்ற மாநிலத்துத் தொழிலாளர்கள் தமிழகமெங்கும் இன்று காணப்படுவதைப் பற்றிப் புள்ளி விவரங்களில் பார்க்கவில்லை, ஏனெனில் இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர் குறித்த தகவல்களைச் சேகரிப்பது அவ்வளவு எளிதுமல்ல.

இந்தப் புள்ளி விபரங்கள் உண்மையாக இருப்பின், இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளில் தொடர்ந்து நம்மவர் அன்னியர் என்ற பார்வையையே தமிழக அரசியலாளரும், சமுதாயமும் கொண்டிருந்தால் அதன் விளைவாகத் தமிழகம் பெருநெருப்பாய் மாறும். கோவையில் இன்று நடப்பது இந்த எரியூட்டலுக்கு ஒரு சிறு முன்னோடிப் பொறிதான். அச்சத்துக்கும் அவநம்பிக்கைக்கும் இடம் கொடுத்து தொழில் முன்னேற்றத்தில் ஏற்படக்கூடிய பின்னடைவையும் அதை ஒட்டி எழக்கூடிய வேலையின்மை முதலானப் பொருளாதார மற்றும் சமுதாய சிக்கல்களையும் ஏற்கப் போகிறோமா? அல்லது அடையாளங்களைப் புறக்கணிக்கக் கற்றுக் கொண்டு, உழைப்பாளியின் உழைப்புக்கு மதிப்பு கொடுத்து, அவருக்கு உரிய இடம் தந்து அவரது உழைப்பைக் கௌரவித்து அவர்களோடு சேர்ந்து அனைவருமே வளமான வாழ்வை நோக்கி முன் செல்லப் போகிறோமா?

உலகில் இதுவரை உழைப்புக்குப் போதிய நீதி கிடைத்ததில்லை என்பதுதான் வரலாறு நமக்குப் புகட்டும் பாடம். உழைப்பவர் களைத்துப் போய் தனக்குரியக் கூலியைக் கோரி வரும்போது மட்டும் எங்கிருந்தோ சாதி, சமயம், இனம், மொழி, கொள்கை, கோட்பாடுகள் என்ற ஒட்டுண்ணிகள் அவர் ரத்தத்தைக் குடிக்கக் கிளம்பி வந்து விடுகின்றன. அனைத்து சமுதாயங்களிலும், அனைத்து அரசியல் அமைப்புகளிலும் இதுவரை இவ்வாறுதான் நடந்திருக்கிறது. அவரது இருப்பும், உரிமைகளும் சட்டகத்தில் வரையறுக்கப்படாத நிழலால் இருட்டடிக்கப்பட்டு, அவர்களுக்கு உரியன எல்லாம் சட்டத்தில் பெயரளவில் கொடுக்கப்பட்டு, நடப்பில் பறிக்கப்பட்டே வந்திருக்கின்றன.

இன்றும் உடல் உழைப்பைத் தவிர வேறறியாதவர்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் நம் சட்டம் வழங்கவில்லை: உணவு முதற்கொண்டு கல்வி, ஆரோக்கியம் வரையிலான அனைத்துத் தேவைகளையும் இவர்கள் தங்கள் அன்றாட உழைப்பைக் கொண்டே நிறைவு செய்து கொள்ள வேண்டும். மொழி தெரியாத இடத்தில், வேற்றாரிடை ஒன்றாய்க் கூடியிருந்து இன்ப, துன்பங்களைத் தம்மிடையேப் பங்கு போட்டுக் கொண்டு, தங்கள் தேவைகளைக் குறுக்கிக் கொண்டு, தூரத்தில் இருக்கிற தம் பெண்டு பிள்ளைகளுக்குப் பணம் அனுப்புகிற குடிபெயர் உழைப்பாளிகள் நிலைமை இன்னமும் பரிதாபத்துக்குரியது.

உள்ளூர்வாசிகளாகப் பார்க்கப்படும் மக்களுக்குத் தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு அரிசி, இலவசத் தொலைகாட்சி, கவனிக்க வேண்டியவர்களை கவனித்தால் இலவச மின்சாரம், மாதம் பத்து நாள் வேலை என்ற பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய், என்று பல சலுகைகள். இது அடையாள அரசியலின் ஒரு கூறுதான். அதே நேரம், தமிழகத்திலேயே உடல் உழைப்புக்கு ஆளே இல்லை என்றும் குறை சொல்லப்படுகிறது. இங்கு சாலை முதற்கொண்டு தமிழனின் அடையாளமாக இருக்கக்கூடிய சட்டமன்ற வளாகம் வரை முகம் தெரியாத, நிழல் உலகில் சஞ்சாரிக்கும் குடிபெயர் உழைப்பாளிகளின் வியர்வையில்தான் சமைக்கப்படுகின்றன. அதே நேரம் முரணாக அண்டை மாநிலங்களில் கட்டிடத் தொழிலாளராகவே பெருவாரித் தமிழ் குடிபெயர்ந்த தொழிலாளிகள் போயிருக்கிறார்கள் என்ற தகவலும் ஆவணங்களில் கிட்டுகிறது. அந்தத் தொழிலாளிகளுக்குத் தமிழ் நாட்டுக் கட்டுமானத் தொழிலில் ஏன் இடம் கிட்டவில்லை என்பதை அறிய நாம் முதலீட்டாளர்கள் என்னென்ன விதங்களில் தம் இயக்கங்களை நடத்துகிறார்கள் என்று ஆய்வு செய்ய வேண்டி வரும். தொழிலாளர்களும் என்னென்ன முடிவுகளை என்ன தகவல்களடிப்படையில் எடுக்கிறார் என்பதையும் நாம் அறிய வேண்டி வரும்.

இனி வரும் பத்து இருபது ஆண்டுகளில் தற்காலிக உழைப்பாளிகளாக வந்தவர்கள், இங்கு நிறைய காலம் தங்கி வசிக்கப் போகிறவர்களாக, ஏன் நிரந்தர வாசிகளாகவே மாறத் துவங்கும்போது, அதனால் எழப்போகும் பண்பாட்டு, அரசியல் பிரச்சினைகளை நாம் எதிர்பார்த்திருக்கிறோமா? அத்தனை தொலை நோக்குடன் நம் தலைவர்களோ, நாமோ இருக்கிறோமா? எதிர்காலத்தில் நம்மைத் தாக்கப் போகும் பலபண்பாட்டிய உரிமைப் பிரச்சினைகளுக்கு நாம் ஆயத்தமாக இருக்கிறோமா?

இந்த கேள்விகள் அவர்களின் நலன் நோக்கி மட்டுமல்ல- நம் நலன் சார்ந்தவையும் கூட. அவர்கள் காலால் போடும் ஓட்டு நம் வாழ்வை, வளர்ச்சியைக் குலைக்கக் கூடியது, அல்லது உயர்த்தக் கூடியது.

பெரும் மக்கள் தொகை சார்ந்த பிரச்சினைகள் அவ்வப்போதைய தடாலடி நடவடிக்கைகளால் மட்டுமே சமாளிக்கப்படக் கூடியவை அல்ல. வளர்ந்து வரும், வளர்ந்து விட்ட சமுதாயங்களின் பொருளாதார இயக்கத்தின் வேகத்துக்குத் தேவையான பல லட்சம் இளைஞர்களை ஒரே நாளில் அல்ல, பத்தாண்டுகளில் கூட ஒரு சமுதாயம் உறபத்தி செய்ய முடியாது. அதே நேரம் பெருந்திரள் மக்களை எதிர்காலத்துக்காக நீங்கள் நிறைய குழந்தைகள் பெறுங்கள் என்றும் நாம் ஊக்குவிக்க முடியாது, ஏனெனில் தேசிய அளவில் நாம் ஏற்கனவே மக்கள் தொகைப் பெருக்கத்தால் அவதிப்படுகிறோம், மேலும் அவதிப்பட இருக்கிறோம். வருமுன் காக்கச் சிந்திப்பதும், செயல் திட்டங்கள் வகுப்பதும் அவசியம்.

உலக நிலைகளை உத்தேசித்து, தமிழகம் தன் தனித்துவத்தில் இறுமாந்திருப்பதை விட, கூட்டணியில் ஜ்வலிப்பதை வரவேற்கத் தயாராவதே ஒரு அறிவு முதிர்ந்த செயலாக இருக்கும் என்று தோன்றுகிறது.

சில இணைப்புகள் :
[1]http://www.hindu.com/2010/01/31/stories/2010013153900500.htm
[2]http://www.tribuneindia.com/2010/20100918/biz.htm#3