வெறும் பலகையும், இரும்புத் திரையும்

சமீபத்தில் எஸ் ராமகிருஷ்ணன் தன் “வயது நாலு” கட்டுரையில், “சிறுவயதில் விமானம் கிராமத்தை கடந்து போனால் கூடவே ஒடுவோம். ரயில் போகும்போது கைகாட்டிக் கொண்டேயிருப்போம். ஊருக்குள் புதிதாக வரும் குரங்காட்டி பின்னாலே போவோம். யானை வந்தால் அவ்வளவுதான். அது ஊரைவிட்டுப் போகும்வரை கூடவே செல்வோம். இன்று விமானத்தை ஆச்சரியமாகப் பார்க்கும் ஒரு சிறுவன் கூட மாநகரில் இல்லை,” என்று களங்கமின்மையின் இழப்பு குறித்து தன்னுடைய கவலையை வெளிப்படுத்தியிருந்தார்.

நகர்ப்புறத்தின், நாகரீகமயமாக்கலின் நன்மைகள் மீதான அவநம்பிக்கை நம் மனதில் பெருமளவில் தொடர்ந்து இருந்து வருகிறது. நகர்ப்புற வாழ்க்கை நம் வேர்களை அறுத்து விடுகிறது என்ற தொனி நியாயமானதாகவே தெரிகிறது. நம் வேர்கள் ஒரு உன்னதமான, களங்கமில்லா உலகில் நம்மை நிலை நிறுத்திக் கொண்டிருந்தன என்ற ஆயாச மனநிலை இன்று வெகுவாக சகஜமாகிவிட்ட ஒன்று. “இந்த மண்ணிலே எனக்கு வேற அடையாளமும் வேற மனசும் இருக்கு. இங்கேருந்து நான் எங்க வேணுமானாலும் போய்ட்டு வரலாம்,” என்று கோணங்கி சொன்னதாக ஜெயமோகன்கூட எழுதுகிறார். பின் அவரும் அதை அங்கீகரிக்கும் தொனியில், “எம்.டி.வாசுதேவன் நாயரோட ஒரு வரி இருக்கு. நகரம் ஒரு கிழட்டு வேசின்னு. நமக்கு அவள அருவருப்பு. ஆனா நம்மள எப்டி புடிச்சு வச்சுக்கிடறதுன்னு அவளுக்கு தெரியும்…” என்கிறார். நகரமயமாதல் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு ஏற்படும் சீரழிவாகவே முன்வைக்கப்படுகிறது. மண்ணின் மைந்தர்களாகிய கிராமவாசிகள் போலித்தனமில்லாத, தங்கள் வேர்களை இழக்காத மேன்மையான மனிதர்கள் என்ற எண்ணம் நம் மனதில் இருக்கிறது.

ஆனால் இந்தக் கருதுகோளைத் தீவிரமாக உடைத்தெறிகிறார் ஸ்டீவன் பிங்க்கர்.

யார் இந்த ஸ்டீவன் பிங்க்கர்?

Steven Pinker

மொழியியலிலும், சமூக அறிவியலிலும் ஆர்வம் கொண்டவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். இருந்தாலும் அவரைக் குறித்ததொரு சிறு அறிமுகத்துக்குப்பின் கட்டுரைக்குள் செல்வோம்.

55 வயதாகும் ஸ்டீவன் பிங்க்கர் மொழியியலாளர், உளவியல் பகுப்பாய்வாளர், அறிவியல் குறித்து வெகு ஜனங்களுக்குப் புரியும் வகையில் எழுதக்கூடியவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் இவர், இவருக்கு முன்வரை மொழியியல் – சமூகவியலில் பிரபலமாக வழங்கப்பட்டு வந்த பல கருதுகோள்களைத் தீவிரமாக மறுத்து மாற்றுப்பார்வையை முன்வைக்கிறார். முக்கியமாக இத்துறையில் தன் முன்னோடியான நவோம் சாம்ஸ்கியின் கருத்துகளுக்கு மாற்றாக இவர் முன்வைத்த பார்வைகள் இத்துறையில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியபடி இருக்கின்றன. இவர் எழுதியிருக்கும் ஏழு புத்தகங்களில் The Language Instinct, The Blank Slate ஆகியவை நன்கு அறியப்பட்டவை.

ஸ்டீவன் பிங்க்கரின் “The Blank Slate: The Modern Denial of Human Nature” என்ற நூல் பதிப்பாகி பத்தாண்டுகள் ஆகப் போகின்றன. பெருமளவில் விற்ற இந்தப் புத்தகம் பரிசுகள் பல பெற்றது, பரபரப்பாகப் பேசப்பட்டது, இன்றும் பேசப்படுகிறது. சமூகவியலின் அடிப்படைக் கோட்பாடுகளை வலுவான அறிவியல் ஆய்வு முடிபுகளைச் சுட்டி நிராகரித்த பிங்க்கரின் வாதங்கள் அவை முன்வைக்கப்பட்டபோது கடும் கண்டனங்களுக்கு உள்ளானதென்றால் அது புரிந்து கொள்ளப்படக் கூடியதே. பிங்க்கர் நிராகரித்த கருதுகோள்கள் அனைத்தும் இன்று ஆதாரங்களின் அடிப்படையில் அறிவியல்சார் துறைகள்தோறும் வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கின்றன, ஆனாலும் அவை பொதுஜன அறிவுத்தளத்தில் இன்றும் பரவலாக ஆட்சி செய்துகொண்டுதான் இருக்கின்றன.

மனித இயல்பு குறித்த பிறப்பும் வளர்ப்பும் சார்ந்த, பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்ட புனிதமான கருதுகோள்களை உடைக்கிறார் ஸ்டீவன் பிங்க்கர்.

எந்தப் புறச்சூழலாலும் தீண்டப்படாத மனிதன், எந்த எழுத்தும் எழுதப்படாததொரு ஒரு ‘வெற்றுப்பலகை’ (The Blank Slate) போன்றவன். எந்தவிதமான உலகச்சூழலும், வேற்று ஆளுமையும், சிந்தனைப்போக்கும் தீண்டாததொரு மனிதன் களங்கமற்றவனாக இருப்பான். அவனை எந்த சிந்தனைப் போக்கிலும் வார்த்தெடுக்க முடியும், எந்த மொழி பேசுபவனாகவும் வளர்த்து வளர்த்தெடுக்க முடியும், அவன் களிமண் பிண்டம் போன்றவன் என்பது அறிவுலகத்தின் பொதுவான நிலைப்பாடாக சமீபகாலம் வரை இருந்தது. இந்தக் கருதுகோளின் அடிப்படையிலேயே பல கோட்பாடுகள் கட்டப்பட்டன. இதைத் தீவிரமாக நிராகரிக்கிறார் பிங்க்கர். மனித இயல்பு என்பது வேண்டிய வடிவில் வார்க்கப்படக்கூடியக் களிமண் குழம்பல்ல, அது நாம் நம் விருப்பப்படி நமக்கு வேண்டிய உன்னத உணர்வுகளை படிப்பித்துப் பார்த்துக் கொள்ளக்கூடிய வெறும்பலகையும் அல்ல. பொதுவில் மனிதனுக்கென்று, அதிலும்கூட குறிப்பாக நம் ஒவ்வொருவருக்கும் இயலும் இயலாதென்ற பிரத்யேக வரையறைகள் உள்ளன என்பது அவர் வாதம்.

“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் கெட்டவராவதும் அன்னை வளர்ப்பினிலே,” என்ற பாடலை ஒத்துக்கொள்ளாத யாரும் இருக்கிறோமா எனத் தெரியவில்லை. மேலே எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் முதற்கொண்டு, சிந்தனாவாதிகளாகவோ, எழுத்தாளர்களாகவோ இல்லாத லெளகீக வாழ்வில் உழலும் எளிய மனிதர்கள் வரை அனைவருக்குமே களங்கமற்ற எளிய முன்னோடிகள், மண்ணின் மைந்தர்கள்களாகவும், நாகரிகம் சிதைக்காதவர்களாகவும் கருதப்படும் கிராமத்தினர்.

வனவாசியினரைக் குறித்து நம்மில் பெரும்பாலானோருக்கு ‘களங்கமற்றவர்கள்’ என்றொரு அபிப்ராயம் இருக்கிறது. ஏதோ ஒருவிதத்தில் அவர்களை உள்ளூரப் புனிதமானவர்கள் (The Noble Savages) என்றே நினைக்கிறோம். “இந்தக் கருதுகோள் வெறும் நற்கனவே. வேட்டையாடி வாழும் வன விலங்குகளை விட்டு விலகி, சட்ட திட்டங்களுக்குட்பட்ட நகருக்கு மனிதனாய் மாறி முன்னேற்றம் கண்ட பரிணாம வளர்ச்சிப் பாதையில் போரும் வன்முறையும்தான் நம்மைப் பாதுகாத்த நற்குணங்கள், அவை நம் ரத்தத்தில் ஊறியவை: இயற்கையோடு இயைந்த வாழ்வு ரத்த வாடை நிறைந்த ஒன்று, அதைப் புனிதமானது என்று போற்றுவதற்கில்லை”, என்கிறார் பிங்க்கர். [நகரமயமாதல் என்பது நாகரீகமாதல் அல்ல. இரண்டுக்கும் வேறுபாடுகள் உண்டு எனினும், எனக்குத் தெரிந்து இந்த “வெள்ளந்தியான கிராமவாசிகள்”தான் நம் மனவெளியில் Noble Savageகளை ஒத்தவர்களாக இருக்கின்றனர்.]

_39092054_ap_blank_203ஆக்கையை இயக்கும் ஆவியாய் (The Ghost in the Machine) நாம் இருக்கிறோம் என்பதும் பரவலாக இருக்கிற நம்பிக்கையே. கடவுளை மறுக்கும் நாத்திகனும், தன்னை மறுக்க மாட்டான். நான் செத்தபின் இயற்கையோடு இயற்கையாக ஒன்றி விடுவேன், உடலன்றி நான் இல்லை என்று சொல்கிற அதிதீவிரனும், குடிப் பெருமையை, மொழி உணர்வை, இன அடையாளங்களை, வர்க்க பேதங்களை நிராகரிப்பதில்லை. நான் என்ற ஒன்று இல்லாதபோது, தான் சார்ந்த குழு அடையாளம் எங்கிருந்து வருகிறது? பிங்க்கர் வெகு கறாராய் உடலமன்றி ஒன்றில்லை என்ற நிலையில் நிற்கிறார். அது மட்டுமில்லாமல் ஜீவன் என்ற கருத்துருவின் அடிப்படையில் சமயங்கள் துவங்கி, தனி மனிதனை நிராகரித்து அவனை ஏதோவொரு மந்தையில் திணித்த அரசியல் அமைப்புகள் வரை மனித குலத்துக்கு ஏற்பட்ட அத்தனை அநீதிகளுக்கும் அவலங்களுக்கும் பௌதிகத்தைத் தாண்டிய ஒரு இருப்பை அவனுக்குரியதாக அவை முன்னிருத்தியதே காரணம் என்கிறார் பிங்க்கர். “ஒன்பது வாசல் உடையது ஓர் பிண்டத்துள் ஒன்பது நாடி உடையது ஓர் ஓர் இடம்” என்று திருமூலர் பாடியது எவ்வளவு உண்மையாக இருப்பினும் இல்லாவிட்டாலும், ஒன்பது வாசல்கள் கொண்டதாய் சொல்லப்படும் இந்த இடத்தில் இதுவரை வசித்ததாய்க் காட்டிக் கொண்டிருந்தது தனக்கென்று ஓர் இருப்பில்லா ஆவி. அதைப் பேயோட்டியாகிவிட்டது. இந்த பாவனையை இனியும் தொடரவேண்டியத் தேவை இல்லை. இந்த நம்பிக்கைகளை ஒட்டி வந்த ஆதர்ச புருஷனும் புனைவே, அதன் தொடர்ச்சியாய் கட்டமைக்கப்பட்ட ஆதர்ச சமுதாயமும் புனைவே, என்பது பிங்கரின் வாதம்.

ஏறத்தாழ எல்லாரும், ஒருவனது மரபு அது வாழும் காலத்தில் எதிர்கொள்ளும் சூழலையொட்டி நிகழ்த்தும் எதிர்வினைதான் அந்த மனிதனின் இயல்பாக அமைகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். தீவிர சாதி வெறியர்கள் மற்றும் இனவாதிகளைத் தவிர நம்மில் வேறு யாரும், நம் பிள்ளைகள் நமது குணங்களையோ, நமது முன்னோர்களின் குணங்களையோ முழுதாய்ப் பிரதிபலிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதில்லை. சொல்லபோனால், காலத்துக்கேற்றபடி நம் குழந்தைகள் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றே சொல்கிறோம். அதே போல், சூழல் மட்டுமே அவர்களது கல்வியையும் ஆளுமையையும் தீர்மானிக்கிறது என்று நம்மில் எவரும் முழுமனதாக நம்புவதில்லை. “நூலைப்போல் சேலை, தாயைப் போல் பிள்ளை” என்பதையும் ஓரளவுக்கு ஒப்புக் கொள்ளவே செய்கிறோம். அப்படியில்லை, சூழலை மாற்றுவதன் மூலம் ஆளை மாற்ற முடியும் என்று சொல்பவர்கள் தம் மனதில் நிலவும் சாதிசார் மற்றும் குழுசார் மதிப்பீடுகளையும் அவற்றுக்கான நியாயப்படுத்தல்களையும் நினைவு கூர வேண்டும்.

The Blank Slate, The Noble Savage, The Ghost in the Machine போன்ற சொற்றொடர்கள் நம் சூழலில் வழக்கில் இல்லை: இருந்தும்கூட நம் பார்வையின் உட்பொருளாய் அவை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த மூன்று கருதுகோள்களையும் ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கிப் பார்த்தால் பின்வரும் மனவிரிவை அடையலாம்.

மனித இயல்பு அடிப்படையில் களங்கமில்லாதது: எதுவும் போதிக்கப்படாத குழந்தைப் பருவத்திலும், நாகரீகத்தின் சுவடுகள் பதிக்கப்படாத வனவாசத்திலும் மனிதன் உள அளவில் அடையக்கூடிய வல்லமைகள் அளவிறந்து இருக்கின்றன என்ற கருதுகோளை நம்மில் பலர் ஏற்றுக் கொள்வோம். தரமில்லாத கல்வி அவனது அறிவை மேம்படுத்தத் தவறுகிறது, நாகரீகமயமாதல் தொழில்நுட்பச்சார்பை அதிகரித்து அவனது மானுட உணர்வுகளை வேரறுத்து அவனது இயல்பை வக்கிரப்படுத்துகிறது என்ற வாதம் இந்தக் கருதுகோளின் நீட்சியே. அறிவுக்கும் உணர்வுக்கும் களனாய் இருக்கிற மனிதன், ஆன்மா இல்லாத வெறும் எந்திரன்: உடலின் இயக்கங்கள், மனதின் எண்ணங்கள்- இவை உடலின், உணர்வின் உள்ளிருக்கும் ஒருவனை முன்வைத்தே நடக்கின்றன என்ற தோற்றம் வெறும் கருத்துப் பிழைதான். ஜீவாதாரப் போரில் தான் பிழைத்திருக்கவும் தன் செயல்களை ஒருங்கிணைக்கவும் இந்த மனித விலங்கு மேற்கொண்ட தந்திரம்தான் நானெனும் பாவனை. உடலின் வெவ்வேறு திறன்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டில் தோன்றும் மாய உருவன்றி, உடலுக்கு அப்பால், அதற்கு வேறாய், அதையும் தாண்டி எந்த ஆன்மாவும் இந்த எந்திரத்தினுள் கிடையாது.

இத்தனை பரபரப்பான விஷயங்களை எழுதுகையில், பிங்க்கர் தன் வாதங்களுக்கு ஆதரவாக ஏராளமான அறிவியல் ஆய்வுகளைச் சுட்டுகிறார். அவற்றை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதற்கில்லை. ஆனால் சுவாரசியமாயிருப்பினும், அவற்றைவிட எனக்கு முக்கியமாய்த் தெரிவது இந்த கருத்துருக்கள் உருவான வரலாற்றையும், ஆன்மீக, சமூக, அரசியல் கோட்பாடுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் இவை செயலுருவம் காணும்போது அரங்கேறிய துன்பியல் நிகழ்வுகளையும் பிங்க்கர் விவாதிக்கும் விதம்தான்: மேலைச் சிந்தனை மரபில் இவை உருவாகி, ஆளுமை செலுத்திய வரலாற்றை விரிவாக விவாதிக்கிறார். அது மட்டுமில்லாமல் தன் சமகாலப் பொதுவெளியில், இவை யார் யாரால் ஏற்கப்பட்டிருக்கின்றன, அவர்கள் அதைக் அரசியல், அறிவியல், சமூக மற்றும் கல்விக் கொள்கையாய்ப் பிரகடனப்படுத்தியதால் எத்தகைய வேண்டத்தகாத விளைவுகள் உருவாகின என்பதை எவ்வித அச்சமுமில்லாமல், சீரான நடையில், எள்ளல், பகடி, சீற்றம் என்று தன் உணர்ச்சிகளை ஆங்காங்கே வெளிக்காட்டி, விரும்பிப் படிக்கக்கூடிய நூலாய் இதைப் படைத்திருக்கிறார்.

இந்த வெறும்பலகை, உன்னத வனவாசி, ஆக்கையை இயக்கும் ஆவி என்ற கற்பிதங்கள் செயலாக்கம் காணும்போது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் மனித வரலாற்றில் அவை அவனுக்கெதிராய் நிகழ்த்திய கொடுஞ்செயல்களை நியாயப்படுத்திய அறிவாளிகளைப் பற்றி என்ன சொல்ல? அறிவியல்பூர்வமானதாக இருந்தாலும் சரி, அனுபவத்தின் அடிப்படையில் அமைந்திருந்தாலும் சரி, குருட்டுப் யோசனையில் கட்டமைக்கப்பட்ட யூகமாயிருந்தாலும் சரி, மனிதனைத் தன்னிடமிருந்தும் அண்டை மனிதனிடமிருந்தும் பிரிக்கும், அவனது துன்பங்களையும் அவலங்களையும் கண்டும் காணாது இருக்கத் துணை செய்யும் கருத்துருக்கள், கோட்பாடுகள் அத்தனையும், அவனது இதயத்தில் விழுந்த இரும்புத் திரைகள் என்று சொல்லத் தோன்றுகிறது.

எத்தனைதான் வலிமையானதாக இருந்தாலும் கோட்பாடுகளுக்கு மனிதனை இயககும் திறன் கிடையாது. உதாரணமாக Quantum Mechanics தரக்கூடிய ஒரு தரிசனத்தைப் பார்ப்போம். ஒரு அணுவை எடுத்துக் கொண்டால், அதில் உள்ள ப்ரோடான், எலெக்ட்ரான், ந்யூட்ரான் போன்ற அணுத்துகள்களைவிட அதனுள் இருக்கும் வெற்று வெளியின் பரப்பே அதிகம் என்கிறார்கள்.

ஹைட்ரஜன் அணுவானது அதன் மையத்தில் இருக்கும் ப்ரோடானைவிட ஒரு லட்சம் மடங்கு பெரியது. அணுவின் நடு நாயகமாய் நிற்கிற இந்த ப்ரோடான், அணுவின் விளிம்பில் சுற்றும் எலக்ட்ரானைவிட ஆயிரம் மடங்கு பெரியது. ஒரு புள்ளியை விட பத்து லட்சம் மடங்கு சிறிய ஒரு எலக்ட்ரானின் அளவை ஒரு பிக்சல் என்று கொண்டால், ப்ரோடானுக்கும் அதைச் சுற்றி வருகிற எலக்ட்ரானுக்கும் இடைப்பட்ட தூரம் உங்கள் கணினியின் பிக்சல் கணக்கில் பதினேழரை கிலோமீட்டர்கள். இடைப்பட்ட இடமெல்லாம் வெற்று வெளியே!  அதிலும் இந்த ப்ரோடான் எலெக்ட்ரான் இவற்றை உடைத்துப் பார்த்தால் இன்னும் சிறிய பொருட்கள் இன்னும் பெரிய இடைவெளிகள். இந்தச் சின்னஞ்சிறுப் அணுத்துகள்களைப் பகுத்து ஆயும்போது அவையனைத்தும் வெற்று வெளியில் சக்தித் திரளுக்கான சாத்தியப்பாடுகளாக நிலை குலைகின்றன.

இந்த அறிவு, Quantum Physics என்ற இந்தக் கோட்பாடு, நாம் காணும் இந்த உலகின் திடத்தன்மை குறித்து எந்த ஐயமாவது ஏற்படுத்துகிறதா? இல்லை. ஆனால் அதுவே, ஆமாம், அண்ட வெளியில் மண்டியிருக்கும் பொருட்களின் அளவு உண்மையில் அணுவினும் குறைவே, நம் கண்முன் விரிந்து நிற்பவை அனைத்தும் வெற்றுத் தோற்றப் பிழைகள், ஆழ்ந்த பொருளில்லாத அற்ப மாயைகள், என்ற தரிசனம் ஒருவனுக்குக் கிடைத்தால், அதன் அடிப்படையில் அவனது வாழ்க்கை மாறக் கூடும். தான் மற்றும் தன் உலகம் குறித்து ஒருவன் ஏற்கனவே வடிவமைத்து வைத்திருக்கும் வரைபடத்தின் உள்ளடக்கமாய் அறிவியல் உண்மைகளும் தர்க்க ரீதியிலான முடிபுகளும் ஒருங்கிணைக்கப்பட்ட பின்தான் அவை செயல் வடிவம் பெறும் சாத்தியமடைகின்றன என்று நான் நினைக்கிறேன்.

அந்த வகையில் Tragic Vision (துயர்துளங்கு பார்வை), Utopian Vision (செம்புலப் பார்வை) என்ற இரு பார்வைகளை பிங்க்கர் முன்னிறுத்துகிறார். துயர்துளங்கு பார்வையில் மனிதன் குறைபாடுடையவன்: தன் வரலாற்றுக்குக் கட்டுப்பட்டவன். முன்னேற்றம் என்பது தட்டுத் தடுமாறி அடையப்படுகிற, நிரந்தரமில்லாத ஒன்று. செம்புலப் பார்வையில் மனிதன் சரித்திரம் படைக்கக் கூடியவன். அவன் தன் எல்லைகளைக் கடந்து மானுடத்தின் உன்னத சிகரங்களைத் தொடக்கூடியவன். சரியானத் திட்டமிடல், அறிவின் ஆற்றலுக்கு மதிப்பளித்தல், கற்றுத் தெளிந்த குழுவின் அதிகாரத்துக்கு அறியாமையாலும் தவறான கற்பிதங்களாலும் குறைபட்ட தன் பார்வையை அடிபணியச் செய்வதன்வழி தனி மனிதக் குறைகளை அறவே முடமாக்கி, அனைத்து தங்கு தடைகளையும் தாண்டி, ஒரு ஆதர்ச உலகினுக்கு அவனை ஒரேயடியாகப் பாராசூட் செய்துவிடப் பார்க்கிறது செம்புலப் பார்வை.

இந்த செம்புலப் பார்வைதான் வெறும்பலகை, உன்னத வனவாசி, ஆக்கையை இயக்கும் ஆவி என்ற கருதுகோள்களைக் கருத்தில் கொண்டு, அடுத்தவன் வாழ்வைக் குலைக்கக் கூடிய அதிகாரம் தனக்குள்ளதெனக் கையில் எடுத்து, அதன் இரக்கமற்ற செயல்வடிவை ஒரு செம்புலத்தை தூரத்தே நிறுத்துவதன் மூலம் நியாயப்படுத்தி, மானுட வரலாற்றின் கருப்பு அத்தியாயங்களை எழுதியது என்கிறார் பிங்க்கர்.

பொதுவாக அறிவுசார் தளத்தில் நடக்கும் விவாதங்களையும் அவற்றின் முடிவுகளையும் ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது என்று ஏறக்கட்டி விடுகிறோம். ஆனால் எத்தனை சராசரியானவர்களாக இருந்தாலும் நாம் அனைவரும் அறிவை சார்ந்துதான் இயங்குகிறோம். தீர விசாரிக்கப்பட்டு தனக்கென வடிவமைக்கப்பட்ட பார்வை என்று ஒன்று இல்லாதவர்கள், மற்றவர்களது ஏட்டுச் சுரைக்காயை தாம் இரவல் வாங்கி சமைக்கும்படி ஆகிறது: அதிலும், தனக்கென ஒரு பார்வையை சமைத்துக் கொள்ளும் உரிமை மறுக்கப்பட்ட துரதிருஷ்டசாலிகள், தான் சிந்திப்பதாலேயே மற்றவர்களின் விதியை மாற்றியமைக்கும் தகுதி தமக்கிருப்பதாக நினைப்பவர்களின் சுரைக்காயை, கொல்லப்படும்வரை கொடுக்கப்பட்ட வாழ்நாள் முழுதும் சுமக்கும் தண்டனையை அனுபவிக்கும் கதிக்காளாகிறார்கள்.

“ஒரு மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை அவனுக்குக் காட்டு, அதுவே அவனை மேன்மையடையச் செய்யும்,” என்று செகாவ் சொன்னதைத் திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டுகிறார் பிங்க்கர். அதைத்தான் தானும் செய்வதாக சொல்கிறார்: மனித இயல்பென தான் முன் வைக்கும் சான்றுகள், எத்தனை ஆபத்தானவையாகத் தெரிந்தாலும், இந்த புனைவுகளைவிட, அவற்றின் பொருட்டு நிகழும் அட்டூழியங்களைவிட, தன் இயல்பு குறித்த உண்மையை ஏற்றல் மனித வாழ்வுக்கு மேன்மை தருவதாகவே இருக்கும் என்று உறுதியளிக்கிறார் அவர்.

தன் அறியாமையை அறியா அறிவின் அதிகாரத்தால் சர்வாதிகார அமைப்புகள் நிகழ்த்திய சரித்திர அவலங்களையும், அவற்றுக்கு அடிப்படையாயிருந்த கோட்பாடுகளுக்கு எதிராக பிங்க்கர் முன்வைக்கும் அறிவியல் ஆதாரங்களையும், அவை மனித இயல்பு குறித்துத் தருகிற காட்சியை ஏற்பதன் விளைவுகளைப் பற்றிய அச்சங்களையும், அந்த அச்சங்களுக்குப் பிங்க்கர் தரும் தீர்வுகளையும் பேசுவதென்றால் அது வேறு கதை.