வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – 3

இத்தொடரின் பிறபகுதிகளைப் படிக்க: வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ்

தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் இப்பொழுதெல்லாம் குட்டிக் கதைகள் சொல்லாமல் பெரிய தலைவர்கள் உரையாற்றுவதேயில்லை. அதே தமிழ்நாட்டு அரசியல் பாரம்பர்யத்தை நானும் பின்பற்றி ஒரு குட்டிக்கதை சொல்லி விட்டு மேலே தொடர்கிறேன்.

ஒரு ஊரில் ஒரு ராஜா ஆட்சி செலுத்தி வந்தார். அவரது செல்வாக்கு அக்கம்பக்கத்து நிலச்சுவாந்தார்களிடமும் செல்லுபடியாகி வந்தது. அனைவருக்கும் இவர் சொல்வதுதான் சட்டம். பக்கத்து  ராஜ்யத்தில் இன்னொரு ராஜாவும் இருந்தார், அவர்தான் இந்த ராஜாவுக்கு ஒரே பெரிய எதிரி. அந்த எதிரி ராஜா கொஞ்சம் ஏப்ப சாப்பையான சின்ன நிலக்கிழார்களிடமிருந்து நிலங்களைப் பிடுங்கி ஆட்சி செலுத்தி வந்தார். சிறு சிறு நாடுகளையெல்லாம் யார் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது என்று இந்த இரண்டு ராஜாக்களுக்கும் பலத்த போட்டி. ஆதலால் பெரிய ராஜா குறு நில மன்னர் ஒருவரை தனது அடியாளாக பக்கத்து நாட்டு ராஜாவை கட்டுக்குள் வைக்கும் விதமாக பயன் படுத்தி வந்தார். ஏவி விட்டால் எந்த கொலை, கொள்ளை தீ வைப்பு போன்ற கொடும் செயல்களை செய்ய அஞ்சாத அந்த குறு மன்னனைத் தன் அடியாளாகப் பயன்படுத்தி அந்த ரவுடிக்குத் தேவையான பணம், ஆயுதங்களைக் கொடுத்துவந்ததோடல்லாமல் அவன் செய்யும் அட்டூழியங்களையும் கொலை கொள்ளைகளையும் கண்டு கொள்ளாமலேயே இருந்து வந்தார். அந்த ரவுடியின் துணை கொண்டு எதிரி ராஜாவை ஒரு சில நிலங்களில் இருந்து துரத்தி தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தும் விட்டார். அப்படி எதிரி ராஜாவைத் துரத்த உதவியதால் அந்த அடியாள் மீது ராஜாவுக்கு ஏக அபிமானம், ராஜாவுக்கும் அவரது மந்திரிகளுக்கும் அவன் செல்லப் பிள்ளையாகிப் போனான்

இப்படியாகவே அந்த ரவுடியின் துணை கொண்டு ஆட்சி செய்து வரும் வேளையிலே அந்த சிறு மன்னனும் அவன்  கீழே வேலை பார்க்கும் படையாட்கள் பலரும் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ராஜாவிடமே தங்கள் கை வரிசையைக் காண்பிக்க ஆரம்பித்து விட்டார்கள். ராஜாவின் வைக்கோல் போரிலேயே தீ வைக்கவும், ராஜாவின் சொந்தபந்தங்களையே கொல்லவும் ஆரம்பித்து விட்டார்கள். புராணங்களில் கடவுள்களிடம் தவம் இருந்து வரம் பெரும் அரக்கர்கள் தேவர்களையே அழிக்க ஆரம்பித்து விடுவது போல, இந்த பூதகணங்கள் பெருத்த அட்டூழியங்களை நாடு முழுக்க செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை வளர்த்து விட்டதே இந்த ராஜாதான். வரம் கொடுத்த கடவுள் போல ராஜா தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். இப்பொழுது அவர்களைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் அதே நேரத்தில் தனக்கு அடியாளாக இருக்கும் குட்டி ரவுடி ராஜாவையும் பகைத்துக் கொள்ளக் கூடாது நட்பாக வைத்துக் கொள்ள வேண்டும், அடிக்கவும் செய்ய வேண்டும் கம்புக்கும் வலிக்கக் கூடாது.

என்ன செய்வது என்று தெரியாமல் முழித்த ராஜா தன் ரவுடி அடியாளிடமே “இந்த பாருப்பா உன் ஆட்கள் எல்லாம் என் தலையிலே கை வைக்க ஆரம்பித்து விட்டார்கள். நீ ஏதாவது செய்து அவர்களை கட்டுக்குள் வைத்தே ஆக வேண்டும் என்றார். உடனே ரவுடியும் அது ரொம்ப கஷ்டமுங்க சாமி, ரொம்ப பணம் செலவாகுமுங்கோ நான் சொன்னாக் கூட கேட்க்க மாட்டானுங்கோ கெட்ட பசங்க. நீங்க உங்க படைகளை அனுப்புங்கோ நான் அவங்க கூட சேர்ந்து சின்ன ரவுடிகளை எல்லாம் கட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறேன்” என்று உத்திரவாதம் கொடுத்து பண்ணையாரை ஏமாற்றி தொடர்ந்து பணம் பறித்துக் கொண்டிருந்தான். ராஜாவிடம் காசை வாங்கிக் கொண்டு தன் ஆட்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கலானான், அவனது தளபதிகள் ராஜாவுக்கு கொடுக்கும் தொல்லைகள் அடங்குவதாகத் தெரியவில்லை. பணம் பெற்றுக் கொண்ட சிறுநில மன்னனோ, தான் வாங்கிய பணத்தை தன் அடியாட்களுக்கு பகிர்ந்து கொண்டு ராஜாவின் படைகளையே கொல்லவும் செய்து வந்தான். ராஜாவைத் தாஜா பண்ணுவதற்காக தன் அடியாட்களில் பிடிக்காத ஒரு சிலரை மட்டும் ராஜாவிடம் பிடித்துக் கொடுத்துவிட்டு அதுக்கும் காசு வாங்கிக் கொள்வதுமாக ராஜாவை ஏமாற்றிக் கொண்டே வந்தான். ராஜாவுக்கோ அவன் செய்வது நன்றாகத் தெரிந்து வந்தாலும் பழைய பாசமும், விசுவாசம் கண்ணை மறைக்க இதை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை. இவனையும் விட்டு விட்டால் தனக்கு ரவுடி வேலை செய்ய வேறு நம்பிக்கையான அள் கிடைக்க மாட்டான். இவனை விட மோசமான ஆட்களே அடியாட்களாகக் கிடைப்பார்கள். அதனால் குறுநில மன்னனை பகைத்துக் கொள்ள முடியவில்லை, அதே நேரத்தில் கை மீறிப் போன துஷ்டர்களை அடக்கவும் முடியவில்லை. முழி பிதுங்கிக் கொண்டிருந்த ராஜா எப்படியாவது தன் சொத்துக்கும் ஆள் படைகளுக்கும் குறைந்த பட்ச சேதாரம் ஆனாலும் பரவாயில்லை பக்கத்து எதிரி ஜமீந்தார் கை ஓங்கி  விடக் கூடாது என்பதற்காக தனக்கு நேரும் சேதாரங்களை ஊருக்குத் தெரியாமல் மறைத்தும் குறுநில மன்னனின் மோசடிகளை பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக் கொண்டே தன் ராஜாங்கத்தை நடத்திக் கொண்டு வரலானார்.

குட்டிக் கதையின் விளக்கத்துக்கு பின்னால் திரும்பி வரலாம். அதற்கு முன்னால் விக்கிலீக்கின் வெளியிட்ட ரகசியங்களின் கசிவை அமெரிக்கா ஒட்டு மொத்தமாக எதிர் கொண்டது என்று பார்க்கலாம். சாதாரண விஷயங்களையே 24 மணி நேரமும் காண்பித்து ஊதிப் பெருசாக்கும் அமெரிக்க மீடியா இந்த விக்கிலீக்சை அப்படியே ஜமுக்காளத்துக்குள் போட்டு ஒரேயடியாக அமுக்கி விட்டது. பிஸினெஸ் அஸ் யூஷுவல். பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் என்று பாகிஸ்தான் இருக்கிறது என்ற விஷயத்தை ராணுவ ஆவணங்களே ஒத்துக் கொண்ட பிறகும், ஒட்டு மொத்த அமெரிக்காவும் அதை எதிர் கொண்ட விதம் “ஸோ வாட்? இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது. அதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா”. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளைக் கூர்ந்து அவதானித்து வருபவர்களுக்கு இதில் எந்தவித ஆச்சரியமும் இருக்க இடமேயில்லை. பாகிஸ்தான் மீது அமெரிக்கா வெகுண்டு கோபம் கொண்டு ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் மட்டுமே விபரம் அறிந்தவர்கள் ஆச்சரியப் பட்டிருப்பார்கள். விளைவுகள் எதிர்பார்த்த வண்ணமே இருந்தன. விக்கிலீக்ஸ் அமெரிக்காவில் எந்தவிதமான அதிர்வலைகளையும் ஏற்படுத்தவில்லை.

விக்கிலீக்ஸ் வெடித்தவுடன் அமெரிக்காவில் வானம் நொறுங்கி விழுந்து விடவில்லை. பூமி பிளந்து விடவில்லை. சுனாமி  வந்து வாஷிங்டனைக் கொண்டு போய் விடவில்லை. எதிர்பார்த்தது போல எந்தவித அதிர்ச்சி அலைகளும் ஏற்படவில்லை. அன்றாட ஸ்டாக் மார்க்கெட் நிலவரம், சீதோஷ்ண நிலைத் தகவல்கள், ஹாலிவுட் நடிகர்களின் கல்யாணம், டைவர்ஸ், ஓரினச் சேர்க்கையாளர்களின் கேஸ்கள், பாதிரிகள் சிறுவர்களை வன்கலவி செய்தது, கலிஃபோர்னியாவில் தீ போன்ற அன்றாடச் செய்திகளில் ஒன்றாகக் கரைந்து போனது. நாட்டின் அதி முக்கியமான ராணுவத் தலைமையகத்தில் இருந்து அதி முக்கிய ராணுவ ரகசியங்கள் எல்லாம் இப்படி பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது போல சைபர் வீதியிலே போட்டு உடைத்திருக்கிறார்கள். இருந்தாலும் ஒருவரும் அதை லட்சியம் செய்யவில்லை. பத்திரிகைகளும், ரேடியோக்களும், எதிர்க்கட்சியினரும், ஆளும்கட்சியினரும், டெலிவிஷன்களும் இதைப் பற்றி அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஜனாதிபதியான ஒபாமாவோ இன்றைக்கு என்ன திங்கள் கிழமையா என்று கேட்பது போல கொட்டாவி விட்டுக் கொண்டே “ஆமாம் இது மோசமான விஷயம் தான் இப்படி இவர்கள் லீக் செய்திObamaருக்கக் கூடாது, இருந்தாலும் பரவாயில்லை ஒன்றும் மோசமில்லை, நாங்கள் இன்னும் அதைப் படிக்கவில்லை, எங்களுக்குத் தெரியாதது எதையும் அவர்கள் வெளி விடவில்லை” என்கிறார். வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ பேச்சாளர் ராபர்ட் ஜிப்ஸ் ”இது ஒரு பொறுப்பற்றத்தனம். இதனால் பெரிய பாதகம் எதுவுமில்லை. இதில் ஏதும் புதிது இல்லை” என்று விஷயத்தை ஒரேயடியாக அமுக்கி விட்டார். பாதுகாப்பு செயலர் ராபர் கேட்ஸோ ”அப்படியா லீக்காகி விட்டதா, அடக் கொடுமையே, நான் என்ன செய்ய முடியும்?, இன்னமே அப்படி எல்லாம் செய்யாதீங்கப்பா” என்று மழுப்பி நகர்ந்து விட்டார். ராணுவத் தளபதி ஜெனரல் பீட்ரெயஸோ “பாக்கிஸ்தான் இனிமேல் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்று சொல்லி விஷயத்தை முடித்துக் கொண்டார். செனட்டர்கள் கார்ல் லெவின், ஜாக் ரீட், ஜேம்ஸ் வெப், ரெம் ஃபீன்கோல்ட் போன்ற ஒரு சில செனட்டர்கள் மட்டுமே கொட்டாவி விட்டுக் கொண்டே ”பாகிஸ்தான் செய்வது ரொம்ப மோசம் இனிமேல் அவர்களுக்கு ஏதும் காசு கொடுப்பதாக இருந்தால் எங்களிடம் சொல்லி விட்டுக் கொடுங்கப்பா” என்றார்கள். வெளியுறவுத் துறை செயலர் ஹிலரி க்ளிண்ட்டனோ கிடக்கிறது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையில் வை என்ற கதையாய் பாகிஸ்தானின் சேவைகளை மெச்சி மேலும் ஒரு 500 மில்லியன் டாலர்களைக் கொடையாகக் கொடுத்து விட்டார். பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்கும் முக்கியமான சட்டத்தைக் கொண்டு வந்த செனட்டர் ஜான் கெர்ரி முதலில் பாகிஸ்தான் செய்தது அநியாயம் என்று சொன்னார். சபாஷ் ஒருவராவது பொறுப்பாக இருக்கிறாரே என்று எண்ணிய பொழுதே மறுநாள் வந்து “ஐயோ பாவம் பாகிஸ்தான், அவர்கள் இதையெல்லாம் 2009க்கு முன்னாள் செய்திருக்கிறார்கள் இப்பொழுது அவர்களைப் போல நல்ல பிள்ளைகள் யாரும் கிடையாது. யாரங்கே அவர்களுக்கு இன்னுமொரு 1 பில்லியன் டாலர் பொற்கிழி அளியுங்கள்” என்று சொல்லி விட்டார். மேலும் இவர் “பாகிஸ்தான் ரொம்பப் பாவம் நமக்காக என்னென்ன தியாகம் எல்லாம் செய்திருக்கிறார்கள் நம் மக்கள் பாகிஸ்தானின் வெள்ள நிவாரணத்திற்கு தாராளமாக நிதி கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பெண்டகன் மட்டும் விக்கிலீக்ஸ்ஸுக்கு (பாகிஸ்தானுக்கு அல்ல) கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து தான் சீரியசாக இருப்பது போலக் காட்டிக் கொண்டது. எவருக்கும் இது ஒரு பெரிய நாட்டின் பாதுகாப்பையே கேள்வி கேட்க்கும் விஷயமாகத் தெரியவில்லை அல்லது அலட்டிக் கொள்ளவில்லை. அமெரிக்கா வழக்கம் போல எருமை மாட்டின் மீது பெய்யும் மழை போல சலனமில்லாமல் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஊடகங்கள் மட்டும் சம்பிரதாயம் கருதி சில நாட்கள் இதைப் பற்றி ஒரு சடங்கு போல லேசாகப் பேசி விட்டு மீண்டும் வேறு வேலையைப் பார்க்கக் கிளம்பி விட்டன. விக்கிலீக்ஸ் இந்த ரகசியங்களை வெளியிட அனுமதி கொடுத்த பத்திரிகைகளோ முழு வெளியீட்டையும் தங்கள் பத்திரிகையில் வெளியிடாமல் விஷயத்தைப் பெரிதாக்காமல் அமுக்கி விட்டன.  ஆக எதிர்க்கட்சியான ரிபப்ளிக்கன் கட்சியினர், ஆளும் கட்சியான டெமாக்ரட்டினர், அரசின் ஆதரவு மீடியாக்கள் எதிர்ப்பு மீடியாக்கள் எல்லோரும் இந்த விஷயத்தில் பெரும் ஒற்றுமையும் பொறுப்புணர்வும் காட்டி இது ஒரு பெரிய விஷயமே இல்லை எதுவுமே நடக்கவில்லை என்பது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டனர். அதனால் மக்களுக்கும் இப்படி ஒரு விஷயம் நடந்ததே தெரியாமல் போய்விட்டது.

பாகிஸ்தான் எதையும் மறைக்கவில்லை, மோசம் செய்யவில்லை என்று முழுப் பூசணிக்காயை வெள்ளை மாளிகை முதல் பத்திரிகைகள் வரை கோஷ்டியாக கோரஸ் பாடி மறைத்து விட்டனர்.

அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்:

1. பாகிஸ்தான் ஒரு வேளை தாலிபானுடன் சேர்ந்து இப்படியெல்லாம் செய்திருக்கலாம். ஆனால் அவையெல்லாம் 2009க்கு முன்பாக நடந்தவை விக்கிலீக்ஸ் பழைய கண்டுபிடிப்புக்களைத்தான் வெளியிட்டுள்ளது ஆனால் நாங்கள் கண்டித்த பின்னால் பாகிஸ்தான் இப்பொழுது முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. ஆகவே விக்கிலீக்ஸ் கிளறியவை எல்லாம் பழைய விஷயங்கள் இப்பொழுதெல்லாம் அப்படி எதுவும் நடப்பதில்லை ஆகவே இவை பொருட்படுத்தக் கூடிய ஒரு சீரியசான விஷயமே அல்ல.

2. பாகிஸ்தான் செய்ததாக விக்கி வெளியிட்டிருக்கும் ரகசியங்கள் எல்லாம் அமெரிக்க ராணுவத்தின் கீழ்நிலை உளவாளிகளின் தகவல் மட்டுமே. மேலும் பெரும்பான்மையான் விஷயங்களை ஆப்கானின் உளவு ஏஜெண்டுகள் தந்திருக்கிறார்கள் ஆகையினால் நாம் அனைத்தையும் நம்ப முடியாது இனிமேல் அப்படி எல்லாம் செய்யக் கூடாது என்று நாங்கள் பாகிஸ்தானிடம் சொல்லி விட்டோம். ஆகவே அவர்கள்தான் நம்முடைய விசுவாசமான தோழர்கள். அவர்களை விட்டால் தாலிபானை ஒழிக்க வேறு ஆளே இல்லை. பாகிஸ்தானைப் போன்ற பத்திர மாற்று தங்கத்தை நாம் பார்க்கவே முடியாது. இதுவே ஒபாமா அரசின், வெளியுறவு துறையின், சி ஐ ஏ யின், பெரும்பாலான செனட்டர்களின், மீடியாக்களின் ஒட்டு மொத்த நிலைப்பாடக இருந்தது.

3. என்ன இருந்தாலும் பாகிஸ்தானுக்கு தாலிபான் தயவும் வேண்டும்தானே? பக்கத்திலேயே இந்தியா என்னும் எதிரிநாடு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் வரை பாகிஸ்தானை நாம் எப்படி தாலிபான்களுடன் கூட்டுச் சேராதே என்று சொல்ல முடியும்? ஆகவே இந்தியாவைத்தான் நாம் கண்டிக்க வேண்டும். இந்தியா பாகிஸ்தானுக்கு காஷ்மீரைத் தராதவரை பாகிஸ்தான் தாலிபான்களுடனும், அல்க்வைதாக்களுடனும் கூட்டுச் சேரவே செய்வார்கள். அதை நாம் எப்படி தவறு என்று சொல்ல முடியும்? ஆகவே அமெரிக்கப் படையினரை பாகிஸ்தானும், தாலிபானும், அல்குவைதாவும் கூட்டுச் சேர்ந்து கொல்வதற்கு இந்தியாதான் முழு முதற்காரணம். அமெரிக்கா இந்தியாவிடம் கடுமையாக நடந்து இந்தியாவை காஷ்மீரை விட்டுத் தரச் சொல்லி அழுத்தம் தர வேண்டும். இப்படி பல ஆப்கான் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து பாகிஸ்தான் ஒரு அப்பாவி என்று ஆதரவு தெரிவித்தார்கள்

இப்படியாகவே ஒபாமாவும், அமெரிக்க செனட்டர்களும், அமெரிக்க பத்திரிகைகளும் மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் ஆதரவு பிரச்சாரம் செய்து வருகின்றன. இதற்கிடையில் பாகிஸ்தானில் வந்த வெள்ளத்தை மிகவும் பெரிதுபடுத்தி அவர்களை மிகவும் பாதிக்கப்பட்டவர்களாகக் காண்பித்து ஊடகங்கள் பாகிஸ்தான் மீதான அனுதாபத்தை வளர்த்து வருகின்றனர். விக்கிலீக்ஸ் எழுப்பிய லேசான சந்தேகங்களையும் கோபங்களையும் கூட பாகிஸ்தானின் பெரு வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டது. ஒரு சில பத்திரிகையாளர்களின், செனட்டர்களின் பலஹீனமான முணகல்களைத் தவிர பாகிஸ்தான் மீது ஒரு ஈ, காக்கை, கொசு கூட கை நீட்டவில்லை, கண்டிக்கவில்லை. அப்படியே 2009க்கு முன்பாக பாக்கிஸ்தான் அமெரிக்கப் படையினரைக் கொல்லத் துணை புரிந்திருந்தால் அதற்காக அமெரிக்கா என்ன நடவடிக்கை எடுத்தது அதற்கு பிறகும் ஏன் பல பில்லியன் டாலர்கள் நிதி வழங்கப் பட்டன என்ற கேள்வியை யாருமே எழுப்பவில்லை.

விக்கிலீக்ஸ்ஸீன் கசிவுகள் அமெரிக்காவில் பெரும் மாற்றத்தையும், அரசின் கொள்கைகளில் பெரும் மாறுதலையும், ஒரு பெரும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்று நம்பிக் கொண்டிருந்த ஜூலியன் அசாங்கேயின் எண்ணத்தில் மண் விழுந்ததும் இல்லாமல், அவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டம் வேறு பாய்ந்திருக்கிறது. கற்பழிப்புக் குற்றச்சாட்டில் அவரைப் பிடித்து உள்ளே வைப்பதும் வெளியில் விடுவதுமாக ஸ்வீடன் அரசு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது. ”நான் நம்பிய நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் அரசின் சார்பாக அடக்கி வாசித்து மக்களை வஞ்சித்து விட்டார்கள் நாங்கள் மோசம் போய் விட்டோம், வாஷிங்க்டன் போஸ்ட் ஏமாற்றி விட்டது” என்று விக்கிலீக்கினர் தனியாகப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். எரிமலையாக வெடித்திருக்க வேண்டியது ஊசிப் போன பட்டாசு போல புஸ்ஸென்று ஆகி விட்டது. பூகம்பமாக அதிர்ந்திருக்க வேண்டியது அமைதியாக அடங்கிப் போய் விட்டது. ஏன்? ஏன் ஒபாமாவும், அமெரிக்க அரசும், ராணுவமும், செனட்டர்களும், மீடியாக்களும் ஒன்று சேர்ந்து இந்த விஷயத்தை அடக்கி அமுக்கி விட்டார்கள். ஏன்?

அமெரிக்காவின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை நாம் உற்று நோக்கும் முன் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் வரலாற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் ஆட்சியாளர்களுக்கும் கொள்கை வகுப்பாளருக்கும் ஒரே ஒரு கொள்கை மட்டுமே உண்டு. அவர்கள் வெளியில் சொல்வது எதுவாக இருந்தாலும் அவர்களது வலுவான கொள்கை ஒன்றே ஒன்று மட்டுமே. அமெரிக்காவின் சுயநலத்தைப் பேணிக்காப்பதும் அமெரிக்காவின் ஏகாதிபத்யத்தை உலகில் வலுவாக நிறுவி உலகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது மட்டுமேயாகும். அமெரிக்கா உலக நாடுகளில் ஜனநாயகத்தை ஊக்குவிப்பதாகவும், ஜனநாயகப் பாதைகளில் உலக நாடுகளைச் செல்ல வற்புறுத்துவதாகவும், ஜனநாயகத்தின் ஆதரவாளனாகவும் காப்பாளனாகவும் தன்னை காட்டிக் கொண்ட பொழுதிலும், அமெரிக்கா தன்னுடன் கூட்டணியில் இல்லாத எந்தவொரு ஜனநாயக நாடுகளின் மீது பெருத்த அலர்ஜியும், சந்தேகமுமே வைத்திருக்கிறது.

Obama with Saudi Kingபிற நாடுகளில் தான் சொல்வதைக் கேட்டு நடக்கும் சர்வாதிகார ராணுவ ஆட்சி இருப்பதையே அமெரிக்கா பெரிதும் விரும்புகிறது என்பது வெளியில் சொல்லப்படாத உண்மை. அதன் காரணமாகவே வெனிசூவேலாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ராணுவம் கொண்டு கவிழ்ப்பதற்கு உதவியது. சவூதி அரேபியாவின் எதோச்சிகரமான மத வெறி பிடித்த மன்னராட்சியுடன் கொஞ்சிக் குலாவி வருகிறது. சீனாவின் சர்வாதிகார மக்கள் விரோத ஒடுக்குறையான கம்னியூச ஆட்சியை சம்பிரதாயமான ஒரு சில வெற்றுக் கண்டிப்புகளுக்குப் பின்னால் கண்டும் காணாமல் ஊக்குவித்தே வருகிறது. சீனாவின் கொடுங்கோலர்களை அனுசரித்து தலாய் லாமாவை தன் வீட்டின் கொல்லைப்புறம் வழியாக வரவழைத்துப் பேசி அனுப்பினார் ஒபாமா. இன்னும் ஏராளமான நாடுகளில் உள்ள சர்வாதிகார ராணுவ ஆட்சிகள் அமெரிக்க ஆதரவுடனேயே இயங்கி வருகின்றன. ஈரானில் தேர்ந்தெடுக்கப் பட்ட ஆட்சியை விட தன்னால் அமர்த்தப் பட்ட ஷாவின் ஆட்சியையே அமெரிக்கா ஆதரித்து வந்தது. அனைத்து மத்திய கிழக்கு நாடுகளிலும் மதத்தின் பெயரால் நடக்கும் கொடூரங்களையும், காட்டுமிராண்டித்தனங்களையும் காணாமல் அமெரிக்கா கண்களை மூடிக் கொள்கிறது. காரணம் தனக்குக் கீழ்ப்படிந்து தன் நலன்களுக்கு குந்தகம் ஏற்படுத்தாமல் செயல்பட சர்வாதிகார அரசுகளால் மட்டுமே முடியும் என்பதை தெளிவாக உணர்ந்துள்ளது.

ஜனநாயகம் அமெரிக்காவுக்கு நல்லது. ஆனால் பிற நாடுகளில் இருந்தால் அது அமெரிக்க நலனுக்கு ஆபத்தாக இருக்கும் பட்சத்தில் அமெரிக்கா அதை விரும்புவதில்லை. ஒன்று சர்வாதிகார ராணுவ மன்னராட்சியாக இருக்க வேண்டும் அல்லது ஊழல்கள் நிரம்பிய ஜனநாயக அரசாக இருக்க வேண்டும் இரண்டுமே அமெரிக்காவின் லாபங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவை அல்ல. ஆக நேச நாடுகள் தவிர்த்து பிற நாடுகளில் நேர்மையான ஜனநாயக அரசுகளை விட, ஊழல் மிகுந்த குழுப்பமான நிலையில்லாத அரசுகளோ அல்லது சர்வாதிகார ராணுவ ஆட்சியோ நிலவுவதையே அமெரிக்கா விரும்புகிறது என்பதை வரலாறு தெளிவாக உணர்த்துகிறது. சவூதியில் மன்னராட்சி சரி, சீனாவில் கம்னியுஸ்டு ஆட்சி சரி ஆனால் தன் சொல்வதைக் கேட்க்காத வட கொரியா, ஈரான், வெனிசுவேலாவின் சர்வாதிகார ஆட்சிகள் மட்டுமே தவறு என்பதுதான் அமெரிக்காவின் உண்மையான நிலைப்பாடு.

ஒரு சின்ன உதாரணம். உலகப் போருக்குப் பின்னால் ஹிட்லரின் நாஜிப் படைகளையும், மந்திரிகளையும், நீதிபதிகளையும் விசாரிக்க அமெரிக்கா ஒரு நீதிக்குழுவை அனுப்புகிறது. அவர்கள் விசாரித்து யூத இன அழிப்புக்குக் காரணமானவர்களை தண்டிக்க வேண்டும். அதன்படி விசாரித்து மரண தண்டனைகளும் அளித்து வந்தது. திடீரென்று சோவியத் ரஷ்யாவின் படைகள் கிழக்கு ஐரோப்பாவில் உள்புகுந்துவிடும் என்று எதிர்பார்த்த அமெரிக்கா, தனக்கு ஜெர்மானியப்படைகளின், மக்களின் ஆதரவு வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக விசாரணையை நீர்த்துப் போகச் செய்து ஹோலோகாஸ்ட் குற்றவாளிகளை தப்பவிட்டு விடுகிறது. ஆக நேர்மை நியாயம் தர்மம் எல்லாம் அமெரிக்காவின் நலனுக்குப் பின்னால் மட்டுமே. முதலில் நிற்பது அமெரிக்காவின் நலன் மட்டுமே. ஆக அறம் என்பதெல்லாம் வெறும் ஏட்டளவில்தான்.

அதன் நீட்சியாகத்தான் அமெரிக்க அரசின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை நாம் நோக்க வேண்டும். பனிப்போர் காலத்தில் இருந்தே இந்தியா அமெரிக்காவுக்கு விசுவாசமான, நிலையான உறுதியான நம்பிக்கைக்குரிய நேச நாடாக செயல்பட்டது கிடையாது. நேரு மற்றும் இந்திராவின் கொள்கைகள் காரணமாக அமெரிக்காவுக்கு இந்தியா நம்பிக்கைக்குரிய சகாவாக இருந்ததேயில்லை. அதன் காரணமாக இந்தியாவின் மீது ஏற்பட்ட அவநம்பிக்கையில் சமீபகாலம் வரை எந்தவித மாறுதலும் ஏற்பட்டதில்லை. பலவீனமானதாக இருந்தாலும் இந்தியா இன்னும் ஒரு ஜனநாயகநாடு, அமெரிக்காவிற்கு பணிந்து நடப்பதை விட இந்தியாவில் ஓட்டு அரசியல் நடத்துவதே இந்திய அரசியல்வாதிகளுக்கு முக்கியம். இந்திய அரசியல்வாதிகளையும், கொள்கை வகுப்பாளர்களையும் இன்னும் முழுமையாக நம்ப அமெரிக்கா தயாராக இல்லை. சந்தேகத்துடன் மட்டுமே இந்தியாவை அமெரிக்கா இன்று வரை நடத்தி வருகிறது. ஆசியாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும், ரஷ்ய, சீன ஆக்ரமிப்புக்களை, விரிவாக்கத்தைத் தடுக்கவும் அமெரிக்காவின் ஆளுகையை நிலைப்பாட்டவும் சர்வாதிகார, மதவெறி பிடித்த நாடுகளின் உதவி மட்டுமே அமெரிக்காவுக்குத் தேவையே அன்றி இந்தியா போன்ற ஜனநாயக நாடுகள் அல்ல. ஆகவே இந்தியாவோ, இந்தியாவின் இறையாண்மையோ, மக்களின் பாதுகாப்போ அமெரிக்காவின் நலன்களுக்கு மேலானவை அல்ல. ஜனநாயகமும், இந்தியப் பாதுகாப்பும் அமெரிக்காவின் நலன்களுக்கு உட்பட்டு மட்டுமே, தேவையானால் மட்டுமே பொருட்படுத்தப்படும். தன் நலனுக்குத் தேவைப்பட்டால் இந்தியாவின் நலன்களை சமரசம் செய்யச் சொல்லி வற்புறுத்தவும் அமெரிக்கா தயங்காது என்பதே நிதர்சன நிலை.

இப்படியாகப்பட்ட ஒரு பூகோள ரீதியான முக்கியமான நிலப் பகுதியில் பாகிஸ்தான் அமைந்திருக்கும் இடமும், அதன் ராணுவ அரசும் அமெரிக்காவின் திட்டங்களுக்கும் பெரிதும் உறுதுணையாக இருப்பவை. ராணுவத் தளபதிகளுக்குப் பணத்தை விட்டெறிந்தால், அவர்களின் இந்திய அழிப்பிற்குத் தேவையான உதவிகளைச் செய்தால் பாகிஸ்தான் ராணுவத்தை தன் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பாகிஸ்தான் என்பது அமெரிக்க ராஜாவின் ஒரு அடியாள். காசு கொடுத்தால் ஆயுதம் கொடுத்தால் எலும்புத்துண்டை வீசியெறிந்தால் தாங்கள் சொன்னதைச் செய்வார்கள். அதனாலேயே ஜனநாயக இந்தியாவை விட ராணுவ சர்வாதிகார பாகிஸ்தான் அமெரிக்காவின் நலன்களைப் பொருத்தவரை மிகவும் நம்பிக்கையான ஒரு தேசம். இங்கு ராணுவத் தளபதிகள் வைத்ததே சட்டம். இந்தியாவைப் போல தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் அல்ல. வலுவான எதிர்கட்சிகள் கிடையாது. மதவெறி பிடித்த ராணுவ தளபதிகளும், கட்சிகளும், மக்களும் கொண்ட குழப்பமான ஒரு தேசம். அதை எப்படி வேண்டுமானாலும் தங்கள் திட்டங்களுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால் ராணுவத் தளபதிகளை அகற்றி விட்டு தனக்கு வேண்டிய ஆட்களையும் நியமித்துக் கொள்ளலாம். அமெரிக்க அரசின் பொம்மலாட்டத்தின் பொம்மைகளாகவே நேற்று வரை பாகிஸ்தானிய ராணுவம் செயல்பட்டு வந்தது. ஆனால் இன்று நிலைமை வேறு பொம்மைகளை இரண்டு வெவ்வேறு ஆட்டக்காரர்கள் இயக்குகிறார்கள். அமெரிக்கா மட்டுமே இனி பொம்மைகளைக் கட்டுப் படுத்த முடியாது என்ற ஒரு நிலை. ஆகவே முன்பை விட மிக அதிக அளவில் பொம்மைகளைக் கெஞ்சவும் தாஜா செய்யவும் வேண்டிய ஒரு சூழ்நிலையின் இன்று அமெரிக்கா உள்ளது.

090506_obamabbbb

ஆப்கானில் ரஷ்யா நுழைந்த பொழுது அவர்களை அங்கிருந்து துரத்த தனக்கு விசுவாசமான பாகிஸ்தானின் ராணுவமும், தாலிபான்களும், ஆப்கானிஸ்தானின் எண்ணற்ற முஹாஜிதின்களுமே  இருந்தார்கள். இந்திய ராணுவமோ இந்திய அரசோ ஆப்கானில் இருந்து ரஷ்யாவை அகற்ற ஒரு துரும்பைக் கூட அமெரிக்காவுக்கு உதவியாகக் கிள்ளிப் போடவில்லை. இந்திய சார்பான ஆப்கானின் வடக்கு படையினருக்கு செய்த உதவிகளோடு இந்தியா நிறுத்திக் கொண்டது. மாறாக சோவியத் ரஷ்யாவுக்கு இணக்கமான ஒரு நாடாகவே இந்தியா அமெரிக்கர்களால் அடையாளம் காணப்பட்டது. ஆப்கானில் சோவியத்தை வெளியேற்றிய பெரும் வெற்றிக்கு அமெரிக்கா பாகிஸ்தானுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக அமெரிக்காவின் அரசியல், ராணுவம், சிஐஏ முதலிய அனைத்துத் தரப்பினரும் இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த விசுவாசத்திற்காக என்ன விலை கொடுக்கவும் அமெரிக்கா இன்றும் தயாராகவே உள்ளது.  என்றுமே மதவெறி பிடித்த சர்வாதிகார ஊழல் ராணுவ தளபதிகளே அமெரிக்காவின் நலன்களுக்கு உகந்தவர்கள் என்பதே அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாடு. அவர்களை தங்கள் அடியாட்களாக நிறுத்திக் கொள்ளவும் தக்க வைத்துக் கொள்ளவும் அமெரிக்கா என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராகவே உள்ளது. பாகிஸ்தானை விட்டால் அதை விட வலுவான, ஸ்டிராடஜிகலான, நம்பிக்கைக்குரிய வேறு தேசம் அந்தப் பூகோளப் பகுதியில் கிட்டாது என்பதில் தெளிவாக உள்ளார்கள். ஆக அமெரிக்க ஆதிக்கத்தை நிறுவி எண்ணெய் வளம் கொழிக்கும் மத்திய ஆசியப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு தனது வலிமையான ராணுவத்தை விட ஒரு பெரிய தேசத்தின் கட்டுமானமும், இடமும், அனுமதியும், ஆதரவும் தேவை. தன் ஆதிக்கத்தை நிறுவ அரசியல்வாதிகள் அடியாட்களைப் பயன்படுத்திக் கொள்வதைப் போலவே அமெரிக்காவுக்கும் ஒரு மோசமான ஈவு இரக்கமற்ற ரவுடி தேவைப்படுகிறான். அந்த அடியாள் தேவையை பாகிஸ்தான் கச்சிதமாக பூர்த்தி செய்கிறது. நான் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்ன குட்டிக் கதையுடன் அமெரிக்காவின் நிலையை பொருத்திப் பார்க்கவும்.

அமெரிக்காவின் பில்லியன் டாலர் கணக்கிலான ஆயுதங்களும், பணமும், பிற வலுவான உதவிகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் வெளியேறும் வரை பாகிஸ்தானுக்கும் அதன் பிற தோழர்களான தாலிபான்களுக்கும் அமெரிக்கா வழங்கி வந்தது. ரஷ்யா வெளியேறிய பின்னால் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் வந்த பிறகும், பாகிஸ்தான் அமெரிக்கா தந்த ஆயுதம் பணம் கொண்டு இந்தியாவில் பேரழிவுகளை, ராணுவத் தாக்குதல்களைச் செய்த பொழுதும் அமெரிக்காவுக்கு அது பொருட்டாகவே இருந்ததில்லை. தனக்குத் தேவைப்படும்போது இந்த ரவுடிகள் உதவினால் போதுமானது. பிற சமயங்களில் அவர்கள் என்ன அட்டூழியம் செய்தாலும் அது தன் நலன்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வரை அமெரிக்காவுக்கு தாலிபான்களும், ஐஎஸ்ஐ-யும், இன்ன பிற இஸ்லாமிய பயங்கரவாதங்களும் பொருட்படுத்தக் கூடிய ஒரு பிரச்சினையாகவே இருந்ததில்லை. இந்தியாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களையும், கடத்தல்களையும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும், உலகளாவிய போதைப் பொருள் கடத்தலையும், ஆயுதக் கடத்தலையும் அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் எந்த வித பாதிப்பும் இல்லாதபடியால் அமெரிக்கா கண்டு கொள்ளாமல் மவுனமாக இருந்தே வந்தது.

சவூதி அரேபியாவின் கட்டுக்கடங்காத செல்வம் அதன் தூய இஸ்லாமான வஹாபி இஸ்லாத்தை உலகின் நாடுகளுக்கு விரிவு படுத்தும் திட்டத்தின் அடியாட்களாக  பாகிஸ்தானையும், தாலிபானையும் மாற்றும் வரை எல்லாமே அமெரிக்காவுக்கு சுமுகமாகப் போய்க் கொண்டிருந்தது. சவூதியின் எண்ணெய் எந்தவித பிரச்சினையுமில்லாமல் அமெரிக்காவுக்கு கிட்ட வேண்டும், அமெரிக்காவின் பணம் சவூதிக்கு வேண்டும். ஆனால் பரஸ்பர வர்த்தக நோக்கங்களையும் மீறி உலகம் முழுவதையும் வஹாபி இஸ்லாத்தின் ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும் என்ற சவூதியின் திட்டம் அமெரிக்காவின், ஐரோப்பாவின், பிற உலக நாடுகளின் சம நிலையைக் குலைப்பதாக அமைந்தது.

அதுவரை அமெரிக்காவின் அடியாளாக மட்டும் இருந்த பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ-யும், ராணுவமும் கூடவே வஹாபி இஸ்லாம் வளர்க்கும் பணியில் ஈடுபடும் அடியாளாகவும் இரட்டை அடியாள் வேலை பார்க்க ஆரம்பித்தது. பாகிஸ்தானின் கூட்டாளியான தாலிபான்களுக்கும் பிற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கும் அமெரிக்காவின் தயவு இனிமேலும் தேவைப்படவில்லை. அமெரிக்காவின் பணம் எப்பொழுதும் சவூதியின் எண்ணெய் வாய்க்கால் வழியாக ஆப்கானுக்கும் பாய்ந்தோடியது. அமெரிக்காவின் தேவை தாலிபான்களுக்குத் தேவையின்றி போனது. அப்படியே ஆயுதங்களும் பணமும் தேவைப்பட்டாலும் அவை என்றும் தட்டுப்பாடில்லாமல் பாகிஸ்தான் என்னும் வாய்க்கால் வழியோடி தாலிபான்களுக்கு தட்டுப்பாடில்லாமல் பொசிந்து கொண்டிருந்தது. அதே வேளையில் பாகிஸ்தானுக்கு இப்படியான இரட்டை அடியாள் உத்தியோகம் வசதியான ஒன்றாகவே இருந்து வந்தது. பாகிஸ்தானின் இந்திய வெறுப்பிற்கு இந்த இரண்டு பார்ட் டைம் வேலையும் அதனால் வந்த பணமும் பெரும் உதவியாக இருந்தது. இந்தியாவை ஆயிரம் வெட்டுக்கள் மூலமாக அழிக்கும் வேலை மும்முரமாக நடந்து வந்தது. அதற்கு தாலிபான்களின் ஆதரவும் அமோகமாக இருந்து வந்தது.

எல்லாமே பாகிஸ்தானின் திட்டப்படி எண்ணப்படி, கச்சிதமாக நடந்து வந்தபொழுதுதான் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காந்தாஹாருக்குக் கடத்தப்பட்டது. இந்திய ஆட்சியாளர்கள் தொடை நடுங்கி பயங்கரவாதிகளை விடுவித்து பயணிகளை மீட்டு வந்தனர். அமெரிக்கா அரசு இந்த விமானக் கடத்தலைக் கண்டிக்கவும் இல்லை கண்டு கொள்ளவும் இல்லை. மொளனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. குவைத்தில் இருந்து சதாமைத் துரத்தி தனது பனிப்போருக்கும் சோவியத் யூனியனின் பிளவுக்கும் பின்னால் உலகளாவிய மேலாண்மையை நிலை நிறுத்திக் கொண்டிருந்தது. அந்தச் சூழலில்தான், இந்திய விமானக் கடத்தலில் தாலிபான்களுக்கும், பாகிஸ்தான்களுக்கும் கிடைத்த தெம்பினால் அடுத்து தங்களது விரிவாக்கத் திட்டங்களை உலக அளவில் நடத்தத் திட்டமிட்டது. அமெரிக்காவின் அடி மடியில் கை வைத்தாலும் தங்களது திட்டங்களுக்கு எவ்வித ஆபத்துக்களும் ஏற்படாது என்பதை சோதிக்க விரும்பியது. தங்களது சக்தியின் ஆழத்தைச் சோதித்துப் பார்க்க விரும்பியது சவூதியின் பினாமிகளான அனைத்து இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களும்.  காந்தஹார் விமானக் கடத்தில் பணயமாக விடுதலை செய்யப் பட்டவனின் தலைமையில் 2001 செப்டம்பர் 11 அன்று ஒரு சோதனை தாக்குதலை நடத்தியது.

kandahar

வஹாபி இஸ்லாம் என்னும் உலகமயமான பயங்கரவாதத்தின் தோற்றுவாயான சவூதியை அமெரிக்காவினால் ஏதும் செய்ய இயலாத நிலை. சவூதி இல்லாமல் அமெரிக்காவின் பொருளாதாரம் இன்று இல்லை. அமெரிக்காவின் உலகின் பெரும்பாலான நிதி நிறுவனங்கள் இன்று சவூதியின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதன் காரணமாகவே  தாங்கள் அழித்த இரட்டைக் கோபுரத்தின் அருகிலேயே வெற்றிச் சின்னமாக மசூதியைக் கட்ட விரும்பும் பொழுது ஒட்டு மொத்த அமெரிக்க நிர்வாகமும் தாழ்பணிந்து அவன் கோரிக்கையை பூர்த்தி செய்து மசூதி கட்ட அனுமதியளிக்கிறது. சவூதியை நேரடியாக மிரட்டவோ பணியவைக்கவோ அமெரிக்காவுக்கு இயலாத காரியம். அதே நேரத்தில் சவூதியின் எண்ணெய் பணம் மூலமாக அமெரிக்காவின் மீது கட்டவிழ்த்து விடப் பட்டிருக்கும் பயங்கரவாதத்தையும் ஒடுக்க வேண்டிய கட்டாயமும் அதன் மூலமாக தனது மேலாண்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ள வேண்டிய தர்ம சங்கடமான ஒரு நிலையும் அமெரிக்காவுக்கு உள்ளது. ஆகவே வேறு வழியின்றி தாலிபான்களை அழிக்கக் கிளம்புவது போன்ற ஒரு நாடகத்தை அமெரிக்கா நடத்த வேண்டி வருகிறது. தெருவில் கீரி பாம்பு சண்டை நிகழ்த்தப் போவதாக கூட்டம் கூட்டும் கூத்தாடி கடைசி வரை கீரியையும் பாம்பையும் சண்டைக்கு விடவே மாட்டான். கீரியும் பத்திரமாக கூண்டுக்குள் போய் விடும், பாம்பும் பத்திரமாக பெட்டிக்குள் அடைந்து விடும்.

ஆக மத்திய ஆசியாவில் தன் ஆளுமையை நிலை நாட்டுவதற்காக பாகிஸ்தான் அமெரிக்காவுக்குத் தேவைப்படுகிறது. இடையில் வஹாபி பயங்கரவாதத்தை உலகம் முழுதும் நிலைநாட்டத் துடிக்கும் சவூதியின் அடியாளான அல்குவைதா, தாலிபான் போன்றவர்களின் தொல்லைகளையும் அமெரிக்கா சற்று கட்டுக்குள் வைக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. அமெரிக்காவுக்கு அதிக தொல்லை கொடுக்க மாட்டோம் என்று உறுதியளித்தாலோ அமெரிக்க நலன்களுக்கு பாதகமாகச் செயல்பட மாட்டோம் என்று அவர்கள் ஒரு ஒப்பந்ததிற்கு வந்தாலோ அமெரிக்காவுக்கு உடன்பாடே. அந்தவிதமான ஒரு ஒப்பந்ததை நோக்கியே அமெரிக்கா இன்று நகர்ந்து கொண்டு வருகிறது. அந்த உடன்பாடு பாகிஸ்தானின் மத்தியஸ்ததத்தில் எட்டப்படும்பொழுது அமெரிக்கப் படைகள் ஆப்கானில் இருந்து விலகும். அதற்கு விலையாக பாகிஸ்தான் காஷ்மீரைக் கேட்கலாம். மன்மோகன் சிங் காஷ்மீரை விட்டுக் கொடுத்து விடலாம் என்று சொல்வதும் கூட இந்த ஏற்பாட்டின் ஒரு பக்க விளைவாகவே இருக்கக்கூடும். தன் படையினர் சில நூறு பேர்கள் கொல்லப்பட்டாலும் தன் நாட்டில் சில தாக்குதல்கள் நடந்தாலும் கூட அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு பாகிஸ்தானை போஷிக்க அமெரிக்கா தயாராகவே உள்ளது. அந்த உண்மையே இந்த விக்கிலீக்ஸ் கசிவின் மூலம் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. அதற்காக கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல இந்தியாவில் இருந்து காஷ்மீரைப் பிடுங்கி பாகிஸ்தானிடம் ஒப்படைக்கவும் அமெரிக்கா தயங்காது என்பதே இந்த விக்கிலீக்ஸ் வெளிப்படுத்திய கசப்பான உண்மை.

அமெரிக்க – ஆப்கான் – பாகிஸ்தான் – தாலிபான் – அல்குவைதா – சவூதி நடத்தும் பகடையாட்டதினால் விளையப் போகும் முடிவுகள் குறித்தும், அதனால் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்படப் போகும் பாதகங்கள் குறித்தும் இந்தத் தொடரின் அடுத்த பகுதியில் காணலாம்.