எழுதுவதென்பது ஒரு சுய இன்பச்செயல்

dsc_4665

மூன்று வருடங்களுக்கு முன் என் பையனிற்கு மொட்டை அடிப்பதற்காக ஒப்பிலியப்பன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். தஞ்சை மாவட்டம் தஞ்சை மாவட்டமாக இருந்தது – பசுமையாக. ஆச்சரியமாக காவேரியில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. என் தந்தையாரின் பூர்வீகம் தஞ்சாவூர் பக்கத்திலுள்ள மஹாதானபுரம். அவர் படித்தது தஞ்சையில். தாத்தாவிற்கு தஞ்சையில் ஒரு பெரிய வீடு இருந்திருக்கிறது.

தஞ்சாவூர் அருகிலுள்ள கோவில்களுக்குச் சென்று விட்டு தஞ்சாவூரிலிருந்து கோவைக்கு புகைவண்டி பிடிப்பதாகத் திட்டம்.

“மாதவா, ட்ரெயினுக்கு இன்னும் மூணு மணி நேரம் இருக்கு… செத்த ஒரு எட்டு போய் நாங்க இருந்த ஆத்த பாத்துட்டு வந்துடலாமா?”

“இங்கேருந்து எவ்வளவு தூரம்பா?”

“ஆட்டோல போனா இருபது நிமிஷத்துல போயிடலாம்”

“சரிப்பா”

ஆட்டோ சந்து பொந்துகளைக் கடந்து சென்றது.

“ஆ… வந்தாச்சு… அந்த நாலுகால் மண்டபம் முன்னாடி நிறுத்துப்பா”

அப்பாவிற்கு ஐம்பது வயது குறைந்தது.

“அதோ… அங்க ஒரு இடிஞ்ச வீடு இருக்கு பார், அப்பல்லாம் அந்த வீடு ரொம்ப ஃபேமஸ். ஒரு தேவதாசி அங்க இருந்தா. இதோ இந்த நாலுகால் மண்டபத்துலதான் பெரிய பெரிய ஜாம்பவான்லாம் கச்சேரி பண்ணியிருக்கா. இந்த ஆஞ்ஜநேயருக்கு முன்னாடி கச்சேரி பண்ணனும்னு எல்லா வித்வான்களுக்கும் ஆசை. மூர்த்தி சின்னதுன்னாலும் கீர்த்தி பெருசு.

அதோ அதுதான் என் ஃப்ரெண்டு  கெளரிஷங்கரோட வீடு. மராட்டி. சின்ன வயசுல நம்ம ஆத்துக்கு வந்துருக்கான். செக்கச் செவேல்னு இருப்பான். நீ கூட பாத்திருப்ப. அவன் போய்ட்டான், அவன் ஒய்ஃப் மாத்திரம் இங்க இருக்கா, வா பாத்துட்டு வந்துடலாம்”

ஒரு பெரிய, பழைய வீட்டிற்குள் நுழைந்தோம்.

முன்பொரு காலத்தில் அழகாக இருந்திருக்கக்கூடிய ஒரு மாமி வந்தாள்.

“யாரு… ஓ பாபு அண்ணாவா… வாங்கோ வாங்கோ. யாரு உங்க பையனா?”

”ஆமாம்… அமெரிக்கால இருக்கான். பழைய எடத்தல்லாம் காட்டலாம்னு கூட்டிண்டு வந்தேன்”

கெளரிஷங்கர் பற்றி பேச்சு நகர்ந்தது. “அவர் எப்பப் பாத்தாலும் ஒங்களப் பத்தியே பேசிண்டிருப்பார் அண்ணா”.

இருவர் முகத்திலும் கலக்கம் தெரிந்தது. சிறிது நேரம் பேசிவிட்டு  “சரி. அப்ப நாங்க வரோம். ட்ரெயினுக்கு நேரமாயிடுத்து”

“என்ன ஒரு வா காப்பி கூட குடிக்காம?”

“இல்ல இப்பதான் மத்தியானச் சாப்பாடு ஆச்சு. பரவாயில்லை”

சிறிது தூரம் நடந்தோம்.

“அதோ அங்க பார் எங்க வீடு. அப்படியே இருக்கு.”

வீட்டில் மாற்றம் ஏதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை, வெளியில் அடிக்கப்பட்ட புதுச்சாயம் தவிர. ஆஜானுபாகுவாக, அதே சமயம் அடக்கத்துடன் நின்று கொண்டிருந்தது வீடு. என் கடமைக்கு நான் புகைப்படம் எடுக்கத் தொடங்கினேன்.

நட்ட நடு ரோட்டில் நின்று கொண்டு நாங்கள் வீட்டை வெறித்துப் பார்ப்பதைப் பார்த்தாள் ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு பாட்டி.

“யாரு?”

“அம்பது வருஷத்துக்கு முன்னாடி, நாங்க இந்த வீட்ல இருந்தோம்” என்றார் அப்பா. பாட்டிக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை.
“இது என்னா கேமராவா, என்ன ஒரு போட்டோ எடுக்கறயா?” என்றாள். எடுத்தேன். “எனக்கு அனுப்பு” என்றபடி தன் வழியே நடக்கத் தொடங்கினாள்.

பல நிமிடங்கள் வீட்டைப் பார்த்தபடியே நின்றிருந்தார் அப்பா. “அதோ மாடில ஜன்னல் தெரியறதே…அதான் என்னோட ரூம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் மெளனமானார்.

—oooOOOooo—-

அப்பாவின் மெளனம், இயன் மெக்கீவனின் (Ian McEwan) ‘பிராயச்சித்தம்’ (Atonement) நாவலில் வரும் ஒரு பத்தியை நினைவுபடுத்தியது. அக்கதையின் முக்கிய கதாபாத்திரம், தான் ஐம்பது வருடத்திற்கு முன் வசித்த லண்டனிலுள்ள ப்ளூம்ஸ்பரி என்ற இடத்தை ஒரு டாக்சியில் கடப்பாள். அப்போது  அவள் மனதில் இந்த சிந்தனைகள் ஓடும், “ஓரு வயதுக்குப் பிறகு நகரத்தினூடே பயணம் செய்தல் துயரமிக்க நினைவுகளை கொண்டு வருகின்றது. இறந்தவர்களின் முகவரிகள் குவிந்துகொண்டே போகின்றன… ஒரு நாள் நானும் ஒரு வழிப்போக்கனின் மனதில் நொடி நேர நினைவைத் தோற்றுவிப்பேன்.”  (“Beyond a certain age, a journey across the city becomes uncomfortably reflective. The addresses of the dead pile up… One day I too will prompt a moment’s reflection in the passenger of a passing cab”.)

—oooOOOooo—-

ian-mcewan-1024x6821

மெக்கீவன் இங்கிலாந்தின் புகழ்பெற்ற எழுத்தாளர். சல்மான் ரஷ்டி, மார்ட்டின் ஏமிஸ் ஆகியோரது நண்பர். ஓரு நல்ல கதாசிரியன் தத்துவத்திலும், மனோதத்துவத்திலும் தேர்ந்தவனாக இருக்க வேண்டும். மெக்கீவன் சிறந்த மனோதத்துவவாதி மட்டுமல்லாமல், ஒரு சிறந்த ஆராய்ச்சியாளரும் கூட. ஒரு சிறு பெண்ணின் செயலை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையான அடோன்மண்ட்டை எழுதுவதற்காக மெக்கீவன் மனோதத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்ததாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

மெக்கீவன் காலத்தின் கடிவாளங்களை தன் கைகளில் வைத்திருக்கிறார். கடிவாளத்தை இழுத்து காலத்தை எப்போது விரைவு படுத்தவேண்டும், எப்பொழுது தளர்த்த வேண்டும் என்பதை நன்கு அறிந்திருக்கின்றார். இந்த உத்தி அவரது ‘பிராயச்சித்தம்’ (Atonement), ‘செஸில் கடற்கரையில்’ (On Chesil Beach) என்ற இரு கதைகளிலும் நன்கு தெரிகிறது. அடோன்மண்ட்டின் முதல் நூறு பக்கங்களுக்குக் கதை நகராமல் ஒரே இடத்தை சுற்றிக் கொண்டிருப்பதாகத் தோன்றும். 1930களில் லண்டன் அருகிலுள்ள ஒரு பணக்கார குடும்பத்தில் நடக்கும் கோடைகால நிகழ்வுகளை வர்ணித்திருப்பார் மெக்கீவன் – குழந்தைகளின் நாடக ஒத்திகை, விடுமுறைக்காக நகரத்திலிருந்து வரும் அண்ணன், அக்கா, சித்தியின் குழந்தைகள் செய்யும் அட்டகாசங்கள், அக்காவுடன் படிக்கும் தோட்டக்காரரின் மகன் – என்பனவாக விரியும் காட்சிகள். 

“செஸில் கடற்கரையில்” 60களில் நடக்கும் கதை. திருமணம் முடிந்து முதலிரவுக்காக செஸில் கடற்கரைக்குப் போகும் ஒரு ஜோடி. இருவரும் முன் அனுபவம் இல்லாதவர்கள். அவர்களின் ஐயங்கள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், அவர்களின் குடும்பப் பின்புலம் ஆகியவைப் பற்றி  கதையின் முக்கால்வாசிப் பகுதிக்கு விவரிக்கிறார் ஆசிரியர். காலத்தை ஒரு அறையில் அடைத்து வைத்தும் பின்னோக்கி நகர்த்தியும் அடக்கி ஆள்கிறார். கடைசி சில பக்கங்களில், வெறிகொண்ட குதிரையோட்டி போல் சாட்டையைச் சுழற்றி காலத்தை ஒட வைக்கிறார். மனித மனங்களின் ஆழங்களை வைத்து கதைகளை வடித்திருந்தாலும், மெக்கீவனின் கதைளைப் படிக்கும் போது, சிறந்த துப்பறியும் கதைகளைப் படிக்கும் போது ஏற்படும் பரபரப்பு உண்டாகின்றது.

“நான் எழுதும்போது கதைக்கருவைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ‘நுண்ணிய தகவல்களை வாஞ்சையுடன் அணுகு’ என்று நபகோவ் கூறியதை மனதில் கொள்கிறேன். எழுதுவதென்பது கீழிருந்து மேல்நோக்கிச் செல்லும் செயல். இலக்கியத்தைப் பற்றி பேசும்போது நாம் அது தரும் இன்பத்தைப் பற்றி பேச மறந்துவிடுகிறோம். அது படிப்பவனுக்குத் தரும் இன்பத்தைப் பற்றி மட்டும் அல்ல, எழுதுபவனுக்கு கூட. எழுதுவதென்பது ஒரு சுய இன்பச் செயல்” என்கிறார் மெக்கீவன், நியூயார்க்கர் பேட்டி ஒன்றில். மெக்கீவன் மாந்திரீக யதார்த்தவாதத்தைத் தவிர்த்து யதார்த்தில் தன் கதைகளை அமைத்திருக்கிறார். மேலும் அப்பேட்டியில் “இருப்பதைக்கொண்டு ஒரு உருப்படியான கதை படைத்தால் அது போதும் எனக்கு. கதாபாத்திரங்களுக்கு சிறகு முளைத்து ஜன்னல் வழியே வெளியே பறக்கத் தேவையில்லை” என்கிறார்.

—oooOOOooo—-

atonementஅடோன்மண்ட் மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி 1935ல் இங்கிலாந்து அருகே ஜாக் டாலிஸ் என்ற பணக்காரரின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டிருக்கிறது. ஜாக் டாலிஸின் பதிமூன்று வயது ப்ரயனி தன் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகளைக் கொண்டு நாடக ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறாள். தோட்டக்காரன் ராபிக்கு ப்ரயனியின் அக்காவான செசிலியா மேல் ஒரு கண். காதல் மலர்கிறது, காதல் காமமாகிறது. புத்தக அறையில் ராபியும் செசிலியாயும் உச்சகட்டத்தில் இருப்பதைப் பார்த்து விடுகிறாள் ப்ரயனி. ஒன்றும் புரியாத வயது. எல்லோரும் இருவு சாப்பாட்டிற்காக உட்காரும்போது, வீட்டிற்கு வந்த இரு வால்கள் (சித்தியின் பையன்கள்) காணாமல் போகிறார்கள். ராபி அவர்களைத் தேடிக்கொண்டு போகிறான். தோட்டத்தில் சித்தியின் பெண் லோலா கெடுக்கப் படுகிறாள். ராபியின் மேல் பழியைப் போடுகிறாள் ப்ரயனி. காவலர்கள் ராபியைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள்.

இரண்டாம் பகுதி இரண்டாம் உலகப் போரைக் காட்டுகிறது. ராபி டன்கிர்க் என்ற இடத்தில் போர் புரிந்து கொண்டிருக்கிறான். போரில் இங்கிலாந்து வீழ்ச்சி அடையக்கூடிய சூழ்நிலை. போரின் கொடுமை விரிவாகச் சொல்லப்படுகிறது. ராபியைப் பிறிந்த செசிலியா வீட்டை விட்டு வெளியேறி செவிலியாகிறாள்.

மூன்றாம் பகுதி. லோலாவைக் கெடுத்தது ராபி அல்ல என்பதை உணர்கிறாள் ப்ரயனி. தன் தவறுக்கு ப்ராயச்சித்தமாக தானும் ஒரு செவிலியாகிறாள். போரில் அடிபட்டு வரும் வீரர்களுக்கு பணிவிடையாற்றுகிறாள். ராபியையும் செசிலியாவையும் சேர்த்து வைப்பதற்கு முயற்சி செய்கிறாள். ஒரு காலத்தில் எழுத்தாளராக வேண்டும் என்று கனவு காண்கிறாள்.

நிறைவுப் பகுதி 1999ல் லண்டனில் இடம்பெருகிறது. ப்ரயனி பெரிய கதாசிரியை ஆகிவிட்டாள். அவளது 77வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக அவளது பேரப்பிள்ளைகள் அவள் 64 வருடங்களுக்கு போட நினைத்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்.

—oooOOOooo—-

“முடிவுகளை நிர்ணயிக்கக் கூடிய சர்வ வல்லமை படைத்ததால் கடவுளுக்கு ஒப்பான கதாசிரியைக்கு ஏது பிராயச்சித்தம்?” என்று ப்ரயனி கூறுதாக கதையை முடிக்கிறார் மெக்கீவன். (How can a novelist achieve atonement when, with her absolute power of deciding outcome, she is also God?)

—oooOOOooo—-

ஐம்பது வருடங்கள் கழித்துப் பார்க்க நேர்ந்த பூர்வீகவீட்டு முன் மெளனமாக நின்றிருந்த அப்பாவிடம் கேட்டேன்:

“அப்பா…உள்ள போய் பாக்கலாமா?”

“இல்லடா… கெளம்பலாம் வா… ட்ரெயினுக்கு நேரமாயிடும்”.