பெண்ணின் நெருப்பு

இத்தொடரின் பிற பகுதிகளைப் படிக்க: ஹாலிவுட் அறிவியல்

carrie_stephen-kingimages_big25978-83-7469-601-2வேற்றுக்கிரகவாசிகள் குறித்து எழுதலாம் என்றுதான் நினைத்தேன். அதற்கிடையில் இன்னொரு சமாச்சாரம் நினைவுக்கு வந்துவிட்டது. அதி-உளவியல் அல்லது பாரா சைக்காலஜி. ஏற்கனவே யூரிகெல்லரின் கரண்டி வளைக்கிற கரடியைப் பார்த்துவிட்டோம். ஆனால் முக்கியமான இரண்டு படங்களை சொல்லாமல் விட்டால் சரியல்ல என்று தோன்றியது. ஏனென்றால் இரண்டும் அதி-உளவியல் சமாச்சாரங்கள் என்றாலும் அதில் இருக்கும் ஆழ-உளவியல் சுவாரசியமாக இருந்தது. இரண்டுமே ஸ்டீபன் கிங் எழுதிய நாவல்களின் திரையாக்கம். ஒன்று க்கேரி (Carrie) என்கிற நாவல் அதே பெயருடைய பதின்ம வயது பெண்ணுக்கு ஏற்படும் அதி-உளவியல் சக்திகள். மற்றொன்று ஃபயர்ஸ்டார்ட்டர் (Firestarter). இது ஒரு சிறு-பெண்ணுக்கு இருக்கும் அதி-உளவியல் சக்தியை அமெரிக்க அரசின் உளவுத்துறைகள் பயன்படுத்த முனைவது.

க்கேரி ஒரு அடிப்படைவாத கிறிஸ்துவத்தாயிடம் வளரும் பெண். எவ்வித பாலியல் தன்மைகளும் தொட்டுவிடாமல் வளர்க்கப்படும் பெண். மாதவிடாய் முதன் முதலாக பள்ளியில் நிகழும் போது, தான் இறக்கப்போவதாக அச்சமடைந்து சக மாணவிகளால் கடுமையாக கேலிக்கு உள்ளாகும் அப்பாவிப்பெண். அதே நேரத்தில் அவளுக்கு அதி-உள சக்திகள் இருக்கின்றன. அவளுக்குள் உணர்ச்சிகள் கொந்தளிக்கும் போது புறத்தே இருக்கும் பொருட்களில் அவை மோதி வெடிக்கின்றன. இறுதியாக அமெரிக்கப் பதின்ம பெண்களின் முக்கிய உணர்ச்சிகர சடங்கான ஜோடி நடனத்தில் பங்கேற்கச் செல்கிறாள் க்கேரி. அவளது அன்னையோ இதையெல்லாம் மகா பாவம் என்று நினைப்பவள். இந்த ஹிஸ்டீரிக்கலான அடிப்படைவாத அன்னையிடமிருந்து அறுத்துக் கொண்டு சாதாரண பதின்ம வாழ்க்கைக்குச் செல்லும் ஒரு விடுதலையாக நடன நிகழ்ச்சிக்குப் போகும் க்கேரிக்கு அங்கே பெருத்த அவமானம் ஏற்படுகிறது. அவள் மீது பன்றி இரத்தம் கொட்டப்படுகிறது. க்கேரியின் ஆத்திரமும் ஏமாற்றமும் பெரும் நெருப்பாகக் கொப்பளித்து வெளிக்கிளம்பி, அந்த நடனக்கூடத்தையே கபளீகரம் செய்கிறது.

ஃபயர்ஸ்டார்ட்டர் நாவலில், சார்லி என்ற சிறுமி மனோசக்தியால் நெருப்பைப் பற்றவைக்கும் ஆற்றல் கொண்டவளாக சித்தரிக்கப்படுகிறாள். சிறிய அளவில் அதி-மன சக்தி கொண்ட அவளுடைய பெற்றோர்களை அவர்கள் மாணவப்பருவத்தில் சிஐஏ  சில சோதனைகளுக்கு உள்ளாக்கியதன் விளைவு சார்லி. சார்லியின் இந்த விநோத சக்தி குறித்து சிஐஏக்கு மூக்கில் வியர்த்துவிடுகிறது. அவளைத் தேடி சிஐஏ ஏஜெண்ட்கள் துரத்த சார்லியை அவர்களிடமிருந்து காப்பாற்ற முயலும் அவள் அன்னை கொல்லப்படுகிறாள். தந்தையும் மகளும் தப்பி ஓட முயற்சிக்கையில் அவர்களைக் கைது செய்து சார்லியின் சக்திகளைப் பரிசோதனை செய்து பார்க்க முயற்சிக்கின்றனர். இறுதியில் தன் கண் முன்னே தந்தை கொல்லப்படுவதை பார்க்கும் சார்லி தன் சக்தியை கடுமையாக வெளிப்படுத்தி சர்வநாசம் செய்துவிடுகிறாள்.

firestarterஇரு நாவல்களிலும் வெளிப்படுத்தப்படும் அதி-மன சக்தி ஸ்டீபன் கிங்கே உருவாக்கியது – பைரோகைன்னெஸிஸ். (pyrokinesis).  நெருப்பினை மனதினால் உருவாக்குவது. இதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் கிடையாது. ஆனால் மனித உடலில் திடீரென எப்படியோ வெப்பநிலை அதிகமாகி மனிதர்கள் தன்னாலேயே எரிந்து போகும் ஒரு நிகழ்ச்சி வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. Spontaneous Human Combustion (SHC) எனக் கூறப்படும் இந்த நிகழ்ச்சி சில நேரங்களில் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலைகளை மறைக்கவும், விபத்துக்களால் நிகழ்ந்த மரணங்களுக்கு காப்பீட்டுத் தொகைகளை சேதாரமில்லாமல் பெற்றுத்தரவும் உருவாக்கப்பட்ட மர்ம்ம் என கருதுவோரும் உண்டு. சார்ல்ஸ் டிக்கன்ஸ் தாம் எழுதிய ப்ளீக் ஹவுஸ்  (Bleak House) என்கிற நாவலில் இந்த மர்மத்தை முதன் முதலாக இலக்கியத்தில் பதிவு செய்தார்.

ஆர்தர் சி க்ளார்க் மர்மங்களை மூன்றுவிதமாக பிரிக்கிறார். இதில் மூன்றாம் வித மர்மங்கள் மிகவும் அரிதானவை. இன்னமும் இந்த புதிர்களுக்கு அறிவியல்பூர்வமான விளக்கம் கொடுக்கப்படவில்லை என்பதான மர்மங்கள். ஆர்தர் சி க்ளார்க் SHC-ஐ இந்த வித மர்மமாகவே கருதுகிறார்.

க்ளார்க்கின் வார்த்தைகளில்:

“மனித உடல்கள் திடீரென தனது வெப்பநிலையை கடுமையாக உயர்த்தி மிகக் குறைந்த நேரத்தில் எரிந்து போகும் நிகழ்ச்சிகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இதில் எரிந்து போனது மனித உடல் மட்டுமே. அவர்கள் அணிந்திருந்த துணி கூட எரிந்து போனதில்லை. அல்லது சுற்றுப்புறத்தில் எதுவும் எரிந்து போனதில்லை….மனித உடல் எரிந்து போகும் தன்மை கொண்டதில்லை. ஈமச்சடங்குகளில் மனித உடலை எரிக்க மிக அதிகமான எரிபொருளும் அதிக வெப்பநிலையும் தேவை”.

ஆனால் க்கேரி – மிகவும் பிரபலமடைந்தது. 1975-இல் நாவலாக வந்து 1976-இல் திரைப்படமாக வந்து சக்கை போடு போட்டது. 2002 இல் கூட ஒரு சிறுதிரை வெர்ஷன் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தின் மகத்தான வெற்றியின் பின்னணியில் இருக்கும் சில ஆழமான உளவியல் பரிமாணங்களைக் காண்வது சுவாரசியமாக இருக்கும்.

பெண்மையின் அடிப்படை இயல்பாக நெருப்பினைக் கூறும் வழக்கம் பழங்குடி மரபுகள் அனைத்திலும் இருந்து வருகிறது. மானுடம் தொல்-கற்காலம் முதல் வணங்கிய அன்னைக்கடவுளர் பலர் நெருப்புடன் தொடர்புடையவர்களே. ஐரோப்ப்பிய மனம் கிறிஸ்தவத்தை ஏற்ற பிறகு நாட்டார் கதைகளில் இந்த நெருப்புப் பெண்கள் புலம் பெயர்ந்தார்கள். மிகச் சிறந்த உதாரணம் – சிண்டெரெல்லா. இப்பெயரே ‘சாம்பலுக்குள் கன்னறு கொண்டிருக்கும்  நெருப்பு’ எனும் வேரிலிருந்து உருவானது. க்கேரி நாவல், மேற்கத்திய மனதில் மிகவும் பதிந்துள்ள சிண்ட்ரெல்லா படிமத்தை ஒரு பதின்ம வயது பெண்ணுக்குப் பயன்படுத்துகிறது. திரைப்படத்திலும் நாவலிலும் இப்பெண்ணின் முதல் மாதவிடாய் முக்கிய நிகழ்வாக அமைகிறது. அப்பெண்ணின் அன்னை ஒரு கிறிஸ்தவ அடிப்படைவாதி. அவளது பார்வையில் க்கேரி பாவத்துக்குள் நுழைந்துவிட்டாள். ஏனெனில் செக்ஸ் என்பதே தேவனுக்கு எதிரான பாவம் என்பதில் தெளிவாக இருப்பவள் அந்த அன்னை. க்கேரியின் சக மாணவிகள் அவளைக் கொடூரமாக கேலி செய்கிறார்கள். இப்படி இருவித எதிர்மறை சடங்குகளுக்கு அவள் மாதவிடாயின் மூலம் – இரத்தத்தின் மூலம் ஆட்படுத்தப்படுகிறாள். மேற்கத்திய பண்பாட்டின் இரு பெரும் சக்திகள் அவை – ஒன்று ஆழமற்ற மலினப்பண்பாடு, மற்றொன்று அடிப்படைவாத கிறிஸ்தவம்.

137594

ஆனால் க்கேரியின் சக்தியோ ஆழமான பெண்மையின் சக்தி, அது இயற்கை விதிக்கு அப்பாற்பட்டது. அவளது பாலியல் உணர்வுகளுடன் தொடர்புடையது. இருட்தன்மை கொண்டது. நாவலில் அவ்வப்போது கதை சொல்லும் உத்தியாக க்கேரியின் வாழ்க்கையை ஆராய்ந்து ஒரு உளவியலாளர் எழுதிய (கற்பனை) நூல் ஒன்று மேற்கோள் காட்டப்படுகிறது. இந்த உளவியல் நூலின் பெயர் “நிழல் வெடித்த போது” (When the shadow exploded). இந்த தலைப்பு சுவாரசியமானது.

நிழல் (shadow)  என்பது உளவியலாளர் கார்ல் உங் (Carl Gustav Jung) உருவாக்கிய ஒரு பதம். நம் ஆளுமையில் நாம் வெளிக்காட்டாமல் வைத்திருக்கும் தன்மைகள் அவை. அவை நமக்குள் உறைந்து கிடக்கும். நேரம் கிடைக்கும் போது அதீதமாக நம் உளச்சக்தியை கிரகித்துக் கொண்டு வெளிப்படலாம். இந்த நிழல் நனவியக்கக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக உடைத்துக் கொண்டு வெளிவந்ததன் விளைவே பல சைக்கோ-கொலைகாரர்களின் ஆளுமை எனக் கருதுவோர் உண்டு. யாரும் நம்மை கவனிக்கவில்லை என்கிற போது, மனம் பலவீனப்படுகிறதென உணருகையில், அங்கே வேலை செய்வது பொதுவாக நிழல்தான். இலக்கிய கர்த்தாக்கள் உருவாக்கும் பல எதிர் மறை பாத்திரங்கள் அவர்களின் நிழலிலிருந்து உருவாவதாகக் கருதப்படுவதுண்டு. வெளியே பலவீனமே இல்லாதவனாக காட்டிக்கொள்ளும் ஒருவன் விழிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் கூண்டில் அடைபட்ட விலங்காக அவன் நிழல் வெளிப்பட காத்துக் கொண்டிருக்கும்.

க்கேரியின் சித்திரவதையான பதின்ம வயதிலிருந்து அவள் ஒரு பெண்ணாக மலரும் தருணத்தில் பன்றி இரத்தத்தால் அபிஷேகம் செய்கின்றனர். அது அவளுக்குள் இருக்கும் ஆக்ரோஷமான அதி-உள சக்திகளை எழுப்புகிறது. அவளுக்கு மறுக்கப்பட்ட சகஜமான பெண்மையின் மலர்ச்சி பேரழிவைத் தீயாக ஏற்படுத்துகிறது. கண்ணகியும் இதையே செய்தாள் என்பது ஒரு சுவாரசியமான விஷயம். கண்ணகிக்கும் இயல்பான தாம்பத்திய வாழ்க்கை மறுக்கப்படுகிறது. பின்னர் ஒரு புதிய வாழ்வு குறித்த நம்பிக்கை தரப்பட்டு அதுவும் தட்டிப் பறிக்கப்படுகிறது. வெகுண்டெழும் கண்ணகியின் பெண்மையின் சீற்றமும் நெருப்பாக எரிக்கிறது. பெண்மைச்சீற்றம் நெருப்பாக மாறுவது ஒரு உக்கிரமான பொதுப்பதிமமாக (archetype) மானுடத்தின் கூட்டு நனவிலியில் இருக்கலாம்.

க்கேரி பொதுப்பதிமமும் நிழலும் சேர்ந்து உருவான ஒரு பயமுறுத்தும் பாத்திரம். அமெரிக்க அல்லது மேற்குலக ஆணுக்கு பெண்மை குறித்து இருக்கும் அச்சத்தின் திரை வெளிப்பாடு.

கண்ணகி கற்பனையும் வரலாறும் கலந்து ஒரு நீங்காத தொன்ம நினைவாக தமிழ் மனதில் வாழ்கிறாள். சலேம் சூனியக்காரி விசாரணைகளையும், சந்தையையும், அடிப்படைவாத கிறிஸ்தவத்தையும் கொண்ட அமெரிக்கப் பண்பாட்டில் ஒரு கண்ணகி வழிபாட்டை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அதன் மலினப்படுத்தும் பண்பாட்டில் அடக்கப்படும் பெண்மையின் மீதான ஆண்-சமுதாயத்தின் அச்சப்பார்வை, கூடிப்போனால் க்கேரி அல்லது ஃபயர்ஸ்டார்ட்டர் போன்ற பயமுறுத்தும் திரைப்படங்களாக மட்டுமே வர முடியும்.