இசைவழி ஓடும் வாழ்க்கை

நேற்று மாலை ஒரு பன்னாட்டு வானொலி (பிபிசி) ஒலிபரப்பைக் கேட்க நேர்ந்தது. உலக வலையில் ஒரு வசதி பல நாட்டு வானொலி நிலையங்களின் இசையைக் கணினி மூலம் கேட்க முடிவது. ஒரு பேட்டியில் இராக்கிய இசை அமைப்பாளர் (Composer) சில நிமிடங்கள் பேசினார். தன்னுடைய சமீபத்திய ஒரு இசைக்கோர்வையைப் (Composition) பற்றிப் பேசினார். அது மேலை இசை அமைப்பில் ஒரு இராக்கிய இசைக் கருவைப் பொருத்திய கோர்வை. “பல நாடுகளில் ரசிகர்கள் இந்தக் கோர்வையைப் பாராட்டினர், இசைத் தட்டும் விற்கிறது. ஆனால் நிறைய விமர்சகர்கள், குறிப்பாக மேலை செவ்விசை விமர்சகர்கள் இதில் நிறைய பொருந்தாத ஒலிகள் இடைமறித்து இசையைக் குலைக்கின்றன என்கிறார்கள்” என்று வருத்தத்தோடு குறிப்பிட்டார் அந்த இராக்கிய இசை அமைப்பாளர்.

அடுத்து அந்த இசைக்கோர்வையில் சில பகுதிகளை ஒலிபரப்பினர். மேற்கின் செவ்விசையில் பழகிய செவிகளுக்கு இந்த இசை ஏன் பொருந்தா ஒலிகள் மோதுவதாகத் தோன்றியது என எனக்குப் புரிந்தது. ஆனால் இந்திய இசை, குறிப்பாக வெகுஜன இசையில் நிறைய காலப் பழக்கம் உள்ளதால், இந்த இசை ‘அபஸ்வரம்’ ஏதும் இல்லாது சுஸ்வரமாகத்தான் எனக்குக் கேட்டது.

நிறைய இராக்கியர்கள் தற்போது வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். இவரும் அவ்வப்போது பாக்தாத் போய் மேற்கில் தற்போது வசித்துவரும் நாட்டுக்குத் திரும்பி விடுகிறார். “பத்தாண்டுப் போரும் வன்முறையும் இராக்கியரின் வாழ்வை அழித்தன, இன்று இராக்கியர்கள் தம் பண்பாட்டின் வேர்கள் எல்லாம் செத்து விட்ட நிலையில் வேறொரு விதமான ரசனையை வளர்க்கிறார்கள்” என்று அப்பேட்டியில் அவர் குறிப்பிடுகிறார்.

iraq_music 

சிறிது மறைமுகமாக இளைய தலைமுறையிடம் இன்று கூடி விட்ட மதச் சாய்வை இந்த அழிப்பிற்குக் காரணமாகச் சொன்னார். தன் உறவினர் வீட்டுச் சிறுமி பாட்டு ஒன்றைப் பாடியதைக் கேட்டதாகவும், அந்தப் பாடலின் வடிவம் தன்னை வாட்டியது எனவும் சொன்னார். அப்பெண்ணிடம் இது என்ன பாட்டு என்று தெரியுமா எனக் கேட்கிறார், அவள் இறைவனுக்கு வணக்கம் சொல்லும் பாட்டு என்றாளாம்; இல்லை இது ஒரு பாரம்பரியக் காதல் பாட்டு அல்லவோ என்று இவர் சொன்னதை மறுத்து ‘இல்லை, இது அல்லாவுக்கு வேண்டிப் பாடிய பாட்டுதான்,’ என்கிறாள். தம் மக்களின் இசைப் பாரம்பரியம் இப்படி ஒரே தலைமுறையில் திசை திருப்பப்பட்டு விட்டதை எண்ணித் தாம் நொந்ததாகவும், அந்தப் பாட்டையும் வைத்து எழுதிய கோர்வையே இப்போது ஒலிபரப்பிய இசை என்றும் விளக்குகிறார். பொருந்தா ஒலிகள் போலத் தோன்றியவை இராக்கிய மூலப் பாடல்களின் இசை என்று தெரிந்தது. கிட்டத்தட்ட நம் இசையில் உள்ள கமகங்கள் போல ஒலித்தன அவை. அது மேற்கின் செவிகளுக்கு வினோதமாக ஒலித்ததில் அதிசயம் இல்லை.

–00OOoo–

இசை புரிவதில் ஓரளவு பழக்கத்துக்கும் இடம் இருக்கிறது என்பது என் பல நாட்டு நண்பர்களுக்கு இந்திய இசையைப் போட்டுக் காட்டும்போது தெரிந்தது. இந்தியச் செவ்விசை அவர்களை உடனே கொட்டாவி விடவைக்கும் அல்லது என்ன சொல்வதென்று தெரியாத சங்கடத்தில் ஆழ்த்தும். அவர்களில் இசைப் பயிற்சி கொண்டவர்களுக்கு அத்தனை பிரச்சினையாக இல்லை போலத் தெரிந்தாலும், நாம் (இந்தியர்கள்) மேலைச் செவ்விசையில் உடனே பங்கெடுக்க முடிகிற அளவுக்கு அவர்களால் நம் செவ்விசைக்கு அருகில் நகர முடிவதில்லை.

இதில் எத்தனை பங்கு மேற்கத்தியருக்கு வெள்ளையரல்லாத பண்பாடுகள் குறித்து உள்ள இகழ்வுணர்வு அல்லது அலட்சிய உணர்வு பொறுப்பாக இருக்கும் என்பதை நாம் அறிவது சுலபமல்ல. பல நாட்டு இசையை மேற்கத்திய மக்கள் கேட்பதாக ஒரு தோற்றம் இருப்பது உண்மை. மேற்கத்திய இசைக் கலைஞர்கள் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அங்கிருந்து இசைக் கருவிகள், ஒலிகள், தாளகதிகள், மேலும் சில இசைப்பாணிகளை எல்லாம் கடன் வாங்குகிறார்கள் என்ற தோற்றமும் இசைத்தட்டுகள் விற்கும் கடைகளில் கிட்டுகிறது. உதாரணமாக ஆப்பிரிக்க இசையை அவர்களால் எளிதில் அணுகமுடிகிறது என்றொரு பிம்பம் இருக்கிறது. ஆனால் அதிலும் கூட, ஆப்பிரிக்க இசையின் துள்ளலான தாளகதிகளையும் சில பாணிகளையும் மட்டுமே அதிகமாகப் பொறுக்கி எடுத்துக் கொள்கிறார்கள் என நினைக்கிறேன். தவிர, மேற்கில் பல நாடுகளிலும் ஆப்பிரிக்க இன மக்கள் குடிமக்களாகவோ, குடியேறிகளாகவோ இருப்பவர்கள், இசைத் துறையில் நிறைய பங்கெடுப்பதால், ஆப்பிரிக்க வேர்களில் இருந்து இசைப் பாணிகளைக் கடன் வாங்குவதில் ஆர்வம் கொண்டு அவற்றைக் கொண்டு வருகிறார்கள். கொண்டு வருவது எதுவும் முழு ஆப்பிரிக்க இசையாகவோ, பாணியாகவோ இராது. இருந்தால் மேற்கின் சந்தையில் அத்தனை எளிதில் பொருளாக்கி விற்க முடியாது.

இதெல்லாம் இருந்த போதும் இந்திய இசையைப் பற்றிய தகவலறிவு மேற்கில் இப்போது கூடி வருவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இது பெருமளவு வளரவில்லை எனினும், சீன இசை, கொரிய இசை போன்றனவற்றை விடக் கூடுதலான வலுவுடன் வளர்வதாகத் தெரிகிறது. இப்போதெல்லாம் நிறைய இந்திய இசைக் கலைஞர்கள் மேற்கில் வந்து கலப்பு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து, கசப்புணர்வு இல்லாது திரும்புகிறார்கள். சமீபத்தில் ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன், அதில் சில நூறு பேர் பார்வையாளராக வந்திருந்தனர். யாரும் எழுந்து போகவில்லை, இத்தனைக்கும் இரண்டரை மணி நேரம் நடந்தது அந்த நிகழ்ச்சி. முழுதும் தென்னிந்திய, கர்நாடக இசை. பாடியவரும், இதர பக்க வாத்தியக்காரர்களும் இந்தியாவில் பங்களூரிலும், கேரளாவிலிருந்தும் வந்தவர்கள். கீர்த்தனைகளும், உதிரிப்பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதே போன்ற வரவேற்பு வேறு சில இந்திய செவ்விசை நிகழ்ச்சிகளிலும் இருந்ததைக் கண்டிருக்கிறேன்.

இந்திய சினிமாவின் இசையும், வேறு வகையான வெகுஜன இசையும் முன்னெப்போதையும் விடக் கூடதிகமாக மேற்கில் பரவி இருக்கிறது. இதற்கு ஓரிரண்டு ஹாலிவுட் படங்கள் காரணம். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு காரணம். இந்திய மக்கள் தொகை மேற்கில் கூடியது காரணம், தவிர பாலிவுட் நடனங்கள் ரசிக்கத்தக்கவை என்று ஒரு கருத்து மேற்கில் திடீரென்று வளர்ந்திருப்பதொரு காரணம். லகான், மான்ஸூன் வெடிங், ஸ்லம் டாக் மிலியனேர், நேம் ஸேக், ஐஸ்வர்யா ராயின் சில இங்கிலீஷ் படங்கள், மீரா நாயரின் ஹாலிவுட் பிராபல்யம் போன்றவற்றையும் காரணங்களாகச் சொல்லமுடியும். சமீபத்தில் நியுயார்க் டைம்ஸ் போன்ற ‘உலக’ச் செய்தித்தாள்களில் பாம்பேயின் ஹிந்திப் படங்கள் குறித்த விமர்சனங்கள் வழக்கமாக வெளிவரத் துவங்கி உள்ளன. பாலிவுட் படங்களுக்குக் கணிசமான சந்தை மேற்கில் பல நாடுகளில் வளர்ந்திருப்பது இந்த மாறுதலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். பல இந்திய வம்சாவளி எழுத்தாளர்கள் ஆங்கில இலக்கியத்தில் இன்று தொடர்ந்து முன்னணி விற்பனை தரும் புத்தகங்கள் எழுதி வருவதும், சில உலக இலக்கியப் பரிசுகளை வென்றதும் கூட காரணம் எனலாம்.

பரிச்சயம் என்பது முதல் சில தடைகளைத் தாண்டினால் மேன்மேலும் சுலபமாக நிகழக் கூடியது. அதன்பின் இருக்கவே இருக்கிறது எறும்பூரக் கல்லும் தேயும் என்பது. இந்திய எறும்புகள் மேற்குலகில் பாறை மனதுகளைத் தேய்க்கத் துவங்கி சுமார் 30 ஆண்டுகள் ஆகி விட்டன. சிறிது சிறிதாக இந்திய அரசு, அரசியல், சமூகம் ஆகியன மேலை நாகரீகத்தின் மீது கொண்ட ஆழ்ந்த சந்தேகத்தை இழந்து, மேற்கின் ஊடகங்களுக்கும், சந்தைக்கும், பொருட்களுக்கும் தொண்டரடிப்பொடியராக மாறத் துவங்கியதுமே இந்த கல்லைத் தேய்க்கும் முயற்சியும் துவங்கிவிட்டது. இன்று மேற்கு இந்த இந்திய ஆதிக்கத்தைக் குறித்து பலவிதங்களில் சந்தேகப்படத் தொடங்கியிருக்கிறது. தாம் கூடதிகமாக இளகி விடுவோம், இந்தியர்கள் போட்டியில் வல்லவர்கள், அவர்கள் முன் நாம் வெறும் திரவமாகி விடுவோம், நாம் இவர்களை ஆண்ட காலம் மலையேறி நம்மை இவர்கள் ஆளத் துவங்கி விடுவார்களோ என்று ஒரு சிறு அச்சம் மேற்கில் உலவத் துவங்கி இருக்கிறது.

அதே நேரம் தம் (வெள்ளை, கிருஸ்தவ, யூரோப்பிய) நிலப்பரப்புகளில் இருந்த மிகப் பழமையான பண்பாடுகளை எல்லாம் விட சில ஆயிரம் ஆண்டுகளாவது மூத்த பண்பாடு இந்தியப் பண்பாடு என்ற ‘உண்மை’ அரசல் புரசலாகவாவது மேற்கத்திய மனங்களுக்குத் தெரியத் துவங்கி இருக்கிறது. இது, இந்தியாவுக்கு எதிரான எத்தனையோ எவாங்கலியக் கிருஸ்தவப் பிரசாரம், மேற்கில் வாழும் இந்திய இடது சாரியினரின் வழக்கமான இந்தியாவுக்கெதிரான இகழ்வுப் பிரசாரம் போன்ற எதிர்ப்பு அலைகளையெல்லாம் தாண்டி மேற்கின் விழிப்புணர்வில் சேர்ந்திருக்கிறது.

தண்ணீர் சொட்டிச் சொட்டிப் பாறைகளும் பொடியாகி மணலாகும் என்பார்கள். இந்தியப் பண்பாட்டின் ஈரம் கசிந்து மேற்கில் தொடர்ந்து சொட்டும் நீராக மாறி வருகிறது. இது புனலாகி, அருவியாகி வந்தால் மேற்கின் பாறை மணலாகி உலகுக்குப் பயன்படும் வண்டலாகவும் ஆக வாய்ப்புண்டு. அத்தகைய பண்பாட்டுக் கசிவுகளுக்கு இந்திய இசையின் நெடிய பாரம்பரியம் உதவும் என நினைக்கிறேன்.

–ooOOoo–

pandit_jasraj_7lr_large

அதே மாலையில், ஒரு சிறு பயணத்தின் போது, மறுபடியும் பாட்டுக் கேட்க முடிந்தது. வட இந்திய செவ்விசையின் குறுந்தட்டு. கேட்டது முழு ராக ஆலாபனை இல்லை. ஒரு பஜனைப் பாட்டு போன்ற தும்ரி. பண்டிட் ஜஸ்ராஜ் ஹார்மோனியக்காரரோடு சுரங்களை படு நிதானமாகப் பரிமாறிக் கொண்டு இருந்தார். இடையிடையே வாத்தியக்காரர்களின் நுட்ப சஞ்சாரங்களைச் சிலாகித்தார். கம்பீரமான குரல், கீழ் ஸ்தாயியில் ஒரு மூன்று நான்கு நிமிடம் உலாவினார். ஊனை உருக்கும் வித்தை தெரிந்தவர்.

கேட்ட பாடல் சீக்கிரம் முடிந்தது. கையில் ஓரிரண்டு இசைத் தட்டுகளே இருந்தன.

அடுத்து பீட்டர் காப்ரியேலின் ‘So’ என்கிற ஒரு இசைத் தட்டின் பாடல்கள். வேலை இழந்த வெள்ளை இளைஞன் ஒருவன் நிராசையின் விளிம்பில் தடுமாறி நிற்கிறான். தன் ஒடிந்த கனவுகள், தோல்விகளே நிரம்பிய வாழ்வு, இத்தனைக்கும் தான் எதிர்பார்த்ததே மிக மிகக் குறைவானவைதானே, இவை கூட ஏன் எனக்குக் கிட்டவில்லை, வாழ்வை முடித்துக் கொண்டாலென்ன – ஒப்பாரி, அல்லது பிலாக்கணமா? இங்கிலீஷில் ‘lament’- எனப் பாடுகிறான். ‘நான் ஒரு பாலத்தின் மீது நிற்கிறேன், இனியும் வாழ்க்கை தொடர்வதில் என்ன பொருள் இருக்கிறது,’ என்கிறான். என்னால் இனிமேல் தாங்க முடியாது என்று ஓலம். (‘I can’t take it anymore!’) மனைவி அவனுக்கு மறுப்பைச் சொல்லி, நம்பிக்கை ஊட்டப் பாட டூயட்டாகிறது அது. எது இல்லாவிடில் என்ன, நாங்கள் இருக்கிறோம், நீதான் எல்லாம் எங்களுக்கு, நாங்கள் உன்னைப் பெரிதாய் மதிக்கிறோமே, நாங்கள் கேட்பது மிகக் குறைவானவையே, எங்களுக்கு எதுவும் வேண்டாம், இருப்பதை வைத்து வாழ்வோம், நீ போதும் எங்களுக்கு, நம்பிக்கையோடு இரு, விட்டு விடாதே (Don’t give up!) விட்டு விடாதே என்று மறுபடி மறுபடி உறுதியூட்டிப் பாடுகிறாள். ‘கை விட்டு விடாதே’ என்றும் செய்தி சொல்கிறாள், இறைஞ்சுகிறாள் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

சுமார் 20 வருடங்கள் முன்னால் நண்பர் எனக்கு பீட்டர் காப்ரியேலை அறிமுகப் படுத்தி இருந்தார். குறிப்பாக இந்தப் பாட்டை, இந்த இசைத் தொகுப்பை அவர்தான் எனக்கு ஒரு ஒலிநாடாவாக வாங்கிக் கொடுத்திருந்தார். பின்னால் குறுந்தட்டாக வாங்கிக் கொண்டேன். (அந்த ஒலி நாடா எங்கோ ஒரு அலமாரியில் தூசி படிந்து கிடக்கும். ஓலைச் சுவடிகளில் காணாமல் போன வரலாற்றைப் போல ஒலி நாடாக்களில் ஒரு வரலாறு காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. கவனிப்பார் யார்?) அவரோடு ஒரு ஆறுமாதம் அறையொன்றைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். அன்று சூழலில் நிறைய வேலை இல்லாத் திண்டாட்டம். நிறைய குடும்பங்கள் மிக மோசமான நிலையில் அவதிப்பட்டதை நாங்கள் அறிந்திருந்தோம். வறுமை அடுத்த அறையில் இருந்து எங்களையும் தினம் எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தது. எங்கள் கதவு வழியே அது எப்போது நுழையப் போகிறதோ என்று கலக்கத்துடன் தினம் நாங்கள் பகுதி நேர வேலைக்குப் போய்க் கொண்டிருந்தோம். நண்பர் பகுதி நேர வேலைகள் இரண்டைச் செய்து கொண்டிருந்தார்.

peter-gabriel-so-album-coverசூழலில் நிறைய தொழிலாளர்கள் என்பதால் இந்தப் பாட்டு அன்று உடலுக்குள்ளெல்லாம் பயணித்து மனதைப் பிழிந்தது. வார இறுதியில், மாலையில் சக காக்கைகளாய்ச் சில நண்பர்கள் வருவார்கள். வீட்டிலிருந்த ஓட்டை நாற்காலிகள், வாயிற்படி, தரை என்று ஆங்காங்கு படுத்தும் அமர்ந்தும் இந்தப் பாடல்களையும் வேறு பாடல்களையும் கேட்டிருப்போம். பெருமளவும் மேலை வெகுஜன இசை (Popular music / Pop music). அந்த காப்ரியேலின் இசையை இன்று கேட்கவும் அவர் நினைவு வந்தது. தொடர்பில்லாது பெருவெளியில் எங்கெங்கோ கரைந்து போன நண்பர்கள் நினைவும் வந்து வருத்தியது. அத்தனை நெருக்கமும் எங்கே எப்படிக் கரைந்து விடுகிறது? ஏன் ஒருவர் கூடப் பின்னாளில் ஒரு கடிதம் கூட எழுதித் தொடர்பு கொள்ளவில்லை?

ஜஸ்ராஜின் பிரார்த்தனை போன்ற ராக ஆலாபனையும், பீட்டர் காப்ரியேலின் இறைஞ்சல் பாடலும் வெவ்வேறு நிலப்புலன்களில் வேர் கொண்டிருந்தாலும் தொடர்பு கொண்டனவாகவே எனக்குத் தெரிந்தது. எதிரே பரந்த புல்வெளி. கால்பந்தாடும் இளைஞர்கள். மழை மேகங்கள் சுருசுருவென்று கூடின. சூரிய ஒளி இல்லாத சாம்பல் மாலை. நான் நடக்கத் துவங்கினேன். வட்டப்பாதையில் இரண்டு மைலாவது நடக்க நினைத்தேன். நல்ல குளிருடன் பலத்த விசையுடன் காற்று அடித்தது. உடல் பூராவும் பாட்டுகளின் ஜீவன் ஓடிக் கொண்டிருந்ததற்கும், இந்தக் காற்றின் பெரும் விசைக்கும் உடனே பொருத்தமான உடன் நிகழ்வாக இருந்தது. என்றோ பிள்ளைப் பிராயத்தில் காவிரி ஆற்றின் கரையில் நண்பர்களோடு ஆடிக் காற்றின் பெரும் புழுதி கடந்து போக ரயிலடியை நோக்கி நாங்களெல்லாம் ஓடிப் போனது நினைவு வந்தது. இரண்டும் எப்படித் தொடர்பு கொண்ட காட்சிகளாயின, அனுபவங்களாயின என்பதை அறிய இயலவில்லை. ஆடிக்காற்று எந்த நிலப்பரப்பிலும் ஒரே மாதிரிதான் இருக்கும் போலிருக்கிறது. காவிரி நதி அருகில் இல்லாத குறை தெரியாமல் இருக்க எதிரே வேறு ஒரு நதி தூரத்தில் அலுமினியப் பாம்பாய் நெளிந்து கொண்டிருந்தது. அன்று தலைக்கு மேலே உச்சி வானில் கிருஷ்ணப்பருந்து வட்டமிட்டதற்குப் பதிலாகச் சில கூடு திரும்பும் புட்களும், ஓரிரு கடல் நாரைகளும் இங்கு பறந்திருந்தன. கோவில் மணிஓசைக்கு ஈடாக ஏதும் இல்லை. எல்லாப் பாரம்பரியங்களையும் நினைக்கும்போது நினைத்தபடி மீட்பதற்கு இல்லை. நவீன உலகின் மறுக்கவொண்ணா வேதம்.

(தொடரும்)

One Reply to “இசைவழி ஓடும் வாழ்க்கை”

Comments are closed.