ஃபயர் ஸ்டார்டர் நாவலின் கடைசி பக்கத்தில் ஸ்டீபன் கிங் அந்த நாவலின் நம்பகத்தன்மை குறித்து ஒரு குறிப்பு எழுதியிருப்பார். அதில் சிஐஏ எப்படி அமெரிக்க மக்களின் மீதே அவர்களுக்கு தெரியாமல் ஆபத்தான வேதிப்பொருட்களை செலுத்தி பரிசோதனைகளை நடத்தியது என சொல்லியிருப்பார். அப்படியானால் மற்ற நாட்டு மக்கள் மீது என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பது சொல்லாமலே பெறப்படும். வியட்நாம் போரின் போதும் கம்போடிய பிரச்சனைகளின் போதும் பல அமெரிக்க தன்னார்வ அமைப்புகள் கருணை உதவி என்கிற பெயரில் ஆசிய அகதிகள் முகாம்களிலிருந்து இரத்தம் மற்றும் திசுக்களை சிஐஏ அமைப்புக்கு அனுப்பி வைத்ததாக சில ஆவணங்கள் கூறுகின்றன. இவை குறித்து ஆராய்ச்சி செய்த ஒரு அமெரிக்க சமூகவியல் பேராசிரியையை நான் தொடர்பு கொண்டபோது “அது நான் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியது. அதை நான் மறுக்க மாட்டேன். ஆனால் தயவு செய்து அந்த விஷயங்களைக் குறித்து திரும்ப நான் பேச விருப்பப்படவில்லை. அதை குறித்து என்னிடம் எதையும் கேட்காதே.” என சொல்லிவிட்டார். பல பத்தாண்டுகள் கடந்தாலும் அந்தப் பரிசோதனைகள் குறித்து வெளிப்படையாக பேசமுடியாதபடியான அச்சம் இன்றைக்கும் நிலவுகிறது. ஆனால் ஹாலிவுட்டில் இந்த விஷயத்தை வைத்து சில முக்கிய திரைப்படங்கள் வந்துள்ளன.
பனிப்போரின் இரு எதிரி முகாம்களுக்கும் மனவியல் ரீதியிலான உளவாளிகள், அதிமனவியல் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் எதிர்த்தரப்பு ஏதோ வியக்கத்தக்க முன்னேற்றம் அடைந்துவிட்டதாக அச்சம் இருந்த்து. ஹாலிவுட்டுக்கு இது நல்ல தீனி. 1977 இல் வெளிவந்த திரைப்படம் Telefon. தொலைபேசிக்கான ரஷிய வார்த்தை. சோவியத் யூனியன் உருவாக்கிய ஒரு சக்தி வாய்ந்த குழுமம் அமெரிக்காவின் முக்கிய ராணுவ மையங்களைத் தாக்க, அமெரிக்கா எங்கும் படர்ந்து கிடக்கிறது. இவர்கள் ரஷிய உளவாளிகள் அல்ல. சட்டத்தை மதித்து நடக்கும் அமெரிக்கக் குடிமகன்கள், குடும்பத் தலைவிகள். இவர்களது ஆழ்மனதில் எப்படி அருகிலிருக்கும் ஒரு ராணுவ கேந்திரத்துக்குள் நுழைந்து அதனை அழிக்க வேண்டும் என்பதற்கான மிகத்திறமையான வழிமுறைகள் ஹிப்னாட்டிஸம் வழியாக பிறப்பிக்கப்பட்டு தூங்கிக் கொண்டிருக்கின்றன. என்றைக்கு வேண்டுமானாலும் அவர்களை தொலை பேசியில் அழைத்து ராபர்ட் ப்ராஸ்டின் வரிகளை “woods are lovely dark and deep but I have promises to keep and miles to go before I sleep” எனச் சொன்னால் போதும் அவர்கள் அடுத்த நிமிடம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ராணுவ கேந்திரத்தை அழிக்கும் கொலை எந்திரர்கள் ஆகிவிடுவார்கள். சோவியத் உளவு அமைப்பான கேஜிபி ஸ்டாலினின் காலத்தில் உருவாக்கி பிறகு கைவிடப்பட்ட இந்த திட்டத்தை ஒரு மனம் பிறழ்ந்த கேஜிபி ஏஜெண்ட் செயல்படுத்த ஆரம்பிக்க அதனால் மூன்றாம் உலகப்போர் ஏற்பட அதனை தடுக்க அனுப்பப்படும் கேஜிபி ஏஜெண்டாக சார்ல்ஸ் ப்ரான்ஸன் வேலை முடிந்ததும், அவரைக் கொல்ல அனுப்பப்படும் அழகிய லீனா ரெமிக் இறுதியில் அமெரிக்கர்களாக மாற்றுமுகாம் தாவிவிட சுபம்.
பிறர் மனதைக் கட்டுப்படுத்தி அழிவு வேலைகளில் அவர்களை ஈடுபடுத்தும் உளவியல் உக்திகளை சிஐஏயும் சரி கேஜிபியும் சரி மேற்கொண்டிருக்கின்றன. இத்தகைய மனக்கட்டுப்பாடு பரிசோதனைகளின் மூலவடிவம் நாஸிகளின் வதை முகாம்களில் நாஸி “விஞ்ஞானிகளால்” உருவாக்கப்பட்டன.
சோவியத் யூனியனில் ஸைக்கோட்ரானிக்ஸ் என்கிற பெயரில் இந்த செயல்திட்டம் திட்டமிடப்பட்டது. சோவியத் அறிவியலாளரான இகார் ஸ்ம்ர்னோஃப் (Igor Smirnoff) வெளிப்படையாகவே தமது செயல் நோக்கம் “மக்களைக் கட்டுப்படுத்தவும் அவர்களின் மனதை ஒரு பாத்திரத்தைப் போல திறந்து அவர்களின் எண்ணவோட்டத்தை அறிவியலாளர் விரும்பும் விதத்தில் மாற்றி அமைக்கவும்” எனச் சொன்னார். மார்க்ஸிய இலக்கிய பிதாமகரான மாக்ஸிம் கார்க்கிக்கு கண்ணுக்குத் தெரியாத அதிசக்திகளில் நம்பிக்கை இருந்தது. உதாரணமாக மாக்ஸிம் கார்க்கி உள்ளச்சக்தியை பயன்படுத்தி நோய்களை குணமாக்க முடியுமென நம்பினார். நிகோலாய் ரோயிரிச் மாக்ஸிம் கார்க்கியுடன் மிகவும் தொடர்புடைய ஓவியர். பிரம்மஞானசபை கோட்பாடுகளில் ஆர்வம் கொண்ட ரோயிரிச்சின் சொல்வது உண்மையென்றால் கார்க்கிக்கு ஒரு ஹிந்து சன்னியாசி பல காட்சிகளை காட்டினாராம். அது கார்க்கியின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாம். இருக்கலாம். பௌதீக சக்தியும் மன ஆற்றலும் இணைந்த ஒரு ஆற்றல் இருப்பதாக கார்க்கி வெளிப்படையாகவே கூறிவந்தார். இத்தகைய கோட்பாடுகளை அதிகாரபூர்வமாக ஆராய்வதற்கு அவற்றுக்கு ஒரு மார்க்சிய மதவியல் பூச்சினை அளித்தவர் மார்க்ஸிய தத்துவவாதியும் விமர்சகருமான லிவ் வோலிட்டோவோஸ்கி (Lev Voitolovsky) என்பவர். இந்த பின்னணியில் நாம் 1930களில் உருவான கிர்லியன் புகைப்படத் தொழில்நுட்பம் பிரபலமடைந்ததை புரிந்து கொள்ள முடியும்.
1939 இல் செய்மோன் கிர்லியன் என்கிற ரஷிய விஞ்ஞானி தற்செயலாக அதிமின் அழுத்தத் தொடர்பு கொண்ட புகைப்படம் எடுக்கும் தகடில் வைக்கப்பட்ட பொருட்களை சுற்றி ஒளிவடிவங்கள் உருவாவதை கண்டார். இது அந்த பொருட்களின் உயிர்சக்தி எப்படியோ பதிவாவதுதான் என அவர் (தவறுதலாக) கருதினார். ஆனால் ஏற்கனவே உயர்நிலை மார்க்ஸியர்களில் இந்த கோட்பாடு நிலைபெற்றிருந்தது. அத்துடன் பூர்ஷ்வா உளவியலின் உளறல்கள் இல்லாத ஒரு உச்சத்தை மார்க்ஸிய உளவியலால் எட்ட முடியுமென்பதற்கு சான்று பகர்வதற்கும் கிர்லியன் புகைப்பட பதிவு பயன்பட முடியும். பயோ-ப்ளாஸ்மா என கிர்லியன் புகைப்படங்கள் காட்டும் ஒளிச்சிதறல்களுக்கு நாமகரணம் சூட்டினார்கள் சோவியத் ஆராய்ச்சியாளர்கள். ஒரு கட்டத்தில் இராணுவ இரகசிய உளவாளிகள் தேர்ந்தெடுப்பதற்கும் ஒலிம்பிக் வீர்ர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
மேற்கத்திய நாடுகளில் இந்த தொழில்நுட்பம் கசிந்த போது இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. வெளிப்படையான அறிவியல் விவாதங்கள் (சோவியத் பொன்னுலகில் சாத்தியமற்ற ஒன்று) கிர்லியன் புகைப்படம் காட்டுவது ஈரப்பதமும் இயல்பான மின்னோட்டங்களும் இணைந்து உருவாக்கும் இயல்பான வீச்சுக்களே அல்லாமல் சூட்சும உடலின் ஆற்றல் புலத்தையல்ல என்பது தெளிவானது.
ஆனால் பனிப்போரின் அச்சங்கள் வேறுபல அதி-உளவியல் மற்றும் ஆழ-உளவியல் பரிசோதனைகளை இரு முகாம்களிலும் நடத்தவைத்தது. இந்த பரிசோதனைகள் மனிதர்களுடன் நிற்கவில்லை. பனிப்போர் காலத்தில் டால்பின்கள் குறித்த பரிசோதனைகளில் ஏறக்குறைய 99 சதவிகிதம் அமெரிக்க கடற்படையின் நிதியாதாரத்தால் நடத்தப்பட்டவைதாம். மனித வார்த்தைகளை ஒரு கருவி மூலம் உயர்-கீச்சு ஊதல் ஒலிகளாக மாற்றி (டால்பின்கள் பயன்படுத்தும் ‘மொழி’களாக அல்ல) அவற்றுக்கு டால்பின்களை பழக்கப்ப்டுத்தி அதன் மூலம் கட்டளைகளை நிறைவேற்றும் பயிற்சி. எதிரி நீர்மூழ்கிகளின் ஒலி அதிர்வு கண்காணிப்பு எல்லைக்குள் டால்பின்கள் அனுப்பப்பட்டு அவற்றின் டார்பிடோக்களை ஈர்க்கும் (இதில் டால்பின் கொல்லப்படும்)
1973 இல் வெளிவந்த “The day of the Dolphin” டால்பின்கள் குறித்து தனியார் செய்யும் ஆராய்ச்சி ஒரு நிழலான அமைப்பினால் உதவப்பட்டு பின்னர் டால்பின்கள் அமெரிக்க ஜனாதிபதியை கொல்ல பயன்படுத்தப்பட இருந்து கதாநாயகனாலும் டால்பின்களின் உள்ளார்ந்த அமெரிக்க தேசபக்தியாலும் தவிர்க்கப்படும்.
இந்தத் திரைப்படமும் சரி அமெரிக்க கடற்படையின் டால்பினின் இராணுவ பயன்பாட்டு சாத்தியங்களுக்கான ஆர்வமும் சரி ஒரே நாணயத்தின் இருபக்கங்களே. இவற்றின் பின்னணியில் இருந்த அறிவியலாளர் ஜான் லில்லி. (இவரை இந்த தொடரில் ஏற்கனவே சந்தித்திருக்கிறோம்.) டால்பின்களுக்கு ஒரு சிக்கலான மொழி அமைப்பு இருக்கவேண்டும் என்பது இவரது ஊகம். இவரே டால்பின்கள் குறித்து மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கும் ஜனரஞ்சக அறிவியல் நூல்களை எழுதினார். ராணுவ பயன்பாட்டு சாத்தியங்களையும் பட்டியலிட்டார். கடலில் விழும் விண்வெளி கலங்களை மீட்டெடுப்பதிலிருந்து நியூக்ளியார் நீர்மூழ்கி கப்பல்களை காவல் காப்பது வரையாக பலவித பயன்பாடுகளுக்கு டால்பின்களை பயன்படுத்தலாம் என்பது அவர் கருத்து. டால்பின்கள் அன்பானவை இயல்பாகவே தாக்கும் குணமற்றவை என்றெல்லாம் லில்லி கூறினாலும் அவற்றிடம் அவர் அன்பை அப்படி பெரிதாக காட்டியதாக அவரது பரிசோதனைகள் தெரிவிக்கவில்லை.
டால்பின்களின் எதிரொலி புலனுணர்வு பிரதேசங்களை கண்டறிய அவற்றின் மூளைப் பிரதேசங்களில் எலக்ட்ரோடுகள் இறக்கப்பட்டன. அவை கடலிருந்து கைப்பற்றப்பட்டு ஏறக்குறைய சிறையாக ஒரு குளியல் தொட்டி போன்ற அமைப்பில் சிறைப்படுத்தப்பட்டு மிக்க்க்கொடுமையான பரிசோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டன. அவற்றின் இரத்தம் வடித்தெடுக்கப்பட்டு அதே அடர்த்தி கொண்ட கரைசல்கள் உடலுள் செலுத்தப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய ஆராய்ச்சிகள் சில அறிவியலாளர் குழுக்களிடையே மிகவும் பிரபலமடையவும் செய்தன. உதாரணமாக 1973 இல் அமெரிக்க ஆராய்ச்சி இதழ் ஒன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வுத்தாளில் ஒரு குறிப்பிட்ட காது பகுதியின் ஆராய்ச்சிக்கு புள்ளியல் தரவுகள் வேண்டுமென்பதற்காக 9 டால்பின்கள் கொல்லப்பட்டன. பிரிட்டனை சார்ந்த டால்பின் ஆராய்ச்சியாளர் பரூக் ஹுசைன் இத்தகைய ஆராய்ச்சிகளை கண்டித்து குரல் எழுப்பினார். இன்றைக்கு அமெரிக்க பல்கலைக்க்ழகங்களின் ஒழுக்கவியல் பேராசிரியர்கள் டால்பின்களை “மானுடரல்லாத ஆளுமைகளாகவே” மதிக்க வேண்டுமென குரல் எழுப்புகிறார்கள். இந்த பார்வை மாற்றமும் சில ஹாலிவுட் படங்களில் பிரதிபலிப்பதை காணலாம்.
ஆனால் பனிப்போர் யுகத்திலோ அதி-உளவியல் மற்றும் ஆழ-உளவியல் பரிசோதனைகள் என்கிற பெயரில் பல மூர்க்கத்தனமான மற்றும் முட்டாள்தனமான பரிசோதனைகளில் வல்லரசுகள் பணத்தை செலவிட்டன. சில நேரங்களில் எதிரியை இப்படி வீணாக செலவழிக்க வைக்க தம் பக்கத்து முட்டாள்தனங்களுக்கு உண்மை முலாம் பூசி பெரிதுபடுத்தி மறு முகாம்களில் பரவ்விடவும் இரு வல்லரசுகளும் தயங்கவில்லை.
உதாரணமாக சிஐஏ தயவில் நடத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட பரிசோதனையில் ஒரு மனிதரின் மூளைகளில் மின் தகடுகள் பொருத்தப்பட்டு அவருக்கு எல்.எஸ்.டி கொடுக்கப்பட்டது. பரிசோதனையின் நோக்கம்: தற்காலிகமாக ஒரு மனிதனை முழுமையாக செயலிழக்க வைக்கும் வேதிப்பொருளை கண்டுபிடிப்பது. மற்றொரு பரிசோதனையின் போது வேதிப்பொருள் ஊசி போடப்பட்ட சிஐஏ வேதியியலாளர் ப்ராங்க் ஓல்ஸன் பத்தடுக்கு மாடி அறையின் ஜன்னலிலிருந்து குதித்து இறந்தார். இது பின்னாட்களில் பெரிய பிரச்சனை ஆகியது. 1953 இல் ஓல்ஸன் இறந்த அதே ஆண்டு சிஐஏ வெளியிட்ட “படுகொலைகள் செய்யும் விதம்” குறித்த தொழில்முறை கையேட்டில் ஒரு மனிதனை கொலை செய்து அதனை விபத்து போல காட்ட சிறந்த வழி அவனது நெற்றிப்பொட்டில் அடித்து பிறகு குறைந்தது 75 அடி உயரம் கொண்ட மாடியிலிருந்து கீழே வீசுவதுதான் என சொல்லப்பட்டிருந்தது. ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கு பிறகு ஓல்ஸன் குடும்பத்தாரின் கட்டாயத்தால் ஓல்ஸனின் பிணம் தோண்டியெடுக்கப்பட்டு புலனாய்வுதுறையினரால் சோதிக்கப்பட்ட போது அவரது மண்டையோட்டில் நெற்றிப்பொட்டில் அடி கொடுக்கப்பட்ட தடம் இருந்த்து.
சோவியத் யூனியனின் ஸைக்கோட்ரானிக்ஸுக்கு சிஐஏ உருவாக்கிய இணை எம்கே அல்ட்ரா (MK ULTRA) என்பதாகும். இதில் டாக்டர். எவின் காமரோன் என்கிற மகானுபாவன் செய்த பரிசோதனைகள் அறிவியலாளர்கள் வரலாற்றுக்கே களங்கமானவை. இந்த பரிசோதனைகள் தொடங்கி அவற்றின் உச்சத்தை அடைவதற்கு முன்னதாக வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் மஞ்சூரியன் காண்டிடேட்(1952). இந்த நாவலின் கதையில் கொரிய போரின் போது அமெரிக்க போர் கைதிகளை காப்பாற்றி வந்த தீர செயலுக்காக ஜனாதிபதி பதக்கம் வாங்கும் ஒரு அமெரிக்க வீரன் உண்மையில் கம்யூனிஸ்ட்களால் மூளை சலவை செய்யப்பட்டவன். அமெரிக்க அதிபரை கொலை செய்ய. ஆனால் திரைப்படத்திலொ ஒருவித குடும்ப உணர்ச்சிகள் கலந்த ப்ராயீடிய சதி கதையாக மாற்றப்பட்டிருந்த்து. மகனை பயன்படுத்தி கொலை செய்ய முயலும் அன்னை.
சிஐஏ செய்யத் தொடங்கிய பெரிய ஒரு பரிசோதனைக்கு சொந்த மக்களையே பரிசோதனைசாலை எலிகளாக பயன்படுத்த அமெரிக்க பொது புத்தியில் ஒரு நியாயத்தை இந்த திரைப்படம் தூவியது எனலாம். எப்படி ஒரு மனிதனின் பழைய நினைவுகளை முழுமையாக அழித்து அவனது மூளையை தங்கள் இச்சைப்படி களிமண்ணாக பிசைந்து தாம் விரும்பும் கட்டளைகளை அளிக்கலாம் என்பதற்கான அந்த பரிசோதனைகள் எத்தனை பேரை பலிகொண்டன என்பது இன்னும் அவிழாத புதிர். இந்த பனிப்போர் பரிசோதனைகள் எக்ஸ்-மென் படத்தில் வூல்ப்வரைன் என்கிற பாத்திரத்தின் கடந்த காலமாக அரசல் புரசலாக காட்டப்படுவது நினைவிருக்கலாம். இப்போது இரகசியங்கள் எனும் பூட்டிலிருந்து வெளிப்பட்ட சிஐஏ ஆவணங்களில் இந்த MKULTRA பரிசோதனைகளுக்கு ஆளாக்கப்பட்ட மக்களில் பெரும்பான்மையோர் “மனநோயாளிகள்”,“பாலியல் வேற்றுவிழைவு கொண்டவர்கள்”, சிறுபான்மை இனத்தவர், அந்நியர்,என பெரும்பாலும் தொலைந்து போனால் அந்த நாட்களில் பெரும் பிரச்சனைகள் வராத மக்கள் குழுமங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஹெராயின் போதை மருந்து பழக்கத்துக்கு ஆட்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர்களை குணப்படுத்த நியமிக்கப்பட்ட மருத்துவர்களில் சிஐஏ மருத்துவர்கள் இருந்தனர். இவர்கள் குணப்படுத்துவதற்கு பதிலாக எல்.எஸ்.டி உட்கொள்ளும் மருத்துவ பரிசோதனைகளில் கலந்து கொண்டால் அதற்கு பரிசாக ஹெராயின் தருவதாக சொல்லி இந்த நோயாளிகளை பரிசோதனைகளில் பயன்படுத்தினர்.
கனடா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய இந்த பரிசோதனைகளுக்கு அரசாங்கங்கள் அணுகுண்டு உருவாக்க நடத்திய அதே முக்கியத்துவத்தை அளித்தன.
மிக முக்கியமாக கம்யூனிஸ்ட் நாடுகளின் தலைவர்களை குறிப்பாக கேஸ்ட்ரோவை கொலை செய்ய ஒரு மஞ்சூரியன் காண்டிடேட் கொலைகாரனை உருவாக்க சிஐஏ பெரும் முயற்சி எடுத்துள்ளது. இதில் ஹிப்னாட்டிஸம் மட்டுமல்ல அதீத மின் அதிர்ச்சியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மின் அதிர்ச்சி அளிக்கப்படும் போது அந்த நபருக்கு ஹெல்மெட் ஒன்று அணிவிக்கப்பட்டு அதில் ஆழ்மன ஆணைகளை ஒரு குரல் சொல்லிக் கொண்டே இருக்கும். மாண்ட்ரீல் மெக்கில் பல்கலைக்க்ழகத்தைச் சார்ந்த மனசிகிட்சையாளர் ஈவென் காமரான் (Ewen Cameroon) இந்த ஆராய்ச்சி திட்டத்தின் முக்கிய அச்சாக விளங்கியவர் என கருதப்படுகிறது. அவர் கருத்தின் படி 7 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 16 மணி நேரம் ஒருவருக்கு தீவிர மின் அதிர்ச்சியும் அளித்து அத்துடன் கட்டளைகளை தொடர்ந்து அவருக்கு ஒலித்துக் கொண்டிருக்கும் படி செய்தால் இரண்டு மாதத்துக்கு அவருடைய நடத்தை பரிசோதனையாளர் கொடுத்த ஆணைப்படி மாறி அமையும். (சுஜாதாவின் ”நில்லுங்க ராசாவே” சிஐஏயின் மூளைச்சலவை பரிசோதனைகளை அடிப்படையாகக் கொண்ட த்ரில்லர்) ஆனால் இப்படி நோயாளிகள், போர் கைதிகள், மாணவர்கள், சிறுபான்மையினர் என பலரை சீர்குலைத்து ஆராய்ச்சிகளை செய்து இறுதியில் சிஐஏ வந்த முடிவு அபாரமானது: இத்தகைய மூளைச்சலவை முறைகள் மூலம் உத்தரவாதமாக ஒரு திறமையான படுகொலையை நடத்த முடியாது. MKULTRA அதிகாரபூர்வமாகக் கைவிடப்பட்டது.
1995 இல் சிஐஏ தொலைதிருஷ்டி எனும் அதி-உள சக்தியை சோவியத் யூனியனை உளவறிய பயன்படுத்த முடியுமா என பரிசோதனை செய்த்தை ஒத்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட ஒருவர் போட்ட வழக்கால் இந்த நிலை உருவானது. ஆனால் சி.ஐ.ஏ இந்த தொலைதிருஷ்டி பரிசோதனைகளால் எந்த பலனுமில்லை என்பதுதான் முடிந்த முடிவாக அமைந்தது என தெரிவிக்கிறது. 1978 இல் ஒரு சோவியத் பாம்பர் விமானம் ஆப்பிரிக்க நாடான ஸயரில் தவறி இறங்கிய போது தொலைதிருஷ்டியாளர்களை பயன்படுத்தி அமெரிக்கா அந்த விமானத்தை சோவியத் கேஜிபிக்கு முன்னால் கைப்பற்றியதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் கூறுகிறார். ஆனால் அமெரிக்க ஜனாதிபதிகளின் மூளைத்திறன்கள் அப்படி ஒன்றும் நம்பத்தக்கவை அல்லவே?