உலைகலனாகுமா தமிழகம்? – கோவை நிகழ்வை முன்வைத்து

மாறும் மக்கட்தொகையின் அச்சுறுத்தும் சவால்களும் உன்னத சாத்தியங்களும்

 இரு சமீபத்திய செய்திகள் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன.  ஒன்று கோவையில் நடந்த சம்பவம், இன்னொன்று சென்னை சட்டசபையின் புதுக்கட்டிட வளாகத்தில் நிகழ்ந்தது.

முந்தையது நாடெங்கும் உள்ள இந்திய நகரங்களில் இந்நாட்களில் அடிக்கடி நடக்கும் அத்து மீறல் சம்பவங்களில் இன்னொன்று. எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் நாட்டின் பல நகரங்களில் ஒன்றில் யாரோ ஒரு இளைஞன் ஒரு பெண்ணிடமோ, பெண்களிடமோ தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும், அந்தப் பகுதி மக்கள் பிடிபட்ட இளைஞனை நையப் புடைத்து வீசியதாகவும் ஒரு செய்தி இருக்கும்.  அல்லது சில மோசமான சம்பவங்களில் அந்த இளைஞன் நிர்வாணமாகத் தெருக்களில் நடத்தப்பட்டுப் போலிசில் ஒப்படைக்கப்பட்டிருப்பான், அல்லது அந்த இளைஞன் ஒரு பெண்ணைக் கொன்றிருப்பான்; அல்லது அவள் முகத்தில் அமிலத்தை வீசி இருப்பான், இப்படிப் பலக் குரூரச் செய்திகள்.

பத்திரிகைகள் தேடிப் பிடித்து இவ்வகைச் செய்திகளைப் பிரசுரிக்கின்றன என்றே சொல்லலாம்.  தமிழகமும் இந்த வகையிலான அத்து மீறல் சம்பவங்களிலிருந்து தப்புவதில்லை.  தமிழர்கள் மிகவும் கண்ணியமானவர்கள் என்று நம்மிடையே பரவலாக ஒரு நம்பிக்கை இருக்கிறதுதான், ஆனால் தம் பெண்களைக் குடும்பங்கள் பொத்திப் பாதுகாப்பதில் இருந்தே தெரியும் நம் வாலிபர்கள் மீது நமக்கு ஒன்றும் பெரிய அளவில் நம்பிக்கை இல்லை என்று.  இது அவர்கள் ஏதோ தறுதலைகளாகத் திரிகிறார்கள் என்பதால் இல்லை, வாலிபப் பருவம் அத்து மீறல்களால் ஈர்க்கப்படும் பருவம் என்ற கருத்து நம் பண்பாட்டில் ஊறிப் போய் இருக்கிறது.  இது தமிழகத்துக்கு மட்டுமான ஒரு நடத்தை அல்லது பண்பாட்டுப் பிரச்சினை இல்லை. இந்தியாவெங்கும் இந்த வகையான பொது அணுகல்தான் இருக்கிறது.

ஆனால் எல்லா அத்துமீறல்களும் ஒரே போன்ற விளைவைக் கொடுப்பதில்லை.  வெறும் சீண்டலாகட்டும், அதற்கு மேற்பட்ட வன்முறையின் சாயம் இறங்கிய வேறு ஏதோவொரு நடத்தையாகட்டும், எல்லா இளைஞர்களையும் சூழலில் உள்ளவர்களோ, குடும்பங்களோ, சமூகமோ தண்டித்து விடுவதில்லை.  சில அடையாளங்கள் உள்ளவர்கள் மீது தண்டனை உடனே பாயும், அதிலும் நகரங்களைவிட கிராமங்களில் தண்டனைக்கான வாய்ப்பும் கூடுதலாயிருக்கிறது. அந்த வாலிபர் எந்த சமூகத்தில் இருந்து வந்தவராக அடையாளம் காணப்படுகிறார் என்பதைப் பொறுத்தும் தண்டனை கூடும், குறையும், உடனே பாயும், ஒத்திப் போடப்படும். நீதி பலவிதம். இதைப் பெரும் அறப்பிறழ்வு என்று கோஷம் போடவும் இந்தியாவில் ஒரு கூட்டமே இருக்கிறது.  இதற்குத் தொழிலே இப்படிக் கோஷம் போட்டுப் பிராபல்யம் அடைவதுதான். 

நீதி என்பது இந்தியாவில் மிகவுமே எலாஸ்டிக் நாடா போன்றது.  அதை ஒரு உறுதியான அளவு கோலாக ஆக்க வேண்டும் என்று பலர் வற்புறுத்துகிறார்கள்.  ஆனால் அவர்களும் சட்டத்தின் முன் நிற்பவர்கள் தம்மைச் சேர்ந்தவர்கள் என்றால் நீதி நீக்குப் போக்காக இருக்க வேண்டும் என்று கொடி பிடித்து ஊர்வலம் கூடப் போவார்கள்.  இது இந்தியரின் முரண்கள் நிறைந்த மனப்பாங்கு.  இதெல்லாம் முரண்கள் நிறைந்த பார்வைகள், நடத்தைகள் என்பதையும் அவர்கள் அவ்வளவு எளிதாக ஒத்துக் கொள்ளவும் மாட்டார்கள், அது வேறு ஒரு பிரச்சினை.

இந்தச் சம்பவம் கோவை நகரில் நடந்தது. அடையாளம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இது நன்கு வெளிக்காட்டியது.  இது வெறும் ஒழுக்கப் பிரச்சினையாகவோ, நீதிப் பிரச்சினையாகவோ நிற்கவில்லை. ஒரு பெரும் பொருளாதாரப் பிரச்சினையாகவும், சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகவும் எல்லாம் மாறுகிறது.  காரணம் இளைஞர்கள் வடக்கிந்திய உதிரித் தொழிலாளிகள், இடம்பெயர்ந்து வந்த உழைப்பாளிகள்.  ஒரு சாதாரண ஒழுக்கப் பிரச்சினை அல்லது ஒழுங்குப் பிரச்சினை பல்லாயிரம் மக்களை அலைக்கழித்து நிஜமாகவே தெருவில் நிறுத்தி விட்டது.  இதனால் ஏற்பட்ட நஷ்டம் இந்த சம்பவத்தோடு சிறிதும் சம்பந்தமில்லாத எத்தனையோ பேரின் வாழ்வுக்கு உலை வைத்ததாகி இருக்கிறது.  அதனால் இங்கு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

கோவை நகரில்,  குறிச்சி பகுதியில் ஒரு பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொண்ட அந்த இரு வட இந்திய இளைஞர்களும் தங்கள் செயல் கோவை மாவட்டத்தில் எப்படிப்பட்டத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்  என்று யோசித்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இந்த அறப்பிறழ்வின் காரணம்  வயதுக் கோளாறாக மட்டுமல்ல, வாழ்வின் அழுத்தங்களுக்குத் தனிமனிதர்கள் ஈடு கொடுக்கும் விதத்தில் ஏற்படும் குறைகளாகவும் இருக்கலாம்.  சில நேரங்களில் தனி மனிதர்கள் வாய்ப்பு கிட்டியது என்றெண்ணி இழைக்கும் குற்றமாகவும் இருக்கலாம். 

நாம் தமிழகமெங்கும் இவ்வகையிலானப் பிரச்சினைகளைப் பற்றி தினமும் கேள்விப்படுகிறோம். தனிமனித நடத்தைப் பிறழ்வாக  இது கையாளப்பட்டிருக்கலாம், ஆனால் அப்படி நடக்கவில்லை.  அவர்கள் செய்த குற்றத்தின் எதிர்வினையாக, கூலி வேலை செய்து பிழைக்க வந்திருந்த ஒட்டு மொத்த வட இந்தியர்களின் மீதும் அங்கிருந்த மக்களுக்கு அவநம்பிக்கையும் கசப்பும் ஏற்பட்டது. தங்கள் பகுதியை விட்டு அந்நியர்கள் வெளியேற வேண்டும் என்று அவர்கள் கொந்தளித்ததன் விளைவு: கோவையில் உள்ள இருபத்தைந்தாயிரம் சிறு தொழிற்சாலைகளில் அதுவரை வேலை செய்துக் கொண்டிருந்த சுமார் ஒரு லட்சம் வட இந்தியர்களில், நாற்பதாயிரம் பேர் கோவையை விட்டு இதுவரை  வெளியேறியிருக்கின்றனர். இதனால் தொழில் உற்பத்தியில் முப்பது சதவிகித அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள் சிறு மற்றும் குடிசைத் தொழில் முனைவோர் சங்கத்தினர். கோவை மாநகர ஆட்சியாளர் பி. உமாநாத் இந்தத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றே  அறிவித்தாரென்றால், சிறுதொழில் அமைப்புகள் இவர்களை எந்த அளவுக்கு நம்பி இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த நிகழ்வு அந்தத் தொழிலாளர்கள் ‘அந்நியர்’ என்று நம் மக்களால் பார்க்கப்படுவதாலா என்றால். அதுவும் ஒரு காரணம் என்றுதான் சொல்ல முடியும். அந்தத் தொழிலாளர்கள் உள்ளூரில் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சிதறடித்து விட்டார்கள், இந்தச் சம்பவத்தை வைத்து அவர்களை வெளியேற்ற அங்கிருப்பவர்களுக்கு ஒரு சாக்கு கிட்டியது என்பதாலா அப்படி ஒரு கொந்தளிப்பு?  வேறேதோ பிரச்சினைகள் ஏற்கனவே இருந்து மக்களின் மனதில் கொதிப்பு இருந்தது, இந்தச் சம்பவத்தில் அதெல்லாம் சேர்ந்து பொங்கி வழிந்தது என்று சொல்ல முடியுமா ?  நம் செய்திப் பத்திரிகைகள் அது பற்றி எல்லாம் ஆய்வு செய்து செய்திகளைப் பிரசுரிப்பதில்லை. நாம் நேரில் போய்ச் சில வாரங்களாவது தங்கி இருந்து தகவல் சேகரித்தால்தான் நமக்கு முழு விவரம் கிட்டும்.

இங்கு கருதப்பட வேண்டியது, அடையாளம் என்பது குறிப்பிட்ட மனிதர்களுக்கு எதிராக எவ்வளவு சுலபமாகத் திரிக்கப்படுகிறது, அவ்வாறு அது அவர்களுக்கு எதிரான ஆயுதமாகிறது என்பனவற்றைதான்.  அதுவும் அடையாளம் காணப்பட்டு நிகழ்த்தப்படும் வன்முறை தனி மனிதரை மட்டும் தாக்கி ஓய்வதில்லை,  அவரது குழு என்று கருதப்படுபவர்கள் அனைவரும் இவ்வகை வன்முறைக்கு பலியாகிறார்கள். அருகில் இருக்கிறார்களோ, தூரத்தில் இருக்கிறார்களோ, சம்பந்தப்பட்டவரோ இல்லை எந்த உறவுமற்றவரோ, அதெல்லாமும் ஒரு பொருட்டில்லை,  திடீரென்று ஒரு கொதி நிலையில் அடையாளமே ஒரு  எதிரியாகி, எதிரியாக்கியும் விடுகிறது.

அடையாளம் சார்ந்த விரோத பாவங்கள் இப்படி தனி மனிதரளவில் நிற்காமல் குழுக்களையே தாக்குகின்றன என்பது மனித இனத்தின் பிரச்சினை.  உலகமெங்கும் இந்தப் போக்கு உண்டு.  ஏதோ இந்தியா மட்டும்தான் இப்படி ‘இழிவாக’ நடந்து கொள்கிறது, இந்தியர் மட்டுமே மிருகமாகிறார் என்றில்லை. அதற்காக, மற்றவர்கள் மாறிய பிறகு நாம் இந்தப் பிரச்சினையை எடுத்துக் கொள்ளலாம் என்று மெத்தனமாக இருக்கவும் முடியாது. 

அமெரிக்கத் தேர்தல்கள் பலநேரம் இப்படித் தனிமனிதப் பிறழ்வுகளை ஏதோ ஒரு இனக்குழு அல்லது அடையாளக்குழுவுடன் சம்பந்தப்படுத்தி அதைத் தேர்தலில் ஒரு காரணியாக, பிரச்சினையாகக் காட்டி எதிர் கட்சிகளைத் தோற்கடிக்கும் உத்தியாகப் பயன்படுத்துவது சகஜமாகவே நடக்கிறது.  அமெரிக்க நகரங்கள் அவ்வப்போது போர்க்களமாகி இனக்குழுக்களிடையே நடக்கும் மோதலில் பெருநாசம் நேர்வது கடந்த நூற்றாண்டில் பலமுறை நேர்ந்தது.  இதே போல பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, ஃப்ரான்ஸ் என்று மிக முன்னேறிய ஜனநாயக நாடுகளென்று சொல்லப்படுவனவற்றில் எல்லாமும் இந்தப் பிரச்சினைகள் இருக்கின்றன.

சில கிழக்கைரோப்பிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான பேர் வன்முறையால் துரத்தப்பட்டு குடிபெயர்ந்து அகதிகளாகக் கூட வாழும் அவலம் நேர்கிறது.  சமீபத்தில் ரோமா எனப்ப்டும் ஜிப்ஸிக்களை ஃப்ரெஞ்சு அரசே நாடு கடத்தி இருக்கிறது, அடையாள அரசியலுக்கு அத்தனை சக்தி.  இத்தனைக்கும் ரோமா எனப்படும் மக்கள் யூரோப்பில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே வாழ்ந்து வரும் மக்கள்தாம்.  இருந்தும் அவர்களுக்குக் குடிமக்கள் என்ற அங்கீகாரம் சுலபமாகக் கிட்டுவதில்லை.

ஏன் தமிழருக்கே பம்பாயில், கர்நாடகாவில் எல்லாம் இத்தகைய அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.  தில்லி, கல்கத்தா, ஆந்திரப் பிரதேசம், கேரளா போன்ற பல பகுதிகளில் தமிழர் இன்னமும் வெளிப்படையாகவே இழிவையும், ஏளனத்தையும் அநீதிகளையும் எதிர்கொண்டே வாழ்கின்றனர்  தமிழகத்திலும் தமிழர் பிறமொழி மக்களுக்கு பெரிதாக ஒன்றும் இன்முகம் காட்டி விடுவதில்லை. பலபண்பாட்டியம் என்ற கருத்து நம் அரசியல் அரங்கில் அதிகாரத்தில் இருப்பது போல ஒரு பாவனை படித்த இந்தியரிடையே இருக்கிறதென்றாலும், கொஞ்சம் தோலைச் சுரண்டினால் ஒவ்வொரு பகுதி மக்களிடமும் சகிப்பின்மையும், அந்நியரை ஒதுக்க வேண்டும் என்ற கருத்தும் இருப்பது வேகமாகவோ, மந்தமாகவோ வெளிவரும்.

சகிப்பின்மை சகஜம், அதன் வேகமும் வீரியமும்தான் பல தரத்ததாக இருக்கிறது.

இது மொத்த நாடுமே இன்னும் ஜனநாயகப்படவில்லை என்பதை மறுபடி மறுபடி நமக்கு வெளிக்காட்டுகிறது.  பிற நாடுகளிலும் இந்தப் பிரச்சினை இருப்பதால் இந்தியா மட்டும் ஜனநாயகப்படவில்லை என்று சொல்வது சரியா எனக் கேள்வி எழும்.

நாம் உலகில் உள்ள பழம்பெரும் நாகரிகங்களில் ஒன்றில் வாழ்கிறோம். நம் இலக்கியம், பண்பாடு, அறம், மதம், தத்துவம், தர்க்கம், மேலும் கலைகளோடு சேர்த்து அரசு நெறிகள் என்று பார்த்தால் சில ஆயிரம் வருடம் போல நமக்குரிய பாரம்பரியத்தைக் காட்ட முடியும்.  நாமே இன்னும் ஜனநாயகப் படவில்லை, நாகரீகமான மக்களாகப் பரிணமிக்கவில்லை என்றால் வேறு யார் அப்படி எழப் போகிறார்கள்? இப்படி வரலாற்றுப் பார்வையை முன்வைத்து நோக்கினால், வேறெந்த மக்களையும் விட இந்தியரும், குறிப்பாகத் தமிழரும் பண்பாட்டிலும், பிறருடன் பழகுவதிலும் பெரும் சகிப்புத் தன்மையையும், தாராள மனோபாவத்தையும் காட்ட வேண்டும் என்பது ஒரு நியாயமான எதிர்பார்ப்பாகவே இருக்கும். 

உலக நாகரீகத்துக்கும், அறத்துககும் முன்னோடியாகத் தமிழர் இருக்க வேண்டுமே தவிர உலகளாவிய காட்டுமிராண்டித்தனத்துக்கு இன்னொரு எடுத்துக் காட்டாக நாம் இருப்பது தகாது.  ஆனால் விசித்திரம் பாருங்கள், வரலாற்றுப் பார்வை என்பதில் கூட நம் கவனம் வசதியாக இருக்கும் இடங்களில் மட்டும் துடிப்போடு செயல்படுகிறது, இதர இடங்களில் பெரும் நினைவிழப்பே காணப்படுகிறது.  நம் பழம்பெருமையைச் சொல்லி மார் வீங்கி தலை வீங்கி நடப்பதென்றால் எல்லாருக்கும் வெல்லக் கட்டியாக இனிக்கிறது.  ஆனால் இத்தனை பாரம்பரியம் மிக்க மக்கள் ஏனைய அனைவருக்கும் இருகரம் திறந்து வரவேற்பல்லவா காட்ட வேண்டுமென்றால் அங்கு தமிழரின் பாரம்பரியம் காணாமல் போய், நிகழ்காலப் ‘பாதுகாப்புணர்வு’ மட்டுமே செயலுககு எழுகிறது.  இந்தப் பாதுகாப்புணர்வாவது நியாயமானதா என்றால் அதுவும் இல்லை என்பதுதான்  வரலாற்றில் இருந்து கிட்டும் உண்மையானப் படிப்பினையாக இருககும்.

இந்தப் புள்ளி விவரத்தைப் பாருங்கள்: தமிழகத்தில் இன்று இருப்பவர்களில் நூற்றுக்கு பத்து பேர் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள். இன்னும் இருபது ஆண்டுகளில், தமிழக மக்கள் தொகையில் மூன்றுக்கு ஒருவர் ஓய்வு பெரும் வயதைக் கடந்த மூத்த குடிமகனாக இருப்பார்! 2025ல் தமிழனின் சராசரி வயது முப்பத்து நான்காக இருக்கும் என்றால், பத்தில் மூவர் 65 வயது தாண்டியவராக இருப்பார் என்றால், தமிழகத்தில் கல்வி அறிவு முன்னேறிய நிலையில், எதிர்காலத்தில் உடலை வருத்தி உழைக்கும் தொழிலாளிகள் எங்கிருந்து வரப்  போகிறார்கள்? இந்தக் கேள்விக்கு பதில் தேடும்போது இதை நினைவில் கொள்ள வேண்டும்- வட இந்தியரில் நூற்றுக்கு நால்வர்தான் அறுபத்தைந்து வயது கடந்தவராக இருப்பர். அவர்களின் சராசரி வயது இருபத்து ஆறுதான் இருக்கும் [1]

progindiawuvillageindia1

எங்கு ஜனத்தொகையில் அதிக அளவில் இளைஞர்கள் உள்ளனரோ, எங்கு உள்ளூரில் வேலை வாய்ப்புகள் இல்லையோ, எங்கு பொருளாதார நெருக்கடியும் குறைந்த அளவில் கல்வியறிவும் கூடி இருக்கின்றனவோ அங்கிருந்துதான் வர வாய்ப்புண்டு, இல்லையா? இன்றோ,  இந்தியாவில் இளைஞரும் வேலையில்லாத் திண்டாட்டமும், குறைந்த கல்வியறிவும் ஒருசேர உள்ள பெரும் நிலப்பரப்பு, வடக்கிந்திய ஜாதி அரசியலிலும், ஊழல் அரசியலிலும் சிக்கிச் சீரழிந்த இந்தி மக்கள் வாழும் மாநிலங்கள்தாம்.

இந்தப் பகுதியைத்தான் நம் அரசியல்வாதிகள் ‘வடக்கு வள்ர்கிறது’ என்று திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டி தமிழர் மனதில் பெரும் பள்ளத்தை உருவேற்றி வைத்தனர். அவர்கள் பேச்சுக்கு வெளியே, கடந்த முப்பதாண்டுகளில் இந்தப் பகுதிகள் சிறிதும் வளர்ந்ததாகத் தெரியவில்லை. மாறாக சுரண்டல்தான் வளர்ந்திருக்கிறது என்பது அந்தப் பகுதி அரசியல்வாதிகளின் பெரும் செல்வக் குவிப்பைப் பார்த்தால் தெரிகிறது.

கோவை மாவட்டத்தில், தாம் பிழைக்க வந்த ஊரின் பொருளாதார இயக்கத்தையே ஸ்தம்பிக்க வைக்கக் கூடிய சக்தி படைத்த இந்த ‘வட இந்தியர்கள்’ யாரென்று பார்த்தால், பீகார், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலிருந்து வேலை தேடி வந்திருக்கிற சாதாரண கூலித் தொழிலாளர்கள்தாம் இன்று அவர்கள் கோவை நகரிலிருந்து நகர்ந்திருக்கலாம், ஆனால் பெரும் பொருளாதார சக்திகளால் உந்தப்பட்டு அலைப்புறும் இந்தக் கூட்டம் போக்கிடம் இல்லாமல் திரும்பத் தமிழக நகரங்களுக்கு வந்து அடைவதே நடக்கும்.  அவர்கள் வேறெங்கும் எளிதில் போயவிட வாய்ப்பில்லை.  ஏனெனில் இன்று இந்தியாவில் தொழில்மயமாகும் வேகம் கொண்ட இன்னொரு இடம் குஜராத் மட்டுமே.  அங்கு ஏற்கனவே பல மாநிலங்களில் இருந்து வேலைகளுககுப் போட்டி இடும் கூட்டம் போய்ச் சாய்ந்திருக்கிறது.  இன்னொரு மாநிலமான மஹாராஷ்ட்ராவிலோ அடையாள அரசியல் பல பத்தாண்டுகளாகவே உச்சியில் இருக்கிறது.  சமீபத்தில் கூட அங்கு வடக்கிந்தியப் பாட்டாளிகள் மீது தாக்குதல்கள் நடந்தன.  இம்மக்கள் வந்து சேரும் இடங்களில் முதலானதாகத் தமிழகம் இருக்கத் தேவையானக் காரணங்களும் உண்டு- வேலை செய்ய ஆளின்மை என்பது அதில் முதன்மையான ஒன்று.

எதிர்காலத்தில் இவர்களைப் போல குடிபெயர்ந்து தமிழ்நாட்டுக்கு வரப்போகிறவர்களின் வாழ்வும் வளர்ச்சியும் தமிழகத்தின் வளத்தோடும் கலாசாரத்தோடும் பின்னிப் பிணைந்திருக்கப் போகிறது என்பது நிச்சயம்.. தமிழகம் இவர்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதை இன்று அதிகாரத்தில் இருப்பவர்களோ, அரசியல் தலைமையைக் கையில் கொண்டவர்களோ ஊகித்தாவது வைத்திருக்கிறார்களா?

அப்படி ஒரு முன்னோக்கிய அரசியல் பார்வை இருந்திருந்தால், மேலே சொன்ன வகைச் சம்பவங்கள் நிகழ்ந்து தொழிற்சாலைகள் எல்லாம் பாதிக்கப்பட்ட பின்னரே செய்தி நமக்கு வருகிற நிலை ஏற்பட்டிருக்காது.  குதிரை லாயத்தை விட்டு ஓடிய பின், கதவைப் பூட்ட மாவட்ட ஆட்சியாளர் முன்வரும் நிலையும் ஏற்பட்டிருக்காது.  சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கும்  முன்னரே அரசியல், பொருளாதார, சமூகத் தலைவர்களுக்கு அவற்றின் அதிர்வுகளை உணரும் திறன் இருந்திருக்க வேண்டும்.  அந்த அளவுக்கு சமூகத்தில் அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தலைமைக்கு இணைப்போ, பகிர்வோ, ஊடுருவலோ இல்லை என்பதை  நமக்கு இந்தச் சம்பவம் தெரிவிக்கிறது.  இது ஒன்றுதானா இப்படி நமக்குத் தெரிவிக்கிறது என்று கேள்வி எழலாம்.  பல நூறு சம்பவங்கள், பலவித மோதல்கள், போராட்டங்கள் தமிழகமெங்கும் நிகழ்கின்றன. இவை எல்லாம் மேற்சொன்ன சம்பவங்களளவு பெரும் தாக்கம் கொண்டவை அல்ல, ஆனால் பல தொழில் துறைகளில், வாழ்வாதாரத்துக்கான போட்டிகளில் இவை சிறு சிறு உள்ளூர் மோதல்களாகச் சிதறலாகத் தெரிகினறன. 

இவற்றில் சில பொறியியல் சிக்கல்கள்- எந்திரப் படகுகள் எதிர் சாதாரணப் படகுகள்.  தேயிலைத் தோட்டத் தொழிலாளர் எதிர் நிர்வாகம்,  நிலத்தடி நீரை விற்பனைப் பொருளாக்கும் நிறுவனங்கள் எதிர் உள்ளூர் விவசாயிகள்,  தோல் தொழிற்சாலையின் கழிவு நீர்ப் பிரச்சினையால் பாதிக்கப்படும் அதே ஊர் மக்கள், விரிந்து பரவும் மாநகரங்களால், விவசாய நிலங்களை இழந்து, பிழைக்கும் வழியும் இழந்து பெருநகரங்களில் அலையும் முன்னாள் விவசாயிகள், அவர்களின் இந்நாள் குற்ற நடவடிக்கைகள், கோவில் நிலங்கள், மத ஸ்தாபனங்களின் நிலங்களைத் திருடும் வீடு/ கட்டிடம் கட்டும் நிறுவனங்கள்.  பொருளாதாரப் போட்டி மக்களைக் குழுக்களாகப் பிரித்து ஜாதிகளிடையே மோதல்களாக, மதக் குழுக்களிடையே மோதல்களாக, உள்ளூர் வாசிகள் எதிர் வெளியூர்க்காரர்கள் எனப் பொருளாதார வளர்ச்சியின் முரண்பாடுகள் பல்வேறு வடிவம் பெறுகின்றன. இவை எழாமலே பொருளாதாரத்தை துரிதமாக வளரச் செய்வது கடினம்.  ஆனால் ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு முறையும் பிரச்சினைகள் கொலைகளாக, கலவரங்களாக மாறிய பிறகே அவற்றுக்குத் தற்காலிகத் தீர்வு காணப்படுகிறதென்பது நம் அரசியல், பொருளாதார அமைப்பின் ஜனநாயகத் தன்மை இல்லாத நிலையையும், தலைமையில் இருப்பாருக்கும் சாதாரண மக்களுக்கும் இடையே வலுவான தொடர்பும், பரிமாற்ற வசதியும் இல்லாத ஒரு நிலையையையும் காட்டுகின்றன.

இவை எல்லாமே நம் பலதளத் தலைமைகள் தலைமைக் குணமின்றி இயங்குவதைச் சுட்டத்தான் செய்கின்றன.  ஆனால் இந்தச் சம்பவம் அவை எல்லாவற்றையும் விடக் கூடுதலாகக் கவனிக்கப்பட வேண்டியது ஏன் என்று பார்ப்போம்.

இது சமீபத்திய நிகழ்வு என்பதாலோ, நாற்பதாயிரம் பேர்களை அலைக்கழித்து, உள்ளூரில் பொருளாதாரத்தைக் குலைத்தது என்பதாலோ மட்டும் இது கவனத்துக்குரியதல்ல. தமிழகத்துக்குக் குடிபெயர்ந்த பல மாநிலத் தொழிலாளர்களைத் தன் வளர்ச்சிக்கு எந்த அளவுக்குத் தமிழ்நாடும், தமிழரும் நம்ப வேண்டி இருக்கும், என்பதை நாம் அறிய வேண்டி இருப்பதை ஒரு முதன்மையானக் காரணமாகச் சொல்லலாம். இந்த அறிதல் பரந்த மக்கள் திரளிடையே ஒரு புரிதலாகப் பரவ வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதையும் நாம் உணர வேண்டும்.

இச்சம்பவம் இந்த அளவில் நடக்க ஒரு மூலக் காரணம் தமிழகத்தில் பல பத்தாண்டுகளாக ஒலித்த இந்திய எதிர்ப்பு அடையாள அரசியல்தான்.  மொழி மைய வரலாற்றுப் பார்வைதான, எனக் கருத நிறையவே இடமிருக்கிறது. சென்ற நூற்றாண்டில் ஒரு பெரும் பகுதிக் காலத்தில், ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்ற கோஷத்தைக் கேட்டுக் கேட்டு அதை நம்பித் தம் அரசியல் போக்கையே மாற்றிக் கொண்டு, சக இந்தியரைச் சந்தேகத்தோடு பார்ப்பதுதான் சரி என்று நினைத்து வந்தனர் பெருமளவிலான தமிழர். எண்பதுகளுக்குப் பிறகுதான் இந்த கோஷம் பொருளற்றுப் போனது என்பது தமிழரில் படித்து பல இடங்களுக்கு வேலை நிமித்தம் போகத் தொடங்கிய இளைஞர்களுககாவது புரியத் துவங்கலாயிற்று.

அன்று தமிழர்களும்கூட வேறு மாநிலங்களுக்குச் செல்ல முனைந்தமைக்கு ஒரு முக்கியக் காரணம் அரசு மையப் பொருளாதாரக் கொள்கை உலகெங்கும் தோற்றது போலவே இந்தியாவிலும் தோல்வி கண்டதுதான்.  இந்தத் தோல்வி வெளிபபடையாகத் தெரியும் முன்பே கூட, சுதந்திரத்துக்குப் பின் பிறந்த ஒரு தலைமுறையினருக்குச் சற்று ஞானோதயம் ஆயிற்று- சுதந்திரம் பெற்று முப்பதாண்டுகளாயின, இருந்தும் தாம் ஒவ்வொரு வருடமும் முன்னை விட வறுமையிலும், நம்பிக்கையைக் கூட்டாத ஒரு காலத்திலும்தான் வாழ்கிறோம் என்பது அம்மக்களுக்குத் தெரிந்து போயிற்று.  பின்னர் பெரும் அதிசயமாக இந்திய அரசியலாளருக்கும், ஏன் மேல்தட்டு மக்களுக்கும்கூட இது ஒருவாறு புலனாயிற்று.

விளைவு- எண்பதுகளில் மிக மிகத் தயக்கத்தோடே, சிறிதும் விருப்பமில்லாதே,  சந்தைப் பொருளாதாரத்துக்கு நாட்டை நகர்த்த முன்வந்த இந்திய அரசு, அந்த நகர்வை நிர்வகித்த விதத்தில், முடியோடு பாதம் மோசமாக உடைந்த ஒரு அமைப்பைத் தன் நிர்வாகக் கோட்பாடுகள் தூக்கி நிறுத்திக் கொண்டிருந்தன என்ற உண்மை வெகு விரைவில்  புலப்பட்டுப் போயிற்று. எங்குமே, என்றுமே பொதுவாகச் சந்தையின் இரக்கமற்ற ஒளிவீச்சு, செயலின்மையை பளீரென்று வெளிச்சம் போட்டுக் காட்டும். சந்தைப் போட்டி என்பது கறாரான ஒரு கருவி.�

போட்டி என்பதே ஊக்கமின்மையை ஒழிப்பதற்கான சக்திதான்.  அந்த ஊக்கமின்மையை, பழமையைக் கேள்வியின்றி ஏற்கிற மனப்பாங்கைத்தான் சந்தை ஒழித்துக் கட்டும்.  இந்திய அரசின் செயலின்மையை, எதிலும் தேக்கம் காணும் ஊக்கமில்லா மனநிலையைச் சந்தை பத்தே ஆண்டுகளில் அப்பட்டமாக வெளிப்படுத்தி விட்டது. அன்று துவங்கி இன்று வரை இந்திய அரசு மக்களின் காவலனாகவும், நலனை முன்னிறுத்தும் அமைப்பாகவும் செயல்பட மறுத்தே வந்திருக்கிறது.  ஆனாலும், இந்திய அரசின் பெரும்பாலும் முட்டுக் கட்டை போடும் முயற்சிகளை எல்லாம் தாண்டி சாதாரண மக்களின் அறிவார்ந்த, எதார்த்தமான முடிவுகளும், செயலூக்கமும் இந்தியப் பொருளாதாரத்தைப் பெரிதும் துரிதப்படுத்தி வருகின்றன.

இந்தியரின் செயல் திறனுக்கு இன்று கிட்டும் உடனடி வெளிப்பாடு ஐம்பது முதல் எண்பதுகள் வரையிலான ஆண்டுகளில் கிட்டியிருக்கவில்லை.  இந்தத் தேக்க நிலை நீங்கி நாம் நம் தசைகளை விரித்து ஆக்கங்காணும் வாய்ப்பை அடைந்ததன் வெளிப்பாடுதான் வேலை தேடி நாடெங்கும் அலையத் துவங்கி இருக்கும் உழைப்பாளிகளின் கூட்டம்.  இந்தக் கூட்டங்களின் பரவல் முந்தைய ‘நம்மவர்/அன்னியர்’ என்ற பிளவு அரசியலை உளுத்துப் போக வைத்திருக்கிறது.  அது ஒரு சுயலாபத் தேட்டைக்கான கோஷம் என்பது சாதாரண மக்களுக்கும் புரிகிறது.  எனவே, இன்று அந்த கோஷத்தை தற்காலிகமாக எழுப்பக் கூட, எந்தவொரு முக்கிய அரசியல் கட்சிக்கும் சிறிதும் ஊக்கமிராது.

இன்று நிலைமை  தலைகீழாக மாறி விட ஒரு காரணம், ‘தனியார் முயற்சிகளால் தொழில் மயமாக்கல்’ என்ற பெரு விசையால் உந்தப்பட்டு விரையும் தமிழகம், பல பத்தாண்டுகளாக ஏதும் முன்னேற்றமில்லாமல் தேங்கி நிற்கும் வட மாநிலங்களிலிருந்து பிழைக்க வழியில்லாமல் புகல் தேடி வரும் மக்களுக்கு இன்று வாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கிறது என்ற பேசப்படாத உண்மையே. தன்னாலும் தொழிற் துறையில் சாதனைகளைப் படைக்க முடியும் என்று உணர்ந்து விட்ட ஆக்கப் பாதையில் நடை போடும் தமிழகம், எந்த அளவுக்கு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது என்று பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

அதே வேளை முந்தைய இன அரசியல், பிளவுதான் விடுதலை என்ற கோணல் பார்வைகள் இன்று பின்னொதுங்கி, மனம் வெதும்பி நிற்கின்றன, மக்களைத் தம் பிடியில் அடக்கி வைக்க முடியவில்லையே என்று ஏக்கத்தில் நெட்டுருகுகின்றன என்பதையும் சொல்ல வேண்டும். மொழி குறித்த நோய்க் கூறு  உளைச்சல்களை விடுத்து தமிழகம் புதுப்  பொலிவுடன் தன்னைப் மறு உருவாக்கிக் கொள்ளத் துவங்கி இருக்கிறது என்று சொல்ல முடியுமா? சுய நம்பிக்கை வந்திருக்கிறதென்றால், நாம் அழிகிறோம் என்ற ஓலம் ஒரு அரசியல் நெம்புகோலாகப் பயன்படாதுதானே?

ஆங்காங்கு சில உதிரிகள், அரசியல் வெளியில் செலாவணி அற்றுப் போய் விட்ட நபர்கள், நாங்களும் இருக்கிறோம் என்று மக்களுக்கு நினைவூட்ட மொழிச் சுத்தம், மொழித் தனிமை அவசியம் என்ற ஓலத்தை எழுப்பி ஒரு சிறு ஊர்வலம் போய் முயன்று பார்க்கவே செய்கிறார்கள்.   இந்த வகை பூச்சாண்டிக்கு அத்தனை மவுசு இல்லைதான். தமிழகமெங்கும் பாருங்கள், வட இந்தியர் இங்கு நெடுக வேலை செய்வதோடு, நம் பண்பாட்டு வெளியில் இந்தியும், வடக்கின் உடைகளும், உணவுப் பழக்கங்களும் சரளமாகப் புழங்கத் துவங்கி இருப்பதைக் கவனியுங்கள்.  ஏன் தமிழ் சினிமாவின் பாடல்களில் கூட இந்தியின் பாதிப்பு தெரிகிறதே? வாழ்வாதாரங்களை கையகப்படுத்தக் கூடிய முற்போக்கு கொள்கைகளும் செயல் நோக்கங்களும் இல்லாமல், வெறும் மொழி உளைச்சலை மாத்திரம் பரப்ப நினைக்கும் அரசியல் வாதிகள்  இன்று முகவரி தெரியாமல் போய்க கொண்டிருக்கிறார்கள்- அறிவுத் தளத்தில் மிகை உணர்ச்சியோடு பேசப்பட்டாலும்  தமிழர்கள் மொழிக்காகத் தங்கள் வாழ்வையோ வளர்ச்சியையோ விலையாகத் தரத் தயாராயில்லை என்பதுதான் கடந்த பத்தாண்டுகள் உணர்த்தியிருக்கிற பாடம்.

தமிழகக் கல்வி நிலையங்களில் இருந்து தாம் பெறும் கல்வி உலகத் தரம் உள்ளது என்றில்லாவிடினும், இதை ஒரு அடித்தளமாகக் கொண்டு உயர்கல்விக்கும், வேலைகளுக்கும் உலகெங்கும் முயல முடியும் என்பதை மாணவர்கள் அறிந்திருக்கிறார்கள்.  தமிழக முதலீட்டாளர்கள் இந்திய அளவில் பரவி நாட்டின் பல பகுதிகளில் தம் செயல் திறன், ஊக்கம் ஆகியனவற்றுக்குத் தக்க இடமும் அங்கீகாரமும் கிட்டும் என்பதை அறிந்து தம் செயற்களனை விரிக்கத் துவங்கியிருக்கின்றனர். இதே போலத் தமிழக அரசியல்வாதிகளுக்கு தேசிய அளவில்  ஊடகங்களிலும் சரி, அரசியல் அரங்குகளிலும் சரி போதிய அளவு கவனம் காட்டப்படுகிறது என்றுதான் தோன்றுகிறது.

இருப்பினும் மத்திய அரசின் இயக்கத்தைத் தம் விருப்பத்துக்கு வளைத்துச் செலுத்தும் சக்தி தமிழக அரசியல்வாதிகளுக்குக் கிட்டி இருக்கிறதா என்றால் அது சந்தேகமே. ஆனால் முன்னர் நேரு கால மத்திய அரசில் வெறும் செயலாளர்கள் போலச் செயல்பட்ட தமிழக அரசியல்வாதிகளோடு ஒப்பிட்டால் இன்றைய அரசியல்வாதிகள் பல விதங்களில் மேலான கவனம் பெறுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆளும் கூட்டணிகளில் ஒன்றி நிற்கிற இந்த அரசியல் தலைவர்கள் தமிழகத்தின் நலன்களை மேலெடுக்கவோ, தமிழ் மக்களின் நலன்களை மேம்படுத்தவோ பயன்படுத்துகிறார்களா என்பது கேள்விக்குரியதாகவே இருக்கிறது.

நம் அரசியல் தலைவர்களிடையே காணப்படும் எதிர்காலம் குறித்த அலட்சியப்போக்கு வருத்தத்தைத் தருவதாக இருந்தாலும், அவர்களுடைய மன நிலையில் சில நல்ல மாறுதல்களுக்கான அடையாளங்கள் தென்படத் துவங்கியிருக்கின்றன. வடக்கு, வட இந்தியர் என்றாலே ஏதோ மேக நோய் போல விலக்கி வைப்பதே நல்லது என்று போக்குக் காட்டிய தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது என்ற பூச்சாண்டியைக் காட்டித் தமிழக அரசியலில் எழுந்தவர்கள், இன்று வடக்கிந்தியரோடு சகஜ பாவம் காட்டுகிறார்கள், நம் நலன்களும் அவர்கள் நலன்களும் ஒன்றே என்பதாக ஒரு பாவனையாவது செய்கிறார்கள் என்று நாம் சொல்ல முடியும்.   அதற்கு ஒரு காட்டு நாம் கவனிக்கப் போகும் அடுத்த செய்தி.

அண்மையில் பிரம்மாண்ட அளவில் விழா நடந்து திறந்து வைக்கப்பட்ட மாநில சட்டமன்ற வளாகத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான வட இந்தியர்களுக்கு, பொங்கல் நாளை ஒட்டிச் சங்கமம் என்ற அமைப்பைச் சேர்ந்த கனிமொழி நம் நாட்டுப்புறக் கலைகளை உள்ளடக்கிய ஒரு கேளிக்கை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். அவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது.

இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் ஓரளவு வழக்கம்தான் என்றாலும், அதில் ஆச்சரியமாக அவரது நன்றி நவிலுரை ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது என்பதே இங்கு சுட்டப்படுகிறது. கனிமொழி என்பவர் யாரென்றோ, அவரது அரசியல் பின்னணி என்னவென்றோ வாசகர்களுக்குச் சுட்டிக் காட்டச் சிறிதும் தேவை இல்லைதானே? இது ஒரு சிறு சம்பவம் இதை ஏன் ஊதிப்பெருக்கி ஏதேதோ அர்த்தம் கண்டு பிடிக்கிறீர்கள் என்று நமக்கு விமர்சனம் வரும்.  இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல, திட்டமிட்ட செயல் என்றே தெரிகிறது. [பார்க்க – பின் குறிப்பு 2.]

இது நம் தன்னம்பிக்கைக்கு மட்டும் அறிகுறியல்ல, இந்தியரின் பரஸ்பர நலன்கள் ஒத்துழைப்பிலும், ஒருவர் அருமையை மற்றவர் பாராட்டுவதிலும் இருக்கிறது என்பதைத் தமிழக அரசியல்வாதிகள் ஒத்துக் கொள்கின்றனர் என்பதற்கும் சான்று எனத் தோன்றுகிறது. இது ஒரு மிகச் சிறிய துவக்கம்தான், ஆனால் இந்தத் தன்னம்பிக்கையின் விளைவுகள் நாளைய தமிழகத்தின் அடையாளத்தையும், பொருளாதாரத்தையுமே மாற்றியமைக்கக் கூடியவை.

ஒரு மாநிலத்தின் அடையாளமாய் இருக்கக்கூடிய சட்டமன்ற வளாகத்தைக் கட்டுவது என்பது சாலைகளை அமைப்பது போல் சாமானிய விஷயம் அல்ல. எப்போது அதைத் தங்கள் உழைப்பில் கட்டித் தந்தார்களோ, அப்போதே அவர்கள் தங்கள் உழைப்புக்கு அத்தாட்சியான ஒரு குறியீட்டை நிறுவி விட்டார்கள் என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டும். “உழுபவனுக்கே நிலம்” என்ற வாதம் யாருக்கும் மறந்திருக்காது. கனிமொழி சொன்ன “உங்கள் வியர்வைத் துளிகளுக்கு நன்றி,” என்ற வாக்கிய அளவில் அவர்களது பங்கீட்டுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட முடியாது. சட்டமன்ற வளாகத்தின் கூரை அவர்களுடைய வியர்வையால் வேயப்பட்டது என்பதை இனி என்றும் மறப்பதற்கில்லை- அவர்களை விட்டு விட்டு சமகால பண்பாட்டு வெளியை விவரிக்க முடியாது. குடிபெயர்ந்தவர்களின் ஆக்கங்களுக்கு பொங்கல் படையலிட்டு இதுதான் உங்களையும் எங்களையும் இணைக்கும் பிணைப்புக் கயிறு என்று சொல்லாடி அத்தோடு வெட்டிக் கொண்டு போக முடியாது. சட்டமன்ற வளாகம் முதற்கொண்டு சாலைகள் தொழிற்கூடங்கள் என்று தமிழகமெங்கும் வட இந்தியர்களின் உடலுழைப்பில் கட்டப்பட்டு நிற்கின்ற தூலச் சான்றுகள், இந்தியாவை இணைக்கும் பாலங்கள்- நம் மண்ணில் திடமாகப் பதிந்து நிற்கின்றன.

மேற்படி சம்பவத்தைக் கருத்தில் கொண்டு கோவையில் நடந்த சம்பவத்தை நோக்குவோம்.  கோவைச் சம்பவம்,  எவ்வளவுதான் ஈடு செய்ய முடியாத பங்களிப்பை செய்திருந்தாலும், நமது கட்டிடங்கள், தொழிற்சாலைகள் என்ற கட்டமைப்பு சார்ந்த பண்பாட்டுக் குறியீடுகளில் அவர்களுடைய இருப்பு ஆவணப்படுத்தப்பட்டிருப்பினும், வட இந்தியர்கள் நமக்கு அன்னியர்கள் என்ற மனோபாவம் நம் மனதிலிருந்து மாறவில்லை என்பதைச் சுட்டுகிறது. சட்டசபை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியோ அரசியல் தலைமையில் ஒரு நெகிழவும், மன மாறுதலும், பிளவரசியலை விடுத்து முன்னேற வேண்டும் என்ற நோக்கமும் வந்திருக்கின்றன என்பதை சுட்டுகிறது. இதில் எது எதார்த்தமானது, எது நிலைத்திருக்கக் கூடும்? இந்த நெகிழ்வு நிலை இறுகாமல் மீண்டும் விலகல் மனோபாவம் தலையெடுக்குமா? 

முன்னே சுட்டிய விபரங்களை நினைவுபடுத்திப் பாருங்கள்: இன்னும் இருபது ஆண்டுகளில் தமிழகத்தில் மூன்றுக்கு ஒருவர் ஓய்வு பெரும் வயதைத் தாண்டியவர்களாய் இருக்கப் போகிறார்கள். தமிழகத்தின் தொழில் வளம் எவருடைய உழைப்பை நம்பி இருக்கப் போகிறது? இதை நம் அரசியலாளர்கள், பண்பாட்டுத் தலைமையில் இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறவர்கள், பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் சக்தி உள்ளவர்கள் எவராவது எங்காவது பொது அரங்குகளில் எடுத்துச் சொல்லி மக்களுக்கு விளக்குகிறாரா? அதல்லாமலே, கற்றறிந்த நம் அறிவாளர்களிடையேயாவது, பலதரப்பட்ட மொழிகளும் மக்களும் கூடி வாழக் கூடிய சுமுகமான சூழலை உருவாக்க வேண்டும் என்றத் தெளிவு காணப்படுகிறதா? அரசியல், சமூகம், மற்றும் ஊடக அமைப்புகளில் எங்கேனும் இதற்கான முனைப்பு காணப்பெறுகிறதா? சாதி, சமய, நிற, இன மற்றும் மொழி அடிப்படையிலான பிரிவினை வாதம் தமிழகத்துக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாகவே இருக்கக் கூடும் என்ற அறிவுறுத்தலும் புரிதலும் முன்வைக்கப்படுகிறதா?

இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழகமெங்கும் கோவை நகரச் சம்பவங்கள் நிகழ்ந்து, அதன் பின்விளைவாக தொழில் முடக்கமும், வேலை வாய்ப்பின்மையும் சமூகக் கொந்தளிப்பும் ஏற்படுவதைத் தடுக்க நாம் என்ன செய்யப் போகிறோம்? இப்படி முன்கூட்டி நாசம் ஏற்படவிருப்பதை நமக்கு உணர்த்தும் வகையில் சமூகத்தில், பொருளாதாரத்தில், பண்பாட்டில் என்ன விதமான சக்திகளை நாம் உருவாக்க வேண்டும்?

(தொடரும்)

One Reply to “உலைகலனாகுமா தமிழகம்? – கோவை நிகழ்வை முன்வைத்து”

Comments are closed.