மகரந்தம்

பரிணாம வளர்ச்சிக்கு மற்றுமொரு நிரூபணம்

பொதுவாக பரிணாம எதிர்ப்பு அடிப்படைவாதிகள் சொல்லும் விஷயம். உங்களால் இடைநிலை உயிரினங்களை காட்டமுடியுமா? பாதி வாத்து பாதி பல்லி, பாதி குரங்கு பாதி மனிதன் (அட மனிதனும் பேரினக்குரங்குதான் என்பதை ஏனோ இந்த அறிவாளிகளால் புரிந்து கொள்ளவே முடிவதில்லை பாவம்.) இப்படி ஒன்றை காட்டினால் நாங்கள் மில்லியன் டாலர்கள் தருகிறோம் இத்யாதி. ஆனால் உண்மை என்னவென்றால் கொஞ்சம் கண்ணைத் திறந்து பார்த்தாலும் இத்தகைய இடைநிலை உயிரினங்கள் உலகம் முழுக்க இருப்பதை இவர்கள் பார்க்க முடியும். இந்த வரிசையில் ஒரு லேட்டஸ்ட்: உயிரோடு குட்டி போடுகிற விஷயம் இருக்கிறதே அது இதுவரை முதுகு வடம் உள்ள விலங்குகளில் 132 கிளைகளில் பரிணமித்து உள்ளது. இதிலுள்ள பரிணாம நன்மை தாய் உட்கார்ந்து அடை காத்து பிறகு குஞ்சு குறுமால்களை வளர்க்க வேண்டியது. நேரடியாக வளர்க்கிற சிரமம் மட்டும் போதும். ஸைஃபோஸ் ஈக்குவாலிஸ்(Saiphos equalis) என்கிற உயிரியல் திருநாமத்துடன் சேவை சாதிக்கிற இந்த ஊர்வன அவதாரத்தில் வாழும் சூழ்நிலைக்கு தகுந்து குட்டியாக பிரசவிக்கும் முகூர்த்தங்களும் உண்டாம் முட்டை போடுகிற தாய்களும் உண்டாம்: ஒரே உயிரினத்தின் இரு வித நிலைகள்: அதாவது வாழும் பரிணாம மாற்றம்: மேலதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.

அந்த காலத்திலேயே எங்களிடம் …

…என்று சொல்லுகிற க்ராக்-பாட் ஆசாமிகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் அடுத்த தடவை இந்த மாதிரி ஆசாமிகளை மரியாதையுடன் கடந்து போய் பிறகு வாய் பொத்தி வயிறு வலிக்க சிரிக்கும் முன்னால் இந்த கதையை கேளுங்கள்.

Önder Bilgi என்கிற அகழ்வாராய்ச்சியாளர் எரிமலைக் குழம்பு கண்ணாடி போல மாறியிருக்கும் கல்லமைப்புகளிலிருந்து இருபுறமும் கூர்மையான சில கருவிகளையும் பக்கத்திலேயே உள்ள பழமையான இடுகாட்டில் ஓட்டை விழுந்து பிறகு காயம் குணமான மண்டை ஓடுகளையும் கண்டு பிடித்திருக்கிறாராம். 4000 ஆண்டுகள் பழமையான விசயங்கள் இவை. இந்த மண்டையோட்டு ஓட்டைகள் சர்வ நிச்சயமாக கூர்மையான கருவிகளால் செய்தவைதானாம். வேண்டுமென்றே ஓட்டை போட்டு பிறகு அந்த மனிதர்கள் இரண்டு மூன்று வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மூளைத்திரவ அழுத்தம், மூளை கான்ஸர் ஆகியவற்றை குணமாக்க இதை செய்திருக்கலாம் என ஊகிக்கிறார் இந்த அகழ்வாராய்ச்சியாளர். அதாவது நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மூளை அறுவை சிகிச்சை. இந்த கூர்மையான கருவிகளை அல்லது அவற்றை செய்யும் பொருட்களை வெகுதூரத்திலிருந்து இறக்குமதி செய்திருக்கிறார்கள். நல்ல காலம் இது துருக்கியில். இந்தியாவில் என்றால் பல்வேறு முத்திரைகள் குத்தி முற்றாக விலகிச் சென்றிருப்பார்கள். மேலும் படிக்க இங்கே.

எண்ணெய்க் கசிவு – தொடரும் ஆபத்துகள்

மெக்சிகோ வளைகுடாவில் உடைத்துக் கொண்டு பல லட்சம் காலன் கச்சா எண்ணெய் கடலில் கலந்து அட்லாண்டிக் கடலே நாசமாகி விடும் என்று பயந்தது ஜூலை மாதம் பூராவும். உலகில் எல்லா ஊடகங்களிலும் இந்தச் செயதி பார்வையை, செவியை, புத்தியை அடைத்துப் பரப்பப்பட்டது நினைவிருக்கும். இப்போது பொறியியல் கல்லூரிகளில் சிறந்த ஒன்றாகக் கருதப்படும் எம். ஐ. டி வளாகத்தில் இருந்து வெளிவரும் டெக்னாலஜி ரிவ்யு என்கிற பத்திரிகையில் என்ன சேதி என்று பார்த்தால், அந்த்க் கடலில் கலந்த எண்ணெயில் ஒரு கணிசமான பகுதியை கடலில் இருந்த நுண்ணுயிரிகள் கபளீகரம் செய்து கொண்டிருக்கின்றன, நிறைய எண்ணெய் ஏற்கனவே நீரில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டது என்று சொல்கிறது இந்தப் பத்திரிகை. ஆனால் கரையொதுங்க்கி, சதுப்பு நிலங்களில் எங்கும் பரவிய எண்ணெய் அந்த நிலப்பகுதியில் நிறைய காலம் அப்படியே தேங்கி இருந்து உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் சொல்கிறது இது. இந்தக் கட்டுரையைப் படித்தால் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் மறுபடி கேள்வி முறையற்று ஆழ்கடலில் எங்கு வேண்டுமானாலும் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டி சூழலை நாசம் செய்து கொண்டிருப்பது நிற்காது என்று தோன்றுகிறது.

தோரியம் – இந்தியாவிற்கு வரப்பிரசாதம்?

இந்தியாவின் எரிபொருள் தேவைகளை எல்லாம் ஒரேயடியாகத் தீர்ப்பது கடினம். ஆனால் இந்தியாவின் மின்சக்தித் தேவைகளைத் தீர்ப்பது எளியதாக இருக்குமோ? இந்தக் கேள்விக்குப் பதில் இந்தியாவில் நிறையக் கிட்டும் தோரியம் என்ற ஒரு அணுசக்தி நிறைந்த கனிமத்தில் இருக்கிறது என்கிறார்கள் சில அறிவியலாளர்கள். தோரியத்தின் ஒரே பிரச்சினை அதில் மிஞ்சும் பொருள்களை வைத்து அணுகுண்டு தயாரிக்க முடியாது. இந்த ஒரு காரணத்துக்காகத்தான் உலக அணுசக்தியில் தேர்ச்சி பெற்ற நாட்டின் அரசுகள் தோரியத்தைப் பயன்படுத்தாமல், அதைவிட பன்மடங்கு கடினமான முயற்சியிலேயே கிட்டக் கூடிய யுரேனியத்தைத் துரத்தினார்கள். இப்போது நம் தேவை குண்டுகள் அல்ல, மின்சக்தி. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிலும், உலகின் பல இடங்களிலும் தோரியம் நிறையவே கிட்டுகிறது. மேலும் உலைகளில் பயன்படுத்த எளிதானது. தவிர இதில் மிஞ்சும் கழிவுப் பொருளைத் தோரியமே உண்டு விடும் என்றெல்லாம் இந்தக் கட்டுரை சொல்கிறது. இந்தியாவில் சிந்தனையாளரும், அரசும், மின்சக்தி நிறுவனங்களும் இது குறித்து உடனடியாக யோசித்து நடவடிக்கை எடுப்பாரா? படிக்க இதை அழுத்துங்கள்.