மகரந்தம்

ஓஸோன் தளங்கள் அழிவது…
… நின்றிருக்கிறது, அந்த அடுக்குகள் இப்போது முன்னை விடக் குறையாமல் உள்ளன. மாறாக உலகெங்கும் ஓஸோன் அடுக்குகள் பூமியைச் சூழ்ந்திருப்பதால் பூமிக்குக் கிட்டும் பாதுகாப்பு குறையாமல் இருக்க எடுத்த பலவிதத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிறைய பலனிருப்பதாகத் தோன்றுகிறது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இது எத்தனை தூரம் நம்பகமானது என்பது வரும் வருடங்களில் தொடர்ந்த் ஆய்வுகளில் தெரியும். ஆனால் அதுவரை இதை நாம் கவனிப்பது நல்லது. எல்லாம் விதி என்று கையைப் பிசையாமல், மானுட முயற்சிக்குப் பூமி அளவில் நிச்சயம் பாதிப்பு இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்றாக இருக்கலாம். மானுட முயற்சிக்குப் பூமி அளவில் தாக்கம் இருப்பதால்தானே எத்தனையோ மிருகங்கள், ஜீவராசிகளை நாம் அழித்திருக்கிறோம், அது தெரிந்தும் மானுடரால் பூமி அளவில் பாதிப்பில்லை என்ற கருத்து இருக்க என்ன காரணம், எல்லாம் வல்ல கடவுள் என்ற ஒரு கற்பிதம்
எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை இதில் எத்தனை பங்கு வகிக்கிறது?

ஆஸ்திரேலிய வர்த்தகத்தை மிரட்டும் ஜப்பானிய குற்றக் குழு
அங்கங்கு தீவிரவாதம் தன் கோர முகத்தை காட்டும் இந்தக் காலத்திலும், ஜப்பான் குறித்த பொதுவான பிம்பம் பயம் தரக் கூடியதல்ல. அமைதியான புற்றில் பாம்புகள் இருப்பது இயற்கைதானே! ஜாப்பானில் செயல்படும் யாகுஸா என்கிற குற்றக் கூட்டம் எப்படி பன்னாட்டு நிதி நிறுவனங்களை எல்லாம் பயன்படுத்துகிறது என்று இந்தச் செய்தி சொல்கிறது. உலகில் அதிக ஆபத்து சீன, ரஷ்யக் குற்றக் கூட்டங்களால்தான் என்றும் சொல்கிறது. இது மேலைப் பார்வை என்பது உண்மையாகவும் இருக்கலாம். இத்தாலிய மாஃபியாவை விட மோசமான கூட்டமா இவை எல்லாம்? விவரம் தெரிந்த இந்திய உளவு, போலிஸ் அமைப்புகளில் இருந்து யாராவது எழுதி நமக்குத் தெரிவிக்கிறார்களா என்று பார்ப்போம்.

ஜெர்மனியில் சத்தமில்லாமல் ஒரு அரசியல் மாற்றம்
ஒருவழியாக பசுமையியம் மேலெழுகிறது. ஜெர்மனியில் ‘சோசலிச ஜன நாயக’க் கட்சி, கிருஸ்தவ ஜன நாயகக் கட்சி எனும் இரண்டு பெரிய கட்சிகளே இத்தனை காலம் மாற்றி மாற்றி அதிகாரத்தைக் கைப்பற்றி வந்தன. சென்ற சில வருடங்களாக இந்தியா மாதிரி அங்கும் மையக் கட்சிகள் கூட்டணி இல்லாது அதிகாரத்துக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. மூன்றாவது, நான்காவது கட்சிகள் துவங்கி ஓரளவு வெற்றியும் அடைந்தன. முக்கியமாக ‘பசுமை’க் கட்சி. இது கூட்டணிகள் மூலம் மத்திய அரசில் சில அமைச்சர் பதவிகளை அனுபவித்து வந்தது, ஆனாலும் தானே அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு சிறிதும் இல்லாத நிலைதான். ஆனால் இந்த வருடம் நிலை மாறி இருக்கிறது. தொடர்ந்த தேர்தல்களில் இரு கட்சிகளும் ஆட்சியில் இருந்து ஏதும் சாதிக்கவில்லை, மக்களுக்கு இரண்டின் மீதும் அதிருப்தி, எனவெ சமீபத்தில் பசுமைக் கட்சி நிறைய ஆதரவைப் பெற்று வருகிறது என்கிறது இந்தச் செய்தி.

மீண்டும் ஜப்பான்
யாருக்குத் தெரியும், ஜப்பானின் சமூகம் சமத்துவ சமூகமாமே!
’ஜப்பானின் சமூகம் அடுக்கு சமுதாயம், பெண்கள் இரண்டாம் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள், பல நூறு ஜாதி அமைப்பை விடக் கொஞ்சம் செடுக்கு குறைவான ஆனால் கறாரான அடுக்குகள் கொண்ட ஒரு அமைப்பு அங்கு சமூகத்தை நடத்துகிறது’ என்று பிம்பம் பொதுவான பிம்பம் ஜப்பானைக் குறித்துண்டு. இதில் கொஞ்சம் புதினம், கொஞ்சம் அறியாமை எல்லாம் உண்டு தான். ஆனால் இங்கொரு கட்டுரை சொல்கிறது, ஜப்பானில் ஒருபுறம் மக்கள் தொகை சுருங்கி வருகிறது. இருந்தாலும் முதுநிலைக் கல்லூரிகள் மேன்மேலும் பெருகி வருகின்றன. பாதிக்கும் மேல் படிக்க மாணவர்களே வராமல் திண்டாடுகின்றன என்று எழுதும் கட்டுரையில் கடைசியில் ஜப்பானியப் பள்ளி ஆசிரியர்கள் இந்த உயர்கல்வி நிறுவனங்கள் ஜப்பானின் ‘சமத்துவ’ சமுதாயத்திற்கு ஊறு விளைக்கின்றன என்று கருதுகிறார்கள் என்று முடிக்கிறது. என்ன ஒரு புதிரான நிலை?