வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – இறுதிப் பகுதி

இத்தொடரின் பிறபகுதிகளைப் படிக்க: வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ்

wikileaks-founder-defends-release-of-files-2010-07-29_lஅமெரிக்காவின் ஆப்கான் போரில் பாகிஸ்தான் அமெரிக்காவை ஏமாற்றி வரும் உண்மையை அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டதன் மூலம் விக்கிலீக்ஸின் நோக்கங்கள் எதுவும் ஈடேறவில்லை. அவற்றிற்கான காரணங்களையும் பார்த்தோம். உண்மையிலேயே விக்கிலீக்ஸின் நோக்கங்கள்தான் என்ன? விக்கிலீக்ஸ் அமைப்பு ”எதோச்சிகார, சர்வாதிகார, அடக்குமுறை அரசாங்கம் நடக்கும் நாடுகளில் அந்த நாடுகளின் அரசும், அதிகாரிகளும், ஆளுபவர்களும் செய்யும் அனைத்து ஊழல்களையும் அக்கிரமங்களையும் வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வையும் அதன் மூலம் புரட்சியையும் ஏற்படுத்த இணையம் மூலமாக முயல்வதே தன் நோக்கம்” என்கிறது. ஆனால் கென்யாவில் நடந்த படுகொலைகள் போன்ற ஒரு சில அம்பலங்களைத் தவிர விக்கிலீக்ஸ் தான் அறிவித்த லட்சியங்களின் படி எந்தவிதமான எதோச்சிகார அரசையும் இது வரை பெரிய அளவில் எதிர் கொண்டதாகத் தெரியவில்லை. ஆப்கானில் அமெரிக்க ராணுவத்தின் நிலை குறித்து வெளியிட்ட ஆவணங்களின் நோக்கம் கூட அப்பாவி மக்களை அமெரிக்கா கொல்கிறது என்பதை வெளிக் காட்டவே அன்றி அமெரிக்கா எப்படி பாகிஸ்தானிடம் ஏமாறியது என்பதை வெளிக்காட்ட அல்ல என்பதும் தெரிகிறது. ஆக விக்கிலீக்ஸ் இன்றளவும் பெரிதாக வெளியிட்ட ரகசியங்கள் ஆப்கான் போர் சம்பந்தப் பட்ட ராணுவ வெளியீடுகள் மட்டுமே எனலாம். அதுவும் பெரிதாக அமெரிக்க மக்களிடமும், அமெரிக்க மீடியாக்களிடமும், அமெரிக்க எதிர்க்கட்சியினரிடமும் மாற்றம் எதையும் ஏற்படுத்தி விடவில்லை என்பதையும் விரிவாகப் பார்த்தோம்.

விக்கிலீக்ஸின் ஊடுருவல் எல்லாமே பெரிய அளவில் ஒரு ஜனநாயக நாடான அமெரிக்காவிடம் மட்டுமே எடுபட்டுள்ளது. அதிலும் கூட அமெரிக்க அரசின் சிஐஏ வேண்டும் என்றே இந்தத் தகவல்கள் விக்கிலீக்ஸின் மூலமாக கசிவதை விரும்பியே அனுமதித்திருக்கலாம் என்றும் கூட ஒரு சந்தேகம் சிலரிடம் உள்ளது. தன்னை மீறிச் செயல்படும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பையும் அதன் தளபதிகளையும் தன் வழிக்குக் கொண்டுவர அமெரிக்கா விக்கிலீக்ஸை பயன்படுத்திக் கொண்டுள்ளதோ என்றொரு சந்தேகமும் எழாமலில்லை. இது சற்று கொக்கின் தலையில் வெண்ணையை வைத்துப் பிடிப்பதுபோல இருந்தாலும் அதற்கான காரணங்களை முற்றிலுமாக நிராகரித்து விட முடியாது. மிக எளிதாக விக்கிலீக்ஸுக்கு அமெரிக்க ரகசியங்கள் மட்டுமே அடிக்கடி கிடைப்பது இது ஒரு திட்டமிடப்பட்ட கசிவாக இருக்குமோ என்ற ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது. சமீபத்தில் சிஐஏ தன் அமைப்புக்குள் நடத்திக்கொண்ட ஒரு விவாதத்தில் “அமெரிக்கா பயங்கரவாதிகளுக்கு ஆதரவான ஒன்று எனப் பிற நாடுகள் நினைத்து அதனால் அவர்களின் ஒத்துழைப்பை நிறுத்தக் கூடுமா?” போன்ற பல கேள்விகளை எழுப்பியிருந்தது. அந்தக் கேள்விகளையும் கூட விக்கிலீக்ஸ் வெளியிட்டு இருக்கிறது.

விக்கிலீக்ஸ் உண்மையிலேயே அக்கறை செலுத்தி வெளிக்கொணர வேண்டிய பிற எதோச்சிகார, கம்னியுச, சர்வாதிகார, ஊழல் நாடுகளின் ரகசியங்கள் கோடிக்கான அளவில் உள்ளன. அவற்றில் சீனா ஒரு முக்கியமான அடக்குமுறை நாடு. சீனாவில் எந்தவிதமான அடிப்படைச் சுதந்திரமும் உரிமையும் சீனாவின் மக்களுக்குக் கிடையாது. அதே நேரத்தில் சீன அரசின் அடக்குமுறையும் கொடூரமானது. சீன மக்களோ நாட்டுப் பற்று என்ற ஒரே நோக்கில் கம்னியுச அரசாங்கத்தின் அட்டூழியங்களை இயல்பான வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டு சீன அரசை எதிர்க்காமல் வாழ்ந்து வருகிறார்கள். பெரிய அளவிலான ஒரு புரட்சி அங்கு உருவாவதற்கு எவ்வித வாய்ப்போ அதற்கான ஒரு விழிப்புணர்வோ ஒற்றுமையோ எதிர்ப்போ தோன்றுவதற்கு எந்த வித அறிகுறியும் தெரியவில்லை. சீன அரசின் அதன் கம்னியுஸ்டு அமைப்பின் உயர்மட்டத் தலைவர்களின் ஊழல்களையும் அவர்களது மக்கள் விரோதக் கொலைகளையும் விக்கிலீக்ஸ் உலகத்திற்கு அம்பலப்படுத்துமேயாயின் அதுவே சீன மக்களுக்கும், பிற உலக நாடுகளுக்கும் செய்யும் பெரும் சேவையாக இருக்கும். சீனா மட்டும் அல்ல உலகம் முழுவதும் கம்னியுஸம் என்ற ஒரு மனித குல நாசகாரச் சக்தியின் கோர முகத்தை வெளிப்படுத்துவதே விக்கிலீக்ஸ் போன்ற அமைப்புகளின் உண்மையான அவசர நோக்கமாக இருக்க வேண்டும்.

சீன மக்களில் விழிப்புணர்வுள்ள சில வலைப்பதிவாளர்கள் விக்கிலீக்ஸ் அவசியம் வெளிக்கொணர வேண்டிய சில சீன ரகசியங்களைப் பட்டியலிடுகிறார்கள். சீன கம்னியுச அரசின் கடுமையான தணிக்கை முறைகளினாலும் மர்மமான ரகசிய நடவடிக்கைகளினாலும் சீன மக்களிடமும், உலக மக்களிடமிருந்தும் மறைக்கப்பட்டிருக்கும் முக்கியமான சில ரகசிய ஆவணங்களை சீனாவின் கம்னியுச கொடுங்கோலர்களிடம் இருந்து மீட்டு சீன மக்களிடமும் உலக மக்களிடமும் விக்கிலீக்ஸ் அம்பலப் படுத்த வேண்டும் என்று பல சீன ஜனநாயக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அவர்களது விக்கிலீக்ஸ் விருப்பப் பட்டியலில் உள்ள சில முக்கியமான ரகசியங்கள்:

china-olympic-460x276

1. 1959-62ல் மாவோவின் ஆட்சியின் பொழுது நடந்த கொடுமையான பஞ்சத்தில் 2 முதல் 5 கோடி சீனர்கள் பட்டியினால் இறந்திருக்கிறார்கள். அவர்கள் நிஜமாகவே நேர்ந்த வறட்சியினாலும் பஞ்சத்தினாலும் இறந்தார்களா அல்லது திட்டமிட்டுக் கொல்லப் பட்டார்களா, இறக்க விடப்பட்டார்களா என்பது குறித்தான ரகசியத்தை விக்கிலீக்ஸ் கண்டுபிடித்து வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்த காலகட்டத்தில் கோடிக்கணக்கான சீனர்கள் பசியில் இறந்து கொண்டிருந்த அதே வேளையில் மாவோ அணு ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் பொருட்டு சீனாவின் தானியக் கிடங்குகளில் இருந்து தானியங்களைப் பரிமாற்றம் செய்திருக்கிறார்.

2. மாவோவின் நம்பிக்கைக்குரிய தளபதி லின் பியாவோ 1971ம் ஆண்டு கொல்லப்பட்டதன் பின்ணணியில் இருக்கும் மர்மம் வெளிக் கொணரப்பட வேண்டும். அதன் மூலம் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரலாம்.

3. மாவோவின் உயில் அடங்கிய ரகசியப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டு அதனுள் இருக்கும் மர்மங்கள் வெளிக் கொணரப்பட வேண்டும்.

4. 1989 பெய்ஜிங் படுகொலையின் முக்கியமான ரகசிய ஆவணங்கள் வெளிக் கொணரப்பட வேண்டும்.

5. ஃபாலூன் காங் என்ற அமைப்பின் தொண்டர்கள் சித்திரவதை செய்யப் பட்டு அவர்களது உடல் உறுப்புகள் விற்கப் பட்ட விபரங்கள் வெளிக் கொணரப்பட வேண்டும்.

6. சீனாவில் எதிர்ப்பு இல்லாத கிளர்ச்சி இல்லாத நிலையான கம்னியுச கட்டுப்பாட்டின் கீழான அரசை நிலை நிறுத்துவதற்காக சீன அரசு ஒரு பிரும்மாண்டமான கேள்வி கேட்க முடியாத ரகசிய பட்ஜெட்டை பராமரித்து வருகிறது. சீனாவின் அத்தனை அடக்குமுறைகளுக்கும், படுகொலைகளுக்கும், சித்திரவதைகளுக்கும் தேவையான நிதி இந்த பட்ஜெட்டில் இருந்தே வருகிறது. அந்த பட்ஜெட் குறித்தான அனைத்து தகவல்களும் வெளியிடப்பட வேண்டும். சீனாவின் ராணுவ பட்ஜெட் தவிர்த்து வேறு எந்த வித பட்ஜெட்டையும் விட மிக அதிகமான பணம் இந்த அடக்குமுறை பட்ஜெட்டுக்காக ஒதுக்கப் படுகிறது. இந்த அளவற்ற நிதியின் துணை கொண்டே எதிர்ப்பாளர்கள் எவரும் கொடூரமாக அடக்கப்படுகிறார்கள். மிக பயங்கரமான முறையில் மக்களின் உரிமைகள் ஒடுக்கப்படுகின்றன. அத்தகைய சக்தி வாய்ந்த நிதி குறித்த சகல விபரங்களும் வெளிக் கொணரப்பட வேண்டும்.

7. கம்னியுஸ்டு கட்சியின் உயர்மட்டம் முதல் அடிமட்டம் வரையிலான தலைவர்கள் அனைவரது வங்கிக் கணக்குகள் சொத்து விபரங்களைக் கண்டுபிடித்து வெளியிட்டால் கம்னியுசம் என்ற பெயரில் சீன மக்களின் ரத்தம் எப்படி உறிஞ்சப்படுகிறது என்பதும் அந்தக் கட்சியின் அந்த இயக்கத்தின் உண்மையான கோரமுகமும் உலகத்துக்கும் முக்கியமாக சீன மக்களுக்கும் தெரிய வரும்.

அமெரிக்க அரசின் ராணுவ ரகசியங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டதில் இருந்தே சீன கம்னியுஸ்டு அரசு பெரும் நடுக்கத்தில் உள்ளதாகத் தெரிகிறது. சீனக் கம்னியுஸ்டு கட்சியின் உயர் மட்டக் குழு கூடி இவை போன்ற கசிவுகளை எப்படித் தடுப்பது, அப்படியே வெளிப்படுத்தப்பட்டாலும் அவற்றை எப்படி மழுங்க அடிக்கச் செய்வது என்பது குறித்து அலசியுள்ளனர். சீனாவின் சர்வாதிகார கம்னியுஸ்டு அரசாங்கம் பல கோடி மக்களை ஈவு இரக்கமின்றி கொன்ற விபரங்கள் உட்பட அதன் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தெளிவாக ரகசிய ஆவணங்களாக பதிந்து வைக்கைப்பட்டே வருகின்றன. கீழ்மட்ட அளவிலான சில ஆவணங்கள் மட்டுமே டிஜிட்டல் வடிவில் இருக்கின்றன, கம்னியுஸ்டு கட்சியின் மேல்மட்ட கூட்டங்களின் அத்தனை முடிவுகளும் தீர்மானங்களும் மக்களுக்கோ வேறு எந்த அமைப்புகளுக்குமோ அளிக்கப்படுவதேயில்லை. அவை மிக மிக ரகசியமான இடங்களில் பலத்த பாதுகாப்புக்களுடன் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. விக்கிலீக்ஸ் போன்ற அமைப்புகளினால் அவற்றுள் எளிதில் ஊடுருவ முடியாது எனினும் கட்சியின் ஒரு சில நம்பிக்கையற்ற உறுப்பினர்களினால் அவை என்றாவது வெளியே வந்து விட்டால் அன்றே சீன கம்னியுஸ்டு கட்சியின், சர்வாதிகார அரசின் சாவு மணி அடிக்கப்பட்டுவிடும். கம்னியுசம் என்ற பெயரில் கோடிக்கணக்கான மக்களைக் கொன்று கொள்ளையடித்த செல்வத்தை அதன் தலைவர்கள் கூறுபோட்டுக்கொண்ட விபரங்கள் அனைத்தையும் விக்கிலீக்ஸ் கண்டு பிடித்து வெளியிடுமானால் சீனாவின் மக்களுக்கு விழிப்புணர்வு வந்த அதன் அராஜக அரசை நீக்கி ஒரு ஜனநாயக அரசைக் கொணரும் வாய்ப்புக்கள் உண்டு. அப்படி விக்கிலீக்ஸ் செய்ய முடியுமானால் மனித குலத்திற்கே அது செய்த மாபெரும் சேவையாக இருக்கும்.

censorshipchinese550

சீனாவின் அட்டூழியங்கள் அடங்கியுள்ள ஆவணங்களை அதன் உச்ச கட்ட பாதுகாப்புப் பிடியில் இருந்து மீட்பது கடினம். விக்கிலீக்ஸ்ஸின் திறமைகள் எல்லாம் இந்தியா, அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளில் மட்டுமே சாத்தியப்படும். ஆனால் ஊழல் நிறைந்த பல தேசங்களின் பல முக்கியமான ஆவணங்களை வெளியில் எடுத்து வெளியிடுவது அந்த அமைப்பிற்கு ஓரளவு சாத்தியமே. இந்தியா போன்ற நாடுகளில் அரசியல்வாதிகளும், அரசாங்கங்களும் செய்யும் பல ஊழல்களை விக்கிலீக்ஸ் ஓரளவுக்கு எளிதாகவே வெளிக் கொணர்ந்து விடலாம். சீனாவின் ஜனநாயக ஆர்வலர்களில் விருப்பப்பட்டியல் போல இந்தியாவின் ஊழலற்ற தூய்மையான அரசை விரும்பும் மக்கள் பட்டியலிட ஆரம்பித்தால் அதன் எண்ணிக்கை கட்டுக்கடங்காதவையாக நீண்டு கொண்டே போகும். அப்படியே சில முக்கியமான ஆதாரங்களை விக்கிலீக்ஸ் வெளியில் கொணர முடிந்தால் கூட இந்திய மக்களிடம் அவை ஏதும் பெரிய விளைவுகளையோ விழிப்புணர்வையோ கொண்டு வந்து விடுமா என்பதும் அதன் மூலம் மாற்றம் ஏதும் வருமா என்பதும் பெரிய கேள்விக்குறியே. இருந்தாலும் விக்கிலீக்ஸ் போன்ற விஸில் ப்ளோயர்கள் அவசியம் சில முக்கியமான ஆதாரங்களை வெளியிட்டே ஆக வேண்டும்.

விக்கிலீக்ஸின் கசிவினால் அமெரிக்காவின் பாகிஸ்தான் கொள்கைகளில் பெருத்த மாற்றமோ விளைவுகளோ ஏற்படாவிட்டாலும் கூட இந்த கசிவு ஒரு புதிய விவாதத்தை குறைந்த அளவிலேனும் துவக்கி உள்ளது ஒரு வரவேற்கத்தகுந்த மாற்றமே. இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் கூட விஸில் ப்ளோயர்கள் பலரும் கொல்லப்படுகிறார்கள் அல்லது அரசாங்கத்தினால் கைது செய்து சித்ரவதை செய்யப்படுகிறார்கள். இந்தியாவில் பல விஸில் ப்ளோயர்கள் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எலக்ட்ரானிக் வோட்டிங் மிஷினின் முடிவுகளை ஒரு கட்சிக்குச் சாதகமாக மாற்றி விட முடியும் என்று நிரூபித்த ஹரிப்பிரசாத் என்ற விஸில் ப்ளோயர் இந்திய அரசினால் கைது செய்யப்பட்டு அச்சுறுத்தப்படுகிறார். ஊழல்களை விசாரிக்க வேண்டிய செண்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன் என்ற அமைப்பின் தலைவராகவே ஊழல் குற்றச் சாட்டுக்கு உள்ளானவர் அமர்த்தப் படுகிறார், தேர்தல் கமிஷனின் தலமைக் கமிஷனராக ஒரு ஊழல் அதிகாரி நியமிக்கப் படுகிறார். இந்திய தலைமை நீதி மன்றத்தின் கடந்த 16 சுப்ரீம் கோர்ட் தலமை நீதிபதிகளில் 8 பேர்கள் பெரிய ஊழல்வாதிகள் என்று சாந்தி பூஷன் என்ற மூத்த வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் செய்த ஊழலைத் தன்னால் நிரூபிக்க முடியும் என்கிறார்.  ஊழலை எதிர்ப்பவர்கள் கொல்லப் படுகிறார்கள் அரசாங்கத்தினால் மிரட்டப் படுகிறார்கள், அடக்கப் படுகிறார்கள். இந்தியாவில் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் துவங்கி சாதாரண கடை நிலை ஊழியன் வரை ஊழல்களிலும் அராஜகத்திலும் ஆணாவத்திலும் உழலுகிறார்கள். இச்சூழலில் இந்தியாவின் விஸில் ப்ளோயர்கள் விக்கிலீக்ஸ் போன்ற ஒரு உலகளாவிய ஓரளவு சக்தி வாய்ந்த, விசில் ப்ளோயர்களுக்கு ஓரளவு பாதுகாப்பு அளிக்கக் கூடிய அமைப்புக்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டும். விக்கிலீக்ஸ்ஸின் வருங்கால நடவடிக்கைகள் உலகம் முழுவதும், இந்தியாவிலும் கூட ஒரு வரவேற்கத்தக்க ஆரோக்யமான மாறுதலைக் கொணரட்டும். அந்த மாறுதலுக்காக நம்பிக்கையுடன் நாமும் காத்திருப்போம்.