உலகத்து உணவுகளிலேயே மிக மோசமான உணவு என்றால் அது ஏரோப்ளேன் சாப்பாடுதான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எல்லாத் தாமதங்களும் முடிந்து கடைசியாக விமானம் கிளம்பி சீட் பெல்ட் அணைந்து ‘அப்பாடா, இனி டாய்லெட் போகலாம்’ என்று எழுந்தால், நடைபாதையை அடைத்துக்கொண்டு குல்ஃபி வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்துவிடுவார்கள். அனோரெக்ஸியாவில் குச்சி குச்சியாக இருக்கும் கையால் சாப்பாட்டு ட்ரேயை நீட்டுவாள் பணிப்பெண்.
ட்ரேயில் ஸ்பூன், கரண்டி, பல்லுக்குத்தி, டிஷ்யூ பேப்பர் எல்லாம் நீட்டாக மடித்து ப்ளாஸ்டிக் பையில் இருக்கும். இது வரை எல்லாம் சரிதான்; ஆனால் ஃபாயில் பேப்பரைத் திறந்து பார்த்தால், வெளிர் மஞ்சள் நிறத்தில் மாரியம்மன் கோவில் கூழ் மாதிரி திரவம் ஒன்றில் இன்னதென்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாத சில பொருள்கள் ஊறிக் கொண்டிருக்கும். எச்சரிக்கையாக ஓரத்தில் கடித்துப் பார்த்தால் பென்சில் அழிக்கிற ரப்பர் போல் சுவைக்கும். விமானமே ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி மசாலா நாறும்.
அப்படியே மூடி வைத்துவிட்டு தண்ணி டீயைக் குடித்துப் பசியாற முயற்சிப்பேன். அந்தக் கண்றாவி ட்ரேயை லேசில் வந்து வாங்கிக் கொள்ளவும் மாட்டார்கள்; அரை மணி நேரம் மடியிலேயே வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்.
இங்கே இருக்கிற டெல்லி மும்பைக்குப் போய் வருவதற்குள்ளாகவே நாக்கு பிதுங்கிவிடுகிறது எனக்கு. விண்வெளியில் செல்லும் விண்விமானிகள் சாப்பாட்டுக்கு என்ன செய்கிறார்கள் என்று ஒரு நாசா வீடியோ பார்த்தேன். பாவம், அவர்கள் உலர்ந்த பழங்களையும் காய்ந்த இறைச்சியையும் (எப்போது செத்த பசு மாடோ?) சாப்பிட்டு மாசக் கணக்கில் உயிர் வாழ்கிறார்கள்.
250 மைல் உயரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்வெளி நிலையத்திற்கு சாப்பாடு, தண்ணீர் எல்லாம் கீழே இருந்துதான் போக வேண்டும். உணவுப்பொருள் டெக்னாலஜிக்காகவே நாசாவில் தனி டிபார்ட்மெண்ட் உண்டு. விண்வெளி விஞ்ஞானிகள் சமையல் செய்தால் வாயில் வைக்க முடியாதே என்ற பயத்தில், சமையலறையின் தலைமைப் பொறுப்பு பெர்க்கனோக் என்ற பெண்மணியிடம் விடப்பட்டிருக்கிறது. எடையற்ற நிலையில் சாப்பிடத் தோதாக எஞ்சினியரிங் செய்யப்பட்ட உணவு. அதன் பாக்கேஜிங்கிற்கே அதி உயர் தொழில் நுட்பம் தேவைப்படுகிறது.
சென்ற நூற்றாண்டில் விண்வெளிப் பயணத்தின் ஆரம்ப நாட்களில் சக்கையாக உலர்த்திய பழங்கள், உறைந்த பவுடர்கள், டியூபில் பிதுக்கிச் சாப்பிட வேண்டிய களிம்புகள் என்று ஏதேதோ கொடுத்து அனுப்பினார்கள். விண்விமானிகள் மனைவியைப் பிரசவத்துக்கு அனுப்பிய கணவன் மாதிரி நாக்கு செத்துப் போய், செஞ்சோற்றுப் புரட்சியே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
ஜெமினி ராக்கெட்டில் சென்றவர்கள் திருட்டுத்தனமாகக் கொஞ்சம் பீஃப் சாண்ட்விச்சைக் கடத்திக்கொண்டு போனார்கள். மேலே எடை இல்லாத நிலையில் ரொட்டித் துணுக்குகள் சிதறி ராக்கெட்டுக்குள் எங்கும் மிதக்க ஆரம்பித்துவிட்டது ! எங்கேயாவது கண்ணில் மூக்கில் அல்லது எலெக்ட்ரானிக் கருவிகளில் புகுந்து வைத்தால் என்ன செய்வது என்று விஞ்ஞானிகள் பயந்துவிட்டார்கள். அனுமதிக்கப்படாத உணவுப் பொருள்களை எடுத்துப் போனதற்காக விசாரணைக் கமிஷனே அமைத்து அவர்களை செம பரேடு விட்டார்கள். அதன் பிறகு ராக்கெட்டில் ஏறும் முன்பு வெடி குண்டு பரிசோதனை மாதிரி சோதித்துவிட்டுத்தான் அனுப்புகிறார்கள்.
துணுக்குகள் சிதறும் அபாயத்தினால் விண்வெளியில் ப்ரெட், ரொட்டி கிடையாது. அதற்கு பதிலாக டோர்ட்டிலா என்ற கோதுமை ஊத்தப்பம்தான் கொடுக்கப்படும். வருடங்கள் செல்லச் செல்ல பாக்கேஜிங் தொழில் நுட்பம் வளர்ந்து, விண்வெளி மெனுவும் கொஞ்சம் பரவாயில்லாமல் ஆக ஆரம்பித்தது. இப்போது அவர்கள் இறைச்சி, பழுப்பு கேக், அரிசி அவல், சிக்கன் சூப், முட்டைக் கறி, அன்னாசி, சீஸ், சாக்லேட் என்று ஏற்பாடாகத்தான் சாப்பிடுகிறார்கள்.
ரஷ்யர்கள், சீனர்கள் எல்லாம் தத்தமது தேசீய உணவு வகைகளையும் மூலிகை டீயையும் எடுத்துப் போகிறார்கள். கொரியாவின் தேசீய உணவான கிம்ச்சி என்பது, முட்டைக்கோஸை அரைத்துப் புளிக்க வைத்துச் செய்யும் ஒரு பண்டம். அதை விண்வெளிப் பயணத்துக்கு ஏற்ற முறையில் தயார் செய்யப் பற்பல ஆராய்ச்சிக் கூடங்கள் மில்லியன் மில்லியனாக செலவழித்து வருடக் கணக்கில் பாடுபட்டன. (இடையில் புகுந்து எத்தனை பேர் சாப்பிட்டார்களோ!)
கொலம்பியா விண் ஓடத்தில் சென்ற நம் கல்பனா சாவ்லா விரும்பி என்ன கொண்டு போயிருப்பார்? இட்லி சாம்பாரா? சொல்வதற்கு அவர் திரும்பி வரவில்லை. அடுத்துப் போன சுனிதா வில்லியம்ஸ் கொண்டு சென்றது சமோசா.
இன்னொரு பிரச்னை – ராக்கெட்டில் உப்பு, கிப்பு சரியில்லை என்று உணவுப் பொருள் எதையும் தூக்கி எறிய முடியாது. விண்வெளியில் குப்பையைக் கொட்டுவதற்கு இடம் கிடையாது. மாசக் கணக்கில் அப்படியே வைத்திருந்து நாற விட்டுத் திரும்பி பூமிக்குத்தான் கொண்டு வர வேண்டியிருக்கும். எனவே பாக்கெட்டைத் திறந்தால் மிச்சம் வைக்காமல் அவ்வளவையும் சாப்பிட்டாக வேண்டும்!
பாவப்பட்டவர்களிலேயே பரிதாபப்பட்டவர்கள் என்றால், அது என்றாவது ஒரு நாள் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டில் செல்லப் போகிறவர்கள்தான். பூமியுடன் ரேடியோ தொடர்பு தவிர வேறு பொருளியல் தொடர்பே இல்லாமல் வாழ்வது என்றால் அதன் தொழில் நுட்ப, உடல் நல-மன நலப் பிரச்னைகளே வேறு. பாக்கெட்டில் அடைத்து வைத்த உணவில் வைட்டமின்கள் அதிக நாள் தங்காது. A,B,C,D எல்லாம் ஒரு வருடத்தில் காலி!
அவ்வளவு தூரம் போய்விட்டு வருவதற்குக் குறைந்தது இரண்டு மூன்று வருடம் ஆகும். அத்தனை நீண்ட காலம் விண்வெளியில் இருந்தால், எடையே இல்லாத நிலையில் அவர்களின் தசை நார்கள் வலுவிழந்து அட்ரஃபி நிலையை எய்திவிடும். நாற்பது வயதில் கிளம்பிப் போனவர் திரும்ப வரும்போது டொக்கு விழுந்து எழுபது வயதானது போல் இருப்பார். குறிப்பாக இதயத் தசைகள் வதங்கிப் போவதுதான் மிகப்பெரிய ஆபத்து.
அமெரிக்க ராணுவத்தினர் அடாவடி ஆக்கிரமிப்புக்களுக்காக வெளி நாடு செல்லும்போது MRE (அப்படியே சாப்பிடத் தகுந்த உணவு) என்ற பட்டைசாதப் பொட்டலங்களைக் கொண்டு போவார்கள். போர் முனையில் ஃபிரிட்ஜ் இல்லாத இடத்தில்கூடக் கெட்டுப் போகாமல் இருக்க, அதிகக் காற்றழுத்தத்தில் சூடாக்கிக் கிருமி நீக்கம் செய்வார்கள். இந்த டெக்னாலஜியையும் நாசா உபயோகித்துக் கொள்கிறது. அமெரிக்க நாக்கு போர் முனையில் கூட சுடச்சுட சாப்பாடு கேட்கிறது போலிருக்கிறது. அதற்காக நெருப்பில்லாத அடுப்பு என்று கெமிக்கல்களை உபயோகித்துச் சூடுபடுத்துகிறார்கள். ஓர் உள்ளங்கை அகலப் பையில் மக்னீஷியம் பவுடர், உப்பு, கொஞ்சம் இரும்புத் தூசி. அதில் தண்ணீர் சேர்த்தால் ஹெச்டூஓ, ஓஹெச்டூ என்று ஏதோ ரசாயன விளைவில் ஜிகு ஜிகுவென்று சூடாகிவிடும்.
அண்டார்ட்டிகா போன்ற விபரீதமான பருவ நிலைகளில் உயிர் வாழ்வதற்கு என்ன சாப்பிடலாம் என்பது நமக்கு இப்போது அத்துபடி. எல்லாம் அடிபட்டு அனுபவப்பட்டு, பட்டினியில் செத்துக் கற்றுக் கொண்டதுதான். அந்தக் குளிரில் உடல் வெப்பத்தை இழந்துவிடாமல் இருப்பதற்கே சாப்பிடும் உணவிலிருந்துதான் எரி சக்தியை எடுத்துக் கொள்ள வேண்டும். பார் பாராக சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். ‘நான் செவ்வாய்க் கிழமை விரதம்’ என்று பட்டினி இருக்க முயற்சித்தால் உடம்பு குளிர்ந்து ஹைப்போதெர்மியா வந்துவிடும் !
அண்டார்ட்டிகாவில் காணக் கிடைக்காதது காய்கறி, பழங்கள். கப்பல் வரும்போதெல்லாம் புதிய காரட்டைக் கண்டால் விஞ்ஞானிகள் ஆனந்தக் கூத்தாடுவார்கள் பாவம். நாலு சிமெண்டுத் தொட்டியில் மண் எடுத்துப் போய் அங்கே கத்தரி வெண்டை பயிரிடக் கூடாதா என்றால், வெளியிலிருந்து வரும் மண் – அதில் உள்ள பாக்டீரியாக்கள் போன்றவற்றை அண்டார்ட்டிகாவில் விட்டு நாசம் செய்யக்கூடாது என்று சர்வதேச ஒப்பந்தமே இருக்கிறது. இப்போது அவர்கள் ஹைட்ரோஃபோனிக் என்று மண் இல்லாமலே சத்து நீரில் செடியை வேர் விடச் செய்து முட்டைக் கோஸ் பயிரிட ஆரம்பித்திருக்கிறார்கள்.
மறுபடி விண்வெளிக்குத் திரும்புவோம். அங்கே தண்ணீருக்குச் சென்னையைவிடப் பெரிய பஞ்சம். ஒரு லிட்டர் தண்ணீரை மேலே எடுத்துப் போக ஆகும் செலவு சுமார் முப்பதாயிரம் டாலர். எனவே ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமித்தாக வேண்டும். இதில் குளியலாவது? டவலை நனைத்து உடம்பைத் துடைத்துக் கொள்வதோடு சரி! ராக்கெட்டின் ஃப்யூவல் செல்களின் மின்சார உற்பத்தியின்போது ஹைட்ரஜன் ஆக்ஸிஜன் கலப்பினால் கசியும் தண்ணீரைப் பிடித்து வைக்கிறார்கள். மனிதர்கள் வாய் கொப்பளித்த தண்ணீரையும் மறு சுழற்சி செய்தாகிறது. அவர்களின் மூச்சுக் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, அதையும் சொட்டுச் சொட்டாகத் தண்ணீராக மாற்றுகிறார்கள்.
கடைசியில்தான் வருகிறது, ராஜ வைத்தியம். விண்விமானிகள் வெளியேற்றும் ——ஐப் பிடித்து சுத்தம் செய்து நல்ல நீரில் கலக்கிறார்கள். மனிதர்களுடையது மட்டுமின்றி ஆராய்ச்சிக்காகக் கொண்டு செல்லப்படும் எலி, பெருச்சாளி போன்றவற்றின் —–ஐயும் வீணாக்காமல் உபயோகிக்க வேண்டியிருக்கிறது. சுத்தம் செய்யும் மின்னணுக் கருவியில் எங்கேயாவது ஒரு கண்டன்சர் பழுது பட்டிருந்தால் என்ன ஆகும் என்று கவலையாக இருக்கிறது.
பூமியில் வாஷ் பேசினில் பைப்பைத் திறந்து வைத்துவிட்டு சாவகாசமாக டூத் ப்ரஷ்ஷைத் தேடும் நல்லிதயங்களின் மனசாட்சியைப் பிசைய வேண்டிய செய்தி இது.