வாசகர் எதிர்வினை

fe2cups

நண்பரே,

வணக்கம்.

நாடனின் இந்த அரிய கட்டுரையை வெளியிட்ட உங்களுக்கும், வெளிப்படுத்திய திரு.ஜெயமோகன் அவர்களுக்கும் என் நன்றி.

எனது கருத்துக்கள் சில:

  • அக்காள் பாரதியை ஈர்த்தது போலவே, நமது நாடன் அவர்களையும் பெரிதும் பாதித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.  இன்றைய தமிழ் இலக்கிய உல்கிற்கு, அந்த யோகினியை நாடன்தான் அறிமுகம் செய்யவேண்டும் என்பது இறையின் சித்தம் என்றே நம்புகிறேன்.  நாடனை அறிந்தவர்கள் அவரது சத்திய ஆவேசத்தை அனுப்விக்காமல் இருக்க முடியாது. கோபம் போலவே தென்படும் இந்த இயல்பு அவரது ஆன்மகுணம்.  ஆவுடையக்காள் பாட்டிலும் நாடனைக் காணலாம்.  எனவேதான் அவர் அக்காளைப் பற்றி எழுதியது மிகவும் பொருத்தம். 
  • இது இத்துடன் நிற்காது என்றும் கவுளி சொல்கிறது!!
  • போராடிய ஒரு பெண்ணாக, அவரைத் தான் கண்டதாகவும், அவரது அபூர்வமான சில தமிழ்ப் பிரயோகங்கள் தன்னைக் கவர்ந்ததாகவும், மற்றபடி வேதாந்தம், சித்தாந்தம் எல்லாம் தெரியாது என்கிறார் நாடன்.  அது மெய்தான்; பொய்யும் கூட!  கடவுளை நாம் நம்புவது அவன் கண்னெதிரில் வந்து நிற்காததால்தானே? வேதாந்தம் என்பது ஒரு துறையல்ல. (philosophy இல்லை. அதைப்போய் தத்துவம் என்பதும் பொருத்தமாயில்லை) பரம சத்தியம். அது ஓடிக்கொண்டேயிருக்கிற நதி, அல்லது அசைவே இல்லாத ஆகாசம். வேட்கைதான் படித்துறை.  குருவிக்கும், யானைக்கும் கொள்ளுமளவு மிகவும் வேறுபட்டாலும், வேட்கையில் வித்தியாசமேது?  நாடன், நன்கு குடித்து, கொஞ்சம் முக்குளி போட்டுத்தான் கரையேறி வந்து நமக்குக் கதைசொல்லியிருக்கிறார்.  பருகப் பருகப் பெருகும் தாகம் என்பதை அறியாரா என்ன?
  • அவர், இன்னும் அக்கமகாதேவியைப் பற்றியும், காஷ்மீரின் லல்லா தேவியைப் பற்றியும், ஆந்திரத்து சம்மக்கா-சாரக்கா பற்றியும் கூட அற்புதமான பதிவுகள் செய்யவேண்டும் என்பது என் கோரிக்கை.  செய்வார் என்பதே என் நம்பிக்கை
  • கீழக்கடையத்தில் நான் பாரதியின் மைத்துனியான, துறவிபோல் வாழ்ந்து கொண்டிருந்த சொர்ணாம்பாள் அவர்களைச் சந்தித்தபோதும், அவர் ஆவுடையக்காள் பாடலொன்றைச் சொன்னதாக நினைவு. 

நாடன் போல் எதையும் ஆழ்ந்து வாசித்தவன் இல்லை நான்.  பாட்டியும், அத்தையும் சகட்டு மேனிக்கு அக்காள் பாட்டைப் பாடுவார்கள். புரியாதது பிரமிப்பாகவும், புரிந்த மிகக்கொஞ்சம் காந்த ஈர்ப்பாகவும் இருக்கும். அவர் கையில் சேரவே அந்தப் புத்தகம் என் கண்ணில் பட்டது. மாவில் புரண்டு தங்கவால் கொண்ட மகாபாரத்த்துக் கீரிப்பிள்ளை மட்டுமே நான்.

ரமணன்

அக்காளின் தாக்க‌ம் த‌ம்பிட‌ம், ச‌ரியான‌ தேர்வு. அக்காளின் உவ‌மைக‌ளும், எடுத்தாண்ட‌ ப‌ழ‌மொழிக‌ளும் நம‌க்கு ரெம்ப‌ப் புதுசு. செங்கோட்டை ஆவுடையக்காள் ப‌ற்றி மேலும் அறிய‌த்தூண்டும் அரிய‌ ப‌திவு.

வ‌ண‌க்க‌ங்க‌ளுட‌ன்,
வாச‌ன்.

காமன்வெல்த் போட்டிகளைப் பற்றிய கட்டுரை அருமை. வெறும் பத்திரிகைத் தகவல்களைக் கொண்டு இட்டு நிரப்பாமல் தில்லியிலேயே வசித்துக் கொண்டிருக்கும் கட்டுரையாளரின் தனிப்பட்ட அவதானிப்புகளும் கட்டுரைக்கு வலு சேர்ப்பதாக இருந்தது. சொல்வனத்தின் பலமும் இதுவே. மீண்டும் மீண்டும் இப்போட்டிகள் கேலிக்கூத்தாக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இப்போட்டிகளுக்காக அமைத்திருக்கும் பாடல் மிகவும் மோசமாக இருக்கிறது, அதை மீண்டும் வடிவமைக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே சொல்கிறார் காமன்வெல்த் போட்டிகளின் கமிட்டியில் பணியாற்றும் வி.கே.மல்ஹோத்ரா. இதைவிட ஒரு கலைஞனை அவமானப்படுத்தவே முடியாது. ரஹ்மானின் பாடல்கள் கேட்டவுடனே பிடிக்கக்கூடியவை இல்லை. ஆனால் தொடர்ந்து கேட்பதன் மூலம் அப்பாடல்கள் பெரிய வெற்றியைப் பெறக்கூடியவை. ரஹ்மானுக்கென்று தனித்த பலமும், பலவீனமும் இருக்கிறது. அவருடைய ‘செம்மொழி மாநாட்டு’ பாடலும் வெகுவாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் தமிழக முதல்வரே அப்பாடலை விடிய விடியக்கேட்டதாகக் கூறினார். அந்த நாகரிகமாவது தமிழக முதல்வரிடம் கூட இருந்தது. மல்ஹோத்ராவிடம் அதுவும் இல்லை. ஆகவே ரஹ்மானின் ஆஸ்கார் புகழுக்காகவே, அவரைத் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்து இசையமைக்கச் சொல்லவும் வேண்டாம். பின்னர் பாடல் நன்றாக இல்லை என்றெல்லாம் சொல்லி அவரை அவமானப்படுத்தவும் வேண்டாம். வெவ்வேறு கலைஞர்களுக்கு, முக்கியமாக மரபார்ந்த பின்னணியிலிருந்து வருபவர்களுக்கு வாய்ப்புத்தர வேண்டும். இதில் இன்னொரு அதிர்ச்சியளிக்கும் தகவல் ரஹ்மான் காமன்வெல்த் போட்டிக்காக இசையமைத்த ஒரே ஒரு பாடலுக்காகத் தரப்பட்டிருக்கும் சம்பளம் ஐந்து கோடி ரூபாய்! ஆனால், ராணுவ வீரர்கள் தேசிய சேவையாக நினைத்து காமன்வெல்த் போட்டிகளுக்கு இலவச பாதுகாப்பு வழங்கவேண்டும் என்கிறார் கல்மாடி. சபை நாகரிகத்தைக் கருத்திற்கொண்டு வசைச்சொல் எதுவும் வாயில் வருவதற்கு முன் கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,
கலைமணி

தேசியகீதத்தின் உணர்ச்சிபொருந்திய முகத்தை மட்டுமே கவனித்து வந்திருந்த எனக்கு, விக்கியின் கட்டுரை பெரிய ஆச்சரியத்தை அளித்தது. நான் ஏன் தேசியகீதத்தின் இசையைப் பற்றி யோசித்ததே இல்லை எனப்பலமுறை கேட்டுகொண்டேன். தேசியகீத சர்ச்சையைக் குறித்துப் பின்னர் கூகுள் தேடல் வழியாகப் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். கேப்டன் ராம்சிங் தேசியகீதத்தைத் தான் வடிவமைத்ததாகக் கூறியதும் அதற்குப் பல வங்காளிகள் செய்த எதிர்வினை மிகவும் அருவருப்பூட்டுவதாக இருந்தது. இனப்பெருமையைப் பேசுவதில் தனித்தமிழ்வாதிகளுக்குக் கொஞ்சம் குறைந்தவர்களில்லை வங்காளிகள். ஒரு பழங்குடி ஆசாமியால் எப்படி உயர் நவீனத்துவ இசையைப் புரிந்துகொள்ளமுடியும் என்றெல்லாம் அப்பட்டமாக இனவெறியோடு பேசியிருக்கிறார்கள். மனம் நொந்துபோன ராம்சிங், “ஒரு மலைப்பழங்குடியினன் இவர்கள் ஊரைக் காவல் காத்தால் போதும்… அதைத்தாண்டி இசையமைப்பதையெல்லாம் யாராலும் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்று நொந்துபோய் பேசியிருக்கிறார். இந்திய அரசும் நெடுகாலம் அவரை சந்தேகக்கண் கொண்டு பார்த்தபடி இருந்திருக்கிறது. அரைமனதாக கேப்டன் ராம்சிங்கை கடைசியில் ஒத்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும் அவர் இறந்தபோது உள்ளூரிலேயே இருந்த கலெக்டர், அரசு அதிகாரிகளெல்லாம் கலந்து கொள்ளவில்லை. இந்த சர்ச்சையையே விட்டுவிட்டாலும் கூட, ராம்சிங் நேதாஜியின் படையில் கேப்டனாகப் பணியாற்றியவர். அப்படையின் தேசியகீதத்தை வடிவமைத்தவர். பல தேசிய எழுச்சிப்பாடல்களை வடிவமைத்தவர். குறைந்தபட்சம் அதற்காவது மரியாதை செலுத்தியிருக்கலாம். கட்டுரையில் இந்த விஷயங்களைக் குறிப்பிட்டால் இசை என்ற நோக்கத்தை விட்டு வெளியே சென்றிருக்கும் என்றாலும் கூட இதை நிச்சயம் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அன்புடன்,
ஜேம்ஸ் விஜயநாயகம்

வெடித்துக் கிளம்பும் விக்கிலீக்ஸ் – 2  என்ற கட்டுரை இந்தியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும்! நன்றி

சங்கரநாராயணன்