அனிமேஷன் திரைப்பயணம்: 05 – கல்வி வாய்ப்புகள் மற்றும் எதிர்காலம்

இத்தொடரின் பிற பகுதிகளைப் படிக்க: அனிமேஷன் திரைப்பயணம்

bsc-animation-multimedia

சோம்பேறித்தனமாக தொலைக்காட்சி சானல்களை ஒரு ஞாயிற்றுக்கிழமை மாற்றிக் கொண்டே இருக்கையில் நடிகர் ‘அஜித்’ பற்றி ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

”நீங்க என்ன படிக்கிறீங்க?”

“விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கிறேன்”

காமிரா சற்று பான் செய்ய, இன்னொருவரை, “நீங்க?”

“நான் மல்டிமீடியா படிக்கிறேன்”

அட, நல்ல விஷயமெல்லாம் காட்டுகிறார்களே என்று எழுந்து உட்கார்ந்தவனுக்கு அடுத்தபடி வந்த காட்சிகள் ஒரே ஏமாற்றம்தான். எல்லோரும் ‘தலை’ போகிற விஷயம் பேச உடனே சுவாரசியம் இழந்தேன்!

பல தரப்பட்ட இளைஞர்கள் கணக்கிடல் போன்ற பழைய துறைகளைத் துறந்து, புதிய மல்டிமீடியா கல்வி படிக்கிறார்கள். விளம்பர ஏஜன்சிகள், மற்றும் இணையதளம் அமைத்தல் போன்ற வேலைகளுக்கு வெறும் வசீகரமான வார்த்தைகள் மட்டும் போதாது. அழகான காட்சியமைப்புகள் தேவை. அதுவும் பார்த்தவுடன் மயக்கும் அனிமேஷன் காட்சிகள் தேவை. சினிமாவைவிட விளம்பரம் மற்றும் இணையதள அமைப்பில் வேலை வாய்ப்புகள் அதிகம். இப்பகுதியில், இத்துறையில் உள்ள கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி ஆராய்வோம். மேலும், இந்திய அனிமேஷன் திரைப்படங்களையும் சற்று அலசுவோம்.

image37முதலில் இந்திய அனிமேஷன் சினிமா சந்தையைப் பற்றி ஒரு அறிமுகம். இது 2009 ல் 600 மில்லியன் டாலர் மதிப்புள்ளது. 2010 ல் இது 1 பில்லியன் டாலர் அளவுக்கு வளரும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் இன்னும் பிக்ஸார் போன்ற அமைப்புகள் வளரவில்லை. ஆனால், சில சிறிய தொடக்கங்கள் நம்பிக்கையூட்டுகின்றன. டூன்ஸ் அனிமேஷன், க்ரெஸ்ட் கம்யூனிகேஷன், UTV டூன்ஸ், ஜீ டிவி, பெண்டா மீடியா போன்ற அமைப்புகள் வளரத் தொடங்கியுள்ளன. இவை பல விதமான அனிமேஷன் திரைப்படங்களை எடுக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருக்கின்றன. இதில் சில விற்பனை அறிவிப்புகளாக இருந்தாலும், சில முழுப்படங்களாக மாற வாய்ப்புள்ளது. இந்திய அனிமேஷன் நிறுவனங்கள், சினிமாவைக் காட்டிலும் அதிக அளவில் வீடியோ விளையாட்டுகள் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனங்களுடன், மற்றும் மேல்நாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்காகப் பணியாற்றி வருகின்றன. முக்கியமாக, அமெரிக்க வீடியோ விளையாட்டு டிஸைனர்களுக்குத் தேவையான மனித சக்தி நிறைந்த சில பளுவான, ஆனால் அதிக படைப்பாற்றல் தேவையில்லாத வேலைகளையே செய்யப் பழகி வருகிறார்கள்.

இந்திய அனிமேஷன் துறையில் உள்ள சிக்கல், சாமன்ய கணினி மென்பொருள் துறை போல செயல்படுவதுதான். இந்தியக் கணினி மென்பொருள் நிறுவனங்கள் அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களின் பின் அலுவலக வேலைகளையே அதிகம் செய்து பணம் ஈட்டுகிறார்கள், இதனால், இந்திய வர்த்தகக் குறி (brand) இல்லாவிடினும் அதிகம் யாரும் கவலைப்படுவதில்லை. அனிமேஷனோ மிகவும் படைப்பாற்றல் மற்றும் கற்பனைவளம் தேவையான துறை. இதில் வர்த்தகக் குறிதான் எல்லாம். ‘Toy Story’ எவ்வளவு பிரபலமோ அவ்வளவு பிக்ஸாரும் பிரபலம். ஒரு ஏவிஎம் அல்லது ஜெமினி போல இந்திய அனிமேஷன் ஸ்டூடியோக்கள் பெயர் எடுத்தால்தான் உலகச் சந்தையில் நிலை நாட்ட முடியும். இதற்கு வெறும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பின்னலுவல் வேலை மட்டும் செய்தால் உயர முடியாது. இதைப் பற்றி விரிவாக பிறகு பேசுவோம்.

சில இந்திய அனிமேஷன் படைப்புகளை விமர்சிப்போம். மும்பை, சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஹைத்ராபாத் போன்ற நகரங்களில் அனிமேஷன் நிறுவங்கள் வரத் தொடங்கி விட்டன. இந்நகரங்களில் உள்ள நிறுவனங்கள் வெளி நாட்டு தொலைக்காட்சிகளுக்காக அனிமேஷன் தொடர்களை தயாரிக்கின்றன. பெண்டாமீடியாவின் தயாரிப்பு சிந்த்பாத்.

பெண்டாவின் இன்னொரு தயாரிப்பான ‘பாண்டவாஸ்’ மிகவும் வித்தியாசமான ஒன்று:

இதில் வரும் போர்க்காட்சிகளில் குதிரைகளின் அசைவு மற்றும் போர் வீரர்களின் அசைவு இயந்திர கதியில் உள்ளதைப் பார்க்கலாம்.

க்ரெஸ்ட் கம்யூனிகேஷன்ஸின் “Jakers! The Adventures of Piggley Winks” லிருந்து ஒரு காட்சி:

மேற்கத்திய அனிமேஷன் திரைப்படங்களை இந்திய மொழிகளில் டப்பிங் செய்கிறார்கள் அல்லது இந்தியப் படைப்புகளை ஆங்கிலத்தில் வெளியிடுகிறார்கள். இன்னும் நம் இந்திய மொழிகளில் படம் எடுப்பது அரிதாகவே உள்ளது.

இந்தியாவில் சினிமா தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்த ஒன்று.  ’4K Red’ டிஜிட்டல் காமிராவில் இந்தியாவில் படமெடுக்கிறார்கள். அதுவும் இந்தத் தொழில்நுட்பம் வந்து 4 மாதங்களில் இந்தியர்கள் இதை கரைத்துக் குடித்து விட்டார்கள். பலருக்கு பன்மொழித் திறமைகள் வியக்கத் தகுந்த அளவுக்கு உள்ளது. உதாரணம், எஸ்பிபி பல மொழிகளிலும் பேச மற்றும் அழகாகப் பாடும் திறனுள்ளவர். அனிமேஷன் கதைகள் சரியாக அமைக்கப்பட்டால், பல மொழிகள் பேச நம்மிடம் திறமைகள் உள்ளன. பல தொழில்நுட்பத்திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன. பல மொழி மனித சினிமாக்கள் உருவாவதைப் போல பல மொழி அனிமேஷன் திரைப்படங்கள் எல்லா இந்தியர்களையும் கவரும் வண்ணம் எடுக்க முடியும் என்பது என் கருத்து. பல மொழிகளில் விளம்பரங்கள் பெரிய நிறுவனங்கள் பல ஆண்டுகளாக தயாரிக்கின்றன. இந்திய மொழிகளில் உதட்டசைவைச் சரியாக செய்வது கடினமானதானாலும் அனிமேஷன் திரைப்படங்களில் வளர்ந்தவர்கள், திரைப்படங்கள் போல அல்லாமல் மிகவும் எளிதான மொழிப்பிரயோகம் செய்தால் இது முடியும். இதனால் உற்பத்திக்குப் பின் செலவுகள் குறைக்க வாய்ப்புண்டு.

ஆனால், என்னவோ தெரியவில்லை, இந்திய சினிமாக்களில் கதைப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கதை சொல்லியே எல்லாவற்றையும் விளக்கும் நம் கலாச்சாரத்தில், இது வினோதமாகத்தான் படுகிறது. புராணங்களை வைத்துப் பல அனிமேஷன் திரைப்படங்கள் எடுக்கலாம் என்று ஒரு வாதம் உள்ளது. ஓரளவு இதில் உண்மை இருந்தாலும், பிரமிப்பாக எடுக்கப்படாவிட்டால், பார்வையாளர்களைக் கவருவது கடினம். புராணங்களில் உள்ள கதையமைப்பை,  கற்பனையுடன் அழகான பாத்திர அமைப்புடன் சுவாரசியமாக விவரிக்க வேண்டும். நம் சினிமாக்களில் தெளிவான திட்டமிடல் கிடையாது. அனிமேஷன் சினிமாவில் இது உதவாது. இதைப்பற்றி முந்தைய பகுதிகளில் பார்த்தோம். குழந்தைகளை மையமாகக் கொண்ட கதைகள் அனிமேஷனுக்கு உகந்தவை. எல்லாவற்றிற்கும் தேவை ஒரு ஜனரஞ்சக முதல் வெற்றி.

சரி, எப்படிப்பட்ட வேலைகள் இத்துறையில் உள்ளன? முதலில் இத்துறையில் ஆர்வம் கொள்பவர்கள் படம் வரைவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இன்று இந்தியாவில் குழந்தைகள் கூட ஃபோட்டோஷாப் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இது முதல் படி. ஆனால், எப்படி இயக்கமையத்தை, எப்படி காமிரா கோணங்களை, எப்படி பல சம தளங்களைக் கையாள்வது என்று புரிய கொஞ்சம் வித்தியாசமான கோளவியல் சிந்தனை தேவை. நம் கல்வி முறைகள் இப்படிப்பட்ட சிந்தனையை வளர்ப்பதில்லை. பலருக்கு இது போன்ற திறமைகள் இருப்பதை வெளிக் கொண்டுவர நம் சமூகத்தில் அமைப்புகள் இல்லை. இதை ‘Spatial thinking’ என்கிறார்கள். மேல் நாடுகளில் ஒரு 10 வயது குழந்தையின் ‘Spatial thinking’ ஐ சோதிக்க வழக்கமான சோதனை உண்டு. பல மடிப்புகளாக ஒரு காகிதத்தை மடிக்கச் சொல்லிவிட்டு, அதில் ஒரு ஊசி கொண்டு குத்தினால், பிரித்த காகிதத்தில் எத்தனை ஓட்டை என்று 10 வயது மாணவன் சரியாக சொல்ல வேண்டும். இது போல பல சோதனைகள் மூலம் மாணவர்களின் ‘Spatial thinking’ எப்படி வளர்கிறது என்று கணிக்கிறார்கள்.

அடிப்படை உயர்நிலைப்பள்ளி கணிதத்திறன் போதுமானது. க்ராஃபிக்ஸ் மென்பொருள் தொகுப்புகள் உபயோகிக்க கணினி நிரல் எழுதும் திறன் தேவையில்லை. ஆனால், கணினியை வைத்து காட்சிரீதியாக சிந்திக்கும் திறன் தேவை. திரைக்கல்லூரிகளில் இன்று திரைப்படம் மற்றும் அனிமேஷன் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதற்குத் தனியாக டிப்ளமா மற்றும் தனியான விஷுவல் கம்யூனிகேஷன் டிகிரி படிப்பு எல்லாம் வந்துவிட்டது. மனித சினிமாக்கள் 100 வருடங்களுக்கு மேலாக எடுக்கப்படுகின்றன. அவை மிகவும் அழகாக பல பிரிவுகளாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதன் நல்ல விஷயங்கள் பலவும் அனிமேஷனுக்கும் பொருந்தும்.

அனிமேட்டர்கள் என்ற பதவி காட்சித்தொகுப்புகளை இணைத்து சோதித்து, ஒளியமைப்பு, மற்றும் ஸ்டோரி போர்டின்படி காட்சியமைக்கும் வேலை. முப்பரிமாண ஆர்டிஸ்ட் சற்று உயர் பதவி. முப்பரிமாணக் காட்சிகளைக் கணினியில் வரைபவர். இதற்கு படம் வரையவும், அனிமேஷன் பற்றியும் நன்றாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முப்பரிமாண அனிமேட்டர்கள் இரு பரிமாண அனிமேட்டர்களை விட சற்று உயர்நிலையாகக் கருதப்படுபவர்கள். ஆனால், இரு பரிமாண அனிமேட்டர்கள் விளம்பரப்படங்களுக்கு எப்பொழுதும் தேவையாக இருப்பவர்கள். அனிமேஷன் டிஸைனர்கள் அனிமேதன் ஆர்டிஸ்டைவிட இன்னும் உயர்பதவி. மாதத்திற்கு 2.5 முதல் 3 லட்சம் ரூபாய் வரை சம்பளம். ஆனால், நாளைக்கு 14 மணி நேரம் உழைக்க தயாராக இருக்க வேண்டும். இதைத் தவிர தகுந்த திறமை இருந்தால் காண்ட்ராக்ட் முறையில் நிறைய சம்பாதிக்க வழிகள் பெரிய நகரங்களில் உண்டு.

இளைஞர்கள் இதை எல்லாம் படித்துவிட்டு, “அடடா, அனிமேஷன் துறை ரொம்ப பசையான துறை” என்று உடனே எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் தாவ வேண்டாம். வருடத்தில் பிக்ஸார் இரு தரமான படங்களை வெளியிடுகிறார்கள். சரி, இத்தனை இந்தியர்கள் இருக்கிறோமே, வருடத்திற்கு ஒரு 150 படங்கள் தயாரிக்கலாமே என்று மனக்கணக்கு போட வேண்டாம். நல்ல அனிமேஷன் திரைப்படம் எடுப்பது அசாத்திய உழைப்பு, ஒருங்கிணைப்பு, கூட்டு முயற்சி.

ஒரு தனி அனிமேட்டர் ஒருவர் அழகாக இதைப்பற்றி விவரித்துள்ளார். பிக்ஸாரின் திரைப்படம் 1.5 மணி நேரம் (90 நிமிடம்) ஓடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். பிக்ஸார் அதை 6 மாதத்தில் தயாரிக்கிறது. ஒரு 10 நிமிட அனிமேஷன் திரைப்படம் எடுக்க எவ்வளவு நாள் தேவை? 20 நாட்கள். அதுதான் இல்லை. இரண்டு வருடங்கள் உழைத்து இந்த 6 நிமிட திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். ’Pigeon Impossible’ என்ற 6 நிமிட முப்பரிமாண திரைப்படத்தை இங்கே காணலாம்:

படிப்படியாக இவர் செய்த ஒவ்வொரு அனிமேஷன் போராட்டங்கள் பற்றி விடியோ மூலம் விளக்குகிறார், லூகாஸ் மார்டெல்:

அனிமேஷன் துறையில் முன்னேற துடிக்கும் இளைஞர்கள் இவரது இணையதளத்தைப் படிக்க வேண்டும். அழகாக அனிமேஷன் முறைகளை விளக்கியுள்ளார் லூகாஸ்:

http://blog.pigeonimpossible.com/

உழைக்கத் துணிந்த, கற்பனை வளமுள்ள இளைஞர்கள் இத்துறையில் நுழைந்தால் வெற்றிபெற வாய்ப்புள்ளது. யார் கண்டார்கள் – மரத்தைச் சுற்றி டூயட் (இந்தியத் திரைப்படங்களில் மட்டுமே உள்ள காட்சியமைப்பு) போன்ற புதுமைகளை அனிமேஷன் துறையிலும் எதிர்காலத்தில் நாம் காண்போம் என்று நம்புவோம்.

இளைஞர்களுக்கு ஒரு சின்ன யோசனை. வெறும் 3DS Max தெரியும், Maya தெரியும். ஆகவே தன்னை அனிமேஷன் வித்தகர் என்று நினைக்க வேண்டாம். பொதுவாக, நம் இளைஞர்கள், மேல் வாரியாக மேலைநாட்டுத் (அதனால் தான் மேல்வாரி என்ற சொல் வந்ததோ?) தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதிலேயே காலத்தை செலவழிக்கிறார்கள். மென்பொருள் உபயோகத்திறன் மிகவும் முக்கியம் – ஆனால் அதுவே குறிக்கோளாகக் கூடாது. மென்பொருள் அம்சங்களுக்கு (feature/function) பின்னால் உள்ள நுட்பத்தையும் முறையாகக் கற்க வேண்டும். இதற்குக் கோள கணிதம், பெளதிகம் போன்ற அடிப்படை அறிவியல் அறிமுகங்கள் மிக அவசியம். வணிக ரீதியான அனிமேஷன் மென்பொருள்களில் கோள மற்றும் பெளதிக, ஒளி இஞ்சின்கள் பல ஆண்டுகள் ஆராய்ச்சியால் வளர்ந்தவை. திரைமறைவில் உள்ள விஷயங்களை முழுவதும் புரிந்து கொண்டால்தான் புதிதாக மேலை நாடுகளில் செய்யாததை நாம் செய்ய முடியும்.

இந்த அனிமேஷன் தொடரில் 5 பாகங்களில் நாம் பல விஷயங்களை அலசினோம். ஆனாலும் இத்துறையின் விளிம்பையே தொட்டுள்ளோம். இக்கட்டுரைகளால் சில இளைஞர்கள் இத்துறை மீது ஆர்வம் கொண்டு ஒரு இந்திய ஜான் லாஸட்டராக எதிர்காலத்தில் உருவானால், அந்த மாற்றத்தை கொண்டு வந்த பெருமை ‘சொல்வனத்தைச்’ சேரும்.

இத்தொடரை எழுத உதவிய நண்பரும், க்ராபிக்ஸ் வல்லுனர்/ஆய்வாளரும், பேராசிரியருமான டாக்டர்.ஸ்வாமி மனோகருக்கு நன்றி.