நவீன கால கிரிக்கெட் – விளையாட்டல்ல

கிரிக்கெட்டில் சமீபத்தில் பரபரப்பாக வெளியாகியிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் நாள்தோறும் பலவிதமான  விமர்சனங்களைத் தோற்றுவித்திருக்கிறது. கிரிக்கெட் என்பது கடவுளுக்கு அடுத்தபடியான விஷயமாகப் பார்க்கப்படும் துணைக்கண்டத்தில் இந்தப் பரபரப்பு மற்ற விஷயங்களைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் பெறுவது இயல்பே. மேலும் இது குறித்து பேசுவதற்கு முன் முதலில் சில முன்முடுவுகளை எடுத்திடுவோம்.

  • கிரிக்கெட்டில் ஊழல் குறித்து பேசுவதோ, விசனப்படுவதோ தவறான விஷயம் இல்லை – அதை விட அதிக முக்கியமான விஷயங்கள் பேசுவதற்கு இருந்தாலும்.
  • ஊழல் புரிபவர்களை தேசத்துரோகிகள் என்றும் தூக்கிலிடவேண்டும் என்று புலம்புவதோ, இதெல்லாம் சகஜம் என்று ஏற்றுக் கொள்ளும் மனோபாவமோ இல்லாமல் இரண்டு எல்லைகளுக்கும் மத்தியிலிருந்து இந்த விஷயத்தை அணுகலாம்.

கிரிக்கெட்டில் ஊழல் என்பது இந்த நூற்றாண்டின் பிரச்சினையில்லை. சென்ற நூற்றாண்டின் இறுதியிலிருந்தே இந்த ஊழல் விவகாரங்கள் அதிக எண்ணிக்கையில் அரங்கேறத் துவங்கிவிட்டன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் தொலைக்காட்சி ஊடகம் வழியே கிரிக்கெட்டைப் பின்தொடர்பவர்கள் அதிகமாகத்துவங்கிய பின்னர். சென்ற நூற்றாண்டின் கடைசி இரண்டு பத்தாண்டுகளில் தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் பல மடங்கு அதிகரிக்கத்துவங்கினர் – இந்தியாவில் தொலைகாட்சி இல்லாத வீடுகள் இல்லை என்னும் அளவிற்கு தொலைக்காட்சி ஒரு சாமான்ய பண்டமாக மாறிக் கொண்டிருந்த காலம் அது. கிரிக்கெட்டும் விளையாட்டு என்ற கோணத்திலிருந்து மாறி வியாபாரமாக பார்க்கப்பட்ட சூழல். இப்போது கிரிக்கெட் வியாபாரம் என்ற சூழலையும் தாண்டி முதலீடாகக் கருதப்பட்டுவருகிறது.

பாகிஸ்தானின் கிரிக்கெட் சூதாட்ட தண்டனை வரலாறு சலீம் மாலிக் மற்றும் அடா உர் ரஹ்மான் இருவருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது முதல் இன்றைய சல்மான் பட் வரை வந்து நிற்கிறது. தண்டனை பெறாமல் தப்பிச்சென்ற வீரர்களும் பலர். பாகிஸ்தான் இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்ந்து அடிபடுவதன் அடிப்படைக் காரணம் அந்த நாட்டில் இருக்கும் ஸ்திரமற்ற சமுக/ பொருளாதார / அரசியல் சூழ்நிலைகள்தான். இதைத் தவிர கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கான வருவாய்க்கான சூழ்நிலை (இந்தியாவில் இருப்பதைக் காட்டிலும் குறைவாக இருக்கின்றன – இந்திய வீரர்களுக்கு விளம்பரம் மூலம் வரும் வருமானத்தை முற்றிலுமாக தவிர்த்து விட்டு பார்த்தாலும் கூட), 10 பைசாவுக்கு நம்பிக்கை வைக்க முடியாத ஒரு கிரிக்கெட் போர்ட் என்று வேறு சில காரணங்களும் பாகிஸ்தான் வீரர்களை இந்த சூதாட்டத்திற்கு சுலபமான இரையாக்கி விடுகின்றன. ஆனால் உண்மையான கிரிக்கெட் ரசிகர்கள் விசனப்பட வேண்டியது கிரிக்கெட் என்ற விளையாட்டு குறித்து மட்டுமே தவிர, பாகிஸ்தான் வீரர்கள் ஏன் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்து அல்ல.

கிரிக்கெட்டின் பாதுகாவலர்களாக இருக்கும் ICC-யின் நிலை என்ன ?

இந்த ஊழல் விவகாரங்கள் 1980களில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்தாலும் ICC முதலில் இந்த விவகாரங்களை ஒரு தனிப்பட்ட நபரின் பிரச்சனையாக மட்டுமே பார்த்து அதை கார்ப்பெட்டுக்கடியில் தள்ளிவிட்டது. ஆனால் கிரிக்கெட் விளையாட்டின் சூழமைப்பே (ecosystem) ஊழலுக்கு உறுதுணையாக இருக்கிறது என்பதை ICC இந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரை புரிந்து கொள்ளவே இல்லை. இன்றைக்கு இருக்கும் Anti Corruption Unit என்பதே 2000-இல் தோற்றுவிக்கப்பட்டதுதான்.

இன்றைய தேதியில் வீரர்களையும் விளையாட்டையும் சூழ்ந்திருப்பது மிகப்பெரிய பொருளாதார வலை. Sponsorகள், ஊடக நிறுவனங்கள், சூதாட்ட புக்கிகள், அரசியல் குறுக்கீடுகள் என்று கிரிக்கெட்டின் சூழமைப்பில் பங்கேற்பாளர்கள் அதிகம். இவர்களைத் தவிர்த்து விட்டு நவீனகால கிரிக்கெட்டை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ICC-யின் முக்கியமான மற்றும் உடனடி நடவடிக்கை, இந்த பங்கேற்பாளர்கள் கிரிக்கெட்டின் போக்குகளை எந்த அளவிற்கு கட்டுப்படுத்தப்போகிறார்கள் என்பது குறித்த துல்லியமான முடிவை எடுப்பதும், இந்த பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவருக்குமான தீர்வுகளைத் தோற்றுவிப்பதும்தான்.

இந்த ஊழல் விவகாரங்கள் இத்தோடு களையப்பட்டுவிடுமா என்றால் இல்லை என்பதுதான் சோகமான நிதர்சனம். கிரிக்கெட் இப்போது இருக்கும் தன்மையில் தொடர்ந்து விளையாடப்படுமானால் இந்த பிரச்சனைக்கு முடிவு கிடையாது. கிரிக்கெட்டின் சூழமைப்பே முற்றிலுமாக மாறிவிட்ட நிலையில் ஆட்டத்தின் விதிகளும் தன்மைகளும் அப்படியே இருப்பதில் என்ன நியாயம்? ICC இந்த நிதர்சனத்தை உணர்ந்து கிரிக்கெட் என்ற விளையாட்டைப் பாதுகாக்க சில புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும்.

ICC தற்போது ஆட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். ஆனால் எந்த மாதிரியான மாற்றங்கள் அவை? அவை விளையாட்டை எப்படி மேலும் சுவாரஸ்யமாக்குவது, தொழில்நுட்பங்களின் உதவியுடன் ஆட்டத்தின் தீர்ப்புகளை எப்படி துல்லியமாக்குவது, எப்படி கேளிக்கை அம்சங்களை விளையாட்டில் கொண்டு வருவது என்பது குறித்த மாற்றங்கள் அவை. கிரிக்கெட் விளையாட்டின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்படவையன்று.

“Cricket is a game of glorious uncertainty” என்று சொல்வார்கள்.  இந்த “Uncertainty” என்னும் காரணிதான் கிட்ட திட்ட கிரிக்கெட்டின் உயிர் நாடி என்று சொல்வேன். அதெல்லாம் 20 வருடங்களுக்கு முன். இப்போது 20-20 ஆட்டத்தில் கூட 8வது ஓவர் முடியும் போதே முடிவு தெரிந்து விடுகிறது. இதை பாதுகாக்க Randomness (நிச்சயமின்மை) என்ற காரணியை கிரிக்கெட்டில் நுழைக்க வேண்டும். ஆட்டத்தில் இரண்டு அணிகளும் எதிரணியைக் கட்டுபடுத்தும் படியான சில விதிகளை முன் வைக்க வேண்டும். உதாரணத்திற்கு, கேப்டனின் முடிவுகளை ஆட்டத்தின் போது சில முறை ‘வீட்டோ’ (VETO) செய்யும் உரிமை எதிரணி கேப்டனுக்கு வழங்கப்படல் வேண்டும். அதாவது முக்கியமான சமயத்தில் எந்த ஆட்டக்காரர் பந்து வீச வேண்டும் / அல்லது பேட் செய்ய வேண்டும் என்று கேப்டன் முடிவு செய்தால், அந்த சமயத்தில் அந்த முடிவை மறுக்கும் உரிமை எதிரணி கேப்டனுக்கு வழங்கப்படல் வேண்டும் (ஆட்டத்தின் போது 3 முறையோ, நான்கு முறையோ). இது நிச்சயம் கேப்டன்களின் மீது அதிக சுமையை ஏற்படுத்தும் ஆனால் ஆட்டத்தில் ஒரு நிச்சயமின்மையைக் கொண்டுவரும். நான் சொன்னது ஒரே ஒரு உதாரணம். இதே போல நிச்சயமின்மையைத் தோற்றுவிக்கப் பல காரணிகளை உட்புகுத்தலாம். ஆட்டத்தை இன்று ஆடுவது போன்ற எளிமை ஆட்டத்தின் போக்கையும், முடிவையும் மிக எளிதாகக் கணிக்கச்செய்கிறது.

இன்று ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் ICC-யின் கட்டுப்பாடுக்குள் இருந்தாலும், ஒவ்வொரு வாரியமும் பல நிலைகளிலும் தன்னாட்சி கொண்டதாகவே இருக்கின்றது. ஊழல் விவகாரம் என்று வரும்போது வாரியத்தின் நிலை ஊழலில் ஈடுபடும் வீரர்களை தண்டித்தலும் அவர்கள் மேல் விசாரணை நடத்துதலும்/ ICC விரும்பினால் அதற்கு ஒத்துழைத்தலுமே. ஆனால் எந்த வாரியமும் ஊழலுக்குப் பொறுப்பு ஏற்பதில்ல. ஏதோ ஒரு முறை இரு முறை என்றால் வீரர்கள்தான் காரணம் என்று சொல்லலாம். ஆனால் அதுவே தொடர்கதையாகும் போது வாரியத்தின் தலையீடு இன்றியமையாததாகிறது. இந்த தலையீடு வெறும் கொள்கை அளவிலே இருக்கிறது. ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னே தனது வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக பகிரங்கமாக தண்டனை கொடுத்த வாரியம் ஒன்று கூட இல்லை. இத்தனைக்கும் இந்த சூதாட்ட விவகாரங்கள் வாரியங்களுக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை – சரியாகச் சொல்ல வேண்டுமானால் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க வாரியங்களுக்கு வாய்ப்பு அதிகம். எல்லாம் முடிந்தபின் சினிமா போலீஸ் போல வாரியங்கள் வந்து நிற்பது வேடிக்கையான விஷயம்.

ICC தற்காலிகமாகவாவது தனது வாரியங்களின் செயல்பாடுகள் அனைத்தையும் தன் வசப்படுத்திக் கொண்டு நடுவன் செயல்பாட்டு மையத்தைத் (centralised operations unit) தோற்றுவிக்க வேண்டும். இந்த மையமே வாரியங்களுக்கான விளம்பரதாரருக்கான டெண்டர் விநியோகித்தல், ஒவ்வொரு மண்டலத்திற்கு வழங்கப்படும் மீடியா உரிமம் தொடர்பான வர்த்தக முடிவுகளை எடுத்தல், வீரர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயித்தல், ஊழல் தொடர்பான கூரிய சட்டங்களை இயற்றுதல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டும். இந்த வாரியத்தில் இருக்க வேண்டியவர்கள் சரத் பவார்கள் அல்லர், கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கும் முன்னாள் வீரர்கள் மற்றும் அம்பயர்கள். தற்போதைய Hall of fame-இல் இருப்பவர்களைக் கொண்டு சிறந்த வாரியம் ஒன்றைத் தோற்றுவிக்கலாம்.

இவற்றையெல்லாம் காட்டிலும் முக்கியமான விஷயம் சட்டபூர்வமான அணுகுமுறை. இரண்டு விஷயங்களைச் செய்யலாம். பெட்டிங்கிற்காக பணம் பெற்றுக்கொண்டு விளையாடுவதை / அல்லது பணம் கொடுக்க முயற்சிப்பதை கிரிமினல் சட்டத்தில் சேர்த்து கிரிமினல் குற்றத்தில் ஈடுபடுவதற்கான தண்டனை அளிக்கலாம். இதற்கு அந்தந்த நாட்டு அரசின் ஒத்துழைப்பு தேவை. இதை அவசரகதியில் அமல்படுத்த ICC முயல வேண்டும். இல்லையேல், பெட்டிங்கை சட்டபூர்வமாக அமல்படுத்தி ICC பெட்டிங் நடத்த சில நிறுவனக்களை அதிகாரபூர்வமான கேம்ப்ளிங் நிறுவனமாக (betfair போன்ற நிறுவனங்கள்) அறிவிக்கலாம். Match fixing நடப்பதற்கு பதில் திறந்த முறையில் வெளிப்படையாக நடக்கும் பெட்டிங் எவ்வளவோ மேல். ஏற்கனவே betfair போன்ற நிறுவனங்களுடன் ICC ஒரு புரிதலுக்கான ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டிருக்கிறது. அதையே நீட்டித்து அதிகார்வபூர்வமான பெட்டிங்கை அமல்படுத்தலாம். ஆனால் இதை அமல்படுத்துவதில் நிறைய சிக்கல்கள் தோன்றக்கூடும். உள்ளூர் சட்டதிட்டங்கள் இதற்கு தடையாக இருக்கக்கூடும்.

மற்ற நேரங்களைக் காட்டிலும் கிரிக்கெட்டின் நம்பகத்தன்மை அதிக கேள்விக்குரியதாக இருப்பது உண்மை. பொறுப்பு ICCயிடம் இருக்கிறது.