நாசகார வலை

jin

சீன-அமெரிக்க எழுத்தாளரான ஹா ஜின் ஆங்கிலப் புனைவிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடம் பெற்றவர். கடந்த ஆண்டு வெளிவந்த ‘A good fall’ என்ற அவருடைய சிறுகதைத் தொகுப்பின் முதல் கதையான ‘The Bane of the Internet‘-ன் தமிழாக்கத்தை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.

முன்பெல்லாம் என் தங்கை யூசினும் நானும் ஒருவருக்கு ஒருவர் கடிதங்கள் எழுதிக்கொள்வது வழக்கம். என்னுடைய கடிதம் ஷிச்சுவான் போய்ச் சேர பத்து நாள்களாவது ஆகும். மாதத்துக்கு ஒரு கடிதமாவது எழுதிவிடுவேன்.

யூசினுக்கு திருமணம் நடந்தது. கல்யாணமானதிலிருந்தே அவளுக்கு அடிக்கடி பிரச்சினைதான். ஆனாலும், தினமும் அவளைப் பற்றி நினைப்பதை நான் நிறுத்தி விட்டேன். ஐந்து வருடங்களுக்கு முன்னர் அவளுடைய மண வாழ்க்கை சிதறத் தொடங்கியது. அவளுடைய புருஷன் அவனுக்கு மேலாளராக இருந்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தான். சில சமயம் குடி போதையில் தள்ளாடியபடி வீடு வந்து சேர்வான். ஒரு நாள் அவன் யூசினைக் கடுமையாக அடித்து உதைத்ததில், அவள் வயிற்றில் இருந்த கரு கலைந்துவிட்டது.

என்னுடைய ஆலோசனைப்படி, யூசின் விவாகரத்துக் கேட்டு வழக்கு போட்டாள். அதற்குப் பிறகு அவள் தனியாகவே இருந்தாள், குறை ஏதும் இல்லை போலிருந்தது. அப்போது அவளுக்கு வயது இருபத்தி ஆறுதான். அதனால், இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினேன். அவளோ, இந்தப் பிறவிக்கு ஆண் சங்காத்தமே வேண்டாம் என்று அடித்துச் சொல்லிவிட்டாள்.

மற்றபடி, அவள் திறமையானவள் என்பதோடு வரைகலையில் (கிராஃபிக்ஸ் டிஸைன்) பட்டமும் வாங்கியிருந்ததால், நல்ல நிலையில் இருக்கிறாள். நான்கு வருடங்களுக்கு முன்னால் அடுக்குமாடிக் கட்டிடத்தில் சொந்தமாக ஒரு ஃபிளாட்டையும் வாங்கிவிட்டாள். வீடு வாங்கும்போது கட்டவேண்டிய முன் தொகைக்கு சிரமப்பட்டாள். அவளுக்கு இரண்டாயிரம் (அமெரிக்க) டாலர்களை அனுப்பி வைத்தேன்.

போன வருடம் இலையுதிர் காலத் துவக்கத்தில் யூசின் மின்னஞ்சல் அனுப்ப ஆரம்பித்தாள். ஒவ்வொரு இரவிலும் அவளுடன் உடனுக்குடன் பேசுவது (‘சாட்’ செய்வது) முதலில் உற்சாகமாக இருந்தது. நாங்கள் கடிதங்கள் எழுதிக்கொள்வதை நிறுத்திவிட்டோம். என் அம்மா அப்பா வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே அவளும் இருந்ததால், நான் அவர்களுக்கு எழுதுவதைக்கூட நிறுத்தி விட்டேன். யூசின்தான் எல்லாத் தகவலையும் பரிமாறி உதவுவாளே!

கார் வாங்க வேண்டும் என்ற தன் விருப்பத்தைச் சமீபத்தில் யூசின் என்னிடம் சொன்னாள். வீட்டுக் கடனை ஏற்கெனவே அடைத்துவிட்டிருந்தாள் என்றாலும் காருக்கென்ன தேவை என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. எங்கள் ஊர் ஒன்றும் பெரியது இல்லை. சைக்கிளிலேயே அரை மணி நேரத்தில் சுற்றி விடலாம். அவளுக்குக் கார் அவசியத் தேவை இல்லை. பெட்ரோல் செலவு, காப்பீடு, பதிவு செய்வது, பராமரிப்புச் செலவு இவற்றோடு தினமும் கொடுக்க வேண்டிய சாலைச் சுங்க வரியையும் கூட்டினால் ஆவது பெருஞ்செலவு.

வேலைக்குப் போய்வர, நியூயார்க் மாநகரத்தின் ஒரு மூலையான புரூக்லினிலிருந்து இன்னொரு மூலையான ஃப்ளஷிங்கிற்கு தினமும் பயணம் செய்யவேண்டி இருந்தாலும் நான் கார் வைத்துக் கொள்ளவில்லை என்று அவளிடம் சொல்லிப் பார்த்தேன். ஆனாலும், அவளுடைய நண்பர்களில் பலர் கார் வைத்திருந்ததால் தனக்கும் ஒன்று வேண்டும் என்ற மோகம் அவள் தலைக்கேறி விட்டிருந்தது.

அவள் எனக்கு எழுதினாள்: “நான் எப்படி வசதியாக இருக்கிறேன் பார் என்று அந்த ஆளுக்குக் காட்டணும்.” அவள் அப்படிக் குறிப்பிட்டது தன் முன்னாள் கணவனை. அப்படி ஒரு ஆளே இல்லை என்னும் அளவுக்கு மனதிலிருந்து அவன் நினைவைச் சுத்தமாக அழிக்கச் சொல்லி அவளைத் தூண்டினேன். சுத்தமாகக் கண்டு கொள்ளாமல் போவதுதானே கேவலப்படுத்துவதிலேயே உச்சம்? சில வாரங்களுக்கு அவள் கார் பற்றிய பேச்சை எடுக்கவே இல்லை.

திடீரென்று ஒருநாள், தான் டிரைவிங் லைசன்ஸ் வாங்கிவிட்டதாகவும் கட்டணமாகச் செலுத்த வேண்டிய மூவாயிரம் தவிர அதிகாரிக்கு ஐநூறு யுவான் லஞ்சம் கொடுக்கவேண்டி இருந்ததாகவும் யூசின் சொன்னாள். தவிர மின்னஞ்சலில் வேறு இப்படி எழுதியிருந்தாள்: “அக்கா, எனக்கு உடனே ஒரு கார் வேண்டும். நம் சின்ன மருமகள் மின்மின், நேற்று நம் ஊருக்கு வந்திருந்தாள். புத்தம் புதுசாய் ஒரு ஃபோக்ஸ்வேகன் காரை ஓட்டிக்கொண்டு வந்தாள். பளபளவென மின்னும் அந்தக் காரைப் பார்த்ததும் என் நெஞ்சில் பத்து கத்திகளால் குத்தியது போலிருந்தது. எல்லோருமே என்னைவிட வசதியாக இருக்கிறார்கள். இனியும் நான் எதற்கு உயிரோடு இருக்க வேண்டும்?”

மாஜி-கணவனின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வது மட்டுமே அவளுடைய லட்சியம் இல்லை என்பது எனக்குப் புரிந்துவிட்டது. நாடு முழுவதும் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்த கார் வாங்கும் மோகம் அவளையும் தொற்றிக்கொண்டு விட்டது. சுத்த கிறுக்குத்தனம் என்று பதில் அனுப்பினேன். யூசின் கணிசமாகப் பணம் சேர்த்திருந்தாள். ஒவ்வொரு வருடமும் அவளுக்குப் பெரும் தொகை போனஸாகக் கிடைத்தது. மாலை நேரங்ககளில்கூட ஓய்வு எடுக்காமல், தனியாக டிஸைனிங் வேலைகள் செய்து கொடுத்து நாலு காசு பார்த்தாள். எங்கிருந்துதான் அவளுக்கு இவ்வளவு ஆடம்பர மோகமும் பிடிவாதமும் வந்தனவோ?

உணர்ச்சி வசப்படாமல், புத்தியைக்கொண்டு யோசிக்கும்படி சொன்னேன். அது முடியாத காரியம் என்றும், எங்கள் ஊரில் ‘எல்லோருமே’ கார் வைத்திருப்பதாகவும் சொன்னாள். அவள் எல்லோர் மாதிரியும் இல்லை என்றும், கூட்டத்தோடு கோணங்கியாவது நல்லதல்ல என்றும் சொல்லிப் பார்த்தேன். அவள் கேட்பதாகத் தெரியவில்லை. கடனாகக் கொஞ்சம் பணம் கொடுக்கும்படி கேட்டாள். மேலும், தான் 80 ஆயிரம் யுவான் சேர்த்து வைத்திருப்பதாகவும் ஒப்புக் கொண்டாள்.

அப்படித்தான் செய்வேன் என்றால் இருக்கும் பணத்தை வைத்து அவளே வாங்கிக் கொள்வதுதானே? அவள் எழுதிய பதில்: “உனக்கு ஏன் புரிய மாட்டேன் என்கிறது அக்கா? சீனாவின் காரைப் போய் நான் ஓட்டலாமா? மானம் போய்விடும், கஞ்சப் பிசினாரி என்று எல்லோரும் கேலி செய்ய மாட்டார்களா? ஜப்பான் காரோ, ஜெர்மனி காரோ வாங்க என்னாலாகாது, அதெல்லாம் விலை ரொம்ப அதிகம். ஹ்யுண்டெய் எலான்ட்ராவோ அல்லது ஃபோர்ட் ஃபோகஸோ வாங்கினால்தான் மரியாதை. ஒரு பத்தாயிரம் டாலர் கடனாகக் கொடேன். உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன், என்னைக் காப்பாற்று.”

இது பைத்தியக்காரத்தனம். சீனாவில் வெளிநாட்டுக் கார்கள் இரண்டு மடங்கு விலை. என்னுடைய சொந்த மாகாணமான ஷிச்சுவானில் ஒரு ஃபோர்ட் டாரஸ் கார் இரண்டரை லட்சம் யுவானுக்கு விற்றது. அதாவது 30,000 டாலர்களுக்கும் அதிகம். கார் என்பது பயணம் செய்யும் ஒரு வண்டிதான். அது அலங்கார ரதமாக இருக்க வேண்டியதில்லை என்று யூசினிடம் சொல்லிப் பார்த்தேன். அவள் வெட்டி பந்தாவைக் கைவிட்டே தீரவேண்டும்.

நான் நிச்சயம் அவளுக்குப் பணம் கொடுக்கப்போவதில்லை. கொடுத்தால் திரும்ப வராது. யானை வாய்க்குள் போன கரும்பு கதைதான். அதனால், முடியாது என்றே சொல்லிவிட்டேன். நான் குடியிருப்பதே வாடகை வீட்டில்தான். க்வீன்ஸ் பகுதியில் எங்கேனும் ஒரு சிறிய ஃப்ளாட்டாவது வாங்கலாம் என்றால் கட்டவேண்டிய முன் பணத்தைக்கூட இன்னமும் சேர்க்க முடியவில்லை.

இங்கு ஏதோ பணம் காய்த்துத் தொங்குவது போலவும், அதைப் பறித்துக் கொடுக்க வேண்டியதுதான் பாக்கி என்றும் என் குடும்பத்தினர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். எவ்வளவுதான் விளக்கமாகச் சொன்னாலும், அவர்களுக்கு என்னுடைய வேலையின் கஷ்டம் புரிவதில்லை. ஜப்பானிய ஸுஷி உணவு விடுதி ஒன்றில், வார விடுமுறையே இல்லாமல் தினமும் 10 மணி நேரம் கால் கடுக்க ஓடி ஆடிப் பரிமாறும் வேலை. இரவு 10 மணிக்கு வேலை முடிந்து வெளியில் வரும்போது காலெல்லாம் வீங்கிப் போயிருக்கும். ஃப்ளாட் வாங்குவது நடக்கக்கூடிய காரியம் என்றே தோன்றவில்லை. இந்த வேலையை விட்டுவிட்டுச் சொந்தமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று மனம் அடித்துக் கொள்கிறது. ஒரு பெட்டிக் கடையோ அல்லது நக அழகு நிலையமோ அல்லது வீடியோ கடையோ வைக்க வேண்டும். சில்லறைக் காசைக்கூடச் சேர்த்து வைத்தால்தான் முடியும்.

யூசினுடன் வாக்குவாதம் இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்தது. அந்த மின்னஞ்சல்களைக் கண்டாலே எவ்வளவு வெறுப்பாக இருந்தது? ஒவ்வொரு நாள் காலையிலும் கம்ப்யூட்டரை இயக்கி அவசரமாக நோட்டம் விடும்போது அவளிடமிருந்து ஒரு புதிய செய்தியாவது வந்திருக்கும். சில சமயம் மூன்று அல்லது நான்கு வந்திருக்கும். அவள் அனுப்பும் செய்திகளைப் படிக்காமல் விட்டுவிடலாமே என்று அடிக்கடி தோன்றும். படிக்காமல் விட்டுவிட்டாலோ, ஒத்துக் கொள்ளாததைச் சாப்பிட்ட மாதிரி வயிற்றை ஏதோ செய்யும். வேலை செய்யும்போது பதட்டமாகவே இருக்கும்.

அவளுடைய முதல் மின்னஞ்சல் கிடைக்காததுபோல நான் நடித்திருந்தால் போதும், அவளோடு கடிதப் போக்குவரத்து தொடர்ந்திருக்கும். அமெரிக்காவில் இருப்பவர்களால் சொந்த ஊரில் உள்ளவர்களோடு உறவுகளை எப்போது வேண்டுமானாலும் திருத்தி அமைக்க முடியும், நம் விருப்பப்படி நம் வாழ்க்கைக்குப் புதிய திசை கொடுக்க முடியும் என்று நான் நம்பியிருந்தேன். ஆனால் ‘இந்திர’ வலை எல்லாவற்றையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டது – என் குடும்பத்தினர் விரும்பும் போதெல்லாம் அவர்களால் என்னைப் பிடித்துவிட முடிகிறது. இதைவிட, எனக்குப் பக்கத்திலேயே அவர்கள் எல்லோரும் குடியிருந்திருக்கலாம்.

நான்கு நாள்களுக்கு முன்னர் யூசின் ஒரு செய்தி அனுப்பினாள்: “அக்கா, நீ எனக்கு உதவ மறுத்துவிட்டாயா, நானாகவே காரியத்தை முடிக்க முடிவு செய்துவிட்டேன். எப்படியும் எனக்கு ஒரு கார் வேண்டும். என் மேல் கோபப்படாதே. இந்த இணையதளத்தை நீ கட்டாயம் பார்க்க வேண்டும்…”

எனக்கோ வேலைக்குப் போக ஏற்கெனவே தாமதமாகியிருந்ததால், அவள் சொன்ன இணையதளத்தை நான் பார்க்கவில்லை. யூசின் என்னதான் செய்திருப்பாள் என்பதைப் பற்றியே நாள் முழுவதும் யோசித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய இடது கண் விடாமல் துடித்தது. நன்கொடை கேட்டு விளம்பரம் செய்திருப்பாள். தோன்றியதை எல்லாம் செய்யக் கூடியவள், பித்தத்தில் அவள் ஏதேனும் மூர்க்கமாக செய்திருப்பாள்.

அன்று இரவு வீடு திரும்பியதும் கம்ப்யூட்டரை ஆன் செய்தேன். பிரபல இணையதளம் ஒன்றில் அவள் செய்திருந்த விளம்பரத்தைக் கண்டதும் எனக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.  “ஆரோக்கியமான இளம் பெண்ணின் உடல் உறுப்பு(கள்) விற்பனைக்குத் தயார். கார் வாங்க இருப்பதால், காரை ஓட்டுவதற்கு இடைஞ்சல் இல்லாத வகையில் எந்த ஓர் உறுப்பும் விற்கப்படும். தொடர்பு கொள்ளுங்கள், பேசுவோம்..” – என்ற வரிகளின் கீழே அவளுடைய தொலைபேசி எண்ணும், மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தன.

அவள் சும்மா கதை விடுகிறாளோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அப்படியும் இருக்கலாம். கேடுகெட்ட கார் ஒன்றை வாங்கியே தீரவேண்டும் என்ற வெறியில் தன் சிறுநீரகத்தையோ, கண்ணையோ அல்லது கல்லீரலின் ஒரு பகுதியையோகூட விற்கத் தயங்காத அவசர புத்திக்காரி அவள். என்னுடைய நெற்றியைப் பிடித்துக் கொண்டேன், அவளைத் திட்டித் தீர்த்தேன்.

உடனடியாக ஏதேனும் செய்து தொலைக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு அவளிடம் எவரேனும் ஒப்பந்தம் செய்துவிடக்கூடும். என்னுடன் கூடப் பிறந்தவள் அவள் ஒருத்தி மட்டும்தான். அவளுக்கு ஏதேனும் ஆகிவிட்டாலோ, எங்களுடைய வயதான அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள யாரும் இருக்க மாட்டார்கள். ஒரே ஊரில் இருந்தாலாவது, அவள் பாவலா செய்கிறாளா என்று கண்டுபிடிக்க முடியும். இங்கிருந்து கொண்டு அவள் சும்மா மிரட்டுகிறாளா என்பதைக் கண்டுபிடிக்கவும் முடியாது.

அவளுக்கு பதில் எழுதினேன்,“தொலை, முட்டாள் தங்கையே, பத்தாயிரம் டாலர்கள் கடனாகத் தருகிறேன். விளம்பரத்தை எடுத்து விடு, இப்பவே எடு!”

ஒரு சில நிமிடங்களிலேயே பதில் வந்தது. “நன்றி அக்கா. விளம்பரத்தை இப்போதே எடுத்து விடுகிறேன். இந்த உலகத்திலேயே எனக்கு உதவக் கூடியவள் நீ ஒருத்திதான் என்பது எனக்குத் தெரியும்.”

“நான் மாடாக உழைத்துச் சம்பாதித்த பணத்தைத்தான் உனக்குக் கடனாகக் கொடுக்கிறேன். இரண்டு வருடங்களுக்குள் நீ வாங்கியதைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். இது சம்மந்தமான மின்னஞ்சல்களை அச்சடித்து வைத்திருக்கிறேன். திருப்பிக் கொடுக்காமல் இருந்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதே.” என்று மற்றொரு செய்தியை அனுப்பினேன்.

“சரி அக்கா. போய் நிம்மதியாகத் தூங்கு,” என்று பதில் வந்தது. அத்தோடு ஒரு சிரித்த முகம் இணைத்திருந்தாள்.

“என் முகத்திலேயே விழிக்காதே,” எரிச்சலுடன் முணுமுணுத்தேன்.

ஒரு சில வாரங்களுக்காவது அவளோடு எந்தச் சங்காத்தமும் இல்லாமல் இருந்தால்!.. எங்கேனும் எந்தத் தொந்தரவும் இல்லாத, நிசப்தமான இடத்துக்கு என்னால் மட்டும் போக முடியுமென்றால்!..

(தமிழாக்கம்: சாம் ஜி. நேதன்)